1
இவாஞ்சலின் காணாமல் போனதற்காக பதியப்பட்ட வழக்கில் பல வருடங்களுக்குப்பின் மறுவிசாரணை துவங்கியிருந்தது. மகளை இழந்த இவாஞ்சலினின் வயதான பெற்றோர் நொறுங்கிய இதயங்களோடு ஸ்டேஷனில் அமர்ந்திருந்தனர். ஒரு காலத்தில் செழிப்பாய் வாழ்ந்திருந்ததின் அடையாளங்களை அவர்களிடம் பார்க்க முடிந்தபோதும் இப்போது துயரத்தின் மிச்சங்கள் மட்டுமே திட்டுத் திட்டாய் எஞ்சியிருந்தன. இன்ஸ்பெக்டர் எதையும் சொல்வதற்கு முன்பாகவே பத்திரிக்கைகளின் வழியாய் நடந்த அவ்வளவையும் தெரிந்து வைத்திருந்தனர். எந்தக் கேள்வியில் விசாரணையைத் துவங்குவதென சங்கடத்தோடு பார்த்த இன்ஸ்பெக்டரிடம் இவாஞ்சலினின் அம்மா,
“என் புள்ள கண்காணாத இடத்துல உயிரோட இருக்கான்னு நிம்மதியா இருந்தோம். இந்தக் கொலகாரப் பாவி இப்பிடி செய்வானு நெனச்சுக்கூட பாக்கல ஸார்.” என கலங்கினார்.
“பழச பேசி பிரயோஜனம் இல்லம்மா. உங்க பொண்ணுக்கு நியாயம் கிடைக்கனும்னா முழு உண்மையும் தெரியனும். இந்த சேகரனுக்கும் உங்க பொண்ணுக்கும் பழக்கம் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?”
“இல்லங்க தெரியாது...”
“காணாமப் போன அன்னிக்கி என்ன நடந்துச்சு?”
”அன்னிக்கி எங்க சர்ச் ல ஏதோ ஃபங்ஷன். சர்ச் வரைக்கும் போயிட்டு வர்றேம்மான்னு கேட்டா, நானும் சரி போயிட்டு அப்பா வர்றதுக்குள்ள வந்துடுனு அனுப்பி வெச்சேன்.”
அவருக்கு இவாஞ்சலினின் நினைவுவர மேற்கொண்டு சொல்ல முடியாமல் அழுகிறார். இன்ஸ்பெக்டர், ‘அழமா சொல்லுங்க’ என்றதும் கண்களைத் துடைத்துக் கொண்டு
“அப்பதான் கடைசியா பாத்தேன். அதுக்கப்பறம் லேட் நைட் ஆகியும் திரும்பி வரலைன்னு கம்ப்ளைண்ட் குடுத்தோம். போலிஸ் சர்ச் ல அவ ஃப்ரண்ட்ஸ் வீட்லன்னு ஒரு இடம் விடாம விசாரிச்சாங்க. ஆனா அவ எங்க போனான்னு யாருக்கும் தெரியல.”
“விசாரணையப்போ ஞானசேகரன் என்ன செஞ்சாரு?”
“என் பொண்ணு காணாம்னு கேள்விப்பட்டதா சொலிக்கிட்டு வீட்டுக்கு வந்தான்...” அவ்வளவு நேரமும் இல்லாத வெறுப்பு அந்தப் பெண்ணிடம் வெளிப்பட்டது. துரோகத்தை எதிர்கொண்ட ஏமாற்றத்தை பிரதிபலித்த வெறுப்பு.
காவல் நிலையத்தில் அவர்கள் புகார் கொடுத்துவிட்டு வந்த இர்னடு நாட்களுக்குப்பின் ஞானசேகரன் அவளின் பெற்றோரை சந்திக்க வந்திருந்தான். மகளை இழந்து நின்றவர்களிடம் ஆறுதலாய்ப் பேசியவன்,
“ரொம்ப நல்ல பொண்ணும்மா அவ. யார்கிட்டயும் சத்தமா கூட பேச மாட்டா. இன்னிக்கி போலிஸ் வந்து விசாரிச்சப்போதான் காணாம போயிட்டான்னு தெரிஞ்சது. மனசு கேக்கல, அதான் ஓடிவந்தேன்...” என அழுதான். தன் மகளுக்காக முகம் தெரியாத மனிதனொருவன் துக்கம் கொள்வதைப் பார்த்ததும் இவாஞ்சலினின் பெற்றோர்களுக்கும் அழுகை முட்டியது. உடைந்து அழுதவர்களை இறுக அணைத்துக் கொண்ட சேகரன்,
“தயவு செஞ்சு மனச விட்றாதிங்க, போலிஸ் எப்பிடியும் கண்டுபிடிச்சிருவாங்க. நானும் நம்ம ஸ்டூடண்ட்ஸ் கிட்டலாம் சொல்லி விசாரிக்கச் சொல்லி இருக்கேன். கண்டிப்பா எதாச்சும் க்ளூ கெடைக்கும்.” என அவர்களுக்கு நம்பிக்கையூட்டினான். அழுத கண்களைத் துடைத்துக்கொண்ட இவாஞ்சலினின் அம்மா அவனுக்கு தேநீர் தயாரிக்கச் சொன்றார்.
அதன்பிறகு சொன்னதுபோலவே அவன் போலிஸ்காரர்களுக்கு உதவியாய் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றான். எவர் ஒருவருக்கும் அவன் மீது சந்தேகம் இருந்திருக்கவில்லை. இன்ஸ்டிடியூட்டில் இருந்த மாணவர்கள், சக ஆசிரியர்கள் எல்லோருமே ஞானசேகரன் எல்லோருக்கும் உதவும் குணமுடையவர் என காவல்துறையினரிடம் சொல்லியிருந்ததால் அவர்களும் அவனை முழுமையாய் நம்பினர். எங்கெல்லாம் மாட்டிக் கொள்வோமென அவனுக்கு சந்தேகம் எழுந்ததோ அங்கெல்லாம் போலிஸ்காரர்களுடன் சென்று நாசூக்காக விசாரணையை திசை திருப்பிவிடுவான். ரயில்வே ஸ்டேஷன் ஊழியர்களிடம் விசாரிக்கும்போது ரயிலில் தேநீர் விற்பவர் காணாமல் போன தினத்தன்று அவளை ஒரு ஆளோடு பார்த்ததாகச் சொல்ல, காவல்துறையினர் காதலனுடன் ஓடியிருக்கலாம் என்கிற கோணத்தில் யோசிக்கத் துவங்கிவிட்டனர். இதன்பிறகு தனக்குச் சிக்கலில்லை எனத் தெரிந்தது ஞானசேகரனும் கொஞ்சம் கொஞ்சமாய் விசாரணைகளுக்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டான்.
அந்தம்மா சொன்னதையெல்லாம் கவனமாய்க் கேட்டுக் குறிப்பெடுத்துக்கொண்ட இன்ஸ்பெகடர், “ஸோ தெளிவா தன் மேல யாருக்கும் டவுட் வராத மாதிரி எல்லாத்தையும் அந்தாளே செஞ்சிருக்கான். சரிம்மா நீங்க கெளம்புங்க. நாங்க கூப்டற அன்னிக்கி நீங்க கோர்ட்டுக்கு வரனும்.” என அவர்களை அனுப்பி வைத்தார்.
2
நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து ஞானசேகரனுக்கு போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் போலிஸ்காரர்களும் பாதுகாப்பாய் சென்றார்கள். கோவிலுக்கும் மார்க்கெட்டுக்கும் போலிஸ் பாதுகாப்போடு செல்லும் அவரைப் பார்த்து ஊர்க்காரர்களுக்கு ஒருபுறம் சிரிப்பும் இன்னொரு புறம் எரிச்சலும் வந்தது. ‘நாட்ல எவன் எவனுக்குத்தான் பாதுகாப்பு குடுக்கறதுன்னு வெவஸ்த இல்லாம போயிட்டு இருக்கு.” என காதுபடவே பேசினார்கள்.
பத்திரிக்கைகளில் நீண்டகாலமாய் கவனிக்கப்படாமலிருந்த சிமெண்ட் ஃபேக்டரியின் பிரச்சனைகளைக் குறித்து நிறைய செய்திகள் வெளிவரத் துவங்கின. நிலம் கையகபடுத்தப்பட்டதில் நடந்த முறைகேடுகளையும் விசாரிக்க வேண்டுமென சிமெண்ட் ஃபேக்டரியின் வாசலில் தினமும் சிலர் போராட்டம் செய்தார்கள். கையில் பதாகைகளுடன் கோஷமிடும் சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருந்தது. ஒவ்வொரு நாளும் போராட்டக் குழுவினர் அங்கு கூடுவதும், நிர்வாகத்தினரின் புகாரைத் தொடர்ந்து போலிஸ் கூட்டத்தைக் கலைப்பதும் மாறாத வழக்கமாகிக் கொண்டிருந்தது. சேகரன் வழக்கை விடவும் இந்த சிக்கல்கள் ஒவ்வொரு நாளும் பூதாகரமாய் விரியத் துவங்கியதில் ஃபேக்டரி நிர்வாகத்தினர் கடும் எரிச்சலடைந்திருந்தனர்.
இவாஞ்சலினின் கொலைவழக்கை விசாரிக்க எஸ்.பி அமைத்த தனிக்குழுவிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. தகவல்களை மட்டுமே அவர்களால் திரட்ட முடிந்தது, ஆதாரங்கள் கிடைத்திருக்கவில்லை. ஃபேக்டரி நிர்வாகத்தினர் எஸ்.பியை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்கள். நீதிபதி இந்த வழக்கில் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டியதாலும், அவகாசம் மிகக் குறைவாக இருப்பதாலும் காவல்துறையினரும் இந்த பேச்சுவார்த்தையை முக்கியமானதாய் கருதினார்கள்.
“என்ன ஸார் இது? இந்த பிரச்சனைய இவ்ளோ ஸ்ட்ராங்கா வளர விட்டுட்டீங்க. சிட்டிக்கு ரோட் போட்டுக் குடுத்ததுல இருந்து வீதி வீதிக்கு சிசிடிவி கேமரா ஸ்பான்சர் பண்ண வரைக்கும் அவ்ளோ செஞ்சிருக்கோம், இந்த சின்ன பிரச்சனையக் கூட சால்வ் பண்ண முடியாதா உங்களால?” என மேனேஜர் உரிமையோடு எஸ்.பியிடம் கேட்க,
“ஸாரி ஸார். இதுல நம்ம சைட்ல இருந்து எதும் செய்ய முடியல. மாஜிஸ்திரேட்டும் அந்த ஞானசேகரனும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க.” அவர் தன் இயலாமையை வெளிப்படுத்தினார்.
“என்ன செஞ்சா இந்த பிரச்சன தீரும்?”
ஏற்கனவே நிலைமை கைமீறிப்போயிருந்ததால் தீர்வை மட்டுமே ஃபேக்டரி தரப்பில் எதிர்பார்த்தார்கள்.
“ ரெண்டு வழி இருக்கு. ஒன்னு ஃபேக்டரியோட டாக்குமெண்ட்ஸ வெச்சு அவர் சொல்ற மாதிரி ஒரு கெணறே இல்லைன்னு காட்டனும். இன்னொன்னு ஞானசேகரன் தான் சொன்னதெல்லாம் உண்மையில்லன்னு வாக்குமூலம் குடுக்கனும். அப்பிடி குடுத்தா உண்மைலயே அந்தாள் மெண்டல் ஆகிட்டானு சொல்லி சமாளிச்சிடலாம்.” என எஸ்.பி அவரிடம் சொல்ல, மேனேஜரும் அவருடன் இருந்தவர்களும் யோசிக்கிறார்கள்.
“ம்ம்ம். டாக்குமெண்ட் பிரச்சன இல்ல. இருக்கற ஒரிஜினல்ல என்னென்ன கரெக்ஷன் பண்ண முடியுமோ அதையெல்லாம் செஞ்சு கோர்ட்டுக்கு அனுப்பிடுவோம். அந்தாள பைத்தியமாக்கறது எப்படின்னு மட்டும் யோசிப்போம் ” என மேனேஜர் உறுதியான குரலில் சொனார்.
3
மனைவியும் மகனும் ஏற்படுத்தின பிரிவின் வலிகளை எல்லாம் ஞானசேகரனின் பேத்தி நிவர்த்தி செய்துகொண்டிருந்தாள். நித்யா குழந்தையாய் இருந்தபோது கூட இத்தனை மகிழ்ச்சியோடு இருந்ததில்லை. கடந்த காலத்தின் துயர்மிக்க எல்லாச் சுவடுகளையும் அந்தக் குழந்தையின் மகோன்னதமான சிரிப்பு துடைத்தெறியக்கூடியதாய் இருந்தது. நித்யா சடாரென பெரிய மனிதியாய் தெரிந்தாள். அவளை இவர் பராமரிக்க வேண்டிய வயதில் இவரை அவள் பராமரிக்கத் துவங்கியபோது அவருக்கு சிறுவயதில் இழந்த அம்மாவின் நினைவு வந்தது. அதனாலயே அவள் மீதான கோவங்கள் எல்லாம் விலகி அவளை முழு மனதோடு அரவணைக்கத் துவங்கினார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஞானசேகரன் தன் மகளோடும் பேத்தியோடும் மருத்துவமனை சென்றார். குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையில் மாலை நேரத்தில் ஏராளமான கூட்டமிருந்ததால் காவலுக்கு வந்த காவலர்களை மருத்துவமனைக்கு வெளியிலேயே காத்திருக்கச் சொல்லியிருந்தார்கள். அவர்கள் வரிசையில் அமர்ந்திருக்க, ஒரு நர்ஸ் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட, அவள் மட்டும் எழுந்துபோனாள். கூப்பிட அவள் எழுந்து செல்கிறாள்.
நீண்டநேரமாய்க் காத்திருந்தும் நித்யா திரும்பி வந்திருக்காததால் சேகரன் அவளைத் தேடிச் சென்றார். நித்யாவை அழைத்துப்போன நர்ஸ் எதிரில் வர, அவளிடம் ‘சிஸ்டர் எம் பொண்ண டாக்டரப் பாக்கப்போயி ரொம்ப நேரமாச்சு, இன்னும் வரல. கொஞ்சம் என்னன்னு பாக்கறீங்களா?” என விசாரிக்க, அவள் இவரை வினோதமாய்ப் பார்த்துவிட்டு ‘பொண்ணா, என்ன ஸார் உளர்றீங்க. ரொம்ப நேரமா நீங்கதான் அங்க உக்காந்திருக்கீங்க. யாரையோ பாக்க வந்திருக்கீங்க போலன்னு நாங்களும் எதும் கேட்காம இருந்தோம்.” என்று சொல்ல அவருக்கு ஆத்திரம் வந்தது. அவளைத் தள்ளிவிட்டு வேகமாக மருத்துவரின் அறையை நோக்கிச் சென்றார்.
“ஸார் எங்க போறீங்க. நில்லுங்க..” என சத்தம் போட்டபடியே நர்ஸ் ஓடிவர, சேகரன் மருத்துவரின் அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். உள்ளே வேறு ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்த மருத்துவர் திடீரென நுழைந்த இவரைப் பார்த்து கடுப்பாகி “யாரு ஸார் நீங்க எருமமாடு மாதிரி பெர்மிஷன் இல்லாம வர்றீங்க” என கத்த, ஞானசேகரன் அங்கு தன் மகளைத் தேடுகிறார். “என் பொண்ணு வந்தாளே..” என அவர் சந்தேகத்தோடு மருத்துவரைப் பார்க்க, பின்னால் வந்த நர்ஸ் மருத்துவரிடம் “ஸாரி ஸார், ரொம்ப நேரமா உக்காந்திருந்தாரு, திடீர்னு என் பொண்ண எங்கன்னு லூசு மாதிரி கேட்டுக்கிட்டே இங்க வந்துட்டாரு..” மன்னிப்புக் கேட்கும் தொனியில் சொன்னாள். “எது நான் லூஸா? நீங்க எல்லாருந்தாண்டி லூஸு.” என ஆத்திரத்தோடு சேகரன் அங்கிருந்த நாற்காலிகளை எல்லாம் தள்ளிவிட்டு மருத்துவமனை முழுக்க நித்யாவைத் தேடத் துவங்கினார். நித்யா எங்க போன நித்யா என அவர் எழுப்பும் சத்தம் மருத்துவமனை முழுக்க பயங்கரமாய் எதிரொலிக்க, மருத்துவமனை ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அவரைப் பிடித்து வெளியே வந்து போட்டார்கள்.
“என் பொண்ண என்னடா செஞ்சீங்க பாவிகளா?” என அவர் வாசலில் நின்று கத்த, காவலுக்கு இருக்கும் போலிஸ்காரர்கள் அவரை நெருங்கி வந்து, “என்னாச்சு ஸார், ஏன் கத்தறீங்க? டாக்டரப் பாத்துட்டீங்களா?” என கேட்டனர். அவர் பதட்டத்தோடு “ஸார் என் பொண்ணு.. என் பொண்ண எதோ பண்ணிட்டானுங்க ஸார். தயவுசெஞ்சு கண்டுபிடிச்சுக் குடுங்க ஸார்.” என மன்றாடினார்.
“ஏன் ஸார் லூஸு மாதிரி உளர்றீங்க. உங்க பொண்ண நேத்துதான உங்க மருமகன் வீட்டுக்கு அனுப்பி வெச்சிங்க. அவங்க வீட்ல பாப்பாவ பாக்கனும்னு கேட்டாங்கனு கூடச் சொன்னீங்களே” என போலிஸ்காரர்கள் எரிச்சலோடு சொன்னார்கள்.
“இல்ல நீங்க எல்லாரும் பொய் சொல்றீங்க? இங்க ஆஸ்பத்திரிக்கி என்கூட என் பொண்ணும் வந்தா, எனக்கு நியாபகம் இருக்கு.” அவர் பிடிவாதமாய்ச் சொல்ல, போலிஸ்காரர் தனது மொபலைக் கொடுத்து,
“சரி அப்ப நீங்களே உங்க பொண்ணுக்கு ஃபோன் பண்ணி கேளுங்க.” என்றார். சேகரன் அவசரமாய் தன் மகளின் எண்ணுக்கு அழைத்தார்.
“ப்பா… சொல்லுப்பா… என்ன செய்ற?”
எதிர்முனையில் மகளின் இயல்பானக் குரலைக் கேட்டதும் அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது. எது நிஜம்? எது பொய்? என குழம்பிப்போனவருக்கு காலுக்குக் கீழிருந்த உலகம் நழுவிச் செல்வதைப் போலிருந்தது. அமைதியாய் இருந்தவர் சில விநாடிகளுக்குப்பின் இயலாமையோடு
“நீயுமா நித்யா..?” எனக் கேட்க,
“என்னாச்சுப்பா? ஏன் ஏதேதோ பேசற?..” என நித்யா பதறினாள். அவளிடம் தொடர்ந்து பேச விருப்பமில்லாமல் இணைப்பைத் துண்டித்துவிட்டவர் வீட்டை நோக்கி நடந்தார்.
ஒவ்வொருநாளும் இருண்மை கூடிக் கொண்டிருந்தது. எப்போதும் ஆட்களின் நடமாட்டம் நிரம்பியிருந்த வீட்டின் தனிமை அச்சுறுத்தக் கூடியதாயிருக்க ஹாலிலேயே படுத்திருந்தார். உறக்கம் கொள்ள முடியாத கண்களில் எல்லோரும் தன்னை கைவிட்டுவிட்டார்களென்கிற ஏமாற்றத்தில் கண்ணீர் சுரந்தது. தம் செயல்களுக்கான நியாயங்களைக் கற்பித்துக் கொள்ளும் திறமை எல்லா மனிதர்களுக்குமானது. நித்யாவிற்கான நியாயம் என்னவென்பதை அவரால் விளங்கிக்கொ முடியவில்லை. எப்போது உறங்கினோமெனத் தெரியாமல் அசதியில் கண்மூடிக் கிடந்தவரின் மேல் காலைநேரத்து வெயில் ஆக்ரமித்தபோது மெதுவாய்க் கண் விழித்துப் பார்த்தார். நலம் விசாரிக்கவோ, வேண்டியதை செய்து கொடுக்கவோ ஒருவருமில்லை. இப்படியே இந்த பகல் முழுக்க இதேயிடத்தில் கிடந்தாலும் அதற்காக யாரும் வருத்தப்படப்போவதில்லை. கைவிடப்படுதலின் உச்சத்தில்தான் மனிதர்கள் பைத்தியமாகிறார்களோவென நினைத்துக் கொண்டார். உடைகளை சரிசெய்தபடியே எழுந்து தண்ணீர் குடிக்கச் சென்றவர் வாசலில் கட்டப்பட்டிருந்த நாய் இல்லாமலிருப்பதைக் கவனித்து துணுக்குற்றார். அவசரமாய் கதவைத் திறந்தவர் ‘டாமி’ என அதன் பெயர் சொல்லி அழைத்தபடியே தேடினார். டாமி கட்டப்பட்டிருந்த கயிறு மட்டுமே அங்கிருக்க, டாமி காணாமல் போயிருந்தது. காவலுக்கு இருந்த போலிஸ்காரர்களும் இல்லாதததில் அவருக்குப் பதட்டம் அதிகமாக டாமியின் பெயரைச் சொல்லி வீதியில் இறங்கி தேடத் துவங்கினார். டாமியைத் தவிர மற்ற தெருநாய்களெல்லாம் அவரின் குரலுக்கு எதிர்க்குரல் கொடுத்தன.
வீட்டிற்குப் பின்னாலிருந்த தெருவையொட்டிய பழைய மைதானத்தில் ஆட்கள் சிலர் கூட்டமாய்க் கூடியிருப்பதைக் கவனித்து அங்கு ஓடினார். அவரைக் கண்டதும் கூடியிருந்தவர்கள் அச்சத்தோடு விலக டாமி வாயில் நுரைதள்ள செத்துக் கிடந்தது. “அய்யயோ… டாமி… “ எனக் கத்தியபடியே அதனை நோக்கி ஓடியவருக்கு அழுகை பெருக்கெடுத்தது. டாமியை மடியில் ஏந்திக்கொண்டு அழுதவருக்கு ஆறுதல் சொல்ல ஒருவருமில்லை. டாமியைத் தூக்கிக் கொண்டு எழ முயன்றபோது சதீஷ் பைக்கில் அங்கு வந்து சேர்ந்தான். “யோவ் பைத்தியக்காரத் தாயோலி, அந்த வாயில்லாத ஜீவன் உன்னய என்ன செஞ்சுச்சு. அதப் போயி கொன்னுட்டியே..” என ஆத்திரத்தோடு அவரைத் தள்ளிவிட்டான்.
“டேய் நான் எதுமே செய்யலடா… ராத்திரி எப்பவும் போல சோறுவெச்சுட்டு வீட்டுக்குள்ள போனவன் இப்பத்தாண்டா வெளில வந்தேன்..” என அவர் கதற, அவரின் மடியிலிருந்த டாமியை அவசரமாக தூக்கிக் கொண்டான்.
“ஏன் இப்பிடி எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிற?” என அவன் கத்தியபோது சுற்றியிருந்தவர்களில் சிலர் அவனிடம், “ஏ சதீஷூ… அவர் வேணும்னே செஞ்சிருக்க மாட்டாரு. எதுவா இருந்தாலும் நீ வீட்டுக்குக் கூட்டிப்போயி பேசு..” என சொல்ல, “உங்களுக்குத் தெரியாதுங்க, கொஞ்ச நாளாவே மண்ட கிறுக்காகி சுத்திட்டு இருக்காரு. என்ன செய்றோம் ஏது செய்றோம்னு தெரிய மாட்டேங்குது. இன்னிக்கி டாமிக்கு ஆனது மாதிரி நாளைக்கி எனக்கோ நித்யாவுக்கோ ஏதச்சும் ஆகிட்டா ?” என அழுதான். சேகரன் உறைந்துபோய் அப்படியே கிடக்க, சதீஷ் எதுவும் பேசாமல் டாமியோடு வீட்டை நோக்கி நடந்தான். சேகரனின் பாதுகாப்பிற்கு நின்ற போலிஸ்காரர்கள் குளித்துமுடித்து புத்துணர்ச்சியோடு வர, “எங்க ஸார் போனீங்க? இங்க என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டீங்களா? என சதீஷ் கத்த,
“எங்க கிட்ட ஏன் கோவப்படற ? உங்க அப்பாதான்ப்பா நைட்டு நான் பாத்துக்கறேன். நீங்க போயிட்டுக் காலைல வாங்கன்னு அனுப்பி வெச்சாரு.” என இருவரும் சாதாரணமாய்ச் சொனனர்கள். ஞானசேகரன் திரும்பி அவர்களைப் பார்த்தார். இரவு மருத்துவமனையிலிருந்து வந்தபிறகு நடந்த எல்லாமும் அவருக்குத் தெளிவாய் நினைவிருந்தது. எனில் இவர்கள் எதை நிரூபிக்க இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள்? குழப்பத்தோடு எழந்தவரின் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பேசினார். “ப்பா நானும் அருணும் இங்க இருந்து கிளம்பிட்டோம். மதியமா வந்துடறோம்” என எதிர்முனையில் நித்யா சொல்ல, சேகரன் ஆத்திரத்தோடு ஃபோனை ஒரு கல்லில் தூக்கிப்போட்டு உடைத்தார். சுற்றியிருந்தவர்கள் “அய்யய்யோ அந்தப்பய சொன்னமாதிரி உண்மைலயே மண்டக் கிறுக்காகிதான் போச்சு போல..” என அச்சத்தோடு விலகிச் சென்றார்கள்.
4
நீதிபதி கொடுத்திருந்த பத்துநாட்கள் அவகாசம் முடிந்திருந்ததால் அன்றைய விசாரனை என்னவாகப் போகிறதென்பதைத் தெரிந்துகொள்ள நிறையபேர் அங்கு கூடியிருந்தார்கள். ஒழுங்கான உணவோ ஓய்வோ இல்லாமலும் கசங்கிய உடைகளுடனும் கோர்ட் ரூம் வாசலில் சேகரன் நின்றுகொண்டிருந்தார். நித்யா சதீஷ், சேகரனின் அண்ணன் எல்லோரும் வந்திருக்க, நித்யாவின் குழந்தையை சதீஷ் கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். அந்தக் கூட்டத்தில் அருண் இல்லாததில் கொஞ்சம் ஆறுதலாய் உணர்ந்தார். அவருக்கு எதிரில் கூட்டத்திற்குள் இவாஞ்சலினின் வயதான பெற்றோர் இருப்பதைக் கவனித்தவர், அவர்களிடம் மன்னிப்பைக் கோரும் விதமாய் கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டார். அவர் வழக்கிற்கான மணு வாசிக்கப்பட்டதும் போலிஸ்காரர்களைத் தொடர்ந்து உள்ளே செல்கிறார். நீதிபதி தன்முன்னிருந்த அறிக்கைகளை எல்லாம் கவனமாய்ப் பார்த்தபடி, “அரியலூர் எஸ்.பி இருக்கீங்களா?”
“எஸ் ஸார்” என அவர் எழுந்து நின்றார்.
“சொல்லுங்க ஸார். என்கொயரி ரிசல்ட் என்ன?”
“ஸார் அந்தப் பொண்ணு காணாம போன கேஸ் எந்தவிதத்துலயும் இவர் சொல்ற டீடைல்ஸோட கனெட்க் ஆகல. ’பாழடஞ்ச கெணத்துல அந்தப் பொண்ண தள்ளிவிட்டுக் கொன்னதா இவர் சொல்றாரு. ஆனா அந்த ஏரியாவோட லேண்ட் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டோம். அவர் சொன்னமாதிரி எந்தக் கெணறும் அங்க இல்ல. ரிஜஸ்தர் ஆஃபிஸ் ல இருந்து பழைய டாக்குமெண்ட்ஸ்லாம் கலெக்ட் பண்ணி உங்களுக்கு சப்மிட் பண்ணி இருக்கோம். ஐ திங்க் எல்லாமே இவரோட ஹாலுஸ்னேஷனா இருக்கனும்.” என எஸ்பி சொல்லிமுடிக்க, நீதிபதி குழப்பத்தோடு அவர்கள் சமர்ப்பித்திருந்த எல்லா ஆதாரங்களையும் பார்க்கிறார்.
“ஸார் ஒரு நிமிஷம்..” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் எழ,
“சொல்லுங்க ஸார் என்ன விஷயம்?” என நீதிபதி அவர் பக்கம் திரும்பினார்.
“கொஞ்சநாளாவே இவர் வியர்டா நடந்துக்கறதா அவர் வீட்ட சுத்தியிருக்கவங்க பேசிக்கிறாங்க. சம்பந்தமே இல்லாம ஏ.என் ஹாஸ்பிட்டல்ல போய் பிரச்சன பண்ணியிருக்காரு, அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் கூட ஹாஸ்பிட்டல்ல இருந்து குடுத்திருக்காங்க. இது பத்தாதுன்னு வீட்ல வளத்த நாயிக்கு இவரே பாய்ஸன் வெச்சும் கொன்றுக்காரு.”
அரசு தரப்பு வழக்கறிஞர் சொன்னதைக் கேட்டதும் தன்முன்னாலிருந்த எல்லா அறிக்கைகளையும் ஒதுக்கிவைத்த நீதிபதி ஞானசேகரனைப் பார்த்தார். தன் முன்னால் நடக்கும் நாடகத்தில் நிஜமெது பொய்யெதென புரிந்துகொள்ள முடியாதவரில்லை, அவர். எல்லா வழக்குகளுக்கும் ஆகயிறுதியாய் தேவைப்படுவது ஆதாரங்கள் மட்டுமே என்கிற நாணயத்தை இவர்கள் தங்களுக்கு சாதகமாய் சுழற்றிக் கொண்டிருப்பதைத் தெரிந்துகொண்டவர் வேறுவழியில்லாமல் சேகரனை முன்னால் வரச்சொன்னார்.
“என்ன ஸார், நீங்க சொன்ன மாதிரி ஒரு கெணறே இல்லன்னு சொல்றாங்க?”
ஞானசேகரன் அமைதியாக அவரைப் பார்த்து
“ஐயா நான் சொன்னது எல்லாமே உண்ம. இதத் தவிர வேற என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல. “
“நீங்க சொல்றது உங்களுக்கு மட்டுந்தான் உண்மையா இருக்கு சேகரன். அத உணமைன்னு நிரூபிக்க எந்த எவிடென்ஸும் இல்ல. அதுவுமில்லாம ஹாஸ்பிட்டல் நீங்க பிரச்சன பண்ணினது, நாய்க்கு பாய்ஸன் வெச்சதையெல்லாம் பாக்கறப்போ எல்லாமே அப்நார்மலா இருக்கே…”
“உண்மைய மட்டுமே சொல்லனும்னு நினைச்சா எல்லாமே அப்நார்மலாதான் இருக்கும் போல ஸார். நான் பைத்தியமாகிட்டேன்னு இவ்ளோ நாளா மத்தவங்க சொன்னதெல்லாம் உண்மதானோன்னு தோணுது.” அவரின் குரல் தழுதழுக்க, அரசு வழக்கறிஞர் எழுந்து
“ஸார் இந்தக் கேஸ் ஆரம்பத்துல இருந்தே சாலிட் எவிடென்ஸ் எதும் இல்லாமத்தான் போயிட்டு இருக்கு. தேவையில்லாம நிறையபேரோட நேரத்த வீணடிச்சிருக்காரு. இவர சிவியரா பனிஷ் பண்ணினாத்தான் மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்கும்.” என்றார்.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “அதெப்டி ஸார் பனிஷ் பண்ணமுடியும். உங்க எல்லாரோட கன்ஃபெஸன்ஸையும் வெச்சுப் பாத்தா அவர் மெண்டலி அப்நார்மல் பெர்சன்.” என நீதிபதி சிரிக்க, அரசுதரப்பு வழக்கறிஞர் தலையைக் குனிந்துகொள்கிறார். இதற்குமேல் இந்த வழக்கை நகர்த்தமுடியாதென்பதைப் புரிந்துகொண்டவராய் நீதிபதி, “ஓகே இவாஞ்சலின கொலை செஞ்சதா இவர் சொன்னதுக்கு எந்த ஆதாரமும் இல்ல. அதுமட்டுமில்லாம இவரோட குழப்பமான நடவடிக்கைகளப் பாக்கறப்போ இவருக்கு மனநலன் சார்ந்த பிரச்சனைகள் இருக்கலாமோன்னு சந்தேகப்படறேன். இவருக்கு ப்ராப்பர் ட்ரீட்மெண்ட் குடுக்கனும்னு நான் அரசு மருத்துவமனை மருத்துவரக் கேட்டுக்கறேன்.” என்று சொல்லியபடியே தன் முன்னாலிருந்த கேஸ்கட்டில் எழுதி அதை ஓரமாய்த் தூக்கிப் போட்டார்.
நீதிமன்றத்தில் திரண்டிருந்த எல்லோருக்கும் தெரிந்திருந்த உண்மையை ஒருவராலும் நிரூபிக்க முடியவில்லை. வழக்கின் தீர்ப்பைத் தெரிந்து கொள்ள வந்திருந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றார்கள். தன்னை நெருங்கி வந்து பேசநினைத்த நித்யாவைப் பார்க்காமலேயே தவிர்த்த ஞானசேகரன் யாரிடமும் முகம் கொடுக்காமல் கோர்ட்டிலிருந்து வெளியேறினார். ஒரு போலிஸ்காரர் “ஸார் உங்கள ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணச் சொல்லி இருக்காங்க.” என அவரை தடுத்து நிறுத்தினார். எதிர்ப்பெதையும் காட்டாமல் போலிஸ்காரரோடு நடக்கத் துவங்கினார்.
Comments