வாய்ப்புகளும் வெற்றிகளும்…
- லக்ஷ்மி சரவணகுமார்

- Feb 25
- 4 min read

தனிப்பட்ட செய்திகளிலும் மின்னஞ்சல்களிலும் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளாக சமீபத்தில் நான் காண்பது சினிமாவில் எனக்கொரு வாய்ப்பு வேண்டும். சிலர் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவான நோக்கத்தோடு இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு என்ன வேண்டுமென்கிற தெளிவெல்லாம் இல்லை. ஏதாவதொரு வாய்ப்பு. துணை நடிகராகவோ, உதவி இயக்குனராகவோ, என்ன வேலையென்றாலும் ஓகே எனக் கேட்கும் போது உண்மையிலேயே குழப்பமாக இருக்கிறது? இவர்கள் எந்த நோக்கத்திற்காக திரைப்படங்களை நோக்கி வர விரும்புகிறார்கள்.?
2010 வது வருடம் நான் உதவி இயக்குனராக இயக்குனர் வசந்தபாலனிடம் சேர்ந்தேன். ஐந்து வருடங்களுக்கும் அதிகமாக அவருடன் பயணித்து இரண்டு திரைப்படங்களில் வேலை செய்தேன். அதன் பிறகு 2015 வது வருடம் முதல் சில திரைப்படங்களின் திரைக்கதையில் வேலை செய்வதோடு நாவல்களை எழுதுவதிலும் எனது கவனத்தை செலுத்தியிருந்தேன். நடுவில் ஒரு திரைப்படம் துவங்குகிற நிலைவரை சென்று நடக்காமல் போனது. பிற்பாடு ரெண்டாம் ஆட்டம் தொடர் எழுதியதன் வாயிலாக ஆனந்த விகடன் நிறுவனத்தின் மூலமாக ஒரு வெப் சீரிஸை இயக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இந்த நீண்ட காலகட்டத்தில் நான் திரைப்படங்களில் வேலை செய்த நாட்களை விட அந்த வேலைக்காக காத்திருந்ததுதான் அதிகம்.
இந்த காலகட்டத்தில் நிறையபேர் நீங்கள் அடிப்படையில் எழுத்தாளர் இயக்கத்தை கைவிட்டு நிறைய திரைக்கதைகளில் வேலை செய்யலாமே என சொல்லியிருக்கிறார்கள். நான் பெரும்பாலும் புன்னகையோடு கடந்துவிடுவேன். நான் என்ன செய்ய வேண்டுமென்பதை நான் மட்டுமே தீர்மானிக்க வேண்டுமென்பதில் எப்போதுமே உறுதிகொண்டிருக்கிறேன். அதற்காக பொருளாதார ரீதியிலான இழப்புகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் முயற்சிப்பதையோ வேலை செய்வதையோ ஒருபோதும் நிறுத்தியதில்லை.
வணிகத் திரைப்படச் சூழல் என்பது திறமைகளுக்கு வெளியிலும் நிறைய கணக்குகள் சார்ந்ததாக இயங்கி வரும் ஒன்று. வெற்றி பெற்ற பலருக்குத் திறமைகளைத் தாண்டி வேறு சில காரணங்களும் முக்கியமாக பலமாக இருக்கும். எப்படி கதை எழுதுவது, ஒரு திரைப்படத்தை எப்படி இயக்குவது என்பதைக் கற்றுக்கொள்வதோடு நமது பொருளை எப்படி விற்கவேண்டும் என்கிற வியாபாரக் கணக்குகளையும் ஒரு இயக்குனர் தெரிந்து வைத்திருக்க வேண்டியது இன்றைக்கு அவசியமாகிறது. இயக்குனர் என்றில்லை. நடிகர்கள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த விதி பொருந்தும். இப்படி திரைப்பட தொழிலின் முகம் பாரிய அளவில் மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இதற்கும் நுழைய விரும்பும் ஒருவர் தாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற குறைந்தபட்ச தெளிவோடும் அப்படி செய்வதற்கு தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும் என்கிற முன் தயாரிப்போடும் இருப்பது அவசியம். இது அறிவுரையோ, ஆலோசனையோ, அல்லது வாய்ப்புகளைப் பெறுவதற்கான சூத்திரமோ அல்ல.
சினிமாவைக் கற்றுக்கொள்ள இன்று ஏராளமான வழிகள் உள்ளன. நீங்கள் இயக்குனராகவோ நடிகராகவோ அல்லது வேறு தொழில்நுட்பக் கலைஞராகவோ ஆகவேண்டுமென விரும்பினால் அடிப்படையாக இரண்டு விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். ஒன்று சினிமா தனி மனித உழைப்பால் உருவாகக் கூடியது அல்ல, நிறைய மனிதர்களின் கூட்டு உழைப்பில் உருவாகும் ஒன்று. இங்கு எல்லோருடனும் இணைந்து வேலை செய்யக் கூடிய ஜனநாயகத் தன்மையையும் ஆளுமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்ததாக எல்லாவற்றைக் குறித்தும் குறைந்தபட்ச வாசிப்பு.
நான் நடிகனாகத்தான் வாய்ப்புத் தேடுகிறேன் நான் எதற்கு நல்ல இலக்கியங்களைப் படிக்க வேண்டுமென நீங்கள் கேட்கலாம். நல்ல இலக்கியங்களை வாசிக்கையில் அதன் கதாப்பாத்திரங்களிலிருந்து வெவ்வேறு விதமான உணர்வுகளையும் அதனை வெளிப்படுத்தும் விதங்களையும் நாம் கற்றுக் கொள்ள முடியும். நாம் வாசிக்கும் கதாப்பாத்திரமாக நம்மை உணரும் போது அந்தக் கதாப்பாத்திரத்தை அந்தரங்கமாக நடித்துப் பார்த்து ஒத்திகை செய்துகொள்ளச் சொல்லி மனம் தூண்டும்.
பார்வையாளனோ கேமராவோ இல்லாமல் ஒரு நடிகன் தானே நடித்துப் பார்ப்பதைப் போன்று இது. நீண்டகால வாசிப்பின் வழியாக ஒரு நல்ல நடிகன் தனது திறமையை மெருகேற்றிக் கொள்ள முடியும். தொடர்ந்து வாசிக்கிற ஒருவரே நல்ல நடிகராகவும் புதிய முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.
இதே போல ஒளிப்பதிவாளராகவோ, கலை இயக்குனராகவோ, அல்லது படத் தொகுப்பாளராகவோ ஆகவேண்டுமென்றாலும் உங்களுக்கு அடிப்படையான வாசிப்பு அவசியம். நிலம், மனிதர்கள், என எல்லாவற்றைக் குறித்த தரவுகளோடும் எழுதப்படும் நாவல்கள் ஒரு முழுமையான வாழ்வனுபவத்தைக் கொடுக்கின்றன. ஒரு உதாரணத்திற்கு ரா கி ரங்கராஜனின் அடிமையின் காதல் நாவலை எடுத்துக் கொள்வோம். அந்தக் கதையில் வரும் நாயகனாக காஞ்சிபுரத்தானைக் குறித்த குறிப்புகளை வாசிக்கும்போது அவனது உடல்மொழியும் தோற்றமும் நமக்குள் ஒரு சித்திரமாக படிந்துவிடுகிறது.
அடுத்ததாக அவன் எதிர்கொள்ளும் சாகசத்தின் வழியாக அன்றைய வட தமிழகத்தின் நிலவியல் காட்சிகள் துல்லியமாக நமது மனதில் பதிந்துவிடுகின்றன. சற்றேறக்குறைய நிறம் ஒளி என எல்லாவற்றைக் குறித்தும் நாமொரு முடிவுக்கு வந்துவிட முடியும். இப்போது ஒரு ஒளிப்பதிவாளருக்கு இந்த நிலவியல் குறித்த ஞானமும் அந்தக் காலகட்டத்தில் என்னென்ன நிறங்கள் இருந்தன என்கிற தகவலும் ஒளியமைக்க வேண்டிய அடிப்படை முன்னேற்பாடுகளும் கிடைத்துவிடுகின்றன. இதே விதிதான் கலை இயக்குனருக்கும்.
டராண்டினோ தனது திரைப்படங்களின் படத்தொகுப்பு பாணியை நாவல்களிலிருந்து கற்றுக்கொள்வதாக ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். இந்த அவதானம் முக்கியமானது. எந்தவிதச் சலனமுமில்லாமல் செல்லும் கதைப்போக்கிற்கு மாற்றாக சடாரென கத்தியால் சீவியதுபோல் திடீரென வந்தது செல்லும் கதை சொல்லல் முறையை நிறைய நாவல்களில் பார்க்க முடியும் .
ஒரு உதாரணத்திற்கு எனது உப்பு நாய்கள் மற்றும் ரெண்டாம் ஆட்டம் நாவல்களை எடுத்துக் கொள்ளலாம். வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் வெவ்வேறு கதாப்பாத்திரங்களைச் சொல்லும் இந்த நாவல்கள் முன்பின்னாக கதை சொல்வதோடு எதிரபாராமல் வரும் சம்பவங்களாலும் சுவாரஸ்யமாகிறது. இந்தக் காரணத்தினாலேயே இந்த நாவல்களில் ஒரு திரைக்கதைத்தன்மை இருப்பதாக எப்போதும் சொல்லப்படும். உண்மையில் இதனை நான் திட்டமிடுவதில்லை. ஆனால் எழுத்தாளராக இருப்பது இயக்குனராக இருப்பதற்கும் திரைப்படங்களைப் புரிந்துகொள்வது எழுத்தாளராக இருப்பதற்கும் உதவியாகவே இருக்கிறது. கானகன் வெளியானபோது அதனை வாசித்துவிட்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இதனைக் குறிப்பிட்டதை இப்பொழுது நினைவுகொள்கிறேன்.
சரி நான் நிறைய புத்தகம் வாசிக்கிறேன் என்னால் சினிமாவில் வெற்றியடைய முடியுமா என்றால் நிச்சயம் இல்லை. நல்ல இலக்கியம் வாசிப்பது அடிப்படை மட்டுமே முழுமையல்ல. நான் இந்தக் கட்டுரையைத் துவங்கும் போது குறிப்பிட்ட முக்கியமானதொரு செய்தி மற்றவர்களோடு நீங்கள் எவ்வாறு பணி செய்கிறீர்கள் என்பது? நீங்கள் ஒரு இயக்குனராக விரும்புகிறீர்கள், நல்ல கதையை எழுதிவிட்டீர்கள், நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் கிடைத்துவிட்டார்கள். ஆனாலும் நீங்கள் எடுக்கிற திரைப்படம் சரியாக வரவில்லையென்றால் அங்கு எது குறைகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். தொழில் நுட்பக் கலைஞர்களிடம் நீங்கள் எப்படி வேலை வாங்குகிறீர்கள் என்பது முக்கியம். உங்கள் ஆளுமையை வெளிக்காட்டக் கூடிய இடமும் அதுதான்.
தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் தொன்மங்கள் உண்டு. இந்த இயக்குனர் எல்லாக் காட்சிகளையும் அவரே நடித்துக் காட்டிவிடுவார். இந்த இயக்குனர் தினமும் படப்பிடிப்புத் தளத்தில் வந்துதான் காட்சியை எழுதுவார். இந்த இயக்குனர் எல்லாவற்றையும் திட்டமிட்டுவிட்டுத்தான் எடுப்பார். என ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொரு விதமான கதைகள். அவர்கள் எல்லோருமே ஏதோவொரு புள்ளியில் வென்றிருப்பார்கள். எந்தக் காரணத்திற்காக வென்றார்களோ அதே காரணம் சில சமயங்களில் கைகூடாமலும் போயிருக்கும். ஒரு ஊருக்குச் செல்வதற்கு ஒரு வழிதான் இருக்க வேண்டுமென்றில்லை. எத்தனை வழிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எங்கு சென்று சேரவிருக்கிறோம் என்கிற தெளிவான இலக்கு இருக்க வேண்டும். அதைவிடவும் முக்கியமாக அவர் இந்தப் பாணியில் படம் எடுத்தார் நானும் அதில்தான் எடுப்பேன் என இன்னொருவரின் நிழலைத் தொடந்து செல்ல நினைக்கக் கூடாது. அது தோல்வியிலேயே முடியும். எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் தனித்து வேலை செய்யும் போது உங்களுக்கான ஒரு வடிவத்தைக் கண்டடையுங்கள். வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்தத் தனித்தன்மை மட்டுமே இங்கே நீண்டகாலம் உங்களைத் தக்கவைக்கும்.
திரைக்கதை எழுதுவது எப்படி? திரைப்படம் எடுப்பது எப்படி என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க ஏராளமான தளங்கள் வந்துவிட்டன. எல்லாவற்றையும் படியுங்கள். உங்களுக்கு உபயோகப்படலாம் படாமலும் போகலாம். ஆனால் படியுங்கள். நீங்கள் வாசித்த நல்ல கதையிலிருந்து ஒரு காட்சியை நீங்களெ எடுத்துப் பாருங்கள். உங்கள் அலைபேசி போதும், உங்கள் நண்பர்களை நடிக்க வைக்கலாம். ஒரு வேளை நீங்கள் நடிக்க விரும்புகிறீர்களா பெரிய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடுவதோடு கிடைக்கும் சிறிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாக மனிதர்களைக் கவனியுங்கள். கூட்டமான இடங்களில் எத்தனை மனித முகங்கள், எத்தனை உணர்ச்சிகள். அங்கிருந்து நீங்கள் நிறையக் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் வெற்றிபெற்ற பின் இப்படி மனிதர்களை எதிர்கொள்வ்தற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகலாம். அதனால் கற்றுக்கொள்ளும் காலத்தில் இதற்காக நிறைய செலவிடுங்கள்.
இறுதியாக, காத்திருப்பது இந்தப் பயணத்தில் முக்கியமானதொன்று. நீங்கள் செய்ய விரும்பும் வேலை சில சமயம் ஓரிரு வருடங்களில் நடக்கலாம். அல்லது உங்களுக்கான சரியான வாய்ப்புகள் அமைந்து நீங்கள் வெற்றியடைய நீண்டகாலம் எடுக்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் சோர்ந்துவிடாமல் இருப்பதோடு உங்களை உயிர்ப்போடு வைத்துக் கொள்வதும் முக்கியம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணவேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்தைப் போல் செல்வம் வேறில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் உங்களுக்கான வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி கிடைக்கும் போது அதில் கடுமையாக உழைத்து வெற்றிபெற உங்கள் உடல் ஒத்துழைக்க வேண்டும்.



