top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

பகையின் வேர்கள் – இஸ்மாயில் கதாரேயின் முறிந்த ஏப்ரல்
சமகால முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இஸ்மாயில் கதாரேயின் முறிந்த ஏப்ரல் என்ற நாவல் காலச்சுவடு வெளியீடாக சமீபத்தில் வெளியானது. அல்பேனிய நாட்டைச் சேர்ந்த கதாரேயின் படைப்புகள் தமிழில் எதுவும் வெளியானதாக நினைவில்லை. ஒரு சிறுகதையை மட்டும் நண்பர் கார்த்திகைப்பாண்டியன் மொழிபெயர்த்திருந்த நினைவு. 1978 ம் வருடம் வெளியான ப்ரோக்கன் ஏப்ரல் என்னும் இந்த நாவல் தமிழில் வெளியாக இத்தனை வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. நான் ஆங்கிலத்தில் இந்த நாவலை வாசித்திருக்கவில்லை. ஆனால் வெளியானதும் வாசித்துவிட வேண்டுமென ஆர்வமிருந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று 2001 ம் வருடம் எனக்குப் பிடித்தமான ப்ரேசிலியச் இயக்குநர் வால்ட்டர் சாலஸ் இயக்கி வெளியான பிஹைண்ட் த சன் திரைப்படம். அந்தத் திரைப்படம் இந்த நாவலின் தாக்கத்தால் உருவானது. ( அந்தத் திரைப்படத்தின் தாக்கத்தால் உருவான தமிழ்ப்படமாக மதயானைக் கூட்டத்தைச் சொல்லலாம்.) அடுத்ததாக இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திருப்பது எழுத்தாளர் பா.வெங்கடேசன்.


ஒரு கதையை திரைப்படமாகப் பார்த்தபின், அதிலும் ஏராளமான முறை திரைப்படமாகப் பார்த்தபின் நாவலாக வாசிப்பது சுவாரயமாக இருக்குமா என்கிற தயக்கம் பொதுவாக இருக்கும்தான். ஆனால் இந்த நாவலை வாசிக்கத் துவங்கிய முதல் பக்கத்திலிருந்தே அதன் சுவாரஸ்யமும் கதை சொல்லலும் உள்ளிழுத்துக் கொள்கிறது. நாவல் வடக்கு அல்பேனியாவிலிருக்கும் மலை மக்களின் எளிய வாழ்வையும், அவர்கள் வாழ்க்கை கானூன் என்னும் அவர்களுக்கான தனித்த சட்டவிதிகளைப் பின்பற்றி இருப்பதையும் பேசுகிறது. நாவல் விவரிக்கும் அல்பேனிய நிலமென்பது பனி மூடிய சலனமற்ற நிலம். ஆனால் சாலஸின் படத்தில் வரக்கூடியது வறண்ட பாலை. நிலம் அதற்கேயான பிரத்யேக கொந்தளிப்புகளோடு நாவலிலும் திரைப்படத்திலும் வெவ்வேறாக வெளிப்பட்டுள்ளது. நாவலில் ஜார்க் முதல் காட்சியில் கொலை செய்யும்போது, இளைஞனான அவனது அப்பாவித்தனத்தை நம்மால் இனங்கண்டு அவனோடு சடுதியில் ஒட்டிக்கொள்ள முடிகிறது. சாலஸின் திரைப்படத்தில் வரும் நாயகனின் குணம் அப்படி இருப்பதில்லை.

தமிழ்ச் சூழலில் பழிவாங்கல் கதை என்று எழுதினால் அது எத்தனை மலினமாகப் பார்க்கப்படும் என்பது நாமறிந்ததே. எல்லா காலத்திலும் மனிதனிடமிருந்து பிரிக்கவே முடியாததொரு ஆதார உணர்ச்சியாய் இருக்கும் பழிவாங்கலை நாம் தமிழில் எழுதும்போது மட்டும் ஏன் அது வேடிக்கையாகப் பார்க்கப்படுகிறது? தமிழில் எழுதப்படும் பழிவாங்கல் கதைகளில் அந்தக் கதைகளை நமது அறிவுக்கு ஒவ்வாவதாக மாற்றிவிடுவது அதில் இருக்கும் மிகையுணர்ச்சிதான். முறிந்த ஏப்ரலில் எழுபது வருடங்களுக்கும் மேலாக இரண்டு குடும்பங்களுக்கு நடுவில் பகை இருக்கிறது. அதற்காக மாறி மாறி கொலை செய்துகொள்கிறார்கள். இரண்டு தரப்புகளிலும் சேர்த்து நாற்பத்தி எட்டுபேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகையின் வேர் எப்போது முடியுமென்பதை எவரும் அறிந்திருப்பதில்லை. குடும்பப் பகை, அதைத் தொடர்ந்த யுத்தமென சொல்லப்படும் மேலோட்டமான கதையைத் தவிர்த்து இந்த நாவல் அந்தக் கொலைகளில் இருக்கும் நியாயங்களையும் நீதிகளையும் பேசுகிறது. பழிவாங்கலை ஒரு அறமாக சட்டங்களுக்குட்பட்ட விதிகளாக கலாப்பூர்வமாக நெறிப்படுத்தியிருப்பதைத்தான் இந்த நாவலின் சிறப்பம்சமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


தன் பகையைத் தீர்க்க கொலை செய்தவனை முதலில் எதிராளி இருபத்தி நான்கு மணிநேரத்திற்கு கொலை செய்யக் கூடாது, அடுத்ததாக கொலை செய்தவன் கொல்லப்பட்டவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டே ஆகவேண்டும். அங்கு தரப்படும் சாவுச்சோறு விருந்தில் கலந்துகொள்ள வேண்டும். இது நீதி. எத்தனை குற்றவுணர்ச்சி கொண்ட மனிதனாக இருந்தாலும் இந்த நீதியிலிருந்து ஒருவன் தவறக்கூடாது. அடுத்ததாக ஊர் நலனுக்காக பதில் கொலை ஒரு மாத காலத்திற்கு தள்ளிவைக்கப்படுவதற்கும் பேச்சுவார்த்தையின் மூலம் சட்டத்தில் இடமுண்டு. இந்த மொத்த நாவலுமே கொல்லப்பட்டவர்கள் கொலை செய்தவர்கள் அவர்களின் செயல்களுக்குப் பின்னாலிருக்கும் நீதியென நாம் இதுவரை அணுகாத கோணத்தில் பழிவாங்கலை அணுகுகிறது. பழிவாங்கலை செயலாக அல்லாமல் அறமாக அணுக ஒரு கலைஞனுக்கு பெரும் ஞானம் தேவைப்படுகிறது. எவையெல்லாம் மனிதனின் ஆதார உணர்ச்சிகளோ அதனை வெளிப்படையாக உரத்துப்பேச எல்லா சமூகத்திலும் தயக்கமுண்டு. காமமும் பழிவாங்கலும் அதில் முக்கியமானவை. இரண்டுமே பாவத்திற்குரியதாகவும் இகழ்ச்சிகரமானதாகவும் பார்க்கப்படுவதால் தான் ஆரோக்கியமான உரையாடல் நிகழாமலேயே போகிறது.

கொல்லப்பட்டவனின் சட்டையை ரத்தக் கறையோடு அப்படியே கொடியில் காயப்போடுகிறார்கள். அவனது சாவுக்குப் பழிவாங்கும் நாள்வரை அந்த சட்டை துவைக்கப்படுவதில்லை. ரத்தத்தின் சிவப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி மஞ்சளாகி அந்தத் துணியே கந்தலானாலும் அவர்கள் கொடியிலிருந்து அதனை எடுப்பதில்லை. சாலஸ் இயக்கிய திரைப்படத்தில் அந்த வீட்டின் பின்பகுதியிலிருக்கும் கொடியில் சூரியனுக்கு முதுகுகாட்டியபடி அந்த சட்டை தொங்கிக் கொண்டிருக்கும். நாவலில் அல்பேனியர்களின் தனித்துவமான கல்வீடுகளில் அதன் முதல் மாடியில் ரத்தவாடையோடு அந்த சட்டை தொங்கிக் கொண்டிருக்கிறது. வறண்ட நிலத்தின் மனிதர்களுக்கிடையில் நிகழும் வன்முறைகளும் பகையும் இரைச்சலும் சலசலப்புமிக்கது. அல்பேனியாவைப் போன்ற குளிர்ந்த பிரதேசங்களில் மனிதர்கள் எப்படி உரத்துப்பேசுவதில்லையோ, அப்படித்தான் அவர்களது வன்முறையும். அதில் ஆராவாரங்கள் இருப்பதில்லை, ஆனால் எளிதில் மீளமுடியாத ஆழமான பிணைப்பு இருக்கிறது.


இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான எழுபது ஆண்டுகால பகையின் துவக்கத்திற்குக் காரணம் ஜார்க்கின் வீட்டிற்கு பல வருடங்களுக்கு முன் வந்த முகம் தெரியாத விருந்தினன். வீட்டில் உள்ள உறவினன் ஒருவனைக் கொல்வதற்காக பழிவாங்குதலை விடவும் விருந்தினன் கொல்லப்பட்டால் வரும் பழி பெரிது. அந்த சமூகத்தில் விருந்தினர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மதிப்பும் முக்கியத்துவமும் ஆச்சர்யமளிக்கிறது. நள்ளிரவில் கதவு தட்டி நிற்கும் ஒருவன் எந்த விவரங்களையும் சொல்லாமல் அந்த வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கிறான். அவனைத் திரும்ப வழியனுப்ப அடுத்தநாள் அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவன் அவனோடு பயணிக்கிறான். செல்லும் வழியில் அந்த விருந்தினன் கொல்லப்படுகிறான். ஜார்க்கின் சிந்தனையாகவே நாவலில் ஓரிடத்தில் இப்படி சொல்லப்படுகிறது. ‘அன்றைய இரவு அந்த விருந்தினன் வராமலேயே இருந்திருந்தால் ஒருவேளை இந்த இரண்டு குடும்பத்திலும் இத்தனை கொலைகள் நிகழ்ந்திருக்கத் தேவையில்லை.’


இந்த நாவலை வாசித்துக் கொண்டிருக்கையில் பகை எல்லா சமூகத்திலும் ஒரே மாதிரியான மனவிளைவுகளைத்தான் உருவாக்குகிறதோ என நம்பத் தோன்றியது. பழிவாங்கலுக்கான அறமும், முறைகளும் உக்கிரமும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் பகையின் துவக்கம பல சமயங்களில் நாம் எதிர்பார்க்காத சின்னஞ்சிறிய புள்ளியிலிருந்துதான் துவங்குகிறது. ஒரு எல்லையில் பேசித் தீர்க்கப்படாத பகைகளுக்கு எத்தனை உயிர்களைக் குடித்தாலும் பசி அடங்குவதில்லை. சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஜெகா புலனத்தில் ஒரு செய்தியை அனுப்பி இந்த வழக்கை கவனித்தாயா எனக் கேட்டிருந்தார். மதுரையில் இரண்டு குடும்பங்களுக்கு நடுவே இருபது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் பகை. அதன் விளைவாக முடிவில்லாமல் நீளும் கொலைகள். துரதிர்ஸ்டம் என்னவென்றால் இந்தக் கதையில் இரண்டு குடும்பங்களுமே உறவினர்கள். இந்த வழக்கை நான் நீண்ட நாட்களாகவே தொடர்ந்து வருகிறேன் என ஜெகாவிற்குப் பதில் அனுப்பிவிட்டு இன்னொரு செய்தியையும் அவனோடு பகிர்ந்து கொண்டேன். சில மாதங்களுக்குமுன் பட்டுக்கோட்டையிலிருந்து ஒரு தம்பி என்னிடம் பேசும்போது மதுரையைச் சேர்ந்த சிலர் என்னைப் பற்றி உரையாடியதாகவும் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். என்ன காரணமென விசாரித்தபோது ரெண்டாம் ஆட்டம் தொடரை சிறையில் வைத்து படித்ததாகவும் அது தங்களுக்கு விருப்பமான கதை என்றும் குறிப்பிட்டதாகச் சொன்னார். எனக்கு ஒரு நிமிடம் மகிழ்ச்சியாகவும் சங்கடமாகவும் இருந்தது.புனைவெழுத்துகளை படிக்கும் பக்குவமிருந்தும் குற்றப்பின்னனியிலிருந்து மீள முடியாதவர்களாக இவர்கள் இருப்பதேன்? சூழல் காரணமாக அவர்களை சந்திக்க முடியவில்லை. பட்டுக்கோட்டை தம்பியிடம் விசாரித்த அந்த சிலர் ஜெகா அனுப்பிய செய்தியில் இரண்டு குடும்பத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இங்கு கூடுதல் தகவல்.


ஆதார உணர்ச்சிகள் எல்லா காலத்திற்குமானவை, காரணங்களும் தேவைகளும் வேண்டுமானால் மாறியபடி இருக்கலாம், ஆனால் செயல்கள் மாறுவதில்லை, மிகையான அன்பையும் போலியுணர்ச்சிகளைக் குவித்து எழுதப்படும் புனைவுகளையும் தவிர்த்துவிட்டு இந்தக் காலகட்டத்திற்கான மனித மனங்களை எழுத வேண்டுமானால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கசப்பையும் ஆழமான பகையுணர்ச்சியையும் எழுதுவதே சரியாக இருக்கும். இது ஒரு வகையில் எழுத்தாளன் தன்னைத்தானே கழுவில் ஏற்றிக்கொள்வதைப் போன்றசெயல், ஆனால் அவன் அப்படி செய்வது ஒரு சமூகத்தின் மனதை விசாரணைக்குட்படுத்துமென்றால், இங்கு சீழ்படிந்திருக்கும் அழுக்குகளின் மீது எந்தவிதமான ரகசிய அணுசரனைகளும் இல்லாமல் எட்டி உதைக்குமென்றால் அதனை அவன் செய்துதான் ஆகவேண்டும். நல்ல வாசிப்பை எல்லோருக்கும் இஸ்மாயில் கதாரேயின் முறிந்த ஏப்ரல் நாவலை பரிந்துரைக்கிறேன். மறக்காமல் வால்ட்டர் சாலஸின் பிஹைண்ட் த சன் திரைப்படத்தையும் காணவும்.

106 views

コメント


bottom of page