தென்னிந்தியாவில் மேற்குமலை அடிவாரத்தில் மானூத்துக் கிராமத்தைத் தாய்வழியாகவும் அதே மலையடிவாரத்தின் இன்னொரு கிராமமான பழையூரினை தந்தைவழியாகவும் பூர்வீகமாகக் கொண்ட எனக்கு இந்தியா என்னும் நாடு எங்கு தொடங்கி எங்கெல்லாம் நீண்டிருக்கிறது என்பதைக் குறித்த கற்பனைகள் சிறுவயதில் ஏராளமாய் இருந்ததுண்டு. நாட்டுப்பண், நாட்டுப்பற்று, தேசிய சாரணர் படை, இந்திய அஞ்சல், இந்திய ரயில்வே என ஒவ்வொரு நாளும் எமது அன்றாடச் செயல்களின் ஒரு அங்கமாக நான் இந்தத் தேசத்தவன் என அடையாளப்படுத்தப் பட்டுக்கொண்டே இருந்தாலும் நான் எப்போது முழுமையாக இந்தத் தேசத்தவனாகிறேன். ஒரு வயதிற்குப்பின் வாக்களிப்பதன் மூலம் நான் இந்தியக் குடிமகனாகிவிடுகிறேனா, இந்திய அடையாள அட்டைகளும் கடவுச்சீட்டும் என்னை இந்தத் தேசத்து மனிதனாக்குகிறதா? மொழியாலும் கலாச்சாரத்தாலும் வாழ்க்கை முறையாலும் எனக்கு அருகிலிருக்கும் மாநிலத்தவருடனே ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் ராஜஸ்தானத்துப் பாலைவனங்களிலும் மத்திய பிரதேசத்தின் உக்கிரமான வெயில் நிரம்பிய சம்பல் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுற்றி வருகையில் உடல் எதிர்கொள்ளும் வாதைகளையெல்லாம் மீறி நான் இன்னும் பாதுகாப்பாக இருக்கிறேன், நான் இன்னும் எனது எல்லைக்குள்தான் இருக்கிறேன், ஏதோவொன்று இவர்களையும் என்னையும் இன்னும் இணைத்திருக்கிறது என்று என்னச் செய்வது என்ன? இந்தியன் என்னும் அடையாளமா?
நிச்சயமாக இவை மட்டுமே இல்லை.
இந்த தேச முழுமைக்குமான கனவை நம்பிக்கைகளை தொன்மங்களை இவர்களோடு சேர்ந்து நானும் நம்புகிறவனாகவும் அதைத் தெரிந்துகொள்கிறவனாகவும் இருக்கிறேன். இந்தத் தொன்மங்களும் நம்பிக்கைகளும் தான் மொழி தெரியாத இந்திய மாநிலங்களில் எந்த வேறுபாடுகளுமில்லாமல் என்னை அந்த நிலத்துக்காரர்களோடு சடுதியில் பிணைக்கக் காரணமாகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னால் ரிஷிகேஷுக்கு பயணம் செய்தேன். தில்லியிலிருந்து மாலை பேருந்தேறி நள்ளிரவு ரிஷிகேஷ் சென்றடைந்தபோது கடுங்குளிர். நான் முன் பதிவு செய்திருந்த அறை அடுத்தநாள் காலை பணிரெண்டு மணிக்குத்தான் கிடைக்கும் அந்த ஹோட்டலில் வேறு அறை இல்லை என்று விடுதியிலிருந்தவர் சொல்லிவிட்டார். ஐந்து டிகிரி குளிரில் நான் ஒதுங்க ஒரு இடம் தேட வேண்டும். பேருந்து நிலையத்திலிருந்து என்னை ஆட்டோவில் அழைத்துவந்தவர் அருகிலிருந்த இன்னொரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு ஹிந்தி தெரியாது, ஆனாலும் நாங்கள் உரையாடினோம். அருகிலிருந்து இன்னொரு விடுதியில் எனக்காகப் பேசி அந்த அகால வேளையில் ஒரு அறைகிடைக்க வழி செய்து கொடுத்தார். நான் நன்றி சொல்லி அனுப்பி வைத்தபோது ‘இங்க அறை இல்லன்னு சொல்லியிருந்தான்னா நான் என் வீட்டுக்கே கூட்டிட்டுப் போயிருப்பேன்’ என்று சொன்னபோது ஒரு மனிதனை சந்தித்ததும் எது உடனடியாக நம்பவைக்கிறது என ஆச்சர்யப்பட்டேன். இந்தியாவின் புராதன நகரங்களில் யாத்ரீகர்கள் எப்பொழுதுமே மதிப்புடனும் பிரியத்துடனுமே நடத்தப்படுகிறார்கள்.
சீர்ஷேந்து முகோபாத்யாய் வங்கமொழியின் மாபெரும் எழுத்தாளார். கரையான், அத்தைக்கு மரணமில்லை என்னும் அவரது இரண்டு நாவல்கள் தமிழில் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. இரண்டுமே மகத்தானவை. அதிலும் அத்தைக்கு மரணமில்லை என்ற நாவல் புதிதாக நாவல் எழுத விரும்புகிற ஒவ்வொருவரும் ஒரு பாடமாக படிக்க வேண்டியது. நூற்றம்பைது பக்கங்களுக்குள் எழுதப்பட்ட ஒரு மேஜிக் அந்த நாவல். அந்த எழுத்தாளரின் பயண நூல் இது. உண்மையில் இதனை பயண நூல் என்று மட்டும் சொல்லிவிடமுடியுமா என்கிற கேள்வி இப்பொழுது எழுகிறது. இந்த நூல் எழுதப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. சமீபமாக தமிழில் வெளியாகியிருக்கிறது. ராமன் வனவாசம் போன வழி – ஒரு தேடல். அயோத்தியா என்கிற ஊர் இன்றைய இந்திய அரசியலில் எத்தனை முக்கியமானதென்பதை நாம் அறியாமலில்லை. ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான வேலைகள் துவங்கப் போகின்றன. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகக் கூட இந்த கோவில் கட்டும் வேலைகளை நாம் கருத முடியும். ஏனெனில் இந்த வேலைகளை முன்னெடுக்கும் வலதுசாரிகளின் கடந்தகால வன்முறை வரலாறுகள் அப்படி. இப்படியான சூழலில் சீர்ஷேந்து மாதிரியான சிறந்த எழுத்தாளர் ஒருவர் ராமனின் வனவாசம் குறித்த பயண நூலை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?
வங்காளியான சீர்ஷேந்து இந்தப் பயணத்தை ராமநவமியை முன்னிட்டு அயோத்தியிலிருந்தே துவங்குகிறார். அயோத்தியில் துவங்கி அலஹாபாத் வழியாக சித்திரக்கூடத்தில் முடிக்கிறார். இந்தப் பயணத்தினூடாக அவர் இந்திய நகரங்களில் உறைந்து கிடக்கும் தொன்மையை, இந்த மனிதர்கள் கதைகளின் வழியாகவும் நம்பிக்கைகளின் வழியாகவும் காப்பாற்றி வைத்திருக்கும் பழமையை நமக்கு அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார். இந்த நாவல் பேசவிழையும் அரசியலைப் பிரித்துப் பார்த்தால் நமக்கு ஏராளமான முரண்களும் சர்ச்சைகளும் வரும். வங்காளிகளுக்கு கிருஷ்ணரின் மீது இருக்கும் பிடிப்பைப் போல் ராமரின் மீது பிடிப்பில்லை என அவர் கவலை கொள்வதிலிருந்து துவங்கி மறைமுகமாக ராமராஜ்யம் தான் இந்தியர்களுக்கான விடுதலை என எழுதுகிற இடம் வரை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத இடங்களுண்டு.
இறுதிப்பகுதியில் சித்திரக்கூடத்தின் விடுதியில் தனிமையில் அவர் பேசிக்கொள்வதாக இப்படி வருகிறது. ‘விருப்பு வெறுப்பற்ற அரசனே, உன் நாட்டைப்பார், நினைவு தெரிந்த நாளிலிருந்தே ராமராஜ்யம் என்ற கனவுடனேயே நாங்கள் வளர்ந்திருக்கிறோம். எங்கள் பார்வையை பாழாக்கிய ஒரு கட்டியாக மாறிப்போய்விட்ட அந்தக் கனவோடே நாங்கள் இறக்கவும் போகிறோம். இந்தப் பகல் கனவில் நாங்கள் ஆழ்ந்திருக்கும் வேளையில் எங்கள் உடலையும் உணர்வுகளையும் அடையாளங்களையும் இந்தியாவின் கழுகுகள் கொத்திக்கொண்டிருப்பதைப் பார்.’ என தொடரும் பத்தி முழுக்க முழுக்க அவருக்குள் இருக்கும் ராமராஜ்ய கனவையே பிரதிபலித்தாலும் இதன் காரணமாக மட்டுமே இந்த நூலை புறக்கணிக்க முடியாதளவிற்கான வேறு சில முக்கியப் பகுதிகளும் இதில் உண்டு.
மிக முக்கியமாக வால்மீகி ராமாயனத்திற்கு உள்ளர்த்தமாக விரியும் சில விசாரணைகள் நமக்குப் புதிய பார்வையைத் தருகின்றன. சித்திரக்கூட மலைக்கு ராமனைத் தேடிவரும் பரதன் ஏன் ராமனிடம் அவரது பாதணிகளை மட்டும் கேட்டு வாங்கிச் செல்கிறான். சீர்ஷேந்து தங்கியிருக்கும் விடுதியின் மேனேஜர் அவரிடம் விளையாட்டாகச் சொல்கிறார். ‘ஒரு ஐந்து நிமிடம் அந்த மலையில் நீங்கள் செருப்பில்லாமல் அந்த மலையில் நடந்து பாருங்கள். யதார்த்தம் புரியுமென… அந்தரங்கமாக பரதனுக்கு ஆட்சியமைப்பதில் இருந்த ஆசைகளை வெவ்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார். இன்னொரு இடத்தில் ‘வனவாசம் போவேன் என்பதில் ராமன் உறுதியாக இருந்ததற்கு தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உறுதி மட்டுமே காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நற்சிந்தனை கொண்ட அந்த இளைஞன், கைகேயியின் பேராசையையும் அரியணைமேல் பரதனுக்கிருந்த ரகசிய ஆசையையும் உள்ளூர உணர்ந்தே இந்த சிறுமையான பதவிமோகச் சண்டையிலிருந்து தூர விலகி நிற்க முடிவுசெய்தான்.’ என்றும் எழுதுகிறார்.
இந்திய மக்களை அவர்களின் நம்பிக்கைகளின் வழியாக மட்டுமே நாம் புரிந்துகொள்ள முடியும். பிற்போக்குத்தனமானவையாய் நமக்குத் தோன்றும் எல்லாவற்றையும் எதன் அடிப்படையில் நம்புகிறார்கள். ஏன் அவர்களுக்கு ராமன் என்கிற பிம்பம் என்றென்றைக்குமானதாக இருக்கிறது. ஜெய் ஸ்ரீராம் என்கிற கோஷங்கள் ஒரு புறம் அச்சுறுத்தினாலும் இன்னொரு புறம் பெருங்கூட்டம் அந்தக் கோஷத்தின் பின்னால் திரள்வதன் உளவியலையும் நாம் தேடிக் கண்டுபிடுத்துதான் ஆகவேண்டும். ராமாயணம் இந்தியாவில் மட்டுமில்லாமல் தாய்லாந்து கம்போடியா இந்தோனேஷியா நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களின் இன்றளவும் கதைகளாகப் புழக்கத்தில் உள்ளன. கம்போடியாவின் ஷ்யாம் ரீப்பில் ஒரு மாலை நேரக் காட்சி நான் பார்த்திருக்கிறேன். நம் ஊரில் எப்படி ராமாயணக் கூத்து நாள்கணக்கில் நடக்கிறது அதுபோல் அங்கும் பகுதி பகுதியாக நடைபெறுவதுண்டு. இந்தப் பரவலாக்கம் எதனால் நிகழ்ந்தது? புத்தக ஜாதகக் கதைகளுக்கும் ராமாயணத்திற்குமான தொடர்ச்சி என்ன என்கிற சில புரிதல்களையும் தனது பயணத்தினூடாக சீர்ஷேந்து நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.
மற்ற இந்திய காவிய உருவங்களிலிருந்து ராமன் என்கிற பிம்பம் ஏன் பிரம்மாண்டமாக இருக்கிறதென்கிற கேள்வி நமக்கு வரும். இந்த நூலில் தனது மனப்பதிவாக சீர்ஷேந்து இப்படி எழுதுகிறார். ‘மக்கள் மனதில் அவன் இடம் பிடித்ததற்குக் காரணம், அவன் ஒரு இளவர்சன் என்பதனால் அல்ல, விஷ்ணுவின் அவதாரம் என்பதனால் அல்ல, பிறரின் சுயநலத்துக்குப் பலிகடா ஆனவன் என்பதனாலும் அல்ல. அவனோடு பிறந்த தலைமைப் பண்புகள் தான் காரணம். ராமன் என்று ஒருவன் இருந்தானா இல்லை அவன் கவியின் கற்பனைப் படைப்பா என்ற சந்தேகங்கள் எவையானாலும் சரி, ராமாயணத்தின் உத்தரகாண்டம் மறைமுகமான நோக்கங்களைக் கொண்டது எனக் குற்றம்சாட்டப்பட்டாலும் சரி, ராமனது என்ன குணத்திற்காக இன்று வட இந்தியாவில் ராம நாமம் எதிரொலிக்கிறதோ, அதே குணம்தான் அவனது காலத்தில் சாமானியக் குடிகளின் மனதில் அவனது பெயர் நீங்கா இடம்பெறக் காரணமாயிருந்தது.’
தொன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த சிறிய நூல் நமக்குள் ஏராளமான கேள்விகளை உருவாக்குகிறது. வரலாறு என்பதற்கான எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லாத ஒரு புனைவை வரலாறாகவே நம்பித் துவங்குகிற பயணத்தில் வால்மீகிக்கு ராமாயனத்தை எழுதுவதில் இருந்த பெரும் ஞானத்தில் முக்கியமானது அவருக்கு இந்திய நிலப்பகுதிகள் குறித்து இருந்த அறிவு என்பதைக் குறிப்பிடுகிறார். ராமாயணம் எழுதுவதற்கு முன்னால் வால்மீகி சம்பல் பள்ளத்தாக்கில் பெரும் கொள்ளையனாக இருந்தவர். ராமாயனத்தில் வால்மீகி குறிப்பிடும் எல்லா நிலப்பகுதிகளும் இன்றைக்கும் இருக்கின்றன. நதியின் பாதைகளிலும் மலைச் சிகரங்களின் வெம்மையிலும் எந்தவொரு மாற்றமுமில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் எழுதப்பட்டது என உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் தோராயமாக இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்பது அனுமானம். உள்ளபடியே ராமாயணம் மிகச் சிறந்த பிரதி. ஆனால் இதனை வரலாறாக மாற்றுவதற்கான குரல் உயரும் போதுதான் நமக்கு அச்சமும் தயுக்கமும் வருகிறது.
உள்ளபடியே ஸ்ரீராமர் என்று ஒருவர் இருந்திருந்தால் அவர் இன்றைக்கு இத்தனை பெரிய பிம்பமாக உயர்ந்திருக்க வாய்ப்பில்லை. காவியங்களே காலம் கடந்தவையாய் இருக்கின்றன. மனிதன் எதனையெல்லாம் தன் வாழ்வில் பெற முடியவில்லையோ எதனையெல்லாம் கனவாகக் கொள்கிறானோ அதனைதான் காவியங்களில் வரும் நாயகர்களின் மூலமாக நிறைவேற்றிக் கொள்கிறான். ராமன் என்கிற பிம்பம். நல்லவனும் தலைமைப் பண்புமிக்கவனும் தியாக குணம் கொண்டவனும் ஒழுக்கசீலனுமான ஒருவன் எல்லா மனிதனுக்கும் எல்லா காலத்திற்குமான ஒரு கனவு. அதனாலேயே நிறைவேற முடியாத அந்தக் கனவை அழிக்காமல் பாதுகாத்து வருகிறோம். ராமாயணத்தின் கிளைக்கதைகளும் இதற்குள் பேசப்படும் மற்ற செய்திகளும் நமக்கு வாழ்வைப் புரிந்துகொள்வதற்கான புதிய திறப்புகளைத் தருகின்றன. நமக்குக் கிடைக்காத ஒரு வாழ்வை நினைத்து ஏங்கக்கூடிய லட்சிய வேட்கை என்றும் வடியாத ஒரு பிரம்மாண்டமென ராமயணத்தைக் குறிப்பிடலாம்.
இந்த நூலை எழுதிய காலகட்டத்தில் சீர்ஷேந்துவின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் எதற்காக இந்த நூலை அவர் எழுதியிருக் கூடுமென்கிற கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பெரும்பான்மை இந்தியர்களின் மனங்களைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு நம்பிக்கையின் மீது ஒரு எழுத்தாளன் எப்படியெல்லாம் பயணிக்க முடியும் என்பதைக் கொண்டு நாம் மதிப்பிடுதல் அவசியம். அழுக்கடைந்த வீதிகளிலும், இரைச்சலான பேருந்துகளிலும் வசதிகளற்ற பழைய விடுதிகளிலும் தன்னை வருத்திக் கொண்டு எழுத்தாளன் தேடிச்செல்வது தனக்கான கதைகளை மட்டுமேயல்ல. ஒரு சமூகம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், அவர்களது ஏமாற்றங்கள், தோல்விகள், எத்தனை ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் தீராத வறுமை. இந்திய முகங்களில் உறைந்துபோன பக்தி…. யோசித்துப் பார்க்கிறேன். எனது பதினேழாவது வயதில் வேலைக்காக வட மாநிலங்களில் சில மாதங்கள் இருந்த போதிலும் அதன்பிற்கு ஒரு எழுத்தாளனாக இந்த பத்துப் பதினைந்து வருடங்களில் இந்தியப் பயணங்களில் நான் கண்ட மனித முகங்களில் உறைந்து கிடக்கும் இந்த பக்தி… கடவுள் நம்பிக்கைகளை ஏன் வாழ்வின் முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கிறார்கள்.? கண்மூடித்தனமான இந்தப் பிடிப்புதான் வலதுசாரிகளின் மூலதனம்.
இந்த நூலை வாசித்தபோது எனக்கு வேறு சில புத்தகங்கள் உடனடியாக நினைவிற்கு வந்தன. வெர்னர் ஹெர்சாக்கின் of walking in ice , ஹெம்மிங்வேயின் death in the afternoon , காகா காலேல்கரின் ஜீவன் லீலா இந்த மூன்றுமே சிறப்பான நூல்கள். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சாகித்திய அகதெமி அரங்கிலிருந்து இந்த நூலை ஒரு நூறு பிரதிகள் வாங்கி நண்பர்கள் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். சாகித்திய அகதெமியில் பழைய பதிப்பென்பதால் இந்தப் புத்தகத்தைத் தீர்த்துவிட பத்து ரூபாய் விலையில் விற்றுக்கொண்டிருந்தார்கள். நாஞ்சில் நாடன் வாங்கிய நூறு பிரதிகளில் ஒன்று எனக்கும் கிடைத்தது. காகா காலேல்கர் குஜராத்திய மொழியின் சிறந்த எழுத்தாளர். காந்தியடிகளோடு நெருங்கிப் பழகியவர். இந்திய தேசம் முழுக்கப் பயணித்து அதன் முக்கிய நதிகள் துவங்கும் இடத்திலிருந்து கடலில் சென்று சேரும் இடம் வரை பயணித்து எழுதியிருப்பார். வரலாறு நம்பிக்கைகள் என அந்த நதியின் பயணங்கள் ஒவ்வொன்றுமே மகத்தான வாசிப்பனுபவம் கொண்டவை. சென்னையின் அடையாறு கழிமுகம் பற்றியும் அதில் முக்கியமான குறிப்புகள் உண்டு. ஒரு எழுத்தாளன் என்னவிதமான பயண நூல்கள் எழுதவேண்டும், எதற்காக பயண நூல்கள் எழுத வேண்டுமென்பதற்கு ஜீவன் லீலா முக்கியமான உதாரணம்.
ஹெர்சாக்கின் நூல் நாம் நம்பவே முடியாத ஒரு ஆச்சர்யம். அறுபது பக்கங்களுக்குள் அடங்கிவிடுகிற ஒரு டைரிக் குறிப்பு. 1974 ம் வருடத்தில் பாரிஸ் நகரத்தில் வசிக்கும் ஹெர்சாக்கின் தோழியான lotte h. Eisner நோய்வாய்ப் படுக்கையில் இருப்பதாக செய்தி கிடைத்ததும் உடனடியாக ஜெர்மனியின் ம்யூனிச்சில் இருக்கும் தனது வீட்டிலிருந்து ஹெர்சாக் கிளம்புகிறார். ஆனால் அவருக்கு ஒரு யோசனை. நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தோழிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. என்ன செய்யலாம்? நம்பிக்கையா அல்லது உள்ளுணர்வா ஏதோவொன்று உந்தித்தள்ள ம்யூனிச்சிலிருந்து நடந்தே பாரிஸ் செல்ல முடிவெடுக்கிறார். கடும் குளிர்காலத்தில் பதிமூன்று நாட்கள் நடைபயணமாக அவர் பாரிஸ் வந்த போது அவர் கண்ட ஒவ்வொன்றைக் குறித்தும் நுட்பமான விவரங்களைப் பதிவு செய்துள்ளார். அவர் நம்பிக்கைப் பொய்க்காதபடி அவரது தோழி நோயிலிருந்து மீண்டார். மனிதன் நம்பிக்கைகளுக்கு மகத்தான வலிமை இருக்கிறதென்பதை நமக்கு உணர்த்தக் கூடிய நூல்.
ஒரு கேள்வியையோ விவாதத்தையோ அல்லது தனது மனதில் எழும் குழப்பங்களையோ தனக்கேயான பிரத்யேக மொழியில் வெளிப்படுத்துவதுதான் எழுத்தாளனின் பணி. அந்தப் பிரதியோடு நாம் உடன்படலாம் அலல்து முரண்படலாம். ஆனால் ஒரு பிரதியின் வழியாக எழுப்பப்படும் கேள்விகளையும் முரண்களையும் நாம் பொருட்படுத்த வேண்டும். நான் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டதுபோல் இன்றைக்கு அயோத்தியா என்பது வெறுமனே ஒரு ஊரின் பெயரல்ல, அது வலதுசாரிகளின் அடையாளமாக மாறியிருக்கிறது. இப்படியான சூழலில் ராமராஜ்ய கனவோடு எழுதப்பட்ட ஒரு நூலை நாம் வாசிக்கத்தான் வேண்டுமா என்று கேட்டால், அவசியம் வாசிக்க வேண்டும். இந்திய மனங்களுக்குள்ளிருக்கும் நம்பிக்கைகள் எத்தனை தீவிரமானவை, ஆழமானவை என்பதைப் புரிந்துகொண்டால்தான் அந்த நம்பிக்கைகளை முதலீடாகக் கொண்டு ஒரு பெரும் அரசியல் சக்தி எழுந்து வந்திருப்பதன் ஆபத்தினை நாம் புரிந்துகொள்வதோடு மக்களுக்கு புதிய மொழியில் புரியும்படியாக எழுதவும் முடியும்.
Comments