மதிய வெயில் உச்சத்திற்குப் போகும் நேரமாக அவன் வந்துவிட்டிருந்தான். இரைச்சலில்லாமல் இந்த கடைகளைப் பார்க்க முடிகிற மிகச்சிறிய இந்த இடைவெளியில்தான் அவளும் அவனும் வழக்கமாக இங்கு சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், கடந்த சில நாட்களாய். அவள் இன்னும் அந்த லைட் பச்சை நிற சேலையை மாற்றுகிறவளாயில்லை. மற்ற பொழுதுகளில் எங்கு போவாளெனத் தெரியவில்லை. மதிய சாப்பாட்டுக்கு இங்கு மிகச் சரியாக வந்துவிடுகிறாள். இந்த ஏரியாவில் இன்னும் பனிரெண்டு ரூபாய்க்கு சோறுபோடுகிற இடம் இதுவொன்றுதான். மொத்த நகரமும் அவன் கைகளில் மிகச்சிறியதொரு ரேகையின் வழிகளாயிருக்கின்றதென உணர்ந்த நொடியில் இந்நகரத்தின் ஆகச்சிறந்த குடிமகனாய்த் தன்னை நினைத்துக் கொண்டான். அவன் சில மாதங்களுக்கு முன்பு இன்னொருவனுக்கு விற்ற கடை பத்தடி தூரத்தில் இப்பொழுதுமிருக்கிறது. மிகக் குறைந்த விலைக்கு இவனிடமிருந்து கடையைப் பெற்றிருந்த விசுவாசத்தில் அதனை வாங்கியவன் பார்வையாலேயே அன்பு செலுத்துவதும் நட்பு பாராட்டுவதுமாய் அவ்வப்பொழுது லேசாகத் திரும்பி சிரித்துக் கொண்டான்.
இப்பொழுது நினைக்கையிலும் இவனுக்கு முழு சந்தோசமாக இருக்கும் அவ்விசயம் மற்றவர்களுக்குத்தான் கசப்பானதாயிருக்கிறது. இந்தக் கடையை விற்பதற்கு அவன் சொன்ன காரணம் இதனை வழி நடத்துகிற சிரமங்களையொட்டி இல்லை, “மிகக் குறைவா எல்லாவற்றையும் விற்று சலித்துப்போனதெனக்கு, இப்பொழுது மிகக் குறைவாக கொடுப்பதற்கு. இரண்டு விசயங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று, இந்தக் கடை, இன்னொன்று என் ஆண்மை…’ தன் ஆண்மையை இன்னொரு ஆணுக்கு கொடுக்கிற விருப்பமில்லாதவன் கடையைக் கொடுத்தான். ஆண்மையை கொடுப்பதற்காக ஒருவளைத் தேடிக் கொண்டிருக்கையில்தான் அவளைப் பார்த்தான். மூர் மார்க்கெட்டை ஒட்டியாக வெளியிலிருக்கும் நூறு கடைகளில் சாப்பாடு போடுவதற்கு மட்டுமே சின்ன சின்னதாயிருக்கும் மூன்று கடைகளில் ஒன்றில் ஒதுங்கியிருந்தவள் காசில்லாமல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு மட்டுமீறிய வெயில் தினத்தில் முதல் முறையாக விபச்சாரத்திற்கு செல்லும் ஒருத்தி பசியையோ கடும் வெயிலையோ ஒரு காரணமாகச் சொல்வது அப்படி ஒன்றும் மோசமான விசயமாக இருக்கப் போவதில்லை. இவளின் முகம் எவ்வளவு தொலைவிலிருந்து பார்க்கிறபொழுதும் பெரும் பசியை பிரதிபலிக்கிறதொன்றாக இருந்தது. இவன் நெருங்கி போய் தனக்கு ஒரு சாப்பாடு வாங்கினான். கடைக்காரி மிக அறிமுகமான இவனுக்கு நல்லதொரு சிரிப்பை உணவோடு சேர்த்து தந்திருந்தாள். கடையை மறைத்து நின்ற அவளை கொஞ்ச நேரமாகவே கவனித்த கடைக்காரி ‘என்னா…துட்டு இல்லியா?... பரவால்ல…. வா… வந்து துன்னு… இதுல ஒன்னும் கொறஞ்சிடாது…’ அவள் அத்தனை பேருக்கு முன்னால் தன் பசியை துகிலுரித்ததில் ஆயிரம் முறை நிர்வாணங் கொண்டதை விடவும் அதீத வேதனை கொண்டவளாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இவன் நிதானமாக சாப்பிட்டுவிட்டு எழுந்து அவளிடம் போனான். … கையில் கொஞ்சம் காசைக் குடுத்து ‘சாப்பிட்டுட்டு வா’ சொல்லிவிட்டு கடையிலிருந்து சிறிது தொலைவு தள்ளிப் போய் நின்று கொண்டான். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை நிதானமாக பார்த்தவன் முடித்ததும் அவளைக் கூட்டிக் கொண்டு பழைய ஜெயில் பக்கமாகப் போனான். பார்க் ஸ்டேசனில் வேகமாக் கடந்த ஒரு மின்சார ரயிலுக்காக சில நிமிடங்கள் பொறுத்தவன் இங்கிருந்தபடியே வாகானதொரு இடம் தேடிக்கண்டான்.
அவள் அவனோடு வருவதற்கான எந்த காரணங்களையும் கேட்டுக் கொள்ளாதவளாய் நின்றிருந்தாள். கொஞ்சம் முள்ளடர்ந்திருந்த இடத்திற்கு கூட்டி போனவன மறைவிடம் வந்ததும் மெதுவாக அவளின் சேலையைத் தூக்கினான். ‘சொத்’தென அவன் காதில் அறைந்தாள். சில நிமிடங்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் கலங்கி நிற்க, பையிலிருந்து இன்னும் கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்தான். வாங்கி தன் ஜாக்கெட்டிற்குள் சொருகிக் கொண்டவள் அமைதியாக முன்பு போலவே நின்றாள். இப்பொழுது மூர்க்கமாக முத்தமிடப் போனான். மறுபடியும் ஒரு அறை ‘சொத்’தென அவன் மூஞ்சியில் விழ இந்த முறை உட்கார்ந்து அழத் துவங்கிவிட்டான். அவர்கள் இருவருக்குமில்லாமல் தூரத்தில் ஸ்டேசனில் நின்றிருந்தவர்களுக்கும் கேட்கிற அளவிற்கு நாராசமான அழுகை. அவள் அவன் மூஞ்சியை உற்றுப் பார்த்துவிட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். பிறகு, மெதுவாக அவனை இழுத்து அணைத்துக் கொண்டு தன்னுடலில் படர அனுமதித்தாள். அவனுக்கு இன்னும் அவள் அறைந்த வலிதான் அதிகமாயிருந்தது. அவன் ஒன்றும் செய்யமுடியாமல் திணறிப் போனவனாய் எழுந்து மீண்டும் அழுதான். காலாட்டிபடியே படுத்துக் கிடந்தவள் கடுப்பாகி எழுந்து சேலையை இழுத்து மேலே போட்டுக் கொண்டு வந்த வழியே நடக்கத் துவங்கிவிட்டாள்.
அடுத்த ரெண்டு மூணு நாட்களிலேயே இவன் கொஞ்சம் டுபாக்கூர் கண்ணாடிகளையும் டுபாக்கூர் செண்ட் பாட்டில்களையும் ஒரு சிறிய ஸ்டாண்டில் அள்ளிப் போட்டுக் கொண்டு மறுபடியும் மூர் மார்க்கெட்டுக்கே வந்துவிட்டான், பழக்க தோசத்தில் பழைய இடத்திற்கு போக, கடையை வாங்கியிருந்தவன் உள்ளூரக் கடுப்பாகியிருந்தபோதும் இருந்துவிட்டு போகட்டுமென ஒரு ஓரத்தில் அவனை அனுமதித்தான். கொஞ்ச நேரம் உட்கார்ந்து வியாபாரம் பார்ப்பதும், பிறகு நடந்து கொண்டே வியாபாரம் செய்வதுமாய் இருந்தவனை இன்னொரு முறை அந்த மார்க்கெட் புதிதாக தொழிலுக்கு வந்தவனாகப் பார்த்தது. தன் நினைவில் சேகரித்து வைத்திருந்த அத்தனை சொற்களையும் சேர்த்து அவனால விற்க முடிந்ததில் விற்ற பழைய கண்ணாடிகள் அவ்வளவும் புதிதானவயாகவே போய்ச்சேர்ந்தன. எல்லா பழையதுகளையும் புதிதானதாய் விற்பதற்கு கொஞ்சம் சொற்கள் போதுமானதாயிருப்பது ஆச்சர்யம்தான்.
பிற்பகலை நெருங்கி நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்கு இப்பொழுது கடுமையாக பசிப்பதை உணர்ந்தவன் அந்த தாட்டியான சாப்பாட்டுக் கடைகாரியிடம் சென்றான். அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு இடையில் ஒருமுறை தான் அந்தப்பக்கமாக போயிருந்தான். ‘நல்ல சோடிதாம்ப்பா’ என அவள் சூசகமாக யாரையோ சொல்வதுபோல தன்னைத்தான் சொல்கிறாளோ என்கிற அச்சத்தில் அதன்பிறகு அவனுக்கு போஇற தைர்யமில்லை. இன்று பசி போகச் சொன்னது. ஒரு தட்டில் பிளாஸ்டிக் தாள் சோறோடு குழம்பையும் கையில் வாங்கியவுடனேயே பாதி பசி தீர்ந்ததைப் போலிருந்தது அவனுக்கு. கண்கள் விரிய ஆவலோடு தின்னத் துவங்கியவனை யாரோ முறைத்துப் பார்ப்பது போலிருக்க மெதுவாகத் திரும்பி பார்த்தான். அவள் நின்றிருந்தாள். இவனுக்கு லேசாக சிறுநீர் அடைத்து வயிறு கட்டியது போலிருந்தது. அவளைத் திருப்பிப் பார்க்காமலேயே அவசரமாக திண்ணத் துவங்கினான். அவள் இவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து தனக்கு ஒரு தட்டில் சோற்றை வாங்கிக் கொண்டாள். இரண்டு பேருமே திண்ணுவதில் அப்படியொரு வேகமிருந்தது. அவன் எழுந்து காசு கொடுக்கிற நேரத்திற்கெல்லாம் இவளும் சாப்பிட்டு முடித்துவிட்டு சோத்துக்கு இவனிடம் காசு வாங்கிக் கொள்ளச் சொல்லிப் போனாள். அவன் திரும்பி அவளைப் பார்க்கையில் எங்கும் போகாமல் முதலில் இவனைப் பார்த்த அதே இடத்தில் போய் நின்றுகொண்டாள். இவன் கொடுத்த பணத்தில் அவ்ளுக்கும் சேர்த்து பணம் எடுத்துக் கொண்ட சோத்துக்கடைக்காரி சிரித்தபடியே சில்லறையைக் கொடுத்தாள்.
அவளை வேகமாகக் கடந்துவிடுகிற முனைப்பில் திரும்பிப் பார்க்காமல் அவன் தன் சாமானிருக்கும் இடத்திற்கு நடந்தான். கொஞ்சம் பதட்டத்தில் மூச்சு வாங்கியது. தன் கவனமெதையும் அவள் பொருட்டு திருப்பிவிடக் கூடாதென கவனமாய் இவன் கண்ணாடிகளை மட்டும் புதுசாக்கிக் கொண்டே இருந்தான். அவ்வளவு நேரமும் சரளமாய் வந்து கொண்டிருந்த வார்த்தைகள் இப்பொழுது கரண கொடூரமாய் சிதறி வெவ்வேறாக ஒலி குறைந்து காற்றோடு சேர்ந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு இவன் திரும்பிப் பார்க்கிறபொழுது அவள் அவ்விடத்திலிருந்து போய்விட்டிருந்தாள்.
கடைக்காரன் இவனைப் பார்த்து கொள்ளச் சொல்லிவிட்டு மூத்திரமடிக்கப் போனான். சில நாட்களுக்கு முன்பு வரையிலும் தன் சொத்தாயிருந்த ஒன்றிற்கு இன்று காவல் காப்பது கொஞ்சம் கவலையாகத்தானிருந்தது இப்பொழுது. தான் வைத்த எதையும் அவன் இடம் மாற்றியிருக்கவில்லை. விலையும் கூட ஆள் பார்த்து அனுசரித்து விற்கத் தெரிந்திருக்கிறது. ‘நல்ல தொழில்காரந்தான்’ என நினைத்துக் கொண்டான். முன்பு எப்பொழுதோ ஒரு சேட் வீட்டிலிருந்து வந்த த்ரட்மில் இன்னும் விற்காமலிருந்தது. ரெண்டு வருசங்கள் போயிருக்கும். இன்னும் மாதந்த்தவறாமல் சேட் வந்து போய்க்கொண்டுதானிருக்கிறான். அது எப்படியும் விற்குமென. அதைப் பார்த்தான். சாகக் காத்திருக்கும் ஒரு நோயாளியைப் போல் திராணியற்றுக் கிடந்தது. இரும்பு சாமான், தம்பிள்ஸ், குட்டி சைக்கிள், தேய்ந்து போன பெரிய கண்ணாடிகள் துவங்கி பழைய விலையுயர்ந்த வெண்கலச் சாமான்கள் வரை அவ்வளவும் நிறைந்து கிடக்கிற கடையில் தானிருக்கும் பொழுதிருக்கும் உற்சாகம் மட்டும் இல்லாமலிருப்பதாய் உணர்ந்தான். தன்னை விட்டுப் போனாலும் தன் கடைதான் என்று நினைக்க முடியவில்லை. இனி, திரும்ப வரக்கூடாதென நினைத்துக் கொண்டவன் சிரித்தபடியே கடைக்காரன் வருவதைப் பார்த்ததும் கவனத்தை திருப்பினான்.
அப்படியொன்றும் மோசமாக இருந்திருக்கவில்லை அன்றைய தின வியாபாரம். ரொம்ப நேரம் இருக்கப் பிடிக்காமல் இருட்டாவதற்கு முன்பாகவே மார்கெட்டிலிருந்து கிளம்பினான். திருட்டு டி.வி.டி லோட் ஏற்றிய ஒரு ட்ரை சைக்கிள் பாதி வழியை மறைத்துக் கிடந்தது. சோத்துக்கடைக்காரி கடையை முடித்துவிட்டு கால்களை விரித்து படுத்துக் கிடந்தாள். மார்கெட்டிலிருந்து விலகி சாலைக்கு வந்த பிறகுதான் காற்றில் லேசாக முகம் நிம்மதி கண்டது. கையில் சேர்த்து வைத்த பணம் கொஞ்சமிருக்கிறது. பெரிய கொடுமையான கஷ்டமெதுவும் படவேண்டிய கட்டாயமில்லை.
ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் தாண்டியிருக்கும் பாலத்தையொட்டி ஒருவன் ஒருவளை காதும் காதுமாக அப்பிக் கொண்டிருந்தான். அவளும் பதிலுக்கு அவனை அடிப்பதும் ஆதரவற்ற தன் நிலைக்காக அழுவதுமாய் போராடிக் கொண்டிருந்தாள். கவனமாகப் பார்க்கையில் அவளை அடையாளம் தெரிந்துகொள்ள முடிந்தது. இவன் வந்த திசையிலேயே போய்விடலாமென அவசரமாகத் திரும்பிப் போகப் பார்த்தான். ‘கேக்க ஆளில்லைன்னுதான் இம்மா நேரம் அட்ச்ச, தோ என் ஊட்டுக்காரன் வந்துட்டாண்டா. பாடு’ எனக் கத்தியதை கேட்கவும் சந்தேகத்தோடு இவன் திரும்பி அவளைப் பார்த்தான். அடித்தவன் நிறுத்திவிட்டு இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். தன்னைத்தான் அவள் சொல்லியிருக்கிறாள் என்று தெரிந்ததும் வயிற்றில் பொறி கலங்கி நின்றது இவனுக்கு. அவளை அடித்தவன் எதுவும் பேசாமல் படிகளில் இறங்கி போய்விட்டான். அழுது வடிந்த மூஞ்சியைத் துடைத்துவிட்டு இவனை நெருங்கி வந்தவள் ‘எனக்கு தொழில்லாம் லாயக்கில்லை. பத்து ரூபாய்க்கு கூட ஒர்த்தனும் வரமாட்டேங்கறான். மூணுவேள சோறு மட்டும் போடு போதும். எதுனா வேலை செஞ்சிகினு இருக்கேன்.’ அவனுக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். மட்டமான கஞ்சாத் துகளின் நெடி அடித்தது.
வாவென்று சொல்லாமலேயே அவனோடு வீட்டிற்கு நடக்கத் துவங்கியவளை அவனும் வேண்டாமென நிறுத்தவில்லை. வீட்டில் இவனோடு சேர்ந்து இரண்டு பேர்தான். கிழவனைப் பற்றி பிரச்சினையில்லை. அவனுக்கும் இவளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அப்பனென்பதால் இவன் கொஞ்சம் வருடமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிறான். கிழவன் அதிகபட்சமாக வீட்டிலிருப்பது சோத்துக்கு மட்டும் தான். மற்றபடி, தெருவிலும் பிராட்வேயைச் சுற்றிலும் அனேக வேலைகளிருந்தன அவனுக்கு. இவன் வீட்டிற்குப் போன நேரத்தில் அதிசயமாய் கிழவன் வீட்டிலிருந்தான். யாரையோ சாத்தி சரக்கடித்திருக்க வேண்டும். கண்கள் சொருகி சிவந்து போயிருந்தது. வரிசையாக ஐந்தாறு வீடுகள் கொண்ட அவ்விடத்தில் யாரும் இவனை வித்தியாசமாக பார்க்கவில்லை. வாசலில் காய்ந்து கொண்டிருந்த நிறைய துணிமணிகளில் ஒரு சேலையை உருவி எடுத்துக் கொண்டவள் வீட்டிற்குள் அவன் நுழைவதற்கு முன்பாகவே நுழைந்துவிட்டாள். மூஞ்சியைக் கழுவி மஞ்சள் தேய்த்து கருப்பு வெள்ளை பவுடர் போடத் துவங்கினாள். இப்படியான கருப்பு வெள்ளை மேக்கப் போடுவது அடர் கருப்பான முகங்களுக்கு மட்டுமே சாத்தியம், அவளின் முகம் அதில் பூரணத்துவம் கொண்டிருந்தது. இவள் உருவின சேலைக்கும் அவள் உடலுக்கு சம்பந்தமே இல்லாதபடி துருத்திக் கொண்டு நிற்க, கிழவன் இவளை நெருங்கிப் போய் பார்த்தான். இவள் திரும்பிப் பார்த்து சிரிக்க, கிழவனும் சிரித்தபடி போய்ப் படுத்துக் கொண்டான்.
”எனக்கு பசிக்கிது, துன்ன எதுனாச்சும் வாங்கியா” அவனுக்கு நடப்பது ஒன்றும் அத்தனை மோசமானதாகவோ அல்லது சந்தோசமானதாகவோ படவில்லை. ஆனாலும் அவள் சொல்வதைக் கேட்பதில்தான் அப்போதைக்கு அவனுடைய சந்தோசமிருப்பதாய் உணர்ந்தான். தன்னை ஒரு குடும்பஸ்தனாக நினைத்துக் கொள்கிற விசித்திரமான நோயது. சிரித்தபடியே கிளம்பி கடைக்குப் போனான். அடிக்கொருமுறை பையில் பணமிருக்கிறாதவென பார்த்துக் கொண்டவன் அவளுக்கு என்ன பிடிக்குமோ பிடிக்காதோவென ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திணறினான். சூடாக கையில் உணவு பொட்டலங்களோடு தெருவில் இவன் திரும்பி வரும்போது விசயம் புரிந்து ஒரு கிழவி மட்டும் இவனை பார்த்து சிரித்துக் கொள்ள, கடந்துபோன ஒருவன் ‘இன்னாபா பூ வாங்கலையா?....’ யாரோ ஒருவரிடம் கேட்பதுபோல் கேட்டுவிட்டுச் சென்றான். இவன் தன் பைகளை ஒருமுறை பார்த்துவிட்டு பூ வாங்காததற்காக வருத்தப்பட்டான். இவன் வீட்டிற்குள் நுழைந்தபொழுது அவனது படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அவளை நெருங்கிச் சென்று கிழவன் மோந்து பார்த்துக் கொண்டிருந்தான். வாசனையில் என்ன இருந்துவிடும்? இவன் பைகளை வைத்துவிட்டு அவளை எழுப்ப நினைக்கையில் என்ன சொல்லி எழுப்புவதென குழப்பமாகிவிட்டிருந்தான். கிழவன் இவன் சத்தம் கேட்டதும் எதுவும் நடக்காதவனைப்போல் நடந்து கழிவறைக்குப் போனான். பைகளை கீழே வைத்துவிட்டு இவனும் அவளை நெருங்கிச் சென்று கிழவனைப்போலவே மோந்து பார்த்தான். நாய் வெறியுடன் மூச்சுவிடுவதைப் போலிருந்தது அவன் அருகாமை, அவள் இவனிடமிருந்து கசிந்த துர்நாற்றத்தில் மெல்ல கண்விழித்துக் கொண்டுவிட்டிருந்தாள். மங்கலான கண்களோடு சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டு எழுப்பிவிட “கெழவன் மோந்து பார்த்தான். பாவம்தான. அதான் தூங்கற மாதிரிக் கெடந்தேன்….”
இரண்டு பேரும் எழுந்து சாப்பிட உட்கார்கையில் “உன்னைய என்னன்னு சொல்லிக் கூப்பிட?....” தண்ணீர் எடுப்பதற்காக போனவள் நின்று ஒரு நொடி யோசித்து, “சரோசா தேவின்னு கூப்பிடுறியா?...” அவன் முகம் சுளிப்பதை பார்த்து “சே வேணாம். உனக்கு பிடிக்கல போல. டயனான்னு கூப்பிடேன்…” சந்தோசமாக சிரித்துக் கொண்டான். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, தடுமாறியபடியே வந்த கிழவன் தனக்கு திங்க எதாவது இருக்குமென்ற எதிர்பார்ப்பில் அவர்களைப் பார்த்தபடியே வந்தான். அவள் கிழவனைப் பார்த்துச் சிரித்தபடி “வந்து சாப்பிடு மாமா….” கிழவன் ஆசையோடு அவளுக்குப் பக்கமாக உட்கார்ந்து கொண்டான்.
ஒருபோதும் இரவில் இதற்குமுன் தன் மகன் தனக்கு பிரியாணி வாங்கித் தந்ததில்லை என்பது நினைவுக்குவர இப்பொழுது இளஞ்சூட்டிலிருக்கும் இந்த பிரியாணியின் மீது மெல்லிய பொறாமை எழுந்ததவனுக்கு. அவளுக்கு அருகில் உட்கார்ந்திருப்பதில் அவ்வாசனை பெரும் நெருக்கமொன்றை அவர்களிடையே உணர்த்தியிருக்க, அவளே தனக்கு ஊட்டிவிடுவதுபோல் ஒரு நிமிடம் நினைத்து கிழவன் சத்தமாகச் சிரித்தான். இவன் கிழவனை முறைத்துப் பார்க்க, கிழவன் அப்பொழுதும் அடக்கமாட்டாமல் இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவள் அறைகுறையாய்ப் புரிந்தும், கிழவன் எதை நினைத்து சிரிப்பான் என்கிற உறுதியான புரிதலிலும் மனசுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டாள். அவனும் அவளும் சாப்பிட்டு விட்டு எழுந்து அறைக்குள்ளாகச் செல்ல, கிழவன் அந்தக் கதவை உற்றுப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்தான்.
அடுத்ததாக என்ன செய்வதெனத் தெரியாதவனாய் அவளைப் பார்த்தபடியே நின்றவனை “வந்து படு மாமா….” அவள் கண்களிலிருந்த அன்பையும் காமத்தையும் சில நொடிகளுக்குக்கூடத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாதெனப் பட்டது. இன்னும் அவ்வளவு நேரமாகியிருக்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே புறவுககின் சப்தம் பேரிரைச்சலாய்க் கேட்டுக்கொண்டிருக்க, அவள் தன்னுடலை கசிந்து வரும் வெளியுலகின் வெளிச்சத்தினூடாக அவன் முன்பாக கிடத்தினாள். அவளையொட்டிப் படுத்துக் கொண்டவன் நிதானமாக அவளுடலை அறிந்து கொள்கிற விருப்பத்துடன் மெதுவாக வருடி விட்டான். அவள் கண்கள் சலனமில்லாமல் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. நீண்டநேரமாய் அவன் எதுவுமே செய்யாததைப் போலவே அவளும் எதுவும் செய்திருக்கவில்லை. அவன் கைகள் இயக்கம் ஓய்ந்து நின்ற சில நிமிடங்களுக்குப் பின் அவனைத் திரும்பி பார்த்தவள் அவன் தூங்கி நீண்ட நேரம் கடந்து போயிருந்ததை உணர்ந்து கொண்டாள். அரசு மருத்துவமனையில் நீண்ட கால உள்நோயாளியைப்போல் அவன் முடங்கி கிடந்த இடம் இப்பொழுது இருளால் மட்டுமே நிறைந்திருந்தது.
அறையின் கதவை நீக்கி வெளிவந்த பொழுது கிழவன் தன் வேஷ்டிகுள் கை விட்டபடி படுத்துக்கிடந்தான். அவன் கண்களிலிருந்து கசிந்திருந்த நீரில் மெல்லக் கரைந்து கொண்டிருந்தது அவனின் கடந்த கால சந்தோசங்கள். இவள் அவனை நெருங்கி உட்கார்ந்த பொழுதும் கிழவனின் கண்கள் மட்டும் வேறெங்கோ பார்த்தபடி கிடந்தது உணர்ச்சியற்று. ஆதரவாக அவனருகில் உட்கார்ந்தவள் கிழவனின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவனை அணைத்தபடி முதுக்குக் பின்பாக படுத்துக் கொண்டாள். விடிந்து பார்க்கையில் அவ்வீடு எப்பொழுதும்போல் கிழவனோடும் அவனோடும் வெறுமையோடு விடிந்திருந்தது. இப்படியான உறக்கம் நீள் இரவையும் கடந்து தன் பால்யத்தினை நினைவுபடுத்தியவதவனுக்கு. எழுந்து ஜன்னலைப் பார்த்தவனின் கண்களில் கடந்து போகத் துவங்கியது அந்த தினத்தின் துவக்கம்.
அன்று மார்க்கெட்டில் அப்படியொன்றும் பெரிய வியாபாரமில்லை, இப்பொழுது மேலதிகமாக திருட்டு டிவிடிக்கள் எல்லா ஏரியாவிலும் கிடைக்கிறதால் இவ்வளவு தூரம் வந்து வாங்கும் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். இன்னும் கலர்மீன்கள் வளர்ப்பதில் இருக்கிற ஆர்வமும் பழைய புத்தகங்கள் வாங்குகிற மாணவர்களும் அதிகமிருப்பதால் உள்ளிருக்கும் கடைக்காரர்களின் பிழைப்பு சிரமமின்றி இருக்கிறது. சிரமத்துடன் இடத்தை மாற்றி மார்க்கெட்டின் முன்புறமாக பழைய துணிமணிகள் விற்கிற ஆட்களின் பக்கமாக வந்திருந்தான். அவனுக்கு இந்த பழைய துணி விற்பது விருப்பமானதொன்று. ஒரு வாசனையை அழித்து இன்னொன்றாக மாற்றுகிற சூட்சமம் போல் பழைய துணியை விற்க வாசனையையும் சேர்த்து விற்க வேண்டும் . ஒரு சட்டையை இருபது ரூபாய்க்கும் பேண்ட்டை ஐம்பது ரூபாய்க்கும் விற்கிற பெரிய மனது எத்தனை பேருக்கு வரும்?
மார்க்கெட்டை ஒட்டி இடது புறமாக பழைய மூர்மார்க்கெட் செல்கிற ரோட்டில் நின்று ஒருவன் இவனைக் கூப்பிட்டான். நன்றாகத் தெரியும் அவனை, வியாசர்பாடியிலிருந்து வருகிறவன், இவனைப் போலவே அவனும் வியாபாரம் பார்க்கிறவன் தான், டோப்பு விற்கிறவன். இவ்வளவு காலத்தில் இப்படி கூப்பிட்டு பேசுகிற அளவிற்கு அப்படியொன்றும் அவர்களுக்குள் உறவில்லை. புரியாதவனாக எழுந்து அவனை நெருங்கி சென்றான். இவன் கையில் கொஞ்சம் பொட்டலங்களைத் தந்து “இத வச்சிரு. சாய்ங்காலமா வாங்கிக்கிறேன்…” சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான். கையிலிருப்பது கண்டிப்பாக அரைக்கிலோவிற்கு குறையாது, தன்னிடம் ஏன் கொடுத்தானெனெ புரியாத குழப்பத்தில் ஓடிப்போய் அவனை மறித்து நிறுத்தினான். தன் பையிலிருந்து ஒரு கட்டு ரூவாய்த்தாளை தந்து “வெச்சிக்கோ, ஒன்னும் ஆகாது….” ஆறுதலாக சிரித்து விட்டுக் கிளம்பினான். பணத்தை ஒரு பையிலும் பொட்டலத்தை ஒரு பையிலுமாக திணித்தவன், கண்ணாடிகளை வைத்திருந்த ஸ்டேண்டை தோள்மாற்றிப் போட்டுக் கொண்டான். அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் இரண்டு பேப்பர் கப் தேநீரோடு அவள் சிரித்தபடி உட்கார்ந்திருந்தாள். அவனுக்கு இப்பொழுதுதான் அந்த தினம் துவங்குவதான சந்தோசம் பிறந்தது.
இரண்டு பேரும் புதுமணத் தம்பதியைப் போல் நெருக்கமாக உட்கார்ந்து கொள்ள அவன் தலையை வருடிக் கொடுத்தாள். தேநீரின் சூடு இன்னும் அவள் உள்ளங்கையில் ஊர்ந்திருந்தது. “வா வீட்டுகுப் போவோம்…” அவன் நேரத்தைப் பார்த்தான். அவளைப் பார்த்தான். ’இப்பயா?’ என்பதைப் போலிருந்தது அந்தப் பார்வை. நெருங்கிச் சென்று அவன் கன்னத்திலும் நெற்றியிலுமாக முத்தமிட்டாள், அவள் வாயிலிருந்து பான்ப்ராக்கின் காட்டமான நெடியடித்தது. அதைத் துப்பச் சொன்னான். சிரித்துக் கொண்டே துப்பியவள் கொஞ்சம் தண்ணீரை வாயில் ஊற்றி கொப்பளித்தாள். எழுந்து போகப்போனவளை நிறுத்தியவன் பிறகு போகலாமென்றான். பையிலிருந்த பொட்டலம் கனத்தது. அவனுக்கு தந்திருந்தவனின் முகம் கடுமையான ஒன்றாகப் பட்டிருக்கவில்லை. என்றாலும் இத்தோடு வீட்டிற்கு போவது சாதாரண விசயமில்லை. அவன் திரும்பி வரும்பட்சத்தில் இதனை ஒப்படைக்க வேண்டும். இன்னும் அவன் தனக்கு அவ்வளவு பணம் கொடுத்ததற்கான காரணம் புரியாமலிருக்க, அவள் கேட்ட எதற்கோ சம்பந்தமேயில்லாமல் ‘அரைக்கிலோ சரக்கு கைவசம் இருக்கு….’ என சொல்லிக் கொண்டான். அவள் இவனை உலுக்கி “என்ன சரக்கு?” அவன் மலங்க மலங்க இவளைப் பார்ப்பதும், பையைத் தொட்டுப் பார்ப்பதுமாய் திணறிக்கிடந்தான். “தா. நெனவு இருக்கா இல்லையா?.....” மீண்டுமொருமுறை உலுக்கியபொழுது சத்தமாக சிரித்தான். அவளும் காரணமே புரியாமல் சிரித்தாள்.
சோத்துக்கடைக்காரி இவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாகி இருந்தாள். அது யாரும் சொல்லிக் கேட்காத ஒரு தகவலாகவோ உண்மையாகவோ அவர்களுக்குள் நம்ப்பப்பட்டுக் கொண்டிருந்தது. மதிய சாப்பாட்டிற்காக இவர்கள் சென்றிருந்த பொழுது அந்தக் கடை இவர்களை சொந்த வீட்டைப் போல் வரவேற்றது. டயானா “அத்த கொஞ்சம் சோறு போடு..” சத்தமாகக் கேட்டு சலனப்படுத்தினாள். அவன் கவனம் திருப்பி திருப்தியாக தன்னுடன் இருந்தவளைப் பார்த்துக் கொண்டான். அவர்கள் உண்ணும் உணவு முன் எப்போதும் இலலாத சுவைமிக்கதாய் இருந்தது. அந்த வெளி முழுக்க பழையதுகளின் வாசனை வீர்யமாய் எழ, சோத்துக்கடையில் மட்டும் சுடு சோற்றின் வாசனை மார்க்கெட்டைப் புதிதாய்க் காட்டியது. இத்தனை அழகாய் ஒரு பெண் சாப்பிட முடியுமென அவன் இவளைக் கண்டு தெரிந்து கொண்டது அகோரமானதொரு முகத்துடன் இவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போதுதான். சோத்துக்கடைக்காரி இவனுக்குக் கூடுதலாக கொஞ்சம் சோறு போடும் போது அவளின் முகத்தில் சிரிப்பிருந்தது. இவனே வலிய ஏதாவது பேசலாமென நினைத்துத் துவங்கப் போக “ஒனக்கு சாதம் போடவா?” டயானாவிடம் அவள் கேட்டதில் ஒருவித நெருக்கம் இருந்தது. “வாங்கிக்க டயானா” பொருந்தாத ஒரு தொனியிலும் அன்பிலும் அந்தப் பெயரைச் சொன்ன பொழுது சுற்றியிருந்தவர்கள் சத்தமாகச் சிரித்துக் கொண்டனர். தனக்கு இப்படியானதொரு பெயர் இருப்பது நினைவுக்கு வர உள்ளூர சிரித்துக் கொண்டாள்.
அந்த மாலை வழக்கத்திற்கு மாறான சுமையுடன் மார்க்கெட்டில் இறங்கிக் கொண்டிருக்க, பொட்டலத்தையும் வாங்கின பணத்தையும் இப்பொழுது என்ன செய்வதென்ற குழப்பத்துடன் அவன் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான். டயானா புத்துணர்வோடு கிளம்பி இவனைத் தேடி வந்தாள். ஒருவன் வழிமறித்து டயானாவிடம் பேசிக்கொண்டிருந்தான். இவள் சமாதானம் சொல்வது போல் பேசி அனுப்பி வைத்தாள். அவளை விலக்கிப் போனவன் திரும்பி இவனை முறைத்துப் பார்த்தபடியே போனான். “நான் நைட்டு வீட்டுக்கு வர்றேன், இப்போ காசு ஏதாச்சும் இருந்தாக் குடு…” டயானா உரிமையுடன் கேட்டதில் சந்தோசமாகப் பார்த்தான். அவன் சட்டைப் பையில் இருந்து அவளே கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு மார்க்கெட்டில் இருந்து வேகமாக வெளியேறிப் போனாள். நீண்ட நேரமாய்க் காத்திருந்து பார்த்தும் காலையில் பொட்டணமும் பணமும் கொடுத்தவன் திரும்பி வந்து இவனிடம் அதனை வாங்கி இருக்கவில்லை. அடிக்கொருதரம் தன் பையை பார்த்துக் கொண்டவனை மற்றக் கடைக்காரர்கள் ஒரு மாதிரியாய்ப் பார்க்க, அதற்கும் மேல் அங்கு இருக்க முடியாதென வீட்டிற்குக் கிளம்பினான்.
டயானா வீட்டிற்கு வரும்போது அந்த வீதி கொஞ்சமாய் அமைதியாகத் துவங்கியிருந்தது. கடைசி நேர மின்சார ரயில்களுக்கான பயணிகள் சிலர் அந்த வீதியைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். கிழவன் அவளைப் பார்த்துவிட்டு அவளுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பிப் படுத்தான். இவன் தூங்கியிருக்கவில்லை. அறைக்குள் நுழைந்த பொழுது சட்டையில்லாத அவன் மேலுடலில் வியர்வை ஈரம் திட்டுத் திட்டாய் இருந்தது. டயானா சேலையால் வியர்வையைத் துடைத்து விட்டாள், “சாப்டியா மாமா…” அவள் கண்களில் நிஜமான அக்கறைத் தெரிந்தது. அவள் குடித்திருக்கிறாள் என்பது தெரியும்படி ஒரு அடர்த்தியான வாடை அறைக்குள் நிறைந்தது.
அவ்வறையின் விளக்கு அணைக்கப்பட்ட நேரத்தில் இருவரும் பூர்ண நிர்வாணத்துடன் தழுவிக் கிடந்தனர். அவன் தன்னுடலில் கோடி விரல்கள் நுழைந்து கிளர்த்தும் பரவசத்தில் கண்மூடி கிடக்க, டயானா சத்தமே இல்லாமல் சிரித்தாள். அவன் அவளுடலைத் தடவியபடியே கண் மூடிக் கிடந்தான். கதவிடுக்கின் வழி ஒரு உருவத்தின் நிழல் தெரிய, சத்தம் காட்டாமல் எழுந்து போய் டயானா தாழ்ப்பாளை நீக்கினாள். கிழவன் அவசரமாக தன் படுக்கையில் போய் சுருண்டு கொண்டான். அவனுக்கு லேசாக மூச்சு வாங்கியது. டயானாவின் கண்களில் வேட்கை தினவடங்காத ஒரு மிருகத்தின் வெறிகொண்டு கிழவனை நோக்கின. கிழவனின் வேஷ்டியை உருவியவள் பதறி எழும் அவனை ஆவேசமாகத் தழுவினாள். கிழவனின் கண்களில் வெப்பமும் காமமும் பொங்கித் திறக்க நீண்ட காலம் தேங்கிக் கிடந்த வெக்கையை அவளின் முன்னால் கிடத்தினான். சில நிமிடங்களில் கிழவனின் வேகம் அவளை மூச்சுத் திணறச் செய்தது. அவள் முனகல் சத்தமாக எதிரொலிக்க, அடுத்த அறையில் படுத்திருந்தவனின் புலன்கள் மெதுவாக விழித்துக் கொண்டன. எழுந்து வந்து பாதி திறந்த கதவின் வழிப் பார்த்தான். கிழவனின் வேகமும் மூர்க்கமும் தெறிக்க இவன் எட்டிப் பார்ப்பதை கவனித்து கீழே படுத்திருந்தவள் தலையை மட்டும் திருப்பித் ‘தூ’ வெனத் துப்பினாள். கதவைச் சாத்திவிட்டு வந்து படுத்தவனை ஆதரவாக அணைத்துக் கொள்ள அப்போதைக்கு ஒருவரும் இல்லை. அழுகை முட்டியது. சில நிமிடங்களுக்குப் பின் டயானா அந்த அறைக்குள் நுழைந்தாள். அவன் நெற்றியிலும் கன்னத்திலுமாய் மாறி மாறி முத்தமிட்டாள். கனத்துக் கிடந்த மனம் கண்ணீரில் வழிந்து வெளியேறியது. நிம்மதியாக அவளின் மேல் புரண்டு படுத்துக் கொண்டு உறங்கினான்.
பாதி இரவில் எழுந்தவள் அவன் பையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்து சின்ன சின்ன காகிதத் துண்டுகளில் வைத்து மடித்தாள். அவள் மடிப்பில் தொழிலின் தேர்ச்சி இருப்பது போல் ஒரு சிறு பொட்டலத்திற்கான அளவு சரியாய் இருந்தது. மொத்தமாக நாற்பத்தி ஐந்து பொட்டலங்கள் அவளால் போட முடிந்தது. தோராயமாக அதன் மதிப்பைக் கணக்கிட்டாள், அவனைத் திரும்பிப் பார்த்தாள். நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். காலை அவள் கையில் இருந்த நாற்பத்தி ஐந்து பொட்டலங்களைத் தயக்கத்துடன் பார்த்தவன் அதன் மதிப்பை விடவும் அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கான அச்சமும் அப்பொட்டலங்களை விற்று முடிக்கிற பட்சத்தில் நேரும் பிரச்சனைகளும் அச்சத்திற்குரிய ஒரு கணக்காக மனதிற்குள் ஓடின. அதையெல்லாம் மீறி அவள் உடன் இருந்த சந்தோசமும் தைர்யமும் நம்பிக்கையோடு அவனை விற்கச் சொன்னது. முன் அனுபவமற்ற ஒருவன் பொட்டலம் விற்பது ஒருவிதமான கேளிக்கை மற்றவர்களுக்கு. வாடிக்கையாளனும் தெரியாமல், போலீஸ்காரனும் தெரியாமல் குழப்பத்துடன் கையில் தூக்கிக் கொண்டிருக்கிற சரக்கை இடம் மாற்ற முடியாத துயரத்தில் அலைந்து கொண்டிருந்தான் பிற்பகல் வரை.
அவனிடம் முதல் பொட்டலம் வாங்கியவன் ஒரு மாணவனாக இருக்க வேண்டும். இவனை நீண்ட நேரமாகக் கவனித்துவிட்டு கேட்டுப் பார்க்கலாமென சந்தேகத்துடன் வந்து கேட்டான். இவனுக்கு அதனை எப்படிக் கொடுப்பதென்கிற தயக்கமும் இருப்பதை ஒத்துக் கொள்வதில் யோசனையும் இருந்தது. அவன் இரண்டு விரல்களுக்கு நடுவில் ஐம்பது ரூபாய்த் தாளை வைத்து நீட்ட, பேண்ட் பைக்குள் கைவிட்டவன் அதே போல் இரண்டு விரல்களுக்கு நடுவில் சிரமத்துடன் பொட்டலத்தை வைத்து நீட்டினான். அந்தக் காசை வாங்கின நொடியில் மிகப்பெரியதொரு சாகசம் செய்துவிட்ட பூரிப்பு கொண்டான். மதிய சாப்பாட்டின் வேளையில் டயானா சரக்கை விற்பதற்கு சில வழிமுறைகள் சொன்னாள். அதிகமாக வியர்ப்பது இந்தத் தொழிலுக்கு நல்லதில்லை என அவள் சொன்னதற்கான காரணம் மட்டும் அவனுக்கு பிடிபடவில்லை. வியர்வை ஈரத்தில் பொட்டலத்தை வைக்க சிரமப்பட்ட பொழுதுதான் வியர்வை குறித்து அவள் சொன்னது புரிந்து சிரித்தான். அவள் மாலையில் கொஞ்சம் கண்ணாடிகளை வாங்கி விற்றுக் கொண்டிருந்தாள். கண்ணாடிகளை விடவும் அவளிடம் நிறையப்பேர் டூப்ளிகேட் செண்ட்டு பாட்டில்களை அதிகமாக வாங்கினர். அதனை பரிசோதித்துப் பார்ப்பதற்கு அவளின் இடது கையிலும் வலது கையிலும் அடித்துப் பார்த்ததில் வாசனை அவள் உடலில் அழுகின முட்டை ஒன்றின் வாசனையைக் கொண்டு வந்திருந்தது.
இரண்டாவது நாளின் மாலைக்குள்ளாகவே பொட்டலங்களை முழுமையாக விற்றுவிட்டு இருந்தவனிடம் இன்னும் கொஞ்சம் சரக்கு வாங்கச் சொல்லி அவள் சொன்னதும் தான் செய்து கொண்டிருக்கிற வேலையின் மீதான அச்சம் எழுந்தது அவனுக்கு. அன்று அவனைப் போலவே இன்னும் இரண்டு பேர் பொட்டலம் விற்றனர். ஒரே இடத்தில் மூன்று பேர் விற்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதிலும் அவர்கள் இவனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனமாகப் பார்த்ததில் இவன் பெருஞ் சந்தேகம் கொண்டான். இதற்கும் மேல் பொட்டலம் விற்கிற தைர்யம் அவனுக்கில்லை. புதிதாக சரக்கு வாங்கி விற்க மறுத்தான். இரவு கொஞ்சம் மதுவும் கோழிக்குழம்பு பரோட்டாவும் அவன் பிடிவாதமாக மறுத்த முடிவை மாற்றச் செய்திருந்தது. போதையில் ஒத்துக் கொண்டவன் அடுத்த நாள் செய்யமாட்டானோ என்கிற தயக்கம் அவளுக்கு இருக்க, அடுத்த நாள் காலையில் இவள் எழுவதற்கு முன்பாகவே அவன் அங்கிருந்து கிளம்பிப் போயிருந்தான். இந்த மாநகரில் பொட்டலம் வாங்குவதோ, ஒரு கத்தியை செய்யச் சொல்லி வாங்குவதோ அல்லது விலை குறைவான ஒரு துப்பாக்கியை வாங்குவதோ எதுவும் சிரமமானதில்லை. எல்லாவற்றிற்கும் இருக்கிற கடவுச் சொற்களை கற்றுக் கொண்டால் வாங்குவது மிகச் சாதாரணமான ஒன்றுதான். அச்சத்துடன் வியாபாரத்தை எதிர் கொண்டவனுக்கு முந்தின தினம் வந்த இரண்டு பேரும் இல்லாமல் இருந்ததில் நிம்மதியாய் இருந்தது. அவனால் பொட்டலத்தை கொள்முதல் செய்ய முடிந்தது.
டயானா அடுத்த இரண்டு நாட்கள் அவனை விட்டு எங்கும் போயிருக்கவில்லை. அவனுடன் எல்லா நேரங்களிலும் திரிந்தவளை அவனுக்குத் தெரிந்தவர்கள் அவனின் மனைவி என்றனர், சிலர் காதலி என்றனர், இன்னும் சிலர் வைப்பாட்டி என்றனர். ஆனால், இதில் எது அவர்களுக்கான உறவென அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை. அவளுக்கு புதிது புதிதாக எதாவது ஒன்றை வாங்கித் தந்தபடியே இருந்தான் தினமும். அபத்தங்களின் தோற்றுருவாய் அவன் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் இருக்க, சுத்தமாக அதில் மனம் லயித்திருக்காத போதும் அவன் அருகாமையில் நெருக்கமானதொரு பாதுகாப்பை உணர்ந்திருந்தாள். கொஞ்சம் மல்லிகைப் பூவும் சூடான பிரியாணியும் அவளை மூன்று நாட்களாகக் குடிப்பதை மறக்கச் செய்திருந்தது. தொழிலுக்கான இடத்தை மாற்றிக் கொள்ளலாம் என அபிப்பிராயப்படவனிடம் ‘இந்த இடம் மட்டும் தான் நம்பிக்கையானதும், பாதுகாப்பானதுமென’ அவள் இடப்பெயர்வு குறித்த அவன் முடிவை மாற்றிக் கொள்ளச் செய்தாள்.
இரண்டு மூன்று நாட்கள் போயிருக்கும், முதல் முறையாக இவனுக்குக் கொடுத்திருந்தவன் இவனிடம் பொட்டலம் கொடுத்த அதே இடத்தில் வைத்து டயானாவை உதைத்துக் கொண்டிருந்தான். அவள் அவனோடு சண்டை போடுவதும் திருப்பி அடிப்பதுமாய் கத்திக் கொண்டிருந்தாள். இவன் தற்செயலாக வட்டிக்கடை பாயைப் பார்க்கப் போனவன் திரும்பி வருகிற இடத்தில் அவர்களைக் கவனித்து வேகமாக ஓடினான். அவள் சேலை பாதிக்கும் மேல் கிழிந்திருந்தது. மூக்கில் இருந்து சூடாக குருதி வழிய அப்பொழுதும் அழாமல் இருந்தாள். அவன் மாறி மாறி இருவரையும் பார்த்தான். அவன் தோற்றம் குறித்து பெரும் அச்சம் இவனுக்கு இல்லாமல் இல்லை. கோபத்தோடு இவனைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் காயம் பட்டதின் தழும்புகள் இன்னும் ஆறாத ரத்தச் சிவப்புடன் இருக்க இவனுக்கு உடல் உதறல் எடுத்தது. அவன் கோபமாகவோ சத்தமாகவோ எதுவும் பேசவில்லை. கூட்டம் இல்லாத ஒரு இடம் நோக்கி இழுத்துப் போனவன் இவன் பையைத் தொட்டான். பொட்டலம் இருப்பது புரிந்து “பொட்டலம் பிடிக்கத் தெரியாத நாய் நீ, தொழில் பன்றியா? நாளைக்கு சாய்ந்தரம் ஐம்பதாயிரம் ரூவா வேணும், ரெடி பண்ணி வை. ரொம்ப நேரம் பொறுத்துக்கினு இருக்க மாட்டேன் பாத்துக்கோ…” அவன் பிடியில் சட்டை கசங்கிப் போனது. அவள் ஓடிவந்து அவனை முகத்தில் குத்தினாள். அந்த ஆள் விலகி இவளை இன்னொரு முறை அறையப் போக இவன் மறைத்து நின்றான்.
வீட்டிற்குத் திரும்புவதில் இருவருக்குமே விருப்பம் இருக்கவில்லை. ஆனால், இப்போதைக்குத் தனக்கு அது மட்டுமே பாதுகாப்பானதொரு இடமென்கிற முடிவுடன் உடனடியாக வீட்டிற்கு செல்வதையே அவன் விரும்பினான். நீண்ட நேரத்திற்கு மனதிற்குள்ளாகவும் முணுமுணுப்பாகவும் திட்டியபடியே வந்தாள். ரத்த காயத்தோடும் ஆடை கிழிந்தும் கலவரமான முகத்துடன் இருக்கும் இவர்களைப் பொருட்படுத்துகிற ஆட்கள் அவ்வீதியில் குறைவாகவே இருந்தனர். இவ்விசயத்தில் இருந்து மீள்வதற்கான வெவ்வேறான சாத்தியங்களை யோசித்தவன், அந்தப் பணத்தை திருப்பித் தருவது அப்படியொன்றும் சிரமமான விசயமில்லைதான். ஆனால், எதற்காக அவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் எனப் புரியாமல் இவளையே பார்த்தான். அவன் பணத்தைத் தரக்கூடாதெனத் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தாள். இவன் எந்த முடிவுக்கும் வரமுடியாதவனாய் குழம்பிக் கிடந்தான். இரவில் இவர்கள் இருவருக்கும் நடுவில் நடக்கும் கலவரம் புரியாமல் கிழவன் உறக்கமின்றி அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான். இரண்டு பேரும் குடித்தார்கள். இவ்வளவு அதிகமாக குடிக்கக் கூடியவளாய் அவளை நினைத்திருக்காதவன் அவள் குடிப்பதில் அச்சங் கொண்டான். அவள் அவ்வளவு நேர அழுகைக்குப்பின் நள்ளிரவு தாண்டி சத்தமாகச் சிரித்தாள். இவனை முத்தமிட்டாள். எழுந்து போய் கிழவனை அணைத்து முத்தமிட்டாள். அவள் செய்கை ஒவ்வொன்றும் சந்தோசத்தின் மிகுதியாய் அவளிடமிருந்து வெளிப்பட பாதி சுயநினைவுடன் இவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவன் உறங்கிப்போன நேரம் எதுவும் காலை நினைவில் இல்லை. வெயில் வீட்டிற்குள் நிறைந்து இருந்த பொழுது அவள் அங்கு இருந்திருக்கவில்லை. வழக்கமாக போவது போல் போயிருப்பாள் என நினைத்தபடி எழுந்து கழிவறைக்குப் போனான்.
அந்த வீட்டின் மூலை முடுக்குகளில் ஒளிந்து கிடந்த ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் உட்பட ஒன்றுவிடாமல் களவு போயிருந்தது அவன் தேடிப் பார்க்கையில். தடுமாற்றத்தோடு எல்லா இடுக்குகளிலும் தேடிப் பார்த்தான், அவன் பேண்ட்டில் இருந்த கடைசி பணம் உட்பட ஒன்றுவிடாமல் திருடு போயிருக்க, முதல் தடவையாக அவள் வெளியேறிப்போனது குறித்து சந்தேகமும் அச்சமும் வந்தது. தான் யாரிடம் அடைக்கலம் போவதென யோசித்தான். அவனுடைய மொத்த உலகமும் மார்க்கெட்டை சுற்றியேதான் இயங்கிக் கொண்டிருந்தது அதுநாள் வரையிலும். இப்பொழுது அங்கும் போக முடியாதென்கிற வெறுமை மனம் முழுக்க இறைச்சலான உண்மையாகி இருந்தது. இன்னொரு புறத்தில் அவள் எப்படியும் திரும்பக்கூடும் என்கிற நம்பிக்கை மனதில் ஒரு ஓரமாக இருக்க, வீட்டிலேயே காத்திருக்க நினைத்தான். பிற்பகலை நெருங்குகிற நேரத்தில் பசி வெறுப்பை உமிழும் ஒரு மிருகமென அவனை ஆட்கொள்ளத் துவங்க இப்போதைக்கு மார்க்கெட்டைத் தவிர வேறு போக்கிடம் இல்லையெனக் கிளம்பினான். சாமான்கள் எதையும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் ஆளாக வந்தவனை மார்க்கெட் யாரோ ஒருவனாய்ப் பார்த்தது. சோத்துக்கடைக்காரி அவன் வருகையை எதிர்பார்த்திருக்க வேண்டும். அவன் கேட்காமலேயே தட்டில் சோற்றைப் போட்டுக் கொடுத்தாள். அவன் மூச்சு வாங்க சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ‘சொல்லிட்டுத்தான் போனா, இப்ப வந்திடுவா’ ஒரு தகவலாய் இவனுக்குச் சொன்னாள். இவனுக்கு பசியோடு சேர்ந்த பெருங்கோபம் ஒன்று அடிவயிற்றில் சுழன்றது. சாப்பிட்டு முடித்தவன் அந்தப் பொழுதை அங்கு கழிப்பதான விருப்பம் அற்றவனாய் அவளை எதிர்நோக்குகிற அவசரத்துடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் திரும்பி வரும்பொழுது கையில் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய துணிமனிகள் வைத்திருந்தாள். முகம் நேற்றைய காயங்களை மறைத்து அழகானதாக மாறிப்போயிருந்தது. “ரொம்ப நேரமாயிடுச்சா மாமா?” அவனது கோபமெதையும் பொருட்படுத்தாமலேயே அருகில் உட்கார்ந்தவள் பையைப் பிரித்துக் காட்டினாள். புதுத் துணிமனிகள் இருந்தன இருவருக்கும். குழம்பிப் போனவனாய் அவளைப் பார்க்க, “நாம இன்னிக்கி கல்யாணம் கட்டிக்கலாம்..” சிரித்துக் கொண்டே அவள் சொன்னது ஒருவேளை இன்னும் சிரிக்கத்தானோ என்னவோ? இவனால் சிரிக்க முடியவில்லை. இவன் அமைதியாக “கிழவன எங்க?” எனக் கேட்டான். டயானா இவன் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு “இன்னும் பாக்கலையா?” திரும்பி சோத்துக்கடைக்காரியைக் கூப்பிட்டாள். “மாமா இப்போ வந்திருவாரு.” உரிமையோடு சோத்துக்கடைக்காரி யாரைப்பற்றிச் சொல்கிறாள் எனப் புரியாமல் இவன் முழிக்க, டயானா “பெருசு இப்போ வந்துரும்…” என்றாள் சிரித்தபடி.
இருவருக்கும் கல்யாணம், அதுவும் இருட்டத் துவங்குகிற நேரத்தில். அந்த சோத்துக் கடையில் தான் கல்யாணம். கிழவன் உற்சாகமாய் இருந்தான். அப்பனுக்கும் மகனுக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கல்யாணம். பெருங் குடிகாரனைப் போல் அவன் கத்துவதும் பாடுவதுமாய் சலனப்படுத்த இவனுக்கு பணம் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்குகிற அச்சம் மனதிற்குள் பெரும் அதிர்வுகளாய் ஒலித்தன. அச்சத்தில் கண்கள் நிலையற்று சுற்றின. வட்டிக்கடை பாயும் வந்திருந்தார். பெரிய கூட்டம் எதுவும் இல்லாமல் போனாலும் அதனைக் கல்யாணம் என அங்கீகரிக்க பத்துபேர் வந்திருக்கவே செய்தனர். ஒரு மணி நேரத்தில் எல்லாமும் முடிய, அவனைத் தவிர அங்கு எல்லோரும் சந்தோசமாக இருப்பதாகப் பட்டது. டயானாவிடம் பணத்தைக் கேட்டான். “நாம புது வூட்டுக்குப் போகப் போறோம் மாமா” பணத்திற்கான பதிலை இப்படிக் கூறுவாளென எதிர்பாத்திருக்கவில்லை. அவள் பாயைக் காட்டி அவர் வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பதாகக் கூறினாள். அவன் அவசரம் முழுக்க இப்பொழுது வருகிறவனை எப்படி சமாளிப்பது என்பதிலேயே இருப்பதினால் மற்றதெல்லாம் தேவை அற்றதென சொல்ல விரும்பினான்.
இவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு சற்று முன்பாகவே பொட்டலம் கொடுத்தவன் இவனைத் தேடி வந்துவிட்டிருந்தான். இவனை மாப்பிள்ளை கோலத்தில் பார்த்ததும் பெருஞ் சிரிப்பு சிரித்தான். டயானாவைப் பார்த்ததும் அவன் முகம் கொடூரமாக மாறியது. வேகமாக ஓடிப்போய் அவளை இழுத்துப் போட்டு அடிக்க சுற்றி இருந்தவர்கள் அவனைப் பிடித்து தள்ளிவிட்டனர். சோத்துக்கடைக்காரி கழுத்தோடு சேர்த்து அவனைப் பிடித்துத் தூக்கிப் போட்டாள். கீழே விழுந்து அழுதபடியே “எம் பொண்டாட்டிக்கு தாலி கட்ட இவன் யார்றா?” கத்தவும் டயானா ஓடிப்போய் அவன் வயிற்றில் ஓங்கி எத்தினாள். அவன் சுருண்டு எழ, மீண்டும் எத்தினாள். “ஆந்திராக் காரங்கிட்ட எங்கிட்னிய விக்கிறப்போ பொண்டாட்டின்னு தெரியல, இப்பத் தெரியுதோ?” அவள் ஆங்காரமெடுத்துக் கத்த கூட்டம் சலனத்துடன் இவளைப் பார்த்தது. “பொண்டாட்டியாம் பொண்டாட்டி த்தூ…” துப்பிவிட்டு இவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கூட்டிப் போனாள்.
அன்று இரவு நீண்ட நேரம் அவள் வயிற்றின் வலது புறத்தில் இருந்த ஆப்ரேசன் தழும்புகளை தடவிக் கொண்டிருந்தவன் எப்பொழுது உறங்கினோம் என்பது தெரியாமலேயே உறங்கிப் போனான். இந்த வீடு அடைசலான தெருவில் இருந்ததோடு முக்கால் வாசிக்கும் மேல் மார்வாடிகளே குடியிருந்ததால் யாரும் இவர்களைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவன் வேறு புதிய தொழிலைப் பற்றி யோசிக்க, எல்லாவற்றிற்கும் மூலதனம் தேவைப்பட்டது. அவள் எதைப்பற்றின கவலையும் இல்லாமல் அவனிடம் திருப்பதிக்கு கூட்டிப் போகச் சொல்லிக் கேட்டாள். அவளுக்கு எந்தவிதமான நம்பிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தராதவன் இரவு ஏற்பாடு செய்வதாக சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
விவரம் தெரிந்து இத்தனை வருடத்தில் இந்த மார்க்கெட்டை விட்டு அவன் அதிகம் விலகி இருந்ததில்லை. இப்பொழுது ஒவ்வொரு தினமும் அவன் அங்கிருந்து வெகு தொலைவிற்கு தூக்கி எறியப்பட்டுக் கொண்டிருந்தான். கிழவனைப் பார்க்கையில் ‘இப்படியானதொரு வாழ்வு இந்த வயதில் வேறு யாருக்குக் கிடைக்கும்? எனப் பொறாமையாய் இருந்தது. கிழவன் இவனிடம் ஆறுதலாக நலம் விசாரித்தான். சோத்துக்கடைக்காரி அடிக்கடி மாமா மாமா எனக் கூப்பிட்டது இவனுக்கு எரிச்சலாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. இப்போதைக்கு அவனுக்குத் தெரிந்த வழி பாயிடம் கொஞ்சம் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்பது மட்டுந்தான். சாப்பிட்டு முடித்து பாயைப் பார்க்க வந்தவனை மார்க்கெட் கட்டிடத்தின் இடதுபுற வாசலில் வைத்து நிறுத்தினான் டயானாவின் முதல் கணவன். அவன் முகத்தில் இப்பொழுது கோபத்தை மீறின வன்மம் இருந்தது. இவனை இழுத்து நெருக்கிப் பிடித்தான். “ஒழுங்கா பணத்த எடுத்து வைய்யி, அவள நீ என்னமோ பன்னிக்க, எனக்குப் பணம் வேணும்..” அவனிடம் இருந்து நகர எத்தனிக்கையில் கையை விட்டு அதிகம் வெளியே தெரியாத ஒரு கத்தியை இவன் இடுப்பில் சொருகி நிறுத்தி இருந்ததைக் கண்டான். இவனுக்கு அங்கிருந்து தப்பிப்பதற்கான எந்த சாத்தியங்களும் தெரியாமல் அவன் மூஞ்சியையே பார்த்துக் கொண்டு நின்றான். அந்த ஆளோடு இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டனர். நினைவடுக்குகளில் சின்ன அதிர்வுகள் எற்பட, அவர்கள் இரண்டு பேர்தான் ஒரேயொரு நாள் பொட்டலம் விற்றவர்கள் என்பது நினைவிற்கு வந்தது. பதற்றத்தோடு ஏதோ சொல்ல வாயெடுத்து திக்கி பின், “காலைல பத்து மணிக்குள்ள தந்திடறேன்..” என்றான். அவன் சொல்ல நினைத்து மறைத்த வார்த்தையைத் தெரிந்து கொள்ள டயானாவின் கணவன் நெருக்கிய பொழுது வாயை இறுக மூடிக் கொண்டான். இவன் வார்த்தைகளில் நம்பிக்கை அற்றவனாய் இன்னும் நெருக்கமாக கத்தியை வைத்து அவன் சிரிக்க, “சத்தியமா தந்திடறேன் நம்புப்பா…” என அழுதான்.
உடன் இருந்தவர்கள் அவன் காதில் ஏதோ சொல்ல, இவனைத் தள்ளிவிட்டு “காலைல நான் தேடி வரமாட்டேன், நீயே வந்து கொடுக்குற… சரியா?” சொல்லிவிட்டு அவர்கள் மூவரும் இருளுக்குள் நடந்து மறைந்தனர். கீழே விழுந்ததில் லேசாக அடிபட்டிருந்தது. பதட்ட மிகுதியில் மூத்திரம் இருக்கப் போனவனுக்கு எவ்வளவு முயன்றும் வராமல் சூடாக மஞ்சள் நிறத்தில் சில சொட்டுகள் மட்டும் வழிந்தன. வாய்விட்டு அழுதான்.
மார்க்கெட் ஓய்ந்து ஒவ்வொரு கடையாகப் பூட்டிக் கொண்டிருந்தனர். பாய் கடையில் ஆள் வரத்துக் குறைந்து விட்டிருந்தது. பக்கத்து வீடென்பதால் சேர்ந்து போய் விடலாமென பாய்தான் அவனை உட்காரச் சொல்லி இருந்தார். அவனுக்கு பணம் பற்றின எதிர்பார்ப்பில் மெல்ல மெல்ல நினைவு மங்கிப் போனது. நம்பிக்கையானது எதையும் அச்சமயம் நினைக்க முடியாமல் எழுந்து வெளியே நடந்து கொடுத்தான். இவனைக் கூப்பிட்டுக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளச் சொன்னவர் பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாகப் போனார். பணத்திற்கு இப்பொழுது கை கால்கள் முளைத்தன. அதன் முகம் சாத்தானின் கோரத்துடன் இப்பொழுது அவனை ஆக்கிரமித்து இருந்தது. அந்த முகம் அவனை எல்லாமும் செய்யச் சொன்னது.
பாய் திரும்பி கடைக்கு வரும்போது இவன் அங்கு இருக்கவில்லை. கல்லா உடைந்து ஒரு காலிச் சிரிப்புடன் கிடக்க, அவரின் சிறிய சேமிப்பு, வசூல் அவ்வளவும் களவாடப்பட்டிருந்தது. திருடுகிற அவ்வளவு பேரும் தடயங்களை விட்டுச் செல்லக்கூடாதென்கிற தீர்மானமான கவனத்திலேயே ஒவ்வொரு முறையும் தன்னுடைய காலடித் தடங்கள் உட்பட பெருந் தடயங்களையும் ஊர் பார்க்க விட்டுச் செல்கிறார்கள். பாய்க்குத் தடயம் கிடைக்க மிகச் சில நிமிடங்களே போதுமானதாய் இருந்தது. இங்கு நடந்த எந்த அசம்பாவிதங்களைப் பற்றின சின்னதொரு தகவல்களும் இன்றி அன்றைய தினம் வேகமாக மார்க்கெட்டில் இருந்து விடைபெற்றுச் சென்று கொண்டிருந்தது. டயானாவின் இருப்பு குறித்த நம்பிக்கை இருந்ததால் அவசரமாக வீட்டுக்குச் சென்ற பாய்க்கு காலியான வீட்டை மட்டுமே அவள் பதிலாய் வைத்திருந்தாள். இப்படியான ஒருவன் இருந்ததற்கான எந்த தடயங்களும் இன்றி அடுத்த நாள் காலையில் புதிதாக ஒருவன் நிறைய கண்ணாடிகளையும் செண்ட் பாட்டில்களையும் தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டு கொஞ்சம் அழகான வார்த்தைகளோடு விற்றுக் கொண்டிருந்தான். உண்மைதான், பழையதை புதிதாக மாற்றுவதற்கு அதிகபட்சமாய்த் தேவைப்படுவதெல்லாம் கொஞ்சம் அழகான வார்த்தைகள் மட்டுந்தான்.