top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

வரலாற்றின் கதைகளுக்கு செவி சாய்க்கச் சொல்வதில் இருக்கிறது மாற்றத்தின் துவக்கம்.



”நேற்றைப் போலில்லாத இன்றில் அகமெங்கும் கிளர்ந்தெழுகின்றன வனமலர்கள். விரகத்தின் முதல் விரல் பற்றின நொடியிலேயேஅக்னியின் தகிப்பைப் பொறுக்க முடியாமல் நீ விலகி நிற்கிறாய். எரியும் இவ்வுடல் அடங்கும் சாத்தியமில்லாமல் சுமந்தலைவது நின் மீதான காமத்தை மட்டுமல்ல. இத்தனை காலம் சுமந்து வைத்திருந்த காதலை இந்த உடல் இப்படிக் கூட சொல்ல முடியாது போனால் உன்னைக் காதல் செய்வதில் என்ன நிஜம்? இந்த உடல் அல்லாது என்னால் வேறெப்படி என் காதல் சொல்ல முடியும்? நீ வருவதற்கு முன்பான வாழ்க்கை உனக்கான காத்திருப்பில் கழிந்தது, நீ வந்த பிறகான இந்த இடைவெளி இத்தனை கால காத்திருப்பை மீறத் தவிக்கிறது.”

நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வை, துயரின் அரூபங்களை நாம் கதைகளாக்கியபடியே தான் இருக்கிறோம். வரலாறு கதை சொல்லுதலின் நீட்சிதான். எல்லா வரலாறுகளும். இந்திய தேசத்தின் வரலாற்றுக் கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னாலிருந்து துவங்கும் போதே மனிதன் பேசுவதிலிருந்து அதிகாரத்திற்கும் அதிகாரத்தின் வழி யுத்தத்திற்கும் இடம்பெயர்ந்த கதைகள் நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதிகாரத்தின் கதைகளை கேட்டே வளர்ந்தவர்கள் நாம். எளிய மனிதர்கள் அந்தக் கதைகளின் துயர் மிக்க சின்னஞ்சிறிய சாட்சியங்களாகவே எப்போதும் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சின்னஞ் சிறிய மக்கள் கூட்டம் பேசும் ஏதோ சில மொழிகள் நம் தேசத்தில் அதன் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு மொழி அழியும் போது அதனோடு சேர்ந்து அதன் பல்லாயிர வருட வரலாறும் அழிக்கப்படுகிறது. வரலாற்றை அழிப்பதின் வழிதான் ஒற்றை தேசியத்திற்குள் ஒடுக்கப்பட்ட மக்களும், பழங்குடியினரும் அடிமைகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகம் ஒரு தனி மனித வரலாறாகவோ, நாவலாகவோ எப்படி வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ள முடிகிற சாத்தியங்களை நமக்குத் தருகிறது. “அந்த கிராமத்திற்கு ‘ஹாத்திகா’ ( ஆனைக்கோட்டை ) என்று பெயர். அதாவது யானைகளுக்கான இடம். ஆனால் இன்று ஒரு யானை கூட அங்கு இல்லை. “ இப்படித்தான் இந்த கதை துவங்குகிறது. ஒவ்வொரு சொற்களிலும் வரிகளும் அந்தப் பழங்குடி மக்களைப் பற்றின ரத்தமும் சதையுமான உணர்வெழுச்சி மிக்க பதிவு தான். குழந்தைகளுக்கான கதைகள் என்பதை நாம் என்னவாய் கற்பிதம் செய்து வைத்துள்ளோம் என்பது கேள்விக்குரியது. இந்தப் புத்தகம் குழந்தைகளுக்கான கதை தான். ஆனால் வழமையான ஒன்றல்ல. நான் வெவ்வேறு மொழிகளில் வரும் குழந்தைக் கதைகளுக்கான புத்தகங்களைத் தொடர்ச்சியாய் கவனிக்கிறேன். அறிவியலோ புனைவோ எல்லாமே புதிய களங்களையும் அவர்களின் அடையாளங்களையும் அழுத்தமாக பதிவு செய்கின்றவையாய் இருக்கின்றன. பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலாவை குழந்தையாய் இருக்கும் போதே அத்தேசத்துக் குழந்தைகள் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். இத்வா என்னும் சிறுவனின் வழியாகவும் அவனின் தாத்தாவின் வழியாகவும் கதை சொல்லப்படுகிறது. முன்பு அந்த ஊர் முழுக்கவே பழங்குடி மக்களுக்கு சொந்தமாய் இருந்தது, பிறகு முதலாளிகள் அதை தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். எங்கெல்லாம் இயற்கை வளம் மிகுந்துள்ளதோ அங்கெல்லாம் பழங்குடியனரின் நிலம் சூழ்ச்சியால் பறி போனதை அழுத்தமாக இந்தக் கதை பதிவு செய்கிறது.


ப்ரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக முண்டா இன மக்களின் போராட்ட வரலாறு முக்கியமானது. ஆங்கிலேயரிடம் முதலில் போரிட்டு தோற்கும் அந்தப் பழங்குடி மக்கள் வெவ்வேறு நிலங்களுக்கு ஏதிலிகளாய் இடம்பெயர்கிறார்கள். முண்டாக்களும் சந்தால்களும் ( இவர்களிம் மொழி சைந்தாலி ) இன்றும் சிறிய அளவில் ஒரிசாவின் கடலோரப் பகுதிகளிலும் வங்காளத்தின் சில பகுதிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இடம் பெயர்ந்த மக்களை ஒன்று திரட்ட மீண்டும் ஆங்கிலேயருக்கு எதிராக யுத்தத்தை நடத்தியவர் பிர்சா முண்டா. ஆயுத பலமின்றி தோற்றுப் போனாலும் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த பிர்சா முண்டாவை கடவுளாக வழிபடும் அந்த இன மக்கள் விடுதலைக்குப் பின்பும் நிலம் இழந்து உள்ளூர் முதலாளிகளிடம் அடிமைகளாய் இருக்கிறார்கள் என்பது துயர்மிக்க நிஜம். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது இவர்களின் வரலாற்றையும் சேர்த்துதான். பழங்குடி மக்களின் பார்வையில் இந்த உலகம் எத்தனை ஜீவன் மிக்கது? அரிதினும் அரிதாகத்தான் நான் இயற்கையை மனிதரல்லாத பிற உயிரினங்களை பருவ கால மாற்றங்களை உற்று கவனிக்கிறோம். இத்வா தன் தாத்தாவிடம் இங்கு நாம் இடம் பெயர்ந்து எத்தனை காலமானது எனக் கேட்கிறான். “ஆயிரம் பிறைகளுக்கு மேலிருக்கும் என பதில் சொல்கிறார் தாத்தா. காலத்தை பிறையால் கணக்கிடுவதை ஒருநாளும் முண்டாக்கள் மாற்றிக் கொள்வதில்லை என்கிறார். பிறையைக் கவனித்தலென்பது இயற்கையை ஆழமாய் உள்வாங்கிக் கொள்ளுதல். அவர்கள் அதனால் தான் தங்கள் குழந்தைகள் எந்த தினத்தில் பிறக்கிறார்களோ அந்த தினத்தை பெயர்களாக வைக்கிறார்கள்.


பழங்குடி சமூகம் எந்த நிலத்தை சார்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் இந்த உலகிற்குக் கற்றுத்தரும் மிக முக்கியமான செய்தி கூட்டு வாழ்க்கை. ஒரு திருமணத்தின் போது தங்களின் வீடுகளில் இருந்து ஆளுக்குக் கொஞ்சம் தானியங்களை எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் அந்த சடங்கில் ஏதோவொரு வகையில் நாமும் அங்கெமன நம்புகிறார்கள். திருமணத்தின் போது மணமகன் ஒரு மரத்திற்கு முதலில் தாலி கட்டுகிறான், மணமகளும் ஒரு மரத்திற்கு தாலி கட்டுகிறாள். அந்த மரம் போல் வலிமையான மணமகன் வேண்டுமென இவளும், அந்த மரம் போல் தன் குடும்பத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டுமென இவனும் நம்பிக்கையோடு இதைச் செய்கிறார்கள். மனித வாழ்க்கை இயற்கையின் ஒவ்வொரு அச்சிலும் சேர்ந்தேதான் கலந்திருக்கிறது. நாம் எதிலிருந்தெல்லாம் துண்டித்துக் கொள்கிறோமோ அதன் மகத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் துவங்குகிறோம். முன்பொரு கதையில் இப்படி எழுதினேன், ”பறக்க விரும்பாதவனுக்கு ஆகாயம் சொந்தமில்லை.” அப்படித்தான் இயற்கையோடான நம் உறவு.


கல்வியின் நோக்கம் பயன்பாடு குறித்து சமகாலத்தில் ஏராளமான மாற்றங்கள் உருவாகிவிட்டன. நமது கல்விமுறை யாருக்கானது? வலிமையான அல்லது திறமைமிக்க அறிவுப்பூர்வமான தலைமுறைகளை உருவாக்குகிறதா என்பதெல்லாம் இன்று அடுத்த கட்டங்களை நோக்கின நகர்தலுக்கான விவாதங்கள். ஆனால் இன்றும் காடுகளில் மலைகளில் ஆரம்பக் கல்வியை நோக்கி நகராத பழங்குடி சிறுவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த மக்களுக்கான முழுமையான விடுதலை கல்வியால் மட்டுமே சாத்தியப்படும் என்பதைத்தான் இந்தக் கதை அழுத்தமாக பேச விழைகிறது. ஆனால் எந்த இடத்திலும் பிரச்சார நோக்கமோ கருத்து சொல்ல முனைதலோ இல்லை. ஒரு எழுத்தாளன் தன் எழுத்தின் வழியாகத்தான் சமூகத்தில் யாரென அடையாளங் காணப்படுகிறான். மஹாஸ்வேதா தேவியின் இந்தக் கதையை வாசிக்கும் யாரொருவரும் சமூகத்தின் மீதான அவரின் பார்வையையும் அக்கறைகளையும் புரிந்து கொள்ள முடியும். இத்வா என்னும் சிறுவன் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்ததால் அதிர்ஷ்டக்காரன் என்று நம்ப்படுகிறான், துரதிர்ஸ்டவசமாய் அவன் பெற்றோர் இறந்து போக அதன் பிறகு அவன் தாத்தா அவனை வளர்க்கிறார். அவரின் விருப்பமெல்லாம் மிக எளியது, இத்வா படிக்க வேண்டும். கல்வியின் முக்கியத்துவம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாய் இருப்பதில்லை. ஒரு பழங்குடி குழந்தை கல்வி கற்க வரும்போதுதான் இந்த தேசத்தில் தங்களுக்கான இடம் எதுவென்பதையும் தங்களது உரிமைகள் எத்தனை தூரம் மறுக்கப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்கிறது. அந்தக் கிராமத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளியில் படிக்கத் துவங்கும் இத்வாவிற்கு பிர்சா முண்டாவின் கதையை அங்கு வரும் ஆசிரியர் சுருக்கமாக சொல்கிறார். என்றாவது ஒருநாள் அதுகுறித்து விலாவாரியாய் சொல்வதாய் வாக்களிக்கிறார். இத்வா எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறான். காட்டை, தங்களை ஏமாற்றி நிலங்களை அபகரித்திருக்கும் முதலாளிகளை தங்களைப் போனற பிற பழங்குடி சமூகம் எவ்வாறு மேலெழுந்து வரத் துவங்கியுள்ளது என்பதை எல்லாம். இங்கு சைந்தாலி மக்களை தேசத்தின் பிற பகுதி மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை சொந்த அனுபத்திலிருந்து பதிவு செய்து முக்கியமெனப் படுகிறது. தேசிய அளவிலான அந்த இளம் எழுத்தாளர்களுக்கான கூடுதலில் இந்தி பேசத் தெரிந்த எல்லோரும் ஒரு அணியாகிவிட தனித்து விடப்பட்டது நானும், சைந்தாலி மட்டுமே பேசத் தெரிந்த இளைஞரும் மட்டுந்தான். அந்த இளைஞரை மற்றவர்கள் பார்த்த விதத்திலேயே அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.


பழங்குடி சிறுவர்கள் கல்வி பயில்வதை முதலாளிகள் விரும்பவில்லை. எந்த முதலாளிதான் பல தலைமுறைகளாய் தன்னிடம் இருக்கும் விசுவாசமிக்க வேலைக்காரர்களை இழக்க நினைப்பான். ? அந்த மக்களிடமிருந்து நிலங்களை ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்வதோடு அவர்களை அதே நிலத்தில் அடிமைகளாக வேலை செய்ய வைப்பதில் தான் அவர்களின் சூழ்ச்சி இருக்கிறது. இத்வாவின் தாத்தா ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார், இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் ஒரு வேளை உணவுக்காகவும் கொஞ்சம் துணிகளுக்காகவும் இந்த முதலாளிகளிடம் வேலை செய்து கொண்டிருப்பது? உலகம் முன்னேறிகொண்டே இருக்கிறது, நமது ஆதிவாசிக் குழந்தைகள் கல்வியறிவற்றவர்களாக அப்படியே தேங்கிவிடுவார்கள்.” இந்தக் கவலை தான் இத்வாவை படிக்க வைக்க வேண்டுமெனத் தூண்டுகிறது. சொர்ணரேக நதிக்கரையில் நடந்த குரா சிங்கின் கதை, முதலாளிகள் எவ்வாறு பழங்குடிகளை ஏமாற்றி நிலங்களை வாங்கினார்கள் என்பதற்கு முக்கியமான உதாரணம். ( அது சுவாரஸ்யமான கதை. நான் சொல்வதை விட நீங்கள் புத்தகத்தில் வாசிப்பது சுவாரஸ்யமாய் இருக்கும்.) எனக்கு இந்த நாவலை வாசிக்கையில் இந்த சில பத்தாண்டுகளில் காடுகளில் இருந்து துரத்தப்பட்ட ஏராளமான பழங்குடி மக்களின் முகங்கள் அவ்வளவும் நினைவுக்கு வருகின்றன. எல்லோருக்கும் முந்தைய நாகரீகத்தையும் வரலாறையும் கொண்டிருக்கும் அந்த மக்கள் தங்களின் பூர்வீக நிலங்களில் இருந்து தொடர்ந்து துரத்தப்பட்ட படியே தான் இருக்கின்றன. கனிம வளங்களுக்காக, அரசாங்கத்தின் இயற்கை வளச் சுரண்டல்களுக்காக தனி மனித லாபங்களுக்காக என நாம் காட்டை மிக வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம். பல்லாயிரம் வருடங்களால் காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களால் எந்தக் காடும் அழிந்ததில்லை. இந்த சில வருடங்களில் வியாபாரிகள் அதைச் செய்திருக்கிறார்கள். காடுகளை மட்டுமே நம்பி வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை இன்று காடுகளுக்கு வெளியே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்தக் கதை இத்வா முண்டாவின் கதையாக மட்டுமே தெரியவில்லை. இந்தக் கதை இந்த தேசத்திற்கு பொதுவான சில செய்திகளைச் சொல்கிறது. எந்த காரணங்களைக் கொண்டும் மேலும் சில வருடங்களுக்கு முதலாளிமார்கள் பழங்குடி சமூகத்தை கட்டுபடுத்த முடியாது. காடென்பது பழங்குடி மக்களின் பாரம்பர்ய சொத்து. இயற்கை மாற்றங்களை பேரழிவுகளை எல்லோருக்கும் முன்பே கணிக்கும் ஆற்றல் அவர்களுக்குண்டு. நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்க, அவர்களின் அடிப்படை கல்வியைக் கூட முழுதாக கிடைக்க விடாமல் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு இன்னல்களைக் கடந்து இத்வா இறுத்யில் நம்பிக்கையோடு மீண்டும் பள்ளிக்குச் செல்கிறான். முதலாளிகள் இம்மக்களை நாம் கட்டுப்படுத்த முடியாதென புரிந்து கொள்கிறார்கள். இதை நீதிக்கதை என்னும் வகையில் நாம் புரிந்து கொள்ளலாமா என்றால் ஆம் அப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மிக முக்கியமான ஆவணம். இந்தத் தலைமுறையிலிருந்து இன்னும் பதிவு செய்ய ஆயிரக்கணக்கான கதைகள் மிச்சமிருக்கின்றன என்பதற்கான முன்னுதாரணம். இத்வாவின் போராட்டமும், பிர்சா முண்டாவின் போராட்டமும் ஒருசேரவே பயணிக்கிறது. இத்வா பிர்சாவின் கதையைக் கேட்டுவிட்டு ஆகாயத்திற்கு நட்சரத்திற்கும் சூரியனுக்கும் நிலவிற்கும் ஏன் பிரபஞ்சத்திற்கே சொல்கிறான். ஏனெனில் அந்தப் போர் அவன் நிகழ்த்தியது. அதனால் தான் அவனது கதை இப்படியாக முடிகிறது. “”அந்த யுத்தம் உண்மையிலேயே முடிந்துவிட்டது, அவன் உண்மையிலேயே போரில் வெற்றி அடைந்திருக்கிறான்.”

வெறும் கதைதானே என நாம் எல்லாவற்றையும் கடந்து போய்விட இயலாது. கொஞ்சமே கொஞ்சமாகவேனும் எல்லோருக்குமாக நம் கண்களையும் காதுகளையும் பகிர்ந்து கொடுக்கத்தான் வேண்டும். கதைகள் தான் மாற்றத்திற்கான விதைகள்.

48 views

Comments


bottom of page