top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

வாக்குமூலம் - 3




1


கண்ணுக்குத் தெரியாத சாபத்தின் ரேகைகள் அந்த வீட்டைச் சுற்றி வேகமாய் படரத் துவங்கியிருந்தன. ஞானசேகரனின் அண்ணனுக்கு தன் தம்பி சொன்னதில் உண்மையிருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் கலந்த அச்சமே மிகுதியாய் இருந்தது. வீட்டில் எல்லோரும் திகிலடைந்ததுபோல் அலைவதைக் கவனித்த நாய் இடைவிடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது. அந்தக் குரைப்பொலி அவ்வீட்டின் துயரையும் சாபத்தையும் அந்த வீதிமுழுக்க எதிரொலித்தபடியிருந்ததால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்களின் சுவர்களுக்குள்ளாகவே ரகசியம் பேசிக் கொண்டனர். தனியறையில் அடைத்து வைக்கப்பட்ட சேகரன் பலங்கொண்ட மட்டும் கதவைத் தட்டினார்.


“அடேய் சதீஷு.. நான் பொய்யெல்லாம் சொல்லலடா. நெசமாவே அவள கொன்னது நாந்தாண்டா. அதுக்கான தண்டனைய அனுபவிச்சாதான் என் மனசுக்கு நிம்மதி. தயவுசெஞ்சு கதவ தொறடா..” என அவரின் அரற்றல் இடைவிடாமல் தொடர்ந்தபோது வீட்டில் எல்லோரும் என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பிப் போயினர். அப்பாவின் அரற்றலையும் வீட்டின் அசாதாரணச் சூழலையும் கண்ட நித்யா அச்சத்தோடு வெளியே வந்து ”அப்பாவுக்கு என்னாச்சு?” எனக் கேட்க சதிஷ் எரிச்சலாகி “எல்லாம் உன்னால வந்ததுடி..” என அடிக்கப் போனான். தடுத்து நிறுத்தின பெரியப்பா,


“டேய் இப்ப அவ மேல கோவப்பட்டு என்ன ஆகப்போகுது. பிரச்சனைய எப்பிடி தீக்கறதுன்னு முதல்ல பாப்போம்..” என்றார்.


“பெரியப்பா இந்தாளு லூசு மாதிரி எங்கியாச்சும் ஒளறிட்டா நம்ம மானம் போயிரும். அத விடுங்க அந்த ஃபேக்டரிய இடிச்சாதான் எவிடென்ஸ் கெடைக்கும். அதுக்கு ஃபேக்டரி காரன் விடுவானா? அந்த ஃபேக்டரிய நம்பித்தான் நம்ம பொழப்பும் இருக்கு. பொழப்பு போகுது. உசுரு போயிட்டா?” என அவன் பதட்டமாக சொல்ல, அவர்களின் பதட்டம் எதையும் பொருட்படுத்தாமல் சேகரன் தொடர்ந்து கதைத் தட்டிக் கொண்டிருந்தார்.


“சரிடா நாம முடிஞ்ச வரைக்கும் அவர வீட்லயே நிப்பாட்டி வெப்போம்...” என பெரியப்பா சொல்ல, சதீஷ் யோசித்து ஒரு முடிவெடுத்தவனாய்,


“இல்ல பெரியப்பா, ரொம்ப நாளைக்கு அப்பிடி செய்ய முடியாது. டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டுப் போவோம். ஒன்னு இவருக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுன்னு சர்டிஃபிகேட் வாங்கனும். இல்லன்னா ட்ரீட்மெண்ட் குடுத்துன்னாலும் பைத்தியமா ஆக்கிடனும்.” என்றான். அவன் சொன்னதைக் கேட்ட எல்லோரும் அதிர்ச்சியோடு பார்க்க, நித்யா அங்கு நிற்கப் பிடிக்காமல் தன் அறையை நோக்கி நடந்தாள். ஏதோ சொல்ல வாயெடுத்த பெரியப்பாவிடம்


“இதுதான் நம்ம எல்லாருக்குமே நல்லது. நம்மள நம்பி இன்னும் நூறு குடும்பம் இருக்கு. மறந்துடாதிங்க.” என்று சொல்லி வாயடைத்தான். நீண்ட தயக்கத்திற்குப்பின்

“சரிடா அப்ப ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டுப் போகாத. டாக்டர இங்க வரவெச்சிடு..” என அவரும் சம்மதித்தார்.


ஏதோவொரு வகையில் எல்லா மனிதர்களுமே மனப்பிசகு கொண்டவர்கள்தான். ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் அருவருப்புகளையும் ரகசியங்களையும் மனம் திறந்து பேசத் துவங்கிவிட்டால் நாம் மரியாதை கொண்டிருக்கும் எத்தனையோ பேரின் பிம்பங்கள் நொறுங்கிப்போய்விடும். சேகரன் சொன்ன ஒரேயொரு உண்மை அவரை மனப்பிசகு கொண்டவராய் இப்போது மாற்றத் துவங்கியிருந்தது. திருச்சியிலிருந்து தனக்குப் பழக்கமான மனநல மருத்துவர் ஒருவரை சதீஷ் அழைத்து வந்திருந்தான். பிரச்சனைகள் எதையும் விலாவாரியாய்க் கேட்டுக் கொள்ளாமல் வந்திருந்த மருத்துவர் சேகரனை சோதிப்பதற்காகச் சென்றார். நீண்ட நேரத்திற்குப்பின் மெல்லிய வெளிச்சத்தில் இருக்கும் சேகரனின் அறையிலிருந்த மருத்துவர் வெளியே வந்தார். சதீஷ் கலவரத்தோடு அவரிடம் ‘என்னாச்சு டாக்டர் ?’ எனக் கேட்க,


“சதீஷ், அவர் பதட்டத்துலயோ குழப்பத்துலயோ உளரல. தெளிவான மனநிலை ல தான் சொல்றாரு.” என்று குழப்பத்தோடு சொன்னார். சதீஷோடு வீட்டிலிருந்த எல்லோருக்குமே மருத்துவரின் வார்த்தைகள் குழப்பத்தை உண்டாக்கின.

“எங்களுக்கும் புரியுது டாக்டர். ஆனா இப்போ இந்தக் கேஸ விசாரிக்கிறது யாருக்குமே நல்லது இல்ல.”


“தப்பில்லையா சதீஷ். ஒரு பொண்ண வளத்தவங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க.”

“டாக்டர் இந்த விஷயம் வெளிய வந்தா எத்தன பேர் பாதிக்கப்படுவாங்கன்னு தெரியுமா? ஏன் அவர் உயிருக்கும் சேத்தே ஆபத்துதான்.”

டாக்டர் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாமல் யோசித்தார். சதீஷ் அவரின் மெளனத்தைக் கலைக்கும் விதமாய்,


“அவர் செஞ்ச பாவத்துக்கு அவரு மனசுல புழுங்கியே சாகட்டும் டாக்டர். மத்தவங்கள தண்டிச்சிட வேணாம். கொஞ்சம் உளவியல் சிக்கல்ல இருக்காருன்னு ஒரு சர்டிஃபிகேட் மட்டும் குடுத்துடுங்க. நாங்க பிரச்சன வராம பாத்துக்கறோம்.” என்று சொல்ல டாக்டர் தயக்கதுடன்


”சரி சதீஷ்... செஞ்சுதர்றேன்.”


என நம்பிக்கையாய்ச் சொன்னார்.


அப்பாவின் மீதிருந்த கோவமெல்லாம் நித்யாவிற்கு விலகியிருந்ததோடு, எல்லோருமாய்ச் சேர்ந்து அவரை பைத்தியமாய் மாற்ற நினைக்கிறார்கள் என்கிற கவலையில் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைத்த்தாள். சதீஷூம் பெரியப்பாவும் இல்லையென்பதை உறுதிசெய்து கொண்டபின் அப்பாவின் அறையைத் திறந்து செல்ல நினைத்தாள். குழந்தையை உறங்க வைத்துவிட்டு அந்த அறைக்கு முன்னால் வந்து நின்றபோது தான் அறை பூட்டியிருப்பது தெரிந்தது. ஓயாமல் அரற்றுகிறார் என்பதால் அவருக்குத் தொடர்ந்து உறக்கத்திலிருப்பதற்கான மாத்திரைகளை அண்ணனும் அம்மாவும் கொடுக்கத் துவங்கினார்கள். சாத்தியிருக்கும் அறைக்குள் அவர் என்ன நிலைமையில் இருப்பாரோ? என்கிற கவலை நித்யாவிற்கு. ஹாலில் இருந்து அலமாரியில் அந்த அறைக்கான சாவியைத் தேடினாள். வழக்கமாக சாவியை வைக்கும் எந்த இடத்திலும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அலமாரியைத் திறக்கும் சத்தம் கேட்டு வந்த அம்மா “என்னடி செய்ற?” ஆத்திரத்தோடு கேட்டாள்.


“அப்பாவ ஏன் அடச்சு வெச்சிருக்கீங்க? கதவத் தெறந்துவிடுங்க” அலமாரியிலிருக்கும் ஒரு மண் பொம்மையை எடுத்து சொத்தென போட்டு உடைத்தாள். மகளின் ஆவேசத்தைப் பொருட்படுத்தாமல் அம்மா “உன் வேல மயிர பாத்துக்கிட்டு பேசாம இரு... போ...” என திட்டினாள். நித்யா அதே வீம்புடன் அலமாரியிலிருக்கும் இன்னும் சில சிலைகளை எடுத்து உடைத்தாள்.


“என்னால போக முடியாது. நான் அப்பா கிட்ட பேசனும் கதவத் திறங்க..”


என சத்தம் போட்டபடியே அந்த அறையின் கதவைத் தட்ட, பொறுமையிழந்த அம்மா அவளின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தாள். அடி வாங்கியதும் கலங்கிபோய் திரும்பிய நித்யாவிற்கு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.


“சூத்த மூடிட்டு போடி, இல்லன்னா உன்னயும் உன் ரூம்லயே வெச்சு லாக் பண்ணிடுவேன். வந்துட்டா அப்பா நொப்பான்னு…. போ..” என்றபடியே அம்மா கன்னத்தில் இன்னொரு அறைவிட அழுகையை அடக்கியபடி நித்யா தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.


2


ஞானசேகரனுக்கு மனப்பிசகு என்னும் செய்தி காற்றைவிட வேகமாக ஊருக்குள் பரவத் துவங்கியது. நீயெல்லாம் நாசமாத்தாண்டா போவ என சாபமிட்ட பின்வீட்டுக் கிழவிகூட அவருக்காக அனுதாபப் பட்டாள். ’கோவத்துல நாலு வார்த்த கடுமையா பேசறவனா இருந்தாலும் கஷ்டம்னு வர்றவங்களுக்கு மனசு நோகாம செய்றவன். அவனுக்கா இப்பிடி ஆகனும்.’ என சேகரனின் மனைவியிடம் ஆறுதலாய்ப் பேசினாள். தொடர்ந்து உறங்குவதாலும் சூரிய வெளிச்சம் படாமல் அடைந்து கிடந்ததாலும் சேகரனுக்கு உடல் சற்றே பெருத்திருந்ததோடு எடுத்துக் கொண்ட மாத்திரைகளின் விளைவாய் தடிப்புகள் ஏற்பட்டிருந்தன. அவர் உடல் அவருக்கு ஒத்துழைக்காமல் போனாலும்கூட எப்படியும் செய்த குற்றத்திற்குத் தண்டனையை அனுபவித்தே தீருவதென்கிற கொள்கையில் உறுதியாய் இருந்தார்.


ட்ரைவர்கள், கஸ்டமர்கள், ஃபேக்டரி ஆட்கள் எல்லோருமே அவரைக் குறித்து கவலைப்பட்டாலும் நேரடியாக சதீஷிடம் விசாரிக்கவில்லை. அவன் சங்கடப்படக் கூடுமென நினைத்து பரிதாப்பட்டார்கள். சதீஷ் அலுவலகத்தில் ஒருநாள் லாரி ஓட்டுநர்களுக்கு சம்பளம் குடுத்துக் கொண்டிருக்கையில் ஒரு ட்ரைவர் மட்டும் ரொம்பவே தயங்கி,


“என்ன தம்பி கொஞ்சநாளா நம்ம பெரிய முதலாளியக் காணாம்?” எனக் கேட்க, சதீஷ் “அவருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லண்ணா பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சு வந்துருவாரு..” என்றான்.


“நேரங்கெட்ட நேரத்துல மனுஷன் முந்திரிக்காட்டுப் பக்கமாவும், நம்ம எம்.எம் ஃபேக்டரி மைன்ஸ்க்கு போற ரோட்லயுமே நின்னுட்டு இருப்பாரு. அப்பயே எனக்கு பயம். முனி நடமாட்ற இடம்ப்பா அதெல்லாம். நானே ஒரு வாட்டி அவர நட்ராத்திரில அங்க பாத்தேன்.”

கவலையோடு அவர் சொல்ல,


“டாக்டர் வந்து பாத்துட்டுத்தாண்ணா இருக்காங்க. சீக்ரம் சரி ஆகிடுவாரு.” என சதீஷ் அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான். நீண்ட காலம் அவரை அறைக்குள் அடைத்துவைக்க முடியாதென்கிற யதார்த்தம் அவனுக்குப் புரிந்தது. மற்றவர்களின் அனுதாபங்கள் சந்தேகமாய் மாறுவதற்கு முன்பாக சரியானதொரு தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டுமென நினைத்துக் கொண்டான்.


தஞ்சாவூர் செல்லும் சாலையில் கீழப்பழூர் தாண்டியிருக்கும் பெரியப்பாவின் தோட்டத்திற்கு அன்றிரவு சோர்வோடு வந்து சேர்ந்தான். வீட்டு பிரச்சனைகளை இங்கு அமர்ந்து பேசுவதுதான் அவர்களுக்கு வழக்கம். பத்து ஏக்கருக்கு விரிந்திருக்கும் தோட்டத்தில் சேகரனுக்கும் பங்கிருந்தாலும் அவர் அண்ணன் மகள்களுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். அவன் தோட்டத்திற்கு வருகிறேன் என்று சொன்னதால் பெரியப்பா தஞ்சாவூரிலிருந்து நல்ல விஸ்கி வாங்கி வரச் சொல்லியிருந்தார். ராமையா அண்ணன் நாட்டுக்கோழி அடித்து சமைக்கத் துவங்கினார். அந்தக் குளிருக்கு இதமாய் மோட்டாரில் குளித்துவிட்டு சதீஷும் பெரியப்பாவும் மதுவருந்தத் துவங்கினார்கள். நித்யாவின் பிரச்சனை இப்பொழுது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இல்லாமல் போயிருந்ததால் முழுக்க சேகரனைப் பற்றியே யோசித்தார்கள். இளநீர் கலந்த வாட் 69 விஸ்கியின் காட்டமும், வறுத்த நாட்டுக் கோழியின் காரமும் உடலுக்குள் இறங்க சதீஷ் “எப்பிடி எல்லாத்தையும் சமாளிக்கிறதுன்னு தெரியல பெரியப்பா?” என பேச்சைத் துவங்கினான்.


” என்னடா பயப்படறியா?” என பெரியப்பா கேட்க,


“இல்ல பெரியப்பா அவர் செஞ்ச கொலை ல நம்மளுக்கும் இப்ப பங்கு இருக்கோன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு..” என மனம் உடைந்து அழப்போகிறவனை பிடித்து நிறுத்தியவர்


“லூசு மாதிரி ஒளறாத. எங்கூடயேதான் இருந்தான். அவன் சொல்ற மாதிரி ஒரு பொண்ண லவ் பண்ணது எனக்கே தெரியாது. எனக்கென்னவோ உண்மைலயே அவன் மண்டக் கோளாறாகிதான் இப்பிடி சொல்லிட்டு இருக்கானோன்னு தோணுது. ஏன்னா ஒரு புள்ளைய கொல்ற அளவுக்கோ அத மறைக்கிற அளவுக்கோ அவனுக்கு தைரியம் இல்ல.” ஆறுதலாகச் சொல்ல சதீஷ் அமைதியாய் அடுத்த சுற்று விஸ்கியை ஊற்றிக் கொண்டான்.


“பொறுமையா இருடா. நீயும் மனச விட்டுட்டா குடும்பம் கெட்டுப் போகும். தங்கச்சி பிரச்சனைய கொஞ்சம் என்னன்னு பாக்கனும்.” என அவர் நித்யாவை நினைவுபடுத்தியபோதுதான் அவள் மீது தனக்கிருந்த ஆத்திரமும் வெறுப்பும் காணாமல் போயிருப்பதை உணர்ந்தான். யாருக்கும் சந்தேகம் வராத இடத்தில் அப்பாவை சில நாட்களுக்கு பாதுகாத்தால் என்னவென்று தோன்றியபோது அவனுக்கு இந்த தோட்டமே நல்ல இடமாகப் பட்டது.


“பெரியப்பா பேசாம கொஞ்சநாள் அவர இங்க நம்ம தோட்டத்துலயே தங்க வெச்சிருவமா? யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.” எனக் கேட்டான். அவருக்கு அந்த யோசனை சரியாகப்படவில்லை. ஆனாலும் உடனடியாக ஒரு முடிவுக்கு வரவேண்டாமென யோசித்தவர் “அவசரப்படாத சதீஷு, நிதானமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவோம்” என்றார். தோட்டத்திலிருந்து தப்பிச் செல்வது சேகரனுக்கு சிரமமில்லாத காரியம். இப்போதைக்கு அவர் தப்பித்து வெளியே சென்றால் அதன் விளைவுகள் முன்னைவிடவும் ஆபத்தானதாய் மாறக்கூடுமென்பது இவரின் எண்ணம். வேலைகளை முடித்துவிட்ட ராமையா அண்ணன் “ஐயா நான் கெளம்பட்டுங்களா, நைட்டு காவலுக்கு கொஞ்ச நேரத்துல என் தம்பி வந்துருவான்.” என சத்தம் கொடுத்தார். “சரி ராமையா நீ கெளம்பு..” என பெரியப்பா அவரை அனுப்பி வைத்தார்.





3


இரவின் அமைதியில் கிடந்த வீட்டிற்குள் நித்யா பூனை போல் அங்கும் இங்கும் அலைந்தாள். அம்மாவைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதென்பது அசாதாரணமான காரியம். அண்ணனும் வீட்டிலில்லை என்பதால் இந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென முடிவுசெய்தவள் அப்பாவை எப்படியும் அறைக்குள்ளிருந்து விடுவிப்பதென உறுதியோடிருந்தாள். ஹாலிலிருந்த அலமாரியில் சாவி இருப்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லாத்தால் அண்ணனின் அறையில் தேடத் துவங்கினாள். அவன் படுக்கையை ஒட்டிய டேபிளுக்குள்ளிருந்து சில நிமிடங்களிலேயே கண்டெடுத்துவிட்டவள் வேகமாய் அப்பாவின் அறை நோக்கி ஓடினாள். கதவைத் திறந்தபோது மங்கலான வெளிச்சமும் அமைதியும் அவ்வறையில் நிரம்பியிருந்தது. அவ்வெளிச்சத்தில் சோர்வோடு படுக்கையில் கிடந்தவரை ”ப்பா” என அவள் அழைத்த சத்தம் கேட்டு பாதி கண்களைத் திறந்து பார்த்தார். அவள் அவர் எழுந்து சரியாக உட்கார்ந்து கொள்ள உதவினாள். வெளிச்சமும் காற்றுமில்லாத அறையில் அடைந்து கிடந்ததில் அவருடலில் வினோதமான நாற்றம் குடியேறியிருந்தது. அவரை கழிவறை நோக்கி மெல்ல அழைத்துச் சென்றாள். கதவைத் திறந்து நிலையிலேயே வைத்துவிட்டு மெல்ல நடந்து சென்று தன் உடலை கழுவிக் கொண்டார். நித்யா அவருக்கு மாற்று உடை தேடி எடுத்துக் கொடுத்தாள். உடை மாற்றிக்கொண்டு வந்தவருக்கு அவளைப் பார்த்ததும் குற்றவுணர்ச்சியில் மனம் துடித்தது.


“நான் செஞ்ச பாவந்தான் உன்னயத் துரத்துதுன்னு நினைக்கிறேன் நித்யா. என் பாவத்துக்கு பரிகாரம் தேடாம மனசு ஆறாது.”

“எப்பிடிப்பா இத்தன வருஷம் உன்னால மறச்சு வாழ முடிஞ்சது?”

“நான் எதையும் வேணும்னு செய்யல பாப்பா, என்னைய மீறி நடந்துடுச்சு.

“பெத்த புள்ளைக்கி என்ன ஆச்சுன்னே தெரியாம இத்தன வருஷமா புழுங்கிட்டு இருந்த பெத்தவங்க பாவம் ல ப்பா…” அவர் பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்து நிற்க,


“நீ குத்தத்த ஒத்துக்கிட்டு சரணடையறதுதாம்ப்பா சரி…” என நித்யா சொல்ல, “நானும் அதுக்குத்தான் முயற்சி பன்றேன், உங்க அண்ணன் விடமாட்றானேம்மா.” என இயலாமையோடு சொன்னார். அவரின் கைகளை ஆறுதலாக பற்றிக் கொண்ட நித்யா “சரிப்பா. நான் உனக்கு ஹெல்ப் பன்றேன்..” என அவருக்கு நம்பிக்கையளித்தாள்.


பின்னிரவில் நித்யா அவரை வெளியே அழைத்து வந்தாள். முன்வாசலில் நாய் கட்டப்பட்டிருப்பதால் வீட்டின் பின்பக்கமிருக்கும் வீதியின் வழியாய் அருணை வரச்சொல்லியிருந்தாள். சேகரன் ‘எங்கம்மா போறோம்’ எனக் கேட்க, அவள் அவரை அமைதிப்படுத்திவிட்டு அவசரமாய் பின்வாசல் கதவைத் திறந்துவிட்டாள். சற்று தூரத்தில் தெருவிளக்கினடியில் அருண் தன் பைக்கோடு நின்றிருந்தான். அந்த அகால வேளையில் அவனைப் பார்த்ததும் அவருக்கு ஒரு மாதிரி ஆனது, திரும்பி மகளைப் பார்த்தவரிடம், “நான் அவங்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன், நீ தைரியமா போப்பா..” என அனுப்பிவிட்டு கதவைச் சாத்தினாள். தயக்கத்தோடு தன்னை நோக்கி நடந்து வந்தவரிடம் அருண், அங்கிள் ஒன்னும் யோசிக்காம வாங்க. யாராச்சும் வர்றதுக்குள்ள போயிடலாம்.” என அவசரப்படுத்தினான். யாரும் தன்னை கவனிக்கவில்லையென்பதை உறுதிசெய்துகொண்டு அவர் வண்டியிலேற அருண் வேகமாய் வண்டியைக் கிளப்பினான்.


புதிதாக போடப்பட்டிருந்த சாலையின் இருமருங்கிலுமிருந்த மரங்கள் காணாமல் போயிருந்தன. பின்னிரவின் குளிர்ச்சி காணாமல் போய் வெக்கையான காற்று அவர்களைத் தழுவிச் சென்றது. ஞானசேகரனுக்கு இன்னும் தூக்க கலக்கம் முழுமையாய் விலகியிருக்கவில்லை. ஒரு நிலையில் அமரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். ’இப்போதைக்கு பெரம்பலூர் போயிருவோம் அங்கிள், காலை ல நேரத்தோட நாம ஸ்டேஷனுக்கு வந்துக்கலாம்’ என அருண் சொன்னதற்கு வெறுமனே ‘ம்ம்ம்’ என்றார்.


“நித்யா எல்லாத்தையும் சொன்னா அங்கிள்... உண்மைலயே இப்பதான் உங்கள நெனச்சு ரொம்ப பெருமையா இருக்கு...”


அவன் சொல்வதைப் பொருட்படுத்தாமல் அமைதியாய் இருந்தவரிடம்,


“கமல் ஸார் விருமாண்டில சொல்லுவாரே, மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன்னா மன்னிப்புக் கேட்கறவன் பெரிய மனுஷன்னு... அந்த மாதிரி நீங்க செஞ்ச தப்ப உணர்ந்து சரணடையப் போறீங்க. பெரிய மனுஷனுக்கும் மேல நீங்க..” என முன்பைவிடவும் உற்சாகமாகச் சொல்ல, அரை மயக்கத்திலிருந்த சேகரன் எரிச்சலாகி “டேய் சூத்த மூடிட்டு சும்மா இருடா..” என்றார். சப்பென்றாகிவிட்டதால் அவன் அமைதியாய் வண்டியை ஓட்டினான்.


4


ஆயுத பூஜைக்கான கொண்டாட்டங்கள் ஊரெங்கும் சூழ்ந்திருந்தது. அலங்கரிக்கப்பட்டு வாழைக் கன்றுகள் கட்டப்பட்ட ஆட்டோக்கள் சாலைகளில் சப்தமாய் பாடல் எழுப்பியபடி விரைந்துகொண்டிருந்தன. லாரிகளை எல்லாம் வாட்டர் வாஷ் செய்து பூஜைக்காக அலுவலகத்தின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். இரவு தோட்டத்திலேயே தங்கிவிட்ட சதீஷுக்கு பண்டிகை நினைவு வர அவசரமாய்க் கிளம்பி அலுவலகம் வந்தான். பூஜை சாமான்கள் வாங்க ஆட்களை அனுப்பிவிட்டு வீடுவரை போய்வரலாமெனக் கிளம்பியபோதே அம்மா பதற்றத்தோடு அவனுக்கு ஃபோன் பண்ணினாள். ”இந்தாளு எப்பிடியோ தப்பிச்சிட்டாருடா சதீஷு..” என அவள் சொன்னதைக் கேட்டதும் அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. ‘நான் வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன். நீ யார்கிட்டயும் எதும் சொல்லாத.” என இணைப்பைத் துண்டித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.


சிறியதொரு ஓய்விற்குப்பின் ஞானசேகரனின் முகத்தில் தெளிவு கூடியிருந்தது. காலை நேரத்து பரபரப்போடிருக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கு அவர் அருணோடு வந்தபோது வாசலில் இன்ஸ்பெக்டரின் ஜீப்பைத் துடைத்துக் கொண்டிருந்த ஆள் வினோதமாய்ப் பார்த்தான். வாசலை நோக்கி வந்துகொண்டிருந்தவர்களைக் கவனித்த கான்ஸ்டபிள் “என்னய்யா மாமனும் மருகனும் சேந்து வர்றாய்ங்க...” என ரைட்டரிடம் கேட்டார். ஞானசேகரனைப் பார்த்து எரிச்சலான ரைட்டர், ’ ”இந்த சனியம் புடிச்சவன் சும்மா இருக்க மாட்டான் போலயே. என புலம்பினார். ஞானசேகரனுக்கு முதல்முறை வந்தபோது இருந்த குழப்பங்கள் எதுவும் இல்லாததால் நேராக ரைட்டரை நோக்கி வந்து ‘வணக்கம் ஸார்’ என கைகூப்பி நின்றார்.


அவரைக் கண்டும் காணாததுபோல் ரைட்டர், “சொல்லுங்க என்ன விஷயம்?” எனக் கேட்டார்.

“ஐயா இன்ஸ்பெக்டரப் பாக்கனும்?”

“எதுக்கு?”

“அதாங்க அன்னிக்கி சொன்னனே.. அந்தக் கேஸ்ல சரண்டராகனும்..”

ரைட்டர் கான்ஸ்டபிள் என அங்கிருந்த எல்லாரும் எரிச்சலானார்கள்.


“யோவ் உனக்கு அறிவு இருக்கா இல்லயா? ஸ்டேஷன் ல எங்களுக்கு வேற வேல இல்லன்னு நெனச்சிட்டு இருக்கியா? இருக்கற கேஸையே வருஷக்கணக்கா முடிக்க முடியல. இதுல நீ வேற, பேசாம போயிரு, இனி பெரிய மனுஷன்லாம் பாக்க மாட்டேன். கட்டி வெச்சி உரிச்சிருவேன்.” என ரைட்டர் சேகரனைப் பார்த்துக் கத்த

“அது தப்பு ஸார், நீங்க என்னய சட்டப்படி கோர்ட்ல நிப்பாட்டி தூக்குத் தண்டன வாங்கிக் குடுக்கனும்...” என பவ்யமாய்ச் சொன்னார். குறுக்கே வந்த ஹெட்கான்ஸ்டபிள் சேகரனின் பொடணியில் ஒரு அறைவிட்டார்.


“யோவ் கேணப்புண்ட தூக்குல தொங்கனும்னா உன் வீட்ல தொங்க வேண்டிதான. ஏன் இங்க வந்து உயிர வாங்கற?”


அவரை அடித்ததைக் கண்டு ஆத்திரப்பட்ட அருண்

“ஸார் பப்ளிக்க மரியாத இல்லாம பேசக் கூடாது..” என அவரிடம் எகிறினான். ஹெட் கான்ஸ்டபிள் வந்த ஆத்திரத்தில் அவனுக்கும் ஒரு அறைவிட்டார்.


“ரெண்டு பேரும் ஒழுங்கா ஓடிப்போயிருங்க...” என்றவரைப் பொருட்படுத்தாமல் ஞானசேகரன் பிடிவாதமாய்


“இல்லங்க. நான் போகமாட் டேன். என்னய கைது பண்ணி கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க.” என்றபடி அங்கேயே உட்கார, போலிஸ்காரர்கள் பொறுமையிழந்து அவரை அடிக்கத் துவங்கினார்கள். அவர்மீது அடிவிழாமல் காப்பாற்ற குறுக்கே வந்த அருணுக்கும் சராமாரியாய் உதை கிடைத்தது. எவ்வளவு அடித்தாலும் அந்த இடத்திலிருந்து நகரமாட்டேனென பிடிவாதமாய்க் கிடந்தவரை இரண்டு போலிஸ்காரர்கள் தரதரவென வெளியே இழுத்துப் போனார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட சதீஷும் பெரியப்பாவும் சரியாக அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்ததால் சேகரன் கூடுதலாய் அடிவாங்காமல் தப்பித்தார். சதீஷ் போலிஸ்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டான்.


“ஏய் சதீஷு என்னப்பா இப்பிடி உயிர வாங்கறீங்க? வீட்டுக்குள்ல அடச்சி வெய்யிங்கய்யா..” என ரைட்டர் ஆத்திரப்பட, “அடச்சுதான் ஸார் வெச்சிருந்தோம். இந்த லூசு எப்பிடியோ தப்பிச்சிட்டாரு....” என மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னான். தன்னைப் பிடித்திருந்த சதீஷின் கைகளை உதறின ஞானசேகரன்


“யார்டா லூசு. நீங்க எல்லாருந்தான் லூசு. என்னய சரணடைய விடுங்கடா... எங்கூட எனக்குத் துணையா என் மாப்ள இருப்பான்... மாப்ள...” என அருணைத் தேட, சதீஷ் அவனைப் பார்த்து கடுப்பாகிறான். சேகரனை பெரியப்பாவிடம் விட்டுவிட்டு அருணைத் துரத்த அவன் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பித்துவிட்டான். “திருட்டுத் தாயோலி...” என்று கருவியபடியே திரும்பிவந்தபோது சேகரன் ‘குத்தவாளியே குத்தத்த ஒத்துக்கறேன், ஏன் ஸார் கைது பண்ண மாட்றீங்க. என்னயக் கைது பண்ணியே ஆகனும்.’ எனக் கத்திக் கொண்டிருக்கிறார். போலிஸ் ஸ்டேஷன் வாசலில் காத்திருந்த பொதுமக்கள் சிலரும் இந்த கலவரத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க, அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் சதீஷ் தரதரவென இழுத்து வந்து காரில் ஏற்றினான்.


பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து எப்படி தப்பித்திருப்பாரென அவனுக்கிருந்த சந்தேகம் ஸ்டேஷனில் அருணைப் பார்த்ததும் தெளிவாகியிருந்தது. வலுக்கட்டாயமாய் வீட்டிற்குள் இழுத்துச்சென்ற அவரது அறைக்குள் அடைத்தபோது நித்யா கலவரத்தோடு சதீஷைப் பார்த்தாள். அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டியவன் “இதெல்லாம் உன் வேல தான..” என நித்யாவை முறைக்க, “ஆமா அதுக்கு என்ன இப்ப?” என்றாள். ஆத்திரத்தில் அடிக்க கை ஓங்கியவனை அவள் கையிலிருந்த குழந்தையின் சிரிப்பு தடுத்தது.


“கூடப் பொறந்த பாவத்துக்காக உன்னய கொல்லாம விட்றேன். இன்னொரு வாட்டி இதையே செஞ்ச அப்பறம் பாவம் புண்ணியம் பாக்க மாட்டேன்..” என்று கத்தினான். அவனை அவசரமாய் மறித்த பெரியப்பா, ‘டேய் என்ன பொம்பளப் புள்ளைய கை நீட்டுட்டு இருக்க, நிலம கை மீறிப் போறதுக்கு முன்னால நம்ம டாக்டர் கிட்ட சர்டிஃபிகேட் வாங்க பாப்போம்.” என்றபடி அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.


ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் அந்த வீட்டைத் தவிர்த்து ஊர் முழுக்க கொண்டாடப்பட்டதன் அடையாளமாய் ஸ்பீக்கர்களின் பாடல் சத்தம் எல்லா வீதிகளிலும் கேட்டுக் கொண்டிருந்தது. நீண்ட பகலைக் கொண்டாடின களைப்பில் ஊர் அடங்கிப் போயிருந்தது. அந்த இரவு இன்னொரு முறை சேகரனுக்கான வழிகளைத் திறந்துவிடத் தயங்கவில்லை. அதிகாலையில் சதீஷின் அம்மா தூக்க கலக்கத்தில் எழுந்து நித்யாவின் அறைக்கு வந்தபோது அங்கு நித்யாவும் குழந்தையும் இல்லாமல் இருக்க, பதட்டமாகி வேகமாக சேகரனை வைத்திருந்த அறையில் சென்று பார்க்கிறார். சேகரனும் இல்லாமல் போன அதிர்ச்சியில் “டே சதீஷு...” என்று கத்துகிறார்.














41 views

Comments


bottom of page