top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

ஹெக்கம்மா



1

மிக மோசமான நம்பிக்கைகளை விதைக்கும் அந்த மதுக்கூடம் தேசத்தின் உடலெங்கும் பிணைந்திருக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்திலிருக்கிறது. பிற்பகல் வெயிலைக்கூட பொருட்படுத்தாது மதுவருந்த வருவதற்கென்று நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் வாடிக்கையாளர்களாய் இருந்தனர். சூரியனின் இருப்பு மறையத் துவங்குகிற மாலை நேரங்களில் சோபை கொள்ளும் அந்தப் பகுதியில் மதுவருந்தாதவருக்கும் சேர்த்து களிப்பூட்டும் வகையிலான சூழல் நிலவும். வெவ்வேறான மனிதர்களால் நிரம்பிப் பழகிய அவ்விடத்தில் வழக்கமானவர்களை விடவும் புதியவர்களே அதிகம். தனது நாற்பதாவது வயதில் அந்த மதுக்கூடத்தில் பரிசாரகனாய் பணியில் சேர்ந்த மணிமாறனை முதலில் அந்த சூழலுக்குப் பொருந்தாதவனாகவே எல்லோரும் பார்த்தனர். இயல்பிலேயே அசமந்தமான அந்த மனிதன் வாடிக்கையாளர்களின் பொருட்டு எந்தவிதத்திலும் பரபரப்பு கொள்வதில்லை. வேலை செய்து கொண்டே இருந்தாலும் கவனம் இரண்டு பக்க சுவர்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளின் மீதுதான் இருக்கும். சமயங்களில் மதுவை மாற்றிக் கொண்டுவந்ததற்காக யாராவது உரக்க திட்டினால்கூட அதுகுறித்த கவலையேயில்லாதவனாய் பக்கத்து மேசையை வேடிக்கை பார்ப்பார். அந்த வயதிற்கு சற்றுக் கூடுதலான முதிர்ச்சியைத் தந்திருந்த அவரது தோற்றத்தினாலேயே உடன் வேலை செய்தவர்களும் வழக்கமாக அங்கு மதுவருந்த வருகிறவர்களும் அவரை சித்தப்பா என அடைமொழியோடு அழைத்தனர். எல்லோரும் அப்படி கூப்பிட்டு சில நாட்களில் தன்னையுமறியாமல் தனது பெயர் அதுவாகத்தானிருக்கக் கூடுமென நம்பத்துவங்கிவிட்டார்.


வினோதங்களுக்கும் நாடோடிகளுக்கும் பழக்கப்பட்டுப்போன அந்த நெடுஞ்சாலையில் மாட்டு எலும்புகளை இறக்கிவிட்டுத் திரும்பி வந்த லாரியொன்றில் மூன்று குடும்பங்களாக வந்திறங்கிய நரிக்குறவர்கள் மதுக்கூடத்திலிருந்து சிறிது தள்ளியிருந்த ரயில் பாதைக்கு அப்புறமாக புதிதாக டெண்ட் அடித்திருந்தார்கள். அந்த வண்டியிலிருந்த மொத்த நெடியையும் தத்தமது உடல்களில் தத்தெடுத்துக்கொண்டவர்களாய் வந்திறங்கிய குறவர்கள் அந்தப் பகுதி முழுக்க உடனடியாக தங்களின் இருப்பை காத்திரமாய் அறிவித்தனர். நெடுஞ்சாலைகளில் மட்டுமே வாழப்பழகிய மனிதர்கள். மணி மாறன் காலை நேரங்களில் வேலைக்கு வருகையில் அந்த டெண்ட்டையும் ரயில் பாதையையும் கடந்துதான் வரவேண்டும்.


முதல் நாள் காலை அவசர அவசரமாக வரும்போது கூடாரங்களையும் அங்கிருந்த சிலரையும் கவனிக்க முடிந்தாலும் வழக்கமாக வரும் நாடோடிகளில் சிலராகவே எண்ணிக் கொண்டு அக்கறை கொள்ளவில்லை. இரண்டாவது நாள் இரவில் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் அடர்த்தியான இருளுக்கு மத்தியிலான கூடாரத்தின் மஞ்சள் நிற வெளிச்சம் வசீகரித்தது. பூச்சிகள் வெளிச்சத்தின் கவர்ச்சியில் காமுற்று சுழன்றன. ஒரு டெண்ட்டிற்குப் பின்புறம் இளம் காட்டு மிருகமொன்றின் நிழல் தனது வாளிப்பான உடலிலிருந்த மேலாடையை உருவி மாற்றிக் கொண்டிருந்ததைக் கண்ட மணியின் கண்களுக்குள் அதுவரையில்லாத பரவசம்.


மெலிந்த மூங்கில் தோட்டமொன்றின் வளைவுகளுக்குள்ளாக கிளைபரப்பி விரிந்திருந்த அந்த வினோத உலகிற்குள் விட்டில் பூச்சியாய் மாறி சடாரென தொலைந்து போனார். ஐந்தடிக்கும் குறைவான அவளின் நிழல் வளர்ந்து ஆகாயத்தையும் தாண்டி சென்றிருந்தது, அந்த நிழலின் வினோத முடிச்சுகளுக்குள் இருளுக்குள்ளாகவே ஒவ்வொரு தப்படியாய் தேடித் தேடி நடந்தவனின் முன்னால் இப்பொழுது கூடாரத்தின் கல்லில் கட்டப்பட்டிருந்த நாய் ஆவேசமாய்க் குரைத்துக் கொண்டிருந்தது.

புதிய மனிதர்களின் வாசனைகளுக்குப் பழக்கப்படாத அதன் மூர்க்கத்தனமான குரைப்பொலி கேட்டு நிழலாயிருந்தவள் அவசரமாய் உடல் மூடி வந்து பார்த்தாள். தன் முன்னால் விஸ்தாரமாய்க் கிடந்த நிழல் தொலைந்து போன ஏமாற்றத்தில் சுற்றிலும் கண்களை அலையவிட்டு பார்த்த மணியின் தொடையில் தாவிக் கடித்தது நாய். அத்தனை நேரமும் சுயநினைவின்றி நரம்பு முறுக்கேற பார்த்துக் கொண்டிருந்தவன் அந்தக் கடியின் வலியில் ஸ்கலிதம் கண்டான். இதுநாள் வரையிலுமில்லாத அதீதக் கிளர்ச்சியில் உள்ளாடையையும் மீறின ஈரம் வேஷ்டியில் படர்ந்தது. ”அய்யோ நாயி நாயி…” கடித்தபிறகு கத்தியவனின் குரல் விகாரமாய் எதிரொலிக்க பதறி ஓடிவந்த கூடாரத்து ஆட்கள் ஒருநொடி நடந்தது புரிந்ததும் சத்தமாக சிரிக்கத் துவங்கினர். நாயின் பல் அவன் வலது தொடையில் ஆழமாய் இறங்கியிருந்ததை நிழலுக்கு சொந்தக்காரியானவள் தான் முதலில் கவனித்தாள்… “யார் சாமி நீங்க? என்ன வோணும்?... எதுக்கு இங்க வந்தீங்க?” அவன் தொடையருகில் அமர்ந்து காயத்தை கவனித்தபடியே கேட்டாள். அள்ளி முடிந்த கொண்டைக்கு நடுவில் கொஞ்சம் பாசி சுற்றப்பட்டிருந்ததோடு மையத்தில் மட்டும் அரை வட்டமாய் கேசம் செம்பட்டை படிந்திருந்தது. “அது….வந்து…வழிமாறி வந்துட்டேன் இருட்டுல…” வேதனையிலும் பதட்டத்திலும் வார்த்தைகள் தடுமாறின அவனுக்கு. காயத்திலிருந்து வழிந்த குருதியைத் துடைத்துவிட்டபடியே “போனா போன வழி பாத்து போகனும்… அத விட்டுட்டு கண்டதையும் பாத்துட்டு நடந்தா இப்டித்தான்.. இருங்கோ…” உட்கார்ந்த இடத்திலிருந்தே திரும்பி “ஏய் இங்க வா…” என இன்னொருத்தியை சத்தமாகக் கூப்பிட்டாள். தொலைந்த நிழலை விடவும் பிரம்மிப்பான அவளின் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தவன் அத்தனை வலியிலும் கழுத்துக்குக் கீழிறங்கிய அவளின் வியர்வைத் துளிகள் சங்கமிக்கும் மார்ப்பிளவுகளைக் காணத் தவிர்க்கவில்லை. அடங்கிய உணர்ச்சிகள் மீண்டெழுந்து சங்கடம் தருமோவென எத்தனை முயன்று பார்வையை விலக்கினாலும் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாதவனாகவே இருந்தான்.


சற்றுத் தள்ளியிருந்த அடுத்த குடிசையிலிருந்து வந்தவள் கையில் அழுக்கேறிய சிவப்பு நிற பாவாடைத் துணியின் சிறிய துண்டை இவள் கையில் திணித்தாள். துணி தந்தவளுக்கு கண்களில் இன்னும் சிரிப்படங்கவில்லை. “பொட்டலம் தேடி சுத்தனியா இல்ல பொண்ணத் தேடி சுத்துனியா சாமி…” அவளுக்கு இந்த இடம் முன்னமே பரிச்சயமாய் இருந்திருக்க வேண்டும், அந்தி சாய்ந்தபின் இந்த சாலையின் இரண்டு ஓரங்களிலும் நிறைந்து கிடக்கும் கருவேலங்காட்டுக்குள் என்ன கிடைக்குமென்பதை நன்கு தெரிந்து வைத்தவளாய் இருந்தாள். தன் முகமெங்கும் பூத்து மலர்ந்திருந்த வியர்வையை நடுங்கும் கைகளால் துடைத்தபடியே ”அதெல்லாம் ஒன்னுமில்ல… வேல முடிஞ்சு வீட்டுக்கு போய்க்கிட்டு இருந்தேன், என்னடா புதுசா வெளிச்சம்னு பாத்துட்டு வந்ததுல இங்க வந்துட்டேன்…” காலில் துணியால் கட்டி முடித்தவள் எழுந்து கையைத் துடைத்தாள்… “நதியா அந்தாளுக்கு தண்ணி குடு…” உடனிருந்தவள் சொல்லித்தான் தான் திசை மாறி வரக் காரணமானவளின் பெயர் நதியா என்பது தெரிந்தது. நதியா கூடாரத்திற்குள்ளிருந்த பழைய ஈய லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள். சுற்றி நின்று கொண்டிருந்த ஒன்றிரண்டு பேரில் முதிர்ந்த கிழவர் ஒருவர் மட்டும் நெருங்கி வந்து அவனை அடையாளம் பார்க்கும் பாவனையில் கவனமாய் பார்த்துவிட்டு “எதுக்கும் நாலு நாளைக்கு போயி பொணவாட புடிங்கோ… கால ராத்திரி ரெண்டு நேரம் இங்க வந்து இவ கிட்ட தண்ணி வாங்கி குடிச்சிட்டு போங்க… இது எங்களோடயே ஊர் ஊரா சுத்தற நாயி அதனால நல்லதாவும் இருக்கலாம் கெட்டதாவும் இருக்கலாம்… பத்ரமா இருங்க போங்க…” இறுக்கமான குரலில் அவர் பேசுகையில் மற்றவர்கள் அமைதியாக இருந்தனர். அந்த இடத்திலிருந்து கசிந்த சுட்ட இரைச்சியின் வாடை அவன் நாசியைத் துளைத்தது. இதற்குமுன் உணர்ந்திராத வினோத கவுச்சி. சுட்ட மாமிசத் துண்டுகளின் மீதான ஆர்வத்தில் நாவில் எச்சில் ஊற கண்கள் சில நொடி தேடினாலும் அந்தச் சூழலுக்கு அது தேவையற்றதென அஞ்சி வீட்டை நோக்கிச் செல்லும் பாதையில் வெளிச்சத்திலிருந்து இருளை நோக்கி நடந்தான்.

அவன் மனைவிக்கு ஆற்றமாட்டா எரிச்சல். “எவள வேடிக்க பாத்துட்டு இருந்த.. நாயி பொச்சுல வந்து கடிச்சிருந்தாலும் தெரிஞ்சிருக்காது… சனியன் எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாரேன்…” திட்டிவிட்டு போகும் போது தன்னிச்சையாய் அவளின் இடது கை ஓங்கி அவன் பொடணியில் ஒரு அறைவிட்டது. பசியோடு அவள் போன திசையைப் பார்த்து நின்றவன் “பசிக்கிது திங்க எதாச்சும் இருக்கா…?” படுக்கச் சென்றவள் திரும்பிப் பார்த்து “பீ இருக்கு கட்டிப் பீ… திங்கிறியா?... செஞ்சுட்டு வந்த வேலைக்கி சோறு வேற கேக்குது… இதுக்கு மட்டும் வக்கனையா கேக்க தெரியுதுல்ல சோறு வேணும்னு… ஒழுங்கா வந்து சேர்றதுக்கு என்ன?” அவள் சொற்கள் பல காலத்தின் வெறுப்பை கக்கிக்கொண்டிருக்க அதற்குமேல் எதையும் கேட்கும் விருப்பமின்றி அவனே தட்டில் கொஞ்சம் சோற்றைப் போட்டு எடுத்து வந்தான். அவள் வசை ஓய்வதாயில்லை.


“கொஞ்சமாச்சும் மான ரோசம் இருக்கா… இம்புட்டுக் கத்தறேன் வெக்கமில்லாம சோத்த போட்டுத் திண்ணுது சனியன்.. ச்சை…” அவள் சொற்கள் இருளில் கரைந்த நிழல்களாய் மறைந்து கொண்டிருக்க அவன் நதியான் ஒற்றை நிழலின் வளைவுகளுக்குள் தன்னைத் தொலைத்துக் கொண்டவனாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.




2


விடிவதற்கு முன்பாகவே எழுந்து கொண்டவன் பனி பெய்யும் அந்த காலை நேரத்தின் நிச்சலனத்திற்குள்ளாக நடந்து ஊருக்கு வெளியிலிருக்கும் நதியாவின் கூடாரம் நோக்கி நடந்தான். நாய் கடித்த இடத்தில் வலி குறைந்து சின்னதொரு அரிப்பும் எரிச்சலுமிருந்தது. அடிக்கொருமுறை வேஷ்டியைத் தூக்கி பல் பட்ட இடத்தை சுற்றிலும் சொரிந்து விட்டுக் கொண்டான். காயம்பட்ட இடத்தை சொரிவதென்பது ஒரு தொடர் செயல். முதலில் அரிப்பை தவிர்க்க யோசித்து மெல்லிய கூச்சத்தோடு ஒற்றைவிரல் மட்டும் நீளும். பிறகு அரிப்பின் வினோத சுகம் பழக இரண்டு விரல்கள் மூன்று விரல்களென பாம்பின் கண்ணளவிருக்கும் காயத்தைத் தீண்டி தீண்டி அதன் அகன்ற வாய்போல் மாற்றிவிடும். முதலில் இடது கையிலும் தொடர்ந்து வலது கையிலுமாக மாறி மாறி சொரிந்தபடியே நடந்தவன் இத்தனை விடிகாலையில் தன்னை காணும் பட்சத்தில் அங்கிருப்பவர்கள் சந்தேகத்தோடு அணுக்கக்கூடுமென தயங்கி பாதி வழியில் நின்றான்.


பனியில் சல்லாபிக்கும் நாய்களின் குரைப்பொலி தூரத்திலிருக்கும் வீதியிலிருந்து சுகானுபவமாய் எதிரொலித்தது. இருளும் வெளிச்சமுமில்லாத அந்த இடத்தில் பார்க்க முடிகிற தூரத்தில் இடுகாட்டில் கேட்பாரற்று எரிந்து கொண்டிருந்த பிணத்திற்கு காவலாய் ஒரேயொரு ஆள் மட்டும் நீண்ட கழியோடு பனிக்குல்லாய் அணிந்து நின்றிருந்தான். பிணத்தின் அக்னியில் அந்த மனிதன் ஜ்வலிக்கும் ஓவியமெனத் தெரிய இரவில் அந்தப் பெரியவர் பிண வாடை பிடிக்கச் சொன்னது நினைவிற்கு வந்தது.

இடுகாட்டை நெருங்கி நடக்கையிலேயே நெருப்பில் மாமிசம் கருகும் அடர்த்தியான கவுச்சி அவன் நாசியிலேறியது. அச்சத்தில் நெஞ்சுக்கூட்டிற்குள் வியர்த்து படபடக்க மருண்ட கண்களோடு அதேயிடத்தில் நின்றான்.


காலைக்கடனை முடிப்பதற்காக அந்த வழியாக சைக்கிளில் வந்த பெரியவர் ஒருவர் இருளில் நிற்கும் இவனைத் தோராயமாகக் கண்டுகொண்டு மணியடித்தார். அவசரமாய் இவன் வழிவிட, எதற்கும் இருக்கட்டுமேயென இவனை ஒருமுறை அடையாளம் பார்த்துக் கொண்டார். பாதியோடு திரும்ப விரும்பாதவனாய் பிணமேட்டை நோக்கி வேகமாக நடந்தான். எதைப் பற்றியும் சிந்திக்கமாலிருக்க மனதிற்கு உறுதியான கட்டளைகளைப் பிறப்பித்தபோது கண்கள் நிலைகொள்ளாமல் இங்கும் அங்குமாய் அலைந்தது. தன்னை நோக்கி அறிமுகமில்லாத புதிய மனிதன் வருவதைக் கொண்ட பிணமெரிப்பவர் “ஏய் வெளிக்கி இருக்கிறதுக்குன்னா பாலத்துப் பக்கமா போப்பா..” என சத்தமாக கத்தினார். அவன் அதைக் கேட்டும் நிற்காமல் நெருங்கி வருவதைக் கண்டு அருகிலிருந்த டார்ச்சை எடுத்து ஒருமுறை இவன் வரும் திசையில் அடித்தார், மதுக்கூட பழக்கம் உடனடியாக அடையாளங் கண்டுகொள்ளச் செய்ய “ஏய் என்னய்யா மணி விடிகாலைல இந்தப்பக்கம்?” டார்ச்சை அணைத்து ஓரமாக வைத்துவிட்டு இவனை நோக்கி வந்தார். “ராத்திரி வேல முடிஞ்சு போகயில நாய் கடிச்சிருச்சுண்ணே… பொண வாட புடிச்சா சரியாப் போகும்னாங்க.. அதான் வந்தேன்…” தன் தொடையில் நாயின் பல் பட்ட இடத்தை காட்டினான். ”அய்யய்ய… ஏப்பா சூதானமா இருக்க வேணாமா? சரி வா.. அப்பிடி தள்ளி உக்காரு…” தன் தோள்களில் கிடந்த சால்வையை எடுத்து இவனிடம் நீட்டினார்.


“நல்ல கூதலப்பா… பனிக்கி தடுமம் புடிச்சுக்கும். இத உருமா கட்டிக்க…” மணி சாலவையை வாங்கி சுற்று முற்றிலும் பார்த்தான்… “உருமாக் கட்டத் தெரியாதா…? நல்ல ஆம்பளய்யா நீ… வா இங்க…” இழுத்து அந்த மனிதர் இரண்டு காதுகளையும் மறைத்து உருமாக் கட்ட வேஷ்டியை தொடைகளுக்குள் மடித்துக் கொண்டு அவன் குத்தவைத்து உட்கார்ந்தான். காதுகளில் காற்றுக்கூட நுழைய முடியா உருமாக்கட்டின் இறுக்கத்தில் சுகமானதொரு கதகதப்பு. பிணமெரித்தவர் ஒருமுறை சுற்றி நடந்து எரிந்த உடலின் சிதைவுகள் எதுவும் சிதறிவிடாதபடி ஒருங்கிணைத்துவிட்டு குனிந்து இவனிடம் “செத்த நேரம் உக்காந்திருய்யா… நான் இந்தா வந்துர்றேன்…” கையிலிருந்த கழியை அவனுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு வேஷ்டி மடிப்பிலிருந்த பீடியையும் தீப்பட்டியையும் உருவி நடந்தார்.


வாழ்ந்த நாட்களின் கடைசி நினைவுகளை எரித்துக் கொண்டிருந்த இறந்த மனிதனை அந்த அனலுக்குள்ளாக தேடியபடி இருந்தன மணியின் கண்கள். மதுவின் தீவிரத்தை விடவும் வேகமாய் உடலுக்குள் இறங்கிய பிணவாடை வினோத உணர்வுகளைத் தர அவன் கண்கள் சிவந்து பாதி மயக்கத்தில் அமர்ந்திருந்தான். குளிரும் வெக்கையும் கலந்த கலவையாய் உடலின் ஒவ்வொரு செல்லும் நதியாவை பற்றி சிந்திக்க செய்தன. அவள் மீதான விருப்பங்களை யாரிடம் பகிர்ந்துகொள்வதென்கிற குழப்பம். தனிமையில் ஒரு பெண்ணைக் குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதுதான் வாழ்வின் உச்சபட்ச காமம் போல். மனம் இதுவரையில்லாத பூரிப்பு கொண்டதோடு அவள் தனக்கேயானாவள் என உறுதியாய் நம்பியது. அவள் உடலில் அத்தனைத் துளி அந்தரங்கத்திலும் கூடிக்கலந்தவன் போல் எழுந்து கொண்டவன் வேஷ்டியை விலக்கி தொடையில் காயம் பட்ட இடத்தில் அனல் படும் படி அருகில் போய் நின்றான். மதர்ப்பானதொரு உணர்வு கால் நரம்புகளெங்கும் கிளர்ந்து ஓட அந்த அனலை அவளின் அருகாமையாய் கறபனை செய்துகொண்டான்.


சிறுவர்கள் இரண்டு மூன்று பேர் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த கூடாரத்திற்கு மணி வந்த நேரத்தில் பனிக்காலத்தின் தாமதமான சூரிய வெளிச்சம் மந்தமாய் எழுந்திருந்தது. நதியாவின் பெயர் சொல்லி அழைக்க தயங்கி நின்றவனின் வருகையை முந்தைய இரவு கடித்த நாய் சத்தமாய் குரைத்து அறிவித்தது. பக்கத்திலிருந்த இன்னொரு குடிசையிலிருந்து எட்டிப்பார்த்தவள் இவனைக் கண்டதும் முறைத்தபடியே “இவ்ளோ லேட்டா வராதிங்க.. எனக்கு நெறையா வேல இருக்கு..” அவசரமாக உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்தாள்… “விடிகாலைலயே பொணவாட புடிக்க போயிட்டேன். அதான் லேட்டு…” அவன் தண்ணீரை வாங்கும் போது அவள் கைகள் பிஸ்கெட் நிறத்தில் அந்த வெயிலுக்கு ஜொலிப்பதையே பார்த்து இத்தனை அதிகாலையில் எங்கு போய் குளித்திருப்பாளென யோசித்தான். “பொணவாட புடிச்சதெல்லாம் போதும், மொதல்ல ஆஸ்பத்திரிக்கி போய்யா...” அவன் சரியென்று தலையாட்டினான். இன்னும் ஏதாவது சொல்வாளென காத்திருக்க உள்ளே சென்றவள் தனது உடையை சரிசெய்து கொண்டு வழக்கமாக தன் தோளில் போட்டிருக்கும் பையில் வியாபாரத்திற்குத் தேவையான பொருட்களோடு வெளியே வந்தாள். “இன்னுமா நிக்கிற? போகல…” அவள் தன்னிடம் தான் கேட்கிறாளென்கிற கவனம் வர ”இதோ போகனும்..” என கிளம்ப எத்தனித்தான்.


அவள் வேகமாய் ரயில்வே பாதை இருக்கும் திசையில் நடந்தாள். அவளைத் தொடர்ந்து செல்வதா வேறு திசையில் செல்வதா என்கிற குழப்பத்தில் நின்றவனுக்கு அன்றைய தினம் வேலைக்குப் போக பிடிக்கவில்லை. சிறிது தூரம் நடந்து சென்றவள் திரும்பி பார்த்து இவனை வரச் சொல்லி சைகை செய்தாள். முகமும் மனமும் மலர வேகமாக அவளை நோக்கி ஓடினான்.


ஏதாவது பேசுவாளென பொறுமையின்றி காத்திருந்தவனுக்கு இரண்டு கைகளின் உள்ளங்கைகளும் பரபரத்தன. இன்னும் ஊரின் வீதிகளை நெருங்கியிருக்கவில்லை. அந்த சாலையில் காலை நேரத்தில் ஆட்களின் போக்குவரத்தும் குறைவாகவே இருக்க முந்தைய இரவில் அவன் தலை முழுக்க ஏறி அழுத்திய அவளின் மார்புகளைப் பற்றியதான எண்ணம் துளிர்த்தது. தனக்கு முன்னால் நடந்தவளை நெருங்கி ஆவேசமாய் ஒரு பக்க முலையை பிடித்து கசக்கினான். அவள் சிரமமே படாமல் லாவகமாகத் திரும்பி அவனது இடுப்பிற்குக் கீழ் முழங்காலால் உதைத்தாள். மணிக்கு அடிவயிற்றிலிருந்து கிளம்பிய வலியில் கண்கள் சிவந்து போயின… “பாவமா இருக்கே ஆஸ்பத்திரிக்கி கூட்டிப்போலாம்னு வரச்சொன்னா மொலய புடிச்சா அமுக்கற…” ஆத்திரம் அடங்காமல் அவன் முதுகில் மூன்று நான்கு அறை விட்டாள். வலி சுர்ரென இறங்க அழுகையே இல்லாமல் கண்ணீர் விட்டான்… “நேத்து நைட்டு நீ துணி மாத்தறத பாத்தப்பவே எனக்கு உன்னய ரொம்ப புடிச்சிருச்சு.. என்னயவே மறந்து வந்து நின்னதுலதான் நாயும் கடிச்சிருச்சு… இப்ப பக்கத்துல நீ வர்றப்போ மறுபடியும் அதே நெனப்பு வரவும் புடிச்சு அமுக்கிட்டேன்..” அவன் குரல் அழுகையில் அதுவரையிலும் இல்லாத முரட்டுத்தனத்தில் இருந்தது. “மயிரு.. உனக்கு என்னய புடிக்கல என் சாமான புடிச்சிருக்கு… அதுக்குத்தான் நாயாட்டமா தொரத்தி வந்திருக்க… என் பக்கத்துல நிக்காத ஓடிப்போயிரு…” ஆவேசமாக கத்தினாள். உடலை வெவ்வேறு கோணங்களில் அசைத்து அவள் திட்டுகையில் அவளின் வலது மாரில் பெரிதாயிருந்த ராஜாளியின் டாட்டூ இவனை வசீகரித்தது. அது ஆணா அல்லது பெண்ணா என்கிற சந்தேகத்தோடு இங்கும் அங்குமாய் குலுங்கும் மாரையே சில நொடிகள் கவனித்தவன் அவள் மீண்டும் எட்டி தன் இடைக்குக் கீழ் உதைக்கக்கூடுமென்கிற அச்சத்தில் கண்ணீரைத் துடைத்தபடி அப்படியே நிற்க, அவள் எரிச்சலோடு வேறு பாதையில் திரும்பி நடந்தாள்.


“எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு… இன்னொருவாட்டி புடிச்சுக்கவா?... வேற ஒன்னும் வேணாம்…” நின்ற இடத்தில் திரும்பிப் பார்த்தவள் சுற்று முற்றிலும் பார்த்து கற்களை பொறுக்கி இவன் மீது எரிந்தாள்… “என்னயப் பாத்தா உனக்கென்ன அவுசாரியா தெரியுதா… நாயே நாயே…” சராமாரியாக எரிந்த கற்களில் இரண்டு மூன்று அவன் மீது பட்டதில் தலை புடைத்து வீங்கியது. அவள் அப்போதைக்கு சமாதானமாக சாத்தியமில்லை என்பது புரிந்து ஊர் இருக்கும் பாதையில் மணி வேகமாக ஓடினான். நதியாவின் மார்க்கச்சையில் அவன் பிடித்து கசக்கியதால் மேல் கொக்கி பிய்ந்து தொங்க, அவள் ஆவேசமாக கற்களை எறிந்ததில் வலது முலையின் ஒரு பகுதி மட்டும் மூர்க்கங்கொண்டு வெளியே எட்டிப்பார்த்தது.





3


அன்று மாலையும் அடுத்த நாளும் கூட மணிக்கு மீண்டும் நதியாவின் இருப்பிடத்திற்கு செல்லவேண்டுமெனத் தோன்றவில்லை. மருத்துவமனையில் ஊசி போட்டது வரை போதுமென ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு மதுக்கூடத்திற்கு வேலைக்குத் திரும்பினான். இயல்பிலேயே அசமந்தமான அவனை உடன் பணி செய்த எல்லோரும் வழக்கத்தை விடவும் அதிகமாய் கேலி செய்தனர். நாயின் பல் பட்ட இடத்தில் அவ்வப்போது காற்றுப்படும் படியாக வேஷ்டியை நகர்த்திவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டான். அடுக்கி வைக்கப்பட்ட காலி மது போத்தல்களை அள்ளிச்செல்ல பின் வாசலில் குட்டியானை வந்து நின்றது, உடன் நாளை திருவள்ளுவர் தினமென்பதால் இரவு முழுக்க வியாபாரம் செய்ய கொஞ்சம் அசல் மதுவும் நிறைய போலி மதுவும் சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் வந்திருந்தன. இருட்டுவதற்குள் மொத்த லோடையும் இறக்கிவிடும் யத்தனத்தில் இவனையும் சேர்த்துக் கொண்டு எல்லோரும் வேலை செய்தனர்.


பாரில் ஆம்லேட் போட்டுக் கொடுக்கும் முத்து மட்டும் அவ்வப்போது இவன் அட்டைப்பெட்டிகளைத் தூக்கி வருகையில் பின்னாலிருந்து அவன் தொடையில் அடித்தான். முதலில் விளையாட்டாக அவன் அடித்த போது எல்லோரும் சிரிக்க, அந்த விளையாட்டு பிடித்துப்போய் தொடர்ந்து போகையிலும் வருகையிலும் அடித்துக் கொண்டிருந்தான். ”யேய் சும்மா இருப்பா.. வேலய முடிக்க வேணாமா?” மணி சலித்துக் கொண்டாலும் கோவப்பட முடியவில்லை. ”ஆத்தி சித்தப்புக்கு இன்னிக்கு சலிப்புல்லாம் வருது… பத்துக் காசுக்கு ப்ரயோஜனமில்ல… உனக்கெல்லாம் என்னத்துக்கு சலிப்பு….” விளையாட்டாக மணியின் பொடனியில் அடித்தான். மணி இந்தமுறை திரும்பி முறைத்துப் பார்த்துவிட்டு காலி மது போத்தல்களை வேக வேகமாய் வெள்ளை நிற உரச்சாக்குகளில் அள்ளிப் போட்டுக் கட்டிக் கொண்டிருந்தான். வேலையை விரைந்து முடிக்கும் அவசரத்தில் ஆவேசமாய் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்த ஆட்களுக்கு தற்காலிகமான இந்த சீண்டல் விளையாட்டுப் பிடித்துப் போக சரக்கு இறக்க வந்தவர்களின் ஒருவன் “ஏய் பாத்துய்யா கோவத்துல கொரவளையக் கடிச்சிரப் போறாப்ள…” என சத்தமாக முத்துவைப் பார்த்து கத்தினான். “கிழிச்சான்… நாயி பொச்சுல கடிக்கிற வரைக்கும் சொரண இல்லாத சோதாப்பய… கோவப்பட்டுட்டாலும்…” என சிரித்தபடியே குனிந்து சாக்கைத் தூக்கிக் கொண்டிருந்த மணியின் பின்புறத்தில் ஓங்கி அடித்தான். இந்த முறை மதுவருந்தியவர்களிலுமே கூட சிலர் சத்தமாக சிரித்தனர்.


அவன் அடித்ததும் பதட்டத்தில் சாக்கை தவறவிட்ட மணி உடனே சுதாரித்து பாட்டில்கள் எதுவும் உடைந்துவிடாதவாறு அதனை கீழே வைத்தான். இன்னும் எல்லோரும் சிரித்து முடிக்கவில்லை. தன்னால் யாரிடமும் கோவப்பட முடியாதோ என்கிற இயலாமையும் அந்தக் கனமே கோவப்பட்டாத்தான் என்ன ஆகிவிடும்? ஒக்காலி என்ன ஆனாலும் ஆகட்டுமென அருகில் குவிக்கப்பட்ட பியர் பாட்டில்களிலிருந்து ஒன்றை உருவி திரும்பி நின்று சிரித்துக் கொண்டிருந்த முத்துவின் தலையில் ஓங்கி அடித்தான். “ங்கொத்தால ஓக்க… என்னயப் பாத்த எப்பிடிறா தெரியுது… தாயோலி….” பியர் பாட்டில் அவன் தலையில் சுக்கு நூறாக உடைந்து ரத்தம் கொப்பளித்த கனத்திலேயே இவனுக்குள் அடக்கப்பட்டிருந்த ஆவேசம் கட்டுக்கடங்காமல் பொங்க இன்னும் இரண்டு பாட்டில்களை எடுத்து தொடர்ந்து அடித்தான். முத்துவின் அலறல் மதுக்கூடத்தைத் தாண்டி சாலை வரை அகோரமாய் எதிரொலிக்க அவ்வளவு நேரமும் ஆரவாரமாய் சிரித்துக் கொண்டிருந்த மதுவிடுதியில் சடாரென ஒரு பதட்டம் தொற்றிக்கொண்டது. எல்லோரும் ஓடிவந்து மணியைப் பிடித்துக் கொண்டனர். அவன் அடங்குவதாயில்லை…


“என்னடா எல்லாரும் சிரிக்கிறீங்க? கூதிமவனுகளா…” தன்னைப் பிடித்து இழுத்த எல்லோரிடமிருந்தும் திமிறிய அவனின் இந்தப் புதிய வலுவை ஒருவராலும் நம்பமுடியவில்லை. நரம்புகள் முறுக்கேறி தசைகளெங்கும் அவனுக்குள் பொங்கிய கோவத்தையே தான் ஒவ்வொருவரும் உணர்ந்தனர். பெரும் போராட்டத்திற்குப் பின் மதுக்கூடத்தின் பின் வாசலுக்கு கொண்டு செல்லப்பட்ட மணிக்கு ஆத்திரம் அடங்கியிருக்கவில்லை. முதல் முறையாக தன்மானத்தோடு நடந்து கொண்டதின் விளைவுகளைப் பார்த்த நிறைவு அவனுக்குள்.


மணியின் ஆவேசம் கொஞ்சமாய் குறைந்தபோது காலையிலிருந்து இன்னும் பத்து ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை என்னும் யதார்த்தம் புரிந்தது. கை கால் முகம் கழுவி விட்டு தன் வேலையை கவனிக்க வந்தவனிடம் யாரும் பேச்சுக் கொடுக்கவில்லை. முதல் முறையாக எந்த அசமந்தமும் இல்லாமல் உற்சாகமாக வேலை பார்த்த அவனுக்குள் இன்னும் அடங்காத ரெளத்ரம். வாடிக்கையாளர் ஒருவருக்காக மதுவாங்க கூட்டத்தை விலக்கி சென்றவனுக்கு யாரோ தன்னை கவனிப்பது போலிருக்க திரும்பிப் பார்த்தான். கடையிலிருந்து சற்று தொலைவில் நதியாவும் அவளோடு இரண்டு ஆண்களும் நின்றிருந்தனர். இவன் தங்களைக் கவனித்துவிட்டான் என்பது தெரிந்ததும் அவள் தான் முதலில் கையசைத்து கூப்பிட்டாள்.


ஏன் அவளைப் பொருட்படுத்தாதவனாக மதுவை வாங்கிக் கொண்டு பாருக்குள் நுழைய அவள் இவன் பக்கமாக ஓடிவந்தாள். திரும்பி தன்னை முறைத்து நின்றவனிடம் எப்படிக் கேட்பதென தயங்கியவளாய் நதியா “அங்க ரொம்ப கூட்டமா இருக்கு. சரக்கு வாங்க விடமாட்றாங்க. வாங்கித் தர்றியா…” அவன் கண்களில் ரெளத்ரத்தின் செந்நிறம் வரியோடிருந்தாலும் அவளின் மாரிலிருந்த பச்சைக் குத்தப்பட்ட ராஜாளி அவளுக்காக இணங்கச் சொன்னது. நீண்ட நேரம் மாரில் வைத்ததில் ஈரமாகி இருந்த கசங்கிய ரூபாய்த் தாள்களை எடுத்து அவனிடம் தந்தவள் பதிலேதும் சொல்லாது வெறித்து நின்றவனையே பார்க்க, “நீ போயி அங்கயே நில்லு.. நான் வாங்கிட்டு வந்து தர்றேன்..” அனிச்சையாய் சொல்லிவிட்டு மணி பாருக்குள் சென்றான். அவன் மனதிலிருக்கும் எதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாதளவிற்கு அந்த பாரின் இரைச்சல் மொத்த சூழலையும் ஆக்ரமித்திருந்தது. மஞ்சள் விளக்கின் கீழாக அவள் வந்து நின்ற சில நிமிடங்களிலேயே பணம் கொடுத்ததை விடவும் கூடுதலாக ஒரு போத்தல் சரக்கோடு வந்த மணியைப் பார்த்து சிநேகமாய் சிரித்தாள். அவளிடமிருந்து வெளிப்பட்ட சிநேகம் விரும்பும்படியாய் இல்லை அவனுக்கு. அந்த முகத்தின் உணர்ச்சிகள் கர்வத்திலிருக்க வேண்டியவை, யாரையும் உதாசினம் செய்யக்கூடியவை என்பதுதான் அவனது உறுதியான எண்ணம். அதுதான் அவளுக்குப் பொறுத்தம். தனக்கு ஒவ்வாதவொன்றை வலிந்து அவள் இழுத்துப் பிடித்திருப்பது இவனுக்காகவோ எவனுக்காகவோ அல்ல இவன் கையிலிருக்கும் மது போத்தல்களுக்காக. போத்தல்களை அவளிடம் கொடுத்த போது அவளுடன் இருந்தவர்கள் “ரொம்ப நன்றி சாமி.. நாளைக்கி வேற லீவு என்ன செய்றதுன்னு தெரியாம இருந்தம்… வாறம்…” என நகர, நதியா இறுக்கமான அவன் முகத்தில் தன் மீதான அவனது முந்தைய காமம் மறைந்து போயிருக்குமோவென சந்தேகத்தோடு பார்த்தாள். ஆண்கள் இரண்டு பேரும் நகர்ந்து போக இவனிடம் சொல்லிக் கொள்ள நின்றவளிடம் “அவங்க ரெண்டு பேரும் யாரு அண்ணனா?” என அக்கறையில்லாமல் கேட்டான். நதியா சிரித்தாள். “அய்யோ இல்ல….. ஒருத்தர் என் வூட்டுக்காரு.. இன்னொருத்தர் அவருக்கு அண்ணன்…” அவள் இந்த முறையும் தனக்குப் பொருந்தாத வெட்கமொன்றை முகத்தில் ஒட்டவைத்துக் கொண்டாள். ஏமாற்றத்துடன் மணி அவள் கண்களை ஊடுருவிப் பார்க்கையில் அந்தப் பார்வையில் பொய்யின் சுவடுகளெதையும் காணமுடியவில்லை. எரிச்சலோடு மீண்டும் கடைக்குள் போனவனுக்கு அவள் இப்படியே போகும் வழியில் ஏதாவது வாகனம் அடித்து செத்துப் போய்விட வேண்டுமென மனதிற்குள்ளாகவே வேண்டினான். அதற்கு சாத்தியமில்லாது போனால் அவள் கூடாரம் தீப்பற்றி எரிய வேண்டும். எதுவும் முடியாமல் போனால் மாடு முட்டியாவது அவள் சாக வேண்டும். காரணமே இல்லாமல் பார் வாசலில் நின்று காறி காறித் துப்பினான். அவளின் மீது ஏனிந்த வெறுப்பு? யாரோ ஒரு பெண்ணின் உடல் மீதான அவனின் வினோத வெறுப்பு அங்கிங்குமாக சுற்றி இறுதியில் தன்னைத் தானே வெறுக்கச் செய்தது. நம்பிக்கையின்மையின் துவர்ப்பில் அவன் உடல் நமநமத்துப் போக எரிச்சலோடு அங்கிருந்த ஒவ்வொருவரை நோக்கியும் மனதிற்குள்ளாக வசைகளை ஏவினான். அந்த சொற்கள் ஒவ்வொன்றும் வினோத ரெக்கைகள் முளைத்து நதியாவின் அந்தரங்க பறவையானது.


வீடு திரும்புவதை வெறுத்தான். மதுக்கூட விற்பனை மாலைக்குமேல் அவனுக்கு முன்னெப்போதையும் விட கூடுதலான வருமானத்தை ஈட்டி தந்ததன் பின்னால் புதிதாக அவனுக்கு வந்திருந்த தைர்யமும் ஒரு காரணம் என்பது விசித்திரமான உண்மை. அவன் ஆட்களின் இருப்பு குறைந்த அந்த நடுநிசியில் கழிவறை கண்ணாடியின் முன்னால் நின்று தன் முகத்தைப் பார்க்கையில் அந்த முகம் ஒரு கோமாளியினுடையதைப் போல் தோன்றியது. கோவப்படும் ஒரு மனிதனின் முகம் போலில்லாமல் இதென்ன? எனில் தன்னுடையது ஒரு கோமாளியின் கோவமா? சத்தமாக சிரித்தவனுக்கு வாழ்வில் முதல் தடவையாக மதுவருந்த வேண்டும்போலிருந்தது. இரவு முழுமைக்குமாக திருட்டுத்தனமாக விற்பனைக்கென வைத்திருந்த பச்சை நிற மது போத்தல்களில் இரண்டை நாசூக்காக களவாடி வந்தவன் வீட்டிற்குச் செல்லும் வழியிலிருந்த விநாயகர் கோயிலடியில் அமர்ந்து குடிக்கலானான்.


கோயிலடியிலிருக்கும் குழாயில் நீர் இருந்ததால் வசதியாய்ப் போனது. கோயில் வாசலிலிருந்த குழல் விளக்கின் வெளிச்சத்தின் துணையோடு அமர்ந்தவன் குருட்டு தைர்யத்தில் அளவு தெரியாமல் முதல் சுற்றை ஊற்றிக் குடித்தபோது காட்டம் நாசியிலேற தொண்டை எரிச்சலுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தான். குழாயைத் திறந்து தண்ணீர் பிடித்து வாயைக் கொப்பளித்தான். சற்று தூரத்தில் இன்னும் நதியாவின் கூடாரத்தில் அணையாதிருந்த வெளிச்சம் இவனுக்குள் கிளர்ச்சியும் ரெளத்ரமும் கலந்த உணர்வைத் தர மிச்ச போத்தல் மதுவோடு எழுந்து தற்செயலாக செல்கிறவனைப் போல் நடந்தான்.


ஒரு கொண்டாட்டம் முடிந்ததற்கான தடயங்களோடு அந்த இடம் வெவ்வேறு இரைச்சித் துண்டுகளின் மிச்சங்களும் பாதி தின்று துப்பிய உணவுகளின் எச்சமுமாய் போதையின் அடையாளங்களைத் தாங்கியிருந்தது. இவனிடம் சரக்கு வாங்கியவர்களில் ஒருவன் சற்றுத் தள்ளி முற்றான போதையில் கவிழ்ந்து கிடக்க அருகிலிருந்த இரண்டு மூன்று கூடாரங்களில் ஒன்றிலிருந்து ரஜினிகாந்தின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சூழலை கவனமாகப் பார்த்தவன் இங்கு தனக்கு இனி வேலையில்லை என கடைசியாய் ஒருமுறை நதியாவின் கூடாரத்தின் பக்கமாக பார்வையைத் திருப்ப, அவனுக்கான பதிலெதையும் கொண்டிராமல் அந்தக் கூடாரம் ஆழ்ந்த நித்திரையில் கிடந்தது. இப்பொழுது இரண்டாவது சுற்றை குடிக்கும் பக்குவமும் மனநிலையும் இருந்ததால் நடந்தபடியே பாதி வழியில் லுங்கியில் வைத்திருந்த பிளாஸ்டிக் தம்ளரில் ஊற்றி தண்ணீர் கலக்காமலேயே ஒரே மடக்கில் குடித்தான். ஆவேசமாக நடந்ததில் வழக்கத்தை மீறிய வேகம், ரயில்வே ட்ராக்கின் மேடு சற்று அவனை நிதானப்படுத்த காலை ஊன்றி ஏறினான். சற்றுத் தள்ளி இருளில் ரயில்வே ட்ராக் ஓரமாக குத்தவைத்திருந்த ஒருவம் அவசரமாக எழுந்து நின்றது. அடையாளம் தெரியா உருவத்தைக் கண்ட அதிர்ச்சியில் மிரண்டவன் ஒருநொடி அது அவள்தானென்பது தெளிவானதும் அப்படியே நின்றான்.


காலிலிருந்த லூனார் செருப்பையும் மீறி இன்று சரளைக் கற்கள் காலில் குத்துவது போலிருந்தது. “இப்பதான் வீட்டுக்குப் போறியா?” அவளேதான் உரையாடலைத் துவக்கினாள். நாக் குழறியதில் நன்றாகவே குடித்திருக்கிறாளெனத் தோன்றினாலும் இன்னொரு புறம் தான் புதிதாக குடித்திருப்பதால் தனது போதையின் காரணமாகக் கூட இப்படி இருக்கலாமென்றும் நினைத்தான். “ஆமா… நீ என்ன செய்ற இங்க?” மேட்டிலிருந்து மீண்டும் கீழே இறங்க அவள் இவன் பக்கமாக வந்த இறங்க தடுமாறி இவனிடம் உதவிக்கு ஒரு கையை நீட்டினாள். ஒரு கையை குடுத்து தாங்கியவன் இன்னொரு கையால் அவள் இடையைப் பிடித்து கீழே இறக்கிவிட்டான். “ராத்திரி திண்ணது ஒத்துக்கல… அதான் வெளிக்கி இருக்க வந்தேன்… அங்க கூடாரத்துக்கு பக்கமா ஒதுங்க முடியாதுல்ல…. சரி இங்கயே இரு கழுவிட்டு வர்றேன்…” அவனை விடுத்து சற்றுத் தள்ளி செடி மறைவில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு மீண்டும் இருளுக்குள் போனவளை சின்னதொரு அருவருப்போடு பார்த்தவன் ஆர்வங்கள் அத்தனையும் குன்றிப்போன இந்த நிமிடத்தில் வீடு போய்ச் சேருவதையே விரும்பினான். நகரலாமென முடிவெடுத்து செல்லும் முன்பாகவே அவள் திரும்பி வந்து கைகளைப் பிடித்துக் கொண்டாள். “எதுக்கு இம்புட்டு மொறப்பு… வா.. வா…” என சம்பந்தமே இல்லாமல் சிரித்தாள். அவனை இழுத்துப் பிடிக்கையில் லுங்கிக்குள் இருந்த போத்தல்களின் சத்தம் கேட்க அவளுக்கு மீண்டும் உற்சாகம். ”யோவ் சும்மா இருக்கப்ப என் பக்கம் எட்டி பாத்த இப்ப சரக்கு இருக்கவும் அப்டியே போற… வாயேன், ஆளுக்கு கொஞ்சமா குடிப்போம்…” கைகளை இறுக்கமாகப் பிடித்தவள் தன் திசை நோக்கி இழுத்தாள். மந்திரத்திற்குக் கட்டப்பட்ட ஆடென அவள் பின்பாகவே நடந்தான். நள்ளிரவின் பூச்சி சப்தங்களை சிதறடித்தபடி அதி வேகமாய் ஒரு ரயில் அவர்கள் இருவரையும் வேகமாய்க் கடந்து போனது.


பனிக்காலத்தின் மேகக் கூட்டங்களுக்குள் வெட்கத்தோடு மறைந்திருந்த நிலா அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் அந்த வேளையில் அந்த பிரதேசத்தில் உயிர்ப்போடு அவர்கள் இருவரும் மட்டுமே. இவனை விநாயகர் கோவிலுக்கு பின்பாக நிறுத்திவிட்டு கூடாரத்திற்குப் போனவள் ஒரு பழைய ஈய போனியில் தண்ணீர் எடுத்து வந்ததோடு பாக்கெட்டிலிருந்து பிரிக்கப்பட்ட கடலை மிட்டாய்கள் கொஞ்சத்தையும் கொண்டு வந்தாள். கோவிலுக்கு பின் வெளிச்சம் திட்டத் திட்டாய் மரங்களின் இலைகளுக்குள்ளாக எட்டிப் பார்த்திருந்தது. கடந்த மாத சங்கடகர சதுர்த்திக்காக அடிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட ஃபிளக்ஸை வசதியாக விரித்து அதன் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். மடியிலிருந்த மதுப்போத்தலை வெளியே எடுத்து வைத்துவிட்டு லுங்கியால் முகம் துடைத்துக் கொள்ள அவளும் வந்து சேர்ந்தாள். இப்பொழுது தனக்கு விருப்பமானதொரு மனிதனிடம் பழகும் இயல்பு அவளிடம். இன்னும் அகலாத சிரிப்பு. அவளே இருவருக்குமாக மதுவை ஊற்றினாள். அவனிடம் கொடுத்துவிட்டு லாவகமாக தனது தம்ளரை எடுத்துக் குடித்தாள். அவளையே பார்த்தபடி தன் பங்கை குடித்தவனுக்கு அடுத்த சுற்றுக்கு தான் நிலையாக இருப்போமென்கிற நம்பிக்கையில்லாமல் போக நெளிந்தான். ‘என்னாய்யா நெளியிற…?” சிரித்து மழுப்பியப்டியே அவன் “ஒன்னுமில்ல இன்னிக்கித்தான் குடிக்கிறனா அதான் ஒரு மாதிரி இருக்கு…” என்றான்… “அடப்பாவி மண்ட நரச்சு இத்தன காலம் ஆச்சு இன்னிக்கித்தான் குடிக்கிறியா? அதான் மூஞ்சிய அப்ப இருந்து சானி திண்ணாப்ல வெச்சிருந்தியா?....ம்ம்ம்” அவனது தம்ளரில் மீண்டும் மதுவை ஊற்றி நீட்டியவள் “தண்ணி சாமி மாதிரி நல்லது மட்டுந்தான் செய்யும்… குடி.” கண்ணடித்துச் சொன்னாள்.


இந்த முறையும் ஒரே மூச்சில் அவன் குடித்து முடித்தபோது கண்கள் சுழன்றது. சுழற்சியை மறைக்க சிரித்தவன் எவ்வளவு சத்தமாக் சிரிக்கிறோமென்கிற பிரக்ஞையே இல்லாமல் சிரித்தான். புரிந்து கொண்டவளாய் அவள் தனக்கு மட்டும் ஊற்றிக்கொண்டு தொடர்ந்து குடித்தாள். காமத்தின் சமிக்ஞைகள் இருவருக்குள்ளாகவும் தடையின்றி கசிந்து வெளியேற அவனை இழுத்து தன் பக்கமாக அணைத்துக் கொண்டவள் “சின்னப்புள்ள மாதிரி இதப் பாக்கனும் பாக்கனும்னு கேட்ட இல்லியா .. இந்தா பாரு… இந்தா…” ராஜாளி விரிந்து பறந்த தன் மாரை துணி விலக்கி காட்டினாள். அத்தனை போதையிலும் சிரிப்படங்கி ஆர்வம் மேலிட அவளைப் பார்த்தவன் ராஜாளியின் உறுதியான இறக்கைகளை வருடினான். மெதுவாக அந்தப் பறவையின் சூட்சும உடலை தடவி தடவி அதோடு மொத்தமும் மூர்க்கமும் கலந்தான். தன் பூர்வ ஜென்மத்தின் நினைவு கண்டு உறக்கம் மீண்ட மிருகமென தன் மீது புத்தம் புதிதாய் படரும் அவனை ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டவள் தன் ராஜாளியின் கால் பற்றி பறக்க அனுமதித்தாள்.


முடிவற்ற வனத்தின் ஈரக்கசிவையும், பாலையின் வெக்கையையும் பறவையின் கால் பிடித்து அலைந்து கண்டுகொண்டவன் முடிந்த மட்டும் வலு கொண்டு அவளை ஆட்கொண்டான். மூச்சு முட்ட அவள் ‘ஹெக்கம்மா…ஹெக்கம்மா…’ என முனகினாள். வா… அப்டித்தான்… வா… ஹெக்கம்மா.. ஹெக்கம்ம…. அவனது அசைவு ஒவ்வொன்றிற்கும் கசிந்த அந்த வார்த்தை இறுதியில் அதுவாக மட்டுமே தலைக்குள் சுற்றியது. ஹெக்கம்மா தானா அல்லது அந்த ராஜாளியா என்பது புரியாமல் மூர்க்கமாக இயங்கி முடித்தவன் பரந்த சதை நிலத்தில் மயங்கி உறங்கிப் போனான். பின்னிரவின் பனி ஈரம் மரம் செடி எல்லாவற்றின் மீதும் கருணை கொண்டிருந்ததோடு இவனையும் கவனிக்கத் தவறியிருக்கவில்லை. விழித்துப் பார்க்கையில் அவனது உடலில் பறவையின் பிசுபிசுப்பு கூடியிருந்தது. தன்னால் இனி வானின் அசாத்திய உயரத்தில் பறக்கமுடியுமென்கிற புதிரான நம்பிக்கையுடன் வானைப் பார்த்தான். மினுங்கும் நட்சத்திரங்கள் அருகாகத் தெரிந்தன. கண்களின் தீட்சன்யம் புதிதானது. அவள் மாரிலிருந்த ராஜாளி தனக்குள் புகுந்திருக்க வேண்டும். சற்றுத்தள்ளி உடைகள் முழுவதுமாக களைந்து உறங்கிக் கிடந்தவளின் மாரைப் பார்த்தான். அங்கிருந்து ராஜாளி பறந்து போயிருந்தது. தன் கைகளை விரித்துப் பார்த்தவன் வானை நோக்கி நீட்டினான். ஐம்பூதங்களின் சர்வ அனுமதியும் கிட்ட கால்கள் சில அடிகள் வான் நோக்கி எழும்பின… யாரும் பார்ப்பதற்கு முன்னால் பறந்து பார்க்கும் ஆர்வத்தோடு மேலெழும்பிய போது உடல் அந்த புதிய மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்தது. ’இன்னும் கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டுமென சமாதானம் சொல்லிக் கொண்டவன்’ இனி தானொரு புதிய மனிதனென்கிற உற்சாகத்தோடு வீட்டிற்கு நடந்தான்.


4


கண் விழிக்கையில் ஆகாயம் இள நீல நிறத்தில் வெயிலேறத் துவங்கும் நேரத்திற்கு சற்று முந்தைய வெளிச்சத்திலிருந்தது. காலை நேரத்தில் அபூர்வமாக இப்பொழுதெல்லாம் தங்களின் இருப்பை பிரஸ்தாபிக்கும் பறவைகள் கூட்டமாய் மரங்களிலிருந்த தங்களின் கூடுகளிலிருந்து வெளியேற கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தன. வனத்தின் மடியில் தூங்கிப்போனதான குழப்பத்தோடு எழுந்து பார்த்தவனுக்கு கால்களில் நடுக்கமிருந்ததோடு முந்தைய இரவின் மதுவடர்த்தி இன்னும் குறைந்திருக்கவில்லை. தோராயமாக அந்த இடம் தன் வீட்டிற்குப் பின்னாலிருக்கும் அரசு மருத்துவமனையின் பிணவறைக்குச் செல்லும் வழியெனபது புரிந்தது. அங்கு வந்து சேர்ந்த பின் கதைகளெதுவும் தெரியாமல் அங்கிருந்து கிளம்பியவனுக்கு முந்தைய இரவின் நிகழ்வுகள் நிஜமல்லாத ஒரு கனவைப்போல் துண்டு துண்டாக நினைவிற்கு வந்தன.


தெருவில் எதிர்ப்பட்ட எல்லோரும் தன்னை விசித்திரமாய்ப் பார்ப்பதாய்த் தோன்ற தனக்கு இன்று நான்கு கைகளும் நான்கு கால்களும் புதிதாக வளர்ந்துவிட்டதோவென்கிற சந்தேகத்தோடு தடவிப் பார்த்துக் கொண்டான். எல்லாம் அப்படியேதானிருக்கிறதென சொல்ல முடியாதபடி சில அங்குலங்கள் வளர்ந்திருப்பதாகவும் தேகம் பருமனாகி இருப்பதாகவும் உள்ளுணர்வு எச்சரித்ததோடு தன் முகம் ரெளத்ரத்தின் பூர்ண களையப்பி இருக்க வேண்டுமெனத் தோன்றியது. முகத்தின் வெளிப்பாட்டை மனம் பிரதிபலித்ததால் எதிர்கொண்ட ஒவ்வொருவரையும் காரணமற்ற கோவத்துட்டனேயே கண்டான். வீட்டிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த தேநீரகத்தில் இவன் வந்ததைப் பார்த்த கடைக்காரன் கேட்காமலேயே இவனுக்கு தேநீர் கொடுத்தான். அந்த கண்ணாடி தம்ளரில் இன்னும் கடைக்காரனின் அச்சம் சூட்டோடு கலந்திருந்தது. முந்தைய இரவில் நதியாவோடு பிணைந்ததில் அவளின் மாயத்தன்மை மிக்க வசியங்களும் தனக்குள் புகுந்திருக்கக் கூடும். ராஜாளி இப்பொழுது அவளுடலில்லை, அரூபமாகி இவனுக்குள் கலந்துவிட்டிருக்கிறது. அதனால் தான் இவ்வளவு மாற்றமும். தேநீர்க் குடித்தபடியே சட்டைப்பையில் துழாவ சில காகிதங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. ரூவாய்த் தாள்கள் எதுவும் தட்டுப்படாமல் போக, தயக்கத்தோடு கல்லாவைப் பார்த்தனிடம் “அட காசில்லாட்டி போவுது அண்ணாச்சி அப்பறமா குடுத்து விடுங்க…” கடைக்காரன் குழைந்தான்.


வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே கோழிக் குழம்பின் வாசனை தெருவரை பரவியிருந்தது. அரிதாகவே தன் மனைவியிடமிருந்து வரும் கைப்பக்குவம். இன்று எல்லாம் தனக்காகவே நடக்கிறதென்கிற பூரிப்போடு கதவைத் திறந்து உள்ளே சென்றான். அடுப்படியில் கொதித்த கோழிக் குழம்பைத் தவிர்த்து வேறு யாருமில்லாமல் போக, மெதுவாக பின் வாசல் பக்கமாகப் போனான். ”இந்த ஆள் நைட்டெல்லாம் எங்கதான் போச்சோ… ஆத்திர அவசரத்துக்கு வீட்ல இருக்காது…” தன் மனைவியின் குரல் தான், ஆனால் அதில் வழக்கமான சலிப்பில்லை… “விடுங்க மயினி… அண்ணே பாவம் ஒரு அப்பிராணி… கடைல படுத்திருப்பாப்ள..” இந்தக் குரலைக் கேட்டு சற்றுத் தயங்கி நின்றான். அனுப்பானடியிலிருந்து வந்திருக்கும் தம்பி. தம்பியென்றால் உடன் பிறந்த தம்பியென்று சொல்லிக் கொள்ள முடியாத தம்பி… தயக்கத்தோடு போகலாமா வேண்டாமாவென நின்றவனை சீகைக்காய் கையோடு வந்த அவன் மனைவி பார்த்து எரிச்சலாகி “வேல முடிஞ்சா வீட்டுக்கு வரமாட்டியா… என்ன புது பழக்கம் ராத்திரி ல வெளில தங்கறது… போ போயி நாலு குடம் தண்ணி எடுத்துட்டு வா;.. உன் தம்பி வந்திருக்காப்ள…” அவள் குனிந்து கைகளைக் கழுவ, சற்றுத் தள்ளி அமர்ந்து உடலில் எண்ணை தேய்த்துக் கொண்டிருந்த தம்பி “பாருண்ணே வந்ததும் மயினி உனக்கு வேல வெச்சிருச்சி..” என சிரித்தான். “இப்பதான் வந்தியாடா என கேட்க நினைத்தவன்” அது எத்தனை முட்டாள்த்தனமான கேள்வி என்பது புரிந்து வழக்கம் போல அசட்டுத்தனமாக சிரித்துவிட்டு தண்ணீர் குடங்களோடு வெளியேறினான். டீக்கடைக்காரன் இந்த முறையும் சிரித்த போது அதன் காரணம் புரிந்திருக்கவில்லை.

முந்தைய இரவு இன்னும் அடர்த்தியான பிசுபிசுப்போடு அவனுக்குள் சுழல இந்த குழப்பங்களுக்கான ஒரே தீர்வாய் நதியாவைத் தேடிக் கிளம்பினான். அதெப்படி ஒரு இரவின் பிற்பகுதியில் எதுவும் நினைவில் இல்லாமல் போய்விடும். ஹெக்கம்மா ஹெக்கம்மா என அவள் முனகல் ரீங்காரம் சர்வ நிச்சயமாய் பொய்யாய் இருக்கமுடியாது. மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி செல்லும் சாலையில் புகுந்த நடந்தபோது அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாசலில் நதியா தன்னை ஆக்ரமிக்கும் ஆபரணங்களோடு பள்ளி மாணவிகளிடம் சீப்பு விற்பதைக் கவனித்தான். இத்தனை காலையில் அவள் இங்குதான் வியாபாரத்திற்கு வருகிறாளாவென யோசித்தபடியே அவளை நோக்கி நடந்தான். பள்ளி செல்லும் அவசரத்தில் அவனை கடந்து கட் அடித்து சென்ற ஒரு சிறுவன் யோவ் பாத்து போய்யா என சத்தமாக கத்தினான். மணிக்கு எதுவும் காதில் ஏறவில்லை.


சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள். டீசல் புகையின் நெடி. சற்று தூரத்திலேயே இவனைக் கவனித்து விட்ட நதியா உற்சாகமாக கையசைத்துக் காட்டினாள். அந்த சிரிப்பிலிருந்த அந்நியோன்யம் முந்தைய இரவில் நடந்த அவ்வளவும் உண்மையென புரியவைத்தது. சில மணிநேரங்களுக்கு முன்பிருந்த அதே பழைய கம்பீரமும் திமிரும் ஒட்டிக்கொள்ள உலகின் மிக அழகானதொரு பெண்ணோடு உறவுகொண்ட கர்வத்தோடு அவளைப் பார்த்தான்.


முதல் முறையாக தன் முன் வழுக்கையாக மறைக்க வேண்டி கொஞ்சம் முடிகளை ஒதுக்கி அந்த பிரதேசத்தை மறைத்தான். பள்ளிக்குள் சென்ற மாணவிகளில் சிலர் இவன் உடல்மொழியிலிருந்த கோமாளித்தனம் கண்டு சத்தமாக சிரிக்க, கடுங்கோபம் கொண்ட நக்கீரனாய் அவர்களை முறைத்துத் துரத்தினான். கால்களுக்குக் கீழிருந்து நிலத்தின் ஒவ்வொரு துண்டிலும் பூக்கள் மலையெனக் குவியத் துவங்க பரவசத்தோடு அவளை நெருங்கி சிரித்தான். நதியாவைச் சுற்றி அப்படியொன்றும் பெரிய கூட்டமில்லை. “என்னய்யா காலங்காத்தால லாத்திட்டு இருக்க… வேலக்கிப் போவலியா…” அவனைப் பார்த்தும் பார்க்காமல் கேட்டாள். ”ம்ம் போவனும்… சும்மா இந்த பக்கம் வந்தேன். உன்னயப் பாத்ததும் திரும்பிட்டேன்…” வார்த்தைகள் இடைவெளியில்லாமல் வந்த போதும் அவன் முகத்தில் புன்னகை மாறியிருக்கவில்லை. அவள் கூடுதலான வார்த்தைகளெதையும் பதிலாக தந்திருக்கவில்லை. சில நிமிடங்கள் நின்ற போது தங்கள் இருவரையும் அங்கிருக்கும் எல்லோரும் ஏதோவொரு விதத்தில் வித்தியாசமாய்ப் பார்ப்பது புரிந்தது. தான் நிற்பதற்கான எந்தக் காரணமுமில்லை. மற்றவர்களின் பார்வை குறித்து எதையும் பொருட்படுத்தாமல் அவளோடு நிற்கும் பரவசத்தை அனுபவித்தான். அவள் பேசாமலே இருந்தாலும் கூட வெறுமனே அவளை ரசித்தபடி நிற்பது சுவாரஸ்யமாகத்தானிருந்தது, ஆனாலும் முந்தைய இரவின் குழப்பத்தை மட்டுமாவது தெளிவு செய்து கொள்ள வேண்டுமென்கிற தவிப்பு.


”நேத்து நைட்டு சரக்கு எப்பிடி?” ஆண் மகனுக்கேயான வீரத்தோடும் மிதப்போடும் அவன் கேட்க, நதியா சந்தோசத்தோடு “நல்ல மனுஷன்யா நீ.. அவ்ளோ கூட்டத்துலயும் எங்களுக்கு சரக்கு வாங்கிக் குட்த்த… இல்லாட்டி கஷ்டமாப் போயிருக்கும்…” மணி அவளைத் திரும்பிப் பார்த்து ஏமாற்றத்தோடு “இல்ல இல்ல நான் அத சொல்லல அதுக்குப் பெறகு நடு ராத்திரில சரக்கு கொண்டு வந்தனே…” அவள் தன் வியாபார்த்தை விட்டுவிட்டு பையயை ஒருமுறை சரியாக மாருக்கு நடுவில் கொண்டு வந்தபடியே “நடுராத்திரில எங்க வந்த? நானும் என் வூட்டுக்காரனும் இருந்த சரக்க குடிச்சிப்பிட்டு ராத்திரியாட்டம் சினிமாவுக்குல்ல போயிட்டம்.” மணிக்கு நழுக்கென்றிருந்தது. இவள் கண்டிப்பாக பொய்சொல்கிறாள். ஆனால் எதற்காகவென்றுதான் புரியாமலிருந்தது.


“ப்ச்…. நான் நடு ராத்திரி வந்தேன்.. நீயும் நானுமா புள்ளையார் கோயிலுக்குப் பின்னால ரொம்ப நேரம் சரக்கு குடிச்சோம்… ம்ம்ம். ஹெக்கம்மா.. ஹெக்கம்மா… இது நியாபகம் இருக்கா…” அவளுக்கு எதையோ நினைவுபடுத்திவிட்ட திருப்தியில் அவன் சிரிக்க, அவ்வளவு நேரமும் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்த நதியா “பிச்சக்காரத் தாயோலி… ராத்திரி கோயிலுக்கு பின்னாடி என் புருஷன் கூட படுத்திருந்தத எந்த நாயோ ஒளிஞ்சிருந்து பாக்குதுன்னு சந்தேகப்பட்டேன்.. நீதான… த்தூ…” கைகளில் வைத்திருந்த அவ்வளவையும் அவன் மேல் விட்டெறிந்தாள். அதிர்ச்சி விலகாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தான் இரவில் குடித்தோமென்பது மட்டும் சத்தியமான உண்மை என்பது உறைக்க முதல் முறையாக முதுகில் அவள் ஓங்கி அடிப்பது உரைத்தது. தன்னையுமறியாமல் ‘ஹெக்கம்மா’ என்றான். அந்த வார்த்தையைக் கேட்ட எரிச்சலில் நிறுத்தாமல் அவள் அடிக்க அடிக்க ஒவ்வொரு அடிக்கும் அவனும் ஹெக்கம்மா ஹெக்கம்மா என அலறியபடியே அந்த சாலையில் ஓடினான்.

237 views

Recent Posts

See All

Fake

Comments


bottom of page