top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

HUNTSMAN



கானகன் நாவல் வெளியாகி பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இந்த நாவலை எழுதத் தூண்டுதலாக இருந்து மேக்கரையில் உள்ள நண்பர் ரஃபிக் அவர்களின் சச்சாவான அலி முதலாளி. தங்கப்பன் என்றொரு வேட்டைக்காரனைக் குறித்து அவர் குறிப்பிட்ட சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கதையை நான் உருவாக்கினேன். எனக்குத் தெரிந்த நிலத்தில் அந்தக் கதையை நிகழ்த்திப் பார்க்கவேண்டுமென முடிவுசெய்து தேனி மாவட்டத்திற்கு மாற்றினேன். வேட்டைக்காரனின் கதை மட்டுமே இந்த நாவலுக்குப் போதுமானதாயில்லை என்பது ஒரு கட்டத்தில் பிடிபட மலையைச் சார்ந்த வாழும் பளியர் இன மக்களின் வாழ்வையும் இந்த கதைக்குள் கொண்டுவர முடிவுசெய்தேன். இந்த நாவலுக்காக நிகழ்ந்த பயணங்கள், அறிமுகமான நண்பர்கள் அவர்கள் சொன்ன கதைகள் என எல்லாமுமே இப்பொழுது பசுமையான நினைவுகளாய் இருக்கின்றன.


ஒரு நாவலை எழுதுகையில் எழுத்தாளன் வாசகனுக்கு மட்டுமில்லாமல் தனக்கும் புதிய செய்திகளை எடுத்துக் கொள்கிறான். எழுதுவதென்பது பழைய நினைவுகளிலிருந்து தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்வதான செயல். பழைய மனிதனின் குறைகளை பிசிறுகளை பலவீனங்களை விலக்கி வைத்துவிட்டுப் பார்க்கும் புதிய மனிதன் முன்னிலும் உத்வேகமாய் செயல்படத் துவங்குகிறான். அந்த வகையில் கானகன் எழுதிய நாட்களும் நூல் வெளியானதற்குப் பிறகான சில மாதங்களும் என் வாழ்வில் முக்கியமானவை.


கானகன் நாவல் ஏராளமான விருதுகளை வென்றது, இன்றைக்கு சில கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பாடத்திட்டமாக உள்ளது. நிறைய மாணவர்கள் இந்த நாவலில் ஆய்வு செய்கிறார்கள். ஆனால் போதுமான உரையாடலை இந்த நாவல் நிகழ்த்தியிருக்கிறதா என்றால் இல்லையென்றுதான் தோன்றுகிறது.


கானகன் huntsman என்ற பெயரில் அஷ்வினி குமார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி நான்காண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் பெரிய அளவில் இது மற்ற மொழிச் சூழலுக்குச் சென்ற சேரவில்லை. பிற இந்திய மொழிகளில் புதிதாக எழுத வருகிறவர்கள் கவனிக்கப்படுகிற அவளவிற்கு தமிழின் சமகால எழுத்தாளர்கள் கவனிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். அவர்களது படைப்புகள் பரவலாக மற்றமொழிகளில் மொழிபெயர்க்கபட்டிருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மிகுந்த சிரமங்களுக்கிடையில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அந்த நூல்கள் குறித்த மதிப்புரைகளோ விமர்சனங்களோ எழுதப்படுவதுமில்லை. பதிப்புச் சூழல் அதீத வளர்ச்சி கண்டிருக்கும் இன்று நாம் உலகின் பல்வேறு மொழி எழுத்தாளர்களை தமிழில் வாசிக்கிறோம், இந்த வீச்சு நமது தமிழ் நூல்களுக்கு ஏன் நடப்பதில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கிற தமிழர்கள் அங்கிருக்கும் தமிழ் சங்கங்கள் இதற்கான முன்னெடுப்புகளைச் செய்யவேண்டியது அவசியம். மொழியின் மீது நாம் செலுத்தும் அக்கறை அந்த மொழியிலுள்ள நல்ல நூல்களை மற்ற மொழியினருக்கு எடுத்துச் செல்வதிலும் இருக்கிறது.


ஹண்ட்ஸ்மேன் குறித்து முன்பும் பலமுறை குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் எழுதக் காரணம் இன்னும் சிலரின் செவிகளை நமது கோரிக்கைகள் சென்றடையாதா என்கிற தவிப்புதான். ஒரு எழுத்தாளனுக்கு அவன் புத்தகங்கள் வாசிக்கப்படுவதை விட வேறு என்ன தேவையாய் இருந்துவிடப் போகிறது.

31 views
bottom of page