top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கொமோரா – நாவல் விமர்சன உரை. ( சிறில் அலெக்ஸ்)



உரை – லக்ஷ்மி சரவணக்குமார் படிக விழா – 5 பிப்ரவரி 2023

லக்ஷ்மி சரவணக்குமாரை நான் அண்மையில்தான் சந்தித்தேன். அதற்கு முன் அவர் பெயரைக் கெள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அதிகம் வாசித்ததில்லை. ஒரு இளம் எழுத்தாளர் 15வருடங்கள் தொடர்ந்து எழுதி, குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை ஆற்றி, அங்கீகாரங்களையும் பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு. அதை முன்னெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் மகளுக்கு இன்று 15வது பிறந்தனாள் எனவே இந்த வளர்ச்சியை என்னால் கண்முன்னே அளந்து பார்க்க முடிகிறது.


ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை குறித்து கவலைப்படுகிறது. எழுத்தாளர்களும் அப்படித்தான். ஆனால் அடுத்த தலைமுறை வராமல் போய்விடுவதில்லை. இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் இந்த மேடையில் அழைக்கப்பட்டிருப்பது ஒருவகையில் ஒரு பிரகடனமே. ஆனாலும் அடுத்த தலைமுறை குறித்த ஒரு கவலை இல்லாமல் இல்லை. இந்தத் தலைமுறையின் தமிழ் எழுத்தில் தவிர்கமுடியாத ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ள லக்ஷ்மி சரவணகுமாருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.


நண்பர்களே, அண்மையில் நான் வாசித்த இரு நாவல்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டை எனக்கு நியாபகப்படுத்தின. ஒன்று கொமோரா இன்னொன்று நொய்யல். கொமோராவின் தலைப்பும் அதன் சில பகுதிகளும் நேரடியாக விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டவை. கொமோரா பைபிளின் புகழ்பெற்ற சோதோம் கொமோரா நகரங்களின் பேரழிவு குறித்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

நொய்யல் படிக்கையில் அதன் கதையமைப்பு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டை நியாபகப்படுத்தியது. இந்தியத் தொன்மங்கள் வழியேயும், தொன்மத்தன்மையுடனும் எழுதப்பட்டிருக்கும் நொய்யலையும் பழைய ஏற்பாட்டையும் ஒப்பிட்டால் அவை வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் எதிர்காலத்திற்கு மனிதன் விட்டுச் சென்ற எச்சரிக்கைகளை நமக்குச் சொல்வதாய் அமைந்திருப்பதை உணர முடியும்.


சோதோம் கொமோரா பழைய ஏற்பாட்டில் கடவுளால் அழிக்கப்பட்ட இரு நகரங்கள். பழைய ஏற்பாட்டில், முதலில், உலகில் பாவம் மிகுந்ததால் வகடவுள் பிரளயத்தை அல்லது வெள்ளப்பெருக்கை உண்டாக்கி உலகை அழிக்கிறார். இது நோவாவின் காலம். பின்னர் பாவம் மிகுந்த சோதோம் கொமோரா நகரங்களை நெருப்பினாலும் கந்தகப்பொழிவினாலும் அழிக்கிறார்.


இக்கதைகள் வரலாற்றில் வெண்கலக் காலத்தின் முடிவுகளில் அழிந்துபோன நகரப்பகுதிகளைக்குறித்த பிற்கால கதைகளாக இருக்கக்கூடும் எனும் யூகங்கள் உள்ளன. நில நடுக்கத்தில் பூமியிலிருந்து லாவாவும் சல்பர் அல்லது கந்தகமும் வெளிவந்து அழிந்துபோன நகரங்கள் குறித்த கதையாகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது. இயற்கைப் பேரழிவுகளை அக்கால இலக்கியம் இறைவனின் கோபத்தினால் நடப்பவை என குறிப்பிடுவது உலக அளவில் பொதுவானது. இன்றும் இத்தகைய நோக்குகள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.


அப்படிப் பேரழிவைச் சந்திக்கும்படி சோதோம் கொமோரா மக்கள் செய்த பாவங்கள் என்ன? பரவலாக நம்பப்படுவது அவர்கள் காமக்களியாட்டங்களில் குறிப்பாக தற்பாலினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களாக இருந்ததார்கள் என்று. ஸாடமி என இவை குறிப்பிடப்படுவது சோதோம் நகரின் பெயரைக் கொண்டுதான். கொமோரா நாவலும் தற்பாலின உறவைச் சொல்கிறது, மைய ஓட்டத்தில் அதுவும் ஒரு பகுதியாகவே இருக்கிறது. ஆனால் அது நாவலின் மையம் அல்ல.


சோதோம் கொமோரா குறித்து எசெக்கியேல் புத்தகம் மேலும் சில தகவல்களைத் தருகிறது.


எசெக்கியேல்: உன் தங்கை (இஸ்ராயேலின்) சோதோமின் குற்றங்கள் இவையே: இறுமாப்பு, உணவார்வம், சோம்பல், இத்தனையும் அவளிடமும் அவள் புதல்வியரிடமும் இருந்தன. ஏழை, எளியோரின் கைகளை அவள் வலுப்படுத்தவில்லை. இவர்கள் செருக்குடையவராய் என் முன்னிலையில் அருவருப்பானவற்றைச் செய்தனர். ஆகவே நான் அவர்களைப் புறக்கணித்து விட்டேன். இதை நீ அறிவாயன்றோ?

இதில் ஒருபாலினச் சேர்க்கை மட்டுமல்லாமல் முழு சித்திரம் கிடைக்கிறது. இக்காலகட்டத்தில் சோதோம் கொமோரா வளம் பெற்று கேளிக்கைகளில், ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டு இருந்திருக்கலாம்.


கி.பி 1200 வாக்கில் வெண்கலக் காலம் முடிகையில் பெரிய நகரங்கள் அழிவைச் சந்தித்தன, எகிப்துபோன்ற பேரரசுக்கள் வீழ்ந்தன பேபேல் கோபுரத்தின் கதையும் இப்படி பெரிய நகரங்களில் பல கலாச்சாரங்களும் குறிப்பாக பல மொழிகள் வந்து சேர்ந்ததால் உருவான குழப்பங்களின் வழியே அழிந்தது அல்லது பிளந்து பலவாகியது என்பதைப்போன்ற கதை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பாபிலோனில் அப்படி ஒரு வானளாவிய கட்டிடம் உண்மையிலேயே இருந்திருக்கிறது. இன்றைய காலகட்டம் மொழிகளின் பேபேலாக அல்லாமல் கருத்துக்களின் பேபேலாக இருக்கிறதை நான் உணர்கிறேன்.


ஒரு மானுடவியல் கோணத்தில் பழைய ஏற்பாடு வரலாற்றை, அல்லது வரலாற்று மனிதனின் அனுபவத்தை கடவுளுக்கும் மனித இனத்துக்குமான உறவாக எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு என்பதை நாம் உணர முடியும். பல புராணங்களும் தொன்மங்களும் இத்தகைய நோக்கில் படிக்கப்படும் சாத்தியம் உள்ளவையே என்பதை நாம் அறிவோம். டி.டி கொசம்பி தொன்மத்திலிருந்து வரலாற்றை எழுதியது ஒரு உதாரணம்.


பழைய ஏற்பாட்டில் யூதர்கள், கடவுளுக்கு கீழ்ப்படிந்து கடவுளின் மக்களாய் இருக்கையில் அவர்கள் வாழ்க்கை சிறந்திருப்பதையும் கடவுளின் கட்டளைகளை மீறுகையில் அவர்கள் வீழ்ச்சியடைவதையும் மேலும் கீழுமாய்ச் செல்லும் ஒரு அலைவரிசையைப் போல சித்தரிக்கிறது. அவர்களின் வீழ்ச்சிகள் எல்லாமே கடவுளின் தண்டனைகளாக உருவகிப்பக்கபடுகிறது. இப்படி தண்டித்தும் அழித்தும் மக்களை வளர்த்த அந்தக் கடவுள் புதிய ஏற்பாட்டில் இயேசுவால் தந்தை அல்லது ABBA என அழைக்கப்படுகிறார். இந்த அஃப்பா என்றால் தந்தை என்பதல்ல தந்தையே உனக்குக் கீழ்ப்படிகிறேன் என்று அர்த்தம்.





நொய்யல் மற்றும் கொமோரா இரு நாவல்களுமே ‘தந்தை’ என்கிற உறவை மையமாகக் கொண்டவை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் சரியான தந்தைமையை அவன் கண்டடையவில்லை என்றால் அவன் பாதுகாப்பற்ற, சமனிலையற்ற வாழ்க்கையை வாழும் சாத்தியம் அதிகம் என்பதை இவ்விரு நாவல்களும் முன்வைக்கின்றன.

மேற்கத்திய கலாச்சாரத்தின் பல பிரச்சனைகளில் இன்று முக்கியமான ஒன்றாக முன்வைக்கப்படுவது ‘பாய் கிரைசிஸ்’ என்பதாகும். வாரன் ஃபேரல் (Warren Farrell) என்பவர் இதுகுறித்து ஆராய்ந்து புத்தகமாக எழுதியுள்ளார்.


ஆண் பிள்ளைகள் தந்தை இன்றி வளர்க்கப்படுவதன் பின்விளைவுகள் இதில் முக்கியமான பிரச்சனையாக முன்வைக்கப்படுகிறது. இது மட்டும் பாய் கிரைஸிசுக்குக் காரணம் அல்ல பிற காரணங்களும் உள்ளன. உதாரணமாக ஆசிரியர் பணியில் பெண்களின் எண்ணிக்கை அதிக விகிதாச்சாரத்தில் உள்ளது என்பதும் ஒன்று.

தந்தை என்பது ஒரு ‘ரோல்’, ஒரு பொறுப்பு அதைத் தாயும் எடுத்துக்கொள்ள முடியும். வாழ்வில் தந்தையின் பாத்திரம் இல்லாத, தந்தையின் கண்காணிப்பு இல்லாத குழந்தைகள், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு சீரான வாழ்க்கை அமைவது அபூர்வமாக உள்ளது. பல குழந்தைகளும் கேடான வாழ்க்கைக்குள் தள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்த சில ஆய்வுத் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

  • சிறையில் இருக்கும் இளைஞர்களில் 85% பேர் தந்தையின்றி வளர்ந்தவர்கள்.

  • தந்தை இன்றி வளரும் இளம் பெண்கள் மத்தியில் பதின்ம வயதில் கர்ப்பம் தரிப்பது அதிக விகிதத்தில் உள்ளது அதேபோல அவர்கள் பிற ஆண்களால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள்.

  • வீட்டைவிட்டு ஓடிச்செல்லும் இளைஞர்களில் 90%பேர் தந்தை இல்லாது வளர்பவர்கள்

  • படிப்பை பாதியில் விடுபவர்களில் 71% பேர் தந்தையின்றி வளர்பவர்கள்.

  • எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை இன்றி வளரும் இளைஞர்களின் ஆயுட்காலம் சராசரியைவிட 4 ஆண்டுகள் குறைவு. இது உடல்ரீதியாகவே பாதிப்பை உருவாக்கும் ஒரு விஷயமாக உள்ளது.

அமெரிக்காவில் பள்ளிகளில் கொடிய மாஸ் ஷூட்டிங்க் செய்தவர்கள் 6 பேருக்கும் சரியான தந்தை உறவு அமையவில்லை எனக் கண்டுபிடித்துள்ளார்கள்.

மேல்சொன்ன எல்லாம் நம் கலாச்சாரத்தில் இல்லை என நாம் எளிதில் கடந்துசெல்ல முடியும். உண்மை அதற்கு மாறாக உள்ளது. இன்று பள்ளியில் நிகழும் வன்முறைகள், போதைப்பொருள் ஆபத்து, இளவயது காமக் குற்றங்கள், காமக் குழப்பங்கள் போன்றவை ஒரு பெரும் நோயின் அறிகுறிகளாய் இருப்பதாகக் காண முடியும். குறுங் குடும்பங்கள், விவாகரத்துக்களில் உடையும் குடும்பங்கள், பொருள் ஈட்டச் செல்லும் தந்தைகளின் குடும்பங்கள் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம். உலகின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு கலாச்சாரம் ஒளியின் வேகத்தில் வந்தடைந்துகொண்டிருக்கிறது. அங்கு என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறதோ அவையெல்லாம் நம்மை நோக்கி அதே வேகத்தில் வந்து ஸெர்கின்றன.

கொமோரா ஒரு பாய் கிரைஸிசின் கதை. தந்தை இருந்தும் இல்லாமல் வளரும் ஒரு குழந்தையின் கதையை நேரடியாகவே சொல்கிறது கொமோரா.

வாழ்வில் பிடிப்பற்ற ஒரு தந்தை. தன் போக்கின்படி எதைவேண்டுமானாலும் செய்யும் தந்தை. குடும்பத்தை மதிக்காத தந்தை, ஒழுக்கமற்ற தந்தை. அவரால் தன் வாழ்க்கை நொறுங்கிப்போக மகன் தந்தையைக் கொல்ல முடிவெடுப்பது கதையின் முக்கிய ஓட்டம். படிப்படியாக கதிரின் வாழ்க்கையின் பல கட்டங்களில் அவன் எதிர்கொள்ளும் கொடிய சவால்களை லக்ஷ்மி தொடர்ந்து காட்சிகளாகக் காட்டிக்கொண்டு வருகிறார்.

மிக நுட்பமாக லக்ஷ்மி சரவணக்குமார் இந்த பிரச்சனையை அணுகியிருக்கிறார். உதாரணமாய் நாயகன் அல்லது எதிர் நாயகன் கதிர் சிறுவனாய் ஹாஸ்டலில் சேர்க்கப்படுவதற்கு மூன்று நிகழ்வுகளைக் காரணமாகச் சொல்கிறார். அவை நாடகத் தன்மையுடன் சொல்லப்பட்டாலும் அதன் உள்ளுறை நுட்பம் தந்தை இல்லாத குழந்தை ஒன்றின் அதீத நடவடிக்கைகளைக் காட்டுவதில் உள்ளது எனலாம். நாவல் முழுக்க இந்த நாடகத்தன்மையும் உள்ளுறையும் நுட்பமும் இருந்துகொண்டே இருக்கிறது.

‘பாய் கிரைஸிசின்’ கூறுகள் பலவற்றையும் அவர் இக்கதைக்குள் கொண்டுவந்துள்ளது மிக ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகும். உதாரணமாக கதிர் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறான், படிப்பை கைவிடுகிறான், வன்புணர முயல்கிறான், கஞ்சா கடத்துகிறான், பாலியல் தொழில் செய்கிறான், பாலியல் நாட்டத்தில் வாழ்வைக் கடத்துகிறான், கொலைவரை செல்கிறான்.


எப்படி இவரால் இப்படி சரியாக இதை கணிக்க முடிகிறது? அதைவிட நம்மால் இக்கதையை வாசிக்கும்போது அதன் நாடகத் தன்மையைத் தாண்டியும் அதிலுள்ள உண்மையைக் உள்வாங்க முடிகிறது? ஏனென்றால் அது ஒரு ஆர்க்கிட்டைப்பாக நம் ஆழ்மனதில் பதிந்துள்ளது. ஒரு சமூக உருவகமாக அல்லது சமூக மாதிரியாக அது உருவாகிவிட்டது.


தந்தையின்றி வளரும் பிள்ளைகள் சராசரி சந்தோஷங்களைக்கொண்ட ஒரு நார்மலான வாழ்க்கையை வாழ்வது அரிது என்பது ஒரு ஆழ்படிமமாக நம்முள் இருக்கின்றது.

ஒருவகையில் இந்த நாவலின் குறைகளில் ஒன்றாகக்கூட இதைச் சொல்லலாம். ஒரு ஆர்க்கிட்டைப்பின் அம்சங்களை ஒவ்வொன்றாக டிக் செய்வதைப்போல இச்சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் லக்ஷ்மி இதை விறுவிறுப்பான மொழி நடையிலும், பல இடங்களில் அதை நேரடியாகவும் அப்பட்டமாகவும் சொல்வதில் நம் கவனத்தை ஈர்க்கிறார். அந்த நேரடித்தன்மையையும் அப்பட்டமான எழுத்தையும் விரும்புபவராக நீங்கள் இருந்தால் இன்னாவல் கூடுதலாகக் கவரும்.

கொமோராவின் இன்னொரு கதையோட்டம் கம்போடியாவின் கெமெர் ரூஜ்ஷ் புரட்சியை ஒட்டிய படுகொலைகள் குறித்தது. ஒரு சீரான அதிர்ச்சியூட்டும் கதையோட்டம் இதில் உள்ளது. தமிழில் போரின் நேரடி கொடுமைகளை காட்சிப்படுத்தும் ஒரு முக்கியமான எழுத்தாக இதை நான் பார்க்கிறேன். ஒரு திரைப்படத்தின் காட்சிகளைப்போல விரியும் இந்தப் பகுதி அழுத்தமாக எழுதப்பட்டுள்ளது. திகிலை, உயிர் பயத்தை நமக்கு கடத்திவிடுகிறார். லக்ஷ்மி.

போர் உடலை மட்டுமல்ல மனதையும் சிதைக்கிறது என்பதையும், அதன் தாக்கம் தலைமுறை தாண்டியும் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம். அதை ஒரு தனிமனிதத் தளத்தில் இந்த நாவல் சொல்வதாகக் கொள்ளலாம். கம்போடிய கெமர் ரூஜ்ஷ் 1975ல் நிகழ்ந்த ஒரு கொடூரம். ஒரு சிறைச்சாலையில் மட்டுமே 17,000ம்பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். எஸ்21 எனும் சிறைச்சாலையில் கூட்டிச்செல்லப்பட்டவர்களில் 99.9% பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். The tyranny of ideology. கருத்தியலின் கொடுங்க்கோன்மை என்பது ஒரு முக்கியமான மானுட அவலம். இதுகுறித்த எச்சரிக்கைகளும் நமக்கு வரலாற்றிலிருந்தும், தொன்மங்களிலிருந்தும் கிடைக்கின்றன. தன் பக்தியின் மிகுதியால் வரம் பெற்று கொடூரமானவர்களின் கதைகள் நமக்குத் தெரியும், அன்பை போதித்த இயேசுவைப் பின்பற்றியவர்கள் செய்த கொடுமைகள் வரலாற்றில் உள்ளன, விடுதலை, தேசியம், இனத்தூய்மைவாதம் போன்ற ஐடியல்கள் பெரும் கொடுங்க்கோன்மைக்கு வழிவகுத்துள்ளன.

லக்ஷ்மி கெமர் ரூஜின் விடுதலைப் பாடல்களையும் போல்பாட்டின் சொற்களையும் இன்னாவலில் சேர்த்துள்ளார். எத்தனை உயர்வான கனவுகள் எத்தனைக் கீழான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன?


இந்த நாவலை வகைப்படுத்தவேண்டுமென்றால் அதை ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் என்று வகைப்படுத்தலாம். கதிரின் வாழ்க்கையும், போரில் சிதையும் அழகர்சாமியின் குடும்பத்தின் கதையும் நிகழ்வுகளாக மட்டுமல்லாமல் மனவோட்டங்களாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு மனவியல் நாவலாக இதை வகைப்படுத்தலாம். ஆனால் லக்ஷ்மி இதை தேவைக்கும் அதிகமாகவே செய்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அதாவது இந்த மனவோட்டங்க்களில் ஆசிரியரின் குரல் பல இடங்களில் உரத்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றில் பல நல்ல கருத்துக்களும், நல்ல வரிகளும் உள்ளன என்றாலும் சற்று அதிகமாக அவை இடம்பெற்றுள்ளன என்பது வாசிப்புச் சுவையை சற்று குறைக்கிறது.


பல பைபிள் வசனங்களும் இந்த நாவலில் நேரடியாகக் கையாளப்பட்டுள்ளன. சோதோம் கொமோராவின் அழிப்பு, சபையுரையாளனின் பாடல் போன்றவை நினைவில் உள்ளன. அண்மையில் இரத்தசாட்சி படத்தில், இயேசுவின் இராவுணவு போன்ற காட்சியின் முடிவில் அப்புவின் அம்மா அவனுக்கு நெற்றியில் சிலுவை வரைவார். சிலுவை அடையாளம் மேலிருந்து கீழாகத் துவங்கித்தான் வரையப்படும். ஆனால் இதில் அவர் இடமிருந்து வலமாகத் துவங்கி வரைவார். இது ஒரு சிறிய ஆப்சர்வேஷந்தான்.


அதேபோல கொமோராவில் ஒரு ஆப்சர்வேஷன். எக்லேஸ்டியாசெஸ் என அழைக்கப்படும் ‘சபை உரையாளர்’ புத்தகம் கிறித்துவத்துக்குள்ளேயே ஒரு விவாதத்துக்குரிய புத்தகம். முதலில் அது Protestant பைபிளில் சேர்க்கப்படாதது. கதிர் செல்லும் விடுதி ஒரு கத்தோலிக்க விடுதியாக தெரியவில்லை. எனவே இந்தப் பகுதியை அவர்கள் படிக்க வாய்ப்பு குறைவு. இரண்டாவதாக சபை உரையாளர் புத்தகம் கிட்டத்தட்ட கீழை ஞானத்தின் பாணியில் அமைக்கப்பட்டுள்ள புத்தகம். உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதைப்போல அமைந்துள்ள அதன் பகுதிகள் பொதுவாக கத்தோலிக்க திருப்பலியில் வாசகங்களாக சேர்க்கப்படுவதில்லை. ‘ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு’. என்று துவங்குகிற வரிகள் மட்டுமே வாசிக்கப்படும். எனவே இந்த புத்தகம் மனப்பாடப் பகுதியாக ஒரு குழந்தைக்கு பரிந்துரைக்கப்படும் வாய்ப்பே இல்லை. ஒரு சிறிய ஆப்சர்வேஷந்தான்.


ஆனால் அவர் பைபிளின் நடையில் எழுதியுள்ள சாத்தானின் மனவெளிக்குறிப்புக்கள் வித்தியாசமான ஒரு பிரசெண்டேஷன். அதன் மொழியும் விவிலிய கூறுமுறையை ஒத்துள்ளது என்பது இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். விவிலியத்தின் இருவரிசை, டூ காலம், அமைப்பில் இது அச்சடிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தகுந்தது. இதிலிருந்து சில பகுதிகளை இங்கே வாசிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தன் தாயிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கும் நாளிலேயே தகப்பன்மார் எவரும் சாத்தானாகிறார்கள். அவர்களின் கீழ்மையினாலே நிகழும் எல்லா அழிவுகளும் பிள்ளைகளையும் கேடுகளை நோக்கி இழுத்துச் செல்கிறது. (கிட்டத்தட்ட நாவலின் கருவை சொல்லிவிடுகிற வரிகள்)

தன் தகப்பனை கடவுளென நம்பச் சொல்லும் சமூகத்தவனாகிய கதிர், பால்யத்தில் எதிர்கொண்ட துர்கனவுகள் அவ்வளவிற்கும் தகப்பனே காரணம் என்று நம்பின படியால் அவரை ஒரு நாளும் மரியாதைக்குரியவராய் நினைத்தானில்லை. பொறுப்பற்ற கணவன்மார்கள் குடும்பத்தை சீரழிக்கும் களைகள்.

பசியால் நிரம்பிய பகலும், பயத்தால் நிரம்பிய இரவுகளும் வாய்க்கப்பெற்ற விடுதிக் காலத்தில் வெளிச்சம்கூட பாதுகாப்பாய் இருந்ததில்லையென கர்த்தரிடத்தில் அவன் மன்றாடாத நாளில்லை.


எப்போதும் குற்றத்தின் நறுமணம் வீசும் அவர் அவனுக்கு- தந்ததெல்லாம் தன்னைப் போன்ற மனிதர்களின் சகவாசத்தைத்தான். (குற்றம் என்பது பாவம் என்று எழுதப்பட்டிருக்கலாம்)

அம்மா அவரின் இருப்பை பாதுகாப்பென நம்பினாள். மாட்டை விடவும் கடுமையாய் உழைக்கும் திராணியிலிருந்த அவளுக்கு ஆண் துணையை இழக்கும் திராணியில்லை.

அவர் வெளியேறும் நாட்களின் இரவுகளில் விளக்குகள் அணைக்கப்பட்ட சின்னஞ்ச்சிறிய வீட்டிற்குள் பின்னிரவில் அம்மா வெளி உலகத்திற்கு கேட்காதபடி அழுவதுண்டு. தனிமையின் எல்லா அவஸ்தைகளையும் கொப்பளிக்கும் அந்த அழுகுரலைக் கேட்க நேரும் ஒரு ஆண்மகன் ஒருபோதும் பெண் துணையை விரும்ப மாட்டான். (கதிர்தான் இதற்கு விதிவிலக்கு 🙂)


பெற்றோர் என்னும் வழியில் தன்னை அன்பு மிகுதியில் அவர்கள் ஒருபோதும் தீண்டியதில்லை என்னும் ஏக்கம் கதிருக்கு எப்போதும் உண்டு.

தந்தையைக் கொல்லுதல் பாவமென நீதிமொழிகள் வலியுறுத்தின. பாவங்கள் வழியாகவே பிறப்பு முழுமையடைகிறதென சமாதானம் செய்துகொண்டான். (குழப்பமான வரிகள் பிரகடனமாகவே சொல்லப்படுகின்றன)

மேலும் அவன் விளங்கிக்கொண்டது, பாவத்தை விதைக்கிற ஒருவன் அதையே அறுவடை செய்கிறான். சின்னதாய் விதைக்கும் யாவும் சிறிய விளைச்சலாகவும், பெரியதாய் விதைக்கிற யாவும் பெரியதாகவும் விளைகிறது.

அவர்கள் இரவுகளுக்கு அஞ்ச்சாதவர்களாகவும் பாவங்களுக்குப் பழகினவர்களாகவும் இருந்தவர்கள்.


துர்குணரும் பொலாத மனுஷனுமான …அவரின் சூழ்ச்சியால் … (பைபிள் மொழி)

அவன் வாழ்தலின் நீதியே தப்பிப்பிழைத்தல்தான் என்று மறுமொழி கூறுவான். (Survival justifies everything).

இப்படி இந்த சாத்தானின் மனவெளிக்குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது. இந்த அத்தியாயங்களில் கதிர் தன் தந்தையை வெறுப்பதற்கான அதுவும் கொலைசெய்யுமளவுக்கு வெறுப்பதற்கான நேரடி நிகழ்வுகளும் பதியப்பட்டுள்ளன. இந்த இடம் ஒரு குறிப்பிட்ட பாணியில், அதாவது விவிலிய மொழியில், கூறுமுறையில் எழுதப்பட்டுள்ளதால் கதையும் கருத்துக்களும் ஒன்றாய் சொல்லப்படுவது நம்மை உறுத்துவதுல்லை. ஆனால் பிற அத்தியாயங்களிலும் கதையும் கூடவே கருத்துக்களும் சொல்லப்படுவது நான் முன்பு குறீப்பிட்டதைப்போல சற்று அதிகமாக உள்ளது.

நாவலின் மிகப்பெரிய பலம் அதில் வரும் பல பாத்திரங்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதுதான். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி ஆளுமையுடன் உருவாக்கப்பட்டுள்ளனர். கதிரின் ஆளுமையில் அவர்கள் உருவாக்கும் தாக்கமும் சிறப்பாக சொல்லப்படுகிறது. காட்சிகளைக் கண்முன் கொண்டுவருவதைப்போல ஆளுமைகளை உணரச்செய்தது சிறப்பானதாய் இருந்தது. ரோஸ் டீச்சர், கதிரின் ஹாஸ்ட்டல் நண்பர்கள், துணிவியாபாரி, சாராய வியாபாரி மாரி, விஜி, மலர், சுதா, அந்த மூன்று பாலியல் தொழிலாளிகள், ஆண்ட்ரூ சாமி, கேப்டன் மகள் மகன், கம்போடிய ஹோட்டல் சமையல்காரர். எல்லோரையும் நம்மால் நினைவுகூர முடிகிறது. கதையில் அவர்களின் பங்கை நினைவுகூர முடிகிறது.

நிகழ்வுகள் நாடகத் தன்மையுடன் இருப்பது வாசிப்பை சுவையாக்கினாலும் ஒரு ஆழ்ந்த விசாரணைக்கு இடமில்லாமல் அந்த விறுவிறுப்பின் சுவையில் வாசகனை நிறுத்திவிடுகிறது. இதிலிருந்து இந்த நாவல் யாருக்காக எழுதப்பட்டது என்ற கேள்விக்குச் செல்லலாம் என நினைக்கிறேன்.


இந்த நாவல் பாய் கிரைசிஸ் குறித்த அறிதல் உள்ள ஒருவருக்கு அதன் ஆழத்தைச் சொல்கிறதா? அல்லது இதையெல்லாம் அறியாத ஒருவருக்கு அறிமுகம் செய்கிறதா? என்றால் அறிமுகம் செய்கிறது என்று சொல்லலாம். முன்பே குறிப்பிட்டதைப்போல அந்த ஆர்க்கிட்டைப்பை விட்டு விலகிச் செல்லவில்லை.

இந்த நாவல் இலக்கிய வாசகருக்கா அல்லது பொது வாசகருக்கா என்றால் இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்று சொல்லலாம். இதன் கதைக்களம் நிச்சயம் ஒரு நல்ல இலக்கிய படைப்பின் களம், கம்போடிய போர் பதட்டங்கள், நம்பும்படியாக உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், நான்லீனியர் யுக்திகள், சாத்தானின் மனவேளிக்குறிப்புக்கள் போன்ற புதுமைகள் இலக்கிய நயம் கொண்டவை.

அதே நேரம் பல நிகழ்வுகளும் வணிக இலக்கிய பாணியில் சொல்லப்பட்டுள்ளன, சினிமாக் காட்சிகளாக உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்லலாம். குறிப்பாக வாசிப்பின் சிற்றின்பம் சற்று தூக்கலாகவே உள்ளது. ஒரு கட்டத்தில் ‘பாருடா இந்தக் கதிர வாழ்க்கைய என்னமா எஞ்சாய் பண்ணுறான் என்று கேட்கத் தூண்டுகிறது. இல்லை அவன் மனம் சஞ்சலத்தில் உள்ளது என ஆசிரியர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.


லக்ஷ்மி மணிவண்ணன் இங்கும் செல்லாமல் அங்கும் செல்லாமல் நடுவில் நிற்பது அவரது தனித்துவமாகப் படுகிறது.

கொமோரா அழிக்கப்படுவதற்கு முன்பு ஆபிரகாம் கடவுளிடம் இறைஞ்சுகிறார். கெட்டவர்களோடு சேர்த்து நல்லவர்களையும் நீர் அழிக்கப்போகிறீரா என்கிறார். கடவுள் சொல்கிறார். 50 நல்லவர்கள் சோதோம் கொமோராவில் இருந்தால் அதை அழிக்கப்போவதில்லை என்கிறார். ஆபிரகாம் சற்று யோசித்துவிட்டு 45 என்கிறார். படிப்படியாகக் குறைந்து 10 பேர் இருந்தால் சோதோம் கொமோராவை அழிக்காமல் விடுவதாக கடவுள் வாக்களிக்கிறார்.


கதிரின் வாழ்க்கையில் எத்தனையோ நண்பர்கள் அவன்மீது அன்பு செலுத்துகிறார்கள், அவனை நம்புகிறார்கள், அவனைத் தூக்கி நிறுத்துகிறார்கள், காதலில் விழுகிறார்கள், காமத்தை அள்ளித் தருகிறார்கள் ஆனாலும் அவன் வாழ்க்கையில் இருக்கும் பெரும் இடைவெளியாக அப்பா நிறுத்தப்படுகிறார். ஆபிரகாமின் அளவு 10 ஆனால் வள்ளுவர் நல்லோர் ஒருவர் உளரேல் என்கிறார்.

தன்னை நேசிக்கும் ஒருவரின் பொருட்டாவது கதிர் தன் தந்தையை மன்னித்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அதற்கான அத்தனை வாய்ப்புகளும் அவனுக்கு இருந்தன. ஆனால் இது மன்னிப்பின் கதை அல்ல. கொடும் நகரத்தில் வாழும் ஒருவன் தனக்குக் கிடைத்த சிறு வாய்ப்பையும் பயன்படுத்தி அதிலிருந்து விடுபடுவதுதான் முதன்மையானது.


கதிர் கடைசியில் தன் தந்தையைக் குறித்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்போது, அதை உணரும்போது அவன் அதுவரை இருந்த ஒரு நரகத்திலிருந்து வேறொரு நரகத்துக்குச் சென்று சேர்கிறான்.

எதை விடுதலை என்று அவன் நினைத்தானோ அதுவே அவனைக் கட்டிப்போட்டுவிடுகிறது.

அவன் இனிமேல் நாம் பரிதாபம் கொள்ளும் கதிர் இல்லை, அவன் இனிமேல் ஒரு பாதிக்கப்பட்ட மனிதன் இல்லை, அவன்மேல் இனி காட்டப்படும் ஒவ்வொரு கரிசனையும் அவனைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கும்.

அவன் இனிமேல் ஒரு ஈரமற்ற, இதயமற்ற ஒரு குற்றவாளி மட்டுமே. லக்ஷ்மியின் வார்த்தைகளைப் போல சொல்வதானால்

‘மோசமான தந்தையைக் கொல்கிறவன் தன் தந்தையைவிட மோசமானவன்.

மன்னிக்கத் தெரியாதவன் மன்னிப்பைப் பெற தகுதியற்றவன்.

தன்மீது செலுத்தப்படும் அன்பை உணரத் தெரியாதவன் தன்னை அன்பு செய்யாதவர்களையும்விடக் கொடுமையானவன்

அவன் தண்ணீரில் இருந்துகொண்டே தண்ணீரின்றி தவிக்கும் மீனைப்போன்றவன், காற்றை சுவாசித்துக்கொண்டே நான் காற்றையே கண்டதில்லை என்கிறவன்.’

லக்ஷ்மி சிறப்பான ஒரு கதைக்களனை தேர்ந்தெடுத்து அதில் முப்பரிமாணம் கொண்ட பாத்திரங்களை உருவாக்கி, பதட்டமான மனப்போக்கின்வழியும், திடுக்கிடச்செய்யும் நாடகமான தருணங்கள் வழியேயும் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் நாவலை தந்துள்ளார்.

முடிவாக கொமோரா தந்தையால் அழிக்கப்பட்ட ஒரு மகனின் கதை. மகனால் அழிக்கப்பட்ட தந்தையின் கதை. இது இக்காலத்தின் கதை என்றாலும் ஒரு பழைய ஏற்பாட்டுக் கதைதான்.

லக்ஷ்மி ஒரு புதிய ஏற்பாட்டின் கதையை, மன்னிப்பின், அன்பின், மீட்பின் நாவலை எழுதவேண்டும் என்றும் அதற்கு கொல்கொதா என்று பெயரிடவேண்டும் அது கொமோராவின் இரண்டாம் பாகமாகக்கூட இருக்கலாம் எனும் கோரிக்கையுடன் வாழ்த்தி முடிக்கிறேன். நன்றி.


( சிறில் அலெக்ஸ் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது...)

19 views

Commenti


bottom of page