ரூஹ் நாவல் ஏற்படுத்திய அதிர்வு அலாதியானது. மனதின் அடியாழத்தில் ஏதோ வதைத்துக் கொண்டே இருக்கிறது . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அமேசான் கிண்டிலில் ரூஹ் நாவலை வாசித்தேன். ரூஹ் புத்தகமாக என்னோடு இருந்திட வேண்டும் என்பது பேரவா.....
ரூஹின் தொடக்கப் புள்ளி அற்புதமானது. தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே......... நிபந்தனை அற்ற அன்பை பேசுகிறது ரூஹ். பிரார்த்தனைகள் நிறைந்த மனிதர்களைக் கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.
வெளிச்சத்தை இருள் தின்ன கனவுகளை சேமிக்கிறேன். சொற்கள் இசையால் நிரம்புகின்றன. ஆன்மாக்கள் குளிர்ந்து ஒளிர்கின்றன.லயிப்பில் ஓர்மைக் கொள்கின்றன.
மரணமும் காதலும் ஒரே நேரத்தில் கதவு தட்டியதொரு சந்தர்ப்பத்தில் காதலை அவளுக்கு பரிசளித்து விட்டு சாவை எதிர்க் கொள்ளத் துணிந்தவன் ஜோதி..
அன்பின் ரேகைகளுக்குள் சிறையாகிறாள் ராபியா.நிகாஹ் என்பது ஒரு பெண்ணின் புறவயமான அடையாளத்தை வேண்டுமானால் மாற்றலாம் ஆனால் அவள் எப்போதும் தனித்துவமானவளாகவே தகிக்கிறாள் ... பயப்படத்துவங்கும் மனிதன் அதிலிருந்து மீள்வதற்குப் பதிலாக ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கென தனது பயங்களை அதிகமாக்கிக் கொள்கின்றான்.தனித்து விடப் படும் மனிதன் கைவிடப் படுவதில்லை.ஒரு மனிதன் தன்னைத் தொலைத்து தான் யாரென கண்டு கொள்ளும் தருணத்தில் பிரபஞ்சம் மீட்சி கொள்கின்றது.
துயரப்படுவதற்காக மனிதர்கள் பிறப்பெடுப்பதில்லை.
சொற்கள் தான் உலகம் சொற்கள் தான் வாழ்க்கை சொற்கள் தான் விடுதலை சொற்கள் தான் மனித வாழ்வின் அடிப்படை ஆன்மா....
எந்த ஒன்றிலிருந்தாவது விடுபட வேண்டுமென மனம் தவிக்கின்ற போது பிறிதொன்றின் மீதான விருப்பம் அனிச்சையாய் உருவாகி விடுகிறது. ஒரு சொல், பொருள், அல்லது மனிதன் என விருப்பங்கள் முடிவற்றவை. விருப்பங்களுக்கு எதிராக மனிதன் தொடர்ந்து போரிட்டு ஜெயிக்க விரும்புகிறான். ஆனாலும் வாழ்நாள் முழுக்க தோல்வியை மட்டுமே சந்திக்க நேரும் போராட்டம்.துயர் கொண்ட மனதில் காதல் தங்குவதில்லை. குறைந்த பட்சம் புன்னகைக்க வேண்டும்.
வெறுப்பதை விட ஒருவரை நேசித்தல் எளிது. தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது. ஆனாலும் விருப்பமானவர்களை வெறுத்து ஒதுக்கும் கணங்கள் போல் துயரமானது வேறில்லை.
ரூஹ் நெடுக சிதறி இருக்கும் பேரன்பின் மின்மினிகள் இருட்டினூடே நான் காண விழையும் ஒரு உலகத்தை பரிசளிக்கிறது. மரகதப் பச்சைக் கல் ரூஹில் ஒளிர்கிறது. ஆன்மீகத்தின் உயிர்ப்போடு வலி நிறைந்த வெளிப்பாடு.
மிஸ்ரா ஜப்பார்
Comments