top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

ஐரிஸ்




சொற்கள் படைக்கப்பட்டது காதலை எழுதுவதற்கும் அதைக் கொண்டாடுவதற்குமே.


காதலிக்காத மனிதனும் காதலிக்கப்படாத மனிதனும் சபிக்கப்பட்டவர்களென நம்புகிறேன். இந்தப் பிரபஞ்சம் காதலிப்பவர்களுக்காகவே உருவானது, அவர்களுக்காகவே இயங்குகிறது. கதைகள் உருவானபோது அவை சாகசத்தையும் காதலையுமே பிரதானமாய்ப் பேசின, இப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றன. சாகசத்தை விடவும் காதல் ஏன் மேனையானதென்றால், காதல் தான் ஆகப்பெரும் சாகசம். வரலாற்றின் தனித்துவமான கலைஞர்கள் ஏராளமானோருக்கு ஆற்றலாய் இருந்தது காதல் தான். துர்கனவ், காஃப்கா, வான்கா, ஃப்ரைடா காலோ என இந்த வரிசை மிகப்பெரியது. ஹோமரின் இலியட்டில் ஹெலனின் மீதுள்ள காதல் ட்ராய் நகர் எரிந்தபோதும் பாரிஸுக்கு குறைந்திருக்கவில்லை என்பதை வாசிக்கையில் ஹெலனின் மீது வரும் மயக்கத்தை விடவும் காதலென்னும் உணர்வின் மீது எழும் மயக்கம் அபரிமிதமானது. சரித்திரத்தின் குரூரமான பக்கங்களை போர்களும், படுகொலைகளும் மட்டுமே நிரப்பியிருந்தால் மனிதர்களுக்கு உலகின் மீது நம்பிக்கை இல்லாமல் போயிருந்திருக்கும். காதலென்னும் மகத்தான உணர்வுதான் குரூரங்களையும் தாண்டி மனிதனை இன்னும் உலகின் மீதான பிடிப்போடு வாழவைத்துக் கொண்டிருக்கிறது.


கோடைகாலத்தின் காதல்கள் என்ற பெயரில் எழுதத் துவங்கிய குறுநாவலானது மூன்று வெவ்வேறு காதல் கதைகளை ஒன்றிணைப்பதாக பயணித்தது. ஓரிடத்தில் குறிப்பிட்ட இந்தக் கதை மட்டும் மற்ற இரண்டு கதைகளிலிருந்து விலகித் தெரிந்தபோது இந்தக் கதையில் வரும் மனோ, தர்ஷினி இருவரும் எனக்கு மிக நெருக்கமானவர்களாய்ப் போனார்கள். அவர்களை அவர்களாக இன்னும் கொஞ்சம் உலவ விடுவோமெனத் தோன்றியதால் இந்தக் கதையை தனியாக எழுதிவிட முடிவு செய்தேன். எதன் மீதும் பிடிப்பில்லாமலிருந்த என்னைப் போன்ற ஒருவனை ஆக்கப்பூர்வமான மனிதனாக்கியது காதல் தான். பெண்கள் இந்த வாழ்க்கையில் இல்லாமல் போயிருந்தால் எப்போதோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன். நான் நேசித்த எல்லாப் பெண்களுடனும் வாழ்க்கை முழுக்க என்னால் பயணிக்க முடியாதுபோனாலும் அவர்களுடனான நினைவுகளும் அவர்களின் மீதான நேசமும் வருத்தங்களையும், கசப்புகளையும் தாண்டி அப்படியேதான் இருக்கின்றன. எங்கோ ஓரிடத்தில் அவர்களின் பெயர்களைப் பார்க்கிறபோது, தற்செயலாக பொது இடத்தில் சந்திக்கிறபோது கண்களில் ஒரு ஒளி பெருகி மனதில் ஒரு பூந்தோட்டமே மலர்ந்துவிடும். அந்த கணநேர சந்தோசம் ஒரு மகத்தான ஆற்றல். உங்கள் முழு வாழ்நாட்களுக்கும் அர்த்தப்பூர்வமாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமென்பது உங்களின் விருப்பமென்றால் சாவை நெருங்கும் நொடிவரை யாரையேனும் காதலித்துக் கொண்டே இருங்கள்.


லஷ்மி சரவணகுமார்.





"I crave your mouth, your voice, your hair. Silent and starving, I prowl through the streets. Bread does not nourish me, dawn disrupts me, all day I hunt for the liquid measure of your steps. I hunger for your sleek laugh, your hands the color of a savage harvest, hunger for the pale stones of your fingernails, I want to eat your skin like a whole almond. I want to eat the sunbeam flaring in your lovely body, the sovereign nose of your arrogant face, I want to eat the fleeting shade of your lashes, and I pace around hungry, sniffing the twilight, hunting for you, for your hot heart, like a puma in the barrens of Quitratue."


— "Love Sonnet XI" by Pablo Neruda



1


பறவைகளின் கீச்சொலி அவன் காதுகளுக்குள் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. காற்றின் கட்டளைக்கு இசைந்து அசையும் மரங்களின் கிளைகளில் எல்லாம் இயற்கையின் அபரிதமிதமான வனப்பு. அவன் இன்னும் உறங்கச் செல்லவில்லை. அதிகாலையின் சூரிய உதயத்திற்குப் பிறகு மெல்ல இறங்கி ஆற்றங்கரை வரை சென்று தூரத்தில் தெரியும் மலைச்சரிவுகளின் பின்னால் சூரிய உதயத்தைப் பார்ப்பதை எப்போதும் விரும்புவான். அவளின் நினைவுகளும் ஏக்கங்களும் முழுமையாய் ஆக்ரமிக்கிற நாளில் மலையும் ஆறும் அந்தச் சூரிய உதயமும்தான் அவன் காதலுக்கான துணை. மங்கலான இரவு விளக்கின் வெளிச்சத்தில் பாதி வரைந்து கைவிடப்பட்ட ஓவியத்தைப்போல் கிடந்தவன் எழுந்து உடை மாற்றிக்கொண்டு வெளியே நடந்தான். ஆளற்ற சாலையில் துவங்கிய விடியல் ஆத்மார்த்தமான ஒளியை நிரப்பியிருந்தது. தூரத்தில் முதல் தொழுகைக்கான பாங்கொலி பள்ளிவாசலில் இருந்து எதிரொலித்ததைக் கேட்டபடியே ஆற்றங்கரை நோக்கி நடந்தான். இயற்கையின் அத்தனை உயிர்ப்பும் பிரியதர்ஷினியை ரத்தமும் சதையுமாய் அவனுக்கருகில் உணரச்செய்தது. அவனுலகில் அவள் தான் காற்று, வெளிச்சம், ஒலி, எல்லாமும். இங்கிருந்து வெகுதொலைவில் ஒரு பெரு நகரத்தில் வசிக்கும் அவள்தான் அவனுக்கு வழித்துணை. அவளோடு உரையாடும்போது மட்டுந்தான் அவனுக்கு சொற்கள் இதயத்திலிருந்து பிறக்கும்.


குற்றால சாரல் சீசன் துவங்கியிருந்ததால் வெவ்வேறு ஊர்களிலிருந்து படை எடுத்து வரும் மக்களால் தென்காசியின் சுற்றுப்புறமெங்கும் இருபத்தி நான்கு மணிநேர பரபரப்பிலிருந்தது. வைகாசி மாதத்தின் இறுதியில் துவங்கும் இந்த சாரல் காலம் ஆடி மாதத் துவக்கத்தில் வசீகரத்தின் உச்சத்தை எட்டும். பனி சூழ்ந்த ஊர்களுக்கு இல்லாத தனித்துவமான அழகு சாரல் சூழ்ந்த இந்த பகுதிக்கு வந்துவிடும். அந்தச் சாரலை தனித்துவமாக்குவது மலையிலிருந்து இறங்கி வரும் காற்றுதான். எத்தனை மன அவஸ்தையிலிருக்கும் மனிதனும் இரண்டு நாட்கள் இந்த சாரலில் நனைந்து அருவிகளில் குளித்துவிட்டால் மனதிலிருக்கும் பிசகெல்லாம் சரியாகி இயல்பாகிவிடுவான். வெளியூர் வாழ்க்கையில் அவன் இழக்க நேர்ந்த முக்கியமான அம்சம் இந்த ஊரிலிருக்கும் சொகுசுதான். வீடு, வாகனம், வசதி வாய்ப்புகளால் வரும் சொகுசல்ல, இயற்கையின் கொடையால் கிடைப்பது. நள்ளிரவில் ஆள் நடமாட்டம் குறைந்த அருவியில் மிதமான போதையில் குளிப்பதற்கும், ஜன்னலை மீறி அறைக்குள் தெறிக்கும் சாரலோடு கண் விழிப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். சீசன் முடிந்து வெளியூர் ஆட்கள் இல்லாதபோது தனிமையில் கிடக்கும் மலைகளிடமும் வனத்திடமும் கதை பேசித்திரியும் உள்ளூர்க்காரர்களுக்கு வாழ்வைப் பற்றின எந்தவிதமான கவலைகளும் அச்சங்களும் இருப்பதில்லை.


பிரியதர்ஷினியின் வருகைக்குப் பிறகுதான் மனோவிற்கு இறைநம்பிக்கையின் மீது பற்று வந்தது. இயற்கையின் மடியில் பிறக்கிற ஒருவனுக்கு இயல்பாக இருக்கும் இறைநம்பிக்கை கூட இல்லாதவன் மனதில் எல்லாவற்றின் மீதுமான நம்பிக்கையை விதைத்தது அவள்தான். இருளின் பாதையில் தொலைந்து போகவிருந்தவனுக்கு வெளிச்சமாய் இருந்தவள் தன்னிடம் ஏற்படுத்தியிருக்கும் இந்த இடைவெளி அவனை முன்னிலும் மோசமான இருளை நோக்கி நகர்த்தியது. வனங்களை அழித்ததால் பத்து வருடங்கள் சீரில்லாமல் போயிருந்த சாரல் சீசன் இந்த வருடம் அற்புதமாயிருந்த போதும் சாரலையும் ஊரைத் தழுவிய குளிரையும் அவனால் லயித்து அனுபவிக்கமுடியவில்லை. அவன் அனுப்பிய ஏராளமான மின்னஞ்சல்களுக்கு அவளிடமிருந்து எந்தப் பதில்களும் இல்லையென்கிற ஏமாற்றத்தில் அவன் உறக்கத்தைத் தொலைத்து அனேக நாட்களாகிவிட்டன. உடல் அயர்ந்து சில மணிநேரங்கள் உறங்கினாலும் ஏமாற்றத்தாலும் அவநம்பிக்கையாலும் தொண்டையில் சேர்ந்துவிட்ட கசப்பு நீண்டநேரம் உறங்கவிடாது. அவள் எண்ணுக்கு பலமுறை அழைத்தும், பதிலில்லை. தினமும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதுபோல் அவளுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டுக் காத்திருப்பான், எந்தப் பதில்களும் வந்திருக்காது. நான்கு மாதங்களுக்கும் மேலான இந்த அவஸ்தையில் அவனுடல் மெலிந்து சடாரென முதுமை புகுந்துவிட்டதைப்போல் தோற்றமளித்தான். வீட்டிலிருந்தவர்கள் அவன் எதற்காக தன்னை வருத்திக் கொள்கிறானென்பது தெரியாமலேயே குழம்பிப் போயிருந்தனர். ‘என்ன பிரச்சனன்னு சொன்னாதான தம்பி பேசி சரி பண்ணமுடியும்.’ என அப்பா அவனிடம் பலமுறை ஆறுதலாய் விசாரித்துப் பார்த்தார்.


”பிரச்சனைன்னு எதும் இல்லப்பா. நான் என்னய வருத்திக்கவும் இல்ல. இயல்பாத்தான் இருக்கேன். நீங்க என்னய நெனச்சுக் கவலப்படாதிங்க.”


அவரைக் காயப்படுத்த மனமில்லாமல் சிரித்தபடி சொல்லிவிடுவான். அவளால் தன்னை வெறுக்கவே முடியாதென்பது அவனுக்கு மிக நன்றாய்த் தெரியும், ஆனால் இந்த ஒதுக்குதலுக்கான காரணத்தை மட்டுந்தான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நிமிடம் அழைத்துப் பேசிவிட்டாலோ, மின்னஞ்சலில் நான்கு வார்த்தை எழுதிவிட்டாலோ போதும் அவன் எல்லாவற்றிலிருந்தும் மீண்டுவிடுவான். ஆனால் அவளிடமிருந்தது கடலின் ஆழத்தில் கிடக்கும் அச்சமூட்டும் அமைதி. அந்த அமைதிதான் இவனை சீர்குலைத்துக் கொண்டிருந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் அவளை நேரிலேயே சென்று பார்த்துவிடலாமென புனேவிற்குக் கிளம்பிச் சென்றான். அவள் பணியிடத்தில் விசாரித்தபோது அவள் இரண்டு மாதங்களாக வேலைக்கு வரவில்லை என்று தெரிந்தது. அவள் வீட்டிற்குத் தேடிச் செல்லும் துணிவில்லாததால் என்ன செய்வதென குழம்பியவன் அந்த அலுவலகத்திலிருந்த பெண்ணிடம் சொல்லி பிரியாவை தொலைபேசியில் அழைக்கச் சொன்னான். தான் அவளை சந்திக்க புனே வந்திருக்கும் செய்தியைச் சொல்லச் சொன்னபோது எதிர்முனையில் நீண்ட அமைதி மட்டுமே பதிலாய்க் கிடைத்தது. தொலைபேசியில் அழைத்த பெண் மிகுந்த சங்கடத்தோடு பிரியாவிடம் ‘ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்காங்க ப்ரியா, ஜஸ்ட் நாலு வார்த்த பேசிடலாமே.’ என்று சொல்ல, பதிலுக்கு

“என்னால இப்ப பேசமுடியாது… நான் காரணம் சொல்லாட்டியும் அவனால புரிஞ்சுக்க முடியும். எனக்காக காத்திருக்க வேணாம். அவனக் கடந்து போகச் சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாள். அந்த நொடியில்தான் இனி அவள் தன் வாழ்வில் ஒருபோதுமில்லை என்பதைத் தெரிந்துகொண்ட மனோ சுக்குநூறாய் உடைந்துபோனான்.



2


சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியிலிருந்தான். சொந்த ஊரின் குளிர்ச்சி இல்லை, அதிகாலையில் அவன் பார்த்து வியக்கும் மலைத்தொடர்களோ வருடம் முழுக்க வற்றாமல் ஓடும் நதியோ அந்நகரில் இல்லை. இயற்கையோடு பிணைந்து வளர்ந்த மனிதனுக்கு அதன் காற்றும் வெளிச்சமும் இல்லாமல் போகும்போது எதன்மீதும் பற்றில்லாதவனாகிவிடுகிறான். மனிதர்களின் கசகசப்பும் வருடம் முழுக்க நிரம்பியிருக்கும் சென்னையின் வெயிலும் ஒவ்வொரு நாளையும் அவஸ்தைகள் நிரம்பியதாய் மாற்றியிருந்தது. வேலையிடத்தில் அவனுக்கு நண்பர்கள் குறைவு, குறுகியகாலக் காதலொன்று கடந்து போயிருந்தபோதும் இதயத்தின் அடியாழத்தில் அக்காதல் எந்த எழுச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. வேலையும் ஊதியமும் முக்கியமென்கிற நினைப்பு மட்டுமே அந்த நகரில் அவனை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒற்றைக் காரணியாய் இருந்தது.


போரூரிலிருக்கும் தனது அறையிலிருந்து டி.எல்.எஃபில் இருக்கும் அலுவலகத்திற்குச் சென்று வருவதைத் தாண்டி சென்னையின் வீதிகளுக்கு மனோ தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. கடற்கரைப் பிடித்திருந்தது, ஆனால் அங்கும் மனிதக் கூட்டம். சாலையில், பேருந்துகளில், வணிக வளாகங்களிளென எங்கு திரும்பினாலும் மனித உடல்கள் நெருக்கடியடிக்கும் அவ்வுடல்களின் வியர்வை நாற்றம். சென்னை நகரமே அவனுக்கு மனிதத் தலைகளாய்த் தெரிந்தது. அவன் அறை நண்பனைப் போல் மனோ எங்கும் செல்வதில்லை. அவனது உலகம் இரண்டு படுக்கையறை கொண்ட சின்னஞ்சிறிய அறைக்குள்ளென சுருங்கியபோது தனிமையுணர்ச்சியினாலும் கடுமையான வேலைப்பளுவினாலும் தொடர்ந்து நீலப்படங்கள் பார்த்து அதற்கு அடிமையாகி இருந்தான். தொடர் குடிப் பழக்கம் எப்படி ஒரு நோயோ, அதேபோல் இதுவும் ஒரு நோயாக மாறிப்போயிருந்தது. மனித உடல்களின் இரைச்சலை வெறுத்தவனுக்கு நிர்வாண உடல்களின் சாகசங்களின் மீது அபரிமிதமான ஈர்ப்பு வந்தது அவனே புரிந்து கொள்ள முடியாதவொன்று. எப்போதும் நினைவில் நிர்வாணத்தின் அசைவே இருந்து கொண்டிருக்கும். காலை நண்பகல் இரவென நேரங்காலம் இல்லாமல் அவன் நீலப்படங்களைப் பாக்கத் துவங்கியிருந்தான். அவன் முகத்தில் சோர்வும் முதிர்ச்சியும் குடிகொள்ளத் துவங்கியபோது அவனது அறை நண்பன் அவனை எச்சரித்தான்.


‘மனோ நீ எக்ஸ்ட்ரீம் போயிட்டு இருக்க. இப்பவே ஸ்டாப் பண்ணிடு. இல்லன்னா சைக்காலஜிக்கலா ரொம்ப சிக்கலாகிடும்.’


‘நானும் எவ்வளவோ ட்ரை பன்றேண்டா தாஸ். ஆனா முடியல. எப்பல்லாம் பாக்கக் கூடாதுன்னு மொபைல தள்ளி வெக்கிறனோ அப்பல்லாம் மண்டக்குள்ள அந்தப் படங்களப் பாக்கனுங்கற வெறி அதிகமாகிடுது.’


கவலையாய்ச் சொன்னான். எல்லா ரகசியப் பழக்கங்களும் சுவை தீரும் வரைதான் சுவாரஸ்யமானவை. அந்த ருசிக்குப் பழகி அடிமையானபின் அந்தப் பழக்கங்கள் ஒரு வேதனை. மனோ இப்பொழுது அந்தப் படங்களைப் பார்த்து தன்னை வேதனைப்படுத்திக் கொள்வதன் மூலம் இன்புறுகிறானோ என்று தாசுக்கு சந்தேகமாய் இருந்தது. இணையத்தில் பார்த்த ஒரு விளம்பரம் அவன் நினைவிற்குவர

“ஒரு வழி இருக்கு மனோ, நீயும் ஒத்துழைச்சா கண்டிப்பா உன்னால மீண்டுட முடியும்.”

”சொல்லு தாஸ் செய்றேன்.”

மனோ ஆர்வமாய்க் கேட்டான்.

“நான் ஒரு விளம்பரம் பாத்தேன். பெங்களூர்ல ஒரு ரிஹேப் செண்டர் இருக்கு. எல்லாவிதமான அடிக்‌ஷனுக்கும் அவங்க ட்ரீட் பன்றாங்க. ஒரு தடவ அங்க போய் பாக்கலாம்டா..”


மனோவுக்கு அவன் யோசனை பிடித்திருந்ததுடன் தன்னால் அதிலிருந்து மீளமுடியுமென்கிற நம்பிக்கையும் வந்தது. ஆனால் ஒரு ரிஹேப் செண்டருக்கு இந்த விஷயத்திற்காகச் செல்கிறோமென்பதை மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள்? இந்த தயக்கம் மட்டும் அவனை உறுத்திக் கொண்டிருக்க

“வழக்கமா ரிஹேப் செண்டர்ஸ்லாம் ட்ரக் அடிக்ட்ஸ் இல்ல குடிக்கு அடிமையானவங்களுக்குத்தான தாஸ் இருக்கும். இந்த மாதிரியான விஷயத்துக்கும் கவுன்சிலிங் குடுப்பாங்களா..”

தனக்கிருக்கும் தயக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டான்.

“நான் செக் பண்ணிட்டேன் மனோ. அவங்க இதுக்கு ட்ரீட் பண்ணுவாங்க. ஒரு தடவ ட்ரை பண்ணு. கண்டிப்பா சரியா வரும்.”

அவன் உறுதியாகச் சொல்லவே மனோ அங்கு செல்வதற்குச் சம்மதித்தான்.

பெங்களூர் நகரத்திற்கு வெளியே இருந்த அந்த சிகிச்சை மையத்தை ஒரு நட்சத்திர விடுதி என்றுதான் சொல்ல வேண்டும். சிகிச்சைக்காக வந்திருந்தவர்களில் பலரும் வசதிபடைத்தவர்கள். அந்த விடுதிக்குள் நுழைந்தபிறகு போர்ன் அடிக்‌ஷன் என்கிற வார்த்தையை சொல்வதில் அவனுக்கிருந்த தயக்கம் விலகியிருந்தது. சிகிச்சைக்கு வருகிறவர்களின் வசதி வாய்ப்புகளுக்கேற்றபடி முதல் வகுப்பு இரண்டாவது வகுப்பு அறைகள், சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் என எல்லாவற்றிலும் வேற்பாடிருந்தது. பதினைந்து நாட்கள் மட்டும் தங்கிப் பார்க்கலாமென்கிற முடிவில் மனோ சிகிச்சைக்காக தங்கினான். ஒரு யோகா மாஸ்டர், ஒரு டயட்டீஷியன், ஒரு மனநல மருத்துவரென மூன்றுபேர் ஒவ்வொருவருக்கும் சிகிச்சையளிப்பார்கள். பிரியதர்ஷினியை மனநல மருத்துவராக அந்த மையத்தில்தான் மனோ முதல்முறையாக சந்தித்தான். சாலையில் நாம் கடந்து செல்லும்போது எதிர்கொள்ளும் பெண்களுக்கு இருக்கும் சாதாரணமானத் தோற்றம் கொண்டவளாகவே முதல் பார்வைக்குத் தெரிந்தாள். எந்தவிதத்திலும் தன் எதிரிலிருக்கிறவர்களை கவரவேண்டுமென்கிற அக்கறையோ நிர்ப்பந்தமோ இல்லாதவளைப் போல் இயல்பான எண்ணை வழியும் முகம். ஒரு பெண்ணிடம் தான் எவ்வாறு போர்ன் அடிக்ட் ஆனேன் என்பதைக் குறித்து சொல்வதற்கு அவனுக்கிருந்த தயக்கத்தைப் புரிந்து கொண்டவள், எதையும் வலிந்து தெரிந்து கொள்ளவும் மாற்றவும் முயற்சிக்கவில்லை. முதல் நாள் அமர்வில் அவனது ஊர் படிப்பு வேலை என பொதுவான விஷயங்களைக் கேட்டாள். ஒரு மணி நேர அமர்வில் ஐம்பது நிமிடங்கள் அவனைப் பதட்டத்திற்குள்ளாக்கும் எதையும் கேட்காமல் வெவ்வேறு விஷயங்களைக் பேசியவள் “பெண்களப் பத்தி உங்களோட ஒப்பினியன் என்ன மனோ?” என அமர்வு முடியும் நேரத்தில் கேட்டாள். எவ்வளவு யோசித்தும் உறுதியான தெளிவானதொரு பதில் அவனுக்குக் கிடைக்கவில்லை. அமைதியாய் இருந்தான்.

“என்ன மாதிரி போர்ன் பாப்பீங்க?”

“புரியலங்க..”

“போர்ன் ல நிறைய வெரைட்டிஸ் இருக்கு. நார்மல், ஹார்ட்கோர், பி டி எஸ் எம், கேங் பேங் இந்த மாதிரி…. நீங்க எத பாப்பீங்க?”

“நான் எல்லா வெரைட்டியும் பாப்பேங்க. ஒன்னு பாத்துட்டு இருக்கறப்பவே மைண்ட் இன்னொன்னுக்குத் தாவும். அதப் பாத்துட்டு இருக்க இன்னொன்னு. இப்பிடி ஒரு நாள்ல நிறைய விதங்களப் பாத்துடுவேன்.”

”ஓ… எந்த வகையான போர்ன் பாக்கறப்போ ரொம்ப எக்ஸைட் ஆகறீங்க?”

மனோ யோசித்தான்.

“ஃபேம் டம்”

அவள் குறிப்பெடுத்துக் கொண்டாள்.

”சரி ஃபேம்டம் ல எப்பிடி உங்களுக்கு அவ்ளோ எக்சைட்மெண்ட்? எனி பர்ட்டிகுலர் ரீசன்?”

“சொல்லத் தெரியலங்க. ஆனா அப்யூஸ் பண்ணப்படற ஆணோட இடத்துல என்னய வெச்சுப் பாக்கறப்போ தான் ஒரு கம்ப்ளீட் செக்ஸோட எக்ஸ்ட்ரீம ஃபீல் பண்ண முடியுது.”

பிரியதர்ஷினி அவன் சொன்னதையெல்லாம் கவனமாய்க் கேட்டுக்கொண்டாள்.

“சரி இந்த டாப்பிக் இன்னிக்கி போதும். நம்ம லைப்ரைரில நல்ல கலெக்‌ஷன் இருக்கு. உங்களுக்குப் புடிச்ச எதாச்சும் ஒரு புக் எடுத்துப் படிச்சிட்டு நாளைக்கு அதப் பத்தி சுருக்கமா எங்கிட்ட சொல்லுங்க. முழுசா படிக்கனும்னு கட்டாயம் இல்ல.”

என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.


சிகிச்சைக்காக வருகிற ஒருவரை மீட்கவேண்டுமென்றால் அவர் எந்த விஷயத்திற்கு அடிமையானவரோ அதைக் குறித்து சிந்திக்கவே விடாதபடி மற்றவேலைகளில் அவரது மனதையும் உடலையும் கவனம் செலுத்த வைக்கவேண்டும். மது, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை இப்பிடி உடனடியாக அதிலிருந்து விலக்கி வைத்துவிட முடியாது. நாவில் ஆல்கஹாலின் சுவை படுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய மனம் தூண்டும். அவர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பதட்டத்தோடு அரற்றுவார்கள். செவிக்குள் கட்டுப்பாடுகளை மீறச்சொல்லி ஓராயிரம் குரல்கள் ஒலிக்கும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டுவருவதென்பது நீண்ட போராட்டம்.


ஆலோசனை நேரம் முடிந்தபிறகு தனிமை அவனைச் சூழ்ந்து கொண்டது. சிகிச்சை மையத்திற்குள் அனுமதிக்கும் போதே அவனிடமிருந்து மொபைலை வாங்கி வைத்துக் கொண்டார்கள். பதினைந்து நாட்களுக்கு அதைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அவனது விரல்கள நடுங்கின, எதன் மீதாவது சிந்தனையைச் செலுத்தலாமென்றால் மனம் இங்கும் அங்குமாய் அலைபாய்ந்தது. இதுவரை பார்த்திருந்த ஆயிரக்கணக்கான நிர்வாணப் படங்களின் காட்சிகள் மனதில் எழுந்து அதிர்வுக்குள்ளாக்கின. காமத்தில் ஈடுபடுகிறவனை விடவும் அதைப் பார்த்துப் பழக்கப்படுகிறவனின் மனம் படும் பாடு சொல்லிமாளாதது. பல நாட்களாய் ஓடிக்கொண்டிருந்த தொழிற்சாலையின் இயந்திரமொன்றை சடாரென நிறுத்திவிட்டதைப் போல் திக்பிரம்மை பிடித்தவனாயிருந்தான். மனதில் காமத்தை நிறுத்தி மைதுனம் செய்து அந்த எண்ணத்திலிருந்து தப்பித்துவிடலாமென்றால் குறியில் சூடோ எழுச்சியோ துளியும் இல்லை. இடைக்குக் கீழ் பனிக்கட்டியை வைத்ததுபோல் உணர்ந்தான். தன் நிலையை நினைக்க நடுக்கமாகவும் அவமானமாகவும் இருக்க அப்போதைக்கு சிந்தனையை மாற்ற அறையில் வைக்கப்பட்டிருந்த கெட்டிலில் நீரை சூடாக்கி பால் கலக்காத தேநீர் அருந்தினான். எதையும் தெளிவாய்ப் பார்க்க முடியவில்லை, எதையும் தெளிவாய்க் கேட்கமுடியவில்லை. பழக்கப்படுத்தப்பட்ட காமத்தின் முனகலை வெளிப்படுத்தும் பெண்களின் குரல்கள் காதுகளுக்குள் எதிரொலிக்க, வெட்டித் தொகுக்கப்பட்டக் காட்சிகளின் இறுதியில் வரும் ஓயாத அலைகளென மனம் தடுமாறியவன் குளித்துவிட்டு வந்தான். ஆலோசனை முடிந்து கிளம்பும் போது பிரியதர்ஷினி கொடுத்தனுப்பிய இசைத்தொகுப்பு நினைவிற்குவர அதை ஒலிக்கவிட்டான்.யானியின் ஃபெலிஸ்டா. இதற்கு முன்பு அதனை அவன் கேட்டிருந்ததில்லை. யானியின் எந்த இசைத் துணுக்கையும் கேட்டிராதவன் அந்த நொடியில் அந்த இசையில் தன்னைக் கரைத்துக் கொண்டான். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அலைபாய்ந்த மனம் அந்த இசைக்கோர்வைக்கு அடிபணிந்தது. நரம்புகளில் நடுக்கம் குறைந்து மயிலிறகால் வருடியதுபோலிருக்க கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டவன் அப்படியே உறங்கிப் போனான். உறங்கி எழுந்தபோது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விடுபட்ட நிறைவு அவனிடம். அறையிலிருந்து வெளியேறி நூலகத்தை நோக்கிச் சென்றான்.

மனோ அடுத்தநாள் அமர்வில் முந்தைய தினம் வாசித்த கவபத்தாவின் ஸ்லீப்பிங் ப்யூட்டி நாவல் இப்போதிருக்கும் தனது இந்தச் சூழலோடு ஒத்துப்போவதுபோல் தோன்றுவதாகக் கூறினான். இலக்கியவாசிப்பின் மீதும் பயணங்களின் மீதும் அவனுக்கு விருப்பமும் ஆர்வமும் இருப்பதைப் புரிந்து கொண்ட பிரியதர்ஷினி அவன் வாசித்த நூல்கள், அவனது பயணங்கள் குறித்துக் கேட்டாள். முதல் நாளிருந்த தயக்கம் விலகி தான் நீண்டகாலம் பழகிய ஒருவருடன் பேசிக்கொள்வதுபோல் இயல்பாய் பேசினான். அவனது சொற்களில் இருந்து அவனது பிரச்சனைகளை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.


“உங்களோட பிரச்சனை உங்களோட தனிமைதான் மனோ. ஏதோ ஒரு சமயம் அதுல இருந்து தப்பிக்கிறதுக்காக போர்ன் பாக்க ஆரம்பிசிருப்பீங்க. ஒருவேள பிளஷருக்காகக் கூட இருக்கலாம். ஆனா பிளஷருக்காக பாக்கற இடத்துல இருந்து இந்த எக்ஸ்ட்ரீக்கு கூட்டிட்டு வந்தது உங்களோட தனிமையுணர்ச்சி மட்டுந்தான்.”

அவன் ஆமோதித்தான்.


“பெண்கள் கிட்ட நெருங்கிப் பழகறதுக்கு பயமும், அதே சமயம் அதீத ஆசையும் இருக்கு உங்ககிட்ட. அந்த ஆசைதான் ஃபேம்டம் ல அப்யூஸ் பண்ணப்பட்ற ஆணா உங்கள நெனச்சுக்க வெக்கிது. பெண்கள் கிட்ட ஏதாவது ஒரு வகைல சரணடையனும்னு நினைக்கிறதோட எக்ஸ்ட்ரீம் இது. உங்களோட செக்ஸுவல் லைஃப் பத்தி சொல்லுங்க.”

“பெருசா எதும் இல்லங்க. ரெண்டு வருஷம் முன்ன ஒரு பொண்ணோட ரிலேஷன்சிப் ல இருந்தேன். வீக்லி ட்வைஸ்னு ரொம்ப நார்மலாதான் இருந்துச்சு. அவளோட ப்ரேக் அப் ஆனதுக்கு அப்றம் ஜஸ்ட் மாஸ்ட்ரூபேஷன்ஸ்தான்.”

”ம்ம்ம்…. அதவிடுங்க. உங்களுக்குப் புடிச்ச வேற எதாச்சும் ஒரு விஷயத்த சொல்லுங்க.”

“ட்ராவல்.”

“குட்… கடைசியா எப்போ ட்ராவல் பண்ணீங்க?”

”ரெண்டு வருஷம் ஆச்சுங்க. அவகூட மிசோரம் போனேன். அதுக்கு அப்றம் ட்ராவல் பண்ண நல்ல ஃப்ரண்ட்ஸ் கெடைக்கல. வேலையும் அதிகமாகிடுச்சு.”

“ம்ம்… சரி … இன்னிக்கி ஒரு வேல பண்ணுங்க. உங்களோட மிசோரம் ட்ரிப் பத்தி உங்களுக்கு என்ன தோணுதோ எழுதி நாளைக்கு செஷனுக்கு எடுத்துட்டு வாங்க.”


அவள் சொன்னதற்காக அந்தப் பயண நாட்களை எழுதத் துவங்கிய போதுதான் அவனுக்குள் அவனே இத்தனை காலம் தெரிந்து கொள்ளாமலிருந்த இன்னொரு முகத்தைக் கண்டுகொண்டான். நிர்ப்பந்தத்திற்காய் எழுதத் துவங்கியவனிடமிருக்கும் சோர்வோ சலிப்போ இல்லாமல் மனதை முழுமையாய் அதில் அர்ப்பணிக்க முயன்றான். போர்ன் படங்கள் பார்க்கும் போது அவனுக்குள் நிகழும் உணர்வெழுச்சியைப் போல் இல்லாமல் இந்த அனுபவம் முற்றிலும் புதுவிதமாய் இருந்தது. ஏழெட்டுப் பக்கங்கள் தாண்டியபிறகும்கூட இன்னும் சொல்வதற்கு தன்னிடம் நிறைய விஷயங்களிருக்கின்றன என நினைத்தான். பகல் நேரம் கடந்து இரவிலும் அவன் எழுதுவதை நிறுத்தியிருக்கவில்லை. அதிகாலையில் யோகாவிற்கு எழவேண்டுமென்கிற நிர்ப்பந்தத்தால் பதினோறு மணிக்கு எழுதுவதை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றான். மனம் போர்ன் பார்க்கவேண்டுமென ஒரு பக்கம் அலைபாய்ந்தபோதும் முன்பின் தெரியாத நிர்வாண உடல்கள் தந்த கிளர்ச்சியை விட இப்பொழுது மிசோரத்தின் பசுமையான மலைமுகடுகளை நினைத்துக் கொள்வதும் அந்தப் பயணத்தை எழுதுவதிலுமிருந்த கிளர்ச்சி பிடித்திருந்தது. எழுதவேண்டிய மிச்சப்பகுதிகளை நினைத்தபடியே உறங்கிப்போனான்.


மனோவின் பயண அனுபவத்தை வாசித்த பிரியதர்ஷினி அவனை இனி விரல் பிடித்து வேறு பாதைக்கு அழைத்துச் செல்வது சிரமமான காரியமில்லை என நிம்மதி கொண்டதோடு அவனுக்குள்ளிருந்த அபாரமான எழுத்தாற்றலைக் கண்டு வியக்கவும் செய்தாள்.

“இதுதான் உங்களோட அசலான உலகம் மனோ. க்ரியேட்டிவிட்டி. எந்த விஷயத்தையும் உங்களால அழகா ரசணையோட வெளிப்படுத்த முடியுது. இதுக்குள்ள ட்ராவல் பண்ணுங்க.”

மனோவும் அவள் சொன்னதை ஆமோதித்தான்.

“இதுக்கு முன்ன நான் எதையும் எழுதினதில்லங்க. இப்பவும் கூட எழுதனுங்கற பெரிய ஆசையோ லட்சியமோ இல்ல. ஆனா எழுதறப்போ மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கற மாதிரி ஒரு உணர்வு. பேய் மாதிரி கொட்ற அருவில யாருமே இல்லாம தனியா குளிச்சா எவ்ளோ பரவசமா இருக்கும், அந்தமாதிரி இருக்கு.”

என்று சிரித்தான். அங்கு சிகிச்சைக்காக வரும் எல்லோரையும் போல் சராசரியான ஒருவன் என்கிற இடத்திலிருந்து அந்த நாள் வேறு மனிதனாய்த் தெரிந்தான்.


ஒரு விஷயத்திற்கு முழுமையாய் அடிமையாதல் எத்தனைக் கொடுமையானதென்பதை அந்த சிகிச்சை மையத்தில் மனோ கண்கூடாய்க் கண்டான். மதுவிலிருந்தும் போதையிலிருந்தும் விடுபட வேண்டி அங்கு அனுமதிக்கப்பட்டவர்களின் அரற்றல், ஒரு மிடறு மது கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் சுயமரியாதையைக் கூட இழக்கத் தயாராய் இருந்த யதார்த்தத்தையெல்லாம் கண்டு நொறுங்கிப் போனான். ஒரு மனிதனின் அடையாளமென்பது வாழ்வை எவ்வாறு எதிர்கொள்கிறான், அதை எத்தனை எளிமையாய் கையாள்கிறான் என்பதில்தான் இருக்கிறது. இச்சையோ, போதையோ ஒரு எல்லைவரை மட்டுந்தான் ஆனந்தமானது. தனிமையுணர்ச்சியும், தோல்விகளும், கைவிடப்படுதலும் தற்காலிகமானதென்பதை பிரியதர்ஷினி புரிய வைத்திருந்தாள். மலைகள் தனித்திருப்பதற்காக போதை வஸ்துக்கள் எதையும் எடுத்துக் கொள்வதில்லை. நிலவு பல்லாயிரம் வருடங்களாய்த் தனித்துக் கிடப்பதற்காக வருந்தவோ தொலைந்துபோகவோ இல்லை. இயற்கையின் எல்லாமும் எப்போதும் புத்துணர்ச்சியோடு இயங்கிக் கொண்டிருக்க, மனிதன் மட்டும் ஏன் எண்ணங்களால் தன்னை வருத்திக் கொள்ள வேண்டும்?


அந்த சிகிச்சை மையத்திலிருந்த நாட்களில் தன் புலன்கள் தெளிவடைவதை உணர்ந்தான். பறவைகளைக் கவனிக்க முடிந்தது, மரங்களின் அசைவையும் காற்றின் திசையையும் தொடர்ந்து சென்றவனுக்கு ஊரின் நினைவுகள் மீண்டன. காற்றின் திசையையும் வேகத்தையும் வைத்தே மழைக்காலம் துவங்கப் போவதை ஊரில் கணித்துச் சொல்வார்கள். தென்காசியின் காற்று ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தன்மையுடையது. மழை காலத்தில் அதனிடம் யட்ஷியின் மூர்க்கமிருக்கும், வெயில் காலத்தில் ஆழ்ந்த நிசப்தமும், சாரல் காலம் துவங்குவதற்கு முன்னால் குழந்தைகளிடமிருக்கும் உற்சாகமும் நிரம்பி வழியும். ஊரை நினைத்துக் கொள்ளும்போது மனிதர்களுக்குப் பதிலாக முதலில் இயற்கையின் முகமே வந்துபோனது. ஒவ்வொரு நாள் அமர்விலும் பிரியதர்ஷினி ஒரு புதிய விஷயத்தைக் குறித்து அவனோடு உரையாடுவதால் அந்த உரையாடலுக்கென்றே கடந்தகாலத்தின் மதிப்புமிக்க தருணங்களை நியாபகப்படுத்திக் கொண்டான். நீர் வரத்தே இல்லாத காலத்தில் குற்றாலத்தின் அருவிகளிடமிருக்கும் தனிமையையும், ஊரில் சொல்லப்படும் யட்சிகளின் கதைகளையும் அவளிடம் பகிர்ந்து கொண்டான். யட்சிகளின் கதைகளைச் சொன்னபோது அவன் முகத்திலிருந்த ஒவ்வொரு உணர்ச்சியையும் பிரியா நுட்பமாய்க் கவனித்தாள்.

அவன் கதை சொல்லி முடித்த இடைவெளியில்

“சொல்றதுக்கு உங்க கிட்ட இவ்ளோ கதைகள் இருக்கா மனோ?”

என்று கேட்டவளிடம்

“இவ்ளோ கதைகள் என்னால சொல்ல முடியும்னு இப்போதாங்க எனக்கே தெரியும்..”

என்று சொல்லி சிரித்தான்.

”சின்ன வயசுல இந்த மொபைல், இண்டர்நெட் இல்லாத நாட்கள்ல தெருப்புழுதில விளையாடி ஊர் சுத்தி அலைஞ்சப்போ ஊர்ல இருந்த பெரியவங்க எவ்வளவோ சொல்லிக் குடுத்திருக்காங்க டாக்டர். அதையெல்லாம் எப்பிடி எப்போ மறந்தேன்னு எனக்கே தெரியல.”

“நாம எல்லா விதத்துலயே கரெப்ட் ஆகிட்டு இருக்கோம் மனோ, மெமரீஸும் அப்டித்தான். நம்மளோட சர்வைவலுக்குத் தேவையில்லாத விஷயங்கள ஒரு வயசுக்கு அப்றம் நாம நினைவுல இருந்து அழிச்சிடறோம். நினைவுகள் குறையும் போது கடந்த காலத்துல நாமக் கத்துக்கிட்ட எவ்வளவோ விஷயங்களும் மறந்துபோகுது…”

“உண்மைதான் டாக்டர். எனக்கு சின்னவயசுல பறவைகள கவனிக்கிற பழக்கம் இருந்துச்சு. எங்க பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துல இருந்த ஏரில ஒவ்வொரு சீசனுக்கும் நிறைய பறவைகள் வந்து போகும். இந்தப் பறவைகளோட பேர், எந்த காலத்துல எந்தப் பறவை வரும், அது எவ்வளவு காலம் இருக்கும்னு நிறைய விஷயங்களத் தெரிஞ்சு வெச்சிருந்தேன். ஆனா ஒரு வயசுக்கு அப்றம் பறவைகளப் பத்தி யோசிக்கிறதையே விட்டுட்டேன். நீங்க சொன்ன மாதிரி அதெல்லாம் என் வாழ்க்கைக்குத் தேவையில்லையோங்கற சுயநலம்தான். இப்போ இந்த செண்டர்ல இருக்கறப்போ செய்றதுக்கு எந்த வேலையும் இல்லைங்கற நிலைல என்னையும் அறியாமலேயே பறவைகள கவனிக்க ஆரம்பிச்சிருக்கேன்.”

“உங்களோட மனச எவ்வளவு விசாலமா திறந்து வெக்கிறீங்களோ அவ்வளவு ஆரோக்கியமா இருக்கலாம் மனோ. மெமரீஸ்ங்கறது கடந்த காலம் மட்டுமில்ல, அதுல நீங்க கத்துக்கிட்ட எத்தனையோ அறிவார்த்தமான விஷயமும் இருக்கு. காடு, மலை, பறவைகள்னு உங்க நினைவுல இருக்க எல்லா விஷயத்தையும் எழுத ட்ரை பண்ணுங்க. உங்களால் தனிமையுணர்ச்சில இருந்து வெளில வந்துடமுடியும், முக்கியமா பெண்கள அணுகத் தயங்காதிங்க. எல்லோரடையும் பேசிப் பழகுங்க. தயக்கமும் கூச்சமும் இருந்தா உங்களுக்கு எப்பவுமே பெண்களப் பத்தின ஆரோக்கியமான புரிதல் வராமப் போயிடும்.”

“சரிங்க டாக்டர்.”

ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும் பிரியா அவன் மனதிற்கு மிக நெருக்கமானவளாய் மாறியிருந்தாள். நல்ல நினைவுகளை அவள் மீட்டெடுக்க பழக்கியதால் ஆபாசப் படங்களால் நிரம்பியிருந்த இச்சையின் அருவருப்பான நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் துவங்கின. எந்தத் துணையையும் அணுகாமல் தன்னைத் தானே வருத்திக் கொண்டிருந்த அந்தப் படங்களின் மீதிருந்த கவனம் பெருமளவு மறைந்தபோது இச்சையின் மீது தனக்கிருந்த பெரும்பசி கட்டுக்குள் வந்திருப்பதைப் புரிந்துகொண்டான்.


முதல்நாள் சாதாரணமாய்த் தெரிந்த பிரியதர்ஷினி இப்போது அப்படித் தெரியவில்லை. அலையலையாய் புரளும் கூந்தல், எப்போதும் மெல்லிய நிற உடைகளை மட்டுமே அணியும் அவள் முகத்தில் உறைந்திருக்கும் ஆழமான அமைதி. ஒவ்வொரு முறை பேசத் துவங்கும் போதும் பேசி முடித்தபிறகும் இதழோரத்தில் எட்டிப்பார்க்கும் புன்னகை. அதிர்ந்து ஒலிக்காத அந்தக் குரல். கல்லையும் கரைக்குமென்பார்களே, அந்தக் குரலுக்கு அப்படியான சக்தியுண்டு. பதினைந்து நாட்கள் சிகிச்சை முடிந்து ஊர் திரும்பும்போது, பிரியாவுடனான பிணைப்பு இந்த மையத்தோடு தனக்கு முடிந்து போய்விடக் கூடாதென உறுதியாய் இருந்த மனோ அதை அவளிடம் வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.

”நான் இங்க வர்றப்போ இவ்ளோ கான்ஃபிடண்ட்டான ஒரு மனுஷன் இல்லங்க, ஆனா இப்போ உலகமே புதுசா இருக்கற மாதிரியும் நான் ஏதோ புதுசா பொறந்துருக்க மாதிரியும் சந்தோசமா இருக்கு. எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம். எனக்கு கவுன்சிலிங் குடுத்தீங்க அப்டிங்கறதயும் தாண்டி நீங்க எனக்கு முக்கியம். உங்களோட இந்த நட்ப ரொம்ப மதிக்கிறேன், விரும்பறேன். உங்கள இனியும் சந்திக்கனும் பேசனும்னு ஆசப்படறேன்.”


அவன் வெளிப்படுத்திய சொற்கள் எதுவும் உணர்ச்சி வேகத்தில் வந்ததில்லை என்பதை அவள் மிக நன்றாய்ப் புரிந்திருந்தாள். ஒரு மனம் அவனுடனான நட்பை ஏற்க அஞ்சியது, இன்னொரு மனம் அவனை விலக்க விரும்பாமல் அடம் பிடித்தது. மனதில் நடக்கும் போராட்டங்கள் எதையும் முகத்தில் காட்டிவிடாமலிருக்க முயன்று தோற்றாள்.

“மனோ உங்களோட ஃபீல் எல்லாமே புரியுது. ஆனா நான் மேரீட், எனக்கு பையன் இருக்கான். அப்றம் என்னோட பெர்ஷனல் லைஃப் ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் அத காம்ளீப்கேட் பண்ணிக்க விரும்பல. நீங்க எனக்கு எப்ப வேணாலும் டெக்ஸ்ட் பண்ணுங்க. கால் பண்ணுங்க. ஆனா சந்திக்கிறது என்னால முடியுமான்னு தெரியல. ஏதோ ஒருவகைல உங்களப் புடிச்சிருக்கு. ஆனா அதுக்கு எந்த லேபிளும் வெச்சு அடையாளப்படுத்திக்க வேணாம். நமக்கு நடுவுல இருக்கற தூரம் தான் நம்ம ரெண்டுபேருக்குமே நல்லது.”

பிரியா அவனையும் ஏமாற்ற விரும்பாமல் தன்னையும் ஏமாற்றிக் கொள்ளாமல் இருவருக்குமான சமாதானத்துடன் விடைகொடுத்தாள்.




3


தன் பாதையின் வெளிச்சமாய் அவளை நினைத்துக் கொள்ளத் துவங்கியபின் மனோவுக்கு இருளைக் குறித்த அச்சங்கள் விலகிப்போயின. பெண்கள் குறித்தான நினைவுகள் உடல்களாக மட்டுமே இருந்ததெல்லாம் கரைந்து பெண்மையின் முழுமையாய் அவள் தோன்றினாள். அகல் விளக்கின் வெளிச்சத்திலிருக்கும் முழுமை. நெருங்கித் தீண்டாமல் அந்த முழுமையான சுடரொளியின் வெளிச்சத்தை கவனித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் போதுமனாது. நல்ல நினைவுகளை தொகுத்து அவள் எழுதச் சொன்னதை அவன் மறந்திருக்கவில்லை, சென்னைக்குத் திரும்பிய பிறகு அறையின் அத்தனை ஜன்னல்களையும் விசாலமாய்த் திறந்து வைத்தான். போரூரைச் சுற்றியிருந்த ஏரிகளுக்கு வந்துபோகும் ஏராளமான பறவைகளை இந்த வீட்டின் மாடியிலிருந்து கவனிக்கும் மனம் வாய்த்தபோது எல்லாவற்றையும் எழுதத் துவங்கினான். ஒன்றிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டுமானால் மனப்பூர்வமாய் அதைக் குறித்து உரையாடவேண்டுமென பிரியா சொல்லியிருந்ததால் மீண்டும் ஆபாசப் படங்களின் பக்கம் கவனம் செல்லாமலிருக்க அதைப் பற்றி எழுதிவிடலாமென முடிவுசெய்தான். தான் போர்ன் அடிக்‌டாக இருந்த நாட்களையும் , அதிலிருந்து எவ்வாறு மீண்டேன் என்பதையும் தொகுத்து சிறுநூல் ஒன்றை எழுதத் துவங்கியவன் அந்த நூலை பிரியதர்ஷினிக்கு சமர்ப்பிக்க முடிவுசெய்தான்.


இந்தநான்கு மாதங்களில் பிரியாவின் வாழ்வில் எவ்வளவோ மாறிப்போயிருந்தன. ஆனால் மனோவிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் இருக்கும்அன்பில் ஒருதுளியும் மாறியிருக்கவில்லை. அவளுக்கெனதேர்வு செய்யும் ஒவ்வொரு சொல்லுக்காகவும் தவம் கிடந்திருப்பான் எனநினைக்கும்படியாய் இருக்கும். அவள்மீதான நேசமென்பது உயிர்த்திருத்தலின்மீதுள்ள பற்றைப்போல் அர்த்தப்பூர்வமாய் அவனிடமிருந்து வெளிப்படும். தர்ஷினி எப்போதும் யாரையும் சார்ந்து வாழ்ந்தவளில்லை. ஒருவரிடம் அன்பை எதிர்பார்த்து நிற்கையில் அவருக்கு தான் எதிர்பார்ப்பதை விடவும் பல மடங்கு அன்பைத் தரவேண்டுமென்பதுதான் அவளின் இளமைக் கால அனுபவமாய் இருந்தது. எதிர்பார்ப்பில்லாமல் யாரும் யாரையும் நேசிக்க முடியாதென்பது அவளின் வாழ்க்கைப் பாடம். இவன் ஒருவன் மட்டும் அதற்குள் அடங்காத விதிவிலக்காய் இருந்தான். முதல் முறையாய் அவனைப் பார்த்தபோது இருந்த தடுமாற்றமோ பதற்றமோ இப்போது வெளிப்படுவதில்லை. மின்னஞ்சல்களிலும் சரி, அவளிடம் தொலைபேசியில் பேசும்போதும் சரி அவள் எத்தனை நிதானமாக மனிதர்களைக் கையாள்கிறாளோ அதே நிதானத்தில் அவன் அவளைக் கையாள்வதைப் புரிந்துகொண்டிருந்தாள். சில நாட்கள் அவன் அழைக்காமல் போனால் ‘இவனுக்கு என்னாச்சு? ஏன் ஃபோன் பண்ணாம இருக்கான்..’ என மனதில் ஒரு தவிப்பு வரும். மூன்று நான்கு நாட்கள் இடைவெளிக்குப்பின் அவன் தொலைபேசும்போது அந்த தவிப்பைக் காட்டிவிடாமல் அவளது ஈகோ தடுக்க,


“மனோ இந்த விளையாட்டு எவ்ளோ நாளைக்கு? ஜஸ்ட் மூவ் ஆன் மேன்…”


என சலிப்பாய்ச் சொல்வாள்.


“நானும் அப்பிடித்தாங்க நினைக்கிறேன். ஆனா அப்பிடி நினைக்கிறப்போதான் உங்ககிட்ட பேசனுங்கற தவிப்பு அதிகமாகிடுது.”


என சிரிப்பான்.


“பெண்கள் கிட்ட சரணடைய நினைக்காத மனோ, கவுன்சிலிங் ல நான் உனக்கு நான் புரிய வைக்க நெனச்சது அதான். ஆனா நீ என்னடான்னா இப்போ எங்கிட்டயே சரணடையனும்னு அடம் பிடிக்கிற…”


“நான் உங்ககிட்ட சரணடையனும்னு எல்லாம் நினைக்கலங்க. சொல்லப்போனா முன்னவிட நிறைய பேரோட இப்ப பேசிப் பழகறேன். ஆனா எல்லாருமே உரையாடலக்கூட சர்வைவலுக்கானதா மட்டுந்தான் வெச்சிருக்காங்க. அதுக்கு வெளில பேசற ஆட்களையே பாக்க முடியல. அதனாலதான் எனக்குப் பேசனும்னு தோணற எல்லாத்தையும் உங்ககிட்ட ஷேர் பன்றேன்.”


“கவுன்சிலிங் குடுக்கறது என்னோட வேலை மனோ, அப்பிடிப் பாத்தா நான் உங்ககிட்ட பேசினதுமேகூட என்னோட சர்வைவலுக்கானதுதான்.”


“சர்வைவலுக்கான கான்வர்சேசனா இருந்தா என்னென்ன மருந்து மாத்திர சாப்டனும், எப்போல்லாம் யோகா செய்யனும்னு நீங்களும் ஃபார்மலாவே பேசி இருப்பீங்க. ஆனா நீங்க அப்பிடி இல்ல டாக்டர். டீரிட்மெண்ட் முடிஞ்ச வந்ததுக்கு அப்றம் எனக்கு ஆன்ஸர் பண்ணாமயேக்கூட இருந்திருக்கலாம் ஆனா இப்போவர நான் பேசறத கவனிக்கிறீங்க, என்னோட மெய்ல்ஸ வாசிக்கிறீங்க, மத்தவங்கள மாதிரி நீங்க இல்லைங்கறதாலதான் நானும் உங்களோட இந்த நட்ப ரொம்ப மதிக்கிறேன்.”


அவளுக்கு இந்த விளையாட்டு, இப்படியான அன்பு எல்லாமே புதிதானது. சில நாட்களில் அவன் தன்னை மறந்து விலகிவிடுவானென அவளுக்கிருந்த நம்பிக்கை இப்போது முற்றாக மாறிப்பொனது. அவனோடு உரையாடும்போது விளையாட்டாக சீண்டுவாள், அந்த சீண்டல் அவன் மீதான ஈர்ப்பை அதிகரித்ததே தவிர அவனை தன்னிலிருந்து விலக்கியிருக்கவில்லை. ஒரு வார இறுதியில் மதுவருந்துகையில் அவனிடம்


“டேய் இவ்ளோ மெய்ல்ஸ், இவ்ளோ கால்ஸ்னு உங்கூட டைம் ஸ்பெண்ட் பன்றேன்னு என் ஹஸ்பண்ட்க்கு தெரிஞ்சா கன்ஃபார்மா எனக்கு டைவர்ஸ் தாண்டா..”


என வருத்தத்தோடு சொன்னாள்.


“அப்டிலாம் ஆகாதுங்க.”


“ஏன் ஆகாது, உனக்குக் கல்யாணம் ஆகி உன் வொஃய்ப் யார் கூடயாச்சும் இவ்ளோ டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு இருந்தா நீ சும்மா இருப்பியா?”


“கண்டிப்பா கோவம் வரும். ஆனா டைவர்ஸ் பண்ணமாட்டேன். நீங்க என்கூட இருக்கீங்கங்கறது எனக்கு வாழ்நாள் சந்தோசம். அப்றம் எப்டி என்னால டைவர்ஸ் பண்ணமுடியும்…”


“எல்லாம் தூரமா இருக்கறப்போ சொல்லுவ, நாளைக்கே ஒரு பிரச்சனைன்னு ஆகி நான் தனியா வந்துட்டா என்னயப் பாத்துப்பியா நீ?”


“அப்பிடி நடக்கவே கூடாதுன்னு கண்டிப்பா வேண்டிக்கிறேன். ஏன்னா நீங்களே சொல்லி இருக்கீங்க. உங்களோட ஹஸ்பெண்ட் மேல உங்களுக்கு எவ்ளோ லவ்னு. பிரிஞ்சுவந்தா கண்டிப்பா அது உங்களுக்கு பெய்னா இருக்கும். ஆனா ஒருவேள அப்டி ஏதாச்சும் ஆச்சுன்னா கண்ல வெச்சுத் தாங்குவேன்.”


அவன் இதைச் சொல்லும்போது மிக நிதானமாகவே சொன்னான். அவள்தான் தடுமாறிப்போனாள். யாரிடமும் இப்படி அவள் கேட்டதில்லை. மகியிடமும். திருமணமாகி இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட அவனிடம் ‘என்னய எப்பவுமே பாத்துக்குவியா மகி?’ எனக் கேட்டதில்லை. இவனிடம் ஏன்? அவன் அன்பு தன்னைப் பலவீனப்படுத்துகிறதை உணர்ந்தவள் அவனிடமிருந்து சில நாட்களுக்கு விலகியிருக்க நினைத்தாள். அவனது மின்னஞ்சல்கள் அவளின் உறுதியை எந்த நொடியிலும் உடைத்துவிடுவதாய் இருந்தன.


டியர் பிரியதர்ஷினி


இங்கு கோடைகாலம் துவங்க இருப்பதன் அறிகுறியாய் ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன. கோடை காலத்தைத் தேடி ஒரு பறவைக்கூட்டம் வருவதும், கோடை காலம் வேண்டாமென இங்கிருந்து பறவைக் கூட்டம் வேறு இடத்திற்குச் செல்வதுமான பறவைகளின் இந்த இடமாற்றங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது. பார்க்க சின்னஞ்சிறியதாய் இருக்கும் இந்தப் பறவைக் கூட்டங்களில் ஒவ்வொரு இனத்திற்கும் எத்தனை வேறான குணநலன்கள். அன்றில் பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், பெரும்பாலும் நெய்தல் நிலத்தில் வாழக்கூடிய இனமிது. சிவப்பு நிறத் தலையும், இறால் மீனுக்கு உள்ளது போன்ற அலகும் கொண்ட இந்தப் பறவைகள் பனைமரக் கொம்புகளில் கூடிகட்டி வாழ்கின்றன. இதன் முக்கியமானதொரு குணம் யாதெனில் இவை பெரும்பாலும் தன் துணையுடன் சேர்ந்து வாழும், ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கையில் இப்பறவை எழுப்பும் ஒலிக்கு உளறல் என்றும், கருவுற்றப் பெண் பறவை எழுப்பும் குரலுக்கு நரலல் என்றும் பெயருள்ளது. துணையில் ஒன்று பிரிந்துவிட்டால் குரல் எழுப்பும், இந்தக் குரலை அகவல் என்கிறார்கள். துணையைப் பிரிந்து வாடும் அந்த அகவல் எத்தனை துயர்மிக்கதென இப்போது நான் உணர்ந்துகொள்கிறேன். அன்றிலின் உளறலையும், நிரலலையும் நான் கேட்டதில்லை. ஆனால் ஆண் பறவையின் அகவலை ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த அறைக்கு வெகு தொலைவிலிருப்பதாக நான் நினைத்த பனைமரங்கள் இப்போது என் படுக்கையறையை ஆக்ரமித்திருப்பதாகப் படுகிறது. ஜன்னலுக்கு வெளியே தூரத்து நிலங்களைப் பார்க்க முடிகிற அதிகாலைகளில் நான் என்னையொரு அன்றிலாய் உணர்கிறேன்.


மனோ.


ஒருநாள்காலை தன்முகவரிக்கு வந்த தபாலைப் பிரித்துப்பார்த்தவள் அதிலிருந்த நூலையும் அதன் முதல் பக்கத்தில் அவளுக்கானசமர்ப்பணத்தையும் கண்டு சிலிர்த்துப்போனாள். இவன் இத்தனை ஆராதிக்குமளவிற்குஎன்ன செய்துவிட்டோமெனத் தெரியாமல் பிரியா திக்குமுக்காடிப்போயிருந்தாள். அவன்புத்தகத்தை வாசிக்கத் துவங்கியபோது செவிகளில் புல்லாங்குழலின் மெல்லிசை நிரம்பியது. கண் முன்னால் வர்ணங்கள்தானே சித்திரங்களாய்த் தோன்றி மறைந்தன. இந்தஉலகை அவனது கண்களின் வழியாய் பார்க்கத் துவங்கியபோது தான் யாரென்பதை மறந்துபோகத்துவங்கினாள். இப்படிபார்க்கக் கற்றுக் கொடுத்தவள் நீதானென அவன் பலநூறு முறைசொல்லி இருந்தாலும் அந்த உலகம் எத்தனைவாஞ்சையும் நேசமுமானது என்பதை அவன் எழுத்தின் மூலமாகத்தான்அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.


“உன்ன பாக்கனும் மனோ.”

இப்படியொரு குறுஞ்செய்தி அவனை வந்து சேர்ந்த அடுத்த நொடியில் அவன் அவளை சந்திக்க கிளம்பினான். மலை முகடுகளில் தவழும் காற்று மரங்களைத் தழுவிக் கொள்ளத் துடிக்கும் வேகத்தைப்போல், கரையைத் தொட்டுத் திரும்ப துள்ளிக் குதிக்கும் அலையின் உற்சாகத்தைப்போல் மாலை விமானத்தில் பெங்களூர் வந்தான். தன் வீட்டிற்கு அருகிலேயே ஒரு விடுதியில் அவனுக்காக அறையை முன்பதிவு செய்திருந்தாள். எதுவெல்லாம் தன் வாழ்வில் ஒருபோதும் நடக்காதென நினைத்திருந்தாளோ அதுவெல்லாம் அன்று நடக்கத் துவங்கியது. தாபத்தின் வெக்கையை அவனுக்காக காத்திருந்த இந்த சில மணிநேரங்களில் பிரியா உணர்ந்திருந்தாள். உடலின் ஒவ்வொரு செல்லிலும் பரவசமும் இனம்புரியாத களிப்பும் நிரம்பித் தளும்பியது. நீண்ட வாகன நெரிசலைக் கடந்து அவன் விடுதிக்கு வந்து சேர்ந்தபோது ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. வாடகை வண்டியை விட்டு இறங்கியவனை மென்மையாய் அணைத்துக் கொண்டாள்.

“ஸாரிடா ஏர்போர்ட் வரமுடியல.”

அவள் அணைப்பிலிருந்த கதகதப்பு இன்னும் சில நிமிடங்கள் தன்னோடு அதே நெருக்கத்தில் இருக்கமாட்டாளா என அவனை நினைக்க வைத்தது. ஆழ்ந்த அமைதியும் நிதானமும் உறைந்த அதே முகம். சின்னஞ்சிறிய மேலுதடும் அதைவிட சற்றே பெரிய கீழுதடும் மென்மையாய் புன்னகைக்கையில் ஒரு ஜென் துறவியை நினைவுபடுத்தும். எல்லாவற்றையும்விட அவள் கண்களின் ஆழத்தை எளிதில் அணுகமுடியாமல் பாதுகாப்பு வளையம்போல் இருக்கும் அவளின் கண்ணாடி. சாதாரண ஃப்ரேம்தானென்றாலும் அந்தக் கண்ணாடி அவளுக்காக பிரத்யேகமாய் உருவாக்கப்பட்டதாய் இருக்க வேண்டும். மனோ அந்தக் கண்ணாடியையும் மீறி அந்தக் கண்களின் ஆழத்துக்குள் புதைந்துகிடக்கும் அவள் மனதைத் தேடிச்செல்ல விரும்பினான்.

அறைக்குள் நுழைந்தவுடன் பின்னாலிருந்து இறுக்கமாய் அவனை அணைத்துக் கொள்ள, அவனுடல் சிலிர்த்து நடுங்கியது. ரத்தஓட்டத்தில் திடீரென புகுந்துகொண்ட அதிதச் சூட்டில் நிலைகுலைந்து போகவிருந்தவனை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டவளின் கண்ணீர்த் துளிகள் அவன் சட்டையின் தோள்ப்பகுதியை ஈரமாக்கியபோது அவசரமாய்த் திரும்பி அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவள் அந்த முத்தத்தை ஏற்றுக் கொள்ள, அவளின் கண்கள் மூக்கு கன்னம் என முத்தமிட்டு இதழ்களில் ஆழமாய் முத்தமிட்டான். அந்த ஒரேயொரு முத்தம்தான் இத்தனையாண்டுகால வாழ்வின் அர்த்தபூர்வமான நிகழ்வோ என நினைக்கும்படி அவன் இதழுகளுக்குள் முழுமையாக தன் இதழ்களை ஒப்புக்கொடுத்தாள், அவன் கைகள் அவள் உடலெங்கும் அலைந்து களைந்து கிடக்கும் அவள் கூந்தலைத் துளாவி நடுமுதுகின் கோட்டில் ஊர்ந்து அவளோடு அந்தரங்கமாய்ப் பேச, இதழ்களை இப்போதைக்கு விடுவதில்லையென்கிற தீவிரத்தோடு முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவளுக்கு முதலில் மூச்சுமுட்டியது, அச்சமாயிருந்தது, ஆனால் இந்த முத்தம் வேண்டும். அவன் எழுதிய அத்தனை மின்னஞ்சல்களுக்கும் எழுத நினைத்து தவிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளையும் அவனாகப் புரிந்து கொள்ளட்டும். சொற்களால் அவன் வீழ்த்தியதைப்போல் தன்னால் பதில் எழுதமுடியாதுதான், ஆனால் அவனுக்குத் தன்னை ஓப்புக் கொடுக்கமுடியும். அவன் முத்தத்தில் முழுவதுமாய்க் கரைந்து கிடந்தவளை தன்னிலிருந்து விலக்கியவன் அவள் காதுகளில் அவளுக்கே அவளுக்காய் சேமித்திருந்த காதலைச் சொன்னான்.

“இந்த நிமிசம் இந்த நொடி எவ்வளவு அற்புதமானது தெரியுமா பிரியா, என் வாழ்க்கை முழுசுக்கும் இது போதும். இது மட்டும் போதும்.”

அவள் கைகளில் முத்தமிட்டவன் முழங்காலிட்டு அவளின் கால்களை ஏந்திக் கொண்டு பாதத்திலும் முத்தமிட்டான்.

“உன்னய இவ்ளோ நெருக்கமா நான் பாக்கவே கூடாதுன்னு இருந்தேன் மனோ, ஆனா முடியல. உன்னோட ஒவ்வொரு மெய்லுக்கும் நான் அனுப்பாத பதில் ல தான் நான் இருந்தேன். நீ என் சந்தோசமான லைஃப நாசம் பன்றியேன்னு கோவம் வரும். ஆனா எல்லாத்தையும் தாண்டி எப்பவும் உன் நெனப்பு வந்துடும். என்னால என் வீட்ல இயல்பா இருக்க முடியல மனோ, கடைசியா உன்னப் பாத்தப்போ உன் கண்ல இருந்த தேஜஸ நான் இன்னும் மறக்கல. உன்னோட ஒவ்வொரு லெட்டர்லயும் நான் உனக்கான வெளிச்சம்னு நீ எழுதறத படிக்கிறப்போல்லாம் அது உண்மை இல்லடா, நீதான் எனக்கான வெளிச்சம்னு பதில் சொல்லத் தோணும். ஆனா சொல்ல மாட்டேன். நான் செய்றது தப்பா சரியான்னு தெரியாது மனோ, ஆனா எனக்கு என் வாழ்க்கை முழுக்க நீயும் வேணும். நீ எனக்காக மட்டும் இருக்கனும்னு சுயநலமா யோசிக்கிறேன். எவ்வளவோ பேருக்கு ரிலேஷன்சிப் சம்பந்தமா கவுன்சிலிங் குடுத்திருக்கேன். ஆனா எனக்கே ஒரு குழப்பம்னு வர்றப்போ நான் சுயநலவாதியாத்தான் இருக்க முடியுது மனோ.”

தன் காலடியில் தலைவைத்துக் கிடந்தவனை இறுக அணைத்துக் கொண்டாள். மனோ இவ்வளவு ஆர்ப்பரிப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் எப்போதும் ஆழ்கடலைப்போலிருப்பவள், ஒவ்வொரு சொல்லையும் நிதானமாய் வெளிப்படுத்தும் பறவை என்று நினைத்திருந்தவனுக்கு இந்த ஆர்ப்பரிப்பு திக்குமுக்காடச் செய்தது.

“நீ சுயநலமாவே யோசி பிரியா. எனக்கு உன்னயப் பத்தி யோசிக்கிறதவிட உன்னய நெனச்சுட்டு இருக்கறதவிட சந்தோசம் வேற எதுவுமில்ல. என்னோட எல்லாப் பயணத்துலயும் நிழலா இருப்பங்கற சந்தோசமும், உன் பேச்சும் அன்பும் போதும் நான் நூறு வருஷம் வாழ்ந்துடுவேன்.”

அவள் மார்களுக்கு நடுவே முகம் புதைத்துக் கொண்டான்.

அவனுக்காகத் தேக்கியிருந்த தாபம் பெருக்கெடுத்து அவனை வாரிச் சுருட்டிக் கொள்ள, மனோ அந்த பேரலையில் இரவு முழுக்க மூச்சடக்கி நீந்தினான். அவனோடு பின்னிக்கிடந்த நொடிகளில் உலகம் மறந்து போனது, செய்யக்கூடாதவொன்றைச் செய்கிறோம் என்கிற குற்றவுணர்வுகள் எல்லாம் நொறுங்கி தான் அவனுக்காக பிறப்பெடுத்தவள் இந்தக் கலவிதான் தன் முழுமையென்கிற தீவிரத்தில் அவனோடு சங்கமித்தாள்.

இரண்டு மனிதர்களுக்கு இடையிலான காதல் துளிர்விடும் தருணத்தை அறுதியிட்டுச் சொல்லமுடியாமல் போகலாம், ஆனால் அந்தக் காதல் பூத்துக் காய்த்து உயிர்ப்புள்ளதாய் மாறுவது நீண்ட கலவிகளுக்குப் பின்பாகத்தான். அவள் வியர்வையின் உப்பில், உள்ளங்கையின் சூட்டில், காதுமடல்களின் உணர்ச்சித் தகிப்பில் லயித்து நாவால் ருசி கண்டவனுக்குள் அவள் உயிரின் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவர்கள் பெங்களூரின் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார்கள், ப்ளாஸம்சில் அவனுக்கென சில புத்தகங்களை வாங்கிப் பரிசளித்தாள். கூட்டம் நிரம்பிய மாலை நேர மதுவிடுதியில் இருவரும் பியர் அருந்தியபடி நடனமாடினார்கள். அவனோடு கழித்த ஒவ்வொரு நொடியிலும் அவள் இத்தனை காலம் பார்த்த நகரம் புதிதாய் இருந்தது, வெளிப்பார்வைக்கு இயல்பாய்த் தெரிந்த அவன் எத்தனை அதீதம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவனது மின்னஞ்சல்களிலிருந்த காதல் வெற்றுச் சொற்களல்ல என்பதை அருகாமையில் உணர்ந்துகொண்டாள். அவனை வழியனுப்புகையில் மார்க்வெஸின் லவ் இன் த டைம் ஆஃப் காலரா நாவலின் முன் பக்கத்தில் ‘நீ யாராய் இருந்தாய் என்பது குறித்தோ, நான் யாராய் இருந்தேன் என்பது குறித்தோ எந்த அக்கறைகளும் இனியில்லை. நீ எனக்கானவனாகவும் நான் உனக்கானவளாகவும் என்றென்றைக்கும் இருப்போமென’ எழுதிக் கொடுத்தாள். தன்னை எப்போதும் கைவிடப்பட்டவனாகவே உணர்ந்த மனோவிற்கு இந்தச் சொற்கள் தந்த பேரின்பம் அசாதாரணமானது. ஊர் திரும்புகையில் பயணம் சடாரென முடிந்துவிட்ட ஏமாற்றம் அவனுக்கு. இதோ இன்னும் சில நொடிகளில் இங்கிருந்து போய்விடப் போகிறோமென மனம் படபடக்க, இன்னொரு முறை அவள் பாதங்களில் முத்தமிடவேண்டுமென மனம் துடிக்க, முழங்காலிட்டு அவள் பாதங்களை ஏந்தினான். விமான நிலைய வாசலில் சிலர் அவர்களை வினோதமாய்ப் பார்க்க,

“டேய் ஏர்போர்ட்ரா லூசு… கால விடு…”

என பிரியா அவசரமாக விலகிக் கொண்டாள்.

265 views

Recent Posts

See All
bottom of page