பகுதி – 2
1
1987 ம் வருடம்.
செந்துரை ரோட்டிலிருக்கும் பழைய கட்டிடத்திலிருந்த சின்னஞ்சிறிய டுட்டோரியல் செண்டரில் ஞானசேகரன் பகுதி நேரமாய் வேலை செய்து கொண்டிருந்தார். ஞானசேகரனின் அப்பா முந்திரித் தோட்டத் தொழிலாளி. அண்ணன் ரயில்வேயில் ட்ராக்மேன் வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். தங்கச்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி முடிந்து வேலை கிடைக்காத அந்த காலகட்டத்தில் இந்த டுடோரியல் செண்டருக்கு வேலைக்கு வந்ததற்கு வருமானம் ஒரு காரணமென்றால் இவாஞ்சலின் இன்னொரு காரணம். அவள் அவனின் மாணவி. திருத்தமான முகம், அவனுக்கு இணையான உயரம், எல்லாவற்றையும் உள்ளிழுத்துக் கொள்ளும் வசீகர கண்கள், இத்தனை அம்சங்களையும் மீறி மினுக்கும் கருத்த மேனி. கழுத்திலிருந்து ஒடுங்கி இறங்கி பின் விரியும் அழகான முலைகள். எதிரிலிருப்பவரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய எல்லா அம்சங்களும் அவளிடமிருந்தன. வகுப்பில் அவள்தான் முதல் வரிசையில் அமர்ந்திருப்பாள்.
அவரை அவள் வசீகரித்திருந்ததைப் போலவே அவரும் அவளை வசீகரித்திருந்தார். மற்ற ஆண்களிடமில்லாத ஒரு வசீகரம் அவனிடமிருந்தது. சொற்களை கவனமாக செலவிடும் நிதானம். வகுப்பில் வேறு யாரும் கவனிக்காதபடி தன்னை உற்று நோக்கி நகரும் அவனது கண்கள். எப்படி துவங்கியதெனத் தெரியாமலேயே வளர்ந்திருந்தது அவர்களின் உறவு.
ஒரு செப்டம்பர் மாதத்தின் வியாழக்கிழமையில் அரியலூர் நகரத்தில் அரசியல் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட, ஊரெங்கும் கலவரம் சூழ்ந்தது. டுடோரியல் செண்டருக்குள்ளிருந்த மாணவர்கள் பதட்டத்துடனிருந்தனர். மாணவர்களை முடிந்தவரை வகுப்பறைக்குள்ளேயே பாதுகாப்பாய் வைத்திருக்கும் படி செண்டரின் முதலாளி ஞானசேகரனிடம் சொல்லியிருந்தார். ஒரு நிலைக்குப் பிறகு அங்கேயே இருக்கும் பொறுமையில்லாமல் ஒரு மாணவன்
“ஸார் எவ்ளோ நேரம் இங்கியே இருக்க முடியும்? பிரச்சன பெருசா ஆகறதுக்குள்ள நாங்க வீட்டுக்குப் போயிடறோம் ஸார்.” என எரிச்சலோடு சொல்ல எல்லோரும் அவன் சொன்னதற்கு ஆதரவாக நின்றார்கள். ஞானசேகரன் அவர்களை அமைதிப்படுத்தி,
“கொஞ்சம் பொறுங்கப்பா, வெளில நிலம என்னன்னு தெரியல. அவசரப்படாதிங்க” என்றார். மாணவர்கள் அவன் சொன்னதில் சமாதானமாகாமல் தங்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொள்ள, ஒரு மாணவி
“ஸார் அந்தப் பையன் சொல்றதுதான் சரி, இங்கேயே இருக்கறத விட நாங்க வீட்டுக்குப் போறதுதான் நல்லது. இல்லன்னா வீட்ல இருக்கவங்க தேவையில்லாம பயந்துட்டு இருப்பாங்க.’ என கவலையோடு சொன்னாள். அவனுக்கும் அவள் சொன்னது சரியெனத் தோன்ற,
‘சரி எல்லோரும் உடனெ கிளம்புங்க. யாரும் தனியா போக வேணாம். ரெண்டு மூணு பேரா சேந்து போங்க.” என எச்சரித்து அனுப்பி வைத்தான்.
எல்லோரும் கிளம்பிச் சென்றபின் இன்ஸ்டிடியூட்டில் இவாஞ்சலினும் ஞானசேகரனும் மட்டும் தனித்திருந்தனர். அவனை இறுக அணைத்து ‘பயமா இருக்கு’ என்றாள். ஞானசேகரன் அவளை சமாதானப்படுத்தி “கெளம்பலாம், நான் உனக்குத் துணைக்கு வரேன்...” என்று முத்தமிட்டான்.
ஊரில் ஆள் நடமாட்டமே இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சி செல்லும் சாலையில் இவாஞ்சலின் ஒரு சைக்கிளிலும் அவளுக்குப் பின்னால் ஞானசேகரன் ஒரு சைக்கிளிலுமாகச் சென்றார்கள். சாலையின் இருமருங்கிலும் அடர்ந்த புளியமரங்கள். எதிர்பாராத நிமிடத்தில் மழை துவங்கி வலுத்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி நின்ற இருவரும் அருகிலிருந்த பழைய மண்டபத்தை நோக்கிச் சென்றார்கள். மழையின் சத்தம் முரட்டுத்தனமாய் அவர்களைத் தாக்க இருவரின் மனதிற்குள்ளும் வெவ்வேறான எண்ண அலைகள். வழக்கத்திற்கு முன்பாகவே இருட்டத் துவங்கியிருந்தது. அவளுக்கு உடல் குளிரில் நடுங்கியது. நனைந்த பூனையின் பதட்டங்களோடு நின்றிருந்தவளின் தலையை தன் சட்டையால் துவட்டி விட்டான். அவள் கன்னத்தில் சூட்டிற்காக தன் உள்ளங்கையைத் தேய்த்து வைத்தான். இனம் புரியாத அந்தச்சூடு அவளுக்குள் கிளர்ச்சியையும் நெருக்கத்தையும் உருவாக்கியதும் அவன் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என்ன? எனக் கேட்டவனிடம் எதும் சொல்லாமல் மென்மையாய் அணைத்துக் கொண்டாள். நீண்ட நாள் காத்திருந்ததின் தவிப்புகள் எல்லாம் பெருக்கெடுத்து ஆவேசமாய் முத்தமிடத் துவங்கிய ஞானசேகரன் அவளை அவ்விடத்தில் கிடத்தி அவளின் மீது படர்ந்தான். புற உலகின் மீதான எல்லா அச்சங்களும் விலகி இருவரும் மூர்க்கமாய் கலவிகொண்டனர்.
2
ஞானசேகரனின் அண்ணனுக்கு அவர் எதிர்பார்த்திருந்தபடியே ட்ராக்மேன் வேலை கிடைத்தது. வீட்டில் எல்லோருக்கும் பெரும் ஆறுதல். பத்து ரூபய் கூலிக்கு நாள் முழுக்க முந்திரி உடைக்கும் வேலை செய்ய வேண்டிய நெருக்கடியிலிருந்து விடுதலை கிடைத்த நிம்மதி அப்பாவிற்கு. சந்தோசமாய் குடிசாமி கோவிலில் படையல் போட்டுவிட்டு வரலாமென எல்லோரையும் அழைத்துச் சென்றார். “இதே மாதிரி சின்னவனுக்கும் ஒரு வேல கெடச்சிடனும்..” என பிரார்த்தித்துக் கொண்டார்.
ஞானசேகரனுக்கு இவாஞ்சலின் மீதான பித்து அவளுடனான கூடலுக்குப் பிறகு முன்னை விடவும் அதிகரித்திருந்தது. அவள் மட்டுமே தன் எதிர்காலமாய் இருக்க வேண்டுமென விரும்பினான். ஒவ்வொரு நாளும் அவளோடு கூடுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையாதா என தவிப்பாய் இருக்கும். வகுப்பெடுக்கும் நேரங்களில் வார்த்தைகள் இயந்திரத்தனமாய் வெளிப்பட்டனவே தவிர, நினைப்பு முழுக்க அவளைச் சுற்றியே இருந்தது. அவளை நெருங்கிச் செல்ல நினைத்த போதெல்லாம் வீட்டுச் சூழல் அவனை பின்னுக்கு இழுத்து வந்தது. அண்ணன் வேலைக்குப் போய்விட்டதால் அவனும் நல்ல வேலைக்குப் போகவேண்டிய நெருக்கடியை எதிர்கொண்டான். அந்த வருடத்திற்கான வகுப்புகள் முடிந்து மாணவர்கள் தேர்வெழுதச் சென்றுவிட்டனர். இவாஞ்சலின் வகுப்புக்கு வருவதில்லை என்பதால் அவளைச் சந்திப்பதும் இவனுக்கு எளிதாய் இல்லை. அவளற்ற வகுப்பறையில் இருக்கப் பிடிக்காமல் அடிக்கடி விடுமுறை எடுக்கத் துவங்கி இருந்தான். பத்துப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவளை அந்த பழைய மண்டபத்தில் சந்திப்பதும், எப்போதாவது அவள் சர்ச்சிற்குப் போகும் போது தூரத்திலிருந்து பார்ப்பதும் தான் ஆறுதலாய் இருந்தது.
ஒரு பிற்பகலில் டூட்டியிலிருந்த அவனுடைய அண்ணன் அவசர அவசரமாய் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார். ”டே சேகரா...” உற்சாகமான அவரின் சத்தம் கேட்டு வெளியே வந்தான். அவர் சந்தோசமாக சிரித்தபடியே அவன் கையில் ஒரு லெட்டரைக் கொடுத்தார்.
“நம்ம ஆர்ட்ஸ் காலேஜ் ல யே உனக்கு லெக்சரரா போஸ்டிங் போட்டுக்காங்க.” ஞானசேகரன் சந்தோசமாக அவரிடமிருந்து லெட்டரை வாங்கிப் பார்த்தான். வாழ்வில் புதியதொரு கதவு திறந்துவிட்ட மகிழ்ச்சியில் ஸ்தம்பித்துப்போயிருக்க, அவனது அண்ணன் அப்பாவிடமும் தங்கச்சியிடமும் உற்சாகமாய் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களின் கொண்ட்டாட்டம் எதையும் பொருட்படுத்தாத ஞானசேகரன் அவசரமாய் சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவளை சந்திப்பதற்கான காத்திருப்பு ஒரு அவஸ்தை. இன்று அந்த அவஸ்தையை அவனுக்கு அவள் தந்திருக்கவில்லை. வழக்கமாய் சந்திக்கும் இடத்திற்கு வருவதாகச் சொல்லி அனுப்பியிருந்தாள். முந்திரிக்காட்டை ஒட்டிய இந்த பழைய மண்டபம், முன்பு கோவிலாக இருந்திருக்கலாம். இப்போது கடந்த காலத்தின் உறுதியான அடையாளங்களெதும் இல்லாமல் இவர்களின் அந்தப்புரமெனச் சொல்லி கொள்ளும் அளவிற்கு இவர்களுக்கு பிரத்யேகமானதாய் மாறிப்போயிருந்தது. மண்டபத்திலிருந்து தூரத்தில் செல்லும் வாகனங்களை பார்க்க முடியும், ஆனால் சாலையிலிருந்து பார்த்தால் மண்டபம் தெரியாத அளவிற்கு கருவேலஞ்செடிகளும் மரங்களும் மறைத்திருந்தன. மண்டபத்திலிருந்து சற்று தூரத்திலேயே முந்திரித் தோட்டம் இருப்பதால் இந்தப் பக்கமாய் ஆள்வரத்து அபூர்வமாகவே இருக்கும். அவள் வருகைக்காக பரபரப்போடு காத்திருந்தான். தூரத்தில் சாலையில் எப்போதாவது வாகனங்கள் போகும் சத்தம் கேட்டது. மண்டபத்தைச் சூழ்ந்த வறக்காட்டை பிற்பகல் நேரத்து வெயில் உக்கிரமாய் ஆக்ரமித்திருக்க, தூரத்திலிருந்து வந்த பறவைக் கூட்டமொன்று நீர்த்தடம் எதுவுமில்லாத ஏமாற்றத்தில் திரும்பி வேறு பக்கமாய் பறந்தன. இவாஞ்சலின் தனது சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தபோது அவன் அவளைப் பார்த்து சந்தோசமாய் சிரித்தான்.
“ரொம்ப நேரமாச்சா?”
“இல்ல கொஞ்சம் முன்னதான் வந்தேன். வா”
என அவளை மண்டபம் நோக்கி அழைத்துச் சென்றான். தன்னைப் பற்றியிருந்த அவன் கைகளை ஆதரவாய்ப் பற்றிக்கொண்டவள்,
“நானே ரெண்டு நாளா உங்களப் பாக்கனும்னு நெனச்சிட்டு இருந்தேன். நல்லவேளையா நீங்களே தகவல் சொல்லி அனுப்பிட்டீங்க” என சிரித்தாள்.
“நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். அதுக்குத்தான் வரச் சொன்னேன்.” என்றபடியே ஞானசேகரன் கையிலிருந்த லெட்டரை அவளிடம் காட்டினான்.
பதிலுக்கு இவாஞ்சலின்
“நானும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.” என தயக்கத்தோடு சொன்னாள்.
“முக்கியமான விஷயமா?” என அவன் புரியாமல் பார்க்க,
“ஆமா, நீங்க முதல்ல என்னன்னு சொல்லுங்க.” என்றாள்.
“இல்ல இல்ல நீயே சொல்லு.”
இவாஞ்சலின் தயங்கியபடியே அந்தக் கட்டிடத்தின் ஒரு இடத்தில் அமர்ந்தாள். ஒவ்வொரு சொல்லாய் யோசித்து மனதில் கோர்த்துக் கொண்டவள்,
“கோவப்படாம அமைதியா கேக்கனும்...” என ஆரம்பித்தாள்.
“ம்ம்.”
“எனக்கு ரெண்டு மூணு மாசமா தேதி தள்ளிப் போயிடுச்சு. முழுகாம இருக்கேன்னு நினைக்கிறேன். வெளிய தெரிஞ்சு பிரச்சனையாகறதுக்கு முன்ன எங்க வீட்ல வந்து பேசுங்க.” என்று அவள் சொல்ல, ஞானசேகரனின் முகம் சடாரென இருண்டது.
அவள் மேலிருந்த கையை எடுத்தவன் அங்கிருந்து எழுந்து கொண்டான். இவாஞ்சலின் பதறிப்போய் ”என்னாச்சுங்க?” எனக் கேட்க, அவள் முகத்தைப் பார்க்க எரிச்சலுற்று,
“முழுகாம இருக்கேன்னு சாதாரணமா சொல்ற? ” எனக் கத்தினான். இவாஞ்சலின் பொங்கும் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டவளாய், “அய்யோ அதனாலதான் எங்க வீட்ல வந்து பேசச் சொல்றேன்.” என மன்றாடினாள்.
“எங்க வீட்ல அவ்ளோ ஈசியா சம்மதிப்பாங்கன்னு நினைக்கிறியா? நானே டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறேன். இதக் கலச்சிடலாம். அப்பறமா நிதானமா பேசி ஒரு முடிவுக்கு வருவோம்...” என அவன் சொல்ல, இவாஞ்சலின் அவனை அருவருப்போடு பார்த்தவள்,
“அடத்தூ... உன்னய நல்லவன் தைரியமானவன்னு நெனச்சேன். இவ்ளோ கேவலமானவனா இருக்க..” என காறித் துப்பினாள்.
“புரியாமப் பேசாத. இப்பதான் வேலைக்கான ஆர்டர் வந்திருக்கு. எங்க அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. ஒவ்வொரு பிரச்சனையா சரி பண்ணிட்டுத்தான் நம்மள பத்தி யோசிக்க முடியும்..”
“எங்கூட படுக்கறப்போ மட்டும் இதெல்லாம் நியாபகத்துக்கு வரலையோ?”
அவன் அவளை ஓங்கி அறைய அவள் தடுமாறி விழப்போனாள், விடாமல் திரும்பவும் அறைந்தான்.
“நீயும் இஷ்டப்பட்டுதானடி படுத்த குச்சிக்காரி. இப்ப பழிய என்மேல தூக்கிப் போட்ற?” என பற்களைக் கடித்தபடி கத்தினான்.
”ஆமாடா, உன்னய முழு மனசோட லவ் பண்ணேன் ல நான் குச்சிக்காரி தான்... நீதான் எல்லாம்னு நம்பினதுக்கு நல்ல பட்டம் குடுத்துட்ட. போதும்டா சாமி....” ஆத்திரத்தோடு அவனை விலக்கிவிட்டு ஓரமாய்க் கிடந்த தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். அவனுடனான எதிர்காலம் குறித்து கட்டி வைத்திருந்த அத்தனை கனவுகளும் நொறுங்கிப்போன ஏமாற்றத்தில் மனம் குமைந்தது. இந்த மாதிரியான ஒருவனுடன் படுத்திருக்கிறோமே என உடல் கூச, தன் மீதான அருவருப்பில் அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அவளைத் தொடர்ந்து சென்ற ஞானசேகரன்
“என்ன முடிவுன்னு சொல்லிட்டுப் போடி.. அத கலச்சிடுவியா மாட்டியா?” என சத்தமாகக் கேட்க, நின்று திரும்பிப் பார்த்தவள்,
“உன்ன மாதிரி ஈரமில்லாதவ இல்ல நான். நான் கலைக்க மாட்டேன். எங்க வீட்ல பேசுவேன். அடிச்சாலும் மிதிச்சாலும் வாங்கிட்டு உங்க வீட்ல வந்து பேசச் சொல்லுவேன்..,” என்றாள்.
முதல் முறையாய் அவளின் மீதான ப்ரேமைகள் எல்லாம் மறைந்து அவனை அச்சம் சூழ்ந்தது. அவள் வார்த்தைகள் தந்த பதட்டத்தில் என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறி நின்றவன் சுதாரித்தபோது அவள் சற்று தூரம் சென்றுவிட்டிருந்தாள். அவசரமாய்த் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அவளைத் தொடர்ந்து சென்றான். சில நொடிகளிலேயே அவளை நெருங்கிவிட,
“லூசு மாதிரி பேசாத, நான் நம்ம நல்லதுக்குத்தான் சொல்றேன். ஒரு தடவ அவசரப்பட்டுட்டோம். கொஞ்சம் ரெண்டு பேர் வீட்டு நெலமையையும் யோசிச்சுப் பாரு.” என அவளிடம் கெஞ்சத் துவங்கினான்.
“அதுக்காக ஒரு உயிரக் கொல்லச் சொல்றியா?” என்று அவள் கேட்க,
“மூணு மாசம் கூட ஆகலடி.. பேபி முழுசா ஃபார்ம் ஆகி இருக்காது.” என்றான்.
இவாஞ்சலினுக்கு முன்னிலும் ஆத்திரம் அதிகமாக
“அடச்சீ... நீயெல்லாம் மனுஷனா? அது உன் புள்ளடா...” என்று கத்தினாள். நிலமை கைமீறிப் போவதை உணர்ந்தவனாய் அவன் “மயிராட்டம் பேசாத. புரிஞ்சுக்கோ.” என அவளைப் பிடித்து நிறுத்த முயன்றான்.
“நீ என்னயக் கல்யாணமே பண்ணலைன்னாலும் பரவா இல்ல, ஆனா என் குழந்தைய நான் சாகடிக்க மாட்டேன்..” அவனின் கைகளை தட்டிவிட்டு அவள் கோவமாக முன்னால் சென்றாள். இத்தனை நாட்களில் ஒருபோதும் அவள் அவனை மறுத்துப்பேசியதில்லை. இப்போது ஏன் இப்படி நடந்து கொள்கிறாள். வேலைக்குச் சேர்வதற்கு முன்பாகவே இப்படியொரு பிரச்சனையென்றால், தன்னை யார் மதிப்பார்கள்? அண்ணனும் அப்பாவும் இதற்கு சம்மதிப்பார்களா? அல்லது தன்னிடம் படிக்க வந்த மாணவியிடம் இப்படி நடந்து கொண்ட ஒருவனை வேலைக்குச் செல்லும் கல்லூரியில் எப்படிப் பார்ப்பார்கள்? என்கிற கேள்விகளும் குழப்பங்களும் அவனைச் சூழ, அவளின் காலில் விழுந்தேனும் அவளைச் சமாதானப்படுத்த முடிவு செய்தான். ஆனால் அவன் நெருங்க நெருங்க அவளுக்கு அவன் மீது வெறுப்பு அதிகமாகவே செய்தது. ‘தயவு செஞ்சு கொஞ்சம் புரிஞ்சுக்கோடி’ எனக் கத்தியனை
‘சொந்தப் புள்ளைய சாகடிக்கச் சொல்ற உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா நாயே..’ என திட்டினாள்.
தன்னை மீறிச் செல்லும் அவளின் மீது எஞ்சியிருந்த காதலும் காணாமல் போய் ஆத்திரம் மட்டுமே மிஞ்சியிருக்க, ஆத்திரத்தில் பின்னாலிருந்து அவளின் பொடனியில் ஓங்கி அடித்தான். எதிர்பாரத அந்த தாக்குதலில் அவள் நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து தவறி அருகிலிருந்த பெரிய பாழடைந்த கிணற்றில் விழுந்துவிட்டாள். நடந்த விபரீதத்தை உணர்ந்த ஞானசேகரன் அலறியபடி சைக்கிளை விட்டுவிட்டு அவளைக் காப்பாற்ற ஓடினான். கிணற்றை மறைத்து வளர்ந்திருந்த மஞ்சணத்தி மரக்கிளையைப் பற்றி தொங்கிக் கொண்டிருந்தவளை மேலே தூக்க முயற்சித்தான். அவளின் அலறல் அவன் மனதை சுக்கு நூறாக்கியது. ‘பயப்படாதம்மா. நா எப்டியும் உன்னயக் காப்பாத்திடறேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோ’ என பதட்டத்தோடு தைரியம் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கிளை முறிந்து விழ அவளும் கிளையோடு கிணற்றுக்குள் விழுந்தாள். அவ்வளவு நேரமும் எதிரொலித்த அவளின் மரண ஓலம் சடாரென அடங்கிப்போனது. அவளைக் காப்பாற்ற முடியாத ஏமாற்றத்தில் ஞானசேகரன் கதறினான். ‘இவாஞ்சலின்…’ என அவள் பெயரைச் சொல்லிக் கிணற்றுக்குள் கூப்பிட்டபோது எந்தப் பதிலும் அவனுக்குக் கிடைக்கவில்லை. உடைந்த மரங்கள், செடிகளுக்கு நடுவே கிணற்றுக்குள் அவள் கிடப்பது அரை குறையாக தெரிந்தது. உள்ளே இறங்குவதற்கான வழிகளைத் தேடியவனுக்கு ஏதும் தட்டுப்படவில்லை. எதும் செய்யமுடியாத ஆற்றாமையில் அங்கும் இங்குமாய் ஓடியவன் தலையில் அடித்துக் கொண்டு அழத்துவங்கினான். அவன் இழப்பையும் துயரையும் பொருட்படுத்தாமல் மெதுவாய் பொழுது சாய்ந்து இருட்டத் துவங்கியதும் ஒரு முடிவுக்கு வந்தவனாய் அருகில் கிடந்த இவாஞ்சலினின் சைக்கிளை எடுத்து கிணற்றுக்குள் போட்டவன் அங்கிருந்து வேகமாய் தப்பிவிட்டான்.
3
அதன்பிறகு வந்த நாட்களில் ஞானசேகரனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. தன்னை எப்போதும் ஆபத்து சூழ்ந்திருக்கக் கூடுமென அச்சப்பட்டான். அவளின் நினைவுகள் வதைக்கும் போது அவளைக் கடைசியாக சந்தித்த அந்த மண்டபத்திற்கும் அவள் விழுந்து இறந்து போன கிணற்றுக்கும் சென்று கண்ணீர் வற்றும் வரை அழுவான். அந்தக் கிணற்றுக்குள் எட்டிப்பார்க்கிற போதெல்லாம் இவாஞ்சலினின் மரண ஓலம் அவன் காதுகளுக்குள் எதிரொலித்தபடியே இருக்கும். அந்தக் குரலிலிருந்து ஒரு காலமும் தன்னால் தப்பிக்க முடியாதோவென்று தோன்றும். சில நாட்களுக்குப் பின் அந்தக் கிணற்றிலிருந்து அழுகின வாடை வருவதை அவன் கவனித்திருந்தாலும் ஊர்க்காரர்கள் யாரும் கவனித்திருக்கவில்லை. எப்போதாவது முந்திரித் தோட்டங்களுக்கு வரும் வாகனங்களைத் தவிர்த்து வேறு யாரும் அந்தப் பக்கமாய் வருவதில்லை என்பதால் அந்தக் கிணற்றைப் பற்றி அக்கறை கொள்ள அப்போதைக்கு அவனைத் தவிர ஒருவருமில்லை.
இவாஞ்சலினின் பெற்றோர் காவல்துறையில் தங்கள் மகள் காணாமல் போய்விட்டதாக புகாரளித்திருந்தனர். போலிஸ் அவள் படித்த இன்ஸ்டிடியூட்டில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரித்தபோது ஞானசேகரனையும் தேடி வந்தனர். தனித்திருக்கையில் அவளை இழந்த துயர் எவ்வளவு வதைத்தபோதும் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டிய இடங்களில் அவன் கவனமுடன் நடந்து கொண்டான். இன்ஸ்டிடியூட்டிலும் ஊரிலும் அவனுக்கிருந்த நல்லவன் என்கிற பிம்பத்தால் ஒருவனுக்கும் அவன்மீது சந்தேகம் எழுந்திருக்கவில்லை.
“நீங்க வேலைய விட்டு எவ்ளோ நாளாச்சு?” என எஸ்.ஐ கேட்டபோது,
“போன டெர்மோட முடிஞ்சதுங்க ஸார். எனக்கு நம்ம ஆர்ட்ஸ் காலேஜ் ல வேல கெடச்சிட்டதால வந்துட்டேன்.”
எந்தவிதமான பதட்டங்களுமில்லாமல் அவன் பதிலுரைத்தான். போலிஸ்காரர்களின் விசாரணைகள் குறித்தும் மாட்டிக்கொண்டால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்தும் நிறைய யோசித்திருந்ததால் சமாளிப்பதற்கான தயாரிப்புகளோடு எதிர்கொண்டான்.
“அந்தப் பொண்ணு எப்பிடி?”
“ரொம்ப அப்பாவி ஸார்,தங்கமான பிள்ள. அந்தப் பிள்ளைக்கு இப்பிடி ஒரு பிரச்சனைன்னா மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க விசாரணைக்கு என்ன உதவி வேணும்னாலும் செய்றேன். எப்ப வேணாலும் கூப்டுங்க ஸார்.” என்று போலிஸ்காரர்களிடம் வாக்குக் கொடுத்தான். போலிஸ்காரர்களுக்குமே அவன் மீது நல்லவிதமான அபிப்பிராயம் இருந்தததால் அவனை தேவைப்படும் நேரங்களில் உதவிக்கு அழைத்துக் கொண்டார்கள். தற்செயலாக ஒருநாள் இவாஞ்சலினின் பெற்றோர்களை ஸ்டேஷனில் பார்த்தபோது ஆறுதலாக அவர்களிடம் நீண்டநேரம் பேசினான். ஒவ்வொரு நாளும் தப்புக்கு மேல தப்பு செய்கிறோமென்கிற அவமானமும் குற்ற உணர்ச்சியாவும் இருந்தபோதும் தண்டனைக்குப் பயந்த அச்சம் குற்றவுணர்ச்சியை மறக்கச் செய்தது. அண்ணன் தம்பி இருவரும் வேலைக்குப் போகத் துவங்கியிருந்ததால் சேமித்து வைத்திருந்த பணத்தில் அப்பாவிற்கு புதிதாக கோழிக்கடை வைத்துக் கொடுத்தார்கள். முரண்டு பிடித்து அவருக்குக் கோழிக்கடை வைத்துக் கொடுத்ததற்கு இவனிடம் வேறொரு உள்நோக்கமும் இருந்தது. ஒவ்வொரு நாளும் கடை முடிந்தபின் மிச்சமாகும் கோழி இரைச்சியினை சைக்கிளில் எடுத்துச் சென்று இவாஞ்சலின் விழுந்த கிணற்றில் கொட்டத் துவங்கினான். அவன் கொட்டுவதைப் பார்த்து ஊரிலிருந்த வேறு சில கறிக்கடைக்காரர்களும் அதே கிணற்றில் வீணாகிப்போன இரைச்சியைக் கொட்டினார். இவாஞ்சலின் காணாமல் போன வழக்கு பத்தோடு பதினொன்றாக மாறிப்போக, தனக்கு இனி எந்தப் பிரச்சனையுமில்லை என்கிற நம்பிக்கையில் அவனும் தன் இயல்பு வாழ்விற்குத் திரும்பிவிட்டிருந்தான்.
4
ஸ்டேஷனில் தன்னை வினோதமாய்ப் பார்க்கும் காவலர்கள் எவர் பக்கமும் கவனத்தைத் திருப்பாமல் அமைதியாய் அமர்ந்திருந்த ஞானசேகரனுக்கு முன்னால் ஒரு முதியவர் தேரீரை வைத்துவிட்டுப் போனார். தேநீரை எடுத்துக் குடிக்கலாமா வேண்டாமா என்னும் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரில் வந்து அமர்ந்த ரைட்டர் ‘சும்மா எடுத்துக் குடிங்க’ என்றதும் ஞானசேகரன் தேநீரை எடுத்துக் குடிக்கத் துவங்கினார்.
“சொல்லுங்க ஸார். என்ன இஷ்யூ?” என ரைட்டர் கேட்க, கையிலிருந்த தேநீர் குவளையைக் கீழே வைத்த ஞானசேகரன்
“அதான் ஸார் நா ஒரு கொல பண்ணிட்டேன்.” என இன்ஸ்பெக்டரிடம் சொன்ன அதே வார்த்தைகளை இவரிடமும் சொல்ல, ரைட்டர் அதிர்ந்து போனார். சுற்றி இருக்கும் மற்ற போலிஸ்காரர்களும் அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனார்கள்.
“என்ன ஸார் சொல்றீங்க?”
“ஆமாங்க. முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு பொண்ண கொல பண்ணிட்டேன் . அந்த பொண்ணு பேரு இவாஞ்சலின்.”
செய்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு காவலர்கள் அருகில் வந்தனர். ஞானசேகரன் இவாஞ்சலினை இன்ஸ்டிடியூட்டில் சந்தித்தது துவங்கி கொலை செய்ததுவரை எல்லாவவற்றையும் சொல்லி முடித்தபோது சூழ்ந்திருந்த போலிஸ்காரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். ஞானசேகரனுக்குப் பின்னால் நின்றிருந்த கான்ஸ்டபிள் ,
“நீ ஒரு கொல செய்யல, ரெண்டு கொல செஞ்சிருக்க. கொலகாரப்பாவி. எல்லாத்தையும் செஞ்சுட்டு ஊருக்குள்ள பெரிய மனுஷனாட்டம் வேஷம் போட்டு சுத்திட்டு இருக்க.” என எரிச்சலோடு சொல்ல, அவர் அப்பாவியாக கான்ஸ்டபிளைப் பார்த்தார். புகாரை எழுதிக் கொண்டிருந்த ரைட்டருக்கு அதிர்ச்சி விலகாததோடு இந்தப் பிரச்சனையை இப்போது என்னசெய்வதென்கிற குழப்பமும் எழுந்தது.
“சரி நீங்க சொல்ற அந்தக் கெணறு கரெக்டா எந்த இடத்துல இருக்கு...” என கேட்க, ஞானசேகரன் தயங்கியபடியே,
“அந்தக் கெணறு இப்போ இல்ல ஸார், அந்த இடத்த சுத்திதான் நம்ம எம்.எம் சிமெண்ட் ஃபேக்டரி கட்டி இருக்காங்க.” என்றார்.
போலிஸ்காரர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. ரைட்டர் மட்டும் பதட்டத்தோடு “இன்ஸ்பெக்டர் ஐயா...” என்று சத்தமாய் அழைத்தபடி ஓடினார்.
ஞானசேகரன் இழுத்து வந்திருப்பது சாதாரணமானதில்லை என்பது அவரைத் தவிர அங்கிருந்த எல்லோருக்கும் தெரிந்திருந்தது. பல வருடங்களாய் மனதை அரித்துக் கொண்டிருந்த ரகசியத்தை சொல்லிவிட்ட நிம்மதியில் அவர் மனம் இலகுவாகியிருந்தது. ஸ்டேஷனில் கிடந்த பெஞ்சில் காத்திருக்கச் சொல்லியிருந்தார்கள். அவர் பலநாட்கள் சரியாக உறக்கமில்லாத அசதியில் உட்காந்த நிலையிலேயே உறங்கிவிட்டார்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. இந்த வழக்கைப் பதிந்தால் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்கள் கொஞ்சநஞ்சமில்லை. குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரைக் கவனித்த ரைட்டர் ,
“அவரு சொல்ற அந்த இவாஞ்சலின் காணாம போன கேஸ் இதே ஸ்டேஷன் ல தான் ஸார் ரெக்கார்ட் ஆகி இருக்கு. ஆனா மிஸ்ஸிங் கேஸ்ல 7 வருஷம் ஆனா அவர் லீகலா இனி உயிரோட இல்லன்னு டெத் சர்டிஃபிகேட் வாங்கிட முடியும். கவர்மெண்ட் ரூல்ஸ் அதான் சொல்லுது. ஸோ அந்த மிஸ்ஸிங் கேஸ் எப்பவோ முடிஞ்சு போன ஒன்னு. ஆனா முக்கியமான பிரச்சன என்னன்னா இப்ப இந்தக் கேஸ எடுத்தா சிமெண்ட் ஃபாக்டரி ல நாம கை வைக்கனும். அது ஈசியான வேல இல்ல?” என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு எதையும் கேட்க விரும்பாமல்,
“யோவ் இந்தாளு பைத்தியக்காரன் எதையாச்சும் சொல்லுவான். இவன் சொல்றதக் கேட்டுட்டு கேஸ எடுத்தா நம்ம பேரு நாறிடும். அவங்க வீட்ல வரச் சொன்னீங்களா?”
“சொல்லியாச்சு ஸார். வர்ற நேரம்தான்.” என்று ரைட்டர் சொன்னபோதே, கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து உள்ளே வந்த கான்ஸ்டபிள்
“ஐயா ஞானசேகரன் வீட்ல இருந்து வந்திருக்காங்க.” என்றதும் இன்ஸ்பெக்டர் “வரச் சொல்லுங்க.” என உத்தரவிட்டார்.
ஞானசேகரனின் மகனும், ஞானசேகரனின் அண்ணனும் இன்ஸ்பெக்டரின் அறைக்குள் வந்தார்கள். இன்ஸ்பெக்டர் அவர்களை அமரச்சொன்னபோது என்ன விபரீதமாயிருக்குமென அவர்களுக்கு குழப்பம்.
“என்னாச்சு ஸார்? என்ன பிரச்சன?” சதீஷ் கேட்க, இன்ஸ்பெக்டர் சேகரனைக் காட்டி, “அவருதாங்க பிரச்சன” சதீஷ் திரும்பி அவரை முறைத்தான்.
“அந்த ஹோட்டல் சம்பவத்த பத்திக் கேள்விப்பட்டோம். நாங்க கண்டிச்சு வெக்கிறோம் ஸார். நீங்க இத பெருச படுத்த வேணாம்..” என அவரிடம் மன்றாடும் குரலில் கேட்க, இன்ஸ்பெக்டர் அவன் பேச்சை மறித்து,
“தம்பி அதெல்லாம் மேட்டரே இல்ல. உங்கப்பா வேற ஒரு அணுகுண்ட போட்ருக்காரு..” என்றார்.
“புரியல ஸார்..” இன்ஸ்பெக்டர் ரைட்டரிடம் “ஸார் அந்த ஸ்டேட்மெண்ட் காப்பிய அவங்ககிட்ட குடுங்க.” என்றார். ரைட்டர் எழுதி வைத்திருந்த ஸ்டேட்மெண்ட் காப்பியை சதீஷிடம் கொடுக்க, அவன் அதனை வாசிக்கத் துவங்குகிறான். வாசிக்க வாசிக்க அவன் முகம் அதிர்ச்சியில் உறைந்து போகத் துவங்குகிறது. ‘என்னடா ஆச்சு? என்ன ஸ்டேட்மெண்ட்?” என அவன் பெரியப்பா கேட்க, எதுவும் பேசமுடியாமல் ஸ்டேட்மெண்ட்டை அவரிடம் கொடுக்கிறான். ஸ்டேட்மெண்ட்டை வாசித்து அதிர்ந்துபோனவர் இன்ஸ்பெக்டரிடம்,
“ஸார் ஏதோ மனக்குழப்பத்துல இப்பிடி சொல்றான்னு நினைக்கிறேன். ஒருத்தரக் கொல்ற அளவுக்கெல்லாம் இவனுக்கு துணிச்சலும் இல்ல, பலமும் இல்ல…” என்று சொன்னார்.
“இவாஞ்சலின் மிஸ் ஆன கேஸ் உண்ம. அந்தப் பொண்ணுக்கும் இவருக்கும் பழக்கம் இருந்தது யாருக்கும் தெரியாது. இவரு அந்தப் பொண்ண கொல செஞ்சதா சொல்றத பாத்த சாட்சியும் இல்ல. எந்த நம்பிக்கைல கேஸ் எடுக்க? அப்பிடியே எடுத்தாலும் அந்த ஃபேக்டரில போய் கை வைக்க முடியுமா?” எங்ககிட்ட சொன்ன மாதிரி ஊர்ல மத்தவங்க கிட்ட போயி உளறினா தேவையில்லாத சிக்கல்..” இன்ஸ்பெக்டர் அவர்களை அங்கிருந்து துரத்திவிடும் அவசரத்தில் சொல்ல, “நான் பாத்துக்கறேன் ஸார்.” என்றான் சதீஷ். ஞானசேகரனின் குடும்பத்தினர் இன்ஸ்பெக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு அவரை வம்படியாய் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல முயற்சிக்கையில் ஞானசேகரன் பதறிப்போய்,
“இன்ஸ்பெக்டர் ஸார், என்னய எதுக்கு வெளிய அனுப்பறீங்க? நான் கொல பண்ணி இருக்கேன். லாக்கப் ல வைங்க..” என்று கத்தத்துவங்கினார்.
சேகரனின் அண்ணனும் சதிஷும் அவர் வாயைப் பொத்தி அவசரமாய் வெளியே இழுத்துச் சென்றனர். தன்னைப் பிடித்து அடக்கியவர்களையும் மீறி அவர் விடாமல் முரண்டு பிடித்து கத்த முயல, சதீஷ் ரப்பென அவரின் செவுளில் ஓர் அறைவிட்டான். திடீரென விழுந்த தாக்குதலில் நிலைதடுமாறி அழத்துவங்கியவரை வாசலில் இருக்கும் காருக்குள் தள்ளி அங்கிருந்து கிளம்பினார்கள்.
留言