top of page
320675671_476473734595216_5097358247244236246_n_edited.jpg

"நான் துரோகங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன்"

லஷ்மி சரவணகுமார் மதுரை திருமங்கலத்தில் பிறந்தவர், வறுமை காரணமாக இளம் வயதில் சில வருடங்கள் ஆதரவற்ற சிறுவர்களுக்கான கிறிஸ்தவ விடுதியில் வளர்ந்தார்.  பைபிள் வாசிப்பிலிருந்து தனக்கான இலக்கிய ஆர்வம் பிறந்ததாகக் குறிப்பிடும் இவர்  தனது பதினைந்தாவது வயதில் கவிதைகளை எழுதத் துவங்கி இலக்கிய உலகிற்குள் வந்தார். குடும்பத்தில் நிகழ்ந்த துயர சம்பவங்களால் அவரது பள்ளிக் கல்வி தடைப்பட்டு,  வெவ்வேறு ஊர்களில் கூலிவேலைகளுக்கு அனுப்பப்பட்டார். குஜராத் மாநிலத்தில் சில மாதங்களும், லக்னோவில் சில மாதங்களும் கூலி வேலைகள் செய்தபின்  மதுரைக்குத் திரும்பி நூற்பாலைகளில் வேலைக்குச் செல்லத் துவங்கினார். முப்பதுக்கும் அதிகமான வேலைகளைச் செய்திருக்கும் அவரின் இளமைக் காலம் பெரும்பாலும் அலைச்சலிலேயே கழிந்தது.

புதியகாற்று இதழில் வெளியான எஸ்.திருநாவுக்கரசிற்கு இருபத்தைந்து வயதானபோது என்ற  அவரது முதல் சிறுகதை பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. அதைத் தொடர்ந்து மணல்வீடு இதழில் அவர் எழுதிய ‘இருள் , மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டு கெளபீகத்துணி’ என்ற அவரது இரண்டாவது சிறுகதை பெரியளவில் விவாதிக்கப்பட்டதோடு அவருக்கு தமிழ் புனைவுலகில் தனித்துவமான இடத்தை உருவாக்கித் தந்தது.

ஜி.நாகராஜன், ஆ.மாதவன், தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், வைக்கம் முகமது பஷீர், கு.அழகிரிசாமி,  தி.ஜானகிராமன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா இவர்களை முன்னோடியாகக் கொண்டு தொடர்ந்து புனைவுலகில் இயங்கிவரும் லஷ்மி சரவணகுமார் கடந்த பதினாறு வருடங்களில் எண்பது சிறுகதைகளையும் ஏழு நாவல்களையும் எழுதியுள்ளார்.  ஜூனியர் விகடனில் எண்பத்தைந்து வாரங்கள்  இவர் எழுதிய ரெண்டாம் ஆட்டம் என்னும் தொடர்கதை பெறும் வெற்றி பெற்றதோடு விரைவில் வெப் சீரிஸாகவும் வரவிருக்கிறது.  ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர் ஐரிஸ் மற்றும் வாக்குமூலம் என்ற இரண்டு குறுநாவல்களை கிண்டில் பிரதிகளாக வெளியுட்டுள்ளார்.   

2016 ம் வருடம் கானகன் என்ற நாவலுக்காக சாகித்ய அகதெமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்றவர் மெரினா போராட்டத்தில் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவளிக்கு விதமாய் தனது விருதை திரும்ப ஒப்படைத்தார். பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரது நாவல்களில் ஆய்வு செய்து எம் பி எல் ஆய்வு செய்துள்ளார்கள். மதுரை லேடி டோக் கல்லூரியிலும் திருவாரூர் கல்லூரியிலும் இவரது கானகன் நாவல் முதுகலை மாணவர்களுக்கு பாடமாக இருந்துள்ளது. கானகன் நாவல் the huntsman என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  

இலக்கியச் சிந்தனை விருது, எழுத்தாளர் சுஜாதா விருது, ப.சிங்காரம் நினைவு விருது, ஆனந்த விகடன் விருது, த.மு.எ.க.ச விருது, நெய்வேலி புத்தகக் கண்காட்சி விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

இருபத்தைந்து வயதிலிருந்து முழுநேர எழுத்தாளராக இயங்கி வரும் லஷ்மி சரவணகுமார் தமிழ் சினிமாவில் இயக்குநர் வசந்தபாலனிடம் அரவான் மற்றும் காவியத் தலைவன் போன்ற படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார். 2 டி தயாரிப்பில் வெளியான பொன் மகள் வந்தாள், அறிமுக இயக்குநரின் நதி, இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படங்களில் வசனகர்த்தாவகவும் பணிபுரிந்திருக்கிறார். லஷ்மி சரவணகுமார் இயக்கிய மயானகாண்டம் என்ற குறும்படம் சில சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்றது. அவரது கதை வசனத்தில் உருவான மகவு என்ற குறும்படம் பிஹைண்ட் வுட்ஸ் தளத்தில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. 

கடந்தகாலத்தின் துயரங்கள் தோல்விகள் அவ்வளவையும் கடந்து வாழ்வின் மீதான நம்பிக்கையைப் பற்றிக்கொள்ள இலக்கியம் மட்டுமே துணையாய் இருக்கிறதென லஷ்மி சரவணகுமார் குறிப்பிடுகிறார். 2014 ம் வருடம் தனது வாசகியான கார்கியைத் திருமணம் செய்துகொண்டார்.

bottom of page