ரெண்டாம் ஆட்டம்
- லக்ஷ்மி சரவணகுமார்

- 4 days ago
- 1 min read

ரெண்டாம் ஆட்டம்
லஷ்மி சரவணக்குமார்
நாவல்
விகடன் பிரசுரம்
ஜனவரி 2022
பக்கம் 432
விலை 650
1960 களுக்குப் பிறகு மதுரை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது, மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்கள் எப்படி மதுரையை நகரமாக மாற்றுகின்றன, அதற்காக அந்த கிராம மக்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்து மதுரையை எவ்வாறு பெருநகரமாக்கி மக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது என்ற அடிப்படையில் இக்கதை எளிய மக்களின் வாழ்வியலை, எளிய மக்களின் வலியை, பழிக்குப் பழிவாங்கும் உணர்வை, துரோகத்தை, வஞ்சகத்தை நமக்குள் கடத்துகிறது.
1960 க்குப் பிறகான தமிழக அரசியல் களத்தை அடிப்படையாக வைத்து பின்னப்பட்டுள்ள கதையில் வஞ்சகம் எவ்வாறெல்லாம் மனித மனங்களுக்குள் ஊடுருவி பழிதீர்க்க பார்க்கிறது என்பதை நமக்குள் கடத்துகிறது.ஒரு கொலை எவ்வாறெல்லாம் அடுத்தடுத்த கொலைகளை அரங்கேற்றுகிறது என்பதை அத்தியாயத்துக்கு அத்தியாயம் விறுவிறுப்புடன் எடுத்து நகர்கிறது கதை.
கதையின் மையம் என்று எடுத்துக்கொண்டால் போதைப்பொருள் கடத்தல் என்ற அடிப்படையில் அதை ஒரு தொழிலாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் யாரெல்லாம் அதை தனது ஏரியாவாக பிரித்து அந்தந்த பகுதிகளுக்கு பெரிய தலைகளாக உருமாறுகிறார்கள், அரசியல் எவ்வாறெல்லாம் அவர்களுக்கு உதவி செய்கிறது, சந்தையை எவ்வாறு தங்களுக்கான தொழில்களமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் கதை நகர்கிறது.
கதை நாயகன் என்றோ கதை நாயகி என்றோ யாரையும் இதில் நாம் குறிப்பிட முடியாது. தோன்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுப்புது ஆட்களாக உருவாகி பெரிய தலைகளாக உருமாறி வஞ்சகத்தால் காணாமல் போகிறார்கள். இதில் தமிழக அரசியல் களமும் இடையே பின்னப்பட்டு அரசியலும் அதிகாரமும் கீழ்த்தட்டு மக்களை எவ்வாறெல்லாம் திசை மாற்றுகின்றது, அதன் காரணமாக அவர்கள் எவ்வாறு தங்களுக்கு ஏற்படும் பகையைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது.
வாசிக்கும் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் இக்கதை அடித்தட்டு மக்களின் வலியை ஆழமாக சொல்கிறது.
இளையவன் சிவா - மே 19 - 2022



