top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

பாலு மகேந்திரா – ஒரு முடிவுறாத கனவின் பிம்பங்கள்.



பாலுமகேந்திராவை எனக்கு யாரும் அறிமுப்படுத்தவில்லை. அதற்கான தேவையும் இருந்திருக்கவில்லை. எனது முந்தைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அந்த மகா கலைஞனைத் அப்படியொன்றும் தாமதமாக நான் கண்டுகொள்ளவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாளிலேயே மூன்றாம் பிறையும், மூடு பனியும், சதி லீலாவதியும், அழியாத கோலங்களும் எனக்கு விருப்பமான படங்களாகத்தான் இருந்தன. எல்லாவற்றுக்கும் பின்னால் பால்யத்தில் எனக்கான எல்லா நிம்மதியும் விடுதலையிம் சினிமாவில் மட்டுமே கிடைத்ததால் மற்ற எல்லாவற்றையும் விட அதை விரும்பிச் செய்தவனாகவே இருந்திருக்கிறேன். இப்போதும் அதனை விரும்பிச் செய்து கொண்டிருக்கிறேன். சினிமாவை ரசிப்பதற்கும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கை முறைக்குமான நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக உறுதியாக நம்புகிறேன். நாம் பார்க்கும் படங்களும் படிக்கும் புத்தகங்களும் ஏதோவொரு வகையில் நம்மை பிரதிபலிக்கின்றவையாக இருக்கின்றன. பாலு மகேந்திரா தனது படங்களின் மூலம் சொந்த வாழ்வின் சில பகுதிகளையோ அல்லது தான் வாழ நினைத்த வாழ்வின் சில பகுதிகளையோதான் தொடர்ந்து காட்சிப்படுத்த முயன்றிருப்பதாகப் படுகிறது. அனுமாங்களாக அல்லாது தொடர்ந்து அவரது நேர்காணல்கள், உரையாடல்கள் எல்லாவற்றின் வாயிலாகவும் வெளிப்படையானதொரு கலைஞராகவேதான் அடையாளங் காணப்பட்டிருக்கிறார். அவரது படைப்புகளில் எனக்கு இருக்கும் அந்தரங்கமான விருப்பம் அவரது வெளிப்படையான உரையாடல்களிலும் எப்போதுமிருக்கிறது.


உங்களுக்கு ஷோபாவை நினைவிருக்கிறதா? எனக்கு ஷோபா எப்போது கனவில் வந்தாலும் ஒன்று மூடுபனியில் நடித்த அல்லது முள்ளும் மலரும் படத்தில் வரும் வள்ளியாகவோதான் வருகிறாள். அது என்னவோ இந்த இரண்டில் மட்டும் அவளிடம் தனித்துவமானதொரு உயிர்ப்பு இருப்பதை உணர்கிறேன். அவ்வப்போது அழியாத கோலங்கள் டீச்சராகவும் வருவதுண்டு. ஆனால் அந்தப் பாத்திரம் கொஞ்சம் எனக்கு விருப்பமில்லாத ஒன்று. ஒருவகையான இடைவெளியை எப்போதும் அந்த டீச்சரிடம் உணர்கிறேன். ஏன் பாலு இப்படியான ஒரு ஷோபாவைக் காட்டினார் என்று கூடத் தோன்றும் அதில் தனித்துவமில்லை. ஷோபா தனித்துவமானவள் இல்லையா? ( நான் இன்னும் கோகிலா பார்க்கவில்லை. ) ஆனால் ஷோபாவை தனித்துவமானவளாய்க் காட்டியது பாலு ஸார் மட்டுந்தான். முள்ளும் மலரும் படத்தில் நிறையக் காட்சிகளில் பாலு மகேந்திராவின் கேமரா வெகு இயல்பாக கதையைச் சொல்லி நகரும். காமிராவின் வாயிலாக ஒரு கதையைப் பார்க்க பழகியபின் இயல்பாகவே கதாப்பாத்திரங்களின் மீதும் அவர்களின் உடல் மொழியின் மீதும் அதீதமான கவனமும் அக்கறையும் வெளிப்படுவது இயல்பு. பாலு ஸாரின் கேமரா எப்போதும் நடிகர்களையும் அவர்களின் அசைவுகளையும் மட்டுமே கவனத்தில் கொள்வதில்லை. அவர்களின் நிசப்தமும் அவர்கள் இருக்கும் இடத்தின் நிசப்தமும் அவருக்கு முக்கியமானது. பாலு ஸாரின் படங்களில் தான் தமிழ் சினிமா இன்னும் பழக்கப்படாத அல்லது அதிகமும் ரசிக்க முடியாத நிசப்தத்தை ரசிக்க முடியும். நீங்கள் கேட்டவையும், சதி லீலாவதியும் அதில் கொஞ்சம் விதிவிலக்கு. அப்படியும் கூட நீங்கள் கேட்டவை படத்தில் சலசலப்பினூடாக மெல்லியதொரு நிசப்தம் கலந்திருக்கவே செய்யும்.


பாலு ஸார் என்னும் கதை சொல்லி எத்தனை முக்கியமானவரோ அதே அளவுக்கு பாலு ஸார் என்னும் ஒளிப்பதிவாளனும் முக்கியமானவர். உதிரிப்பூக்கள் படத்தை இப்போது திரும்ப எடுத்துப் பாருங்கள் அந்தப் படம் உங்களுக்குச் சொல்ல வருவது வெறும் கதையை மட்டுமல்ல, அதுவொருவிதமான அனுபவம். ’அப்பா இன்னைக்கு சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னாரும்மா..’ என மகள் வந்து சொல்லும் போது வாசலுக்கு வந்து வானத்தை பார்ப்பாளே அந்த நாயகி அது ஒரு இயக்குநன் மட்டும் தீர்மானிக்கக் கூடிய காட்சியா? அப்படியே தீர்மானித்திருந்தாலும் அந்த வானம் அவள் மனதை வெளிப்படுத்தக் கூடிய அளவுக்கு கலங்கலாக இருக்கும் படி பார்த்துக் கொண்டது நிச்சயம் பாலு ஸாராகத்தான் இருக்க முடியும். மூடுபனி படத்தில் ஷோபாவைத் தேடி பிரதாப் ஒவ்வொரு அறையாகப் போகும் போது கேமரா அவரைத் தொடர்ந்து பின்னாலேயே செல்லும். சற்றே நீளமானக் காட்சி. இன்றைய தேதியில் ஸ்டெடி கேம் போட்டு எளிதில் அதை எடுத்துவிடலாம். ஆனால் அன்று அவ்வளவு கனமான கேமராவை தோளில் தூக்கிக் கொண்டு அந்தக் கதாப்பாத்திரத்தைத் தொடர்ந்து சென்றது பாலு ஸார்தான். முக்கியமான விசயம் அதில் சின்ன அதிர்வு கூட இருக்காது. அந்தக் காட்சி படத்தில் அத்தனை வலுவானதாக இருக்கும். இருளையும் ஒலியையும் பாலு ஸார் அளவிற்கு கச்சிதமாய்க் காட்டியவர்கள் யாருமில்லை. பெரும்பாலும் வெளிச்சத்தை மட்டுமே பார்த்துப் பழகிய நம் கண்களுக்கு இருளின் மகோன்னதமான அழகை காட்சிப்படுத்தியது அவரின் கேமராதான். அவர் ஒளிப்பதிவாளராக வேலை செய்த படங்களை இப்போது திருப்பிப் பார்த்தாலும் காட்சிகள் மிக கச்சிதமாகவும், மெருகுடனும் இருக்கின்றன. மலையாளத்தில் அவர் ஒளிப்பதிவு செய்த படங்களை ஒரு பாடமாகவே நாம் உதாரணம் காட்ட முடியும்.

பாலு ஸாரின் படங்களை வெவ்வேறாகப் பிரித்துப் பேசலாம். குறிப்பாக அவரின் படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அலைக்கழிக்கப்பட்ட பால்யம். அழியாத கோலங்கள், மூடுபனி, நீங்கள் கேட்டவை இந்த மூன்று படங்களின் மையப் பாத்திரங்களின் பால்யமும் பெருந்துயரை எதிர்கொண்டவையாகவும் அதிலிருந்து ஒருபோதும் மீளமுடியாதவையாகவும் இருக்கின்றன. இதனாலேயே இந்தக் கதைகள் மிக அழுத்தமான அசல் தன்மையைக் கொண்டிருக்கிறது. நீங்கள் கேட்டவை ஒரு கமர்சியல் படமாகவே இருந்த போதும் அந்தக் கதாப்பாத்திரத்தின் வலி நமக்கு அழுத்தமாக உள்ளிறங்குவதற்குக் காரணம் இந்த அசல்தன்மைதான். அழியாத கோலங்கள் படத்தில் அந்தச் சிறுவன் குளத்தில் விழுந்து இறக்கும் போது மெல்ல மெல்ல ஒரு சலனம் திரையில் கலைந்து நிசப்தம் வலுவாக விரியும். இது குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பாலுஸார் சின்ன வயதில் தான் பார்த்த ஒரு நண்பனின் மரணம் ஏற்படுத்திய நேரடியான பாதிப்பே காரணம் என்பார். வாழ்வில் எப்போதோ தான் எதிர்கொள்ளும் சின்ன விசயங்களையோ பெரிய விசயங்களையோ தனது படங்களில் காட்சிகளாய் வைத்துவிடுவதன் மூலம் ஒரு கலைஞன் தனது நீண்ட நாள் நெருக்கடியிலிருந்து தன்னை மீட்டுக் கொள்கிறானென்றுதான் தோன்றுகிறது. எல்லாக் கலைஞர்களுக்கும் தங்களின் படைப்பின் வழி ஏதோவொரு கனத்தில் தனது பால்யத்தைச் சொல்லிவிடும் தவிப்பு இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


காதலை தமிழ் சினிமா அடித்துத் துவைத்து ரசிகனை துவண்டு போகச் செய்திருந்தாலும் கூட நிஜத்துக்குப் பக்கத்தில் போய் காதலின் மென்மையான பக்கங்களையோ அதன் ஆழ்ந்த கசப்புகளையோ வலுவாக சொன்னது குறைவுதான். துரோகத்தின் பின்னாலிருக்கும் காதலின் நிராசைகளை நாம் பெரும்பாலும் தவறவிட்டவர்களாகவே இருக்கிறோம். ஒரு எளிய கதை அதன் மென் துயரங்கள் அல்லது நிரப்பவியலாத ஏமாற்றங்களின் பின்னால் தான் ஒரு காவியத்தனமையை எய்துகிறது. காதலுக்கு துரோகமும் ஒரு அழகான நண்பனே. எவ்வளவு முயன்றாலும் மெல்லிய துரோகம் கூட இல்லாத ஒரு காதல் ஒருபோதும் முழுமையடைவதில்லை. மறுபடியும் அவரின் வாழ்வின் மறைமுகமான பிரதிபலிப்பு என்று சொல்லப்பட்டாலும் அது ஒரு பெருநகரத்தில் நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலன மனிதர்களின் வாழ்வைப் பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது. மறுபடியும் நாயகி லட்சிய உதாரணம் இல்லை. ஆனால் நிஜமான சராசரிப் பெண்ணின் அழுத்தமான பிரதிபலிப்பு. நீங்களும் நானும் பல காலமாய் கவனிக்காமல் நமக்கு அருகிலேயே வாழ்ந்த நிறையப் பெண்களின் பிரதிபலிப்பு. காதல் எப்போதும் பதட்டத்தில் வந்து தொலைத்துவிடுகிறது. ஆனால் அதைப் பாதுகாத்து வைப்பதற்குத்தான் ஒரு தனிமனிதனுக்குள்ளிருக்கும் போதாமையும் பேராசைகளும் சாகசத்தைத் தேடும் சுயநலமும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தோடு அந்தக் காதலைப் பார்க்க வைக்கிறது. மறுபடியும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காதல் பதிவு என்றால் இன்னொரு மிக முக்கியமான பதிவு மூன்றாம் பிறை. விஜி ஏன் அவனை அப்படித் தவிக்க விட்டுப் போனாள். அவள் குழந்தையாகவே இருந்திருக்கலாமே. இத்தனை இரக்கமில்லாதவளாய் அவள் மாறுவாள் என்பதை எதிர்பார்க்காததால்தான் அவன் இத்தனை காயமுற்றவனாய் ஆகிவிடுகிறானா? ஏன் விஜி? அவன் கண்ணில், குரலில் எதிலும் நீ காதலின் தவிப்பை அந்தச் சில நொடிகள் கவனித்திருக்கவில்லையா? எப்படி நீ ஒரு நாளில் வாழ்வின் அற்புதமான தருணங்கள் எதுவும் நினைவு கொள்ள முடியாதவளாய்ப் போக முடியும். மூன்றாம் பிறையின் ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த கிடப்பது அன்பும் நேசமும் தான். இப்படியான ஒரு குழந்தையை நேசித்த அவன் அவள் இல்லாத ஒரு நாளில் அவளை விடவும் குழந்தையாகிப் போனான். பேசத் துவங்குவதற்கு முன்னால் தாயை இழந்த குழந்தையின் துயரம் போல வார்த்தைகளுக்குள் வராத துயரம். பாலு மகேந்திராவின் படங்களில் இருக்கும் காதலை எழுதுவதெனப்து ஒரு கட்டுரையில் முடிவுறாத ஒன்று. ஏனெனில் அந்தக் காதல் ஒவ்வொரு முறையும் திரும்பிப் பார்க்கிற போதெல்லாம் வெவ்வேறான அனுபவங்களை நமக்குக் கொடுக்கிறது. இன்னொரு வகையாக பார்ப்பதென்றால் காதலை அதன் முதிர்ச்சியான கோணத்திலிருந்து அனுகியவை அவரின் படங்கள். இன்னும் இரண்டு வலுவான உதாரணங்கள் ஜூலி கணபதியும், ரெட்டை வால் குருவியும். ரெட்டை வால் குருவியை வெறுமனே ஒரு ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் இரண்டு பெண்களின் மீது அல்லது நிறையப் பெண்களின் மீது காதல் கொள்கிறவன் குறித்த பொதுப்புத்தி பெரும்பாலும் அவனது நிர்வாணத்தை அந்தரங்கமாக கண்கானிப்பதாகவும், அதில் திருட்டு சந்தோசம் கொள்வதாகவுமே இருக்கிறது. பெரும்பாலான படங்களுமே கூட பல பெண்களை நேசிப்பவர்களை பெண் பித்தர்களென்றுதான் காட்டுகின்றன. ஏனெனில் திருட்டுச் சுவையைத் தருவதின் வியாபாரம் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால் பாலு ஸார் ரொம்ப அழகாக அதை தன் படத்தில் கையாண்டிருப்பார். மறுபடியும் கதாநாயகனும் முக்கியமான உதாரணமே. சதி லீலாவதி மட்டும் என்னவாம்? அதுவும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதை தான். ஆனால் அது அந்த வாழ்வில் இருக்கும் நியாயங்களைப் பேசுவதற்குப் பதிலாக சுவாரஸ்யங்களைப் பற்றிப் பேசுகிறது. அது சரி ஒரு மனிதன் தனது எல்லாப் படைப்புகளிலும் வாழ்வின் நியாய தர்மங்களை மட்டுமே பேச வேண்டுமா என்ன? நிறைய பெண்களின் மீது விருப்பம் கொள்ளுதல் ஒரு தனிமனிதனின் சுதந்திரமோ அல்லது மலிவான காமமோ இல்லை. எப்படியாவது தன்னை யாராவது ஒருவருடன் என்றென்றைக்குமாய் பொருத்திக் கொள்ள முயன்று முடியாமல் தோற்று ஏமாறும் அவஸ்தையும் தான். ஜூலி கணபதியின் நாயகி மனப்பிறழ்வு கொண்டவளில்லை. குழந்தைத்தனமானவள் இல்லை. ஆனால் தான் நேசிப்பவனுக்கு முன்னால் தனது எல்லா ஈகோவையும் தூக்கி வைத்து விடுகிறவளாக இருக்கிறாள். இத்தனைக்கும் அவன் ஒரு எழுத்தாளன். ( ஆனாலும் ஒரு நெருடல் பாலு ஸார், சரிதா ஒரு காட்சியில் கோணங்கியின் பாழி புத்தகத்தைக் கையில் வைத்திருப்பார். ஆனால் அவர் நேசிக்கும் எழுத்தாளர் ஒரு சாதாரண கமர்சியல் எழுத்தாளர். ஏன் இந்த முரண்பாடு.) அவன் அழுக்கு சட்டையை அதன் வியர்வை மணத்தை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். இது பைத்தியகாரத்தனமான காதல் என்றில்லாமல் வேறென்ன?


பாலு ஸாரின் படங்கள் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமானவை. சதி லீலாவதி மட்டும் விதிவிலக்கு. அதற்காக அது கமர்சியல் படமும் அல்ல. அது அழகானதொரு படம். பாலு ஸாரின் சாதனைகளில் ஒன்றாக சொல்லப்படும் வீடு படத்தின் கதை மிக எளிமையான ஒன்றுதான். ஆனால் அதில் அந்தக் காலகட்டத்தின் பெருநகரத்தின் வாழ்க்கை ரத்தமும் சதையுமாய் இருந்தது. அந்தப் படத்தின் ஒளிப்பதிவு தமிழில் மிகச் சிறந்த ஒளிப்பதிவு கொண்ட படங்களின் வரிசையில் வைக்குமளவிற்கு முக்கியமானது. அந்தப் படம் ஏற்படுத்திய விளைவுகளும் முக்கியமானவை. உலகம் முழுக்க வாழும் வீடில்லாதவர்களுக்கு என சமர்ப்பணம் செய்யப்பட்ட அந்தப்படம் எல்லாக் காலகட்டத்திலும் பொருந்தக்கூடிய ஒன்றுதான்.


பாலு ஸாரின் கதாநாயகிகள் குறித்தும் அவர் படங்களில் பயன்படுத்தப்பட்ட இசை குறித்தும் சில வரிகள் குறிப்பிடாது போனால் நிச்சயம் இந்தக் கட்டுரை முழுமை அடையாது. முகம் முழுக்க பவுடர் பூசிய பெண்களுக்கு ஓய்வு கொடுத்து இயல்பான ஒப்பனை இல்லாத கருத்த பெண்களை திரையில் பார்க்க முடிந்தது இவரின் படங்களில்தான். ஆனால் திரையில் அந்தப் பெண்களைக் காண்கையில் ஒரு மட்டுமீறிய காதலுணர்வு பெருகியோடுவதை நிச்சயமாய் நம்மால் தவிர்க்கவே முடியாது. ரெட்டைவால் குருவியில் ராதிகாவை காதலித்த அளவிற்கு வேறு எந்தப் படத்திலும் என்னால் ராதிகாவை காதலிக்க முடிந்திருக்கவில்லை. அர்ச்சனாவையும், ஷோபாவையும், ராமன் அப்துல்லா ஈஸ்வரி ராவையும், மெளனிகாவையும், ப்ரியாமணியையும் எண்ணெய் வழிந்த முகமும் ஒப்பனையின் எந்த மாசும் எட்டாத தூய கண்களுடனும் காட்டிய பாலு ஸாரால் எப்படி தன் நாயகிகளை காதலிக்காமல் இருக்க முடியும். ஆனால் அவர்கள் அழகானவர்களாக மட்டுமே அவரின் படங்களில் வந்து போகவில்லை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் வலுவானவர்கள். மறுபடியும் ரேவதி, வீடு அர்ச்சனா, ரெட்டைவால் குருவி ராதிகா, ஜூலி கணபதி சரிதா, நீங்கள் கேட்டவை சில்க் ஸ்மிதா என எல்லோருடைய பாத்திரங்களும் அழுத்தமானவை. இன்னொரு வகையில் பார்த்தால் பாலு ஸாரின் கதைகள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திதான் இருக்கின்றன.


இளையராஜா எப்போதும் பாலு ஸாருக்கென்றே விசேசமாக ட்யூன் போடுவார். ஏனெனில் அவர்கள் இருவருக்குமே கிடாரின் மீது பெரும் காதல். பாலு ஸாரின் படங்களின் பாடல்களிலும் பின்னனி இசையிலும் அதிகமும் வருவது கிடாராகத்தான் இருக்கிறது. அடிப்படையில் மேற்கத்திய இசையின் மீது அவருக்கு கொஞ்சம் கூடுதல் விருப்பம் இருக்க வேண்டும். அதனாலேயேதான் குறைவான கருவிகளைப் பயன்படுத்துவதில் எப்போதும் அவர் கவனமாக இருந்திருக்கிறார். பாடல்கள் மென்மையானவையாகவும் ஒரு மேற்கத்திய தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. ராஜா ஸாரின் மிகச் சிறந்த பாடல் வரிசையில் பாலு ஸாரின் படப் பாடல்களுக்கு எப்போதும் ஒரு முக்கியப் பங்குண்டு. குறிப்பாக சில படங்களைச் சொல்ல வேண்டுமென்றால் ரெட்டை வால் குருவி, நீங்கள் கேட்டவை, மூன்றாம் பிறை, மூடுபனி இந்தப் படங்களின் பாடல்கள் எல்லாம் எப்போதும் அற்புதமானதொரு உணர்வைத் தரக்கூடியவை.


இளையராஜா எப்போதும் பாலு ஸாருக்கென்றே விசேசமாக ட்யூன் போடுவார். ஏனெனில் அவர்கள் இருவருக்குமே கிடாரின் மீது பெரும் காதல். பாலு ஸாரின் படங்களின் பாடல்களிலும் பின்னனி இசையிலும் அதிகமும் வருவது கிடாராகத்தான் இருக்கிறது. அடிப்படையில் மேற்கத்திய இசையின் மீது அவருக்கு கொஞ்சம் கூடுதல் விருப்பம் இருக்க வேண்டும். அதனாலேயேதான் குறைவான கருவிகளைப் பயன்படுத்துவதில் எப்போதும் அவர் கவனமாக இருந்திருக்கிறார். பாடல்கள் மென்மையானவையாகவும் ஒரு மேற்கத்திய தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. ராஜா ஸாரின் மிகச் சிறந்த பாடல் வரிசையில் பாலு ஸாரின் படப் பாடல்களுக்கு எப்போதும் ஒரு முக்கியப் பங்குண்டு. குறிப்பாக சில படங்களைச் சொல்ல வேண்டுமென்றால் ரெட்டை வால் குருவி, நீங்கள் கேட்டவை, மூன்றாம் பிறை, மூடுபனி இந்தப் படங்களின் பாடல்கள் எல்லாம் எப்போதும் அற்புதமானதொரு உணர்வைத் தரக்கூடியவை. ்வையாளனுக்காக தன்னைத்தானே அப்படங்களால் புதுப்பித்துக் கொள்ள முடியும்.


( 2014 ம் வருடத்தின் பிற்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரை.)

38 views

Comments


bottom of page