top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

விளக்கு விருது – எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வி



எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்கள் இவ்வாண்டிற்கான விருளக்கு விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் செய்தியை அறிந்த பெரும் மகிழ்ச்சியடைகிறேன். தஞ்சை மாவட்டத்து புனைவெழுத்தாளர்களின் கதைகளிலிருந்து முற்றிலும் வேறு உலகை வேறு எழுத்தாளர்கள் காட்சிப்படுத்தாத எளிய மனிதர்களின் வாழ்வைக் கதைகளாக எழுதியவர் சு.தமிழ்ச்செல்வி.


கீழ்த்தஞ்சை மாவட்டத்தில் வேதாரண்யத்தை ஒட்டிய கடலோர கிராமங்களுக்கென பிரத்யேகமான வாழ்க்கை முறை உண்டு. தென் தமிழ்நாட்டின் கடலோர வாழ்க்கை முறைகளிலிருந்து முற்றிலும் வேறான இந்த மக்களின் வாழ்வை பூச்சுகளின்றி இவரது நாவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. ‘அளம்,’ கற்றாழை’, ’மாணிக்கம்’ ‘கண்ணகி’ கீதாரி என இவரது ஒவ்வொரு நாவலும் சிறப்பான வாசிப்பனுவத்தைத் தரக்கூடியவை. எனக்கு அவரது கற்றாழை மற்றும் கீதாரி இரண்டு நாவல்களும் மிகப்பிடித்தமானவை.


முக்கியமாக கற்றாழை நாவலில் வெவ்வேறு ஊர்களிலிருந்து தொழில் நகரமான திருப்பூருக்கு இடம் பெயர்ந்து வாழும் உழைக்கும் மக்கள் பாலினப் பாகுபாடின்றி ஒரே அறையில் ஆண்களும் பெண்களும் தங்கநேர்வதையும் அப்படி தங்கும்போது அதுவரையிலான நம்பிக்கைகள் எதிர்பாலினத்தவர் குறித்த கற்பிதங்கள் எல்லாம் உடைந்துபோவதையும் சிறப்பாக எழுதியிருப்பார். இதுபோன்ற வாழ்வை எழுதும் நாவல்களில் பொதுவாக ஒரு மீறல் நிகழ்வதுண்டு. தொழில் காரணங்களுக்காக நேரம் இடப்பெயர்வுகள் அதன் நீட்சியாய் உருவாகும் அழுத்தங்கள் எல்லாம் கைவிடப்பட்டதான் மனநிலையை உருவாக்குவதால் மனிதர்கள் இயல்பாகவே காமத்தின் துணையை நாடுவதைத்தான் புனைவுகளில் அதிகம் பார்த்திருக்கிறோம். கற்றாழையில் உழைப்பும் அந்த உழைப்பிற்கு சமமான ஊதியமின்மையும் ஊரைப்பிரிந்து வாழும் ஏக்கமுமே பிரதானமாய் இருக்கிறது. ஒரே உலகை வெவ்வேறு கண்களோடு வெவ்வேறு மனதோடு பார்க்க முடியுமென்பதற்கு கற்றாழை மிகச் சிறந்த உதாரணம். இலக்கியத்தில் மீறலும் அவசியமானதுதான், ஆனால் விளிம்புநிலை வாழ்க்கை மீறலில் மட்டுமே இல்லையென்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கீதாரி காட்சியணுபவத்துக்கு நிகரான நாவல். கடலூர் விருதாச்சலம் பகுதிகளில் கிராமங்களில் பயணிக்கையில் நிறைய இடங்களில் நாம் ஆட்டுக்கிடை போட்டிருப்பவர்களைப் பார்க்கமுடியும். கீதாரிகளின் வாழ்வு சற்றேரக்குறைய நாடோடித்தனமானது. பொட்டல் காடுகளில் அத்துவான வெளியில் பகலையும் இரவையும் கழிக்க நேரும் அவர்களது வாழ்க்கையில் நிரந்தரமான ஊரென்பது நினைவில் மட்டுமே இருப்பதுண்டு. அவர்கள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளோடு ஆடுகளாய் இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வாழ்வை அற்புதமாக பதிவுசெய்த நாவல்தான் கீதாரி. முக்கியமாக இதில் குறிப்பிட வேண்டியது உரையாடல். நாவலில் கையாளப்பட்டிருக்கும் வட்டார வழக்கு தமிழில் அரிதாகக் காணக்கிடைக்கக் கூடியதொன்று. தமிழ்ச்செல்வி அக்காவின் எல்லா கதைகளிலுலே இந்த வட்டார வழக்கு மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். மொழியியல் ஆய்வுகளின் அடிப்படையில் இவரது நாவலை அணுகினால் அவற்றின் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கும்.


தமிழ்ச்செல்வி அவர்களின் கதைகள் அவரது நினைவில் அமிழ்ந்த ஊரின் பிரதிபலிப்புகளாகவே இருக்கின்றன, எழுத்தாளர் குட்டிரேவதி அவர்களுக்கு அளித்த நேர்காணலொன்றில் ‘அடர்ந்த பசிய தென்னந் தோப்புகள், அவற்றிடையே கொட்டியும் தாமரையும் பூத்துக் கிடக்கும் தோட்டங்கள், அதில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் கோரையும் வள்ளைக் கொடிகளும் படர்ந்த வாய்க்கால்கள், பச்சை மரகதப் போர்வையாய் பரந்து கிடக்கும் நெல் வயல்கள், தூரத்தில் ஆர்ப்பரிக்கும் நீலக்கடல் என என் சிற்றூரின் நிலக்காட்சிப் படிமங்கள் நினைவுப் பரப்பெங்கும் விரிந்து கிடக்கிறது.’ என அவர் குறிப்பிடுவதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.


எந்தவிதமான ஆர்ப்பட்டங்களோ கோருதல்களோ இன்றி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கவும், இலக்கியச் சூழலின் சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல் தனக்கென தனித்த போக்கை உருவாக்கிக் கொள்ளவும் இன்றைக்கு ஒரு எழுத்தாளருக்கு அசாத்தியமான உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. அது தமிழ்ச்செல்வி அக்காவுக்கு உண்டு. விளக்கு விருது பெறும் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி அக்காவை வணங்கி

57 views

コメント


bottom of page