பூனைகளின் வீடு
- லக்ஷ்மி சரவணகுமார்

- Feb 25
- 7 min read

(2008 ம் வருடம் மணல்வீடு இதழில் வெளியான சிறுகதை )
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ன்த் பி'யில் படித்துக் கொண்டிருந்த வாசுகி, மாதத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த நாட்களொன்றில் கணக்குத் தேர்வை எழுதி முடித்துவிட்டு பத்து சதவிகிதம் கூட தேர்ச்சியாவதற்கு வாய்ப்பில்லை என்கிற வருத்தத்தோடு வீட்டிற்குத் திரும்பியபோதுதான் நகராட்சிக்குப் பின்புறம் இந்தப் பூனை குட்டியாகக் கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
கிளிகள் மட்டுமே வளர்க்கப் பிரியப்பட்டிருந்தவள். அவை கிடைக்காத காரணத்தினாலோ அல்லது குட்டியாக 'நெளு நெளு'வென வெல்வெட் போர்த்திய அழகில் லயித்தோ அதைத் தூக்கி வர முடிவு செய்தாள். பூனைகள் வளர்ப்பது பற்றிய குறிப்புகளை ஒவ்வொருவரும் சொல்லத் துவங்கிய போது ஒருவித சலிப்புணர்வு அவற்றில் சூழ்ந்திருப்பதாக உணர்ந்தாலும் தான் கேட்டவற்றில் முக்கியமானவற்றைப் பின்பற்றத் தவறியிருக்கவில்லை, முக்கியமாக அம்மா சொன்னதையும், மருதாயிப் பாட்டி சொன்னதையுமே முதலில் பின்பற்றுவதென முடிவு செய்தாள்
"கட்லுக்குக் கீழ துணி விரிச்சி படுக்க வைய்யி!" என அம்மா சொன்னபோது காற்றாடியிலிருந்து கசிகிற காற்று
கட்டிலுக்கடியில் செல்லுமாமென சந்தேகம் வர ஒருமுறை அடியில் படுத்துப் பார்த்து காற்று சன்னமாக வருவதை உறுதி செய்துவிட்டு அதற்குள் இடம் ஒதுக்கினாள். "அதுக்கின்னு தனியா கிண்ணத்தில் பால வெச்சிடு, செத்த வளந்தப்பறம் திங்க எதுனாச்சும் கொடுத்துக்கலாம்..." என மருதாயிப் பாட்டி சொன்னதில்தான் எந்தப் பாத்திரத்தில் பால் கொடுக்கலாமென யோசித்து, அது வாய்வைக்க ஏதுவாகயிருந்த தங்கச்சியின் டிஃபன் பாக்ஸில் ஊற்றிவைக்கத் துவங்கிவிட்டாள்.
அதே பள்ளியில் 'எய்த் ஏ'யில் படிக்கும் தங்கச்சிக்கு இதனால் வாசுகி மீது பெரிய கோபமெழுந்த பொழுதும் அப்பூனைக்குப் பிறக்கிற முதல் இரண்டு குட்டிகளை தங்கச்சிக்குத் தருவதாகச் சொன்னபிறகு சமாதானம் அடைந்தாள். சற்றே வளர்ந்த அப்பூனை, மொட்டை மாடியில் உலவப் பழகியிருந்த நாட்களில் எதிர்வீட்டு காயத்ரி அக்கா 'பூனை பார்டா பூனை' என விளையாட்டுக் காட்டியே தன் குழந்தைக்குச் சோறூட்டத் துவங்கினாள்.
துவக்கத்தில் பூனையின் மீது பெரிய கவனிப்பொன்றும் அக்குழந்தைக்கு இல்லாதபோதும், நாளடைவில் துறுதுறுப்பான, அதன் கண்களுக்கு இப்பூனையின் உருவம் அழிக்கவியலாத ஒன்றாய்ப் பதிந்து போனது. விசித்திரமாக சொல்லிக் கொள்கிற ஒன்றை செய்துவிட்டதைப் போல பூனை வளர்க்கிற இவர்களை யாவரும் வினோதமாய்ப் பார்த்தனர். மற்ற வீடுகளுக்கு அவ்வப்போது பூனைகள் வந்து போன போதும் ஒருவரும் இதுவரை பூனைகளை வளர்த்ததில்லை. உண்மையில் அதற்கான அவசியம் எதுவுமிருப்பதாக அவர்களுக்குத் தோன்றியிருக்காதுதான் காரணம். அந்தத் தெருவிலேயே முதல் தடவையாக இவர்கள் வீட்டில் பூனைகள் வளர்த்ததினாலேயே வாசுகியின் வீடு அதன் பிறகு பூனைக்கார வீடாக மாறிப்போயிருந்தது அடையாளத்திற்கென.
முன்பு எப்பொழுதோ பொங்கலுக்கு வெள்ளையடிக்கப்பட்ட வீட்டில் காரை உதிர்ந்து பொலிவிழந்து போன பிறகும் ஒருவிதமான கம்பீரம் இருக்கவே செய்தது. ஐந்து பேர் மட்டுமே இருந்து வந்த வீட்டில் ஐந்தாவது நபரான வாசுகியின் அப்பா, வருடத்தில் ஒருமுறை விடுமுறையில் வருவதோடு சரி, மற்றபடி அஸ்ஸாமில் அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது வீட்டில்யாருக்கும் தெரியாது. இவர்களைப் பொறுத்தவரை அப்பா நாட்டிற்கு சேவை செய்து கொண்டிருக்கும் ராணுவ அதிகாரி அவ்வளவுதான்.
வெவ்வேறு வயதுகளில் வாழ்ந்த அந்த நான்கு பெண்களின் உலகம் இந்தப் பூனையின் மூலம் கலகலப்பாகி விட்டிருந்தது. மருதாயிப் பாட்டிதான் அந்த விஷயத்தை முதல் நபராய் அறிந்துகொண்டுவிட்டிருந்தாள் அதனைத் தூக்கிப் பார்த்து. ஐந்தாவதாகவும் இன்னுமொரு பெண் என்பதில் அவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யம்தான். யாருமற்ற நேரங்களில் பொழுதைக் கழிப்பதற்கென எவ்வளவோ வழிகள் இருந்தன வாசுகிக்கு. எனினும் மற்றெல்லாவற்றையும் விடவும் பூனையைக் குளிப்பாட்டவும் அதனோடு விளையாடவுமே அவள் அதிகம் விருப்பம் கொண்டவளாய் இருந்தாள். மங்கலான இருளடங்கிய அவ்வீட்டின் அறைகள் முழுக்க தன் பாதம் பதிக்கத் துவங்கிவிட்டிருந்த பின் ஒவ்வொரு அறைக் கதவிலிருந்தும் உதிர்ந்து விழும் மர வாசனையிலேயே அவ்வறையின் இருப்பை அழுத்தமாகத் தெரிந்து கொண்டு விட்டிருந்தது. கூர் நகங்கள் பாதம் மறைக்க பரப்பி வைத்த ஒவ்வொரு அடியிலும் தன் மீதான நேசிப்பை அம்மனிதர்கள் வெளிப்படுத்தியதில் பூரித்திருந்த பூனைக்கு 'காவேரி' என பெயர் வைத்திருந்தாள் வாசுகி.
ஆளற்ற பொழுதுகளின் தனிமையை முன்பு ஒவ்வொருவருமே உணர்ந்திருந்த அவ்வீட்டின் மௌனம் கலைக்க அவ்வப்போது காவேரி எழுப்பிய மியாவ் ஒலிகள் இதற்கு முன் கேட்டிருந்த அத்தனை ஒலிகளைவிடவும் சந்தோசப்படும்படியாயிருந்தது. அத்தெருவிலிருந்த பலரும் பல விஷயங்களை நினைவு படுத்துவதற்கென ஓர் அடையாளமாய் தங்கள் உரையாடல்களில் காவேரிக்கென ஓர் இடம் ஒதுக்கியது ஆச்சரியம்தான் எனினும் தவிர்க்க முடியாததும்கூட.
எவ்வளவோ வருடங்களாய் எத்தனையோ பேர் உதிர்த்த சொற்களின் நிறைவே அவ்வீட்டில் ஒருவிதமான அடர்த்தியை ஏற்படுத்தி விட்டிருந்ததை ஒருவரும் உணர்ந்திருக்கவில்லை. அந்த ஆண்டும் 9 த்தில் தவறிய வாசுகிக்கு பள்ளிக்குப் போவதில் இருந்த ஈடுபாடு முழுமையாக விட்டுப் போயிருந்ததோடு அடுத்த வருடமும் தன் வயதிற்குக் குறைந்த பெண்களோடு உட்கார்ந்து படிக்க முடியாதென்கிற பிரக்ஞையும் வந்துவிட்டிருந்தது. சுருங்கத் துவங்கிவிட்டிருந்த அவள் உலகம் யாருக்கும் தெரியாது. இவர்களைப் பொறுத்தவரை அப்பா நாட்டிற்கு சேவை செய்து கொண்டிருக்கும் ராணுவ அதிகாரி அவ்வளவுதான்.
வெவ்வேறு வயதுகளில் வாழ்ந்த அந்த நான்கு பெண்களின் உலகம் இந்தப் பூனையின் மூலம் கலகலப்பாகி விட்டிருந்தது. மருதாயிப் பாட்டிதான் அந்த விஷயத்தை முதல் நபராய் அறிந்துகொண்டுவிட்டிருந்தாள் அதனைத் தூக்கிப் பார்த்து. ஐந்தாவதாகவும் இன்னுமொரு பெண் என்பதில் அவர்கள் அனைவருக்கும் ஆச்சர்யம்தான். யாருமற்ற நேரங்களில் பொழுதைக் கழிப்பதற்கென எவ்வளவோ வழிகள் இருந்தன வாசுகிக்கு. எனினும் மற்றெல்லாவற்றையும் விடவும் பூனையைக் குளிப்பாட்டவும் அதனோடு விளையாடவுமே அவள் அதிகம் விருப்பம் கொண்டவளாய் இருந்தாள். மங்கலான இருளடங்கிய அவ்வீட்டின் அறைகள் முழுக்க தன் பாதம் பதிக்கத் துவங்கிவிட்டிருந்த பின் ஒவ்வொரு அறைக் கதவிலிருந்தும் உதிர்ந்து விழும் மர வாசனையிலேயே அவ்வறையின் இருப்பை அழுத்தமாகத் தெரிந்து கொண்டு விட்டிருந்தது.
கூர் நகங்கள் பாதம் மறைக்க பரப்பி வைத்த ஒவ்வொரு அடியிலும் தன் மீதான நேசிப்பை அம்மனிதர்கள் வெளிப்படுத்தியதில் பூரித்திருந்த பூனைக்கு 'காவேரி' என பெயர் வைத்திருந்தாள் வாசுகி. ஆளற்ற பொழுதுகளின் தனிமையை முன்பு ஒவ்வொருவருமே உணர்ந்திருந்த அவ்வீட்டின் மௌனம் கலைக்க அவ்வப்போது காவேரி எழுப்பிய மியாவ் ஒலிகள் இதற்கு முன் கேட்டிருந்த அத்தனை ஒலிகளைவிடவும் சந்தோசப்படும்படியாயிருந்தது. அத்தெருவிலிருந்த பலரும் பல விஷயங்களை நினைவு படுத்துவதற்கென ஓர் அடையாளமாய் தங்கள் உரையாடல்களில் காவேரிக்கென ஓர் இடம் ஒதுக்கியது ஆச்சரியம்தான் எனினும் தவிர்க்க முடியாததும்கூட.
எவ்வளவோ வருடங்களாய் எத்தனையும் பேர் உதிர்த்த சொற்களின் நிறைவே அவ்வீட்டில் ஒருவிதமான அடர்த்தியை ஏற்படுத்தி விட்டிருந்ததை ஒருவரும் உணர்ந்திருக்கவில்லை. அந்த ஆண்டும் 9 த்தில் தவறிய வாசுகிக்கு பள்ளிக்குப் போவதில் இருந்த ஈடுபாடு முழுமையாக விட்டுப் போயிருந்ததோடு அடுத்த வருடமும் தன் வயதிற்குக் குறைந்த பெண்களோடு உட்கார்ந்து படிக்க முடியாதென்கிற பிரக்ஞையும் வந்துவிட்டிருந்தது. சுருங்கத் துவங்கிவிட்டிருந்த அவள் உலகம் காவேரியின்பாதத் தடங்களைத் தொடர்வதில் ஒருவித விசாலத்தன்மை பெற்றிருந்ததோடு சமீப நாட்களாய் அம்மாவும் வேலைக்குப் போகத் துவங்கியிருந்ததில், அதுவரை அம்மாவின் வசமிருந்த வீட்டின் இயக்கங்களனைத்தையும் தன்வசமாக்கி விட்டிருந்தாள்.
மதிய உணவு எடுத்துச் செல்ல அக்காவின் அடக்கமான டிஃபன் பாக்ஸ் கிடைத்துவிட்டதில் பெரிய சந்தோசமிருந்த போதும் அதன் பிறகு துணைக்கு அக்கா வராதது ஏக்ககமாக இருந்தது தங்கச்சிக்கு. ருதுவெய்தி மூன்றாண்டுகள் கழிந்து போயிருந்தது வாசுகிக்கு. அவளைப் போலவே நடப்பதிலும், பேசுவதிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்ட தங்கச்சி, ஏழாம் வகுப்பு அரைப்பரீட்சையின்போது ருதுவெய்தியதும் அவளாகவே தன்னை பாவித்துக் கொண்டாள். பகல் பொழுதின் பெரும்பகுதி அவ்வீட்டின் அறைகள் முழுக்க உரையாடல் ஏதுமற்ற சூன்யமே நிரம்பியிருந்தது. சற்று நிதானித்துக் கவனிக்கையில் மருதாயிப் பாட்டியை அச்சொடுத்திருந்த அம்மாவைத்தான் வாசுகி அக்கா அச்சொடுத்திருந்தாள். இப்போது அதுவே தங்கச்சிக்கும் தொடர்ந்திருக்கிறது.
வயோதிகத்தின் பெரும் ரேகைகள் மருதாயிப் பாட்டியின் உடல் முழுக்க விரிந்தபடியே இருக்க தேகம் சுருங்கி குழந்தையைப் போலாகி விட்டிருந்தாள். சமீபமான நாட்களில் வார்த்தைகளற்ற காற்றொலியையே அவள் பேச எத்தனிக்கையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்க, புலன்கள் அவளுக்கு மிக நெருக்கமாக மரணம் ஓர் நிழலாய் துவங்கிவிட்டிருப்பதை மற்ற மூவரும் உணரத் துவங்கியதைப் போலவே அவளும் உணர்ந்திருந்தாள்.
எவ்விதமான பிணித்தொற்றுமின்றி ஒருவித சாந்தத்துடன் அவளுயிர் பிரிந்து விட்டிருந்தது ஓர் சனிக்கிழமையின் அதிகாலையில். உறவினரென சொல்லிக் கொள்கிறபடி குறிப்பிட்டு எண்ணுகிற அளவிற்கு சிலர் வந்திருக்க... துஷ்டி நடந்த விபரம் கூறி வாசுகியின் அப்பாவைக் கூப்பிட்டபோது தன்னால் இனி ஒருபோதும் வரமுடியாதெனக் கூறியது இவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. மருதாயிப் பாட்டியின் ஒரே மகளான இவளுக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினாலும் அவள் கணவன் வர மறுத்து விட்டிருந்ததாலும் இறுதிச் சடங்கை யார் மூலமாகச் செய்யலாமென்கிற சிக்கல் வந்துவிட்டிருக்க, உறவுப்பெண் ஒருவரின் கணவரை வைத்துச் செய்துவிட்டிருந்தனர்.
பாட்டிக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருளடர்ந்த அறையின் ஒவ்வொரு துகளிலும் அவள் ஜீவன் ஸ்வீகரிக்கப்பட்டிருந்ததோடு அவள் விட்டுப்போன வாசனையும் அவ்வறைக்குள் நிரந்தரமாகப் படிந்து விட்டிருந்தது. அவ்வீட்டின் பிரதிநிதிகளில் ஒருத்தியாய் தன்னையும் உணர்ந்திருந்த 'காவேரி' வீட்டிலிருந்து பாட்டியின் உடலை எடுத்துப்போனபோது நீண்ட நேரம் வாசலில் நின்றபடியே கத்திக் கொண்டிருந்தது. அப்பாவிடமிருந்து செலவிற்கென வந்த பணம் முழுமையாக நின்று போகத் துவங்கிய போதுதான் அம்மா முற்றிலுமாக மாறிவிட்டிருந்தாள் இயல்பிலிருந்து.
வாசுகியையும், அவள் தங்கச்சியையும் நினைத்து எழுந்த ஆற்றாமைகள் ஒருவிதமான பதற்றத்தை அவ்வப்போது அவளுக்குள் ஏற்படுத்தி விடத் துவங்கியிருந்தது. தன் பெரும்பாலான நேரங்களில் காவேரியும் உடனிருந்ததில் வாசுகிக்கு ஆதுரமாயிருந்ததோடு அதன் மீதான உரிமை மற்றவர்களைவிட தனக்கே அதிகமாய் இருப்பதாகன உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. அம்மா பயந்தாற் போலில்லாமல் மிக விரைவிலேயே நெருங்கிய உறவினரிடமிருந்து வாசுகியைப் பெண் கேட்டு ஆள் அனுப்பியிருந்தது ஒருவிதமான நிம்மதியை அவளுக்குக் கொடுத்திருந்ததோடு, திருமணத்திற்குப் பின் அவள் விட்டுச் செல்லப்போகும் வெறுமை நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. பாவாடை சட்டையினை மட்டுமே உடுத்தப் பழகியிருந்த வாசுகிக்கு அம்மா தாவணி கட்டி விட்ட பொழுது, தங்கச்சிக்கும் காவேரிக்கும் அவளைப் பார்க்க யாரோ போலிருந்தது. சமீப நாட்களாய் யாருடனும் ஒட்டாத காவேரி அசமந்தமாய் இருப்பதைக் கவனித்து விட்டிருந்த அம்மா, இன்னும் சில நாட்களில் அது குட்டி ஈனப்போவதை அறிந்து விட்டிருந்தாள். வாசுகிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்பாக காவேரி வெவ்வேறு நிறங்களில் நான்கு குட்டிகளை ஈன்றெடுத்ததோடு அசதியிலும் பெருமிதத்திலும் ஓய்வெடுக்கத் துவங்கியது.
அதீத பசியில் காவேரியே தன் குட்டிகளைத் தின்றுவிடக்கூடிய அபாயம் இருப்பதாக உணர்ந்ததால் அதன் குட்டிகளைத்
தனியாக மடித்து வைக்கப்பட்ட துணியில் உறங்க வைத்தனர். தனக்குப் பாத்தியமான இரண்டு குட்டிகளைத் தூக்கிக்கொண்ட தங்கச்சி, அவைகளுக்கு இங்க் ஃபில்லரில் பால் கொடுப்பதைப் பார்த்த வாசுகி, மிஞ்சியிருந்த குட்டிகளுக்கு இங்க் ஃபில்லர் எதுவும் இல்லாததால் பிளாஸ்டிக் ஸ்பூனிலேயே ஊட்டினாள். ஆரவாரங்கள் ஏதுமின்றியே திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கத் துவங்கிவிட்டிருந்த வீட்டில் சற்றே வளர்ந்திருந்த குட்டிப் பூனைகளும், காவேரியும் வீடு முழுக்க வலம் வந்து கொண்டிருந்தன. ஏதோ ராஜபவனி வருகிற பாவனையில்.
திருமணத்திற்குப்பின் தன்னோடு எடுத்துச் செல்வதற்கென இரண்டு குட்டிகளை வைத்திருந்த வாசுகிக்கு என்ன விதத்தில் அறிவுரை சொல்லலாமென யோசித்துக் கொண்டிருந்த அம்மா, திருமணம் முடிந்து அவள் அங்கு சென்றபின் தானே எடுத்து வருவதாய் வாக்களித்தாள். பெருத்த ஆரவாரங்களின்றி முடிந்து போன திருமணச் சடங்குகளுக்கு மத்தியில் பூனைகளைப் பிரிய மனமற்று ஊருக்குச் செல்லும் வாசுகியின் மனநிலையை உணர்ந்து கொண்ட தங்கச்சி, சிறிய அட்டைப் பெட்டியொன்றில் அவளுக்கு விருப்பமான இரண்டு குட்டிகளைப் போட்டனுப்பினாள். வழியில் அவை ஆழ்ந்து உறங்கிப் போனதால் யாருக்கும் எவ்விதமான சந்தேகமும் வந்திருக்கவில்லை.
கணவன் வீட்டில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் ஒருவரும் பார்த்துவிடாதபடி அப்பூனைகளை வைத்துவிட்ட பின்புதான் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது. விளக்குகள் அணைக்கப்பட்ட இரவில் இவளை ஸ்பரிசித்துக் கொண்டிருந்த கணவன் திடீரென பூனைகளின் குரல் நாராசமாய்க் கேட்க, எரிச்சலோடு தன்னிலிருந்து அவளை விலக்கினான். கலைந்து போன ஆடையினைக்கூட சரி செய்யாதவளாய் முதலிரவிற்கென கொண்டுவந்திருந்த பாலில் கொஞ்சத்தைப் பாத்திரமொன்றில் ஊற்றி அவற்றுக்கு வைத்துவிட்டுத் திரும்பியவள், அதன்பிறகு எவ்வளவோ வற்புறுத்தியும் அன்றைய தினம் அவன் காமம் அற்று உறங்கிப் போயிருந்தான். மறுநாள் காலையில் விஷயத்தைத் தெரிந்துகொண்ட மாமியார் அவளைத் திட்டுவதற்கு விரும்பாதவளாய் அக்குட்டிகளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்தாள். பழக்கப்படாத
ஓரிடத்தில் சகிக்கவியலாத நெடியை உணர்ந்த அவைகள் வீறிட்டு அலற, அவைகளின் குரல் தெரு முழுக்க எழுந்து அடங்கியது. தொலைந்து போன பூனைக் குட்டிகளைத் தேடிய வாசுகி வீதியிலிருந்து வரும் சப்தத்தினை யூகித்து அதனைத் தூக்கிவர எத்தனித்த போதுதான், "இதென்ன வீடா என்னன்னு நினச்ச? ஒழுங்கா இருந்தா இரு. அந்தப் பூனைக்குட்டிய தூக்கப்போனயின்னா அப்படியே போயிடு..." என மாமியார் திட்டியதைக் கேட்டு என்ன செய்வதெனத் தெரியாமல் அப்படியே நின்றுவிட்டாள்.
அன்று மாலைக்குள்ளாகவே குப்பைத் தொட்டியிலிருந்து எழுந்து வந்த பூனைக் குட்டிகளின் குரல் நின்று போய்விட்டிருந்தது. அதன் பிறகான சில நாட்களில் உணர்வுகள் ஏதுமற்றவளாய் மாறிவிட்டிருந்தவளுக்கு எதன் மீதான நாட்டமுமின்றி அவசரமாய் இருந்தாள். ஒவ்வொரு முறையும் புணர்பாகம் ஓர் சவத்திடமிருக்கிற நிசப்தத்தையும், உயிரில்லாத் தன்மையுமே அவளிடம் உணர்ந்தவன், வீட்டில் யாவரும் ஊருக்குப் போய்விட்டிருந்த ஓர் இரவில் அவளுடன் முழுமையான விருப்பத்தோடு நெருங்கிய போது இருளில் அசைவற்றுக் கிடந்த அவளின் விழிகள் பூனையினுடையதைப் போல நீலமாகிப் போயிருந்ததில் அச்சம் கவிழ்ந்த மனதோடு எழுந்து விளக்கைப் போட்டான். ஆடைகளற்ற அவளுடலில் பூனைகளுக்கு இருப்பதைப் போன்று கோடுகளிருந்தன அடர்த்தியான குறுமயிர்களோடு. அவளை நெருங்குகிற எண்ணம் மறந்து அவசரமாய் அவ்வறையிலிருந்து வெளியேறிப் போனான்.
ஊருக்குத் தகவலனுப்பப்பட்டு அம்மா வந்திருந்தாள். "என்ன ஆச்சு?" என எவ்வளவோ முறை அவள் கேட்ட எதற்கும் வாசுகி பதில் பேசாமலே மௌனித்திருந்தாள். "இப்படியிருக்கிற புள்ளைய வெச்சி எப்படிங்க குடும்பம் நடத்தறது? நீங்களே சொல்லுங்க?" என ஏகத்திற்கும் கோபப்பட்ட வாசுகியின் மாமியார்-க்கு என்ன பதில் சொல்வதென யோசித்த அம்மா, தனக்கு ஆதரவாக யாராவது பேசுவார்களா என எதிர்பார்த்து, ஒருவரும் இல்லையென்றானபின், "செரிங்க, எம்பொண்ண நானே கூட்டிட்டுப் போறேன். இவ்ளோ நாளா நாந்தான பாத்திட்டு இருந்தேன், இனிமே பாக்கறதுக்கு என்ன?" எனச்சொல்லிவிட்டு வாசுகியை அங்கிருந்து கூட்டி வந்தாள்.
சில நாட்களுக்குப் பின் மீண்டும் வீட்டில் வாசுகியின் ஸ்பரிசத்தை உணர்ந்த காவேரி அவ்வீட்டின் அறைகள் முழுக்க ஒருவித குதூகலத்துடன் சுற்றிவர அதன் குட்டிகளிரண்டும் மெல்லிய ஓட்டத்தோடு பின் தொடர்ந்தன. இரவு நேரத்தில் உறக்கமற்றவளாய் காவேரியோடு விளையாடிக் கொண்டிருந்த வாசுகியைப் பார்த்த அம்மாவிற்கு அச்சம் மெல்ல இழையோடத் துவங்கிவிட்டிருந்தது. இரவில் இவளின் விழிகள் நீல நிறமாக மிளிர்வதைக் கவனித்தது போலவே காவேரியின் உடலிலிருந்து கோடுகள் மெல்ல அழிந்து போகத் துவங்கியிருப்பதையும் அம்மா கவனித்திருந்தாள்.
தங்கச்சியிடம் அதிகமாய் வாசுகி ஒட்டாத போதும் இவள் மீது நிகழும் புதுவிதமான மாற்றம் கொடுத்துவிட்டிருக்கிற கிறக்கத்தில் சதா நேரமும் தங்கச்சி இவளை சுற்றியபடியேதான் இருந்தாள். வாசுகியின் ஸ்பரிசத்திலிருக்கிற நறுமணமும், மிருதுவும் காவேரியை அள்ளிக் கொஞ்சியபோது உணர முடிந்த அதேதான் என்பது போலத் தோன்ற, மிக அழுத்தமாய் அவ்வப்போது அவளை அணைத்துக் கொண்டாள். மிகச் சில நாட்களாகவே இருவருமாய் அம்மாவைப் புறக்கணித்திருக்க, ஓய்வின் விருப்பமாய் அவளும் தனித்தவளாகவே இருந்து வந்தாள்.
ஓர் பின்னிரவில் விழிப்புத்தட்டி அவர்கள் இருக்கும் அறைப்பக்கமாய்ச் சென்ற அம்மா முழுமையான உருமாற்றம் ஒன்று வாசுகியின் மீது நிகழ்ந்து விட்டிருப்பதை கவனித்தாள். தங்கச்சிக்கு அப்போதுதான் துவங்கியிருக்க வேண்டும். உடலில் நீலத்திலும் கறுப்பிலுமாய் கோடுகள் தென்படத் துவங்கி விட்டிருந்தன. தம் மகள்களின் உருமாற்றத்தினை உணர்ந்தவளாய் அவள் அங்கிருந்து நகர்ந்தபொழுது, காவேரியின் இரண்டு குட்டிகளும் அவள் கால்களைச் சூழ்ந்து கொண்டன. சப்தம் எழுப்பிவிடாதபடி அவைகளைத் தூக்கியவள் அடர்த்தியான இருள் கவிந்திருந்த வீதியில் இறங்கி சிறிது நடந்தபின் ஏதோ நினைவு வந்தவளாய் நகராட்சிக்காரர்கள் குடிநீருக்காய் வெட்டி வைத்திருந்த குழியில் அவைகளைப் போட்டுவிட்டு அவசர அவசரமாய் மண்ணைச் சரித்துவிட்டு வந்தாள்.
மறுநாள் காலையில் தன் குட்டிகளைக் காணாத காவேரிநினைவு பிறழ்ந்தவளைப்போல் எங்கெங்கோ சுற்றத் துவங்கிவிட்டிருந்தது. தன் இயல்பைத் தொலைத்து அரூபமாகி விட்டிருந்த அதன் தோற்றத்தில் தெரிந்த சிதைவை உணர்ந்த அம்மா, வெகுசீக்கிரமே தம் மகள்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றிட முடிவு செய்தாள்.
இப்போதெல்லாம் அதிகம் சிரிக்காதவளாய் இருந்தபோதிலும் அசாதாரணமான ஓர் கணத்தில் சிரித்த வாசுகிக்குக் கூர் கூராய்ப் பற்கள் செதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் போலிருந்தது. சிகைக்காய் கொடுப்பதற்காக அவள் குளித்துக் கொண்டிருந்த அறைக் கதவைத் திறந்த அம்மா, நிர்வாணமாயிருந்த தம் மகள் உடல் முழுக்க ரோமம் அடர்ந்து போயிருப்பதோடு பின்புறத்தில் வாலொன்றும் வளர்ந்திருப்பதைப் பார்த்து அறைக்கதவைச் சாத்த எத்தனித்தபோதுதான் கண்ணாடியில் தெரிந்த வாசுகியின் முகம் பூனையினுடையதைப் போலிருந்ததைக் கவனித்தாள். அன்றைய மதிய உணவை முடித்து உறங்கப்போன வாசுகி, நெடும் உறக்கத்திற்கு ஆட்பட்டவளைப் போல் மறுநாள் விடிந்த பிறகும் அசைவற்றுக் கிடந்தாள். இயல்பிற்கு மீறின நீலம் படர்ந்த அவளுடலைச் சுற்றி சுற்றி வந்து கத்தியபடியே இருந்தது காவேரி. வாசுகியின் இறுதிச் சடங்குகள் முடிந்து சில நாட்கள் போயிருக்கும்.
ஓர் பின்மாலைப் பொழுதில் அங்கிருந்து இடம் பெயரும் பொருட்டு தன்னோடு கிளம்பச் சொன்ன அம்மாவை எவ்விதமான வியப்பையும் காட்டாமல் நோக்கியிருந்த தங்கச்சியின் மனம் முழுக்க வாசுகி வாசுகி என் அக்காவின் பெயர் ஒலித்துக் கொண்டிருந்தது. அதிக நடமாட்டம் இல்லாத நடைபாதையில் ரயிலுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்க, எதையோ பார்த்துச் சிரித்த தங்கச்சியைக் கவனித்த அம்மா, கூர்கூராய் அவள் பற்கள் நீண்டிருப்பதைப் பார்த்ததும் எழுந்த பயம் அனைத்தையும் மறைத்துக் கொண்டவளாய் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்.



