top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

வாக்குமூலம் - 1


இந்தக் கதை உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம்.


பத்திரிக்கை செய்திகளிலிருந்து பெரும்பாலும் நான் கதைகளை உருவாக்குவதில்லை. அப்படியான முயற்சிகள் சலிப்பூட்டக்கூடியவை என்பதால் சில வருடங்களாக நான் செய்தித்தாள்கள் வாசிபதையே நிறுத்திவிட்டேன். பத்திரிக்கைகள் தேவைக்கு அதிகமாய் தகவல்களைத் தந்தபடியே இருக்கின்றன. இந்த தகவல்கள்தான் மனிதர்களை இயல்பாய் வாழவிடாமல் எப்போதும் அச்சத்துடனேயே வைத்திருக்கிறது. என்னைச் சூழ்ந்திருக்கும் எல்லோருமே தகவல்களால் நிரம்பியவர்களாய் இருப்பதைப் பார்க்க பல சமயங்களில் வியப்பாயிருக்கும். ஏன் இத்தனை தகவல்களை சிரமங்கொண்டு சுமந்துகொண்டிருக்கிறார்கள்? நான் எல்லாவற்றையும் கதைகளாக கேட்க விரும்புகிறவன், அப்படியே கேட்டுப் பழகியவன். செய்திகளாக வந்தடையும் எல்லாமும் பல சமயங்களில் செய்திகளாகவே கடந்து போய்விடும். சில வருடங்களுக்கு முன் நண்பர் பாலநந்தகுமாருடனான ஒரு சந்திப்பின் போது அப்போது பரபரப்பாய் பேசப்பட்ட ஒரு வழக்கைக் குறித்து சுவாரஸ்யமாய் சொன்னார். அவர் சொன்னவிதம் ஒரு கதையாகவே எனக்குள் பதிந்ததால் அந்த வழக்கைக் குறித்து கூடுதலாய்த் தெரிந்து கொள்ள விரும்பினேன். பல வருடங்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கொலை வழக்கில் இரண்டு ரவுடிகள் எப்படி மாட்டிக் கொண்டார்கள் என்கிற விவரங்கள் இதற்குமுன் கேள்விப்படாததாக இருந்தது. நீண்ட காலத்திற்குப்பின் தன் குற்றத்தை ஒத்துக் கொள்ளும் ஒரு மனிதனின் மனநிலை என்கிற ஒரு புள்ளி மட்டும் தொடர்ந்து எனக்குள் சுற்றிக்கொண்டே இருந்ததின் நீட்சிதான் ‘வாக்குமூலம்.’

கதை சொல்லல் முறையில், கதாப்பாத்திர வடிவமைப்பிலென என் மற்ற கதைகளிலும் நாவல்களிலும் இல்லாத ஒரு தன்மையை இதில் பார்க்க முடியும். நீண்ட விவரணைகள், நிலவியல் குறிப்புகள் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு நேரடியான கதைசொல்லல் முறையில் எழுதிப் பார்க்க விரும்பியதோடு அவ்வுத்தியை பயன்படுத்தவும் செய்திருக்கிறேன். சிலருக்கு இதை வாசிக்கையில் ஒரு திரைக்கதையை வாசிக்கும் உணர்வு ஏற்படலாம், சொல்லப்போனால் அந்தப்போக்கில் இருக்க வேண்டுமென்றுதான் நானும் விரும்பினேன். பரபரப்பாக கதையை நகர்த்த வேண்டுமென்கிற விருப்பங்களையெல்லாம் தாண்டி இந்த நாவலின் வழியாய் நான் வெளிப்படுத்த விரும்பியது ஒரு மனிதன் தனக்குள்ளேயே மறைக்கும் ரகசியங்களையும், அது உருவாக்கும் குற்றவுணர்ச்சிகளையும்தான். என் எழுத்து வேலைகளுக்கு உதவியாயிருக்கும் தோழிகள் ஷாலினி, சுபத்ராவுக்கும் தகவல்கள் தேவைப்படும்போது திரட்டித்தரும் தம்பிகளுக்கும் எந்தக் கவலைகளுமில்லாமல் வாழ அனுமதிக்கும் கார்கிக்கும் முழுதான அன்பு.


லஷ்மி சரவணகுமார்.

( கொரோனா ஊரடங்கு காலத்தில் கிண்டில் பதிப்பாக வெளியிடப்பட்ட குறுநாவல்.)

பகுதி – 1


1

திருச்சி நகருக்கு வெளியே இருக்கும் பிரம்மாண்டமான ’மார்டன் போர்டிங் பள்ளி’ விடுதியின் நீண்ட கழிவறை. அதன் ஒருபக்கம் குழியலறைகளாலும் மறுபக்கம் வெஸ்டர்ன் டாய்லட்களாலும் அமைந்த வளாகம். ஒன்றிரண்டு விளக்குகள் தவிர்த்து மற்றவை அணைத்து வைக்கப்பட்டிருந்தன.இரவின் ஆழ்ந்த நிசப்தத்தில் ஒரு கழிவறைக் கதவின் அடியிலிருந்து குருதி வழிந்தோடுகிறது. கழிவறைக்குள் ஒரு இளம்பெண் தனது வேதனையை வெளிப்படுத்த முடியாமல் அடக்கும் இறுக்கமான உறுமல் எதிரொலிக்கிறது. பருவமெய்தி முன்று வருடங்கள் மட்டுமே கடந்திருந்த நித்யாவை சிறுமியென்றும் யுவதியென்றும் சொல்லமுடியாதபடி இப்போது அவளது தோற்றம் மாறிப்போயிருந்தது, அவளுக்கு அருகில் அவளையொட்டியிருந்த மலர் அவளின் கால்களுக்கிடையில் அமர்ந்து


“அவ்ளோதான். புஷ்.. இன்னும் கொஞ்சம் புஷ் பண்ணு நித்யா..”


என சத்தமில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். இன்னும் புஷ் பண்ணு என மலர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நித்யாவிற்கு மூச்சு பெரிதாகி அவள் கால்களுக்கிடையிலிருந்து சின்னஞ்சிறிய உயிர் வெளியேறுகிறது. அவளே இன்னுமொரு குழந்தை என்பதைப் பொருட்படுத்தாமல் கண்மூடி சுருண்டு வரும் குட்டிக் குழந்தையை மலர் தன் கைகளில் ஏந்திக் கொண்டு, கீழே சுருண்டு கிடக்கும் நித்யாவின் துப்பட்டாவில் சுற்றிக் கொள்கிறாள். குழந்தை வெளியேறிவிட்ட ஆறுதலில் நித்யா பெருமூச்சுவிட, மலர் கையிலிருந்த மெல்லிய கத்தியால் தொப்புள்கொடியை கத்தரித்துவிடுகிறாள். மலர் தன் கைகளில் இருக்கும் குழந்தையை நித்யாவிடம் தூக்கிக் காட்ட, சிரிப்பதா அழுவதாவெனத் தெரியாமல் நித்யா குழப்பத்தோடு பார்க்கிறாள். அவளின் காலடியில் அவ்வளவு நேரமும் யூ ட்யூபில் ஓடிக் கொண்டிருந்த வீடியோ முடிந்து விளம்பரம் ஓடத் துவங்குகிறது.


மலர் நித்யாவின் தோள்களைத் தட்டிக் கொடுத்து, ‘அவ்ளோ தான் முடிஞ்சிருச்சு, நீ ட்ரெஸ்ஸ மாத்து.’ என்றதும் அவளின் கையிலிருக்கும் குழந்தையைப் பார்த்து “இப்ப இத என்ன செய்றதுன்னு நெனச்சா பயமா இருக்குடி” என்று கவலையாய்ச் சொல்லியபடியே உடையை மாற்றுகிறாள். மலர் குழாயைத் திறந்துவிட நீரின் வேகத்தில் அவர்களின் கால்களைச் சூழ்ந்த குருதி வேகமாய் நீரோடு கலந்து கழிவறைக்குழிக்குள் செல்கிறது.

கழிவறையின் கதவு திறந்து அவர்கள் வெளியே வருகிறார்கள். அந்த வளாகத்தின் ஒரு மூலையில் இருக்கும் பெரிய குப்பைத் தொட்டியில் துப்பட்டாவால் சுற்றப்பட்ட குழந்தையை மலர் போடப் போக, அவசரமாகத் தடுத்து நிறுத்தும் நித்யா ஒருமுறை அதன் நெற்றியில் முத்தமிடுகிறாள். குழந்தையை குப்பைத் தொட்டியில் வைத்துவிட்டு இருவரும் வேகமாக அங்கிருந்து நகர்ந்து வெளிச்சமில்லாத தங்கும் அறைகளை ஒவ்வொன்றாக கடந்து வருகிறார்கள். அறைகளில் பாடல் கேட்டபடியும் துணிகள் மடித்து வைத்தபடியும் இருக்கும் மாணவிகள் ஒருவரும் இவர்களை கவனிக்கவில்லை. நித்யாவிற்கு உடலில் நடுக்கம் அதிகமாகி மயக்கம் வருவது போலிருக்க, மலரின் தோள்களை இறுகப் பற்றிக் கொள்கிறாள், திடீரென குப்பைத் தொட்டியிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்க, இருவரும் திடுக்கிட்டு அப்படியே நிற்கிறார்கள். மொத்த விடுதியையும் உரத்து அழைக்கும் மூர்க்கத்தோடு குழந்தையின் அழுகுரல் அதிகமாக எல்லா அறைகளிலும் வராண்டாவிலும் அவசரமாக விளக்குகள் ஒளிர்கின்றன. திகிலைடைந்த நிலையில் இருவரும் உறைந்து நிற்கிறார்கள். நித்யா மலரின் தோள்களிலேயே அதிர்ச்சியில் மயங்கிச் சரிய, அறைகளிலிருந்த மாணவிகள் வேகமாய் வெளியே வந்து பார்க்கிறார்கள். குழப்பத்தோடு பார்க்கும் மலரின் பதட்டத்தைப் பொருட்படுத்தாமல் குழந்தையின் அழுகுரல் முன்னைவிடவும் சத்தமாய் எதிரொலிக்கிறது.

2


அந்த தனியார் மருத்துவமனையின் உள் நோயாளிகளுக்கான அறையில் நித்யா அயர்ந்து உறங்க, அவளருகில் இருக்கும் தொட்டிலில் அவளின் குழந்தை கைகால் அசைத்தபடி தனனையே உற்று நோக்கியபடியிருக்கும் ஞானசேகரனைப் பார்க்கிறது. சலனமில்லாத அவரது முகத்தில் ஆத்திரமும் வெறுப்பும் நிரம்பியிருக்க, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டுத் திரும்புகிறார். அழுது வீங்கின முகத்துடன் அவரின் மனைவி வசந்தி “அவங்க வந்திருக்காங்க...” என்று தழுதழுத்த குரலில் சொல்கிறாள். ஞானசேகரன் தன் குழந்தையையும் குழந்தையின் குழந்தையையும் ஒருமுறை பார்த்துவிட்டு வசந்தியோடு வெளியே செல்கிறார்.மருத்துவமனைக்கென்ற பிரத்யேக அமைதி எங்கும் நிரம்பியிருக்க, அந்த வளாகத்திலிருக்கும் சிலர் ஞானசேகரனைப் பார்த்து ஏதோ சொல்கிறார்கள். ஒருவரையும் பொருட்படுத்தாமல் அவர் வேகமாக வெளியே வருகிறார். மருத்துவமனைக்கு முன்பாக கேண்டின் செல்லும் வழியில் இருபுறமும் செயற்கை புல்வெளிகள் அமைக்கப்பெற்று செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அதன் மையமாய் செயற்கை நீரூற்று. நீரூற்றில் அமைதியே வடிவாய் வீற்றிருந்த புத்தர். அந்தச் சூழலுக்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் அருண் தன் பெற்றோருடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஞானசேகரனுக்கு கோவத்தில் உடல் துடித்தது. கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் அவருக்கு முன்பாகவே வசந்தி வேகமாகச் சென்று அந்தப் பையனை அறைகிறாள். ஆங்காரமாக அவள் திட்டியபடியே அடிக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் திரும்பிப் பார்க்க, ஞானசேகரன் “வசந்தி அவசரப்படாத பேசிக்கலாம்.”என அவளைக் கட்டுப்படுத்துகிறார். அவ்வளவு நேரமும் தன் மனைவியின் முகத்திலிருந்த இயலாமை விலகி இப்போது ஆத்திரம் புகுந்திருப்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. சிரமப்பட்டு அவளை நிறுத்த முயன்றும் வசந்தி அருணை இன்னொரு முறை அறைகிறாள்.

“தேவ்டியாப் பையா அரிப்பெடுத்தா வேற எவகிட்டயாச்சும் போக வேண்டிதானடா?...” அவள் முகம் ஆத்திரத்தில் துடிக்க, அடிவாங்கிய முகத்துடன் அவளை எதிர்கொள்ளத் திராணியின்றி அருண் தலையைக் குனிந்து கொண்டான். அருணுக்குப் பின்னால் நின்றிருந்த அவனின் அம்மா, “அரிப்பெடுத்து படுத்தது என் பையன் மட்டுமில்ல, உங்க பொண்ணும் தான்... அதனால கை நீட்ற வேலையெல்லாம் வெச்சுக்காதிங்க. உங்களுக்கு மரியாதையா இருக்காது.” என அழுத்தமாகச் சொன்னாள். அசாதாரணமானதொரு சூழல் உருவாகிவிடக்கூடுமென்பதை உணர்ந்து கொண்ட அருணின் அப்பா தன் மனைவியை அமைதிப்படுத்துவிட்டு, ஞானசேகரனைப் பார்த்து, “இதோ பாருங்க, சண்ட போட்டு பிரயோஜனம் இல்ல. அடுத்து என்னங்கறதப் பேசுவோம்.” என்று சொன்னார்.


ஞானசேகரன் வெறுப்பை விழுங்கியபடி “அடுத்து என்ன இருக்கு? புள்ள பெத்துக்கற வயசா என் பொண்ணுக்கு?” என்று கலங்க, “இல்லதான் ஸார். ஆனா பெத்துக்கிட்டாங்களே... பிரச்சனைய பேச வேணாம். சொல்யூசன பேசுவோம்னு சொல்றேன்.” என்று அருணின் அப்பா நெருங்கிச் சென்றார். வசந்தியும் ஞானசேகரனும் அமைதியாக இருக்க, அந்த அமைதியின் பின்னால் மையங்கொண்டிருக்கும் கசப்பையும் ரெளத்திரத்தையும் புரிந்து கொண்ட அருணின் அப்பா ஞானசேகரனின் தோள்களை ஆதரவாகப் பற்றி அழைத்துச் சென்றார். அவர்கள் நான்கு பேரும் அந்த காரிடரின் ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளாத அமைதியில் என்ன செய்வதெனத் தெரியாத அருண் கேண்டின் நோக்கி வேகமாய்ச் சென்றான். திரும்பி வருகையில் எல்லோருக்கும் தேநீர் எடுத்து வருகிறான். ‘டீ எடுத்துக்கங்க அங்கிள்’ என ஞானசேகரனிடம் சொல்வதைக் கேட்டு வசந்தி அவனை முறைக்கிறாள். அவளை அச்சத்தோடு பார்த்தபடி, ‘நீங்களும் எடுத்துக்கங்க ஆண்ட்டி’ என சிரிக்க முயல, அந்த சிரிப்பு அபத்தமாய் தேங்கி நின்றது.


“ரெண்டு பேருமே படிக்கனும், நல்ல பொசிஷன் போகனும். சின்னப் பசங்க வேற. நாளைக்கே இவங்களுக்கு வேற யார் மேலயாச்சும் இன்றஸ்ட் வரலாம்.”


என்று அருணின் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவசரமாக அருண் இடைமறித்து, “அதெல்லாம் வராது. எனக்கு நித்யாவ மட்டுந்தான் புடிக்கும்.” என்று சொல்ல, அருணின் அப்பா அவனை முறைக்கிறார். “நான் பேசிட்டு இருக்கன் ல...” அவன் அமைதியானான்.


“ஃப்யூச்சர் ல எப்பிடி வேணாலும் அவங்க மாறலாம். ஸோ, இப்போ இந்தக் குழந்தைய யாருக்காச்சும் தத்துக் குடுத்துடலாம். அப்பதான் பசங்களுக்கும் ரெண்டு ஃபேமிலிக்கும் பிரச்சன இல்லாம இருக்கும்...” என்று சொல்லி முடித்தார்.


கையிலிருந்த தேநீர் கப்பை எரிச்சலோடு கசக்கி அருகிலிருக்கும் குப்பைத் தொட்டியில் போடும் ஞானசேகரன்,“பாதிக்கப்பட்டிருக்கறது என் பொண்ணும், என் குடும்பமும் தான். அவசரப்பட்டு பெத்துக்கிட்டாலும் அந்தக் குழந்த என் பொண்ணோடது. அத என்ன செய்யனும்னு நீ எனக்கு சொல்லாத.” என்று உறும, அருணின் அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.


“இங்க நின்னு சண்ட போட்டா என் பொண்ணோட பேரு ஸ்பாயிலாகுங்கறதாலயும் ஒரு மரியாதைக்காகவும் தான் உங்கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன். இல்லன்னா என் பொண்ண தொட்டதுக்கே உன் பையனோட கொட்டைய நசுக்கி இருப்பேன்.” என்று திரும்பி அருணைப் பார்க்கிறார். அருணின் அப்பாவும் அம்மாவும் வெறுப்போடு எழுந்துவிட்டார்கள்.


“ஓகே, அப்போ இந்த பிரச்சனைய லீகலா நீங்க என்ன செய்யனுமா செய்ங்க, எங்களால என்ன காம்பன்சேஷன் குடுக்க முடியுமோ குடுக்கறோம்.” என அவ்வளவு நேரமும் இல்லாத திமிரோடு அருணின் அப்பா சொல்ல, அதைக் கேட்ட மாத்திரத்தில் ஞானசேகரன் அருணின் அப்பாவை அடிக்கப் போக, வசந்தி தடுத்து நிறுத்தினாள்.


“கேணக்கூதி, நான் லீகலா போனா போக்ஸோ ஆக்ட்ல ஏழு வருஷம் உன் பையன் உள்ள போயிருவான். நீ லாம் ஒரு ஆளுன்னு உங்கிட்ட நின்னு பேசிட்டு இருக்கேன் பாரு… ங்கோத்தா போடா…” ஞானசேகரனின் உடலிலிருந்த துடிப்பையும் வேகத்தையும் கவனித்த அருணின் குடும்பத்தினர் அங்கிருந்து அவசரமாய்ச் சென்றுவிட்டனர்.

நித்யாவின் குழந்தையை வசந்தி தூக்கிக் கொள்ள, நித்யாவை அவளின் அத்தை கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வந்தாள். ஞானசேகரனும் நித்யாவின் மாமாவும் மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.


“ரொம்ப சின்னப் பொண்ணு ஸோ கேர்ஃபுல்லா பாத்துக்கங்க. இவ்ளோ நாள் எப்டி வலியத் தாங்கிக்கிட்டான்னு நினைக்கவே ஆச்சர்யமா இருக்கு.” என மருத்துவர் சொன்னபோது பதில் சொல்ல முடியாமல் ஞானசேகரனும் நித்யாவின் மாமாவும் அமைதியாய் இருந்தார்கள். “எப்பிடி ஞானசேகரன் நீங்களும் கவனிக்காம விட்டீங்க?” என மருத்துவர் குழப்பம் விலகாமல் கேட்க, ஞானசேகரனுக்கு தன்மீதே வெறுப்பாய் இருந்தது. மனதிலிருக்கும் வலியைக் காட்டிக்கொள்ளாமல் ”போர்டிங் ஸ்கூல்ல தான் டாக்டர் இருந்தா, ஹாலிடேஸ்க்கு வருவா, ஆனா இந்த வருஷம் ப்ளஸ் டூ எக்ஸாம்ஸ் இருக்குன்னு சொல்லி மூணு நாலு மாசமா வீட்டுக்கே வரல. டெய்லி ஃபோன்ல பேசறதோட சரி. எம் பொண்ண பக்கத்துல வெச்சு பாத்துக்காதது என்னோட தப்புதான் ஸார்” என்று இயலாமையோடு சொன்னார். டாக்டர் அவரின் தோள்களில் தட்டிக் கொடுத்து “அடுத்து என்ன செய்றதுன்னு யோசிங்க.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, ஞானசேகரன் திரும்பி, வாசலை கடந்து வரும் தன் மகளைப் பார்க்கிறார்.

3


அலுவலகத்திற்கு ஒருவரையும் வரவேண்டாமெனச் சொல்லி இருந்தார்கள். வீட்டில் முடங்கிக் கிடக்கவும் அவரால் இயலவில்லை. அரியலூரைச் சுற்றி இருக்கும் எல்லா சிமெண்ட் ஃபேக்டரிகளிலும் அவரது லாரிகள் தான் ஓடுகின்றன. மணல், க்ராவல் என ஃபேக்டரிக்குத் தேவையான மெட்டீரியல்களை சப்ளை செய்வதோடு ஒரு ஃபேக்டரியில் ஊழியர்களுக்கான காண்ட்ராக்டையும் எடுத்திருக்கிறார். ஊரில் எத்தனையோ பேரின் நல்லது கெட்டதுகளுக்கு அறிவுரை சொல்லக்கூடிய இடத்திலிருக்கும் அவருக்கு இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வதெனக் குழப்பம். அருகிலிருக்கும் வீட்டுக்காரர்கள் தங்களுக்குள் என்னவெல்லாம் பேசிக் கொள்கிறார்களென்பதை யாரும் சொல்லாமலேயே இவரால் புரிந்து கொள்ள முடிந்தது. சில வருடங்களுக்குள்ளாகவே அவர் குடும்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாமல் சபித்தவர்கள் ஏராளம். சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை தோண்டும்போது பின் வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட சண்டையில் அந்த வீட்டிலிருந்த கிழவி, ‘உன் குடும்பம் நாசமாப் போகும்டா, உன் மக எவனையாச்சும் இழுத்துட்டு ஓடிப்போயி நாலு பேரு நாக்கப் புடுங்கற மாதிரி உன்னயக் கேக்கறத பாத்துட்டுத்தாண்டா என் தல மயிர அள்ளி முடிவேன்’ என தன் கணத்த சரீரம் அதிர, அவிழ்ந்த கூந்தலோடு அவனுக்கு சாபமிட்டிருந்தாள். அந்த சாபம்தானோ? ஞானசேகரனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. சாலையில் தன்னைக் கடந்து செல்லும் எல்லோரும் முதுகிற்குப் பின்னால் சிரிப்பதாக தோன்றியது. ஒரே நாளில் ஊர்க்காரர்களின் மரியாதைக்குரிய தோற்றத்திலிருந்து தான் விலகிவிட்டதாக கவலை கொண்டார். உறக்கமின்மையால் ஒடுங்கிப் போயிருந்த அவர் முகத்தில் கண்களுக்குக் கீழே கருப்பு வளையமொன்று விழுந்திருந்தது. என்னப்பா இப்பிடி ஆகிடுச்சு என ஆறுதலாக ஏதேனும் சொன்னால் கூட தாங்கிக் கொள்ளமுடியாதளவிற்கு மன உளைச்சல் கொண்டிருந்தவர் இந்த களேபரங்களில் தன் மகன் சதீஷை எவ்வாறு சமாதானம் செய்வதெனத் தெரியாமல் தவித்தார். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தபோதே நித்யாவின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காதவனாய் சதீஷ்,


“ஊருக்குள்ள நம்மளுக்குன்னு மரியாத இருக்குப்பா, ஒன்னு அவ பெத்த குழந்தைய தல முழுகிடுங்க. இல்லன்னா இவளையும் சேத்து தல முழுகிடுங்க. நம்மளுக்குக் கீழ நூறு பேரு வேல செய்றான். இவள வீட்டுக்குள்ள வெச்சிருந்தா நாளைக்கு ஒருத்தனும் மதிக்க மாட்டான்.”


என காட்டமாய்ச் சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறினான். ஞானசேகரன் அவனை மறித்து, “அவ உன் தங்கச்சிடா...” என்றதும் அவரின் முகத்திலிருந்த பரிதாபத்தைப் பார்த்து, “அந்த நெனப்பெல்லாம் எப்பயோ போயிருச்சுப்பா. மொளச்சு மூணு இல விடல. அதுக்குள்ள இவளுக்கு ஆம்பள கேக்குது. அவளப் பாக்கறப்பல்லாம் கழுத்த நெறிச்சு கொல்லலாமான்னு ஆத்திரமா இருக்கு. ஒழுங்கா ஒரு முடிவெடுங்க. அதுவரைக்கும் வீட்டுக்குள்ள நான் கால வெக்க மாட்டேன்.” என்று சொன்னவன் தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.


நித்யா தனது அறையை விட்டு எங்கும் வெளியேறாமல் முடங்கிக் கிடந்தாள். தானே இன்னுமொரு குழந்தைதான் என்கிற நிலையில் தனக்குப் பிறந்த இந்தக் குழந்தையை இனி எப்படிப் பார்த்துக் கொள்ளப் போகிறோமென கவலை அதிமானது. ஆசை இச்சை காதல் எல்லாம் இப்பொழுது சுமையாகவும் பாரமாகவும் மாறிப்போயிருந்தது. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறவில் இழப்புகள் ஏன் பெண்களுக்கு மட்டுமானதாகவே இருக்கிறது, அருண் எப்போதும் போல் பள்ளிக்கூடம் சென்று வருகிறான். தான் திரும்பவும் பள்ளிக்கூடம் செல்வதை நினைத்தாலே அவளுடல் வியர்த்து படபடப்பு அதிகமானது.


பாதி திறந்திருக்கும் கதவின் வழியாய் அறைக்குள் சூரிய வெளிச்சம் விழ, தரையில் பிரதிபலிக்கும் பொன் கதிர்களைக் கடந்து ஞானசேகரன் உள்ளே வந்தார். கையிலிருக்கும் ஜூஸ் டம்ளரை அவளருகிலிருக்கும் டேபிளில் வைத்துவிட்டு அமைதியாக உட்காந்தபின் இருவருக்கும் நடுவில் மெளனம் மட்டுமே நிரம்பியிருந்தது.


“ப்பா...”

நித்யாதான் மௌனத்தைக் கலைத்தாள். ஞானசேகரன் வெறுமனே எங்கோ பார்த்தபடி “ம்ம்ம்...” என்றதும்

“ஸாரிப்பா...” நித்யாவின் குரல் தழுதழுத்தது. தன் கையை எடுத்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டவளை பார்த்த ஞானசேகரன் “அவசரப்பட்டுட்டியே பாப்பா... கொஞ்சம் யோசிச்சிருக்க வேணாமா?”

கண் கலங்கினார்.

“ஆச இருந்தப்போ யோசிக்கத் தோணலப்பா, எல்லாம் நடந்ததுக்கு அப்றம் எப்டி சொல்றதுங்கற பயந்தான் இருந்துச்சு, பிரச்சனைய சால்வ் பண்ணனும்னு புத்திக்குத் தோணலப்பா...’


நித்யா தன் இயலாமையை வெளிப்படுத்தினாள். பற்றியிருந்த கையால் அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். அவளின் கையை விலக்கியபடியே “அந்தப் பையன என்ன செய்யட்டும்?” என ஞானசேகரன் கேட்க, புரியாமல் பார்த்த நித்யா “என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலப்பா?” என்றபடியே கட்டிலில் சரியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.


“ஆளுங்கள வெச்சு கையக் கால எடுத்துடச் சொல்லவா?” அவர் குரலில் இப்போது குரோதம் கொப்பளித்ததைக் கண்டு அதிர்ந்து போனவளாய், “என்னப்பா பேசறீங்க? அவன நான் லவ் பன்றேன். அவன் என்னோட குழந்தையோட அப்பா. அவனப் போயி அடிப்பேன் வெட்டுவேன்னு சொல்லிட்டு இருக்கீங்க” என்று சொல்லவும், ஆத்திரத்தில் ஞானசேகரன் மேஜையிலிருக்கும் பொருட்களை தள்ளிவிட்டு வேகமாக எழுந்து சென்றார்.


யாருக்கும் வேண்டாதவளாகிப்போன தன் இயலாமையை நினைத்து அவளுக்கு உடல் கசந்தது. வீட்டிற்குள் நுழையும்போது சதீஷ் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் அவளை வதைத்துக் கொண்டுதானிருக்கிறது. எத்தனை அன்பானவன், தனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான்? எல்லா அன்பும் எப்படி ஒரே நாளில் வெறுப்பாய் மாறிப்போனது? அந்த அன்பு நிஜமா? அல்லது இந்த வெறுப்பு நிஜமா? அவன் தான் அப்படியென்றால் அப்பாவுமா மாறிப்போக வேண்டும். பசியில் குழந்தை அழ அதன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் வேறு பக்கமாகத் திரும்பிப் படுத்தாள். குழந்தையின் அழுகுரல் அந்த அறையைத் தாண்டி இப்பொழுது வீடு முழுக்க எதிரொலிக்க, ‘ஏய் சனியனே புள்ள அழுகுதுல்ல, பாலக் குடுத்துத் தொல.’ என சமையலறையிலிருந்து அம்மா அலறினாள். வேண்டா வெறுப்பாய் எழுந்து குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு பாலூட்டத் துவங்கினாள்.


போர்டிங் ஸ்கூலில் எத்தனை விளையாட்டுத்தனங்களோடும் உற்சாகத்தோடும் இருந்தோமென்பதை நினைக்க ஏக்கமாய் இருந்தது. அருண் மீது அவளுக்கு வெறுப்போ கோவமோ இல்லை. ஆணின் ஸ்பரிசம் எத்தனை வசீகரமானதென்பதை அவளுக்கு உணர்த்தியவன். அந்தப் பெரிய பள்ளிக்கூடத்தின் எல்லா ரகசிய இடங்களையும் தெரிந்து வைத்திருந்தவன் அந்த இடங்களுக்கு அவளையும் அழைத்துச் சென்றான். அவர்களுக்கும் முன்பாகவே வேறு மாணவ மாணவிகள் அதேயிடத்தில் மூச்சடக்கி உச்சம் கண்டிருந்ததெல்லாம் நடந்திருந்தாலும் தாங்கள் அவர்கள் எல்லோரையும்விட தனித்துவமானவர்களென்கிற கர்வம் இவர்களுக்கு இருந்தது. அவர்கள் அதிகமும் கூடுவது மைதானத்தின் ஓரமாய் கேலரியும், அதற்குப் பின்னால் இருக்கும் பழைய கழிவறையிலும் தான். மாலை நேரங்களில் ஆளரவமின்றி ஆழ்ந்த அமைதியில் அவ்விடம் உறைந்து கிடக்கும். தனித்து விடப்பட்ட அடுத்த நொடியே அருண் நித்யாவை தடவி முத்தமிடத் துவங்குவான்.


“என்னய பேசவே விடமாட்டியா?” என அவனை தன்னிலிருந்து விலக்க முயல்வாள், அருண் தொடர்ந்து தடவியபடியே


“பேசுடி எனக்கு காதுக்கு கேட்கும். அதுவரைக்கும் கை ஏன் சும்மா இருக்கனும்.” என்று சிரிப்பான். அவனிடமிருக்கும் அந்த தகிப்பு, அத்தனை எளிதில் அடங்காது. தன்னுடலின் ரகசியங்கள் எதையும் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே முழுமையாய் அவனுக்குக் கொடுத்திருந்தாள். நேரில் பார்க்கையில் நெருங்கவிடக் கூடாதென எடுக்கும் முடிவுகள் பார்த்த நொடியில் காணாமல் போய்விடும். அவன் விரல்களுக்கு எல்லாவற்றையும் மறந்துபோகச் செய்யும் வித்தை தெரிந்திருந்தது. சில மாதங்களுக்கு முன்னால் அதன் விபரீதத்தை முதல் முறையாய்த் தெரிந்து கொண்ட நாளில்தான் அவள் செய்யக்கூடாத ஒன்றை செய்த பதட்டத்திலிருந்தாள். எப்போதும்போல் அவளை நெருங்கி ஆவேசமாய் முத்தமிட்டவனை அவசரமாக விலக்கிய நித்யா


“சனியம் புடிச்சவனே இப்பயாச்சும் என்னயப் பேச விட்றா.” எனக் கத்தினாள். கண்களில் வெளிப்பட்ட கொதிப்பையும், கால்சட்டைக்குள் கிடந்த குறியின் துடிப்பையும் அடக்கிக் கொண்டு ‘என்னாச்சு இப்ப? என சாதாரணமாய்க் கேட்டான். நித்யா பதட்டம் கூடியவளாயிருந்தாள்.


“எனக்கு பயமா இருக்கு அருண்... ரெண்டு மூணு மாசமா பீரியட்ஸ் வரல. நானும் இது அடிக்கடி வர்ற பிரச்சனைதானன்னு விட்டுட்டேன். ஆனா இப்போ கன்சீவா ஆகியிருப்பனோன்னு பயமா இருக்கு. டாக்டர பாத்துடலாமா? ”


அவ்வளவு நேரமும் இருந்த துடிப்புகள் அடங்கி சடாரென அவன் குறி சுருங்கிப்போனது. முகத்தில் இருளடைந்தவனாய்,

“டாக்டரப் பாத்து என்னன்னு சொல்லுவ? எவ்ளோ பிரச்சன வரும்ன்னு தெரியுமா?” என படபடத்தான்.

“அதுக்காக இப்டியே இருந்து பிள்ளய பெத்துக்க சொல்றியா?”


என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அருணுக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.


“கொஞ்சம் பாதுகாப்பா இருந்திருக்கலாமே நித்யா...” என முனகினான். உடலைப் பகிர்ந்து கொள்ளும்போது அவனிடமிருந்த ஆண்மைத்தனமெல்லாம் காணாமல் போய் தான் இன்னுமொரு சிறுவன் தானென்கிற கையறு நிலையில் அவன் தெரிந்தான். பொங்கிய ஆத்திரத்தில் அவனை ஓங்கி அறைந்தவள்,

“நான் பாதுகாப்பா இருந்திருக்கனுமா? தேவ்டியாப் பயலே...” அங்கிருந்து சென்றுவிட்டாள்.


தனது விருப்பமே இல்லாமல் தனக்குள் வளரும் புதிய உயிரை எப்படியும் அழித்துவிடும் முடிவோடு அவள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று கருவைக் கலைத்துவிடலாமென மலர் சொன்ன யோசனையைக் கேட்டு அவளோடு அங்கு சென்றவளுக்கு வாசலைக் கடந்து உள்ளே செல்லும் துணிவில்லை. அதன்பிறகு அருண் அவளுக்கு ஒரு டேப்ளட் வாங்கி வந்து குடுத்தும் அதனால் வயிறு வலி அதிகமாகி அவள் துடித்துப்போனதுதான் மிச்சம். உயிர் தன்னை இறுக்கமாய் அவளோடு பிணைத்துக் கொண்டுவிட்டது.


வார இறுதியில் ஒருநாள் விடுதியிலிருந்து வெளியே சென்றுவர மாணவ மாணவிகளுக்கு அனுமதியுண்டு. அந்த வாரயிறுதியில் நித்யாவை சமாதானப்படுத்தி புதுக்கோட்டையில் தனக்குத் தெரிந்த ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். ஐயனார்குளத்தை ஒட்டிய வீதியிலிருந்த சின்ன க்ளினிக் அது. டாக்டர் அருணின் அப்பாவோடு பள்ளியில் படித்தவர் என்பதால் அவரை அத்தையென்றுதான் உரிமையோடு அழைத்தான். தன் சமவயது பெண்ணோடு தன்னைத் தேடி வந்ததிலேயே பிரச்சனையை யூகித்திருந்தபோதும் நித்யாவை பரிசோதித்தபின் டாக்டர் அதிர்ந்து போனார்.


“இடியட் என்னடா செஞ்சு வெச்சிருக்க? அப்பிடி என்ன அவசரம்?”

அவரிடம் வெளிப்பட்ட பதட்டத்தில் அருணுக்கு உள்ளங்கால் வியர்த்தது.


”என்னோட கேர்ள்ஃப்ரண்ட் ஆண்ட்டி. ஏதோ கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம். நீங்கதான் எப்டியாச்சும் சரி பண்ணனும்” என அழும் குரலில் சொன்னான்.


“பேபி முழுசா வளந்திருச்சு அருண். இதுக்கு அப்றம் அபார்ட் பண்ணா இந்தப் பொண்ணோட உயிருக்கு ரிஸ்க். உடனே ரெண்டு பேர் வீட்லயும் பேசி சரி பண்ணப் பாருங்க...” என பக்குவமாகச் சொன்னார். இருந்த ஒரே நம்பிக்கையும் கைவிட்டுப்போன ஏமாற்றத்தில் இருவரும் சோர்ந்து போனார்கள்.


அதன்பிறகு வந்த நாட்களை இப்போது நினைத்தாலும் அவளுக்கு உடல் கசந்தது. அந்த கர்ப்பத்தை மறைக்க எத்தனை பொய்கள்? எத்தனை காயங்கள்? தன் நெஞ்சோடு பிணைந்து கண்மூடிக் கிடக்கும் இந்தக் குழந்தை தனக்கு வரமா? சாபமா? இனி தன்னை யார் ஆதரிப்பார்களென துயருற்றாள்.


4

நித்யாவின் குழந்தையை விடவும் அவளின் மீதான அவதூறுகளும் இழி சொற்களும் வேகமாய் வளர்ந்து ஊரைச் சுற்றி வந்துகொண்டிருந்தன. பள்ளிக்கு இனி வரக்கூடாதென அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்குக் கடிதம் வந்தபோது பள்ளியின் மீது வழக்குத் தொடுக்க வேண்டுமென ஞானசேகரன் ஆத்திரப்பட்டார். அதில் எந்த பிரயோஜனமும் இல்லை, நித்யா தேர்வு எழுத வேண்டியதுதான் மிச்சம், இனி பள்ளிக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கப் போவதில்லை. தேர்வுக்கு எப்படிச் செல்வதென்பதுதான் அவளுக்கிருந்த கேள்வி. சதீஷ் அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ளத் துவங்கினான். ஞானசேகரனின் அண்ணன் குடும்ப ஜோஸ்யரை அழைத்து வந்து குறி பார்த்தபோது ‘இது உங்க பொண்ணோட தப்பு இல்ல, குடும்பத்துல யாரோ எப்பவோ செஞ்ச பாவம் உங்க பொண்ண சுத்தியடிச்சிருக்கு.’ என சேகரனைப் பார்த்துச் சொல்லிவிட்டு ‘ஒருக்கா உங்க குடிசாமி கோவிலுகுப் போயி பூசையப் போட்டுட்டு வந்துடுங்க. எல்லாம் சரியாப் போகும்.’ என்று சொல்லிவிட்டுப் போனார். நித்யா கோவிலுக்கு வருவதாக இருந்தால் எங்கள் யாருக்கும் விருப்பமில்லையென உறவினர்கள் விலகிக் கொண்டதால் சேகரனும் நித்யாவும் மட்டும் ஒருநாள் பிற்பகல் கிளம்பிச் சென்றார்கள்.


அரியலூரிலிந்து செந்துரை, செந்துரை கடைவீதியிலிருந்து இடது புறம் திரும்பும் சாலையில் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருங்களாகுறிச்சி. அந்த சின்னஞ்சிறிய கிராமத்திற்கு வெளியே இருக்கும் அந்த கோவிலில் ஞானசேகரனும் நித்யாவும் அமைதியாக சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தன் காவல் தெய்வமான பச்சாயி பூங்காயி இருவரையும் அமைதியாக பார்த்து வணங்கியவரின் மனதிற்குள் கடும் போராட்டம். அவர் மனதிலிருக்கும் போராட்டங்களை அறியாதவளாய் நித்யா குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள். வழமைக்கு மாறாக சூரியன் சற்று சீக்கிரமாகவே மேகங்களுக்குள் மறையத் துவங்க, ‘லேட் ஆச்சும்மா, வா போகலாம்’ என அழைத்தார். செந்துரை செல்லும் சாலையில் கார் திரும்பியபோது அந்நாளின் முதல் மழைத்துளி பூமியை நனைத்தது.


பென்னாடம் சிமிண்ட் ஆலைக்குச் செல்லும் டாரஸ் லாரிகள் மெதுவாய் உருண்டோடிக் கொண்டிருந்தன. இரு பக்கங்களிலும் ஆளரவம் பார்த்தபடியே ஞானசேகரன் மெதுவக காரை ஓட்டினார். மழை வலுக்கவில்லை. வெறும் தூறல்தான். ஒரு முடிவுக்கு வந்தவராய், ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தார். என்ன நடக்கிறதெனப் புரியாமல் நித்யா, ’ப்பா என்னாச்சுப்பா?”எனக் கேட்டபடி பின்னால் இறங்கிச் செல்கிறாள். ஒடுங்கிய காட்டுப்பாதை, கற்றாழை செடிகளும் முள் மரங்களும் அடர்ந்திருக்க நித்யா அவரை கூப்பிட்டபடியே பின்னால் செல்ல, அவளைத் திரும்பிப் பார்க்காமல் அவர் வேக வேகமாய் நடந்தார். ஆலமரங்கள் நிறைந்த பழைய குளம் ஒன்றை அடைந்ததும் நின்றுவிட்டார். பின்னால் வேகமாக வந்த நித்யாவுக்கு மூச்சு வாங்கியது. அவள் ஓடிவந்ததில் தொந்தரவாகி கையிலிருக்கும் குழந்தை அழத் துவங்கிவிட்டது. ஆலமரத்தடியில் நிற்கும் ஞானசேகரனை நெருங்கி வந்த நித்யா “என்னாச்சுப்பா?” எனக் கேட்க எதுவும் பேசாமல் அவர் அவளையும் குழந்தையையும் பார்த்தார். ஊர் ஆட்கள் அவரைக் கேலி செய்த பேச்சொலிகளும், அவரிடம் வேலை செய்யும் ஆட்களே மதிக்காமல் நடந்துகொண்டதும் அவரது மனதில் மோதி எதிரொலித்து தொந்தரவுக்குள்ளாக்கியது. இவருக்கு என்னாச்சு என்கிற குழப்பத்தோடு நித்யா அழும் தன் குழந்தையை அமைதிப்படுத்த முயற்சித்தாள். ஞானசேகரன் மனதிலிருக்கும் பதட்டமோ ரெளத்திரமோ நேரடியாக வெளிப்பட்டுவிடாமல் கவனத்துடன்,


“நித்யா, ஒரு குழந்தைய வளக்கற வயசில்ல உனக்கு. இந்தக் குழந்த வளர வளர நம்மளச் சுத்தி அவமானமும் வளரும்... இது நம்மளுக்கு வேணாம்மா...” வார்த்தைகளை வெளிப்படுத்தினார்.


“என்னப்பா பேசறீங்க? அன்னிக்கி நான் பாத்துக்குவேனு தைரியமா சொன்னது நீங்கதான. இப்ப ஏன் இப்பிடி பேசறீங்க?” நித்யா புரியாமல் அவரைப் பார்த்துக் கேட்டாள்.


“உன்மேல இருந்த அக்கறைல சொல்லிட்டேம்மா, ஆனா ஊர்க்காரவங்க பேசற பேச்ச என்னால தாங்க முடியல. கொஞ்சம் மனச கல்லாக்கிக்க. அப்பாவுக்காக. நம்ம குடும்பத்துக்காக.”


என்று சொல்லியபடியே அவளிடமிருந்து குழந்தையை பறிக்கப்போக அவள் தன் குழந்தையை இறுகப் பற்றிக் கொண்டு விலகி ஓடப் எத்தனித்தாள். ஞானசேகரன் அவளை ஓட விடாமல் பிடித்து நிறுத்தி குழந்தையைப் பறித்தார். சற்றுமுன் அழுகையை நிறுத்தியிருந்த குழந்தை இப்போது முன்னைவிடவும் சத்தமாய் வீறிட்டு அழத் துவங்கியது.


“அப்பா ப்ளீஸ்ப்பா.., இப்பிடி பண்ணாதிங்க... நான் உங்கள சாமியா நெனைக்கிறேன். என் புள்ளைய கொன்றாதிங்கப்பா..”


என காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சத் துவங்கினாள். அவளின் அழுகை தன் மனதை எட்டிவிடாதபடி மனதைக் கல்லாக்கிக் கொண்டு குளத்தை நோக்கி நகர்ந்தார். நித்யா விடாமல் அவர் காலைப் பிடித்துக் கெஞ்சுவதையும் மீறி குளத்தை நெருங்கியவரின் காதில் குழந்தை வீறிட்டு அழும் குரல் கேட்டதும் கைகள் நடுங்கிப்போயின. என்னசெய்வதெனத் தெரியாமல் அப்படியே உறைந்து போய் நின்றுவிட, நித்யாவின் ஓலம் அந்தப் பகுதி முழுக்க எதிரொலிக்கத் துவங்கியது. நடுங்கிய கைகளோடு அழுதபடி மரத்தடியில் உட்கார்ந்தவரின் கைகளிலிருந்து நித்யா தன் குழந்தையை பறித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து ஓடினாள். சூரிய வெளிச்சம் கொஞ்சமே மிஞ்சியிருந்த அந்த அந்தி வேளையின் தூறலுக்கு பொருத்தமில்லாமலிருந்தது அவரின் அழுகை.


வீட்டில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை, யோசிக்காமல் செய்துவிட்ட பிழைக்கு அவளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பதெனத் தெரியாமல் நொறுங்கிப்போனார். தனது அறையின் கதவுகளை இறுக சாத்திக் கொண்ட நித்யா தன்னை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டாள். நீண்ட நேரத்திற்குப்பின் அறைக்கதவை ஞானசேகரன் தட்டியபோது அவள் பயத்தோடு தன் படுக்கையில் முடங்கிக் கொண்டாள்.


“பாப்பா, ஸாரிடா.. அப்பா அவசரப்பட்டுட்டேன். மன்னிச்சுக்கோ..”


கதவிற்கு வெளியிலிருந்த அவரின் குரலுக்கு நித்யா பதில் சொல்லாமலிருக்க தொடர்ந்து கதவு தட்டப்பட்டது. அந்த சத்தத்தில் எரிச்சலுற்ற நித்யா,

“எனக்கு உங்க மூஞ்சியப் பாக்க பிடிக்கலப்பா. ப்ளீஸ் போயிருங்க...” எனக் கத்தியதும் கதவு தட்டும் சத்தம் நின்றுபோனது.


வீட்டு மொட்டை மாடியில் படுத்திருந்த ஞானசேகரனுக்கு தூக்கத்தில் தெளிவற்ற கனவுகளாக ஒரு இளம்பெண்ணும் ஆணும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் வந்து தொந்தரவு செய்தன. சடாரென அதிர்ந்து விழித்துப் பார்க்கையில் அவரைச் சுற்றிலும் இருள். தண்ணீர் எடுத்துக் குடித்தவர் உறக்கம் வராமல் எழுந்து கீழே செல்கிறார். வாசலில் கட்டப்பட்டிருக்கும் நாய் அவரின் அசைவைக் கண்டு எழுந்து குரைக்க, அதன் குரைப்பொலியைப் பொருட்படுத்தாமல் வாசல் கதவைத் திறந்து வெளியே செல்கிறார். ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த அந்த வீதியின் நிசப்தத்தைக் கலைத்தபடி ஸ்டார்ட் ஆனது அவரின் இரு சக்கர வாகனம். மனம் ஒரு நிலையிலில்லாமல் தூக்கம் தொலைந்த விழிகளுடன் சென்றவர், கைவிடப்பட்ட சாலையில் ஒரு குப்பைத் தொட்டியினருகில் தெருநாய்கள் தங்களின் உணவிற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தைப் பொருட்படுத்தாமலே கடந்து சென்றார்.


கல்லங்குறிச்சி செல்லும் சாலையிலிருந்து தாமரைக்குளத்திற்குப் பிரியும் பழைய மண்பாதையை ஒட்டி வாகனத்தை நிறுத்தியவர் சற்றுத் தொலைவிலிருந்த சிமெண்ட் ஃபாக்டரியை அமைதியாகப் பார்த்து நின்றார். மனதிலிருக்கும் அத்தனை குழப்பங்களுக்குமான விடைகள் தான் என்ன? விடியலுக்கு இன்னும் எவ்வளவு நேரமிருக்கும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சாலையோர மரங்களில் பதுங்கியிருந்த ஆந்தைகள் அந்த வினோத மனிதனைக் கண்டு சப்தமெழுப்பின. அவர் முகத்தில் பதட்டமும் கலவரமும் நிரம்பியிருக்க, ஒரு பெண்ணின் அழுகுரலும் மரண ஓலமும் மீண்டும் எதிரொலிக்கின்றன. அந்த நினைவில் ஸ்தம்பித்து உறைந்து கிடந்தவரை சலனப்படுத்தும் விதமாய் இப்பொழுது ஒரு டாரஸ் லாரி நெருங்கி வந்தது. லாரியை கவனிக்காமலேயே நின்றவரை ஹார்ன் சத்ததம் சிந்தனையிலிருந்து மீட்டதும் அவர் பதட்டத்தோடு திரும்பிப் பார்க்க, லாரி ட்ரைவர் ஆச்சர்யமாக


“என்னாச்சு முதலாளி இந்த நேரத்துல இங்க நிக்கிறீங்க?” எனக் கேட்டார். ஞானசேகரன் சுதாரித்து ”மைன்ஸ் ல நம்ம லாரி ஏதோ ப்ரேக் டவுன்னு பசங்க சொன்னாங்க அதான் வந்தேன். நீ போ..” என்று சொல்ல, “சரிங்க முதலாளியென” என தலையாட்டிவிட்டு ட்ரவைவர் ஃபேக்டரிக்கு செல்லும் சாலையில் வாகனத்தைச் செலுத்தினார்.5


இப்போதிருக்கும் சூழலில் இவனைப் பார்க்க வேண்டுமா என்கிற தயக்கம் அவருக்கு இருந்தபோதும், மகளை சமாதானப்படுத்த வேண்டியேனும் இதைச் செய்யலாமென நினைத்துக் கொண்டார். பகல்நேரத்தின் லயா ஹோட்டலில் பெரிய கூட்டமில்லை. எதிரில் அமர்ந்திருந்த அருண் பதட்டத்தோடு காணப்பட்டான். அவனே பேசத் துவங்கட்டுமென ஞானசேகரன் பொறுமையாய்க் காத்திருந்தார்.

“நீங்க செஞ்சது தப்பு அங்கிள். நித்யா ரொம்ப ஃபீல் பண்ணா?” என்று சொன்னவனை ஞானசேகரன் முறைக்க,


“நீங்க பாத்துக்குவீங்கன்னுதான அங்கிள் நானும் அவளும் தைரியமா இருக்கோம். நீங்களே இப்பிடி பண்ணா எப்பிடி?” அருணின் கண்கள் கலங்கி குரல் நடுங்க, ஞானசேகரனுக்கு ஆத்திரத்தில் உதறல் எடுத்தது. அவரால் எதும் பேசமுடியவில்லை.


“நாங்க சின்னப் பசங்கதான். எங்களுக்குக் கொஞ்சம் டைம் குடுங்க. நாங்க ரெண்டு பேருமே படிச்சு ஒரு நிலைக்கு வர்ற வரைக்கும் சப்போர்ட் பண்ணுங்க. எனக்கு அவ முக்கியம் அங்கிள். தப்பு பண்ணிட்டோம்தான். அதுக்காக சாகவா முடியும்..?


அவன் பேசுவதைக் கேட்க பொறுக்காமல் ஞானசேகரன்,


“அடிங்க தாயோலி நீ சாவுடா, என் புள்ள ஏண்டா சாகனும்.. செய்றதல்லாம் செஞ்சுட்டு, என் முன்னால எவ்ளோ நெஞ்சழுத்தமா பேசுவ?” அவனை இழுத்துப் போட்டு அடிக்க அங்கிருக்கும் ஆட்கள் அவசரமாக வந்து விலக்கி விட்டார்கள். அவன் எதிர்வினை எதுவுமில்லாமல் அமைதியாக அடிவாங்கிக் கொண்டு நின்றது அவரை இன்னும் ஆத்திரமூட்டியது. சுற்றியிருந்தவர்களை விலக்கிவிட்டு மீண்டும் அடிக்கப் பாய்ந்தார். ஒரு பெரியவர் அவசரமாய் மறித்து,


“ஏங்க ஊர்ல பெரிய மனுஷன் இப்பிடியா நடந்துக்குவீங்க. சின்னப்பயல போட்டு அடிச்சிட்டு இருக்கீங்க?” என்று சொல்ல, அருண் பெரியவரை மறித்து,


“ஸார் இதுல நீங்க தலையிடாதிங்க. இது எங்க குடும்ப பிரச்சன?” என்றதும், ஞானசேகரன் மறுபடியும் ஆத்திரத்தில்

“நீ யார்றா என் குடும்பம்னு சொல்றதுக்கு?”


என கேட்டப்டி அவனை அடித்தார். சுற்றியிருந்த ஆட்கள் எரிச்சலாகி ” குடும்ப பிரச்சனைன்னா வீட்ல போயி வெச்சுக்கங்க. பொது இடத்த குஸ்தி மைதானமா ஆக்கக் கூடாது. போங்க...” என்று சொல்ல அருண் அமைதியாக வெளியேறினான். சூழ்ந்திருந்த எல்லோரின் முன்னாலும் அவமானப்படுத்தப்பட்டதாய் உணர்ந்த ஞானசேகரன் ஒருவரையும் எதிர்கொள்ளும் திராணியின்றி அவசரமாய் அங்கிருந்து சென்றுவிட்டார்.


வீடு திரும்ப மனமில்லை. மனம் போன போக்கில் வண்டியைச் செலுத்தினார். கடந்த சில நாட்களாக எப்போதெல்லாம் ஆற்றாமை பெருக்கெடுக்கிறதோ அப்போதெல்லாம் கல்லங்குறிச்சி சாலையிலிருக்கும் சிமெண்ட் ஃபேக்டரியை ஒட்டின இந்த காட்டுப் பகுதிக்குத்தான் வந்துவிடுவார். இப்போதும் அவரை அறியாமலே அவரது வண்டி அங்கு வந்துவிட்டிருந்தது. இந்த ஆத்திரமும் இயலாமையும் அருணின் மீதா, அல்லது தன்மீதா என்கிற குழப்பத்தில் மனம் துவண்டார். இத்தனை காலத் தப்பித்தலுக்குப் பிறகு ஏன் குற்றவுணர்ச்சி மனதின் அடியாழத்திலிருந்து இப்படி மூர்க்கமாய் பொங்கியெழ வேண்டும்? ஆளற்ற மண்பாதையில் அடர்ந்து வீற்றிருந்த புளியமரத்தினடியில் நின்று யோசித்துக் கொண்டிருக்கையில் சதீஷ் அவருக்கு ஃபோன் செய்தான். “அவ பிரச்சனைய மட்டுந்தான் பாத்துட்டு இருப்பீங்களா? இங்க ஆஃபிஸ் ல என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு பாக்க மாட்டீங்களா?” என ஆத்திரத்தோடு கேட்டான்.


“டேய் எதுக்கு இப்ப அனத்தற? எதும் பிரச்சனையா?”

“ஆமா ரெண்டு வண்டிக்கு எஃப்சி முடியுது, ஏஜெண்ட் கிட்ட பேசி ரெனிவல் போடச் சொல்லனும்.”

“சரி கொஞ்ச நேரத்துல வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். உடலில் திடீரென ஒரு முதுமை புகுந்துவிட்டதைப்போல் சோர்வு கூடியிருந்தது. காற்றில் அசைந்த புளியமரத்தின் சப்தத்தினூடாக ‘என்னய நியாபகம் வெச்சிருக்கியா சேகர்..’ என்ற குரல் கேட்டு பதறித் திரும்பியவரின் தோள்களில் யாரோ கையை வைத்து கூப்பிட்டதைப் போலிருந்தது. அந்தக் குரல் நினைவிலிருந்து எதிரொலித்ததாய் இல்லை, அவருக்கு மிக அருகில் ரத்தமும் சதையுமாய் ஒலித்ததைப் போலிருந்தது. அந்தக் குரலிலிருக்கும் நேசத்தையும் பிரிவையும் அவர் மட்டுமே அறிந்தவரென்பதால் இப்போது அச்சத்தில் அவர் குறியினடியில் ஒரு அதிர்வு எழுந்தடங்கியது.


தனது அலுவலகத்தின் முன்னால் காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றவருக்கு எதிரிலிருந்த எவரையும் கவனிக்கும் நிதானமில்லை. ‘என்னாச்சுப்பா?’ எனக் கேட்ட சதீஷின் குரலும் கூட எங்கோ தொலைவில் எதிரொலித்தது. கழிவறையின் கதவைச் சாத்திவிட்டு வாஷ் பேஷினில் முகம் கழுவினார். முகத்தில் குற்றத்தின் அழுத்தமான ரேகைகளும், குருதிக்கறையும் படர்ந்திருப்பதாக அவரை அச்சம் சூழ, பதட்டம் அதிமாகி வாஷ் பேஷினைக் குத்தி உடைக்கிறார்.

சதீஷும் அலுவலகத்திலிருந்த பிறரும் கதவைத் தட்டி அவரைக் கூப்பிட, அவரின் அழுகுரல் மட்டுமே பதிலாய் எதிரொலிக்கிறது.


6


காலை நேரத்தின் பரபரப்பான போலிஸ் ஸ்டேஷன். ஒரு காவலர் வாக்கி டாக்கியில் பேசிக் கொண்டிருக்க, இன்னொருவர் லாக்கப்பில் இருப்பவர்களை கோர்ட்டிற்கு அழைத்துச் செல்லும் வேலைகளில் இருந்தார். டேபிளில் வாங்கி வைக்கப்பட்ட தேநீர்க் குவளைகளில் இருந்து சூடான தேநீரின் ஆவி பறந்து கொண்டிருக்க, அதை எடுத்துக் குடித்துவிட்டு ஒரு காவலர் ட்யூட்டி முடிந்து செல்வதன் அடையாளமய் தனது உடையை மாற்றிக் கிளம்பத் தயாரானார். வாக்கிடாக்கிகளின் சத்தம் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்க, ஞானசேகரன் தயக்கத்தோடு உள்ளே வந்தார். கலைந்த தலை, உறக்கமின்றி சோர்ந்து போன முகம், உடலில் அசாத்தியமான பாரமொன்றைச் சுமப்பதுபோல் வெளிப்பட்ட நடை. யாரிடம் சென்று பேசுவதெனத் தெரியாத குழப்பத்தில் நின்றவரைப் பார்த்து ஆச்சர்யத்தோடு ஒரு கான்ஸ்டபிள் வணக்கம் வைத்தார்.


“என்ன ஸார் காலைல யே ஸ்டேஷன் வரைக்கும்?” என்ற குரல் கேட்டு ஞானசேகரன் திரும்பி அவரைப் பார்த்தார்.


”இன்ஸ்பெக்டரப் பாக்கனும்..”

“ஐயா இப்பதான் வந்தாரு. இருங்க தகவல் சொல்றேன்...”


கான்ஸ்டபிள் வேகமாக இன்ஸ்பெக்டர் அறையை நோக்கிச் சென்றார். ஞானசேகரன் அதேயிடத்தில் அமைதியாக காத்திருக்க, சில நொடிகளுக்குப் பின் திரும்பி வந்த கான்ஸ்டபிள்

“ஸார் வாங்க ஐயா கூப்டறாரு..” என அவரை அழைத்துப் போனார். ஞானசேகரன் இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்து வணக்கம் சொல்ல, இன்ஸ்பெக்டர் சிரித்தபடியே “உக்காருங்க ஸார்.” என்றார். அவர் தயங்கியபடியே உட்கார

“சொல்லுங்க ஸார் என்ன விஷயம்?’ இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு பதிலெதுவும் சொல்லாமல் ஞானசேகரன் அமைதியாகவே இருக்க,

“எல்லாம் கேள்விப்பட்டேன். நீங்களே லீகலா ஆக்‌ஷன் எடுக்க வராததால நானும் பேசாம விட்டுட்டேன். நானும் ஒரு பொண்ணப் பெத்த தகப்பன் தான் ஸார் உங்க மனசு என்னன்னு புரியும். என்னோட ஒப்பினியின் என்னன்னா மகளோட விருப்பத்தக் கேட்டு செய்யுங்க. அதுக்கு மேல லீகலா ஆக்‌ஷன் எடுத்துதான் ஆகனும்னா சொல்லுங்க அதையும் செய்வோம்..” என ஆதரவாகச் சொன்னார். வெறுமனே தலையைத் தூக்கி அவரைப் பார்த்த ஞானசேகரன்,

“நான் அந்த விஷயமா வரல ஸார்.”

“பின்ன?”

“ஒரு கொல வழக்குல சரண்டராகனும்..”

இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போய், “வாட்?” என பதட்டமாய்க் கேட்டார். ஞானசேகரனின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.


“என்ன ஸார் சொல்றீங்க? யார கொல பண்ணீங்க? எப்போ?” என இன்ஸ்பெக்டர் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க


“இப்ப இல்ல ஸார். முப்பது வருஷத்துக்கு முன்ன செஞ்ச கொல. அப்பிடி ஒன்னு நடந்தது என்னயத் தவிர இந்த உலகத்துல யாருக்குமே தெரியாது.” என்று ஞானசேகரன் ஒவ்வொரு சொல்லையும் தயங்கி தயங்கிச் சொன்னார். இன்ஸ்பெக்டருக்கு அவர் சொன்னதைக் கேடு எரிச்சலானது.


“ஸார் எங்கள என்ன வேலையில்லாதவனுங்கன்னு நெனச்சிட்டு இருக்கீங்களா?” என ஆவேசப்பட்டார். ஞானசேகரன் அவசரமாய்,


“பொய் சொல்லல ஸார். நிஜமாவே நான் ஒரு கொல பண்ணேன். அத யாருக்கும் தெரியாம மறச்சுட்டேன்.” என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் அதைக் கேட்க பொறுமையில்லாமல் பெல்லை அடிக்கிறார். ‘ஐயா’ என்றபடியே உள்ளே வந்த கான்ஸ்டபிளை முறைத்தவர்


“யோவ் ஏன்யா காலங்காத்தால தாலியறுக்கறீங்க? லூசு மாதிரி ஒளறிட்டு இருக்காரு. என்ன ஏதுன்னு விலாவாரியா ரைட்டர வெச்சு ரிப்போர்ட் எழுதுங்க...” என கத்த,

“ஐயா நல்லதுங்கய்யா..” என்ற கான்ஸ்டபிள் ஞானசேகரனைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தார்.

176 views

Recent Posts

See All

Commentaires


bottom of page