Guns and thighs - ராம் கோபால் வர்மா
- லக்ஷ்மி சரவணகுமார்

- 3 days ago
- 3 min read

ரெண்டாம் ஆட்டம் தொடர் எழுதுவதற்கு முன்னால் மதுரையின் பிரபலமான முன்னாள் ரவுடிகளை சந்தித்து உரையாட நேர்ந்தது. அப்பொழுது நீங்கள் ரவுடியானதற்கு எது தூண்டுதலாக இருந்தது எனக் கேட்டபோது சொல்லி வைத்தாற்போல் அவர்களில் சிலர் சொன்னக் காரணம் ராம் கோபால் வர்மாவின் சிவா திரைப்படம். தமிழில் டப்பிங் செய்யப்பட்ட வெளியிடப்பட்ட அந்தத் திரைப்படம் இங்கு பெரும் வெற்றி கண்டது. அந்தத் திரைப்படத்தில் சைக்கிள் செயினை உருவி நாகார்ஜூனா சண்டையிடும் காட்சி சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று. ரவுடிகள் குறித்த திரைப்படங்களில் அந்தத் திரைப்படத்திற்கு தனித்த இடமுண்டு.
ராம்கோபால் வர்மாவின் திரைப்படங்கள் அதிகமும் அவரது உள்ளுணர்வைப் பிரதிபலிக்கக் கூடியவை. மற்றவர்களின் சரி தவறுகள் முன் முடிவுகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் தனது போக்கில் கதை எழுதக்கூடியவர். தனது திரையுலக அனுபவங்களை தனக்கே உரிய துணிச்சலான வார்த்தைகளில் இந்த நூலில் எழுதியிருக்கிறார்.
ராம் கோபால் வர்மா அவரது நடவடிக்கைகளுக்காக அதிகம் விமர்சிக்கப்படுபவர். சில சமயம் இதையெல்லாம் வெறும் கவனிப்புக்காக செய்கிறாரோ என்றுகூட நான் நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த நூலை வாசித்தபொழுது அவரது இயல்பே அதுதான் என்பது தெரிந்தது.
ஒரு திரைப்பட இயக்குனருக்கு இருக்கும் சவால் வெற்றிகரமான திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்ல, வெற்றியின் போதும் தோல்வியின் போதும் அதை எவ்வாறு கையாள்கிறோம் என்பதில் இருக்கிறது. மிகப்பெரிய வெற்றிகளையும் அதற்கு இணையாக பெரும் தோல்விகளையும் தனது திரையுலக வாழ்வில் சந்தித்து வர்மா ஒரு போதும் தனது பாணியையோ அணுகுமுறைகளையோ மாற்றிக் கொண்டதில்லை. இந்த நூலில் ஒரு இயக்குனர் தன்னோடு பணிபுரியும் சக கலைஞர்களை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறித்து பேசியிருக்கிறார்கள். நீண்டகால நட்பு அல்லது உதவும் மன நிலையில் யாரும் யாருடனும் வேலை செய்யக் கூடாது. ஒரு திரைப்படம் அதற்கு தகுதியான கலைஞர்களைக் கண்டுகொள்ளும். நமது வேலை அந்த போக்கிற்கு அமைதியாக வழிவிடுவதுத்கான். பல திரைப்படங்கள் சரியாக வராமல் போவதற்கு முக்கியக் காரணம் இந்தப் போக்கினை நாம் வலிந்து மாற்ற நினைப்பதுதான்.
இந்த நூலில் திரைப்பட உருவாக்கம் குறித்த தொழில்நுட்ப விவரங்களையோ ஒரு இயக்குனர் எவ்வாறு படப்பிடிப்புத் தளத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தோ வர்மா எழுதவில்லை. அடிப்படையில் இருக்க வேண்டிய உள்ளுணர்வு குறித்துதான் அதிகமும் பேசுகிறார். ஒவ்வொரு நாளும் நாம் திட்டமிடுகிற காட்சிகள் சரியாக எடுக்கப்பட நிறைய வேலை செய்யவேண்டும். அதில் குழப்பங்களோ தவறுகளோ நடக்கையில் உடனடியாக முடிவெடுக்கக் கூடிய திறன் வேண்டும். இந்த திறன் தான் உள்ளுணர்வு. கதைய தேர்வு செய்வதிலிருந்து அது முழுமையான திரைப்படமாக வெளியாகும் வரை இந்த உள்ளுணர்வுதான் ஒரு இயக்குனருக்கு உற்ற துணை.
லிங்கம் தொடரை இயக்குவதற்கு முன்பாக இந்த நூலை நான் வாசித்திருந்தால் நிச்சயம் எனக்கு உதவியாக இருந்திருக்கும். சக மனிதர்கள் மீது நமக்கு இருக்கும் மதிப்புகள் மரியாதைகள் எல்லாம் ஒரு திரைப்பட உருவாக்கத்தினை விடவும் முக்கியமானவை என நான் நினைப்பேன். அதனாலேயே படப்பிடிப்புத் தளங்களில் யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. ஆனால் அது பலவீனமான செயல்பாடு என்பதை சில நாட்களிலேயே கண்டுகொண்டேன். அதை மாற்றிக் கொள்ள நினைத்தாலும் முடியவில்லை. வெவ்வெறு துறைகளைச் சேர்ந்த மனிதர்களோடு வேலை செய்யும்போது நாம் எதையும் எவரையும் பொருட்படுத்தாத இரும்பு மேல்சட்டையை அணிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முகத்தில் சிறிதளவு கூட கருணையைக் காட்டிவிடாத இறுக்கமும் முக்கியமானது.
ஒரு திரைப்பட இயக்குனரின் கருணை அவனது வேலைக்கு எதிரானது. அதனை அணுபவப் பூர்வமாக உணர்ந்தேன். நீங்கள் ஓநாய்கள் சூழ வேலை செய்கிறீர்கள், எந்த நிமிடமும் ஏதாவதொரு ஓநாய் உங்களை வேட்டையாட தயாராக இருக்கும். அவர்களிடம் நீதியைக் கற்பிக்க நினைப்பது முட்டாள்த்தனம். திருட்டுத்தனங்களும் சில்லறைத்தனங்களுமே பெரும்பாலான சமயங்களில் வெற்றிகரமான அணுகுமுறையாக இருக்கிறது. அல்லது அப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள். சமாதானம் கருணை எல்லாம் ஒரு இயக்குனர் தான் எடுக்கும் திரைப்படங்களில் காட்டலாம் அவரே உதாரணமாக இருந்தால் அவரைச் சுற்றி இருக்கும் ஓநாய்கள் வெறிகொண்டு வேட்டையாடும். ( எல்லா இயக்குனர்களும் இப்படி இருப்பதில்லை. ஆனால் ஒரு சிலர் இப்படி இருப்பதுதான் தங்களது வெற்றிக்கு நல்லது என நினைக்கிறார்கள். )
கடந்த வருடம் புல்லட்ஸ் ஓவர் பாம்பே என்றொரு நூல் வாசித்தேன். சத்யா திரைப்படம் வெளியானபின் ஹிந்தி சினிமாவில் நிகழ்ந்த மாற்றங்களைக் குறித்து விரிவாக அலசும் நூல் அது. சினிமாவின் மீது பெரும் கனவுகளோடு வந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கிய அந்தத் திரைப்படம் கதை சொல்லும் முறையையும் பார்வையாளர்களின் மனநிலையையும் முற்றிலுமாகத் திருப்பிப் போட்டது. சினிமாவில் காட்டத் துணியாத ஒரு பம்பாயை அவர்கள் காட்டினார்கள். அதனால் தான் இன்றளவும் அந்தத் திரைப்படம் முக்கியமானதாக இருக்கிறது. தமிழில் பீமா உட்பட சில திரைப்படங்கள் சத்யாவை காப்பி அடித்து எடுக்கப்பட்டவை தான். வெவ்வேறு மொழிகளிலும் அப்படி திரைப்படங்கள் வெவ்வேறு மொழிகளில் வெளியாகின. ஆனால் அவை எதுவும் சத்யா திரைப்படத்தின் கால் தூசுக்கு ஆகாது.
ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்விகளைக் கொண்டு அந்தத் திரைப்படத்தையோ அதன் இயக்குனரையோ நாம் மதிப்பிடக் கூடாது. எத்தனையோ திரைப்படங்கள் அது வெளியான காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் போயிருக்கின்றன. இந்த நூலிலேயே வர்மா அப்படி நிறைய உதாரணங்களைக் குறிப்பிடுகிறார். ஒரு திரைப்படம் வணிகரீதியாக வெற்றிபெற ஏராளமான காரணங்கள் உண்டு. கவனிக்கப்படாமல் போவதற்கும் தான். இந்தக் கணக்குகளைத் தாண்டி நாம் செய்கிற வேலையை முழுமையாக அனுபவித்து செய்ய வேண்டியது முக்கியம்.
பாசு சாட்டர்ஜி மிகப்பெரிய இயக்குனர். ஆனால் ஒரு கட்டத்தில் படங்கள் கிடைக்காமல் வர்மாவிடம் உதவி கேட்டு வருகிறார். மனோஜ் பாஜ்பாயிடம் கதைசொல்லவேண்டும் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ய முடியுமாவென… வர்மா மனோஜ் பாஜ்பாயிடம் பேசுகிறார். ஆனால் மனோஜ் மீட்டிங் கொடுக்கவில்லை. இப்படி இரண்டு மூன்று நாயகர்களை முயன்று பார்த்தும் நடக்கவில்லை. ஏனெனில் அன்றைக்கு பாசு சாட்டர்ஜியைச் சுற்றி ஒளிவட்டமோ வெற்றியோ இல்லை. சினிமாவைப் போல் கருணையே இல்லாத ஒரு தொழிலைப் பார்க்க முடிகிறது. வெற்றிகரமான நாட்களில் உங்களைச் சுற்றி இருக்கும் கூட்டத்தில் ஒருவர் கூட உங்களது தோல்வியின் போது உடனிருப்பதில்லை. அந்தக் கூட்டம் விரும்புவது அந்த மனிதனை அல்ல அவனது வெற்றியை. பாசு சாட்டர்ஜியின் நிலைதான் பிற்பாடு வர்மவுக்கும் வந்தது. ஆனால் வர்மா திரைப்படம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எப்போதும் கவனிக்கப்படும் ஒரு ஆளுமைதான்.
இந்த நூலை வாசித்தபொழுது கற்றது தமிழ் ராம் அவர்கள் தனது திரையுலக அனுபவங்களை ஒரு நூலாக எழுதினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. நான் மேலே குறிப்பிட்டபடி வணிக வெற்றிகளைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் தனக்குப் பிடித்தமான கதைகளை மட்டுமே திரைப்படமாக எடுக்க வேண்டும் என்கிற மனவுறுதி முக்கியமானது. சினிமாவைக் குறித்து அவருக்கு இருக்கும் அபாரமான ஞானத்தை அவரோடு உரையாடும் போது நாம் தெரிந்துகொள்ள முடியும். இவையெல்லாவற்றையும் விட புதிய இயக்குனர்களை அவர் அரவணைத்துச் செல்லும் மனப்போக்கு. தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோருக்கும் ஒரேவிதமான அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தக் கூடியவர். புதிய திறமைசாலிகள் மீது அக்கறை காட்ட, ராமைத் தவிர இன்று தமிழ் சினிமாவில் வேறு இயக்குனர் இல்லை.



