top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

மயான காண்டம்.

1
தன் முன்னால் விரிந்து கிடக்கும் சபிக்கப்பட்ட அந்த புண்ணிய நகரத்தை எந்தக் குழப்பமும் இல்லாமல் மச்சக்காளை பார்த்தான். இத்தனை காலம் தான் இங்கு வந்து சேர்வதற்காகத்தான் எங்கெங்கோ ஓடியிருப்பதாய் மனம் சொன்னது. பிணங்களின் நெடுங்கால நெடிகண்ட இந்நகரம், மற்ற நகரங்களை விடவும் புணிதத் தன்மை மிக்கதாய் மாறிப்போனது வரலாறு மறுக்கமுடியாத சாகசம். மனிதர்கள் வசிக்கும் ஊராய் காசி மாநகரை அவனால் பார்க்க முடியவில்லை. பிரம்மாண்டமானதொரு இடுகாடு. அல்லது நந்தவனம். மனித ஆன்மாவைக் கிழித்து எரியும் இந்த சுடலையில் தகனம் செய்வது தொழில் அல்ல, சேவை. தன் சொந்த பந்தங்கள் எல்லாவற்றையும் துறந்து ஒரு பின்னிரவு ரயிலேறி இங்கு அவன் வந்து சில நாட்கள் ஆகிப் போயிருக்கிறது. பசி கொண்ட நாய் தெருவெங்கும் தேடியலைந்ததைப் போல் இந்த நகரின் நாற்றமெடுத்த வீதிகளெங்கும் கால் போன போக்கில் எல்லாம் நடந்தான்.


ஊரிலிருந்து கிளம்பிய மூன்று தினங்களாக எதுவும் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. அதற்கான கோருதலை அவன் வயிறும் கேட்பதாக இல்லை. அவனை எதிர்கொண்ட அத்தனை சாலைகளும் வினோதமாயிருந்தன, மற்ற நகரங்களைப் போல் குறிப்பிட்ட சில சாலைகள் என்றில்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் போகலாம். எங்கு வேண்டுமானாலும் போகலாம். அந்த ஊரையே ஊடறத்துச் சென்று கொண்டிருக்கும் கங்கா நதிக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை நம்பினான். அந்த நதி மெளனமான வன்மங்களின் சாட்சியம். தன்னை புண்ணியத்தின் ஆத்மாவென நம்பச் செய்து கொண்டிருந்த அதற்கு ஒரு சமயம் தன்னைக் கடவுளாகவும் இன்னொரு சமயம் பிணம் தின்னும் கழுகாகவும் உணர்த்தும் பெரும் வல்லமை உண்டு.


கங்கா நீரில் தங்களை சுத்தப் படுத்திக் கொண்ட லட்சோபலட்சம் மனிதர்களோடு ஒருவனாய் தனது முந்தைய ஆடைகள் அவ்வளவையும் துறந்து அரிச்சந்திரனின் ஒரே உடையான கருப்பு நிற வேஷ்டியை மட்டும் அணிந்து கொண்டு மொத்தமாக நீரில் மூழ்கி எழுந்தான். முதிர்ந்த அன்னையின் ஆதுரத்தோடு மென்மையாய் கடந்து செல்லும் கங்கையின் மடியில் தனது கடந்த காலம் கரைந்து ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இனி தனக்குக் கடந்த காலம் என ஒன்றில்லை. ஆனால் இந்த சமூகத்தின் நீண்ட பாரம்பர்யம் கொண்ட ஒரு கடந்த காலப் புனைவுக்குள் தன்னைப் புகுத்திக் கொள்ளத் தயாரானான்.


“ஐம்பத்தாறு தேசங்களைத் துறந்து சத்தியமே வாழ்க்கையென உறுதியோடிருந்து மயானம் காத்த அதே அரிச்சந்திரன். நானே அவன். இனி காசி விஸ்வநாதர் வந்து கூப்பிடும் நாள் வரை மயானமே என் வீடு, தகனம் செய்வதே என் பணி… உடல் முழுக்க கங்கையை சுமந்து கொண்டு தனது கோலை எடுத்துக் கொண்டவன்…” அந்த ஈரத்தோடு கைகளிலும் நெற்றியிலும் பட்டையிட்டான்..


குளிருக்காக ஸ்வெட்டர்கள் அணிந்து பிணம் எரியூட்ட நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஈரம் உலராது சொட்ட சொட்ட ஒருவன் வினோதமாய் நடந்து செல்வதைப் பார்த்தனர். இந்த நகரில் வினோதமானவர்கள் ஏராளம்தான். அவர்களுக்கு மத்தியில் இவன் ஒன்றும் அவ்வளவு முக்கியமானவன் இல்லை. எதிர்கொண்டவர் எவரையும் பார்க்காமல், நின்ற இடத்திலிருந்தே காசி விஸ்வநாதரை கண் மூடி வணங்கினான். அரிச்சந்திரன் காவல் காத்த மயானம். இன்னும் வாழ்வின் புரியாத கனங்களை எரித்துக் கொண்டிருந்தது. அவன் கண்களில் அந்த நகரத்தையே பொசுக்கும் அக்னி. சத்தியத்தின் மிச்சம். நடையின் ஒவ்வொரு தப்படியிலும் வாழ்வை ஒதுக்கித் தள்ளும் இறுக்கம். தான் நடிக்க வந்தது மேடையிலல்ல என்று புரிந்து கொண்டவனின் உடல் காசி மாநகரின் குளிரையும் எரியும் பிணங்களின் நெருப்பையும் ஒருசேர உள்வாங்கிக் கொண்டிருந்தது.


“சுடலைக்கு நானெடுத்து

சுடுங்கோலை கைப்பிடித்து

சுடவரும் பிணங்களை

வேக வைப்பேன்…”


அத்தனை பெரிய ஜன இரைச்சலையும் ஊடுருவி அதிர்ந்த அவன் குரல் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். ஒரு சவம் எரியூட்டப்படுவதற்கான சடங்குகள் நடந்து கொண்டிருக்க பிணத்தை எரிப்பவனோடு சேர்ந்து அவன் அனுமதியை கேட்காமலேயே அவனுக்கு உதவினான். இவன் எரியூட்ட உதவிய நேர்த்தியையும் இவனது உடை, உடைந்து வெடித்துப் பீறிடும் குரல் எல்லாவற்றையும் பார்த்தவர்கள் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. ஒரு நல்ல நடிகனால் வாழ்வை மீறியும் நடிக்க முடியும். நடிப்பையே வாழ்வாக்கவும் முடியும். அவர்கள் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். இவன் தனக்குத் தெரிந்த மொழியில் பாடிக் கொண்டிருந்தான். எல்லாம் முடிந்து சவத்தின் மீது நெருப்பு வைக்கப்பட்டபின் வந்திருந்தவர்கள் அப்படியே கிளம்பிப் போக அங்கே தகனம் செய்து கொண்டிருந்தவனும் கூட அடுத்த சடலத்தை எரியூட்ட நகர்ந்து போய்விட்டான். எரியும் சடலத்தை உற்றுப் பார்த்தபடியே அந்த உடலின் அசைந்தாடும் நெருப்பு நடனத்தில் ஓங்கி ஓங்கி தன் கோலால் அடித்து அதனை நெருப்புப் படுக்கையில் உறங்க வைத்துக் கொண்டிருந்தான்.


”சடலத்த தகனம் பன்றது வேல இல்ல, சேவ… எல்லாரும் செஞ்சுட முடியாது நீ எங்க இருக்கறன்னு தெரியுமா?...”

அவனுக்குப் பின்னாலிருந்து கேட்ட சாதுவைத் திரும்பிப் பார்த்தான். கழுத்து வரை இடைவெளியின்றி புரண்டு கொண்டிருந்த தாடி. இவன் பாட்டைக் கேட்டு வந்திருந்தார். சிரித்தான்.

“நான் இவ்வளவு காலத்துல ஒருநாளும் வேலை செஞ்சதில்ல. கூலி வேணுங்கறதுக்காக மனுஷன் செய்ற எல்லாமே வேல தான்…. நான் அத செஞ்சதில்ல…” அவன் பேச்சிலிருந்த நித்யத்தைப் புரிந்து கொண்ட சாது அவன் தோள்களை அணைத்துக் கொண்டார்.

“எந்த நோக்கமும் இல்லாம மனுசன் வந்து சேர்ற இடம் இது ஒன்னுதான். ஆனா நீ ஏதோ நோக்கத்தோட வந்திருக்கறதா தெரியுது?.. உன் பேரென்ன?...”

“ஹரிச்சந்திரன்…”

அவன் கண்களில் வழிந்த தீர்மானமான வார்த்தைகளை எதிர்கொள்ள முடியாதவராய் சாது

“நீ நம்பற ஒன்னு ஒருநாளும் உன்னால பாக்கவோ தெரிஞ்சுக்கவோ முடியாதது. ஒருவேள உணர முடியும்.. ஆனா அதுக்கு எத்தன காலம் ஆகும்னு சொல்ல முடியாது…”

அவன் அவரோடு தர்க்கம் செய்ய விரும்பவில்லை, சமாதானப்படுத்துகிற நோக்கமில்லை.

“சத்தியத்த உணரவோ, இல்ல புரிஞ்சுக்கவோ நான் வரல… நானே சத்தியம்… நானே வாக்கு… எல்லாத்தையும் மறந்து போன இந்த சமூகம் தன்னோட அடுத்த தலைமுறைக்கு விட்டுப்போகப் போற கதை….”

சாது சிரித்தார். எரிந்து கொண்டிருக்கும் சடலம் வெப்பத்தில் குதித்து எழ அனாயசமாக அதனைத் தன் கோலால் அடித்து அவன் படுக்கச் செய்தான். மேடையில் பல வருடங்களாய் இது மாதிரி நிறையப் பிணங்களை அடித்துப் படுக்க வைத்திருக்கிறான். நடிக்கிற பொழுது. அதிலிருந்து இம்மி பிசகவில்லை இப்போதும். அவனின் ஒவ்வொரு செயலிலும் தெரிந்த நேர்த்தியைப் புரிந்து கொண்ட சாது

“ஒரு நாளும் மனிதனோட மொத்த வாழ்க்கையும் பெருங்கதையா ஆகிடறதில்ல… நீ கதைய மட்டுமே கேட்டு வளந்தவங்கறதால அத நம்பற….”

இருவரும் அங்கிருந்து நடந்தனர். அவரின் தோளில் தொங்கிய பையிலிருந்து சாப்பிட ஒரு வாழைப் பழத்தை எடுத்துக் கொடுத்தார். சந்தோசமாக வாங்கிக் கொண்டவன் சாப்பிட்டபோது வயிற்றின் எரிச்சலை உணர்ந்தான். கண்ணை மூடி காசி விஸ்வநாதரை வணங்கினான். குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் கொண்டான். திருப்தியாக இருந்தது.


பையில் சுருட்டி வைத்திருந்த ஒரு தாளில் இருந்து கொஞ்சம் இலைகளை எடுத்து ஒரு மண் குழாயில் அடைத்த சாது அதில் நெருப்பால் புகை மூட்டினார். வாசணை கங்கை நதி முழுக்க விரவி நீந்தியது. கண்ணை மூடி அனுபவித்தான்.

“வேணுமா ? கோரக்கர் மூலிக… இந்த உலகத்துல இருந்து தன்ன துண்டிச்சுக்க நினைக்கிறவனோட எளிய வாகனம்…”

புகையை உள்ளிழுத்து காட்டமான கண்களுக்குள்ளிருந்து இன்னும் எட்டிப்பார்த்த அந்த முதியவரின் சிரிப்பு. வாங்கி அவனும் புகைத்தான். புகை… உடலெங்கும் நிரம்பியது. உடலில் காற்றடைக்க முடிந்த பள்ளங்களெங்கும், கசிந்து வெளியேற வாய்ப்பிருக்கும் துளைகளெங்கும் நிரம்பி வெளியேறியது. மீண்டும் அவரிடமே கொடுத்தான். இருவரும் ஒரு மேட்டில் உட்கார்ந்தனர். இரண்டு பேரையும் சூழந்து அடர்ந்திருந்த புகையின் நெடி திவ்யமான ஒரு பொழுதை உணரச்செய்தது. அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் கங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பொழுது மங்கத் துவங்கியிருந்தது, பைரவர்களின் குரைப்பொலி இடைவிடாது தூரத்திலிருந்து கேட்டது. குரைப்பொலி அதிகமாகிக் கொண்டே இருக்க சாது எழுந்து கொண்டார்.

“இங்கதான் இருப்பேன்… வாய்ப்பிருந்தா மறுபடியும் சந்திப்போம்…இந்த நதிக்கரையப் பத்திரமா பாத்துக்க…”

அவருடன் இன்னும் கொஞ்சம் பேசலாமென நினைத்தவன்

“நிச்சயமா… இங்கதான இருக்கப் போறேன்… காசி விஸ்வநாதனே வந்துக் கூப்பிடற வரைக்கும்… ஒருவேள கூப்பிடாமப் போனாலும் காலா காலத்துக்கும் கதையா இருப்பேன்…”

பெருமிதத்தோடு சொன்னவனுக்கு இன்னொரு முறை தனது புன்னகையை அன்பளிப்பாக்கிவிட்டு நடந்தார். தூரத்தில் அவர் போவதையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் தனது கோலைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு எரிந்து கொண்டிருந்த சடலத்தைத் தாண்டி நடந்தான். விட்ட இடத்திலிருந்து பாடலை மீண்டும் பாடினான். அவன் குரல் கேட்டு எரியும் பிணங்களணைத்தும் எழுந்தாடியது.


2.


சித்திரை மாதத்து வெக்கை அந்த இரவிலும் ஊரைப் பிளந்து கொண்டிருந்தது. நாடகம் போடும் கலையரங்கத்துக்கு முன்னால் ஊர்க்கார சனம் பாய், போர்வைகளைப் போட்டு சாவதானமாக கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தனர். வள்ளி திருமணம் நாடகமென்றால் வள்ளியாக வருகிற பிள்ளையும் அழகாக இருக்கும், டான்ஸர் பிள்ளையும் அழகாக இருக்கும். அதனால் விடிய விடிய கூட்டம் அள்ளும். மயான காண்டம் ஒரு அழுவாச்சி நாடகமென்பதால் இளவட்டங்கள் அதிகமும் வருவதில்லை. பெரும்பாலும் ஊரில் மிச்சமிருக்கும் பெருசுகள் தான். வரும் கொஞ்ச நஞ்ச இளவட்டங்கள் நள்ளிரவு பஃபூன் டான்ஸ் முடியும் வரை மட்டும்தான் இருப்பார்கள். அதற்குப் பிறகு பார்ப்பது எல்லாம் பல்லுப் போன மக்கள்தான். கலையரங்கத்துக்குப் பின்பக்கத்தை ஒட்டி நாடக நடிகர்கள் உட்கார்ந்து சாப்பிட சின்ன கொட்டகை போட்டிருந்தார்கள். ராஜபார்ட்டைத் தவிர நாடக கோஷ்டி ஆட்கள் எல்லோரும் போய் சாப்பிட உட்கார்ந்து விட்டனர். அவர்களைப் பார்க்கும் ஆர்வத்தில் சின்னப் பையன்கள் எல்லாம் தட்டியைக் கிழித்து ஓட்டை வழியாக எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


மச்சக்காளைதான் இன்று ராஜபார்ட். நள்ளிரவு நெருங்கும் போதுதான் அவனுக்கு வேஷம். அதனால் இன்னும் அவன் வண்டியை விட்டு இறங்கி வரவில்லை. நல்ல களைப்பை உணர்ந்தான். கொஞ்ச நாளாகவே இந்தக் களைப்பு இருக்கிறது, ஒருமாதிரி உடம்பையும் மனசையும் ஒருசேர பிசையும் களைப்பு. வேனை விட்டு இறங்காமல் உட்கார்ந்திருந்தவன் இன்னும் நேரமிருந்ததால், மதுரையிலிருந்து கமுதி வரை வேனில் வந்த அலுப்பிற்கு கொஞ்சம் உறங்கலாமென நினைத்தான். ஊர்க்கார பிரமுகர்களும், விழாக்கமிட்டியனரும் “ராசபார்ட்டு எங்க இருக்காப்ல…” என தேடிவந்து பார்த்துக் கொண்டிருந்தனர். மீசை மழித்த மச்சக்காளை ஆள் இப்போது முன்னை மாதிரி ஓங்கு தாங்காய் இல்லை. வயது கூடக்கூட உடல் ஒடுங்கிப் போயிருக்கிறது. எல்லோருக்கும் சலிப்பில்லாமல் கையெடுத்து வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தான். மத்த ராசபார்ட்டுகளைப் போலில்லை அவன். ஒவ்வொரு நாடகத்திலும் ராஜபார்ட்டாக நடிக்கிறவர்களின் உடல் மொழி ஒவ்வொரு விதமாக இருக்கும். அதை அவர்கள் வணக்கம் வைக்கையில் பார்க்கலாம். முருகனாக நடிப்பவனின் கண்களில் பேசும் போதும் கேட்கும் போதும் அசைவற்ற சாந்தம் இருக்கும். மதுரை வீரனாக நடிப்பவனின் தோள்கள் எந்த வயதிலும் வளையாது. இவன் அரிச்சந்திரன். இந்த வேஷம் கட்டி கட்டி அவன் உடல், பேச்சு எல்லாவற்றிலும் ஒரு உறுதி ஏறியிருக்கிறது. எட்டு வருஷமாய் இந்த ஊரில் நடக்கும் மயான காண்ட நாடகத்தில் இவன் தான் ராஜபார்ட். இவனுக்கு ஊரில் ஒரு ரசிகர் மன்றம் கூட இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அரிச்சந்திரனாக நடிக்க இவனைவிடவும் பொருத்தமானவர் எவருமில்லை என சக நடிகர்களே சொல்வார்கள். சில வேஷங்கள் நடிப்பது வெறுமனே கற்றுக் கொள்வதால் மட்டும் வந்துவிடுவதல்ல, அது ஒருவிதமான தவம். வியர்வையையும் மீறி ரத்தத்தைக் கேட்கும், நடிப்பவனின் உயிருக்குள் அந்தப் பாத்திரம் வாழத் துவங்கியபின் காணும் யாவும் சூன்யமே என்று நம்பச் சொல்லும். நம்பாத வரை அந்தப் பாத்திரத்தை நடிக்கிறவனால் உயிர்ப்புடன் செய்ய முடியாது. அரிச்சந்திரன் வேஷங் கட்டுகிற ராஜபார்ட்டுகள் பெரும்பாலும் வேறு எந்த வேஷமும் கட்டுவதில்லை. இதற்கு மற்ற நாடகங்களின் கதை தெரியவில்லை என்னும் அர்த்தமல்ல, அரிச்சந்திரனாய் இருக்க நினைக்கிறவன் வேறு எதுவாகவும் இருக்கக் கூடாதென்கிற பிடிப்பு.


யானை நிலத்தின் மீது கவிந்திருப்பதைப்போல் அவ்வூரின் மீது கவிந்திருந்தது இருள். வேனை விட்டு இறங்கி வந்த மச்சக்காளை இன்னும் ஊர்க்கார ஆட்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு மெதுவாக கருவேலங்காட்டுப் பக்கமாய் நடந்தான். குடிக்கக் கூடாதென ஒவ்வொரு முறையும் நினைக்கிறான், ஆனால் குடிக்கும் போது தான் தன் மனசாட்சிக்கு நூறு சதவிகிதம் உண்மையாய் இருப்பதாகப் படுவதாலேயே அதை அவனால் தவிர்க்கமுடியவில்லை. கருவேலங்காட்டுக்குள் சூடான நாட்டுச்சாராயம் குடிக்க ஆட்கள் ஒருசிலர் வருவதும் போவதுமாய் இருந்தனர். வெக்கையில் உயிரற்ற கருவேல இலைகள் அசைவற்றுக்கிடந்தன. இருளில் தடம் பார்த்தபடி நடந்த மச்சக்காளை சாராயம் விற்கும் இடத்திற்கு வந்தபோது உற்சாகமான ஏவாரி “ஏய் யாருப்பா அது …? நம்ம ராசபார்ட்டா?... வா…வா.. நானே குடுத்துவிடனும்னு நெனச்சேன்…” பெரிய ஈயச் செம்பு நிறைய சாராயத்தைக் கொடுத்தான். அந்தக் காட்டையே மயக்கி வைத்திருக்கும் மாய வாசணை. வாங்கி நுகர்ந்து பார்த்தவனின் நாசியெங்கும் பரவசம். தன் வாழ்வில் வேஷங்கட்டின நேரம் தவிர அவன் பெருங் கலைஞனாய் இருப்பது குடிக்கும் போதுதான். கண்களை மூடி முழுச் சொம்பு சாராயத்தையும் குடித்தான். ஒவ்வொரு மிடறும் தொண்டைக்குள் இறங்குகையில் சாராயத்தின் எரிச்சல் சிறு உருண்டையாய் தொண்டைக்குழிக்குள் உருண்டோடியது. மூச்சு முட்டக் குடித்தபின் காலிச் சொம்பைக் குடுத்தவனின் கண்கள் தகதகவெ ரத்தச் சிவப்பாய் கனன்று கொண்டிருந்தது. ”இன்னொரு சொம்பு குடிக்கிறியாப்பா?” ஏவாரி சுடச் சுட இன்னொரு சொம்பு ஊற்றி நீட்டினான்… ”இல்லப்பா… நாடகம் முடியட்டும் விடியால போகும் போது குடிச்சுக்கறேன்…” சிரித்துவிட்டு வந்த வழியில் திரும்பி நடந்தான். நாடகம் துவங்கி பஃபூன் வேஷக்காரனும், பஃபூன் வேஷக்காரியும் ஆடுகிற பாட்டுச் சத்தம் கேட்டது. தாளத்திற்கு ஏற்றாற்போல் மச்சக்காளையின் நடையும் மாறியது. பஃபூன் சூர்யாவின் பாட்டும், தாளமும் ஒட்டாமல் அலைந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். இன்னைக்கு ஆர்மோனியத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது போல… சுரக்கட்டை நாலறைக்கு தாவாமல் அதற்கு முன்பாகவே தத்தளித்துக் கொண்டிருந்தது.


எதிர்ப்பட்ட எல்லோருக்கும் அமைதியாக வணக்கம் சொல்லிவிட்டு கலையரங்கம் நோக்கி வந்தவன் கூட்டத்தைப் பார்த்தான். மோசமில்லை. ஊரில் கடைசி நாள் திருவிழா… அதனால் கொஞ்சம் களைத்துப் போன முகங்கள். மற்றபடி எத்தனை முறை பார்த்தாலும் அரிச்சந்திரனைப் பார்ப்பது புண்ணியம் என நம்பும் மக்கள். அந்த முகங்களில் ஒரு நாளாவது சத்தியம் தவறாது வாழ்ந்திட துடிக்கும் நிகழவே நிகழாத கனவு. மேடைக்குப் பின்னாலிருக்கும் மேக்கப் ரூமிற்கு வந்தவன் கொஞ்ச நேரம் கண்களை மூடி அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனுக்கென்று எடுத்து வைத்திருந்த சாப்பாடு இலை மூடி வைக்கப்பட்டிருந்தது. சில நிமிடங்கள் கண் மூடியிருந்தவன், கண்ணைத் திறந்து சந்திரமதிக்காக மேக்கப் போடத் துவங்கியிருந்த சாந்தியைக் கூப்பிட்டான்.


“எத்தா அந்த சோத்த இங்கிட்டுக் கொண்டுக்காறயா?...”

சாந்த்தி பவுடர் போடுவதை நிறுத்தி விட்டு தன்னுடன் வந்திருந்த தன் புருஷனைப் பார்த்தாள். அவன் வேகமாக எழுந்து போய் சாப்பாட்டை எடுத்து வந்து வைத்தான். இவளுக்கு எப்போதும் இப்படித்தான். பணிரெண்டு மணிக்கு வருகிற வேஷத்திற்கு பத்தரை மணிக்கே மேக் அப் துவங்கினால்தான் சரியாய் வரும். அகன்று கருத்து விரிந்த முகத்தை பவுடர் அப்பி சரி செய்ய நேரம் இழுக்கும். ஆனாலும் மச்சக்காளைக் கூப்பிட்டால் எந்த வேலையாய் இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுவாள். இலையில் வைக்கப்பட்ட சோற்றை நிதானமாக ஒவ்வொரு கவளமாய் எடுத்து உண்டவன் மூன்றாவது முறை ரசம் ஊற்றி சாப்பிட்டபின் வந்த பெரிய ஏப்பத்தோடு போதுமென்று எழுந்தான்.

“நீங்க எல்லாம் சாப்ட்டியளா?...”

பையிலிருந்து வெற்றிலையை எடுத்தபடியே எல்லோரிடமும் கேட்டவனுக்கு ஆமென்று பதிலாக தலையாட்டினான் சாந்தியின் புருஷன். தனது வெற்றிலையிலிருந்து ரெண்டை அவனுக்கும் எடுத்துக் கொடுத்துவிட்டு மச்சக்காளை நிதானமாய் சுண்ணாம்பைத் தடவி சுவற்றோரமாய் உட்கார்ந்தான். கால் நீட்டி சாய்ந்து கொண்டு வெற்றிலையை மடித்து வாயில் ஒதுக்கியவன் கண்களை மூடிக் கொண்டான். மேடைக்குப் போன சாந்தி சந்திரமதியாகி தனது இளமை கரையும் குரலில் தான் அனாதையாய் தவிப்பதைப் பாடத்துவங்கியிருந்தாள். அந்த பாட்டின் வரிகள் அவ்வளவு நேரமும் மச்சக்காளையாய் இருந்தவனின் உடலை அரிச்சந்திரனாய் மாற்றியது. கண்களைத் திறந்து கொண்டான். மையமாய் இருந்த குண்டு பல்பின் வலது பக்கமான தன் இடத்தில் தனது பெரிய கருப்பு நிறப் பையைத் திறந்தான். கண்ணாடி, அரிச்சந்திரனின் உடைகள், மேக்கப் சாமான்கள் ஒவ்வொன்றாய் எடுத்து வெளியில் வைத்தான். சந்திரமதியின் மகன் லோகிதாசன் இறந்து போனதை வழிப்போக்கன் வந்து சொல்லுகிறான்.


பாம்பு தீண்டி இறந்து போன லோகிதாசனைப் பற்றிக் கேள்விப்பட்டதும் மாரிலடித்து இப்போது சந்திரமதி அழத்துவங்கினாள். மச்சக்காளையின் உடல் நடுங்கியது. பெருகி வரும் கண்ணீரை சிரமத்துடன் அடக்கினான். சந்திரமதியின் துயர்மிக்க குரல் பிசிறில்லாமல் இவனின் சப்த நாளங்களை எல்லாம் துண்டாடிச் சென்றது. ஆனாலும் அவளின் குரலுக்கு இசைவில்லாமல் ஆர்மோனியம் சுரம் மாறுவதும் அதை நிறுத்தி ஆர்மோனிஸ்ட் ராமு சரி செய்வதுமாய் சந்திரமதியின் குரல் ஒரு பக்கம் துண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. கண்ணீரை மீறிய எரிச்சலில் இன்னொரு முறை வெற்றிலை போட்டவன் எழுந்து பின் வழியாக சுற்றி மேடைக்குப் போனான். இவன் வருவதைப் பார்த்ததுமே புரிந்து கொண்ட ராமு சிரமத்தோடு சிரித்தான்…

“வேற பொட்டி எதுவும் இல்லையா ராமு…?”

”இல்லண்ணே… எடுத்து வைக்கிறப்ப நல்லாத்தான் இருந்துச்சு.. சரியில்லாத ரோட்ல வேன்ல வந்ததுல கொஞ்சம் கட்ட மக்கர் பன்னுது.. சரி பன்னிடறண்ணே…”

மச்சக்காளை பெட்டியைப் பார்த்தான். பெரிய பிசிறுல்லை.

“திருப்புலி இருந்தாக் குடு…” மச்சக்காளை பெட்டிக்குப் பக்கமாய் உட்கார்ந்து திருப்புலியை வாங்கினான்.

ஸ்வரக்கட்டைகளுக்குள் நுழைந்த கை நொடியில் பிசிறைக் கண்டு கொண்டது. வேகமாக அந்தக் கட்டையை மட்டும் சரிசெய்தான். சந்திரமதியின் பாடலோடு மீண்டும் ராமுவின் ஆர்மோனியம் சுதி சேர்ந்தது. இந்தமுறை பிசிறில்லாமல் குரலும் இசையும் பொங்கிப் பரவியது. கண் மூடி சில நொடிகள் கேட்டபின் மச்சக்காளை வேகமாக மேடையிலிருந்து இறங்கி வெற்றிலையைத் துப்பிவிட்டு வாயைக் கொப்பளித்துக் கொண்டான். மீண்டும் தனது மேக் அப் பைக்குப் பக்கமாய் வந்து உட்கார்ந்து கொண்டவன் சில நிமிடங்கள் அப்படியே கண் மூடி உட்கார்ந்து கொண்டான். அந்த நிமிடங்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த நாளுக்காக எப்போதும் கடவுளுக்காக நன்றி சொல்வது இவனின் வழக்கம். கண்களைத் திறந்து பார்த்தான். சந்திரமதி வந்துவிட்டிருந்தாள். அரிச்சந்திரன் வரப்போவதை முன்னறிவிக்க பஃபூன் மேடையில் ஆட்டமும் பாட்டுமாய் சொல்லிக் கொண்டிருந்தான். முத்துவெள்ளையை கையில் எடுத்து தேங்காய் எண்ணை சேர்த்துக் கொண்ட மச்சக்காளை அதை கை முழுக்க பரவவிட்டு முகம் முழுக்க பரப்பினான். ஒரே நிமிடத்தில் பவுடர் பூசின முகம் தயார்… சுற்றி இருந்த எல்லோரும் ஆச்சர்யமாய்ப் பார்த்தனர். ஆங்காங்கே இருந்த திட்டுக்களை சரிசெய்தவன் கண்களில் புருவம் வரைந்து கொண்டான். முகத்தில் சிவப்புப் பவுடர் சேர்த்துக் கொண்டபின் கருப்பு நிற வேஷ்டியை அணிந்து கொண்டான். திரும்பி சாந்தியைப் பார்த்தான். அது ஒருவிதமான அழைப்பு என்பதைப் புரிந்து கொண்ட சாந்தி அதற்காகவே காத்திருந்தது போல் வேகமாக விபூதியை ஒரு காகிதத்தில் அள்ளி வந்தாள். அதனைத் தண்ணீரில் கலந்து அவனது கைகள், நெற்றி மார் என அழுத்தம் திருத்தமாய் பட்டைகள் வரைந்தாள். அந்த மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் கண்மூடி நின்ற அவனைப் பார்த்த எல்லோருக்கும் அவன் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீப்பிழம்பாய்த் தெரிந்தான். பட்டையைப் போட்டு விட்டவள் சாமியைக் கும்பிட்டு அவனது கம்பை எடுத்துக் கொடுத்தாள். கம்பை வாங்கிக் கொண்டு கண்ணைத் திறந்தவனின் கால்களில் எல்லோரும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.


”கால காலத்துக்கும் இந்த இசை நாடகம் நெலச்சு நிக்கனுமப்பா… பாக்கறவனுக்காக மட்டுமில்ல படச்சவனுக்காகவும் நடி…”

எல்லோருக்கும் மூத்தவர் முத்துச்சிப்பி அய்யா அவனைத் தொட்டுக் கும்பிட்டு வாழ்த்தி அனுப்பினார். திரை மூடப்பட்ட மேடைக்கு வந்தவனைக் கண்ட பின்பாட்டுக்காரன் ஆலாபனையை நிறுத்தி முடிவை நோக்கிப் போனான். மைக்கில் தனது குரலை சரி செய்து கொண்டவன் மெதுவாக தனக்கான துவக்கப் பாடலை பாடத் துவங்கினான். அங்கும் இங்குமாய் சுற்றிக் கொண்டிருந்த ஊர்ச்சனம் மேடைக்கு முன்னால் வந்து குழுமியது. குரல் இன்று துவக்கத்திலேயே உச்சத்தில் இருந்தது. தொடர்ந்து நாலறையிலேயே வாசிக்க திணறிக்கொண்டிருந்தான் ராமு… ஆனாலும் இது மாதிரி நடப்பதெல்லாம் அபூர்வம். ஒரு கலைஞன் மேடைக்கு வரும்போது எரிமலையாய் வந்து நிற்கிறானென்றால் அன்றைய தினம் அந்த ஊருக்கு ஏதோவொன்றைச் சொல்ல இருக்கிறான் என்பதுதான். புரிந்து கொண்டு ராமு ஈடு கொடுத்து வாசித்தான். திரை விலகியது. பெரும் துயரும், வலியும் கொண்டவனாய் மேடையில் நின்ற அரிச்சந்திரனைப் பார்த்து எல்லோரும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். பூசாரி வந்து ஆரத்தி எடுத்தார். ஊக்காரர்கள் மாலைகள் போட்டனர்.


”சம்போ கெங்காதரா

சத்தி மனோஹரா

இக்கதி நேர்ந்ததே

என்ன செய்வேன்

சத்தியம் ஜெயமென்று

பத்தியுடனிருந்தேன்

நத்திய யெந்தனனுக்கு

விதித்தாயோ

ஏ கருணாகரா காங்களா கங்கை வேணியா.....

இயற்றலும் மீட்டலுங் காத்தலுங் காத்த

வகுத்தலும் வல்ல தரசு என்ற நெறியை வழுவாது கடைபிடித்து வாழ்ந்த எனக்கு இக்கதியும் வாய்க்க வேண்டுமா?”


அவன் குரல் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களையும் அவர்களுக்குப் பின்னால் அமைதியாக கோவிலுக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த மாரியம்மனையும் இன்னும் அங்கில்லாத எல்லாக் கடவுள்களையும் நோக்கிக் கேட்கப்படுவதாய் இருந்தது. முன்னால் உட்கார்ந்திருந்த கிழவிகளில் சிலர் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தனர். ’யார் இந்த அரிச்சந்திரன்? பாவிப்பயல் இத்தனை சத்தியமாய் வாழ்ந்து எதை இந்த உலகத்துக்குச் சொல்லிவிட்டுப் போவதற்காக அத்தனை வலிகளைப் பொறுத்துக் கொண்டான்.?’ இப்படியானதொரு துயர நாடகத்தைப் பார்த்துக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு முறையும் அதைப் பார்க்கிற எல்லோருமே தங்களை ஒரு சுயவதைக்கு உட்படுத்தி அழுது தீர்த்து ஏதோ ஒருவகையில் தங்களுக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்.


”காக்க வைத்தாய் சிவமே

சுடலை காக்க வைத்தாய் சிவமே

பாழுமுடலைக் காக்க வைத்தாய் சிவமே

நாறும் பிணத்தைக் காக்க வைத்தாய் சிவமே

வாய்க்கரிசி நாற்பண முழத்துண்டு கூலி வாங்கி

நாய் நரிக் கூடித்தின்னும் பிணஞ்சுடு கோலைத் தாங்கி

நாடு நகரிழந்து நல்மனையைப் பிரிந்து

காடு வழிக் கடந்து காஷ்டமூட்டிடவந்து

பேய்வந்துயாடிப்பாடி பிணங்களைச் சுற்றித்தேடி

தாவியெடுத்துண்பதை தனையனை எண்ணநாடி…”


அக்கினி புரண்டோடும் சுடலையில் நாய்களும் நரிகளும் சூழ தன்னையே பொசுக்கிக் கொண்டான். சத்தியத்தால் வஞ்சிக்கப்பட்டவன். சத்தியம் வரமென்பதை தன் வாழ்நாள் முழுக்க நம்பும் சாபம் பெற்றவன். சோடியம் விளக்கின் வெக்கையில் வெற்றுடல் வியர்த்து நாடி நரம்புகளில் இருந்த முறுக்குக் குறையாமல் இன்னும் பாடிக் கொண்டிருந்தவனின் தொண்டைக் குழி மேட்டிலிருந்தும் கூட வியர்வைத் துளிகள். நாடகம் நடிப்பவனுக்கும் பார்ப்பவனுக்கும் எப்போதும் வெறும் நாடகம் மட்டுமே இல்லை. தெரிந்த உண்மைகளை நினைவு படுத்திக் கொள்வதற்கும், சொல்ல முடியாத துயரங்களை தான் நம்பும் கதாப்பாத்திரத்திங்களின் மேல் ஏற்றி வைத்து அழுது தீர்த்து, அல்லது சிரித்து மகிழ்ந்து இப்படியெல்லாம் தனக்கும் நடக்கக் கூடாதென திடமாக நம்பி தேற்றிக் கொள்ளும் எளிய ஊடகம். தாங்கள் சத்தியத்தைக் கடைபிடிக்க முடியாத வெறுமையையும், வலியையும் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் அரிச்சந்திரனின் மேல் ஏற்றி வைத்தனர். ஆல் ரவுண்ட் வாசித்துக் கொண்டிருந்தவன் தொழிலுக்குப் புதிதாக வந்தவன்,. புதுக்கோட்டை சங்கத்து ஆள். மதுரை சங்கமென்றாலே மச்சக்காளைதான் என்று கேள்விப்பட்டிருக்கிறான். இன்று அவனது பாட்டுக்கு ஆல்ரவுண்ட் வாசிக்கும் போது தன்னையும் மீறி தனக்கு அழுகை வருவதை உணர்ந்தான். இந்த நொடியே இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஓடிப்போய் தனது மனைவிக் குழந்தைகளைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. பொதுவாக இசை நாடக நடிகர்கள் மேடையில் மைக்கிற்குப் பக்கமாக நின்றுதான் நடிப்பார்கள். குரல் எடுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக. இவன் மொத்த மேடையையும் தனதாக்கி இருந்தான். மைக்கை எல்லாம் மீறி கிழித்துச் செல்லும் இரும்புக் குரல். பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்குமே இந்த நாடகம் முடிந்து முடிந்துவிடக்கூடாது என்று சில சமயமும், இப்பவே இந்த நாடகத்த முடிச்சிட்டா நல்லது என இன்னொரு சமயமும் மாறி மாறி தோன்றியது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்தின் துயரைக் கடக்கவும் அச்சத்தோடு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டனர்.

முன்வரிசையில் தனது கூன் விழுந்த முதுகை சாய்த்துப் பார்த்துக் கொண்டிருந்த கிழவன் பக்கத்திலிருந்த இன்னொரு கிழவனிடம்

“தாயோளி அரிச்சந்திரன் எப்படி வாழ்ந்திருப்பான்னு தெரியல… ஆனா இப்பிடித்தான்யா இருந்திருப்பான். இந்த நட…. இந்த தெனவு… இந்தத் தொயரம்… மனுசன் நெருப்பா நிக்கிறான்யா…”

சொல்லிக் கொண்டிருந்த ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் உணர்ச்சி பொங்க தனது தொடையில் அடித்துக் கொண்ட அவரை பின்னாலிருந்த கிழவி

”ஏய்.. என்னத்த நொட்டு நொட்டுன்னு தட்டிக்கிருக்க… சத்தங்காட்டாம இரு…” அமட்டி அடக்கினாள்.

“செல்லுவேன் செல்லுவேன் செல்லுவேன்

சேயனைத் தோளின்மேல் தாங்கியே

பெரும்பிணந்தனை சுடு ஈமத்தில் நான் செல்லுவேன்…”

என சந்திரமதியின் குரல் மயானம் நோக்கி எதிரொலித்ததைக் கேட்டதும் உட்கார்ந்திருந்த கிழவியொருத்தி

“அடிச் சண்டாளச் சிறுக்கி… நட்டாத்துல விட்டுட்டுப் போன புருஷந்தாண்டி மயானத்துல நிக்கிறான்… பாதகத்தி உன் கருமாயம் இப்பிடியாடி இருக்கனும்…” என கண்ணீரோடு புலம்பினாள். இதற்கு முன்பும் எத்தனையோ முறை சந்திரமதிக்காக அழுதவள் தான் ஆனால் ஒவ்வொருமுறையும் அந்தத் துயரம் மீண்டு புதியதாகத்தான் இருக்கிறது. சொல்லி வைத்தாற்போல் கிழவிகள் அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர். முன் வரிசையில் பஃபூன் நடனத்தை ஆரவமாய்ப் பார்த்த சிறுவர்கள் லேடி பஃபூன் டான்ஸர் குடுத்த பறக்கும் முத்தங்களை வாங்கின களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

”எங்க உக்காந்து தூங்கறதுன்னு இல்லயாடா வெளக்கெண்ணய்களா… எந்திரிச்சிப் போங்கடா…”


தூங்கி விழுந்தவர்களை எல்லாம் பெரியவர்கள் தலையில் தட்டி எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சந்திரமதி மேடைக்கு வந்தாள். ஆளில்லா மயானம். பேய்கள் கூடித் திரிந்து கொண்டாடும் ஜாமம். இந்தப் பாலகனை எங்கனம் பொசுக்குவது? உடல் பதறினாள். கண்ணீர் சிந்தினாள். எங்கோ தூரத்திலிருந்த அரிச்சந்திரனுக்கு கொள்ளி பற்றி எரியும் தீப்பிழம்பு வெளிச்சமும், புகையின் சாம்பல் மணமும் பிடிபட வேகமாக ஓடி வந்தான். தன் அனுமதி இல்லாது அந்த அகால வேளையில் தகனம் செய்து கொண்டிருப்பவளின் முகம் கூட தெரியாத இருளில்


“யாரடி கள்ளிநீ தான் அடர் வன மிருளில் தானாய்

பேரிடி மழையில் வந்து பிணமதை தகனஞ் செய்தாய்…”

என சந்திரமதியை நிறுத்தினான். பதறினாள்.

“ஐயா நீரென்னை நிந்தித்துப் பேச வேண்டாம், நானே அனாதை. போக்கிடமில்லை, சீந்துவாரில்லை, நாடு நகர் விட்டு வந்திருக்கும் நாதியத்த ஜீவன் இந்தக் குறைக் கொள்ளிக்கட்டைகளைப் பொறுக்கி அடுக்கி அதன் மீது என் புத்திரனை வைத்துத் தகனஞ் செய்வேனா? இதையெல்லாம் அறிந்து இப்பாவி பெற்ற பாலகனை தகனஞ்செய்ய அனுமதிக்க வேண்டும்….”


சந்திரமதியின் மன்றாடல் அரிச்சந்திரனுக்கும் புரிந்ததுதான், ஆனால் அவன் அந்த நந்தவனத்தின் முதலாளியல்லவே. தனக்கான வாய்க்கரிசி கூட வேண்டாம் தன் எஜமானனுக்குக் கொடுக்க வேண்டிய கொள்ளித் துண்டும், கால் பணமும் இருந்தால் தான் தகனம் செய்ய விடுவேனென, செத்தது தன் மகனென்று தெரியாமலேயே சத்தியத்தில் பிடிவாதமாய் நின்றான். தனக்குக் கொடுப்பார் யாருமில்லை , நான் விற்கவும் ஏதுமில்லை எனக் கதறியவளின் கடைசி இருப்பை அசைத்தான்

“விற்றுத் தருவாய் மின்னலைப் போன்ற தாலியை

மேதினியில் உன்னைப் போல பாவியை நான் பார்த்ததில்லை..”

இதென்ன அதிசயம் தன் மனாளன் மட்டுமே பார்க்க முடிந்த தன் தாலியை இந்த மயானத்தில் பிணம் சூழ வாழும் இவனால் எப்படிக் காண முடிந்தது. தேவர்களாலும், சித்தர்களாலும் கூட காண முடியாததைக் கண்ட இவன் யார்?... தன் நெஞ்சு வெடிக்க பதறி அழுதாள். அவள் கதறுவதில் மெல்ல எல்லாவற்றையும் புரிந்து கொள்ளத் துவங்கியவனுக்கு அதை உறுதிப் படுத்திக் கொள்ளத் தோன்றியது?.. கேட்டான். அவளேதான்… வெடித்து அழுதான். பெற்றெடுத்த பாலகனின் பிணத்தைத் தூக்க நாதியில்லாத மனைவி. ஐம்பத்தாறு தேசங்களின் அதிபதி மயானத்தில் காவலன். சொந்தப் பாலகனை தகனம் செய்ய இப்போது கொள்ளித்துண்டும், கால்பணமும் இல்லை. புத்திர சோகம் வாட்டியது. அந்த ,மயானத்தின் பிணங்களெல்லாம் நடுங்கி எழுமளவுக்கு புரண்டு அழுதான்.


சத்தியத்தால் நிந்திக்கப்பட்ட ஒருவன் அழுவதென்பது வெறுமனே அழுகையா? எல்லோருமே அரிச்சந்திரனுக்காக உருகினர். எல்லாவற்றையும் விட்டுவரச் செய்யுமளவுக்கு அப்படியென்ன அவனுக்கு இதில் நம்பிக்கை, உறுதி. என்னதான் கிடைத்துவிட்டது. இன்னும் எத்தனையோ கோடி மனிதர்களின் நாவில் வாழ்கிறான். ஆனால் அதற்காக அவன் வாழ்க்கை முழுவதும் அலைக்கழிந்தானே…? சத்தியத்துக்காக வாழ்வது கதைக்கு மட்டுந்தானா? அல்லது கதையில் மட்டுந்தானா? அரிச்சந்திரனின் ஒவ்வொரு வரியையும் அடி தப்பாமல் கீழே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிழவனும் சொல்லிக் கொண்டே வந்தான். அந்த வார்த்தைகளின் மூலம் தன்னை பரிசோதித்துக் கொள்வான் போல.


வெக்கையை மீறி எல்லோரும் சம்பந்தமே இல்லாமல் ஒரு குளிர்ச்சியை உணர்ந்தனர். நட்சத்திரங்கள் எதுவுமில்லாமல் மேகம் இருட்டுக் கட்டியிருந்தது. அவித்த கடலை விற்றவன், கடலை நிறைய இருந்தும் விற்காமலேயே உட்கார்ந்திருந்தான். டீக்கடையில் ஊர்ப்பெருசுகளின் சிகரெட் புகை இடைவிடாது சூழ்ந்தது. யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. உறங்கி விழப்போன ஒரு கிழவனின் தலை மீது முதல் மழைத்துளி விழுந்தபோது யாரோ தண்ணீர் தெளிப்பதாகத்தான் பதறி விழித்தான். கண்ணைத் திறந்து பார்த்தபோது எல்லோரும் தன்னைப் போலவே ஆச்சர்யத்தோடு ஆகாசத்தைப் பார்ப்பது தெரிந்தது. சின்னதாக விழுந்த மழை எந்த தாமதமுமில்லாமல் அடித்து வீழ்ந்தது. எல்லோரும் ஆச்சர்யமாய்ப் பார்த்தனர்.


”என்னய்யா இது, ஒருநாளும் இல்லாத திருநாளா இந்த வெய்யக்காலத்துல போயி இந்த மழ பெஞ்சுக்கிருக்கு…”

கிழவிகள் எல்லாவற்றையும் வாரிச் சுருட்டியபடியே புலம்பினர்.

இந்தக் கடுங்கோடையில் இதற்கு முன் பெய்திராத மழை. ஆட்கள் எழுந்து கோவில் கொட்டகையில் போய் நின்று கொண்டனர். நாடகம் எந்த நொடியிலும் பிசிறில்லாமல் தொடர்ந்தது. மழையின் சத்தம் கூடக் கூட பாட்டின் சத்தமும் கூடி மழை இன்னொரு வாத்தியமானது. பெய்யும் மழைக்குப் பின்பாக நாடகம் நடப்பதைப் பார்த்த ஒருவருக்கும் வீட்டுக்குப் போக வேண்டுமெனத் தோன்றவில்லை.

“புண்ணியமாம் பாவமாம், போனநாள் செய்த அவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்…”


என சந்திரமதியின் குரல் கேட்டுவிட்டு இந்த அர்த்தராத்திரியில் எவனால் தூங்கிவிட முடியும்? என்ன ஆனாலும் சரி சத்தியம் தவறுவதில்லை, கொள்ளித் துண்டும் கால்பணமும் பெற்று வா என்று மயானத்திலிருந்து அவளை அனுப்பிவிட்டான். மழை வலுத்துப் பெயதது. அவனுக்காக ஊர் அழுவது போதாதென வான் அழுதது.

சந்திரமதி காசி மாநகர் முழுக்க தன் மகனை தகனம் செய்ய கொள்ளித் துண்டும், கால் பணமும் கேட்டு போக்கிடம் தேடியலையும் காட்சி. அரிச்சந்திரன் அடுத்த காட்சிக்குத் தயராக மேக் அப் ரூமிற்கு சென்றிருந்தான். எரிந்த தொண்டையின் வழி சூடான தேநீர் போன போது அவனுக்குக் கொஞ்சம் இதமாய் இருந்தது. மூன்று மணி நேரம். எத்தனை பாடல்?... இன்றைக்கு ஏன் இந்த ஆவேசம்… அவன் வெளியில் எட்டிப் பார்த்தான், வலுத்துப் பெய்த மழை ஓய்ந்து நின்றிருந்தது. வெறிச்சோடி லேசாகப் பெய்து பூமியிலிருந்து கிளம்பிய சூடு பரவ தரையில் உட்கார்ந்தவன் ஏதோ ஒரு குழப்பம் தனக்குள் ஓடுவதாய் உணர்ந்தான். சட்டென தான் சுயநினைவற்றவனாகி விட்டதான அச்சம்.


”இன்னொரு மைக்கு வேணும்னா வெய்க்கச் சொல்லிடட்டுமா மாமா… மழ பேய் மழயா இருக்கு…”

“இல்ல இல்லடா… இது சும்மா செத்தவடம் பெஞ்சுட்டு விட்டுறும்… பொறுத்துப் பாப்பம்….” தேநீரின் சூட்டை அடித்தொண்டை வரை இழுத்துக் கொண்டவன் மறந்து போன காட்சியை மீண்டும் நினைத்துக் கொண்டான். கண்ணை மூடி நெருங்கி வரும் இறுதிக் காட்சியை நினைத்துப் பார்த்தான். எவ்வளவு முயன்றும் அவனால் நினைவுக்க்குக் கொண்டு வரமுடியவில்லை.

”ஏலே சூர்யா…”

அங்கிருந்து எழுந்து போகப்போன பஃபூன் இவன் கூப்பிடவும் அப்படியே நின்றான். என்னக் கேட்கப்போகிறான் என அவன் பார்த்தபடி இருக்க…

“இவங்கிட்டப் போயி இப்ப மறந்து போச்சு சொல்றான்னு கேட்டா என்ன நெனப்பான்?..” மனம் கன்னாபின்னாவென்று யோசித்தது.

“ஒன்னுமில்லடா… இன்னொரு டீ வேணும்… சொல்லிட்டு வா…” சமாளித்து அனுப்பிவிட்டு தொண்டையில் திரண்டிருந்த சளியைத் திரட்டி வெளியில் துப்பினான். வராத வார்த்தையைத் தொண்டைக்குழிக்குள்ளிருந்தா பிடுங்கி எரிய முடியும்? மீண்டும் சில முறை துப்பினான்.

சந்திரமதி மடியேந்திப் பிச்சைக் கேட்க, ஊர்க்காரர்கள் எல்லோரும் காசு போட்டனர். இது ஒரு சம்பிரதாயம். நெடுங்காலமாய் இந்த அதிகாலையில் சந்திரமதி சத்தியத்துக்காக மடியேந்துகையில் தானமிடுவதை ஊர்க்காரர்கள் புண்ணியமாகக் கருதினர். திரைக்குப் பின்னால் நின்று எல்லாவற்றையும் பார்த்தபடியே இருந்த மச்சக்காளையின் கண்கள் கலங்கியது. அது எப்படி இந்த இறுதிக் காட்சியின் வசனமும் பாடலும் மறக்கும்?... யோசித்து யோசித்துப் பார்த்தான், ஒரு வரி கூட நினைவுக்கு வரவில்லை. தன் மீது ஏதோ குறையிருக்கிறதென உறுதியாக நம்பினான். கால்கள் பரபரத்தன. ஏதோவொரு விபரீதத்தை உடல் முன்னறிவித்தது. இந்த உடை அவனுடையதுதான், அவன் இத்தனை ஆண்டுகளாய் மச்சக்காளையாய் இருந்ததை விடவும் அரிச்சந்திரனாய் இருந்ததுதான் அதிகம். ஆனாலும் இது என்ன சோதனை? சந்திரமதி மீண்டும் மயானம் வர வேண்டிய நேரம். கண்ணை மூடி அப்படியே நின்றான். உடலில் சின்னதாய் நடுக்கம் குறைந்ததும் வேகமாய் மேடைக்கு வந்தான். அரிச்சந்திரனாய் கண்களைத் திறந்தான். தன்னை மீறி வசனமும் பாட்டும் வந்தது. எங்கிருந்து வந்திருக்கும் யோசிக்கவெல்லாம் இல்லை. பாடினான்… ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்யத் துவங்கியது. ஊர்க்காரர்கள் ஒரு நாளும் காணாத அதிசயமாய் மழையையும் அரிச்சந்திரனையும் பார்த்துக் கொண்டிருந்தனர். என்றைக்கும் இல்லாத அளவிற்கு இன்று தாங்கள் வாசிப்பதை வாத்தியக்காரர்கள் ஒவ்வொருவருமே உணர்ந்தனர். இது வெறும் நாடகம் மட்டுமே இல்லை அவர்களுக்கு. இந்த நாடகம் முடியவே முடியாத ஒன்றாய், இந்த இரவு விடியவே விடியாத ஒன்றாய் இருக்க வேண்டுமென அவர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளூர ஆவல். அவர்கள் ஒவ்வொருவருமே அந்த மேடையில் மச்சக்காளையின் வழியாய் தங்களுக்குள்ளிருந்த பெருங் கலைஞர்களைக் கண்டு கொண்டனர். சந்திரமதியின் தலை வெட்டப் போகிற நேரத்தில் வந்து விழுந்தது மாலை. கடவுள் பேசினார். பொழுது விடிந்திருந்தது. இன்னும் மழை நின்றபாடில்லை. பூசாரி கோவிலில் பூசைக்கான மணியை அடித்துவிட்டிருந்தார். மொத்த ஊரும் திரண்டிருந்தது. மற்ற நாடகத்தில் இல்லாத ஒரு விசேசம் அரிச்சந்திரன் நாடகத்துக்கு உண்டு. நாடகம் முடிந்து காலையில் அரிச்சந்திரனுக்கும் சந்திரமதிக்கும் கோவிலில் வைத்து மாலை, மரியாதை செய்து அனுப்புவார்கள். இது பெரும்பாலான ஊர்க்காரர்களின் சம்பிரதாயம். பூஜை துவங்கியது. ஊர் கோவிலின் முன்னால் திரண்டிருந்தனர். வேஷங் கலைக்காத அரிச்சந்திரனும், சந்திரமதியும் கோவிலுக்குள் வந்தனர். சந்திரமதி பாடினாள்.


”நாடு செழிக்கனும் நல்ல மழ பெய்யனும்…”


பாட்டு மழையை மீறி அதிர்ந்தது… இரவு முழுக்க கண் விழித்து, தங்களை வருத்தி கலைஞர்கள் அதிகாலையில் பிரம்ம முஹூர்த்தத்தில் ‘நாடு செழிக்கனும் நல்ல மழ பெய்யனும்..’ என்று வாழ்த்தும்போது நிஜமாகவே இயற்கை தெய்வங்களின் மனம் குளிருமென்பது நெடுங்கால நம்பிக்கை.

அரிச்சந்திரன் கண்ணை மூடி நின்றிருந்தான். சாமியை விட்டுவிட்டு எல்லோரும் அவனையே பார்த்தனர். பொழுது விடிந்து கசிந்த வெளிச்சத்தை மறைக்குமளவுக்கு அடர்ந்து பெய்தது மழை. கண்ணை மூடி சாமியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தவனின் நெற்றியில் பூசாரி பயபக்தியோடு விபூதி பூசினார். ஊர்ப்பெரியவர்கள் பட்டு வேஷ்டியும் பெருந் தொகை ஒன்றை தட்சனையாகவும் அவன் கைகளில் வைத்தனர். கண்ணைத் திறந்து எல்லாவற்றையும் பார்த்தான். யாரிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மொத்த பணத்தையும் கோவில் உண்டியலில் போட்டான். தன்னிடம் இருக்கும் கடைசி பணத்தையும் உண்டியலில் போட்டான். வாழ்க்கையில் முதன் முதலாய் தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை அவனே புரிந்து கொண்ட நாளது. அந்த நாளுக்காக நன்றி சொன்னான். கோவில் வாசலுக்கு வந்து நின்றான். அந்த மழையிலும் மொத்த ஊரும் அவனுக்கு விழுந்து வணங்கியது. அவன் யாரையும் பொருட்படுத்தவில்லை. வேகமாய் அங்கிருந்து நடந்து சென்றான். நாடகக் கோஷ்டி ஆட்கள் மெதுவாக சாமான்களை எல்லாம் வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த மழையில் இவன் எங்கு நடந்து போகிறான் எனப் புரியாமல் சத்தமாக ‘யேய் மச்சக்காள எங்கப்பா போற?.. நில்லப்பா?...” என சத்தமாகக் கூப்பிட்டார்கள். வேஷங் கலைக்காத அவன் அரிச்சந்திரனாய் இருப்பதை கவனித்திருக்காமல். யார் சத்தத்திற்கும் அவன் நிற்கவில்லை.3


மதுரையின் எல்லா சந்து பொந்துகளிலும் தேடியும் கிடைக்காத மச்சக்காளை ஊர்க்காரர்களுக்கு ஒரு கதையாக மாற நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை. ”எப்பேர்பட்ட பெருங்கொண்ட கலைஞன்… அவன் காலத்து ஆளுன்னு சொல்லிக்கிறதே நம்மளுக்கு பெருமதானப்பா..” சுண்ணாம்புக்காரத் தெருவில் சுற்றித் திரியும் பத்துக்கு நான்கு நாடக ஆட்கள் இந்த வார்த்தைகளைச் சொல்லாமலில்லை. இந்த வார்த்தைகளெதும் எட்டாத் தொலைவில் தொலைந்து போயிருந்தான் மச்சக்காளை. அவன் வாழ்த வீடும் தெருவும் அவன் நிழல் படாமல் வாடிப் போயிருந்தன. தங்களை எல்லோரும் பேச வைத்தவன் தங்களோடு இல்லை. சத்தியம் நம்பப்படுவதற்கு தியாகங்கள் எத்தனை தேவையாய் இருக்கின்றன. அவனோடு பேசிய மரமும், மாடும் அவன் வார்த்தைகளைக் கேட்க முடியாமல் திணறிப் போயின.


இறந்தவர்களின் ஆத்மாக்களில் உலகைப் புரிந்து கொண்டவன் ஆத்மாக்களைப் பொசுக்கும் போதுதான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளிருக்கும் சத்தியமும் தூய்மையோடிருப்பதைப் பார்த்தான். பாவம் செய்வதற்காகத்தான் ஒவ்வொரு மனிதனின் பிறப்பும். எந்தப் பாவமும் செய்யாமலிருக்கிறவனுக்கு சத்தியத்தின் வலிமை எப்படி புரியும்? பசித்தவனுக்குத்தானே உணவு. எல்லோரிடமும் பேசினான். எல்லாவற்றையும் பேசினான். அவனை யாரும் எதற்காகவும் நிர்ப்பந்திக்கவில்லை. அவன் பாடும் பாடலுக்கு கங்கை பெரும் ரசிகையாகியிருந்தாள். எரியும் பிணங்களணைத்தும் பாகுபடின்றி ஆசிர்வதிக்கப்பட்டன. அவன் சத்தியமாய் இருந்து எல்லோரையும் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தான். காசி விஸ்வநாதர் வந்து தன்னைக் கூப்பிடும் நாள்வரை இந்தச் சுடுகோலைத் துறப்பதில்லையென உறுதி பூண்டவன் இருளின் அகால வெளியில் கங்கையின் சலசலப்பை மீறி பாடுவதை ஆயிரக்கணக்கான மக்களோடும், பேய்களோடும், காசி விஸ்வதாரும் பெருந்துயரோடு கேட்டுக் கொண்டிருந்தார்.
327 views

Recent Posts

See All

Fake

Comments


bottom of page