தொடர் கதைகள் எழுதுவது ஒரு எழுத்தாளனுக்கு நல்ல பயிற்சியாய் அமைகிறது. அதிலும் வெகுசன இதழ்களில் எழுதும்போது எளிமையான சொற்களில் சிக்கலற்ற மொழிநடையில் கதை சொலவது முக்கியமாகிறது. தீவிர இலக்கியப் பரப்பில் வெகுசன எழுத்தின் மீது ஒவ்வாமை இருப்பதன் காரணங்கள் புரிவதில்லை. இங்கு எல்லாவகையான எழுத்துக்களும் அவசியம். தீவிர இலக்கியத்திற்கு எப்படி தேவைகளும் முக்கியத்துவங்களும் இருக்கின்றனவோ அதுபோலவே வெகுசன இலக்கியத்திற்கும் உண்டு. எடுத்துக் கொள்கிற கதைகளை எப்படிச் சொல்லப் போகிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் ஒரே நேரத்தில் இரண்டு வெகுசனத் தொடர்கதைகளை எழுதும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஜுனியர் விகடனில் ரெண்டாம் ஆட்டம் தொடரையும், bynge ல் வேட்டை என்ற தொடரையும் எழுதினேன். இரண்டு தொடர்களுமே வாரத்திற்கு இரண்டுமுறை வெளியாகக் கூடியதென்பதால் எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமென்கிற நெருக்கடி. ஆனால் தடையின்றி எழுதுவதற்கு இந்தக் காலகட்டம் ஒரு பயிற்சியாய் அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ரெண்டாம் ஆட்டம் பெரிய அளவில் வாசிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்ட அளவிற்கு வேட்டை கவனிக்கப்படவில்லை என்றொரு மனக்குறை எனக்குண்டு. bynge ல் பெரிய அளவில் வாசிக்கப்பட்டிருந்தாலும் புத்தகமாக வாசித்தவர்கள் குறைவு. தொடராக வந்ததிலிருந்து நிறைய மாற்றங்களோடுதான் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தேன். முக்கியமான காரணம், தொடராக எழுதியபோது அவசரத்தில் சில விஷயங்களை தவறவிட்டிருந்தேன். ஆனால் நூலாகக் கொண்டு வந்தபோது அவற்றையெல்லாம் சரியானபடி இணைக்க முடிந்தது. வேட்டை வெகுசனக் கதைகளை வாசிப்பவர்களுக்கான கதையாக இருந்தாலும் அதில் எனக்கேயான தனித்துவமான சில இடங்களையும் எழுதியிருக்கிறேன்.
ஒரு நல்ல வெப்சீரிஸாகவோ சினிமாவாகவோ வரக்கூடியதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டிருக்கும் வேட்டையிலிருந்து சில பகுதிகள்.
சத்யனின் டைரிக்குறிப்பு: (1)
அம்மா…
அவள் எதையுமே நீண்டு முகர்ந்து உணரும் இயல்புடையவள். அவள் மூளை வரை எட்டிய வாசம் என் நாளங்களினூடும் பாய்ந்ததை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் நுகர்ந்த அனைத்தையும் கருவிலிருந்த பொழுதே நானும் நுகர்ந்தேன்.
”அம்மாவுடன் பம்பாய் சென்ற நாட்கள் போல் மீண்டும் அமையாது. பம்பாயின் புறநகர்ப் பகுதியிலிருந்தது அந்த அடுக்கு மாடி கட்டிடம். அம்மா என்னையும் அவளுடன் அழைத்துச் சென்றிருந்தாள். அந்த இரவில் பெரிய அகல் விளக்கொன்றின் வெளிச்சத்தில் அம்மா ஜொலித்தாள். அங்கு என்ன நிகழ்ந்ததென்று நினைவில்லை. அம்மாவின் முகம் மலர்ந்திருந்தது. அவள் அவ்வளவு மகிழ்வுற்றிருந்து நான் அதற்குப்பின் ஒரு போதும் பார்க்கவில்லை. அவளுடன் இருந்தது யாரென்று நினைவில்லை. சிவப்பு நிற வேட்டி அணிந்திருந்த அந்த மனிதன் மேல் சட்டை எதுவும் அணிந்திருக்கவில்லை.
அம்மா என்னை உறங்குமாறு துரிதப்படுத்தினாள். நானும் உறங்கினேன். என் புலன்கள் மட்டும் விழித்திருந்தன. அங்கு நடந்தவைகள் ஒரு நிகழ்கனவைப் போலிருந்தது. அம்மாவின் சிரிப்பொலி, அதோடு அந்த மணமும் சேர்ந்து உறக்க நிலையிலும் என் புலன்களைத் தொந்தரவு செய்தது. பம்பாயிலிருந்து சென்னை திரும்பிய பொழுது அம்மாவின் தோள்களில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த என்னை அவள் மீது வீசிய அதே சுகந்தம் தட்டி எழுப்பியது. "அம்மா இது என்ன வாசம்" என்று நான் கேட்க, சற்றுத் தயக்கத்தோடு " இது அம்மாவோட வாசம்ப்பா" என்றாள்.
டைரி குறிப்பு 2
"என் சுவாசத்தை சர்ப்பங்கள் அறிந்திருக்கின்றன".
மழை குழைத்த மண்ணின் மணம்.
பசுமஞ்சள் கிழங்கின் மணம்.
உப்பும் தோலும் உலரும் மணம்.
மரமல்லிகை மணம்.
தாழம்பூவின் மணம்.
விஜயன் வேகமாக பக்கங்களை திருப்பினார். அவருக்கு மூக்குப்பொடி சாமியார் முற்றிலும் வேறு மனிதராக விளங்கத் துவங்கினார். பக்கங்கள் தோறும் குறியீட்டு சின்னங்கள், வாசனை திரவியங்களின் வேதியியல் கூட்டு விதிகள் என ஏதோ விஞ்ஞானியின் ஆய்வுக்கூட புத்தகம் போலிருந்தது.
விஜயனின் பார்வை தான் கையாளும் வழக்கிற்கும் இந்த மனிதனின் கடந்தகாலத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் தேடியது. பக்கங்களை வேகமாக திருப்பிக் கொண்டிருந்த விரல்கள் ஒரு பக்கத்தில் நிலைகுத்தி நின்றது. இரண்டு சர்ப்பங்கள் பின்னிக் கொண்டிருக்கும் ஓவியம். அதன் கீழே
{ஆண்
பெண் } = உயிர் மணம் , என்று எழுதியிருந்தது.
விஜயன் டைரியை சடாரென மூடினார். அவருக்கு எங்கோ பொறித்தட்டுவது போலிருந்தது.
சத்யனின் டைரிக் குறிப்புகள் – 3
சிறுபிராயத்தில் ஒரு சமயம் தோன்றிய கனவு. இன்று வரை நினைவிலிருப்பது அது ஒன்று மட்டுமே. அந்த கனவின் ஒரு பாதி நீயென்றால் மறுபாதி நான். முதற்பாதியை நீ எடுத்துக் கொண்டதால் நான் மறுபாதியை விருப்பு வெறுப்பின்றி எடுத்துக் கொண்டேன். காலப்போக்கில் அதையே விரும்பினேன். பின் வெகுகாலம் கழித்து அந்த கனவு என்னை வழிநடத்தவில்லை என் நிஜத்தைத்தான் கனவென காலம் முன்கூட்டியே அறிவித்திருந்தது என்பது புரிந்தது.
நீயும் அக்கனவைப்போலவே காலத்திற்கு முன்னே ஓடியவள். என்னையும் அழைத்துக் கொண்டு ஓடினாய். அது ஒன்று மட்டும்தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் என்ன விரும்புகிறேன் நீ ஒரு முறை கூட கேட்டதில்லை. நான் விரும்புவதையும் நீயே முடிவு செய்துகொண்டு அதை வழங்கி அதற்கு என்னிடம் ஒப்புதலும் எதிர்பார்த்தாய். உன் கருவறை விட்டு வெளியே வர விரும்பியிராதவனை காலம் பிரித்தது. அதற்கு நீ அனுமதித்தாய். நன்மை என்றாய். மென்பஞ்சு மெத்தை போன்ற கருமெத்தையில் புவியீர்ப்பின விசை அழுத்தாத இதமான வெப்பக் குளத்தில் பிரபஞ்சவெளியில் சஞ்சரித்து கொண்டிருந்தவனை காலமும் நீயும் கைக்கோர்த்துக் கொண்டு புறந்தள்ளினீர்கள். நீ வேறு நான் வேறு என்று எனக்கு உணர்த்த முற்பட்ட உன்னை சிதைத்து முட்டி மோதி அழுது அலறிக்கொண்டு இவ்வுலகில் வந்து விழுந்தேன். நீ ஆசுவாசமடைந்து பெருமூச்சிரைத்ததை பார்த்த பொழுது அது ஒரு விடுதலை பெருமூச்சாக எனக்கு தெரிந்தது. என்னிடமிருந்து நீ விடுபட்டு விட்டது போல உணர்கிறாயோ என்று நினைத்துப் பார்த்தேன். பெரும் வேதனை நெஞ்சை அடைத்தது. நான் தனியனாக இனி வாழ்ந்தாக வேண்டும். நேற்று வரை கிடைத்த அரவணைப்பும் கதகதப்பும் இனி செயற்கையாக யாரிடமோ எவரிடமோ கெஞ்சி கூத்தாடி அல்லது வற்புறுத்தி நான் பெற வேண்டும்.
நான் ஆண்களை தேடினேன். அவர்களோடு இருக்க முயன்றேன். அவர்கள் உலகம் சிக்கல்களின்றி இருப்பதை உணர்ந்தேன். நாங்கள் அலைந்துத் திரிந்தோம், வேட்டையாடினோம், கேளிக்கை கொண்டாட்டங்களென எங்கள் நாட்கள் கழிந்தன. அர்த்தமற்ற ஒரு வெறுமை மனதை அழுத்தியது. எவர் கண்களிலும் ஒளியில்லை.
வேட்டையாடிய உணவு ருசிக்கவில்லை. காற்றில் வாசமில்லை. ஆம் காற்று வாசமற்று இருந்தது. நான் துடித்து எழுந்தேன். உறக்கத்தின் பிடியில் அந்த கனவு அவ்வபோது தோன்றியது. அதில் நான் எனும் ஒரு பாதியும் நீயெனும் மறுபாதியும் மாறி மாறி தோன்றி மறைந்தோம். கனவில் அந்த வாசம் மனதை நிறைத்தது. ஒரு சமயம் உன் தோள் சாய்ந்திருந்தபொழுது உணர்ந்த அதே வாசம்.
***---------****
சத்யனின் டைரிக் குறிப்புகள் – 4
"உனக்கு உனது தாயின் கண்கள்" என்று யாரோ கூறினார்கள். அடர்ந்த வனத்தினுள்ளே ஒரு பிரம்மாண்ட அரண்மனை. பல அடுக்கு மாடிகளும் அறைகளும் நிறைந்த அந்த மாளிகையில் தனியொருவனாக நான் நுழைகிறேன். என்னைச்சுற்றிலும் மனித குரல் கேட்கிறது ஆனால் உருவங்கள் தென்படவில்லை. நான் ஒவ்வொரு தளமாக ஏறி ஒவ்வொரு அறைக்குள்ளும் புகுந்து தேடுகிறேன். நான் எனது தந்தையைத் தேடினேன், சகோதரனைத் தேடினேன் நண்பனை பகைவனை பணியாளை எனது முதலாளியை அண்டை வீட்டானை என அனைத்து உறவுகளையும் ஆண் வடிவில் தேடினேன். அவர்கள் எவரும் தென்படவில்லை. அரண்மனை மேல்தளத்தில் பெரிய மரக்கதவினால் பாதி மூடப்பட்டிருந்த அவ்வறையில் ஒரு உருவம் தெரிந்தது. நான் தேடியதை கண்டடைந்த ஆவேசம் என்னுள் மிகுந்தது.
சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் முகத்தின் ஒரு பாதி மட்டுமே தெரிந்த அவ்வுருவம் "வா" என்று என்னை அழைப்பது போல் கைகள் நீட்டியது. நான் ஓடிச்சென்று அவ்வுருவத்தின் முன் நின்றேன். அது என்னை திரும்பி பார்க்கவில்லை, மாறாக கண்ணாடியில் தெரிந்த என்னைப் பார்த்து பேசியது. "எங்கே எனக்காக ஒரு நடனமாடு மகனே" என்றது. நான் குதூகலமாக ஆடினேன். அவ்வுருவம் கைகள் தட்டி அதை இரசித்தது. அதன் மகிழ்ச்சி என்னை மேலும் மேலும் பரவசப்படுத்தியது. நான் அதிக துள்ளலோடு நடனமாடினேன். அது கைத்தட்டி இரசித்து சிரித்து மகிழ்ந்தது. முன்னெப்பொழுதும் உணர்ந்திராத மனநிறைவு என்னை அவ்விடத்திலேயே கட்டிப்போட்டது. இனி என் வேலை என் தெய்வத்தை மகிழ்விக்க நடனமாடுவது என்று மனதில் நிறுத்திக் கொண்டேன்.
சில நாட்கள்வரை என்னை ஆடவைத்து அது இரசித்தது. விதவிதமான நடனங்கள் விதவிதமான அரிதாரம் பூசிக்கொண்டு நான் நடனமாடினேன். ஒரு ஒரு விதி மட்டும் இருந்தது. அவ்வுருவம் விரும்பும் நடனத்தை மட்டுமே கையசைவும் கண்ணசைவும் அது கூறுவது போலவே இருக்க வேண்டும். சற்று வேறுபட்டு ஆடினாலும் அதன் மறுபாதி முகத்தை மெல்லத் திருப்பி காட்டும். சிதைந்து சிதிலமடைந்து குருதி கொப்பளிக்கும அப்பாதியை என்னால் காண முடியாது பல சமயங்களில் கதறியிருக்கிறேன். சிறுநீர் கால்சட்டையை நனைத்து விடுவதை உணர்ந்திருக்கிறேன். அதனால் அதை மகிழ்விக்கும் செயலை மட்டுமே செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தேன். அச்சம் என்னை ஆக்கிரமித்தது. கண்ணாடி உருவம் சிரித்து மகிழ்வது எனது இருத்தலுக்கு அவசியமாக இருந்தது. இவ்வளவு பெரியவனாக வளர்ந்த பின்னும் என்னால் அவளை மீறி எதுவும் செய்ய இயலவில்லை. சாட்டை போன்ற கொடியொன்று எனக்கும் அவளுக்குமிடையே நீண்டிருக்கிறது. அது சில நேரங்களில் சாட்டையாக நீள்கிறது, கருங்கூந்தல் போல் என்னை வருடுகிறது சில சமயங்களில் கொடிபோல் சுற்றி என் கழுத்தை இறுக்குகிறது. அவள் கைத்தட்டி இரசிக்கும் பொம்மை நான். அதை நான் மறக்கக்கூடாது. மறந்தால் அவள் முகம் மாறும். அது என்னை வதைக்கும்.
****-----*****----*****
Kommentare