top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

தீபா ஜானகிராமனின் மறைமுகம்

’இலக்கியாசிரியனின் கடமை வாசகனை எட்டுவதல்ல, அதற்கு எதிர்மாறாக வாசகனின் கடமைதான் ஆசிரியனை எட்டிப்பிடிப்பது என்பதை வலியுறுத்த இன்று இலக்கிய விமரிசனம் உபயோகப்பட வேண்டும். இலக்கியாசிரியனொரு வாசகனையோ ஒரு லஷிய வாசகனையோ எண்ணிக்கொண்டு எழுதுவதில்லை. வாசகன் தான் தன் இலக்கிய தாகத்தில் நமக்கேற்ற ஆசிரியன் இவன் என்று தேடிக்கொண்டு இடைவிடாமல் ஓடவேண்டும்.

-       விமர்சனக்கலை ( கா.ந. சுப்ரமணியம் )

 

ஈராயிரத்திற்குப் பிறகான  எழுத்தாளர்களின் வருகையில் தமிழ்ச் சிறுகதை கண்ட முக்கியமான மாற்றங்களில் சில உண்டு. பழைய அறங்களின் மீதான சில நியாயமான விமர்சனங்களை உருவாக்கியதும்  எல்லாவற்றைக் குறித்தும் உரையாடலை வைக்கமுடியுமென்கிற சாத்தியத்தைத் தந்ததும் முக்கியமானது. தமிழ்ப் புனைவுலகில் கதையாக்கப்பட்ட பெண்கள் என்று எடுத்துக் கொண்டோமானால் ஆண்களின் புனைவுகளில் பதிவான பெண்கள், பெண்களின் புனைவுகள் பதிவான பெண்கள் என ஏதோவொரு  புள்ளியில் தனித்துக் அடையாளம் கொள்ள வேண்டியது அவசியமெனத் தோன்றுகிறது. பெண்களைக் குறித்து ஆண்களுக்கு இருக்கும் மிகையான கற்பனைகள், எதிர்பார்ப்புகள் எல்லாமும் சேர்ந்ததாகவே  பெரும்பாலான பெண் கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பெண் எங்கு பேசுவாள், எங்கு அமைதி காப்பாள் என்கிற நுட்பம் எவ்வளவு முயன்றாலும் ஒரு ஆண் எழுத்தாளரால் கண்டுணர முடியாதது. அவ்வாறு கண்டுணர்ந்ததாகவும் வலுவான சித்திரமொன்றை உருவாக்கி விட்டதாகவும் நிறைய எழுத்தாளர்கள் குறித்து நாம் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் அவையெல்லாம் ஆறுதல் மட்டுமே… பெண்ணின் மெளனத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்களால் அவர்களின் சொற்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்.


தீபாவின் கதைகளில் வரும் மனிதர்களும் இடங்களும் விலங்குகளும் நம்மிடம் ஒருவித அன்னியோன்யத்தை உணரவைக்கிறார்கள். பெரும்பாலான கதைகளும் பெண்களின் உலகைக் குறித்ததாகத்தான் இருக்கின்றன. ஆனால் இந்தப் பெண்களிடம் வெளிப்படும் நிதானமும் கூருணர்வும் சிறிய செயல்களைக் கூட அந்தக் கதாப்பாத்திரங்களைத் தனித்தன்மையானவையாய் மாற்றிவிடுகின்றன. வலுவான முரணும், வலுவான கதாப்பாத்திர உருவாக்கமும் சேரும்போதுதான்  நல்லதொரு சிறுகதை  பிறக்கிறது. புனைவுகளில் கதாப்பாத்திரங்களை உருவாக்குகையில் அந்தப் பாத்திரம் செய்யச் சாத்தியமில்லாத செயல்களை எல்லாம் செய்வதாக ஒரு சாகசத்தை நிகழ்த்தும்போது அது வாசிக்கிறவரிடமிருந்து விலகிவிடும்.  மாறாக செய்யச் சாத்தியமுள்ளச் செயல்களைச் செய்வதற்குக் கூட எத்தனை போராட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது என்கிற சிறிய இடர்களின் பொழுதுகளில் மனித மனம் கடக்கும் போராட்டத்தை பதிவு செய்யும்போது அந்தக் கதாப்பாத்திரத்தோடு  நமக்கு அழுத்தமான பிடிப்பு உருவாகிறது. 


இந்தப் பத்துக் கதைகளும் ஒன்று இன்னொன்றைப் போலில்லை, எல்லாக் கதைகளும் பெண்கள் குறித்ததாக இருப்பதால் ஒரு கதையில் வரும் பெண்ணின் சாயலைப்போல் இன்னொரு பெண்ணையும் வேறு கதைகளில் எதிர்கொள்ள நேரிடுமோ எனத் தேடினால் அதுவுமில்லை. கிராமம் நகரமென நிலம் மாறுவதைப் போல, வீதிகள் மாறுவதைப் போல இந்தப் பெண்களும் தனித்தவர்களாக இருக்கிறார்கள்.

தன்னைப் பிரிந்த பார்வையற்ற மனைவியின் மீதுள்ள ஏமாற்றத்திலும் ஆத்திரத்திலும் கணவன் தற்கொலை செய்துகொள்கிறான். எல்லோரது விரல்களும் அவனது மனைவியை நோக்கி நீள, காவல்துறை விசாரிக்கிறது. இந்தக் கதையின் துவக்கம் அழகாக எழுதப்பட்டுள்ளது. முதல் இரண்டு பாராக்களுக்குப்பின் அவள் போலிஸ் அதிகாரி இருக்கும் அறை நோக்கி நடக்கையில் ‘அவளுக்கு இந்த வீட்டின் அத்தனை பகுதியும் அத்துப்படியானவை’ என்ற குறிப்பின் வழியாகத்தான் அவள் பார்வையற்றவள் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். ஒரு கதாத்திரத்தைக் குறித்து எழுதுகிறவன் சொற்களில் விவரிக்காமல் அந்தக் கதாப்பாத்திரத்தின் செயல் வழியாகவும் மனவோட்டத்தின் வழியாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.  


ஓராயிரம் பார்வையிலே என்ற கதையில் அப்பா நீச்சல் கற்றுக்கொடுத்த ஆற்றங்கரையிலிருக்கும் மாடன் சிலைக்கு அப்பாவின் முகம் என்று மகள் உணரும் இடம் வருகிறது. மகள்களின் நினைவுகளிலிருக்கும் தந்தைகளுக்கான தோற்றங்கள் மகள்களால் மட்டுமே யோசிக்க முடிந்தவை.  வீட்டிலிருக்கும் பெரியவர்கள் இறந்த மனிதரைக் குறித்த நினைவுகளிலிருந்து வேகமாக விடுபட்டுக் கொண்டிருக்க ஒரு சிறுவன் மட்டும் இறந்த தாத்தா நாயாக வந்திருப்பதாகச் சொல்கிறான். முதலில் நம்ப மறுக்கும் அவனது அத்தை வாசலுக்கு வந்து அந்த நாயைக் கவனிக்கையில் அந்த நாயின் இருப்பு தந்தையை அச்சு அசலாக நினைவுபடுத்துவதாக இருப்பதைக் கவனிக்கிறாள்.  ஒரு புனைவில் இப்படியான தருணங்களை எழுதுகையில் மிகையுணர்ச்சியோடு கதாப்பாத்திரத்தின் உரையாடல்களையும் செயல்களையும் பதிவு செய்யாமலிருப்பது அவசியம். ஒரு கதையின் மீதான நம்பிக்கையின்மையை மிகையுணர்ச்சிகளே  உருவாக்குகின்றன.  இரண்டு வார்த்தைகளில் சொல்லிக் கடக்க வேண்டிய இடத்தில் அடுக்கடுக்காக வசனங்களைக் கொட்டினால் வாசகனை சலிப்பூட்டச் செய்துவிடும். இந்தக் கதையின் இறுதிப் பத்தியில் நாய்க்கு உப்புரொட்டி வாங்கச் செல்லும் சிறுவன் திரும்பி வருகையில் காணாமல் போன நாயைக் குறித்து அத்தையிடம் விசாரிக்கிறான். ‘அது போயிருச்சுடா…’ என சொல்லி நகரும் அத்தை அதற்கு முந்தைய கணத்தில் அந்த நாயில் இறந்துபோன தனது தந்தையின் இருப்பை உணர்ந்திருக்கிறாள்.  தந்தை என்பவர் இனி நினைவுகளுக்கு அப்பால் ஒரு கடந்தகாலம் மட்டுமே என்கிற நிகழ் கணத்திற்குள் மீள்பவள் காலம் குறித்த பிரக்ஞையோ அக்கறையோ இல்லாத அந்தச் சிறுவனை சமன்படுத்த முயல்கிறாள். அவன் சிறுவர்களுக்கேயான தூய்மையான மனதோடு ‘நான் போயி தேடி கூட்டிட்டு வரேன்..’ என கிளம்புகிறான்.  திரும்பி வராத கடந்தகாலத்தை நோக்கி அவன் செல்கிறானென்பதைக் கவனிக்கும் அந்த அத்தை அப்பா இனி அந்தச் சிறுவனின் கனவுகளில் வரக்கூடுமென நினைத்துக் கொள்வதோடு கதை முடிகிறது.  மகளின் கனவில் துவங்கிய கதை பேரனின் கனவோடு முடிவதான இந்தக் கதையின் முடிவு கவித்துவமானது.


ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனை அடையாளப்படுத்தும் விதமாய் எழுதப்பட்டிருக்கும் மறைமுகம் கதை அதன் மொழியாலும் சொல்முறையாலும் செறிவான ஒன்றாக இருக்கிறது. இந்தக் கதையிலும் மரணம் தான் உருவமற்ற மிருகமாக அலைந்து கொண்டிருக்கிறது. பிறந்து  ஒரு மாதமேயான குழந்தை இறந்து போக அதன் தாய் தன் கணவனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள். தனது வீட்டையும் வீதியையும் கடந்து உலகம் குறித்த எந்தவிதமான ஞானமுமில்லாத அந்தப் பெண்ணின் காத்திருப்பின் வழியாகவே தேடப்படும் அவளது கணவனைக் குறித்த  செய்திகள் ஒவ்வொன்றாக நமக்கு விரிகின்றன.  இந்தக் கதையிலும் கதாப்பாத்திரத்தை அவரது செயல்களின் வழியாகவே வாசகன் அறிந்துகொள்ள முடிகிறது. தேடப்படும் அந்த மனிதன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனென்பதும் அவன் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்த வெவ்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இருந்தவனென்பதும் நமக்கு சொல்லப்படுகிறது. கட்டுமானத்திலும் மொழிநடையிலும் சிறப்பானதாக மிளிரும் இந்தக் கதையில்,   ஒரு இடம் மட்டும் எனக்கு சற்று உறுத்தலாக இருந்ததையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். பாலகனகனைக்( வாஞ்சிநாதன்) குறித்து கதை சொல்லி ஒரு பத்தியில் விவரிக்கையில் ‘பாலகனகனுக்கு இந்தியா என்பதை விடவும் பாரதம் என்று சொல்ல வேண்டும். பாரதம் ராமனின் தம்பியான பரதனின் தேசமென்பான். இராமனின் ஆட்சியின் கீழ் பரதனின் மேற்பார்வையில் தான் இயங்குகிறது எனத் திடமென நம்புபவன். இந்தப் பாரதத்தை ராமனின் வாரிசுகளே ஆளவேண்டும் என்பான்…’ என்கிற வரிகள்  இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில்  சிக்கலானதொன்றாகப் பார்க்கிறேன்.

 

கதாப்பாத்திரத்தின் குரலாக அல்லாமல் கதை சொல்லியின் குரலாகவே வருகிறபொழுது அதன் அரசியல் தன்மை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இராமர் அவரது வாரிசுகள் பாரதம் இவையெல்லாம்  ஆபத்தான சொற்களாக மாறிவிட்டிருப்பதால் தவிர்த்திருக்கலாமோ என்பது எனது அபிப்ராயம். தெம்சுலா ஆவ் என்னும் நாகா எழுத்தாளரின் கடிதம் என்றொரு சிறுகதையை இவ்விடத்தில் குறிப்பிடத் தோன்றுகிறது. அரசாங்கத்திற்கும் நாகா போராளிகளுக்கும் நடுவில் சிக்கி மரணிக்கும் ஒரு அப்பாவி இளைஞனைக் குறித்த கதை அது. எந்தப் புள்ளியில் வேண்டுமானாலும் கதை ஏதோவொரு பக்கம் சாயக்கூடிய எல்லா சாத்தியங்களிருந்தாலும் முழுக்க இரண்டு அமைப்புகளாலும் பாதிக்கப்பட்ட அப்பாவி மனிதனின் பக்கமே அந்தக் கதை நிற்கும்.  புனைவை ஒரு பன்பாட்டுச் செயல்பாடாகவே மதிப்பிட வேண்டும்.  அதிலும் கடந்த காலத்தைக் குறித்த ஒரு வரலாற்றுக் கதையில் இதுபோன்ற ஒரு பக்க சார்புள்ள  கருத்து விமர்சனமின்றி முன்வைக்கப்படுகையில் அது நியாயப்படுத்தப்படுவதான ஒரு பிம்பம் உருவாவதற்கான சாத்தியங்களை எழுத்தாளரே தந்துவிடக் கூடும்.

 

ஊறா வறுமுலையிக் திரெளபதி வருகிறாள். எல்லோரும் வணங்கும் தெய்வம் ஆனால் அவள் பேசுவதற்கு எவருமின்றி தனது கிளியோடு பேசுகிறாள். கோரிக்கைகளோடு தன்னிடம் வரும் பேச்சி என்பவளைக் குறித்து திரெளபதி அவளது கிளியான மாயாவிடம் பேச இன்னொரு புறம் குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த பேச்சியும் வெவ்வேறு கடவுள்களிடம் பேசி சலித்துப்போய் விருப்பமேயின்றி இங்கும் வந்திருக்கிறாள். தெய்வத்தின் குரலும் அவளை வணங்க வந்திருப்பவளின் குரலும் சமதையான அளவில் வெளிப்பட்டிருக்கும் இந்தக் கதையில் ஓரிடத்தில் ‘எனக்குத்தான் எந்தப் பிரச்சனையும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரே..’ என்கிற இடத்திலேயே பேச்சியின் மேன்மையை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.  கொஞ்சம் பிசகினால் க்ளிஷேவாக மாறிவிடக் கூடிய எல்லா சாத்தியங்களும் இந்தக் கதை குறைவான உரையாடல்களாலும் மிகையற்ற சொல்முறையாலும் சிறப்பான கதையாக மாறுகிறது. சில வருடங்களுக்கு முன் வெளியான ஒரு தமிழ் நாவலில் இதேபோன்ற ஒரு பிரச்சனை கையாளப்பட்டு அதன் மிகையான சொல்முறையாலும் நம்பகத்தன்மையற்ற கதாப்பாத்திர வடிவமைப்பாலும் பெரும் சர்ச்சைகளில் சிக்கியதையும் பின் அந்த சர்ச்சையே எழுதியவரை உலகப் புகழ்பெற்ற ஒருவராக மாற்றியதையும் இவ்விடத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் கதையின் ஒரேயொரு பக்கத்திலிருக்கும் செறிவும் நம்பகத்தன்மையும் அந்த இரநூறு பக்க நாவலில் துளியாவது இருந்திருக்கலாம்…

 

இந்தத் தொகுப்பின் சிறந்த கதையில் ஒன்றான இன்றே கடைசி என்ற சிறுகதை அபாரமான வாசிப்பனுவத்தைத் தரக்கூடியதொன்று.  ஒரு சிறுகதையை முழுமையாக்குவது அதில் நாம் உணரும் வாழ்வனுபவமே. பத்திருபது வருடங்களுக்கு முந்தைய நமது வாழ்வில் திரையரங்குகள் என்பவை தவிர்க்க முடியாத அங்கம். இந்தக் கதையில் வருகிற திரையரங்கம் இன்னும் சுவாரஸ்யம்.  படம் பார்க்க வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வெளியே தொட்டிலில் தூங்க வைத்துவிட்டுப் போகலாம். குழந்தை அழுதால் தியேட்டர் ஊழியர்கள் பார்த்துக் கொள்வார்கள். தவிர்க்கமுடியாதபட்சத்தில் மட்டுமே டோக்கன் எண் ஸ்லைட் காட்டி சம்பந்தப்பட்ட தாய்மாரை வெளியே வரச் சொல்வார்கள். இந்த  சில மணி நேர நிம்மதிக்காகவே பெண்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். தியேட்டருக்குப் படம் பார்க்கிற பெண்ணுக்கு அங்கு டிக்கட் கிழித்துக் கொடுக்கும் ஆளின் மீது நேசம் பிறக்கிறது. ஒருபோதும் வெளிப்படுத்திக் கொள்ளாத நேசம் அது. ஒரு ஊரின் எல்லாவிதமான மாற்றங்களையும் ஒரு திரையரங்கின் வழியாகவே இந்தக் கதை நமக்கு தெரியப்படுத்துகிறது. சிறுகதையில் பெரும் காலகட்டத்தைக் கடந்து செல்ல சரியான இடைவெளியில் கதையோட்டத்தை மாற்ற வேண்டும். ஒரே நேரத்தில் கதாப்பாத்திரத்தின் போக்கும் சிதையாமல் கதையின் போக்கும் சிதையாமல் இந்தக் கதையில் சாத்தியமாகியுள்ளது. ’எதுவும் அழிஞ்சிடாது, அழிஞ்சிட்டுன்னு நாம நெனச்சிட்டே இருக்க வரைக்கும் நம்ம மனசுக்குள்ளயேதான இருக்கு…’ என கடைசிப் பகுதியில் நாற்பதாண்டு காலம் யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்த நேசத்தை  அவள் பட்டும் படாமல் சொல்கிற இடத்தில் அந்தக் கதாப்பாத்திரத்தின் முழுமையை வாசகன் கண்டுகொள்கிறான்.


கடந்த வாரத்தில் எங்கள் ஊரின் மிகப் பழைய திரையரங்கான பானு தியேட்டர் விற்பனைக்கு வருவதாக அறிந்தேன். எழுபது வருடங்கள்  பழைய திரையரங்கு. ஒரு காலத்தில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய திரையரங்கு என்பது அதன் பெருமைகளில் ஒன்று. ஓரிரு மாதங்களில் அந்தக் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு விடலாம். உண்மையில் அந்தக் கட்டிடத்தோடு எங்கள் ஊரின் எழுபது வருட நினைவுகளை நாங்கள் தொலைக்கவிருக்கிறோம் என்கிற பெரும் அழுத்தத்தை இந்தக் கதையின் இறுதிப் பகுதியை வாசித்தபோது நான் உணர்ந்தேன். வாசிக்கும் கதைகளின் உலகை நமது அனுபவ உலகோடு பொருத்திப் பார்த்துக் கொள்வதன் மூலமாக நமது கறபனைகள் விரிவதற்கான சாத்தியங்களை உருவாக்குவதில்தான் புனைவின் வசீகரம் அடங்கியிருக்கிறது.


ஒரு நிகழ்வை அதன் அனுபவ எல்லையிலிருந்து விரித்துச் செல்வதற்கான சாத்தியத்தை சிறுகதையில் நிகழ்த்திக் காட்டுவது  எழுத்தாளன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். இதற்கு அசாத்தியமான கற்பனையும் கூருணர்வும் அவசியப்படுகிறது. வாழ்வைக் குறித்தும் மொழியைக் குறித்துமான புரிதலும் பக்குவமும் கொண்ட ஒருவன் சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தப் பழகுகிறான்.  அவ்வாறு சிக்கனமாக சொற்களைப் பயன்படுத்தும் புனைவெழுத்தாளனே தரமான சிறுகதைகளை எழுதமுடிகிறது.


நிணம் கதையில் வரும் செல்லா இன்றே கடைசியில் வரும் பெண்ணிலிருந்து முற்றிலும் வேறானவளாக இருக்கிறாள். விருப்பமில்லாத திருமணம் மாமியாரின் நுட்பமான  சீண்டல்கள் என அந்தக் கதை முதலில் நமக்கு பழைய சித்திரத்தை ஞாபகப்படுத்துவதுபோல் போக்கு காட்டி ஓரிடத்தில் சடாரென திரும்பி கோவிலில் செல்லா சாமியாடும் போதும் மயானத்தில் பிணவாடை பிடித்தபின் முதல்முறையாக தன் கணவனை படுக்கையில் அருவருப்பின்றி ஏற்றுக்கொள்வதும் நாம் யூகிக்க முடியாததாக இருக்கிறது. ஒரு கதாப்பாத்திரம் குறித்த தெளிவான சித்திரத்தை அதன் முரண்களே நமக்குத் தருகின்றன. இன்னொரு கதையில் இரண்டு பெண்கள் வருகிறார்கள்.  இருவருமே சினிமாவில் வேலை செய்பவர்கள். ஒருவள் உதவி இயக்குநர் இன்னொருத்தி உதவி ஒளிப்பாதிவாளர். இவளது பார்வையில் அவளது வாழ்வும் அவளது பார்வையில் இவளது வாழ்வுமாக விரியும் கதையில் இந்தக் காலத்தின் காதல் எத்தனை அவசரமானது என்பதை உணரும் இடங்கள் நம்மை புன்னகைக்க வைக்கின்றன. காலி போத்தலுக்கு பதிலாக மதுவிருக்கும் போத்தலை குப்பைத்தொட்டியில் போட்டவள் அதை மீட்பதற்கு செய்யும் சாகசம் நம்மை வெடித்து சிரிக்க வைக்கிறது. வெளிப்பார்வைக்கு எளிமையான கதையாகத் தோன்றலாம். ஆனால் எளிமையாக ஒன்றைச் சொல்வதற்குத்தான் நுட்பம் வேண்டியிருக்கிறது. சிக்கலில்லாத தெளிவான கதைமொழியாலும்,  சொல்ல வரும் செய்தியைச் சொல்லாமல் சொல்வதன் மூலம் வாசகனையும் பங்கேற்பாளனாய் மாற்றும் சாத்தியங்களை உருவாக்கியதிலும் சிறப்பானதொரு சிறுகதை நூலாக இருக்கிறது மறைமுகம்.

 

384 views

Yorumlar


bottom of page