
எனது இருபத்தி மூன்றாவது வயதில் முதல்முறையாக குடிக்கப் பழகினேன். இன்னும் சில மாதங்களில் நாற்பது வயதைத் தொடுகிறவன் என்கிற அடிப்படையில் பதினேழு வருடங்களாக மதுவருந்தி வருகிறேன்… தினம் தோறும் மொடாக்குடி குடிப்பவனல்ல, வாரத்திற்கு இரண்டுமுறை மட்டுமே குடிப்பது வழக்கம். குடிக்கத் துவங்கிய வயதில் நண்பர்கள் வாங்கிக் குடுத்தாலன்றி குடிப்பதில்லை என்பதால் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே குடிக்க வாய்க்கும். ஆனால் அந்த நாட்களில் இவ்வளவுதான் குடிப்பதென்ற அளவில்லை. நான் சம்பாதிக்கத் துவங்கியபின் மது எடுத்துக்கொள்ளும் அளவும் அதிகரித்தது. முக்கியமாக இலக்கிய நண்பர்களுடனான சந்திப்புகள் மதுவின்றி ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.
கடந்த இரண்டு வருடங்களாகத்தான் குடியின் அளவை படிப்படியாகக் குறைத்து ஒரு கட்டுக்குள் வைத்துள்ளேன்… திரும்பிப் பார்க்கையில் மதுவருந்திய தருணங்களில் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளேன், ஆனால் இந்தப் பதினேழு வருடங்களில் குடியின் காரணமாக நான் இழந்தவையே ஏராளம். முதலாவதாக உடல்நிலை. அளவாக குடித்தாலும் பதினேழு வருடங்கள் என்பது நீண்டகாலம் தானே… மனிதனுக்கு கிடைத்த பெரும் வரம் உடல்…. ஆனால் அதற்கு எந்தவிதத்திலும் நன்றியுணர்வோடு இல்லாதது எத்தனை பெரிய குற்றம்?
நல்ல கலைஞர்கள் குடிகாரர்களாகத்தான் இருப்பார்கள் என்றொரு போலியான நம்பிக்கை தமிழ் சூழலில் நீண்ட காலமாகவே உலவி வருகிறது. அது பொய் மட்டுமல்ல, அயோக்கியத்தனுமும் கூட. எந்தவொரு கலைஞனும் மதுவினால் தூண்டப்படுவதில்லை. ஒரு கலைஞன் அவன் எதிர்கொள்ளும் முரண்களாலும் வலிகளாலும் மட்டுமே தூண்டப்படுகிறான். மொழியே பெரும் போதை என்றானபின் அதைத் தூண்ட எதற்கு இன்னொரு போதை? ஒரு வகையில் பார்த்தால் பெரும் கலைஞர்களாக வாழ்ந்திருக்க வேண்டியவர்கள் குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்து மறைந்ததற்கு குடியும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
தமிழ் இலக்கியவாதிகளில் பெரும்பான்மையானவர்களுடன் குடியமர்வுகளில் இருந்திருக்கிறேன். சர்ச்சைகள் வம்பளப்புகள் பொறணிகள் கூடவே அவ்வப்போது சுருதியில் சேராத பழைய சினிமாப் பாடல்கள் இவற்றைத் தாண்டி அரிதிலும் அரிதாகவே அந்த அமர்வுகளில் இலக்கியம் உரையாடப்பட்டிருக்கிறது. ஒரு இளம் எழுத்தாளனுக்கு மூத்த இலக்கியவாதிகளுடன் மதுமேசையில் அமர்வது துவக்கத்தில் கிளர்ச்சியூட்டக் கூடிய ஒன்று. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் உரையாடவும் அதன் வழியாக நட்பை வளர்த்துக் கொள்ளவும் அதுவொரு வாய்ப்பாகத் தோன்றும்…
ஆனால் அப்படி குடி மேசைகளின் வழியாகவெல்லாம் இலக்கியம் கற்றுக்கொண்டுவிட முடியாது. எனக்கு அந்தக் கிளர்ச்சிதான் தொடர்ந்து மதுவருந்தச் செய்தது. பின் அதுவே பழக்கமானது. பின்னர் குடியைக் கொண்டாடுகிறேன் பேர்வழி என பொதுவெளியில் அதை ஒரு கொண்டாட்டமாக அறிவிக்கையில் புதிய நண்பர்கள் நிறையவே கிடைத்தார்கள்.
திருமணத்திற்குப்பின் குடியமர்வுகளுக்காக எங்கள் வீட்டில் நடந்த சந்திப்புகள் ஏராளமானவை. இலக்கியவாதிகள், வாசகர்கள், நண்பர்கள் என வாரயிறுதி நாட்கள் கட்டற்ற மகிழ்ச்சியோடு கழிந்ததை என்னை நீண்டகாலமாகத் தெரிந்த பலரும் அறிவர். ஆனால் அதனாலும் விளைந்த பயனென்று பார்த்தால் ஒன்றுமில்லை. குடிக்கும் சமயத்தில் கிடைக்கும் சில மணிநேர கிளர்ச்சியைத் தாண்டி போதை ஒரு மனிதனுக்கு துயரம் தான். முக்கியமாக கலைஞர்களுக்கு. ஏற்கனவே ஏராளமான குழப்பங்களோடு வாழ்கிறவன் குடிக்கப் பழகும்போது அதில் கிடைக்கும் இனம் புரியாத துணிச்சல் அவனை மீண்டும் மீண்டும் குடிக்கச் செய்கிறது. போதையின் வேளையில் நீளும் அந்த வினோத துணிச்சல் ஒருவனை எல்லாவிதமான கிறுக்குத்தனங்களையும் செய்ய வைக்கையில்தான் அவன் எழுத்தை விடவும் சர்ச்சைகளால் அறியப்படத் துவங்குகிறான்.
நான் முன்பே குறிப்பிட்டதைப் போல் இலக்கியவாதிகளுடன் குடியமர்வுகள் எந்தவிதமான ஞானத்தையும் தருவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, குடி வேளையில் நமக்குள் எழும் குருட்டு துணிச்சல் காரணமாக நாம் இழப்பது அதிகம். எல்லோருடனும் பொதுவெளியில் மல்லுக்கட்டுவதை கலகம் என நாமறிந்த எழுத்தாளர்களில் சிலர் நமக்கு பழக்கிவிடுவார்கள். கலகத்திற்கும் கிறுக்குத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பொதுவெளியில் சண்டையிட்டதன் மூலமாக நான் பகைத்துக்கொண்டவர்கள் ஏராளம். போதையின் வழியான துணிச்சல் அதன் நீட்சியாய் என்ன செய்கிறோமென்கிற பிரக்ஞை இல்லாமல் யாரிடமாவது வார்த்தைகளை விட்டு பல சமயங்களில் முந்தைய தினம் என்ன பேசினோம் என்பதையே மறந்துவிடுவோம். நாம் என்ன செய்திருக்கிறோம் என்ன இழந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளவே நீண்டநாட்களாகிவிடும்.
இன்றைக்குத் திரும்பி பார்க்கையில் எனக்கு நெருக்கமாக இருந்த பல நண்பர்களை இழந்ததற்கு போதை மட்டுமே காரணமாக இருந்திருக்கிறது. இன்னொரு வகையில் இத்தனை வருடங்கள் நான் தொடர்ந்து எழுதியும் எனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியாமல் போனதற்கு பொதுவெளியில் என்னைக் குறித்து கட்டமைக்கப்பட்ட பிம்பம் மிக முக்கியமான காரணம். அப்படியானதொரு பிம்பம் நாம் மேற்குறிப்பிட்ட காரணங்களால் மட்டுமே உருவானது என்பது நிதர்சனம்.
எழுத்து ஒருவனுக்கு வசப்படும்போது அவன் கொண்டாட்டத்தை விட கட்டுப்பாடுகளையே பிரதானமாகக் கைக்கொள்ள வேண்டுமென இப்பொழுது உறுதியாக நம்புகிறேன். குடி உடல் அளவிலும் மனதளவிலும் ஒருவரை கடுமையாக பலவீனப்படுத்துகிறது.
எழுதுகிறவனுக்கு அசாத்தியமான உடல் வலிமையும் மன வலிமையும் வேண்டும். குடி அதிகமாகும் போது வலு குறைகிறது, வலு குறையும்போது சிந்தனையும் குறைகிறது. இதுதான் யதார்த்தம். உங்களால் ஒன்றை தெளிவாகச் சிந்திக்க முடிந்தால்தான் தெளிவாக எழுதமுடியும். குடி உங்கள் சிந்தனையை பெருமளவில் பாதிக்கிறது.
மலைகள், காடுகள் என சுற்றித்திரிந்த என்னால் இப்பொழுது மலையேற முடியவில்லை, ஒரு நாளைக்கு நாற்பது பக்கங்கள் வரை எழுதியிருக்கிறேன். ஆனால் இன்று அப்படி எழுதும் வலு இல்லை. எனக்கே தெரியாமல் என்னுடலை சிதைத்திருக்கிறேன் என்பது இப்பொழுது புரிந்திருக்கிறது.
எழுதுவதுதான் இந்த வாழ்க்கையில் எல்லாவற்றிலும் பிரதானம் என்கிற உணர்வு எழுதுவதைக் குறைத்திருந்த சில மாதங்களில் அழுத்தமாக உருவானபின் உடலை சரி செய்ய விரும்புகிறேன். மதுவை முற்றாக கைவிடமுடியாமல் போனாலும் பெருமளவில் குறைக்கத் துவங்கியிருக்கிறேன். ஆனால் உடல் அப்படி ஒன்றும் நம் வசத்திற்கு வருவதில்லைதானே… குடியை நிறுத்திவிடலாம், குடியினால் உடலுக்கு நேர்ந்த கேடுகளிலிருந்து உடலையும் மீட்டுவிடலாம். ஆனால் அதிகம் குடித்த நாட்களில் மற்றவர்களோடு உருவான பிணக்குகளை என்ன செய்வது? ஒரு எழுத்தாளன் தனது ஆற்றலை எழுதுவதிலும் சிந்திப்பதிலும் மட்டுமே செலவழிக்க வேண்டுமே தவிர சர்ச்சைகளிலும் கலகத்திலும் அல்ல. சர்ச்சைகள் என்பவை அந்தந்த நேரத்து கிளர்ச்சிகள் அதனால் நீங்கள் இழப்பவை அதிகம்.
குடிப்பழக்கத்தைக் குறித்த பெருமிதங்களை யார் சொன்னாலும் ஏற்காதீர்கள். மகிழ்ச்சிக்காக அல்லது ஓய்வுக்காக என்றாவது ஒருநாள் மது எடுத்துக்கொள்வது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால் அதனைப் பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். சினிமாவும் ஊடகமும் குடியினைக் குறித்தப் பெருமிதங்களை மிதமிஞ்சிய அளவில் பகிர்ந்ததின் விளைவாய் தமிழ் சமூகத்தின் பெரும் நோயாய் குடி மாறியிருக்கிறது. மது அருந்துவது சாகசமோ சாதனையோ அல்ல, இன்றைக்கு பள்ளிச் சிறுவர்கள் கூட மதுவருந்துவதையும் போதைப் பொருட்கள் உபயோகப்படுத்துவதையும் பார்க்கிறபோது அடுத்தத் தலைமுறையை நினைத்து அச்சமாக உள்ளது. தெளிந்த சிந்தனையில்லாத ஒரு சமூகத்தில் குற்றங்கள் மட்டுமே அதிகரிக்கும்.
நான் துவங்கிய இடத்திற்கு மீண்டும் வருகிறேன். ஒரு கலைஞனின் கடமை தொடர்ந்து சிந்திப்பதும் தனது சிந்தனைகளை சமூகத்துடன் பகிர்ந்துகொள்வதும் தான்.
போதையின் ஆபத்துகளை வேறு யாரையும் விட கலை செயல்பாடுகளில் உள்ளவர்கள் தெளிவாக மற்றவர்களுக்கு புரியவைக்க முடியும். பொதுவெளியில் போதையை குளோரிஃபை செய்வதை முற்றாக தவிர்த்துவிட்டு அதன் தீமைகளை எழுத வேண்டிய காலமிது. இல்லாது போனால் சிந்திக்கத் திறனற்ற ஒரு எதிர்காலத் தலைமுறையிடம் இந்தச் சமூகம் சிக்கி சீரழிந்து போகும்.