ராஜ் ராஜத்தினத்தின் சமனற்ற நீதி என்ற நூலை சில நாட்களுக்குமுன் வாசிக்க முடிந்தது.
பொருளாதாரக்குற்றங்கள் குறித்து தமிழில் குறைவாகவே நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ராஜ் ராஜரத்தினம் வழக்கு பிரபலமாக பேசப்பட்ட 2008 ம் வருட காலத்தில் செய்தியாக இதனை வாசித்திருக்கிறேன். பல வருடங்களுக்குப் பிறகு அந்த வழக்கில் தனது தண்டனைக் காலத்தை நிறைவு செய்திவிட்டுத் திரும்பியிருக்கும்
ராஜ் தனக்கு நிகழ்ந்த அநீதிகள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.
இலங்கையில் பிறந்து பின் கல்விக்காக இந்தியா இங்கிலாந்து அமெரிக்கா என பயணித்து இறுதியில் தொழில் நிமித்தமாக அமெரிக்காவிலேயே வாழத் துவங்கி பேரும் தொழில் சாம்ராஜ்யமான கலியாணை வெற்றிகரமாக நடத்திய ராஜரத்தினத்தின் பயணத்தை வாசிக்கையில் முதலில் நமக்கு ஒரு பிரம்மிபுதான் உருவாகிறது.
உள்நாட்டுப் போர் துவங்குவதற்கு முன்பாக இலங்கையை விட்டு வெளியேரிய தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தபோதும் யுத்த காலத்திலும் சுனாமி காலத்திலும் ராஜரத்தினம் தன் மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்திருக்கிறார்.குறிப்பாக சுனாமி காலத்தில் மொத்தமாக இலங்கையிலேயே தங்கி விடலாமென அவர் முடிவு செய்கிறபோது அவரது நண்பர்கள் இங்கு நீ அறப்பணிகள் செய்யவேண்டுமானால் தொடர்ந்து கலியாணை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என புரிய வைத்து அமெரிக்கா அனுப்புகிறார்கள்.
வெற்றிகரமாக தொழில் நடத்தி பெரும் பணம் சேர்க்கும் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் கசப்பான கடந்த காலம் அவருக்கில்லை. ஆனால் அவரால் எல்லா தரப்பு மக்களின் வலிகளையும் புரிந்து கொள்ளமுடிந்தது. அந்த குணம்தான் அவரைப் பணம் படைத்த பேரும் கூட்டத்திலிருந்து தனித்தவராகவும் காட்டுகிறது.
2008ம்வருடத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதிலும் பங்குச் சந்தை பேரும் சரிவை எதிர்கொள்ள வழிவகுத்தது. பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்த வேதனையில் கடும் ஆத்திரத்திலிருந்த சமயத்தில்தான் ராஜ் ராஜரத்தினம் கைது செய்யப்படுகிறார். அதன்பிறகு அவருக்கு நடந்த எல்லாமே ஹாலிவுட் திரைப்படங்களில் கூட நாம் பார்க்க முடியாத காட்சிகள். இந்த வழக்கில் எஃப் பி ஐயும் அமெரிக்க சட்டத்தரணிகளும் எவ்வாறெல்லாம் அத்துமீறல்களை மேற்கொண்டார்கள் என்பதை வாசிக்கையில் தன்னை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என அமெரிக்கா சொல்வது எத்தனை பெரிய கேலிக்கூத்து என நகைக்காமல் இருக்கமுடியவில்லை. அதிகாலையில் வீட்டில் வைத்து கைது செய்யப்படும் ராஜரத்தினம் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கு முன்பாகவே மீடியாக்கள் அவரை அந்த தேசத்தின் மிகப்பெரிய குற்றவாளியாக சித்தரித்து செய்திகள் வெளியிடுகின்றன. வீட்டு வாசலில் பெருந்திரளாக திரண்டிருந்த ஊடகத்தினர் முன்னால் அரசு வழக்கறிஞர் ராஜரத்தினத்தைப் பல நாட்களாக கண்கானித்து காத்திருந்து கைது செய்ததை ஒரு சாகசமாக சொல்லி முடிக்கிறார். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு வழக்கில் 100 மில்லியன் டாலர்கள் பிணைக்காக விதிக்கப்பட்டதும் இவருக்குத்தான்.
அமெரிக்க சட்ட அமைப்பில் நாம் விளங்கிக் கொள்ளமுடியாத ஒரு பகுதி உண்டாடென்றால் அங்கிருக்கும் ஜூரி பிரிவு… ஒவ்வொரு வழக்கையும் நீதிபதி இல்லாமல் வெவ்வேறு வாழ்க்கைப் பின்னனிகளைச் சேர்ந்து பொதுமக்கள் ஆறிலிருந்து பத்து பேர் வரை ஜூரியாக வருவார்கள். தீர்ப்பு அவர்களது கருத்தையும் மையப்படுத்தியே வழங்கப்படும். ஊடங்கள், உளவு அமைப்புகள் என எல்லாவற்றையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சட்டத்துறையினர் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை வெவ்வேறு உதாரணங்களோடு ராஜரத்தினம் நமக்குச் சொல்கிறார். பெரும்பாலான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு ( குற்றமே செய்யாதபோதும் ) குறைந்தபட்ச தண்டைகளோடு அந்த வழக்கினை முடித்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். ஏனெனில் அரசுத் தரப்பை எதிர்த்து வழக்காடி வெல்வது அரிதிலும் அரிதாக இருக்கிறது. ராஜரத்தினத்தோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறிவிட ராஜரத்தினம் மட்டும் கடைசி வரையிலும் போராடிப் பார்க்கிறார். தன் தரப்பு நியாயங்கள் போராட்டங்கள் என எல்லாம் செய்து பார்த்தும் இறுதியில் அவருக்கு ஏழு வருடங்கள் தண்டனையே தீர்ப்பாக வந்தது.
இந்தப் புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கையில் என்னை அதிகம் யோசிக்க வைத்தது பொருள் சேர்ப்பதில் நமக்கிருக்கும் மிகையான ஆர்வமும் அதன் காரணமாக நாம் இழக்கும் சின்னஞ்சிறிய சந்தோசங்களும் தான். வாழ்நாளின் பெரும் பகுதியை பணம் சம்பாதிப்பது குறித்து மட்டுமே சிந்திப்பதற்காக செலவிடுகிறவர்களாக நாம் எப்போது மாறினோம்? எதிர்காலம் குறித்த பாதுகாப்பின்மை நம்மை ஏன் தொந்தரவு செய்கிறது… கடன் வாங்கி கார் வாங்குவது, கடன் வாங்கி வீடு கட்டுவது, கடன் வாங்கி நகை வாங்குவது, இடம் வாங்குவது ஏன் இத்தனை முதலீடுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம்? ஒரு புறம் நாம் இடம், வீடு, நகை, கார்கள் என முதலீடு செய்ய செய்ய இன்னொரு புறம் மீண்டும் மீண்டும் அவற்றை நாம் வாங்கவும் அதற்காகவே பணத்தைத் தேடி ஓடவும் தூண்டப்படுகிறோம். இதன் நீட்சியாகவே சமீப காலங்களில் சமூகத்தில் பங்குச் சந்தை குறித்து மிகுந்திருக்கும் ஆர்வத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நமது அன்றாட தேவைகளுக்காக ஏதெனும் ஒரு வகையில் இன்னும் ஒரு வருமானம் வருவது ஆரோக்கியமானதுதான், ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் பெரும்பான்மையானவர்கள் பங்குச் சந்தையின் அடிப்படைகளைக் கூட முறையாகக் கற்றுக்கொள்ளாமல் கண்ணைமூடி ஏதாவது முதலீட்டு நிறுவனங்களில் பணத்தைக் கட்டி ஏமாந்து போகு செய்திகளை நாம் நிறைய பார்க்க முடிகிறது.
கடந்தபத்து வருடங்களில் இந்தியாவில் பங்குசந்தையில் முதலீடு செய்ய வந்தவர்களின் எண்ணிக்கை மிக்கபெரியது. மனிதர்களுக்கு பணத்தின் மீதான மதிப்பும் அதை சம்பாதிப்பதில் இருக்கும் சாகசமும் முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது. உண்மையில் இந்த ஆர்வத்தை முதலீடாக்கிகுறுகிய காலத்தில் பணம் சம்பாதித்து பெரும் பணத்தோடு தலைமறைவான பலரை மறக்கக் கூடாது. ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் இவ்வளவு தருகிறோம். அவ்வளவு தருக்கிறோம் என ஆசையைத் தூண்டி பணத்தை மக்களிடமிருந்து முதலீடு செய்ய வைத்து தனது முதலீட்டார்களுக்கு நாமம் சாத்திய மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என தெரியவில்லை. ( எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பிரதான சீடர் என்பது கூடுதல் தகவல். ) ஏமாந்தவர்களில் எனது குடும்ப நண்பர்களே சிலர் உண்டு. நீங்கள் பொருள் சேர்ப்பது உங்கள் உரிமை, மற்றவர்களை ஏமாற்றி பணம் சேர்ப்பது அநீதி. உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு ஒழுங்காக ஊதியத்தைக் கொடுங்கள், கடன் வாங்கியவரிடம் திருப்பித் தரப்பழகுங்கள், பணம் உங்களைப் போலவே அவர்களுக்கும் முக்கியம்... இந்த குறைந்தபட்ச அறத்தினை நீங்கள் கற்றுக்கொள்ளாமல் போனால் அதன் விபரீதங்களை உங்கள் வாழ்நாளிலேயே எதிர்கொள்வீர்கள்... எனக்கு மிக நன்றாகத் தெரிந்த என்னோட பழகிய ஒருவர், என்னிலும் வயதில் மூத்தவர் தனது துறையில் ஓரளவு அறியப்பட்டவராக இருந்தார். ஓரளவு நல்ல வருமானமும் இருந்தது. ஆனால் அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனக்கு வரும் வருமானம் அவ்வளவையும் நிலத்திலும் பொருள் வாங்குவதிலும் முதலீடு செய்துவிடுவார். தனது அன்றாட செலவுகளுக்கும் அலுவலகத்தை நடத்துவதற்கும் தெரிந்தவர்கள் பழகியவர்கள் எல்லோரிடமும் பணம் வாங்குவார். இதில் தொண்ணூறு சதவிகித பணத்தை அவர் திருப்பித் தந்ததில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் நாற்பத்தைந்து வயது கூட நிறைவடையாத நிலையில் கடும் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் விழுந்தபோது ‘நிறைய பேருக்குக் கடன் பட்டுத் திருப்பிக் குடுக்காமயே போயிருவேன் போல...’ என கடும் மனவேதனையோடே இறந்தும் போனார். இவரைப் போல ஒரு சில உதாரணங்களை என்னால் மேலும் சொல்ல முடியும்.
ராஜரத்தினம் அத்தனை பெரிய நெருக்கடிகளிலும் தனது நிறுவனத்தை நிரந்தரமாக மூடும்போது தன்னிடம் முதலீடு செய்த அத்தனை பேருடைய பணத்தையும் திருப்பித் தந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலான முதலீட்டு நிறுவனங்கள் அப்படி இருப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் புதிய நிறுவனங்கள் வருவதும் பெருமளவிலான மக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து நிற்பதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. மக்களிடமிருக்கும் பணத்தின் மீதான பேரார்வமே இதைப்போன்ற முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு. அதற்காக ஆசைப்படவே கூடாதா? ஆசைப்படலாம் தான். பணம் சம்பாதிப்பதை சூதாக நினைப்பதுதான் ஆபத்து. நீங்கள் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யுங்கள், ஆனால் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் அன்றாட வாழ்வைத் தொந்தரவு செய்யாத உபரியை முதலீடு செய்யுங்கள். நீங்கள் கோடிகளை சம்பாதிப்பது முக்கியந்தான்., அதேயளவிற்கு உங்களுடைய ஒவ்வொரு நாளின் சிறிய மகிழ்ச்சியும் முக்கியம். அதன்மீதும் கவனம் செலுத்துங்கள். எதிர்காலத்துக்காக சேமிக்க நிகழ்காலத்தின் சந்தோசங்களை தியாகம் செய்யாதிர்கள்…. கையில் நிறைய பணம் சேர்த்தபின் அதை அனுபவிக்க உடல் ஆரோக்கியம் இல்லாமல் போவது துரதிர்ஸ்டமில்லையா?...