top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

யானை

முன்கதை :

சாப்டூரில் ஜமீன் வீரசிங்கத்துக்கு இப்பவும் தனி மரியாதைதான்.. சாதாரண குடும்பம் இல்லை. ஒரு கனத்த ஆலமரத்தின் வேர்களென அவரின் குடும்பம்தான் இந்த ஊரைத் தாங்கி நிற்கும் ஆதாரம். வழி வழியாக அவர்கள்தான் ஊருக்கு நல்லது கெட்டது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை வீடுகள், எத்தனை பெண்கள் எத்தனை ஆண்கள் எல்லா விவரங்களும் ஜமீனுக்குத் தெரியும். கூடவே ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் நாய், பூனைகளென அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. அது எப்படியோ யாரும் சொல்லாமலேயே எல்லா விசயங்களும் அவருக்குத் தெரிந்து விடுகிறது. ஜமீனுக்கு ஊர் எல்லையில் குடியிருக்கும் பாண்டிமுனியின் மேல் அதீத பக்தியுண்டு. அந்த முனிதான் இரவில் ஊரைக் காவல் காத்தபடி வலம் வரும். முனி வரும் குதிரையை ஊரில் பெரியவர்கள் நிறையப் பேர் பார்த்திருக்கிறார்கள். முனிக்கு தப்பு செய்கிறவர்களைக் கண்டால் ஆகாது, பல சமயங்களில் அதுவே தண்டித்துவிடும், சில சமயங்களில் ஆள் யாரென்பதை ஜமீனிடம் சொல்லும். மற்றவர்களுக்கு நல்லது செய்கிறவர்களுக்கு அன்பையும் கெட்டது செய்பவர்களுக்கு தண்டனைகளையும் வழங்கி ஊரில் அநீதி நிகழாமல் முனியோடு சேர்ந்து வீரசிங்கமும் கட்டிக் காத்துக் கொண்டிருந்தார். பல சமயங்களில் குற்றங்கள் நடப்பதற்கு முன்பாகவே அதனைக் கண்டுபிடித்து நிறுத்திவிடுவது இந்த முனியின் உதவியால்தான். நாட்டை வெள்ளைக்கரனிடமிருந்து விடுதலை வாங்கி ஆண்டு கொண்டிருப்பது வேண்டுமானால் அரசியல் வாதிகளாய் இருக்கலாம். சாப்டூரைப் பொறுத்தவரை காந்தி காலத்திற்கு முன்பும் சரி இப்போதும் சரி ராஜ்ய பரிபாலனை செய்வது வீரசிங்கத்தின் குடும்பம் தான். அவர்கள் இந்த ஊரை உருவாக்கியவர்கள்.


எதிர்பாராதபடி ஜமீனுக்கு வந்த ஒரு கனவு அவரின் வாழ்வில் யாரும் எதிர்பாராத அனேக துர்சம்பவங்கள் நிகழ காரணமாகிப் போனது. சில தினங்களுக்கு முன்பு வரை இந்த வட்டாரமே வியந்து பார்த்த அந்த மனிதனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. அவர் முகம் தரிசிக்காமல் சூரியன் கூட சோகத்தோடுதான் சாப்டூரின்மேல் கவிந்து கொண்டிருக்கிறது. ஜமீனுக்கு இது கேடுகாலம் போல். ஊரே துஷ்டி வீட்டைப் போல் களையிழந்து சீந்துவாரின்றிப் போனது. பெண்கள் நினைத்த நேரத்திலெல்லாம் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்க வீரசிங்கத்தின் மச்சினன்கள் மைப் போட்டுப் பார்க்க மலையாள நாட்டுக்குப் போயிருந்தனர்.


ஊர்க்கதை


இந்த ஊருக்கு ஒரு கதையுண்டு. பத்து தலைமுறைகளுக்கு முன் இந்தப் பகுதி அடர்ந்த வனம். அந்த வனத்திற்குள் எல்லா மிருகங்களும் இருந்தன என்பது அந்தக் காலத்து ஆட்கள் சொல்லிப் போன வாய்வழி வரலாறு. இன்று மலைக்கு மேல் துரத்தப்பட்டிருக்கும் பளிகர்கள் தான் இந்த ஊரை மையமாய் வைத்து வாழ்ந்தவர்கள். பேரையூரிலிருந்த ஜமீன் வேட்டைக்காக சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் வனங்களுக்கு செல்வது வழக்கம். சின்னதும் பெரியதுமாய் அந்தப் பகுதி முழுக்கவே காடுதான். மூச்சைப் பிடிக்கும் காட்டு மரங்களின் அமைதியும், பசுமையும் நிறைந்து கிடக்கும் அந்தக் காட்டிற்குள் ஒரு முறை நுழைந்து வெளியேறுவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. தாயக்கட்டத்தின் சூத்திரம் போல் அடுக்கடுக்காக தன்னை விரித்துக் கொள்ளும் அந்தக் காட்டிற்குள் ஏராளமான யானைகள் இருந்தன. மற்ற வனங்களை விட இந்தப்பகுதியில் யானைகளும் கருங்குரங்குகளும் எண்ணிக்கையில் அதிகம். ஜமீன் வீரசிங்கத்தின் தாத்தாவுக்கு தாத்தா அல்லது பத்து தலைமுறைக்கு முன் இந்த ஜமீனை ஆண்டவர் என சுருக்கமாய் நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஒரு நாள் வேட்டைக்காக தனது பரிவாரங்களுடன் பேரையூருக்கு மேற்காக நாலைந்து மைல் வந்திருந்தார். இந்தக் காட்டிற்குள் நுழைந்ததிலிருந்து இதுவரையிலுமான பாதை தெளிவாக அமைக்கப்பட்டிருக்க

“காட்டுக்குள்ள வேற ஆளுக யாரும் இருக்காய்ங்களாப்பா..?”

தன்னுடன் வந்தவர்களிடம் கேட்டார்.

“பளிகங்க கொஞ்ச பேர் இருக்காய்ங்க அய்யா… இன்னும் ரெண்டு மைல் போனம்னா அவய்ங்க குடிச இருக்கும்…”

ஜமீனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஒரு பகலுக்குள் நடந்து வந்துவிட முடிகிற தூரத்தில் இருந்தும் இப்படியானதொரு ஆட்களை நாம் சந்தித்ததில்லையே… ஆர்வத்தில் இளைப்பாறுதலைக்கூட நிறுத்திவிட்டு பளிகர்களின் குடிசையை நோக்கி குதிரைகளை கிளப்பச் சொன்னார். காட்டுக்குள் கொஞ்ச தூரம் போகவும் சூரிய வெளிச்சம் குறைந்து ஒரு எல்லையைத் தாண்டியபின் சுத்தமாக இல்லாமல் போனது. திடீரென சில இடங்களில் தெரிவதும் பிறகு மீண்டும் மறைவதுமாய் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த வெளிச்சத்தின் ரேகைகளைத் தொடர்ந்தபடி ஜமீன் ஆட்கள் சென்றனர். வெண்கலம் உருளுவது போல் சலசலவென தண்ணீர் உருண்டு கொண்டிருக்கும் சத்தம். ஒரு இடத்தில் குதிரையை நிறுத்தி சுற்றிலும் பார்த்தனர். சிற்றோடையோ, அருவியோ எதுவும் இருப்பதற்கான தடயங்கள் துளியும் இல்லை. பகல் முழுக்க பயணித்ததில் ஜமீன் களைத்துப் போயிருந்தார். காவலர்களில் இரண்டு பேரை மட்டும் அனுப்பி பக்கத்தில் நீர்நிலை இருக்கிறதாவென பார்த்து வரச் சொன்னார்.

வேட்டையாடப்பட்ட சருகின் உடலிலிருந்து அடித்த வினோதமானதொரு வாடையை காட்டிலுள்ள மரங்களெல்லாம் நுகர்ந்து கொண்டிருந்தன. உடல் அறுக்கப்பட்ட சருகின் கண்கள் ஜமீனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. ஜமீன் ஒரு மரத்தில் சாய்ந்து குளிர்ச்சியை அனுபவித்தவராய்

“இன்னைக்கி ரவைக்கி இங்கயே தங்கிடுவமப்பா…. கூடாரத்தப் போடுங்க…” சொல்ல

எல்லோரும் சரியென ஆமோதித்து கூடாரமடித்தனர்.

உரிக்கப்பட்ட சருகுகளும் கருங்குரங்குகளும் தீ மூட்டப்பட்டு சுடப்பட்டன. இரண்டு பேர் மாறி மாறி கவனமாய் அந்தக் கறியை சுட, இன்னும் இரண்டு பேர் தண்ணீர் எடுக்கச் சென்றனர்.


தண்ணீர் எடுக்கச் சென்றவர்களுடன் குள்ளமாய் இரண்டு பேர் திரும்பி வர ஜமீன் உட்பட எல்லோரும் ஆர்வமாய் அவர்களைப் பார்த்தனர். வந்த இரண்டு பேரும் ஜமீனுக்கு வணக்கம் வைத்தனர்.

“யாருப்பா நீங்க…”

“நாங்க.. ரவைக்கு காவலுங்க… பக்கத்துல தான் குடிசை…”

ஜமீனுக்கு விளங்கவில்லை

“காட்ட எதுக்குய்யா நீங்க காவக் காக்கனும்?... யாரும் தூக்கிட்டுப் போயிற மாட்டாங்க… அதும் இல்லாம இந்தக் காடு காட்டில இருக்க நீங்க எல்லாம் என் பாதுகாப்புல இருக்கீங்க.. ஒன்னும் ஆகாது…”

பளிகர்கள் இருவரும் சிரித்தனர்.

“அப்பிடி இல்லங்கய்யா… காடு ஒரு தனி ஜீவன்… உங்கள மாதிரி எங்கள மாதிரி இல்ல.. ஒவ்வொரு மரமும் ஒரு உயிரு,.. இந்தக் காட்டுக்குள்ள நாமப் பாக்க முடியாத வேற உலகம் இருக்குங்க… யாரும் கட்டுப்படுத்த முடியாது… நாங்க காவக்காக்கறது காட்ட இல்லங்கய்யா… காட்டுக்கிட்ட இருந்து மனுசங்கள…”

அங்கிருந்த அனைவரும் அவர்கள் சொல்வதை சுவாரசியம் மிக்கதொரு வேடிக்கை கதையைப்போல் கேட்டுக் கொண்டிருந்தனர். ஜமீனுக்கு இதையெல்லாம் கேட்டு முதலில் கோவம், தனது பிரதேசத்தில் ஒருவன் தான் யாருக்கும் கட்டுப்பட்டவனில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கொதித்தார். ஆனாலும் உள்ளூற அச்சம். இந்தக் காட்டின் மீதிருந்த அச்சம். அதனால் அந்தப் பளிகர்கள் பேசுவதற்கு முழுமையாக செவி சாய்த்தார். பளிகர்கள் இருவரும் அன்றைய இரவு தங்களின் குடிலுக்கு ஜமீனை சாப்பிட அழைத்தனர். அந்த இருளில் எப்படிப் போகமுடியும்? நடந்து செல்ல வெளிச்சம் வேண்டுமே? ஜமீனின் கேள்வியைக் கேட்டு பளிகர்கள் சிரித்தனர்.

“காட்டுக்குள்ள வெளிச்சம் இருட்டுன்னு தனித் தனியா ஒன்னுமில்லங்க…. இருட்டுங்கறதே வெளிச்சத்தோடு இன்னொரு முகந்தான்.. நாங்க வழி காட்டுறோம் வாங்க..”

அந்த இருளில் வனத்திற்குள் இன்னும் கொஞ்ச தூரம் செல்வதில் அவருக்குமே ஆர்வம் எழ, விருந்துக்குச் செல்ல சம்மதித்தார்.


கூடாரத்திலிருந்து ஜமீனும் அவருடன் துணைக்கு இரண்டு பேருமாய் பளிகர்களின் விருந்துக்குக் கிளம்பினர். வெளிச்சம் என்பது புற உலகில் இருப்பதில்லை, கண்களுக்குள் இருக்கிறதென்பதை அந்த இருள் உணர்த்தியது. மரங்கள் பெரும் அமைதியுடன் இவர்களின் வருகையைக் கவனித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு மரமும் ஆயிரமாயிரம் கதைகளைக் கொண்ட உயிர். சில நிமிடங்களிலேயே ஒரு மேட்டை அவர்கள் அடைந்தனர். குட்டி குட்டியாய் அதிகபட்சம் ஆறேழு குடில்கள்… அத்தனை குடில்களுக்கும் மையமாய் தீ மூட்டப்பட்டு வெளிச்சம். இவர்கள் தூரத்தில் வரும்போதே அங்கிருப்பவர்கள் இவர்களை கவனித்திருக்க வேண்டும், வரவேற்க வேண்டி தயாராய் இருந்தனர். காட்டுக்குள் நடக்க ஜமீனுக்கு களைப்புக்கு பதில் உற்சாகம் மிகுந்தது. எப்படி இது நிகழ்கிறதெனப் புரியாமல் முன்னால் சென்ற பளிகனைக் கேட்டார்.

“எல்லாம் மரமும் மூலிகையும்தாங்க…. நீங்க சுவாசிக்கிற காத்துல தான் வியாதியும் மருந்தும் இருக்கு…”

ஜமீன் அந்த மரங்களை எல்லாம் விடுவிக்க முடியாத புதிர்களைப்போல் பார்த்துக் கொண்டு சென்றார். சின்னதாக ஒரு மரத்தின் தூரை அவருக்கு உட்காரும் ஒரு இருக்கையாக்கி இருந்தனர். முதிர்ந்த காட்டு மரத்தின் தூர். விருந்து பரிமாறப்பட்ட போது அந்த எளிமை அவரை சந்தோசம் கொள்ளச் செய்தது. எல்லோரும் மிகக் குறைந்த வார்த்தைகளை பேசினாலும் அவர்களின் அன்பிலும் உபசரிப்பிலும் மனம் குளிர்ந்து போயிருந்தார். உண்டு முடித்தவரை அங்கிருந்து இன்னொரு மேட்டுக்கு அழைத்துச் சென்றனர்… மேட்டில் ஏறியவருக்கு இப்பொழுதுதான் தலைக்கு மேல் முழு நிலாவைப் பார்க்க முடிந்தது. அவரது காலுக்குக் கீழ் சின்னதாய் அருவி… தன் வாழ்வின் அழிக்கவியலாத ஒரு கனத்தில் இருக்கிற உணர்வு மேலிட உணர்ச்சிப்பெருக்கில் கண்கள் கலங்கிப் போனார். அவரை அமைதிப்படுத்திய பளிகர்கள் காதைக் கொடுத்து கவனமாக மரங்களுக்கு மத்தியில் கவனிக்கச் சொன்னார். இயல்புக்கு மீறி மரங்கள் அசையும் சத்தமும் ஆள் நடமாடும் சத்தமும்… அவர் பாறையிலேயே உட்கார்ந்து விட்டார். நிலா மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க அதன் வெளிச்சத்தை தொடர சொன்ன பளிகன் அந்த அருவி விழும் இடத்தில் நிலா வெளிச்சம் விழுந்தபோது ஜமீனைப் பார்க்கச் சொன்னான்…


வாழ்வில் ஒருநாளும் பார்க்க முடியாத ஒரு காட்சி.. ஆம் யானைகள்… ஆனால் ஒன்றல்ல… இரண்டல்ல… பத்து இருபது… இரண்டு மூன்று குடும்பங்கள் இருக்கும். நிலா வெளிச்சத்தில் அருவிக்குக் கீழ் நின்று நீர் அருந்திக் கொண்டிருந்த யானைகள். ஒரே ஒரு முரட்டு யானை மட்டும் தலையைத் தூக்கி ஜமீனைப் பார்த்தது. நிச்சயமாகத் தன்னைத்தான் அந்த யானைக் கவனிக்கிறது எனத் தெரிந்ததும் அச்சம் மின்னலென அவர் உடலுக்குள் ஊர்ந்தது. யானைகள் அவ்விடத்தை விட்டு போனதன் பின்னாலும் நிலா வெளிச்சம் நகர்ந்து போனதன் பின்னாலும் கூட தன்னை நோக்கிய அந்த இரண்டு கண்களை அவரால் ஒரு நொடி கூட மறக்க முடியவில்லை. இது யானையல்ல. வனராஜா… வனராஜா…
அந்த இரவு அந்த பாறையிலேயே உறங்கியவர், இனி ஒருபோதும் இந்தக் காட்டை விட்டு வெளியேறப் போவதில்லையென அங்கேயே இருந்தார். ஜமீனுக்கு இந்த வனம் பிடித்துப் போனதில் பேரையூரிலிருந்த குடும்பம் நகர்ந்து காட்டுக்குள் வரத் தீர்மானத்தது.. காடு கொஞ்சம் கொஞ்சமாய் செம்மை படுத்தப்பட்டு இந்தக் குடில் இருந்த இடத்தில் சின்னதொரு கிராமம் உருவானது… ஜமீன் வந்து சாப்பிட்டுத் தங்கிய ஊரென்பதால் சாப்டூரானது. அவருக்குப் பின் வந்த அத்தனை பேரும் ஜமீன் வந்து சாப்பிட்டாரென்பதை மட்டுந்தான் நினைவு கொண்டிருந்தார்களே தவிர அங்கிருந்து துரத்தப்பட்ட பளிகர்களை மறந்தே போனார்கள். வருசத்தில் ஒருநாள் மலையிலிருந்து வழிபாட்டிற்காக தங்களின் ஆதி இடத்தைத் தேடி பளிகர்கள் வருவது இன்றும் ஒரு சடங்காய் இருந்தாலும் ஊருக்குள் எல்லோரும் ஜமீன் அவர்களுக்கு தலைமுறை தலைமுறை செய்து வரும் உதவிகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தொலைந்து போன ஜமீன் வீரசிங்கத்தின் கதை…


தொலைந்து போன ஜமீன் வீரசிங்கத்துக்கு ஒரு அண்ணனும் ஒரு தமக்கையும் உண்டு. தமக்கை மறைந்த வத்ராயிருப்பு ஜமீன் பொம்முவுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டு சில காலத்திலேயே கணவனை இழந்து தற்போது குழந்தை குட்டிகளோடு மதுரையில் வசித்துக் கொண்டிருக்கிறாள். வீரசிங்கத்தின் அண்ணன் இது எதிலும் சேத்தி இல்லை. சின்ன வயதிலேயே மகாலிங்கத்தின் கீர்த்தி பெற்றிருந்தவர் அவருக்கே தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்துவிட்டார். ஆக, அந்தக் குடும்பத்தை நம்பியிருந்த ஊரைக் கட்டிக் காக்கும் பொறுப்பு முழுக்கவும் வீரசிங்கத்தின் தலையில் விழுந்தது. அதில் பெரிய வருத்தமோ சிரமமோ எதுவும் அவருக்கில்லை. தனது தலையாய கடமைகளில் ஒன்றாகவே நினைத்து இத்தனை காலமும் செய்து வருகிறார்.

இந்த ஊரின் நலன் குறித்துதான் எப்போதும் அவருக்கு அக்கறைகள். மூன்று மகள்கள் அவருக்கு. தனது பிள்ளைகளை எப்படிக் கவனித்துக் கொண்டாரோ அதைப் போலவேதான் இந்த ஊர்க்காரர்களையும் அக்கறையோடு கவனித்துக் கொண்டார். மூத்தவளை ராஜபாளையத்தில் கட்டிக் குடுத்திருந்தார். தனது அந்தஸ்த்திற்கு ஏற்றக் குடும்பம் இல்லைதான், ஆனால் பையன் படித்த பையனாய் இருந்தான். இந்தக் காலத்தில் படித்தவர்களுக்குத்தான் மரியாதை கொடுக்கிறார்கள். என்னதான் அப்படி படித்துக் கிழிக்கிறார்களோ?... படித்தவர்களின் மீது அவருக்கு மட்டுமீறிய ஒரு வெறுப்புண்டு. ”என்னத்த படிச்சம் படிச்சம்ங்கறாய்ங்க… நல்லா ஒரு கொழாய மாட்டிக்கிட்டு… தல மயிர சுருட்டி சுருட்டி விட்டுக்கிட்டு… கூத்தாடிப்பயக கெணக்கா… படிச்சா மட்டும் போதும்.. கொஞ்சமாச்சும் இங்கிதம் வேணாம்…”

படித்தவர்கள் எல்லோருமே அநாகரீகமானவர்கள் என்னும் அவரின் நம்பிக்கை அந்த ஊரில் மிக முக்கியமான உண்மையாக நம்பப்பட்டது. அதெப்படி ஜமீன் ஒரு விசயம் சொன்னால் தப்பாக இருக்குமா?... உலகத்திற்கு எத்தனை கடவுள் என அந்த ஊரில் ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு அவர்களைக் காக்கும் தெய்வம் ஜமீன் வீரசிங்கம்தான்.. ஊரில் யாரும் வேலை வெட்டி எதுவும் செய்யாமல் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது. அந்தந்த காலத்திற்கு எதை நட வேண்டுமோ அதை நட வேண்டும், எதை அறுக்க வேண்டுமோ அதை அறுக்க வேண்டும். முக்கியமாய் ஒருவரும் கள்ளோ, சாராயமோ குடிக்கக் கூடாது. தெரிந்தோ தெரியாமலோ யாராவது குடித்து அவரிடம் பிடிபட்டால் அதோடு அந்த ஆளின் கதை முடிந்தது. மற்றபடி ஊரில் வளரும் அடுத்த தலைமுறையினரின் மீதும், கடுமையாக வயல்களில் உழைப்பவர்களின் மீதும் அவருக்கு அலாதியான அன்பு உண்டு.


வீரசிங்கத்தின் அப்பா காலத்தில் சாப்டூரில் பத்தாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம் இருந்தது. மேலே படிக்க வேண்டுமானால் பிள்ளைகள் பேரையூருக்கோ அல்லது அணைக்கரைப்பட்டிக்கோ போக வேண்டும். எப்படிப் பார்த்தாலும் எட்டு மைல் போக வேண்டும். ஒருநாள் எப்போதும் போல் அதிகாலையில் வயலுக்குப் போய்விட்டு கூட்டு வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தவர் விடிந்தும் விடியாமல் பையன்கள் சிலர் புத்தகப் பையோடு பேரையூர் ரோட்டில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். இவர் வண்டியைப் பார்த்ததும் பையன்கள் மரியாதையோடு வணங்கினர். அவர் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு

“எந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிறீயடா?...”

அந்தப் பையன்கள் அவரிடம் பேசியதிலேயே பெருமையோடு

“பேரையூர்லங்கய்யா…”

ஜமீனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.

“என்னப்பா இன்னும் முழுசா விடியக்கூட இல்ல… இன்னயாரத்துலயேவா பள்ளிக்கூடம்?...”

”நம்ம ஊருக்கு வர்ற பஸ்ஸு காலைல எட்டரைக்குத்தாங்கய்யா வருது… இங்க வந்து திரும்பி பேரையூர் போய்ச்சேர ஒன்பதரை மணி ஆகிப்போகுது.. பள்ளிக்கூடத்துக்கு தெனமும் லேட்டா போறது மாதிரி இருக்கு… அதான் விடிகாலைல நடந்தம்னா செம்பட்டி விளக்கு வரைக்கும் வர்ற பஸ்ஸ பிடிச்சுப் போயிருவோம்…”

ஜமீனுக்கு அந்தப் பையன்களின் புத்தக சுமையையும் களைத்துப் போன முகத்தையும் பார்த்து சங்கடமாகிப் போனது. இத்தனை நேரத்திற்கு வீட்டில் சாப்பிடக் கூட எதுவும் செய்திருக்க மாட்டார்கள் எனப் புரிந்து கொண்டவராய் தனது ஜிப்பாவிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அந்தப் பையன்களிடம் நீட்டினார்

“இத செலவுக்கு வெச்சுக்கங்கப்பா… நான் கூடிய சீக்கிரத்துல இதுக்கு ஒரு வழி செய்றேன்…”

அந்தப் பையன்கள் மரியாதையோடு காசை வாங்கிக் கொண்டார்கள். அவருக்கு எல்லோரும் ஒரே மாதிரி வணக்கம்கூட சொன்னார்கள் அடுத்த இரண்டு நாட்களிலேயே ஒரு மணி நேரத்திற்கு முன்னால் ஊருக்கு பேருந்து வந்தது… பள்ளிக்கூடம் போகிற பையன்கள் எல்லோருக்கும் அளவுகடந்த சந்தோசம்.


இப்படி எல்லாக் காலத்திலும் தனது ஊரின் நலனை மட்டுமே பிரதானமாய் நினைக்கும் அந்த மனிதன் கடந்த சில நாட்களாகவே சொல்ல முடியாத ஏதோவொரு மனக்குறையில்தான் இருந்தார். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. சதாவும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். வீரசிங்கமும் அவரது அண்ணனைப் போலவே சாமியாராய்ப் போகப் போவதாகத்தான் ஊரில் பலரும் பேசத் துவங்கினார்கள்.

”அய்யாவும் போய்ட்டா ஊர்ல ஒரு கட்டுப்பாடும் இலலாமப் போகும்… கைல கம்பு இருக்கவனெல்லாம் காவக்காரன்னு சுத்திட்டு இருப்பாய்ங்க… இதையெல்லாம் பாக்கவா இன்னும் உசுரோட வெச்சிருக்க முனியாண்டி…”

என கிழவிகள் சிலர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து புலம்புக்கொண்டிருப்பார்கள். இளவட்டங்கள் மட்டுந்தான் கொஞ்சம் முன்னைப் போல் இல்லாமல் அந்த ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு வாழ்வை ஊருக்குள்ளும் வாழ்ந்து பார்க்கத் துவங்கினர். வீரசிங்கம் தொலைந்த தினத்திற்கு அடுத்த நாளே ஊரிலிருந்த டீக் கடையில் திருட்டுத்தனமான சிகரெட் விற்கப்பட்டது. ”ஊருக்கு கேடுகாலம் வந்துருச்சி, யாரு என்ன செய்ய முடியும்?...” பல்லுப் போன பெருசுகள் திருட்டுத்தனமாய் சிகரெட் குடித்துக் கொண்டிருந்தவர்களோடு சேர்த்து அவர்களின் குடும்பத்திற்கும் சாபம் விட்டனர்.


மைப் போட்டுப் பார்க்கப் போனவர்கள் திரும்பி வந்தனர். தெற்கே நாற்பது மைல் தாண்டி இருக்கலாம் என துப்பு வந்திருப்பதாக அவர்கள் சொன்னதைக் கேட்டு நாற்பது மைல்களுக்குள் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் தகவல் கேட்க ஆட்கள் சென்றனர். நாட்கள் கடந்து கொண்டிருந்ததே ஒழியே ஒருவரிடமிருந்தும் சாதகமான பதில் இல்லை.

ஒவ்வொரு வருசத்தைப் போலவும் இந்த வருடமும் ஜமீன் கட்டுப்பாட்டிலிருக்கும் காட்டுக் கோவில் பூசை நடந்த அன்றிலிருந்துதான் அவரின் நடவடிக்கைகள் மாறத் துவங்கி இருந்தன. கோவில் ஜமீன் கட்டுப்பாட்டிலிருந்தாலும், ஊரிலிருக்கும் எல்லா சாதி ஆட்களும் கும்பிட்டாலும் பூசை செய்வது மட்டும் காலங் காலமாய் மலையிலிருந்து வரும் பளிகர் குடும்பம்தான். ஊர்ச்சனம் ஒருவருக்கும் தெரியாது தாங்கள் வணங்கிக் கொண்டிருப்பது அவர்களின் குல தெய்வத்தை என. பூசைக்கு வரும் பளிகர் குடும்பம் இரண்டு நாள் பூசை முடிந்ததுமே வெட்டப்பட்ட பன்றித் தலையோடு இரவோடு இரவாக மலையேறி விடுவார்கள். அந்த இரண்டு நாட்களும் எல்லாவற்றிலும் அவர்களுக்குத்தான் முதல் மரியாதை. மற்ற நாட்களில் ஏதாவது தேவையை ஒட்டி அவர்கள் ஊருக்குள் வந்தாலும் ஒருத்தரும் பெரிதாய் அவர்களை கண்டு கொள்வதில்லை. அந்த வருடம் பூசைக்கு வந்த பளிகனின் குடும்பம் பூசை முடிந்த இரவு மலையேறவில்லை. எப்போதுமில்லாதபடி காலம் தப்பி மழை பெய்தது அந்த இரவில். அந்த தலைமுறை ஆட்கள் ஒருவரும் பார்த்திராத பேய்மழை. ஜமீனின் அரண்மனையில் ஒரு சின்ன அறையில் உட்கார்ந்து விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையைப் பார்த்துக் கொண்டிருந்த பளிகன் அடுத்த நாள் காலை ஆட்கள் வந்து பார்த்தபொழுது அங்கு இருந்திருக்கவில்லை. அவன் மனைவியும் குழந்தைகளும் விடிகிற வரை தங்களோடுதான் இருந்தாரென சத்தியம் செய்தனர். பூசை செய்யப்பட்ட பன்றியின் தலை இன்னும் ரத்தக் கவுச்சியோடு துணியில் சுற்றப்பட்டுக் கிடந்தது. ஊருக்குள் எங்குமே ஒருவரும் அவனைப் பார்த்திருக்கவில்லை. அவன் மனைவி மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போனாள். முந்தின இரவு பெய்த மழையின் சுவடே தெரியாமல் வெயில் சுள்ளென அடித்தது. தோலை எரிக்கும் வெயில். வெயிலும் மழையும் மாறி மாறி அடித்த அந்த தினத்தை மிக மோசமான கெட்ட சகுனம் என ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டனர்.


அன்றிலிருந்து மூன்று நாட்கள் தாண்டி ஒரு நாள் நள்ளிரவுக்கு மேல் ஜமீன் வீட்டில் ஆட்கள் கத்தும் சத்தம் கேட்டு ஊரே களேபரமானது. தனது அறைக்குள் யாரும் நுழைய முடியாதபடி மூர்க்கங் கொண்டவராய் ஜமீன் “யானை யானை… பெரிய யானை…” என கத்தினார். தன் அறையின் சுவர்களெங்கும் யானை அசைந்து கொண்டிருந்தது அவருக்கு மட்டும் தெரிய, முகம் தெரியாத அந்த யானையை ஒவ்வொருவரும் தங்களின் முதுகுக்குப் பின்னால் தேடிப் பார்த்தனர். ”இந்த வட்டாரத்திலேயே யானை இல்லை” என ஜமீனின் வீட்டிலிருக்கும் எல்லோரும் சொல்லி அவருக்குப் புரிய வைக்க முயன்றதெல்லாம் ஒன்றும் நடப்பதாய் இல்லை. கதவை இறுக சாத்திக் கொண்டு கட்டிலுக்குக் கீழாக ஒளிந்து கொண்டார். ஊர்க்காரர்கள் கெட்ட கனவு ஏதாவது வந்திருக்கக் கூடுமென்றுதான் முதலில் நினைத்தனர். அடுத்த நாள் அதிகாலையில் அவரது அறைக் கதவு திறந்திருக்க அவரை மட்டும் காணவில்லை. எல்லோரும் ஆளுக்கொரு திசையில் தேடினர். அவர் போன தடத்தை மட்டும் ஒருவராலும் கண்டு கொள்ள முடியவில்லை. ஊர் தன் முகத்தை ஒருவருக்கும் தெரியாமல் மாற்றிக் கொண்டிருப்பதை மலையிலிருந்த பளிகர்கள் கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தனர். பகல் முழுக்க தேடியலைந்து ஊர்க்காரர்கள். அன்று பொழுது மங்கும் நேரமாக மலையடிவாரத்திலிருக்கும் அருவிப் பாறையில் ஜமீன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு பிடித்துத் தூக்கி வந்தனர். அவரின் கம்பீரமெல்லாம் போய் ஒரே நாளில் சூன்யம் அப்பிய முகத்துடன் வந்து சேர்ந்தவர் யாருடனும் பேசவில்லை. வீர சிங்கத்தின் அண்ணனுக்கு தகவல் சொல்லி அனுப்ப சதுரகிரியிலிருந்து அவரும் இறங்கி வந்திருந்தார். பெரும்பாலும் தியானத்தில் இருந்து தெளிந்த கண்கள், உடலில் காற்றைப் போல் ஒரு மென்மையும் வலுவும். மார் வரை நீண்டிருந்த அவரின் தாடியைப் பார்த்ததும் வீரசிங்கத்திற்கு குஷியாகிவிட்டது…. வனராஜாவோட வீடு… வனராஜாவோட வீடு… என அண்ணனின் தாடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருந்தார்.


வீரசிங்கத்தின் கண்களில் தெரிந்த காட்டின் தடத்தைத் தெரிந்து கொண்ட அவரின் அண்ணன்

“இனி ஒருபோதும் அவனால் வீட்டுக்குள் கிடக்க முடியாதென்றார்…”

”அவன் தனக்குள் காட்டைத் தேடிக் கொண்டிருக்கிறான்… அவன் அலறும் வனராஜா யாரோ அல்ல… அவனே தான்… இது தலைமுறை தாண்டிய சாபம்…” வந்திருந்தவர் ஏற்கனவே குழம்பிப் போயிருந்த ஊர்க்காரர்களின் மனதை மேலும் குழப்பி விட்டுச் செல்ல எல்லோரும் வீரசிங்கத்தைக் குணப்படுத்தும் வைத்தியரைத் தேடத் துவங்கினர். ஜமீனுக்கு உடல் மோசமாகிவிட்ட பின் ஊருக்குள் எல்லாம் நுழைந்தது. நாகரீகம், சாராயம், கூடவே பல தலைமுறைகளாய் அடங்கிக் கிடந்த சந்தோசம். கட்டுப்பாடுகளை மீறி எல்லோரும் வாழ முடிந்த போது இன்னும் வலிமையானவர்களாய்த் தங்களை உணர்ந்தனர்.


வீட்டில் அவரை அடைத்து வைக்க முடியாததோடு இரண்டு தினங்களுக்கு ஒருமுறை தப்பிச் செல்கிறவராய் வீர சிங்கம் மாறிப் போனார்… தொலைந்து போனவர் சில சமயம் சில மணி நேரங்களுக்குள் கிடைத்துவிடுவார். சில சமயம் சில தினங்களாவது ஆகும். ஊர்க்காரர்களுக்கு இந்த ஒளிந்து பிடித்து விளையாடும் விளையாட்டு ஒரு கட்டத்தில் சலிப்பேற்படுத்தியபோதும் அவரை எப்படியோ போகட்டுமென அவர்களால் விட்டுவிட முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் தப்பி ஓடுவது ஊருக்குப் பின்னால் இருக்கும் மலங்காட்டுக்குள்தான்… ஆனால் அவர் போகிற தடங்கள் மட்டும் புதிது புதிதாய் இருந்தன. பசி, தூக்கம் எதைப்பற்றிய பிரக்ஞையுமில்லாமல் எப்படி அந்த மனிதனால் காட்டுக்குள் போய் இருந்துவிட முடிகிறதென எல்லோரும் யோசிப்பார்கள். அவரை வீட்டிற்கு மீட்டு வரும் தினங்களில் சுவற்றில் சாய்ந்து நின்றபடியே தனது முதுகை சுவற்றில் அங்கும் இங்குமாய் உரசியபடியே இரவு முழுக்க தூங்காமல் இருப்பார்.


வனராஜா


ஜமீன் இப்பொழுது முன்பை விடவும் அதிகமாய் பேசப்பட்டார், ஆனால் பலர் பரிதாபமாகவும் சிலர் கேலியாகவும் பேசும்படியாகிப் போனது. யானக்கிறுக்கன் என புதுவகையான பெயர் வைத்திருந்தனர் ஊர்க்காரர்கள். வீட்டுக்குள் முழுக்க முழுக்க காட்டுவாடை. ஜமீனின் குடும்பத்திலிருந்தவர்களே அவரைப் பார்த்துப் பயந்தனர். ஒரு குழந்தையைப் போல் அவர் எல்லோரிடமும் விளையாடினாலும் ஒரு முரட்டுக் குழந்தையாகவே எல்லோருக்கும் தெரிந்தார். அவர் விளையாடியது யாராலும் யூகிக்க முடியாத முரட்டு விளையாட்டு. வீட்டுன் பின்பக்க சுவரில் ஓடிவந்து முட்டுவது அவரது பிரதான விளையாட்டுகளில் ஒன்று. சுண்ணாம்பும், களிமண்ணும் கலந்து கட்டிய அந்தக் காலத்து வீடு, நூறு வருடங்களைத் தாண்டியும் இன்னும் அதே கம்பீரத்துடன் இருக்கும் அந்த வீட்டை ஓடி வந்து இவர் முட்டும் போது மொத்த வீடும் அதிரும்… வீட்டின் அதிர்ச்சியைத் தள்ளி நின்று பார்த்து கை தட்டி சிரிப்பார். வீட்டுக்குள்ளிருந்து எல்லோரும் அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். இத்தனைக்கும் அவர் தலையில் சின்ன காயம் கூட இருக்காது. எல்லோரும் அவரை பிடித்து இழுத்து வருவதற்கு முன் இரண்டாவது முறை ஓடிப்போய் முட்டுவார்…. முதிர்ந்து கிழவியொருத்தி தள்ளாடி விழுவதைப்போல் அந்த வீடு விழப்போகும் தருணம் பார்த்துக் காத்திருப்பார்கள். ஒரு மாதிரியாய் அவரை கயிற்றில் கட்டி இழுத்து வந்து கட்டிலில் போட்டால் கட்டிலில் மேலும் கீழுமாய் உடலை ஆட்டி ஆட்டி குதிப்பார். தூக்க மாத்திரைகளும், ஊசிகளுமே அவரைத் தூங்கச் செய்து கொண்டிருந்தன.


ஊரிலிருந்த சின்னப் பையன்களோடுதான் இப்போது அவருக்கு சேர்க்கை. அவரைப் பார்த்து மரியாதையோடு வணக்கம் வைத்த சிறுவர்கள் அவர் இடுப்பு அருணாக் கொடியில் கயிற்றைக் கட்டி அவரோடு யானைச் சவாரி செய்து கொண்டிருந்தனர். அவரும் எல்லோரையும் முதுகில் ஏற்றிக் கொண்டு ஆலமரங்களை சுற்றி வந்து கொண்டிருந்தார். ”யான பாரு … யான .. யான பாரு… யான…” இந்த விளையாட்டுத்தான் ஜமீனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது… சின்னப்பையன்களே வேண்டாமென விலகி ஓடினாலும் இவர் விடாமல் துரத்திக் கொண்டு போய் பிடித்து வருவார். அவர் சின்னைப்பையன்களோடு சரிக்கு சரியாய் விளையாடுவதைப் பார்த்து “இந்த மனுசனுக்கு இப்படியா வரனும்… யார் வெச்ச வெனையோ?...” என ஊர்க்காரர்கள் வருத்தப்படுவார்கள். யார் என்ன சொன்னாலும் அவர் பதிலுக்கு “வனராஜா…வனராஜா…” என்பதை மட்டுமே பதிலாக சொல்லிக் கொண்டிருந்தார்….

மலையிலிருந்த பளிகர்களுக்கு ஜமீன் மனப்பிசகில் இருக்கிறாரென்பதும், அவர் வனராஜா வனராஜா என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறாரென்பதும் தெரியவந்த பொழுது தாங்கள் இப்போது இருக்கும் இடத்தை விட்டு வேறு இடம் நகர்ந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே புரிந்து கொண்டனர். இது தற்செயல் நிகழ்வல்ல, சாபம். இந்த காட்டின் தீரா சாபம். தங்களின் பாட்டன்கள் இயற்கையோடு வாழ்ந்த நிலம், அந்த நிலம் அழிக்கப்பட்டதன் சாபம் அவ்வளவும். அங்கிருந்த பல வருட மரங்கள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வேதனை காற்றில் இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது, அந்த மரங்களின் சாபம்தான் இவ்வளவும். எதற்கும் இருக்கட்டுமென பளிகர்களின் முதிய கிழவனொருவன் பல தலைமுறைகளாய் சேர்த்து வைத்திருந்த அவர்களின் ரகசிய மூலிகையால் ஒரு மருந்து தயாரித்தான். அது பிணி தீர்க்கும் மருந்தல்ல, ஒரு சூழலை மாற்றைக் கூடிய மருந்து, ஒரு மனிதனின் உடலுக்குள் புகுவதன் வழி அவன் வாழும் நிலத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளக் கூடியது. அந்த மருந்தை தயாரித்தபின் பளிகர்கள் இரண்டு பேர் பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு ஜமீனுக்குத் திரும்பினர்.


மூன்று தினங்களுக்கு தொடர்ச்சியாய் அதைக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் வீட்டிலிருந்தவர்களுக்கு சிக்கலாய் இருந்தது, மூன்று தினங்கள் அந்த மனிதரை பாதுகாப்பதென்பது சிரமமான காரியம். அந்த மனிதன் உடலே கால்களால் ஆனவர்… அந்தக் கால்களைக் கட்டுப்படுத்துவதென்பது காட்டை கட்டி வைப்பது போல்… மருந்து வந்து சேர்ந்த முதல் தினம் இரவு அவருக்கு மருந்து கொடுக்க ஆறு பேர் தேவைப்பட்டார்கள். உடல் மெலிந்து போயிருந்தாலும் அபாரமானதொரு வலு அவரிடம் இருந்தது… எத்தனை பேர் சேர்ந்தும் அவர் உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. கடைசியில் ஜமீனின் பேத்தி வந்துதான் யானை விளையாடலாமெனச் சொல்லி ஏமாற்றி அந்த மருந்தைக் கொடுத்தாள். மருந்து குடித்த கொஞ்ச நேரம் இயல்பாக இருந்தவர், விடிவதற்கு முன்பான அதிகாலையில் மதம் பிடித்த யானையாகிப் போனார்… முற்றிய கோபத்தில் அந்த யானை அந்த வீட்டையும் ஊரையும் சிதறடிக்க இறங்கியது. காட்டின் ரெளத்ரத்தை ஊர்க்காரர்கள் இவரின் வடிவத்தில் பார்த்தனர். வீரசிங்கத்தின் மனைவி தன் கணவனின் காதுகள் யானையின் காதுகளைப் போல் இருக்கின்றன என அலறினாள். தெருவில் அவர் ஓடியபோது ஒரு யானையின் அசைவை ஒத்திருந்தது அவர் ஓட்டம். இலக்கின்றி கண்ணில்படும் எல்லாவற்றையும் சிதறடிக்கும் மூர்க்கம். ஊரில் ஒருவரும் தூங்க முடியாமல் பயந்து கிடந்தனர். விடிவதற்கு முன்னால் காட்டிற்குள் ஓடியவரைத் தொடர்ந்து ஆட்கள் ஓடினர். வழியெங்கும் சோளத்தட்டைகள் கரும்புகள் எல்லாம் சின்னாபின்னமாகிக் கிடந்தது . அன்று பகல் முழுக்க காட்டிற்குள்ளிருந்து யானையின் பிளிரலை ஊர்க்காரர்களால் தெளிவாகக் கேட்க முடிந்தது. முதல் முறையாக மனப்பிசகில் இருந்த அந்த மனிதனை நினைத்து ஊர் அச்சங் கொண்டது.


காட்டுக்குள் போனவரை ஊர்க்காரர்கள் எல்லாத் திசையிலும் தேடினர். மருந்து கொடுத்து அனுப்பிய பளிகர் கூட்டத்தைப் பார்க்க மலையேறிப்போன ஊர் ஆட்கள் பளிகர் அங்கிருந்து வெகுதூரம் போனது தெரிந்து அலறியடித்து வந்தனர்.

“ஒரு பயலயும் காணோம் மலயில… இந்த மலையும் காடுந்தேன் எங்க உலகம்னு சொன்னவய்ங்க இங்க இருந்து போயிருக்காய்ங்கன்னா பயமா இருக்கு என்ன ஆகுமோன்னு?..”

ஏற்கனவே அச்சத்தின் ஈரம் அப்பிய ஊர்க்காரர்களும், ஜமீன் வீட்டு ஆட்களும் வந்தவர்கள் சொன்னதைக் கேட்டு நடுங்கிப் போயினர். அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறதோ என எல்லோருக்கும் பதட்டம். ஆனால் ஒரு நாள் இரண்டு நாள் கழிந்து மூன்றாவது நாளும் கழிந்து போயிற்று, ஜமீன் திரும்பி வரவில்லை, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கச் சென்றவர்களாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எல்லோருக்கும் உள்ளூர அப்படியே அவர் திரும்பி வராமல் இருந்தால் போதும் என்கிற மனநிலையே இருந்தது. அச்சம் குறைந்து மெல்ல மெல்ல ஊர் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருக்க, ஜமீன் வீட்டிலும் அதனை ஒரு துக்கமாக எண்ணுவதற்குப் பதிலாக தங்களுக்குக் கிடைத்த விடுதலையாக நினைத்தனர்.


ஊரில் இனியும் துர் சம்பவங்கள் எதுவும் நடக்கக்கூடாதென ஜமீன் வீட்டு ஆட்கள் தங்கள் செலவிலே காட்டுச்சாமிக்கு ஒரு பூசையை நடத்த முடிவு செய்தனர். இந்த வருடம் பூசையில் பலி தப்பாகிப் போனதென்கிற நம்பிக்கை. அதனால் மீண்டும் பூசை நடத்த நினைத்தபோது பூசை வைக்க பளிகன் ஒருவனும் இல்லையே என்கிற குழப்பம். யோசித்து ஒருவழியாய் மலையாள நாட்டிலிருந்து நம்பூதிரிகளை வர வைக்க பேசி முடித்தனர். சாமப் பூசை. நாள் குறித்து எல்லாம் தயாரானது.


பூசைக்கு முந்தின நாள் ஊருக்கு வந்து சேர்ந்த நம்பூதிரிகளையே ஊர்க்காரர்கள் அச்சத்தோடு பார்த்தனர். கனத்த உடலும் உருண்ட கண்களுமாய் அவர்களின் தோற்றம் பூதத்தை ஒத்திருந்தது. முந்தின நாள் இரவே ஊரைச் சுற்றி ஒரு வளையத்தை நீரால் உருவாக்கினர். மாய நீர்… கண்ணுக்குப் புலப்படாத ஒரு மென்மையான வளையம் அந்த ஊரைச் சுற்றியிருந்ததை ஊர்க்காரர்கள் ஒருவருக்கும் சொல்லி இருக்கவில்லை. ஊரில் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாதென உத்திரவிடப்பட்டிருந்தது. பூசை துவங்க சில மணி நேரங்களுக்கு முன், ஊரின் மையமான மந்தையில் ஒரு பெரிய சதுரம் போடப்பட்டு அங்கு தீப்பந்த வெளிச்சம் ஏற்றப்பட்டது… நெருப்பும் நம்பூதிரிகளின் மந்திர சத்தமுமாய் பூசை துவங்க ஊர் கனத்த அமைதியில் இருந்தது… பூசை செய்பவர்களின் முகம் இந்த ஊரின் சாபத்தை தங்களுக்குள் வாங்கிக் கொள்ளும் உக்கிரத்தில் இருந்தது. பூசை முடிகிற நேரமாய் பலி கொடுக்கவென வைத்திருந்த எருமை கட்டி வைக்கப்பட்டிருந்ததை மீறி குதித்து ஓட மூர்க்கம் கொண்டது. ஊரில் ஒருவரும் தூங்க முடியாமல் நடக்கப்போவதை மெளனமாய் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். பொழுது விடியத் துவங்கின நேரம் மலையடிவாரத்திலிருந்து காடு அதிரும் சத்தம்… காடே நகர்ந்து ஊருக்குள் வருவது போல் ஊருக்குள் எதிரொலித்தது. எல்லோரும் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். சத்தம் நெருங்கி வர வர பூசை உக்கிரம் கொண்டது.

காடதிரும் சத்தம் ஊருக்கு மிக நெருக்கமாய்க் கேட்க எல்லோரும் ஜன்னல்களிலிருந்தும் வீட்டுக் கதவிடுக்கின் வழியாகவும் பூசை நடக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பலி எருமை அதிர்ச்சியை எதிர் கொள்ளாமல் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட, பூசை செய்து கொண்டிருந்தவர்களுக்கும் உடல் நடுக்கமெடுக்கத் துவங்கியது… முழு நிலா மொத்த ஊரையும் பார்க்கும் படி வந்து நின்ற நேரத்தில் ஊரின் வெளிச்சத்தை மறைப்பது போல் பிரம்மாண்டமான நிழல் ஊரைச் சூழ்ந்தது. நிழல் நகர்ந்து நகர்ந்து பிரம்மாண்டமான உருவமாய் வந்து நிற்க மொத்த வனத்தையும் பிரதிபலிக்கும் ஒரு வனராஜா அங்கு நின்று கொண்டிருந்தார். உடலிலும் அதன் கண்களிலும் உக்ரமும் மூர்க்கமும். பூசை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஒரு பிளிறு பிளிற அவர்கள் பூசையை நிறுத்திவிட்டு எழுந்து ஓடினர். வனராஜா மொத்த ஊரையும் வலம் வந்தார். எல்லோரும் அவரை கவனமாகப் பார்த்தனர். வனராஜாவின் கண்களில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோபம். நிதானமாய் ஊரை வலம் வந்து மையமாய் நின்று இன்னொரு முறை பிளிற சிலர் அச்சம் குறைந்து வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்து பார்த்தனர். வனராஜாவிடம் எந்த அனாவசிய அசைவும் இல்லை. தீர்க்கமாய் ஊரைப் பார்த்தார். வீட்டுக்குள்ளிருந்து வந்த மக்கள் நெடுஞ்சான் கிடையாக அவர் முன்னால் விழுந்து வணங்கினர்.

“அய்யா வனராசா… நீதான் சாமி எங்களுக்கு காவலு… எங்க பிள்ளைகள காத்து நிக்கனும்…”

கிழவிகளும் கிழவன்களும் கண்ணீர் ததும்ப கும்பிட்டு நிற்க வனராஜாவின் காதுகள் மட்டும் ஆடிக்கொண்டிருந்தன. குழந்தைகள் அவரைப் பார்த்து அரண்டுவிடக்கூடுமென பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியில் விடவில்லை. எல்லோரும் விழுந்து கும்பிட்டதோடு ஜமீனின் பொண்டாட்டியும் விழுந்து கும்பிட்டாள். அவளின் கண்களில் அச்சம் விலகி தான் இழக்கக் கூடாத ஒன்றை இழந்த துயரம். உக்கிரம் குறைந்து மெதுவாக மீண்டும் காட்டை நோக்கி அவர் நடக்கத் துவங்கின பொழுது வீட்டிற்குள்ளிருந்து சின்னைப் பிள்ளைகளும் பார்த்தனர். ஊரெல்லையில் கடைசியாய் ஒருமுறை அவர் பிளிறிய போது ஊர்க்காரர்கள் மெளனமாய் அந்த பிளிறலைக் கேட்டுக்கொண்டு நின்றனர்.


121 views

Recent Posts

See All

Fake

Comments


bottom of page