top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் வாசிப்பு அனுபவம் – வளன்படிக்கும் எல்லாக் கதைகளும் நம்முடன் பயணிப்பதில்லை. நம்முடன் பயணிக்கும் சில கதைகள் புனைவு என்னும் எல்லைக்கோட்டை அழித்துவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் நெருங்கிவிடுகின்றன. வாசிக்கும் பழக்கம் மிகவும் நலிவுற்று வரும் சூழலில் எழுதுவது என்பதே அயற்சியான செயல். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. Visual Media ஒருவிதமான போதையில் நம்மை வைத்திருக்கிறது. இதற்கு ஒரு பார்வையாளன் செய்ய வேண்டியதெல்லாம் தனக்கான நேரத்தை ஒரு திரையின் முன் செலவிட வேண்டும். வாசித்தலுடன் ஒப்பிடும் போது இதில் சுவாரசியங்கள் ஏதுமில்லை. வாசித்தலில் பல சாகசங்கள் இருக்கிறது. நேரத்தை செலவிட வேண்டும். வாசிக்கும் சமயம் கதையில் வரும் காட்சிகளை நீங்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டும். இப்படி நிறைய இருக்கிறது. என்னுடைய குறைந்த அனுபவத்தில் இப்படிப் பல புத்தகங்களை வாசித்திருக்கிறேன்.


சில புத்தகங்கள் தூங்கவிடாது. தூக்கமில்லா இரவு ஒன்றில் கி.ராவின் ‘கோபல்ல கிராமம்’ வாசிக்க துவங்கினேன். சில பக்கங்கள் படித்தவுடன் தூக்கம் கண்ணைக் கவ்வியது. ஆனால் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் வாசிக்கலாம்… இன்னும் கொஞ்சம் வாசிக்கலாம்… என்று நீண்ட வாசித்தலில் இரவு விடிந்திருந்தது. நானும் புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். பல வருடங்களுக்கு முன் படித்த அந்தக் கதை இன்னும் நினைவில் இருக்கிறது. குறிப்பாக கதையில் ஒரு கதாப்பாத்திரம் தயிர் சாப்பிடுவதைப் பற்றிய வர்ணனை வரும். முளைத்தயிர் எப்படி செய்ய வேண்டும் என்ற குறிப்பு இருக்கும். அது இன்னாள் வரை பசுமையாக இருக்கிறது. முன்பொருநாள் கி.ராவிடம் பேசிக்கொண்டிருந்த போதும் தயிர் பற்றியே வெகுநேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். அதேபோல Life of Pi நாவல் படித்துக்கொண்டிருந்த போது கடலில் உப்புக்காற்றில் அவதியுறும் பையின் நினைவாக இருந்து இருந்து எனக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.


எஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலில் ஓரிடத்தில் எருமை ஒன்று மேய்ந்துக்கொண்டிருக்கும். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் இன்றும் அது என் நினைவில் மேய்ந்துக்கொண்டேயிருக்கிறது. அசோகமித்ரனின் ‘கரைந்த நிழல்கள்’ இல் வரும் கதாப்பாத்திரம் முற்றத்தில் குளிக்கும் போது சோப்பு நழுவி அதில் மண்துகள்கள் ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்பவும் பயன்படுத்தும்போது மண்துகள் அவனது விலா அருகில் கீறும். இதை தட்டச்சு செய்யும்போது என்னால் அந்தக் கீறலை உணர முடிகிறது. இப்படியான சம்பவங்களால்தான் லக்ஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் பின்னப்பட்டிருக்கிறது. வெளிவந்த சமயம் லக்ஷ்மி சரவணகுமாரின் வாசகர்கள் ஆரவாரமாக இந்நாவலைக் கொண்டாடினார்கள். தமிழ்ச் சூழலில் ஒரு சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே இந்த luxury அமையும். நான் சற்றுப் பின்னரே இதனை வாசித்தேன். வாசித்தவுடன்தான் தெரிந்தது, அக்கொண்டாட்டங்கள் மிகச் சிறியவை. இன்னும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். தமிழ் வாசிக்கத் தெரிந்த அத்தனை இளைஞர்களும் வாசித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. இதைக் குறித்து எழுத வேண்டும் என்று வெகுநாட்களாகவே நினைத்திருந்தேன். உலகின் பழமையான இலக்கியங்கள் என்று நமக்குக் கிடைத்திருக்கும் பலவும் பயணத்தைக் குறித்தே இருக்கின்றன.


மனிதன் ஒரே இடத்தில் வாழ்வதில் உள்ள சுகங்களுக்குப் பழகிக்கொண்டாலும் சாகசங்களுடன் அதன் பொருட்டு நிகழும் இடப்பெயர்வுகளையும் நேரடியாகவோ ரகசியமாகவோ விரும்பிக்கொண்டிருக்கிறான். அப்படியான ஒரு பயணத்தின் கதையாக ‘ரூஹ்’ தொடங்குகிறது. விலை மதிக்க முடியாத பச்சை நிறக் கல் ஒன்று எளிய திருப்பயணிகளிடமிருந்து கடல் கொள்ளையர்களிடம் சென்று பிறகு ஒரு பேரரசனிடம் வந்தடைந்து பிறகு பொம்மலாட்டக் கலைஞன் ஒருவன் வழியாக வேறொரு இடத்தைச் சென்றடைகிறது. இதற்கு இணையாக ஜோதி லிங்கத்தின் கதை வளர்கிறது. ராபியா மனித உருவில் இருக்கும் தேவதை. அவளின் கதை இன்னொரு புறம். இவை யாவும் ஒரு புள்ளியில் வந்து சந்திக்கின்றன. அமெரிக்க விருந்துகளில் சாப்பாடு கொஞ்சமாக இருக்கும் உரையாடல்கள் மிகுந்திருக்கும். யாரேனும் என்னை விருந்துக்கு அழைத்தால் குறைந்தது இரண்டு மணி நேரமாவது செலவிட்டு என்னை நான் தயாரித்துக்கொள்வேன். பொதுவாக விளையாட்டு, சினிமா, புத்தகங்கள் என்றுதான் உரையாடல்கள் விரிவடையும். மதமும் அரசியலும் உணவு மேஜையில் பேசக்கூடாது என்று எழுதப்படாத விதியிருக்கிறது. எனக்கு அமெரிக்க விளையாட்டுகளில் ஆர்வமில்லை. எனவே சினிமா, இலக்கியம், ஓவியம் என்று உரையாடல் தொடர்ந்தால் எந்த தயக்கமும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பேன். அந்த உரையாடல்களில் பொதுவாக சில கேள்விகள் இருக்கும். உதாரணமாக சில க்ளாசிக் படங்களில் உங்களைக் கவர்ந்த கதாப்பாத்திரம் யார்? The Godfather படங்களில் உங்கள் மனம் கவர்ந்த கதாப்பாத்திரம் யார்? Game of Thrones தொடரில் உங்களுக்குப் பிடித்தமான கதாப்பாத்திரம் யார்? ஒவ்வொருவரும் ஒன்று சொன்ன பின் ஏன் உங்களுக்கு அந்த பாத்திரம் பிடித்திருந்தது என்று உரையாடல் தொடரும். அதேபோல இந்நாவலை படித்த பலரும் தன்னை இதில் ஒரு கதாப்பாத்திரமாக உணர்ந்தார்கள் என்று கூறினார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. நான் பல ஜோதி லிங்கங்களை என் வாழ்வில் சந்தித்திருக்கிறேன். ராபியா போன்ற பெண்களை சந்தித்திருக்கிறேன். புனைவோடு வாழ்வை ஒப்பிட வைப்பதுதான் இந்நாவலின் வெற்றியாகப் பார்க்கிறேன். இம்மாதிரியான படைப்புகளின் மீதான உரையாடல்கள் பரவலாக்கப்பட வேண்டும். ‘ரூஹ்’ என்னும் அந்த பச்சை நிறக் கல்லின் ஒளியை ஆசிரியர் எழுதும் சமயம் அதன் ஒளி நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இடத்தை நிரப்புவதை உணர முடியும். பல இதிகாசங்களில் இம்மாதிரியான பொருட்கள் வந்திருக்கும். The Hobbit படங்களில் (முதலில் நாவலாக எழுதப்பட்டது) வரும் ‘மலையின் இதயம்’ என்றழைக்கப்பட்ட Arkenstone வசீகரமானது. ஆனால் அதனோடு ஒரு சாபமும் இணைந்திருக்கிறது. ரூஹ் அப்படியானதே. இம்மாதிரியான விலைமதிப்பில்லா கற்கள் எப்படி உருவாகிறது என்று யோசித்துப் பாருங்கள்? பலகோடி வருடங்களாக வெப்பத்திலும் அழுத்ததிலும் இருக்கும் கார்பன் அல்லது மற்ற படிமங்கள் இப்படியாக உருமாறுகின்றன என்று அறிந்திருப்போம். அந்த இறுக்கங்கள்தான் மனிதர்களுக்கு வசீகரமாக இருக்கிறதா? இம்மாதிரியான கற்கள் வெளிவராத வரை மனிதர்கள் அமைதியில் வாழ்கிறார்கள். கண்டடைந்த பின் போர்களும் வன்முறைகளும் கணக்கின்றி நிகழ்கின்றன. தங்கள் அழகைக் காக்க குருதியபிஷேகம் கேட்கின்றன. எளிய ஒரு பொருளை பற்பல ஆண்டுகள் வதைக்கு உள்ளாக்கும்போது அதன் மதிப்பு உயர்கிறது என்றால் அதே கோட்பாட்டை மனித வாழ்வுக்கும் உட்படுத்திப் பார்க்க முடியுமா? மதங்கள் அதைத்தானே போதிக்கின்றன? இப்போது நீ துன்பப்பட்டால் இறந்த பின் சொர்கம். இப்படியான எளிய நம்பிக்கைகளின் வழியாகவே வாழ்வின் பெரும் அபத்தங்களைக் கடக்க முற்படுகிறோம். இப்படியான ஒரு பார்வையில் இக்கதையை அணுகும்போது ஜோதி லிங்கம் நமக்கு நெருக்கமானவனாக மாறிவிடுகிறான். வாழ்வின் அத்தனை சந்தர்ப்பங்களிலும் ஜோதி சோதனைக்கு உள்ளாகி இறுதியில் இன்ப துன்பங்களைக் கடந்த ஒரு நிலையை அடைகிறான். அபத்தங்களால் கட்டமைக்கப்படும் ஒரு வாழ்வுக்குள் இருந்துகொண்டு ஜோதியைப் புரிந்துகொள்ள நினைத்தால் நாமும் ஜோதிக்கு பைத்தியக்காரப் பட்டம் கட்டிவிடுவோம். ஆனால் ஜோதியை லக்ஷ்மி சரவணகுமாரின் கவிதை மொழியில் இனம் கண்டுகொள்ளும்போது நாமும் ஜோதியாக மாறிவிடுகிறோம்.


உலகத்தின் உன்னதமான காதல் கதைகள் என்று தஸ்தாயெவஸ்கியின் White Nights, செக்காவின் The Lady with the Dog, கோதேவின் The Sorrows of Young Werther சட்டென ஞாபகத்துக்கு வருகிறது. அதற்கு இணையான ஒரு காதல் கதையை ‘ரூஹ்’ சொல்கிறது. காதலின் தூய்மையைத் தூக்கிப் பிடித்து அதன் பாதகங்களையும் காட்டுகிறார் லஷ்மி. இதெல்லாம் நடக்காது என்று தெரிந்த பின்னும் துளிர்க்கும் அன்பை என்ன செய்வது? இது காதல்தானா? அன்பில் இவ்வளவு வன்முறைகள் அடங்கியிருக்கிறதா? இப்படியாக காதலின் அடுத்தடுத்த பரிமாணங்களை சொல்லிக்கொண்டே செல்கிறார் லஷ்மி. ‘ஒரு சொல்’ என்ற அத்தியாயத்தை எத்தனை முறை திருப்பி மீண்டும் படித்தேன் தெரியுமா? ஒவ்வொரு வாக்கியமும் கவிதை! நாவல் முழுவதுமே அப்படித்தான் என்றாலும் இவ்வொரு அத்தியாயம் பட்டை தீட்டப்பட்ட அந்த மரகதக் கல்லாகவே ஒளிர்கிறது. உலகளவில் காதல் என்னும் உணர்வு ஒளியிழந்து வருவதை உணர முடிகிறது. இவ்வாறு எதிர்நோக்கற்றுப் போகும் சமயங்களில் ‘ரூஹ்’ போன்ற படைப்புகள் நம்பிக்கையின் விண்மீனாக ஒளிர்கின்றன. ‘ரூஹ்’ எழுதப்பட்டு வாசிக்கப்படும் காலத்தையும் நாம் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஏற்கன்வே சொல்லியது போல வெப்பம், அழுத்தம் இதனுடன் பற்பல ஆண்டுகள் போராடி ஜொலிக்கும் ஆபரணக் கற்கள், தனிமை மரணம் கொள்ளைநோய் என்று இவ்வருடம் முழுவதும் போராடிய நமக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது. இந்த தனிமையின் காலத்தில் நாம் எவ்வளவோ சந்தித்துவிட்டோம். உடைந்துபோய் சூன்யத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்து அடுத்த அடியை எடுத்துவைக்கும் ஏதோ ஒரு நம்பிக்கையை – இறை நம்பிக்கையாளர்கள் ஆன்மீக பலம் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் – ‘ரூஹ்’ தருகிறது. இந்நாவலின் அடிநாதமாக இருப்பது ஆன்மீகம். நமது சித்தர் மரபையும் சூஃபி மரபையும் கொண்டு நம்பிக்கை அதைத் தொடர்ந்த தேடல் என்று தன் கிளைகளை விரித்துக்கொண்டே சொல்கிறது கதை. லக்ஷ்மி சரவணக்குமாரின் கதை சொல்லும் முறை எனக்கு மிகவும் விருப்பமானது. சம்பிரதாய கதை சொல்லும் முறையான தொடக்கம் – வளர்ச்சி – முடிவு என்று போகாமல் கதையின் போக்கை வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிட்டு கதை சொல்கிறார். சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நம் வாழ்க்கை இயங்குகிறது. இருபத்து எட்டு வருட என் வாழ்வை நான் திரும்பிப் பார்க்கையில் சின்ன சின்ன episodeஆகவே என் வாழ்வைக் கடந்திருக்கிறேன். அதிலிருக்கும் தொடர்ச்சிகள் நானாக கட்டமைத்ததாக இருக்கின்றன. இதையே தன் கதை சொல்லும் பாணியாக ஆசிரியர் தேர்ந்துள்ளார். இதன் வழியாக வாசகர்கள் கதையின் போக்குடன் பயணம் செய்ய முடிகிறது. கடைசியாகத் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வருகிறேன். பவ்லோ கொய்லோ வின் புகழ் பெற்ற நாவல் The Alchemist. இப்போது வரை உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுக்கொண்டே வருகிறது. தமிழில் ‘ரசவாதி’ என்ற பெயரில் வெளியானது. பல இயக்குநர்கள் இந்நாவலைப் படமாக்க விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் பவ்லோ கொய்லோ மறுத்துவிட்டார். அப்படி படமாக்கியிருந்தால் ‘ஹாரிபாட்டர்’, ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ படங்களுக்கு இணையாக இருந்திருக்கும். இதற்காக பல நிறுவனங்கள் பெரும் தொகையை ஆசிரியருக்கு தர முன் வந்த போதும் மறுத்துவிட்டார் (இன்னொரு முக்கியமான விஷயம் ‘ஹாரிபாட்டர்’, ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ நாவல் வாசித்த யாருக்கும் இந்நாவல்களை தழுவி வந்த திரைப்படங்கள் பிடிப்பதில்லை). இது குறித்து பவ்லோ கொய்லோவிடம் கேட்ட போது தன் நாவல்கள் வாசிப்பனுபவத்தை மையமாகக் கொண்டு எழுதப்படுபவை என்று கூறினார்.


வாசித்தல் வழியாக வாசகர்கள் கட்டமைக்கும் அற்புத உலகத்தை திரைப்படங்கள் ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றன என்றார். அதை நிரூபிப்பது போல அவரது படைப்புகளைத் தழுவி வந்த ஒருசில படங்கள் அவ்வளவு ஒன்றும் நன்றாக இல்லை. அதேபோல ‘ரூஹ்’ உங்கள் வாசிப்பனுபவத்தை யாசிக்கும் நூல். லக்ஷ்மி சரவணகுமார் திரைப்படம் சார்ந்து இயங்குவதால் நாவலின் ஒவ்வொரு காட்சியையும் தெளிவாக வாசகர்களுக்குக் காட்டிவிடுகிறார். சரளமான மொழி நடை ஒவ்வொரு அத்தியாயத்தையும் வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது. தமிழ் வாசிக்கத் தெரிந்த எல்லா இளைஞர்களும் தவற விடாமல் ‘ரூஹ்’ நாவலை வாசிக்க வேண்டும்.


( வாசகசாலை இணையதளத்தில் வெளியான கட்டுரை.)

9 views

Opmerkingen


bottom of page