வேறு எந்த இலக்கிய வகைமைகளை விடவும் நாவல் தனிச்சிறப்பானதாகவும் பரந்த வாசகர்களைக் கொண்டதாகவும் இருப்பதற்குக் காரணம் அது வாசிக்கிறவனுக்கு ஒரு நிகர்வாழ்வின் அனுபவத்தைத் தரக்கூடியதாய் இருக்கிறது. நாவல் வாசிப்பு ஒரு மனிதனின் அன்றாடங்களிலிருந்தும் அதன் சலிப்புகள் மற்றும் போதாமைகளிலிருந்தும் சிறிய விடுதலையை தரக்கூடியதாய் இருக்கிறது. நாவல் என்னும் வடிவம் தோன்றிய இந்த நானூறு ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரும் அரசியல் தலைவர்களையும் தத்துவவாதிகளையும் நாவல்களும் நாவலாசிரியர்களும் பாரிய அளவில் பாதித்துள்ளார்கள். நீட்ஷேவும், ஃப்ராய்டும் தங்களது முதன்மையான ஆசிரியர்களாக தஸ்தாவ்ஸ்கியை பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள்.
தஸ்தாவ்ஸ்கியின் நாவல்கள் அன்றைய சமூகம் நுணுகிப் பார்க்க விரும்பாத மனிதர்களையும் அவர்களின் உலகையும் முன்னிறுத்திப் பேசுவதாய் இருந்ததோடு மனிதர்கள் தங்களுக்குள் தயக்கமின்றி துரோகமிழைப்பதையும் அருவருப்பானவைகளின் மீது தனிமனிதனுக்கிருக்கும் அந்தரங்க ஆசைகளையும் ஒரு ஓவியத்தின் நுட்பத்தோடு விவரிக்கின்றன. இந்த நுட்பம் புறவயமானதாக மட்டுமில்லாமல் மனிதர்களின் அகவயமானவற்றையும் பேசுவதால் தான் நீட்ஷே இந்த கீழ்மைகளிலிருந்து விடுபட்ட யாராலும் மட்டுப்படுத்த முடியாத அதிமனிதனைக் கனவு கண்டார். ஃப்ராய்ட் எல்லா குற்றங்களுக்கும் பின்னால் ஆதாரமாயுள்ள பாலியல் விழைவுகளை முதன்மைப்படுத்தி தனது ஆய்வுகளை நிகழ்த்தினார்.
நாவல் நமக்கு இறக்குமதியாகி நூற்றம்பதை வருடங்கள் கடந்திருக்கின்றன. துவக்கத்தில் தொடர்கதைகளே நாவல்களாக பார்க்கப்பட்டன. இன்றைக்கும் பெரும் வாசகப்பரப்பை சென்றடைந்திருக்கிற நாவல்கள் தொடர்கதைகளாக வெளிவந்தவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வணிக இதழ்களில் வெளியாகும் தொடர்கதைகள் ஒருபுறமும் குடும்ப நாவல்கள் மற்றும் பாக்கெட் நாவல்கள் இன்னொருபுறமுமாக நாவல் என்ற வகைமைக்குள்ளேயே ஏராளமான கிளைப்பிரிவுகள் நம்மிடம் உண்டு. எந்த வகை நாவலென்றாலும் அதில் பேசப்படும் உள்ளடக்கமும் அதன் வடிவமும் எவ்வாறு உள்ளது என்பதைக் கொண்டே நாம் ஒரு படைப்பை மதிப்பிட முடியும். அந்த வகையில் தொடர்கதைகளாக வந்தவற்றில் சில நல்ல நூல்கள் நம்மிடமுண்டு. ( பெரும்பாலும் வரலாற்று நாவல்கள்) இவற்றைக் கடந்து இலக்கிய மதிப்பீடுகளுக்குள் வைத்துப் பார்க்கும்படியான நாவல்களை தனியாக வகைப்படுத்தினோமானால் அவை மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பதை அவதானிக்கலாம்.
தமிழில் சிறுகதை வடிவத்தில் நிகழ்ந்ததைப்போல் மகத்தான சாதனைகள் நாவல் வடிவத்தில் நிகழவில்லை என்றொரு குற்றச்சாட்டு பொதுவாகச் சொல்லப்படுவதை நான் முழுதாகவே மறுக்கிறேன். இங்கு சிறுகதைக்கு இணையாக சிறந்த நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் நான் குறையாகப் பார்ப்பது இந்த நாவல்களின் உள்ளடக்கத்தைதான். சிறப்பானவையென மதிப்பிடும்படியான நூறூ தமிழ் நாவல்களை எடுத்துக் கொண்டோமானால் அவற்றில் எண்பது நாவல்கள் குடும்பத்தைச் சுற்றியே நிகழ்வதாக இருக்கின்றன. பெருங்கதையாடல்களை கதைக்களங்களாகக் கொண்ட நாவல்கள் நம்மிடையே வெகு சொற்பமே… நாவல்களின் களமும் கட்டுமானமும் பழக்கப்பட்டவையாக இருப்பதோடு இந்த எல்லா நாவல்களிலும் இருக்கக் கூடிய பொதுவான தன்மையாக அது வெற்றிபெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு மட்டுமே எழுதப்பட்டதாக இருக்கிறது. கலை வடிவங்களில் வெற்றி தோல்வி என்பது வாசக எண்ணிக்கையிலோ விற்பனையிலோ அல்ல, ஒரு படைப்பின் முழுமையில் மட்டுமே அடங்கியிருக்கிறது.
சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, ஜெயமோகனின் விஷ்னுபுரம், ஜோ டி குரூஸின் ஆழி சூழ் உலகு, எஸ் ராமகிருஷ்ணனின் உபபாண்டவம், ரமேஷ் ப்ரேமின் சொல் என்றொரு சொல், பா வெங்கடேசனின் தாண்டவராயன் கதை, சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், ஷோபா சக்தியின் ‘ம்’, டேனியலின் பஞ்சமர், ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ , தஞ்சை ப்ரகாஷின் கரமுண்டார் வீடு, சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி என வழமையை மீறிய நாவல்கள் நம்மிடம் வெகு சொற்பமாகவே இருக்கின்றன.
பெரும் நாவல்கள் நம்மிடம் உருவாகமால் போனதை ஒரு குறையாகக் கருதாமல் அதன் பின்னனியில் இருக்கக் கூடிய காரணங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ள நினைத்தபோது ஒரு யதார்த்தம் பிடிபட்டது. நாவல்கள் ஒவ்வொரு வருடமும் ஏராளமாய் எழுதப்படுவதும் வெளியிடப்படுவதுமாய் இருக்கிறது. ஆனால் நாவல்களின் அடிப்படைகளையும் அதன் நுட்பங்களையும் விவரிக்கக் கூடிய நூல்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன. அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் கற்றுக்கொள்ளாமலேயே நாம் தொடர்ந்து எழுதிக் குவிப்பதன் விளைவுதான் இலக்கிய மதிப்பற்ற நூல்கள் பெருகி வருவதற்கான முதன்மையான காரணம். தமிழில் வெளியாகும் நாவல்களுக்கு எழுதப்படுகிற மதிப்புரைகளையும் இரண்டு வகைப்பாட்டியலுக்குள் கொண்டு வந்துவிடலாம். ஒன்று எழுத்தாளருக்கு வேண்டியவர் அவரை உற்சாகப்படுத்தும் விதமாய் எழுதும் பாராட்டுரை, அல்லது எழுத்தாளருக்கு வேண்டாதவர் அவரை சிறுமைப்படுத்தும் விதமாய் எழுதும் இகழ்ச்சியுரை. இந்த இரண்டு வகையான அபிப்ராயங்களாலும் துளியளவும் பிரயோஜனமில்லை. எழுத்தாளர்களின் பின்புலம், அவர்களுக்கு இருக்கும் அரசியல் தொடர்புகள் இவற்றைக் கொண்டும் பாரட்டுரைகள் எழுதி அதற்கு சன்மானங்களைப் பெற்றுக்கொள்ளும் அவலங்களும் இங்கு நடக்காமலில்லை. நாவல் எழுதுவதைப் போலவும் அதனை மதிப்பிடுவதும் விமர்சிப்பதும் அவசியமானதொன்று, அதற்கு முதன்மையாக ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டியது நல்ல நாவல்களின் அடிப்படை என்ன? நாவல் என்னும் வடிவத்தின் சிறப்பான தன்மைகள் என்ன? குறைந்தபட்சம் நூறு நாவல்களையேனும் வாசித்திருக்காத ஒருவர் தான் படிக்கிற நாவலுக்கு விமர்சனமோ பதிவோ எழுதுவது மொழியின் மீது நிகழ்த்தும் வன்முறை.
நாவலெனும் கலைநிகழ்வு என்னும் இந்நூலை எழுபது வருடங்களுக்குமுன் மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். தமிழில் தற்போது அழகிய மணவாளனின் மொழிபெயர்ப்பில் விஷ்னுபுரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தாராஷங்கர் பானர்ஜியின் ஆரோக்ய நிவேதனம், ஜேன் ஆஸ்டினின் நாவல் உலகம், இறுதியாக தஸ்தாவ்ஸ்கியின் நாவல் கலை இந்த மூன்று எழுத்தாளர்களின் படைப்புகளையும் அந்த படைப்புகள் எந்தெந்த வகையில் எல்லாம் தனித்துவமானவை, காலங்கடந்து நிற்பதற்கான தகுதியைப் பெற்றவை என்பதை விளக்குகிறார். தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்ய நிவேதனம் குறித்து எழுதப்பட்டிருக்கும் இரண்டு கட்டுரைகளும் சிறப்பானவை. அந்த நாவல் ஏன் தனித்துவமானதென்பதற்கு மிக முக்கியமான காரணத்தை ஓரிடத்தில் இப்படி குறிப்பிடுகிறார். ‘பொதுவாக ஒரு நல்ல நாவலில் கான்ஃப்ளிக்ட் தான் சிறப்பான ஒரு கதாப்பாத்திரத்தை உருவாக்கி அந்த கான்ஃப்ளிக்ட்டைத் தொடர்ந்து அந்தக் கதாப்பாத்திரத்தின் பயணம் எவ்வாறெல்லாம் ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்திக்கிறது என்பதாக அமையும். ஆனால் இந்த நாவலில் எந்த பெரிய பிரச்சனைகளோ பெரிய முரண்பாடுகளோ இல்லை, போதாக்குறைக்கு நாவலின் மையப்பாத்திரம் ஒரு மருத்துவர். வாழ்வில் யாரிடமும் அதிர்ந்து பேசாத, யாரிடமும் பகையில்லாத மிகச் சாதாரண மனிதர். அவரது பிறப்பிலிருந்து இறப்புவரையிலான வாழ்வை மட்டுமே பேசும் நாவல். சொல்லப் போனால் காலம் மறக்கடிக்கும் தொன்னுறு சதவிகித மனிதர்களில் ஒருவர். எனினும் இந்த நாவல் அதன் துவக்கத்திலிருந்து இறுதிவரை நமக்கு அலாதியானதொரு வாசிப்பனுவத்தை தருகிறது. ஒரு தனிமனிதனின் வழியாக அவனைத் தேடி வரும் நோயாளிகளின் வழியாக அந்த ஊரின் காலமாற்றத்தையும் வாழ்க்கையையும் நாவல் நுட்பமாக படம்பிடித்துக் காட்டிவிடுகிறது. ஆரோக்ய நிகேதனம் நாவலைக் குறித்து இப்போது யோசிக்கையில் சலனங்களே இல்லாத இந்த அமைதி தான் அதன் தனித்துவம் என்று எனக்கும் தோன்றுகிறது.
ஒரு நல்ல நாவல் அதை வாசிக்கிறவர்களுக்கு தமது வாழ்வுக்கு நிகரான இன்னொரு வாழ்வை வாழ்ந்த அனுபவத்தைத் தருகிறது. தனக்குப் பரிட்சயமில்லாத புதிய வாழ்வைத் தெரிந்துகொள்வதைத்தான் வாசகன் விரும்புகிறான். இதனாலேயே நல்ல நாவல்களுக்கு கதை சொல்லும் நுட்பங்களும் கதாப்பாத்திரங்களை சுவாரஸ்யமாகவும் வலுவாகவும் உருவாக்க வேண்டிய படைப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது. ஜேன் ஆஸ்டின் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளில் ஆஸ்டினின் நாவல்களில் வரும் கதாப்பாத்திரங்கள் எவ்வாறு தனிச்சிறப்பானவையாய் இருக்கின்றன என்பதை பல இடங்களில் குறிப்பிடுகிறார். முக்கியமாக அவரது நாவல்களின் பெண்கள். ஆண்களுக்கான எந்த முக்கியத்துவங்களும் ஆஸ்டினின் நாவல்களில் இல்லாதிருந்தபோதும் அவை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. ஜேன் ஆஸ்டினின் தனிப்பட்ட வாழ்வு, அவரது கலை மேதமை, அவரது நாவல்களின் தனித்தன்மை என தனித்தனியான கட்டுரைகள் விளக்குகின்றன.
அடுத்ததாக தஸ்தாவ்ஸ்கியில் நாவல் உலகம் குறித்து விரிவான எட்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தஸ்தாவ்ஸ்கி காலத்திய ரஷ்ய இலக்கிய உலகின் மரபுகள், அவற்றிலிருந்து துண்டித்துக் கொண்டு அவர் இயங்கியது அதோடு அவரது தனிப்பட்ட வாழ்க்கை முழுக்கவே அவரைத் தொடர்ந்து துயரங்கள், அந்தத் துயரங்களின் கொந்தளிப்புகளில் இருந்து உருவான அவரது நாவல்கள் எல்லாவற்றையும் விரிவாக எழுதியிருக்கிறார். எஸ்.ராவின் தளத்தில் ஒரு கட்டுரை வாசிக்க கிடைத்தது. மாஸ்கோ ஹெரால்ட் என்ற பத்திரிக்கையின் எடிட்டராக இருந்து தஸ்தாவ்ஸ்கி, தல்ஸ்தாய் துர்கனவ் என உலக இலக்கிய மேதைகளின் நூல்களை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரின் வாழ்வை மையப்படுத்திய நூல். அடுத்தடுத்தாக இந்த நூலையும் அந்தக் கட்டுரையும் வாசித்தபோது நாவல் என்ற கலைவடிவத்திற்கு மேற்கில் இருந்த மதிப்பும் மயக்கமும் ஆச்சர்யமளிக்கிறது.
இந்த நூலில் நாவலெழுத்து என்ற தவம் என்ற கட்டுரையில் ஒரு பத்தி உண்டு. அசடன் நாவலை எழுதிய காலத்தில் அந்த நாவல் பற்றி தஸ்தாவ்ஸ்கி எழுதிய குறிப்புகள் அனைத்தையும் வாசித்த இ.ஜெ. சிம்மன்ஸ் அந்தக் குறிப்புகளை இப்படித் தொகுக்கிறார். ‘இந்த நாவல் உருவாக்கத்தின் முதல்கட்டத்தில் நாவலின் வடிவத்தைப் பற்றி ஒவ்வொன்றாக எட்டு வெவ்வேறு முன் வரைவுகளை தஸ்தாவ்ஸ்கி யோசிக்கிறார். நாவலின் அமைப்பு, கதாப்பாத்திரங்கள், சம்பவங்களின் வரிசை என ஒவ்வொரு விஷயத்திலும் முன்வரைவை தயாராக்குகிறார். அந்த எட்டு முன்வரைவுகளை வாசித்தால் அவற்றின் நல்ல முன்னேற்றத்தை நம்மால் உணரமுடியும்.’ இதை வாசித்தபோது எஸ்.ராவின் கட்டுரையிலிருந்த ஒரு குறிப்பும் நினைவிற்கு வந்தது. ‘குற்றமும் தண்டனையும்’ தொடர்கதைக்கான கதைச் சுருக்கத்தை தஸ்தாவ்ஸ்கி மாஸ்கோ ஹெரால்ட்’ பத்திரிகைக்கு அனுப்பி இருக்கிறார். அந்தக் கதைச் சுருக்கமே தனது நாவல் எத்தனை விஸ்தாரமானது அதில் வரும் கதாப்பாத்திரங்கள் எவ்வாறெல்லாம் வெளிப்படப் போகின்றன எனப் புரிந்துகொள்ளும் அளவிற்கு தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.
நாவல் எழுதுவதென்பது பட்டுப் புழுவிலிருந்து பட்டுநூல் உருவாகி அந்த நூல் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய உடையாக உறுமாறுவதைப்போல நிறையக் காத்திருப்புகளும் மெனக்கெடல்களும் கோரக்கூடியதொன்று. நல்ல நாவலை எழுதவெண்டுமென விரும்புகிற எல்லோருமே அதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொளவது அவசியம். கல்விப்புலங்களில் இலக்கிய வகுப்புகளில் நாவல்கள் குறித்து கற்பிக்கப்படாமல் இல்லை, ஆனால் அங்கிருந்து நல்ல நாவல்கள் உருவாகமல் போனதற்கு முக்கியக் காரணம், கல்விப் புலங்களில் பாடங்களாக இன்னும் பழமையான குடும்ப நாவல்களே கோலோச்சுகின்றன. புனைவை விடவும் யதார்த்த வாழ்க்கை மிக வேகமாக பரிமாற்றம் அடைந்தபடியே இருக்கிறது, வாழ்வின் அபூர்வதருணங்களை இந்த சமூகத்தின் பெரும் நிகழ்வுகளை மிகக் குறைவாகவே தமிழ் நாவல்கள் பேசியிருக்கின்றன. அந்த வகையில் நமக்கு நாவல்கலை குறித்து ஏராளமான பயிற்சியும் இதுபோன்று அடிப்படைகளைக் கற்றுத்தரக் கூடிய நூல்களும் தேவையாய் இருக்கின்றன.
Comments