கடந்த வாரம் கெளதன் கோஷின் antranjali yatra படம் பார்க்க நேர்ந்தது. மரணத் தருவாயிலிருக்கும் ஒரு முதியவர், அவரது உடலை ஆற்றங்கரைக்கு எடுத்து வந்துவிடுகிறார்கள். ஆனாலும் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியாமல் இழுத்துக் கொண்டிருக்க அங்கிருக்கும் குறிசொல்லி ஒரு இளம்பெண்ணை முதியவருக்குத் திருமணம் செய்துவைத்தால் அவருக்கு விமோச்சனம் கிடைக்குமெனச் சொல்ல, ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். உடனடியாக மனப்பெண் ஆற்றங்கரைக்கு முழு அலங்காரங்களோடு அழைத்து வரப்படுகிறாள். மரணத்தருவாயிலிருந்த முதியவருக்கு ஒரு பெண்ணின் அருகாமை கண்ணில் ஜீவனைக் கொண்டு வந்துவிடுகிறது. அந்த சின்னஞ்சிறிய பெண் வேண்டாவெறுப்பாக அவரைத் திருமணம் செய்துகொள்ள அவர்களை அந்த ஆற்றங்கரையில் விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாம் இரவு ஊர் திரும்பிவிடுகிறார்கள். அங்கு இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் வெட்டியான் அந்தப் பெண்ணை ஏதாவது செய்து அந்தக் கும்பலிடமிருந்து காப்பாற்ற நினைக்கிறான். இரவு ஊர்க்காரர்கள் சென்றபின் அவளை அங்கிருந்து தப்பிச்செல்ல சொல்கிறான், அவள் மறுக்கிறாள். கொந்தளிப்பான இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்கையில் வாழ்வைக் குறித்த அவநம்பிக்கைகளே மனம் முழுக்க மிஞ்சி நிற்கின்றன. ஓவியத்திற்கு நெருக்கமான காட்சியமைப்புகளைக் கொண்ட இந்தத் திரைப்படம் உடனடியாக அவரது இன்னொரு முக்கியத் திரைப்படமான paar ஐ பார்க்கத் தூண்டியது.
சில முறை அந்தத் திரைப்படத்தைப் பார்த்திருந்தபோதும் இன்றைக்கிருக்கும் அரசியல் சூழலில் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென மனம் உந்தித் தள்ளியது. ஒரு நல்ல திரைப்படம் அப்படித்தான், தனக்கான தேவையை எல்லா காலத்திற்கும் வைத்திருக்கும்.
சாதிய அமைப்புகளின் தீமைகள், சீர்திருத்தங்கள் அற்ற நிலவுடைமை முறைகள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும் சமூக கட்டமைப்புகள் இவற்றோடு கிராமப்புற இந்தியாவில் பரவி வந்த சுரண்டலையும் அப்பட்டமாக காட்சிப்படுத்திய படம் paar. சமரேஷ் பாஷு எழுதிய பாரி என்னும் சிறுகதையிலிருந்து கெளதம் கோஷ் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் ஜமீன்தாரி முறை பெயரளவில் ஒழிக்கப்பட்டாலும் அதன் தீவிரம் தொடர்ந்தபடியேதான் இருந்தது. குறிப்பாக பீஹார் உத்திரப்பிரதேசம் மேற்கு வங்காள மாநிலங்களில் நிலமற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சொல்லொண்ணத் துயரங்களை எதிர்கொள்கிறவர்களாய் இருந்தார்கள். ஒரு புறம் வளர்ச்சியை நோக்கியும் பெரும் கனவுகளை நோக்கியம் நகரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த இந்திய தேசம் இன்னொருபுறம் தன் குடிமக்களுக்கான அடிப்படை வசதிகளையும் உரிமைகளையும் தருவதற்கே போராடிக் கொண்டிருந்தது. இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது.
பீஹாரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் துவங்குகிறது இந்தக் கதை. படத்தில் ஓரிடத்தில் இந்திய உலகக் கோப்பையை வென்றதற்காக சிலர் சாலையில் நடனமாடுகிறார்கள் என்ற காட்சியின் வழியாய் கதை நடக்கும் காலகட்டம் 1983 ம் வருடம் என்கிற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. 1970 களுக்குப்பின் மேற்குவங்கத்திலிருந்து எழுந்தது நிலவுடமையாளர்களுக்கு எதிரான முதல் குரல். சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து எழுந்த அந்தக் குரலுக்கும் அமைப்புக்கும் பின்பு அந்த கிராமத்தின் பெயரே சூட்டப்பட்டது. மிக விரைவாக அந்த இயக்கம் நாடு முழுக்க பரவத் துவங்கி பெருந்திரளான மக்கள் தமக்கான உரிமைகளைக் கேட்டு கிளர்ந்தெழத் துவங்கியிருந்தார்கள்.
கலை வடிவங்களிலும் அந்தக் காலத்தின் கொந்தளிப்புகள் அப்பட்டமாய் வெளிப்படத் துவங்கின. மேற்கு வங்கம் துவங்கி ஆந்திர மாநிலம் வரை நக்சல் இயக்கத்தின் குரலைச் சொல்லும் கவிதைகளும் பாடல்களும் கதைகளும் எழுதப்பட்டன. ரித்விக் கட்டக், மிருனாள் சென் போன்ற மேதைகள் இந்தப் பின்னனியில் வலிமையான திரைப்படங்களையும் உருவாக்கினார்கள். அந்தக் காலகட்டத்தின் முக்கியத் திரைப்பட இயக்குநர்கள் அத்தனை பேரின் திரைப்படங்களிலும் இதே கொந்தளிப்பை நாம் காணமுடியும். பார் அந்த வகையில் நேரடியாக நக்சல் அமைப்பின் குரலை பிரதிபலிக்கும் திரைப்படமாக இல்லாதபோதும் ஜமீன்தார்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலை இன்னொரு வகையில் தீவிரமாகப் பேசுகிறது.
பன்னையாருக்கும் அவரது நிலத்தில் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான பிரச்சனையிலிருந்து துவங்குகிறது படம். பன்னையாரின் ஆட்கள் தலித் மக்களின் பகுதிக்குள் நுழைந்து அவர்களின் குடிசைகளை எரித்துவிட்டு கண்ணில்பட்டவர்களை எல்லாம் இரக்கமின்றி படுகொலை செய்கிறார்கள். தப்பித்து ஓடும் மக்கள் ஒரு காளி கோவிலில் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி பதுங்கிக் கொள்ள பன்னையாரின் ஆட்கள் செய்தி கிடைத்து கோவிலுக்குள் நுழைந்து மிச்சம் மீதி இருப்பவர்களையும் கொலை செய்கிறார்கள். இந்த வன்முறையிலிருந்து கதையின் நாயகனான நவ்ரங்கியாவும் அவனது கர்ப்பவதியான மனைவி ரமாவும் தப்பித்துச் செல்கிறார்கள். அடுத்தநாள் செய்தித்தாளின் வழியாக அந்தக் கிராமத்தில் பதினாறு தலித் மக்கள் கொல்லப்பட்டது நாடு முழுக்க தெரியவருகிறது.
இந்த வன்முறைகளுக்குக் காரணமாக இருப்பது இரண்டு காரணங்களென்பது கதையின் போக்கில் நமக்குச் சொல்லப்படுகிறது. ஒன்று பன்னையார்கள் அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கூலியைத் தர மறுக்கிறார்கள். அதற்கு எதிராக மக்கள் அமைதியான வலியில் வேலை நிறுத்தம் செய்ய தேர்தல் காலத்தை கருத்திக் கொண்டு பன்னையார் சரியான கூலியைத் தர சம்மதிக்கிறான். அந்த மக்கள் தேர்தலில் தங்கள் ஊருக்கு தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்துவிட ‘ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் ஊர்த் தலைவராக ஆவதா?’ என்கிற ஆத்திரம் பன்னையார்களின் ஆத்திரத்தைத் தூண்டுகிறது. அவர்கள் அந்த மக்களுக்கு ஆதரவாக இருந்த ஆசிரியரைக் கொலை செய்ய பதிலுக்கு ஊர் மக்கள் சேர்ந்து பன்னையாரின் தம்பியைக் கொலை செய்கிறார்கள். அதன்பிறகு பன்னையாரும் அவரது ஆட்களும் செய்யும் வன்முறைகள் படம் பார்க்கும் நம்மை உலுக்கிப்போடுகிறது.
பீஹாரின் கிராமத்தில் முதல் பகுதியும் கல்கத்தாவின் நகர வீதிகளில் இரண்டாம் பகுதியுமாய் நீளும் இந்தத் திரைப்படம் சொந்த ஊரின் வன்முறைகளிலிருந்தும் அநீதிகளிலிருந்தும் தப்பித்து வரும் ஒரு தம்பதி பெருநகரின் புறக்கணிப்புகளிலும் அவமானங்களிலும் உதாசினங்களிலும் அவதியுற்று சோர்வடைந்து மீண்டும் அங்கிருந்து தப்பித்து ஊரை நோக்கிச் செல்வதற்கான பயணத்தோடு முடிவடைகிறது. நிலமற்ற மனிதன் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கென துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். அவனது வாழ்வு ஒவ்வொரு நாளும் நிச்சயமற்றதாக இருக்கிறது. ஒரு சின்னஞ்சிறிய கருணையை, சகமனிதன் என்கிற ஆறுதலை யாராவது காட்டமாட்டார்களா என்கிற ஏக்கம் நவ்ரங்கியாவிடமும் ரமாவிடமும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கதையின்போக்கில் தொடர்ந்து வரும் துன்பச்சித்தரிப்புகள் பார்வையாளனுக்கு உள்ளார்ந்த துயருருபவராக மாற்றும் ஒரு துல்லிய அனுபவத்தைத் தருகிறது. இந்தச் சமூகம் அவர்கள் இருவரிடமும் இன்னும் கொஞ்சம் அனுதாபத்துடன் இருந்திருக்கலாமே என நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.
கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கூலி உயர்வு கேட்பதை அனுமதிக்க முடியாத அளவிற்கு சாதிய இறுக்கம் இருக்கிறதென்றால் பெருநகரம் அதற்கு சற்றும் சளைத்ததல்ல. வேலை தேடி களைத்து உயிர் பிழைத்து ஊருக்குப் போனால் போதுமென்கிற நிலையில் இருக்கும் நவ்ரங்கியாவிடம் ஒருவன் வேலை தருகிறேன் என்கிறான். அவர்களது தோற்றத்தை வைத்து தோராயமாக கணித்தபின் ‘உனது சாதி என்னவெனக் கேட்கிறான்.’ நவ்ரங்கியா தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னதும் அடுத்தநாள் ஆற்றங்கரையில் காத்திருக்கச் சொல்கிறான். பரந்து விரிந்த கங்கை நதி. அதன் ஒரு கரையில் பசியோடும் ஏமாற்றங்களோடும் இங்கிருந்து தப்பிச் செல்வதான மார்க்கத்திற்கான தேடுதலோடும் காத்திருக்கும் நவ்ரங்கியா ரமா தம்பதியினர்.
முந்தைய தினம் சொன்னதுபோலவே அந்த ஆள் வருகிறான். அவன் தரும் வேலை அசாதாரணமானது. முப்பத்தியாறு பன்றிகளை ஆற்றின் இக்கரையிலிருந்து மறுகரைக்கு பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். படகில் பன்றிகளை ஏற்றினால் நிறைய செலவாகும் என்பதால் அந்த பரந்து விரிந்த ஆற்றை பன்றிகளோடு நீந்திதான் கடக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வேலையை அமைத்துத் தந்ததற்காக பன்றி ஒன்றுக்கு இருபது பைசா கமிஷன் வேறு. நவ்ரங்கியா ஒப்புக்கொள்கிறான். அவனும் அவனது மனைவியுமாகச் சேர்ந்து அந்த முப்பத்தியாறு பன்றிகளோடு கங்கை நதியை நீந்திக் கடக்கும் அந்தத் தருணங்கள் இந்திய சினிமாவில் மிக அபூர்வமான தருணங்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பியோடி வந்த அந்த இருவரும் எத்தனை தூரங்களைக் கடந்திருக்கிறார்கள்? சமீன்தார்களின் வலையிலிருந்தும் பசியிலிருந்தும் கொல்கத்தாவின் புறக்கணிப்புகளிலிருந்தும் தப்பி இந்த பரந்த நதியை இப்போது கடந்தேயாக வேண்டுமென்கிற நிர்ப்பந்தம். மிகுந்தப் போராட்டத்திற்குப்பின் கரையேற்றினால் அது நதியின் இடைவழி. மிச்ச தூரத்தையும் பன்றிகளோடு அவர்கள் நீந்திக் கடக்கிறார்கள். உழைப்புக்கான கூலியைப் பெற்றுக்கொள்ளும் நவ்ரங்கியாவிடம் பன்றி முதலாளி இன்று இரவு அவனுக்குத் தங்க இடம் தருவதாகச் சொல்கிறான். எந்தப் பன்றிகளோடு ஆற்றை நீந்திக் கடந்தார்களோ அந்தப் பன்றிகள் வசிக்கும் தொழுவத்தில் பன்றிகளோடு பன்றிகளாய் ஒதுங்கிக் கொள்ள சகதியும் நசநசப்புமான ஒரு குடிசை. களைப்பும் அசதியும் மீறி சிறியதொரு நிம்மதி திரும்பிய அந்த தருணத்தில் ரமா தன் வயிற்றிலிருந்த சிசுவின் அசைவு நின்றுவிட்டதென அழுகிறாள். சில வருடங்களுக்குமுன் அவளது மூன்று வயது மகன் கிணற்றில் விழுந்து இறந்துபோன துயரத்திலிருந்தே மீளாதவளுக்கு இந்தக் குழந்தையும் தனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்கிற வேதனை. நவ்ரங்கியா அவளது வயிற்றில் தலைவைத்துக் கேட்க உள்ளே பன்றிக்குட்டியின் சத்தம் கேட்கிறது. மகிழ்ச்சியோடு குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையென அவன் சொலவதோடு முடிகிறது படம்.
கெளதம் கோஷ் அடிப்படையில் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதால் அவரது திரைப்படங்களில் காட்சிகள் ஓவியங்களுக்கு நெருக்கமான அழகியலோடும் ஒளியமைப்புகளோடும் துல்லியத்தோடும் இருக்கின்றன. அந்த அழகும் துல்லியமும் பார்வையாளர்களை மிக ஆழமாக பாதிக்கக் கூடியது. இந்தத் திரைப்படத்தில் கோஸின் கேமரா, தப்பியோடும் இருவரின் விரக்தியையும் தாங்கிக்கொள்ள முடியாத அவர்களின் சோர்வையும் படம்பிடிக்கிறது. மழை அழுத்தமான துயர்சாட்சியை இந்தத் திரைப்படம் முழுக்க அவர்களைத் தொடர்கிறது. குரோஷாவாவின் ரஷோமான் திரைப்படத்தில் காட்சிகளின் பின்னனியில் தொடரும் மழை பார்வையாளர்களுக்கும் இனம்புரியாததொரு மர்மத்தையும் அழுத்தத்தையும் தரும், இந்தத் திரைப்படத்திலும் அப்படியானதொரு அழுத்தத்தை நாம் உணரமுடியும். இயற்கை அவர்களது துயரத்தின் இன்னொரு பங்காளியாக இருக்கும் அதே சமயம் கருணையற்றதாகவும் இருக்கிறது.
இந்தத் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் ஏராளமான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் சிறப்பான கவனம் பெற்றதோடு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நஷ்ருதின் ஷாவிற்குப் பெற்றுக் கொடுத்தது. கெளதம் கோஷின் திரைமொழி குறியீடுகள் எதுவுமற்ற நேரடித்தன்மை கொண்டவை. வாழ்விற்கு நெருக்கமான தருணங்களைக் காட்சிப்படுத்துவதால் நடிகர்களின் உடல்மொழியில் ஏற்படும் கூடுதலான சின்ன சலனம் கூட காட்சியைப் பலவீனப்படுத்தக் கூடிய ஆபத்துண்டு. ஆனால் அவரது படங்களில் எந்த நடிகரையும் நாம் மிகையாகப் பார்க்கமுடியாது. அடிப்படையில் கெளதம் கோஷூமே நாடகங்களில் பங்காற்றியவர் என்பதால் அவர் தனது படங்களில் நடிகர்களிடம் மிகச்சிறப்பாக வேலை வாங்கக் கூடியவராய் இருந்திருக்கிறார்.
1984ம் வருடம் வெளியான இந்தத் திரைப்படம் உருவாக்கும் விவாதங்களும் கேள்விகளும் இன்றைக்கும் தேவையானதாகத்தான் இருக்கின்றன. தனித்தொகுதி என்பதற்காக பாப்பாபட்டியிலும் கீரிப்பட்டியிலும் பல வருடங்களாக தேர்தலை நடத்த முடியாமல் இருந்ததையும் நாம் கடந்துதான் வந்திருக்கிறோம். தலித் மக்களுக்கான கொடுமைகளும் நெருக்கடிகளும் புதிய வடிவங்களில் உருவானபடியேதான் இருக்கின்றன. கல்விதான் எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கக் கூடிய ஒரே ஆயுதமென சொல்லிக் கொள்ளலாம் தான், ஆனால் கல்விக் கூடங்களிலும் சாதியத்தின் ரேகைகள் அழுத்தமாக பரவத் துவங்கியிருக்கின்றன. கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா முழுவதிலும் உள்ள ஐஐடி களிலிருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் பாதியிலேயே வெளியேறி இருக்கிறார்கள். இதோ இன்றைக்கு நாங்குநேரியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாணவன் அவன் வயதையொத்த மூன்று ஆதிக்கசாதி மாணவர்களால் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளான். நாம் எழுதுகிற கதைகளும் உருவாக்குகிற சினிமாக்களும் ஏதாவதொரு வகையில் மக்களின் வாழ்வையும் பிரச்சனைகளையும் பேசவேண்டியதாய் இருப்பது முன்னைவிடவும் தற்போது அவசியமாகி இருக்கிறது.
Comentários