top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

வசுந்தரா எனும் நீலப்பறவை… ( சிறுகதை )ஊர்க்காகங்கள் கொஞ்சம் திசைமாறிப் பறந்த தினத்தின் அதிகாலையில்தான் இப்படியானதொரு கனவு வந்திருந்தது வசுந்தராவுக்கு. கிழக்குத் திசைநோக்கி அப்பறவைகள் பறந்ததற்கும் வடகிழக்காக இவள் முந்தின இரவு தலைவைத்து  உறங்கியதற்கும் எந்தவிதமான தொடர்புகளும் இருந்திருக்கப் போவதில்லை.


கனவுகளுக்கும் உறக்கத்திற்கும் சம்பந்தமில்லாததொரு உறவிருப்பதைப் போலவேதான் இதுவும்.  முன்பு ஒருபோதும் இல்லாதளவிற்கு உற்சாகமும் சந்தோசமும் கொண்டவளாய் விழித்தவளின் உடலில் வலது இடதாக இறக்கைகள் துளிர்விட்டிருப்பதாக நினைத்துக் கொண்டாள். காற்றைவிடவும் ;லேசனாதாயிருந்தது உடல். பிரபஞ்சத்தின் மொழி பிடிபட்டதைப்போல் ஒவ்வொன்றையும் நிதானமாகப் பார்த்தவளை அம்மாவும் சகோதரியும் புதியவளாய்ப் பார்த்தார்கள். இந்த மாற்றம் அச்சப்படும்படி இல்லாததால் இவளுக்கிருந்த உற்சாகம் அவர்களுக்கும் வந்துவிட்டிருந்தது. புத்தகப் பையோடு பள்ளிக்கூடம் கிளம்பியவளை இறுக்கியணைத்து அம்மா நெற்றியில் முத்தமிட்டாள். வாழ்வில் ஒரேயொருமுறை மட்டுமே கிடைக்கமுடிகிற மிக அபூர்வமானதொரு முத்தம். நூற்றாண்டுகளைத் தாண்டியும் உலராத முத்தமது. 


            பதிமூன்று வயது இன்னும் பூர்த்தியாகிடாதவளுக்கு புத்தகங்களுக்குள்ளிருந்து எப்பொழுதும் நேர்த்தியாக கடத்தப்படுகின்றன சில கனவுகளும் விருப்பங்களும். மாயக்கதைகள் சொல்லும் கிழவிகளின் பரிட்சயம் எல்லா தேசங்களிலும் இவளுக்கென அந்தரங்கமாயிருந்தது. ஜடாமுடி கொண்ட அவர்களின் கதைகளுக்குள்ளாக தேவதைகளும் குட்டிச் சாத்தான்களும் விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் எல்லோரையும்விட அதிகமாய் இவளை விருப்பம் கொள்ள வைப்பவர்கள் பறக்கும் மனிதர்களும் குதிரைகளும்தான். எல்லோருமே பறக்க முடிகிறதொரு நாளில் சாலைகளென ஒன்று தேவையில்லாமல் போகும்தானே. சாலைகளற்றதொரு நகரின் எல்லா முடுக்கிலும் விளையாடும் குழந்தைகளைப்  பார்க்கமுடிவதென்பது அவளின் வாழ்நாள் விருப்பம்.


            வசுந்தராவுக்கு உடன் படிக்கும் பிள்ளைகளுக்கு கதை சொல்வது எப்பொழுதும் விருப்பமானதொன்று, அந்தக் கதைகள் வேறுவொருவரிடமும் கேட்கவியலா கதைகளாயிருக்கும். உண்மையில் அவை அவளின் ஆசைகளின் நீட்சி, யானைகள் நீரில் மிதந்து ஏழுமலைகளைக் கடக்க, அதற்கப்பாலிருக்கும் ராஜகுமாரனைக் காப்பாற்ற ராஜகுமாரி செல்வதாய் சொல்லும் இவளின் ஏழுமலைகளின் அரசி கதை அக்குழந்தைகளின் ஆயுட்கால விருப்பம். தன் கதைகளின் நாயகிகள் எப்பொழுதும் குழந்தைகளாகவும், வசுந்தரா என அவளின் பெயரையே கொண்டிருப்பவர்களாகவுமிருந்தார்கள். எல்லாக் கதைகளையும் போலவே முதலில் கதையாகத்தான் பறக்கும் வசுந்தராவைப் பற்றின கதையைச் சொன்னாள். பின்பு அக்கதை மிகக்குறுகிய காலத்தில் நிகழக்கூடிய சம்பவமென்றாள். குழந்தைகள் கதையை ரசித்த அளவிற்கு பறக்கும் அவளின் கனவை ரசித்திருக்கவில்லை. சுமதி இவளுக்கு கிறுக்குப் பிடித்திருக்கிறதென டீச்சரிடம் சொன்னாள். டீச்சர் இவளைக் கூப்பிட்டுக் கேட்கையில் தனக்கு கிறுக்கு வரவில்லை என்றும் கனவு மட்டுமே வந்ததென்றும் சொன்னாள். வசுந்தராவின் வார்த்தைகளில் குழப்பம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் டீச்சருக்கு ஒரு குழந்தை பறப்பாளென்பது பூகோள விதிகளின்படி நிகழக்கூடியதென்கிற நம்பிக்கையில்லை. ‘நீ பறப்பதில் எனக்கும் விருப்பமே’ என இவள் கனவின் மீதான தனது விருப்பத்தையும் பிணைத்துக்கொண்டாள்.

            இவள் எல்லோருக்குமான பேசுபொருளாக மாறத்துவங்கினாள். பெரிதான காரணமெதுவுமில்லை, மிகவிரைவிலேயே பறக்கப்போகிறாள் அவ்வளவுதான். சக குழந்தைகள் நிச்சயம் இவள்  பறப்பாளென்றும், பறத்தலை பறவைகளே மறக்கக்கூடியதொரு காலம் மிக அன்மையிலிருப்பதால் இவள் ஒருபோதும் பறக்கமுடியாதெனவும் வெவ்வேறு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அபிப்பிராயங்களை மீறி எல்லோருக்குமே இவள் பறந்துவிட வேண்டுமென உள்ளூர ஒரு விருப்பமும் சிறுமியொருத்தி பறப்பதனைப் பார்க்கிற முதல் அதிர்ஸ்டசாலியாய் தாங்களிருக்க வேண்டுமென்கிற தவிப்புமிருந்தது. வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் பாதை அவளுக்கு இப்பொழுது ஆகாய மார்க்கமாக சுருக்கமானதொன்றாகத் தோன்றியது. பறவைகளின் உயரத்துக்கும் விமானங்களின் உயரத்துக்கும் அடிப்படை வேறுபாடுகளிருப்பதைப் போல் தான் பறக்கும்பொழுது அதிகபட்சமாய் எவ்வளவு உயரம் முடியுமென யோசித்தாள். ஊரின் மிக உயரமான கட்டிடங்கள் சில நினைவுக்கு வந்தன. அவை முழுக்கவுமே வெறும் நான்கைந்து மாடி கட்டிடங்கள்தான். அந்த உயரத்தில் பறப்பது ஒன்றும் விசயமில்லை. ஒரு ராஜாளியைப்போல் கண்ணுக்கெட்டாத உயரத்தில் அதன் ரெறக்கை மட்டும் தெறிவதுபோல் தனது உடல் ஒரு புள்ளியாக மட்டும் தெரிய முடிகிற உயரத்தில் பறக்க வேண்டும். ஆகாயம் நீலமில்லை என்றும் நீளமில்லை என்றும் ஒரே நேரத்தில் யோசித்தாள்.


            தங்கச்சி இன்னும் சிறுமியாகத்தானிருந்தாள். சிறுமியான இவளைவிடவும் சிறுமியாய்.             ஒவ்வொருமுறையும் இவள் கதைகளால் அதிகம் சலிப்புற்றவளுக்கு இவளின் கதைகளனைத்தும் அலுப்பூட்டக் கூடியவைகளாகவே இவ்வளவு நாட்களும் இருந்தன. இப்பொழுது பறத்தல் பற்றின இவளின் கதை அவளையும் ஒரு சிறிய பறவையாக்கியிருந்தது. அம்மா கண்ணாடித்தாள்களில் பறவைகளின் படம் அச்சிடப்பட்ட பெரிய புத்தகமொன்றை இருவருக்குமாக சேர்த்து அன்பளிப்பாகத் தந்தாள். வெவ்வேறு நிலங்களின் பறவைகள் நீர்வெளிகளிலும் மரங்களிலும் நெப்பன்தஸ் செடிகளின் மீது அமர்ந்தபடியுமாய் இருந்தன. எல்லாப் பறவைகளுக்கும் மனிதர்களின் நெருக்கமானதொரு தோற்றமிருந்தது.  வளைந்து நீளும் பறவைகளின் உடல் வெக்கையானது , இறகுகளின் இடுக்குகளில் பறவைகளுக்கிருப்பதைப் போன்ற வெக்கையும் வியர்வையும் சமீபமாய் வசுந்தராவுக்கும் வந்தது. அவளும் தங்கச்சியும் வீட்டு மொட்டைமாடியில் பள்ளி முடிந்த மாலை வேளைகளிலும், விடுமுறை தினங்களிலும் கைகளை விரித்து பறப்பதுபோல் அலைந்து கொண்டிருப்பது இரண்டு பறவைகள் நின்றபடி பறப்பதைப் போலிருக்கும்.


            வசுந்தரா பறந்தாள். முதலில் தன் பள்ளிக்கூடத்தின் மேலாகவும், தனக்கு விருப்பமான தோழிகளைத் தூக்கிச் சுமந்து ஸ்கூல் க்ரவுண்ட்டிற்கு மேலாகவும் பின்பு தங்கையுடன் சேர்ந்தும் பறந்தவள் நதிகளையும் கடலையும் தாண்டி பறந்த பொழுது விடிந்திருந்தது. அன்று பள்ளிக்கூடம் போனவள் தன் தோழிகளிடம் முந்தைய தினம் அவர்களைத் தூக்கிக் கொண்டு பறந்ததைப் பற்றிக் கூறினாள். எப்பொழுதும்போல் எல்லோரும் சிரித்தனர். பின்பு க்ரவுண்டில் அவர்களோடு பறந்த தடம் தேடிக் காட்டினாள். ஒரு ராட்சஷ பறவை இறக்கை விரித்து பறந்ததன் அடையாளமாய் மரத்திலிருந்து நிறைய இலைகள் உதிர்ந்திருந்தன. வகுப்பறைகளுக்கு மேல் சுவற்றில் இவளின் கைத்தடங்களிருந்தன. பிள்ளைகள் அவளை ஒரு கேலிப்பொருளாய்ப் பார்த்தது போய் இப்பொழுது அச்சத்துடன் பார்த்தனர். அவள்மீது ஆவிகள் ஏறியிருப்பதாய் ஒருத்தி எல்லோரிடமும் சொன்னாள். பிள்ளைகள் அதனை நம்பமுடியாமலும் நம்பாதிருக்க முடியாமலும் கேட்டுக்கொண்டிருந்தனர். 


            வசுந்தரா அவ்வூரின் வீதிகளில் இரவுகளிலும் விடுமுறை தினங்களின் பகல்களிலும் பறப்பது சகஜாமாகிவிட்டிருக்கிறது. இறக்கைகள் இன்னும் முழுமையாய் வளர்ந்திருக்கவில்லை. ஏதாவதொரு வீதியில் அவள் பறந்ததைப் பார்த்ததாய் குழந்தைகள் கதைகளாய்ச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். துவக்கத்தில் அவர்களுக்கு விருப்பத்துடன் தான் பறந்த இடங்கள் குறித்து சொன்ன வசுந்தரா  சமீபமாய் அப்படிச் சொல்வதை நிறுத்தியிருந்தாள். அவளின் கண்கள் நீலநிறத்தில் ஒளிரத் துவங்கியிருக்க வகுப்பறையில் அவளை குழந்தைகள் நீலத்தாமரை என்றும் நீலப்பறவை என்றும் பெயர் சொல்லி அழைத்தனர். நீலப்பறவை இறக்கை முளைக்காத தேவதையை ஒத்திருந்தாள். மகளின் கனவிலிருக்கும் பெரும் விருப்பம் புரிந்துகொண்ட அம்மா  பறத்தல் ஒன்றும் சிரமமான காரியமில்லை என்றும், அவர்களின் முன்னோர்கள் முன்பே பறந்திருக்கிறார்கள் எனவும் தன் குடும்பத்தில் சிலரை உதாரணம் கூறினாள். அவர்களைப் போலவே தனக்கும் ரெக்கை முளைக்குமென நம்பிய வசுந்தரா தன்னுடல் நிஜத்தில் நீலநிறமாகிவிட விரும்பினாள். சாம்பல் நிறமும்மில்லாமல் கருமையுமில்லாமல் நீலத்திற்கு முந்தைய நிறத்தில் இப்பொழுது அவளுடலிருந்தது.


            காலாண்டுத்தேர்வுகள் முடிந்து பிள்ளைகள் பள்ளிக்குத் திரும்ப வேண்டிய அதிகாலை, வழக்கத்தைவிடவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகளை எழுப்பச் சென்ற வசுந்தராவின் அம்மா ஒரு நொடி தன்னிலை கொள்ள முடியாமல் உறைந்து நின்றாள். சுமக்க முடியாத பெரும் இறக்கைகள் வசுந்தராவின் உடலை சுற்றி மூடியிருக்க அவள் அயர்ச்சியோடு கண்மூடிக் கிடந்தாள். அவளைத் தொட்டு எழுப்புவதற்கு மெல்லிய அச்சம் கொண்ட அவளின் விரல்கள் நீண்டன. வசுந்தராவின் தங்கச்சி அம்மாவைத் தேடி அவ்வறைக்கு வந்தவள், பிரம்மாண்டமானதொரு பறவையாய் உறங்கும் அக்காவைப் பார்த்து அலறியபடியே ஓடினாள். அவளைத் தொடர்ந்து ஓடின அம்மா யாரிடமும் இது பற்றிச் சொல்ல வேண்டாமென அவளை பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். திரும்பி வீட்டிற்கு வருவது குறித்து தங்கச்சிக்கு பெரிய அச்சமெழுந்தது. அம்மா அவசரமாக தனக்குத் தெரிந்த ஒரு மருத்தவரை வரச்சொன்னாள். அந்த அதிகாலையில் உடனடியாக வரமுடியாதென்ற மருத்துவர் வந்துசேர அதற்குப் பின்பாக ஒன்றரை மணிநேரம் பிடித்தது. வசுந்தரா கண் விழித்து பூரிப்புடன் தன் இறக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கு இன்னும் அவ்வறைக்குள் வர அச்சமாயிருந்தது. தன் மகள்தான். தான் நேசித்து கொஞ்சிய அதே மகள்தான். இப்பொழுது சாத்தானின் குழந்தையைப் போல் கிடந்தாள். கொஞ்சம் பழச்சாறு மட்டும் அருந்திய வசுந்தரா தான் பள்ளிக்குக் கிழம்ப வேண்டுமென வேகமாகப் புறப்படத் தயாரானாள். ”ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கோ செல்லம் அப்பறம் போகலாம்…” அம்மா ஆதரவாக அவளிடம் சொன்னது ஏமாற்றமாயிருந்தது.


            வசுந்தராவைப் பரிசோதிக்க வேண்டி வந்திருந்த மருத்துவருக்கு என்ன வைத்தியம் பார்ப்பது என்கிற குழப்பம். சற்றுத் தள்ளி நின்றே இவளிடம் பேசிக்கொண்டிருந்தவரை “ஏன் அங்கிள் அங்கயே நிக்கிறிங்க ? வந்து உக்காருங்க…” என்றாள். ”இல்லம்மா, இருக்கட்டும்..” மருத்துவர் தன்னிடத்தில் இருந்தபடியே பேசிவிட்டு அவள் அம்மாவிடம் பேச வேண்டுமென எழுந்துகொண்டார். அம்மா கேட்ட கேள்விகளெதற்கும் பதில் சொல்ல முடியாமல் குழம்பிப்போனவர்  கிளம்புவதற்கு முன் ‘கனவுகளுக்கு வைத்தியம் செய்வது இயலாத காரியம்..வேண்டுமானால் மருத்துவமனையில் சேருங்கள் அதனை ஆப்ரேட் பண்ணி எடுத்துடலாம்.” சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பிச் சென்றார். அம்மாவுக்கு என்ன செய்வதென்பதில் இப்பொழுது குழப்பமே மிஞ்சி நிற்க, மகளின் விருப்பம் கேட்கப் போனாள். தன் இறக்கைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த அந்தக் குட்டிப் பெண்ணின் உடல் முழுமையான நீலமாகியிருந்தது. அம்மாவை நெருங்கி தன் இறக்கைகளால் படபடவென அடித்து நீர்த்துளிகள் அம்மாவின் மேல் தெறிக்கும்படிச் செய்தாள். மகளின் சந்தோசம் கண்டு கலங்கின அம்மா வெறுமனே “உனக்கு இது பிடிச்சிருக்கா குட்டிம்மா?…” கேட்க, வசுந்தரா சந்தோசமாக தலையாட்டினாள். மழைக்காலம் துவங்குவதற்கு முன்பான காற்று, ஊரை நிரப்பியிருந்தது. இப்போதைக்கு வெளியே எங்கும் போக வேண்டாமென அம்மா சொன்னதுதான் இவளுக்கு கொஞ்சம் கவலையாயிருந்தது. தன் கதைகளை தனக்கே சொல்லிக் கொள்ளப் பழகிக் கொண்டாள். அக்கம் பக்கத்தில் இவளை பறக்கும் குழந்தையென்றும், சாத்தானின் குழந்தையென்றும் பலவிதமாய்ப் பேசிக்கொண்டனர். உண்மையில் அவள் குழந்தை மட்டுமே என்பதில் அவளின் அம்மாவிற்கே சந்தேகம் வந்துவிட்டிருந்தது.


            பள்ளிக்கூடம் போய் பதினைந்து நாட்களுக்கும் மேலாகியிருந்தது. அம்மா இனி வழியே இல்லை என்றானதும் மகளை மருத்துவமனையில் சேர்த்துவிடுவதென முடிவுசெய்தாள். பெண் குழந்தைக்கு இறக்கை முளைக்கக் கூடாதென வரலாற்று ஆதாரத்துடன் நிறையபேர் பேசியதில் குழந்தையில் என்ன பெண்குழந்தை ஆண்குழந்தை என அம்மாவுக்குக் கோபம். ஆனாலும் இறக்கை முளைக்ககூடாதுதான். அவளுக்கோ, அவளின் அம்மாவும், அம்மாவின் அம்மாவுக்கோ ஒருவருக்கும் பெண்களுக்கு இறக்கை முளைத்திருக்கவில்லை., தன் மகளுக்கு முளைத்திருப்பது ஒருவித துர்சகுனமோ என நினைத்தாள். மருத்துவமனைப் போகும் அம்மாவின் முடிவைகி கேட்டதும் கோபத்துடன் வசுந்தரா தன் அறையின் கதவுகளை அடைத்துக் கொண்டாள். ’பறத்தலைத் தவிர தனக்கு வேறொன்றும் பிரதானமில்லை என்று சொன்னவளுக்கு அம்மா உட்பட யாவரின் மீதும் வெறுப்பே மிஞ்சியது. பூட்டிய அவளின் அறையிலிருந்து இறக்கைகள் படபடவென அடித்துக் கொள்ளும் சத்தம் இரவு முழுக்க கேட்டதைக் கண்ணீருடன் அம்மா கேட்டுக்கொண்டிருந்தாள்.


            அதிகாலைக்கு மேல் இறக்கையின் சப்தம் நின்றுவிட்டிருந்தது, அம்மாவும் அயற்சியில் உறங்கிப்போயிருந்தாள். மீண்டும் விழித்தெழுந்த பொழுது மகளின் அறைத் திறந்து கிடந்தது. வசுந்தராவின் இறக்கைகள்  அறை முழுக்க உதிர்ந்து கிடந்தன, அவளைத் தவிர்த்து. பதட்டத்துடன் ஓடிவந்து மகளைத் தேடிய அம்மாவின் பார்வையில் தூரத்தில் சந்தோசமாக இறக்கை விரித்து பறந்து கொண்டிருந்தாள் மகள். நூற்றாண்டுகளாய் தன் முன்னோர்களும் தானும் நினைத்து முடியாமல் போன ஒன்றைத்  தன் மகள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள் என்கிற பூரிப்பும் தன்னை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவாளோ என்கிற பதட்டமுமாய் நின்று கொண்டிருந்தாள். பிரம்மாண்டமானதொரு பறவையாய் கடலுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த வசுந்தராவுக்கு உலகம் பெரியதொரு பறவையின் இறகுகளாகவே காட்சியளித்தது. இவளைப் போலவே இன்னும் நிறைய நீலப்பறவைகள் விரைவிலேயே  இவ்வான்வெளி முழுக்க பறப்பார்களென்கிற நம்பிக்கை கொண்டாள். அவளின் தொடையிடுக்கிலிருந்து இளஞ்சூட்டுடன் சில துளிக் குருதி வழிந்து கடலில் உதிர்ந்தது. இன்னும் சில துளிகள் உதிர, எப்பொழுதுமில்லாத அந்த புதுவிதமான பரவசம் அவளை சந்தோசங்கொள்ளச் செய்தது. ஒரு பிரம்மாண்டமான பறவையாய் வசுந்தரா பறந்து கொண்டிருந்தாள்.

 

 

122 views

Comments


bottom of page