top of page

The wolf moon

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 2 minutes ago
  • 11 min read

ree

” Herr God, Herr Lucifer   

Beware

Beware.

 

Out of the ash

I rise with my red hair   

And I eat men like air.”

Lady Lazarus   By Sylvia Plath

            

   1


வியன்னாவுக்கு அருகிலிருக்கும் வைடன் என்னும் கிராமத்திலிருந்து தேசாந்திரியாய் தனது பயணத்தைத் தொடங்கிய ஜேகப் ஸ்டேன்ஸ், 1858 வது வருடம் சில ஃப்ரெஞ்சு அதிகாரிகளுடன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தபோது ஐம்பது வயதை நெருங்கியிருந்தார்.


பதினொன்றாவது வயதில் இசைக்கலைஞராக தன் வாழ்வைத் தொடங்கிய ஸ்டேன்ஸ் சிறு வயதில் தேவாலயத்தின் அதிகாலை மணியோசையால் ஈர்க்கப்பட்டார்.  ஒலியின் மீதும் இசையின் மீதும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்ததைக் கண்ட அவரது தந்தை மகனுக்கு ட்ரம்பட் இசையின் அடிப்படைகளைக் கற்றுக் கொடுத்தார். ஸ்வரங்கள் அவர் மனதில் நுழைந்தபின் அவரது உலகம் இசையால் நிரம்பியது. அவ்வுலகில் மனிதர்களின் இருப்பு பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.


ஒரு கலைஞன் எப்போதும் கலைஞனாகவே இருப்பதால் உருவாகும் மனக்குழப்பங்களும் சமனற்ற நிலையும் அவரை மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்தியது. குடியும் சூதாட்டமும் வாடிக்கையானது. திருமணம் முடிந்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தபிறகும் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏதும் இல்லை. வயது கூடியபோது அவர் தனது உலகத்தை மௌனத்தால்  நிரப்பினார்.


வருடத்தின் பெரும்பாலான நாள்கள் பயணம் செய்தவர், தனது குடும்பத்துடன் இருக்கும் பொழுதுகள் சுருங்குவதைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை. மகள்கள் வளர்ந்தார்கள். அச்சிறுமிகளுக்கும் இசையின்பால் ஈர்ப்பிருப்பதைக் கண்ட அவரது மனைவி அவர்களை இசை கற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. மனிதனின் அகந்தையையும் சுயநலத்தையும் வளர்க்கும் கலையின்மீது அவளுக்குத் துளியும் மதிப்பில்லாமல் போனது. இரவு தூங்கும்போது தன் மூன்று மகள்களையும் அணைத்தபடி நிறையக் கதைகள் சொன்னாள். அந்தக் கதையில் வந்த மனிதர்கள் ஒருவருக்குக் கூட ஸ்டேன்சின் சாயல் இல்லாமல் பார்த்துக் கொண்டாள். “அம்மா, கதையில் வரும் ஒருவர்கூட அப்பாவைப் போல் ட்ரம்பெட் வாசிக்கவில்லையே, அப்பாவைப் போலப் பாடவில்லையே ஏன்?” என்றாள் ஒரு மகள். தந்தை என்பவன் வெறும் உறவு அல்ல. அவன்தான் தன் குழந்தைகளின் விதை என்று புரிந்துகொண்டபோது அவள் அவர்களுக்குக் கதை சொல்வதை நிறுத்தினாள்.


தனது நிழலைக்கூட திருமதி ஸ்டேன்ஸ் விரும்பவில்லை எனத் தெரிந்துகொண்ட ஸ்டேன்ஸ் முதன்முறையாக அவளிடம் கோபம் கொண்டார். குழந்தைகளுக்கு இசை கற்றுக்கொடுப்பேன் என  தீர்மானமாகச் சொன்னார். அன்று பின்னிரவில் அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் தன் பிள்ளைகளுடன் திருமதி ஸ்டேன்ஸ் காணாமல் போனாள்.

அதுவரை சுகமாக இருந்த தனிமை முதல்முறையாக அவரைச் சுட்டது. தன் தனிமைக்குத் தன் குடும்பம் கொடுத்த விலை எவ்வளவு அதிகம் என்று அவரது மனைவி வெளியேறிய அன்றுதான்  புரிந்தது. ஸ்வரங்களுக்கிடையே இருக்கும் இடைவெளி, அந்த மௌனம்தான் இசை என்ற பேருண்மையைச் சொல்லாமல் சொல்லிச் சென்றாள் அவள். அந்த மௌனம் இனி தன்னுடன் இல்லை என்று அவர் உணர்ந்த பிறகு ஸ்வரங்கள் அபஸ்வரங்களாகின. எதைக் காரணம் காட்டி மனிதர்களை அவர் கைவிட்டாரோ அந்த இசை அவரைக் கைவிட்டது. கலையில் கருணை இல்லாமற்போகும்போது அது மனிதனை அமனிதனாக்கி விடுகிறது. சங்கிலித் தொடர் நிகழ்வுபோல் எந்தப் பின்விளைவுகளையும் கருத்தில் கொள்ளாத நிகழ்வாகக் கலை மாறுகிறது.


முன்னிலும் அதிகமாகக் குடிக்கத் துவங்கியவரின் கண்ணாடிக் குவளைகளில் மது நிரம்பியபோது, அவரது நாவில் இசை கசந்தது. சூதாட்ட மேஜைகளில் அவரது இசை அவரைக் காப்பாற்றவில்லை; தோற்றபோதெல்லாம் அகங்காரம் முன்னிலும் மூர்க்கமாகச் சூதாடத் தூண்டியது. நான் இங்கு தோற்க மாட்டேன் என்னும் பிடிவாதம் அவரை மீண்டும் சூதாட்ட மேஜையில் தோற்கடித்தது.


மூன்று தினங்களுக்குப்பின் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் இழந்து வெளியேறினார். இருளடைந்த வீட்டில் தடுமாறி நுழைந்தபோது ஆழமான துயரில் மூழ்கிப்போனார். தனது ட்ரம்பட்டை எடுத்து இசைக்கலாமென நினைத்தவருக்கு ஒலி மறந்துபோனது. அவரால் ஒலிகளை உணர முடிந்தது. ஆனால் இசைக்கோவைகளின் சிறிய அதிர்வையோ சலனத்தையோ கூட உணர முடியவில்லை. முதலில் குடியினால் உண்டான தற்காலிகப் பிரச்சனையாக இருக்கலாமென நினைத்தவருக்கு நான்கைந்து நாட்களுக்குப் பிறகும் இயல்பிற்குத் திரும்ப முடியாமல் போனதும் பித்துப் பிடித்தது.

சிறிய ஒலியைக் கேட்டால்கூட கொந்தளித்தவர் தனக்குத் தெரிந்த மனிதர்களைச் சந்திப்பதையும் அவர்களோடு உரையாடுவதையும் தவிர்த்தார். தன்னால் இனி ஒருபோதும் ட்ரம்பட் இசைக்க முடியாதென்கிற நிலை வந்தபோது அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் வீட்டை விற்றுவிட்டு கால்நடையாகப் பயணிக்கத் தொடங்கினார்.


பயணம் துயரிலிருந்து தப்பிக்கச் செய்வதற்கு மாறாக நினைவுகளுக்குள் தள்ளி இழுக்கும் மேடையாக மாறியது. ஒவ்வொரு நகரமும் அவரை வரவேற்றது; ஆனால் எதுவும் தங்கவைக்கவில்லை. வெவ்வேறு நகரங்களைக் கடந்து பாரிஸ் வந்தபோது இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. தானொரு இசைக்கலைஞன் என்பதை எவரிடமும் சொல்லிக் கொள்ள விரும்பாத ஸ்டேன்ஸ் ஏவல்களைச் செய்து பிழைத்துக் கொண்டிருந்தார். இந்தப் பயணம் அவருக்குப் புதிய மனிதர்களையும் ஒலிகளையும் கதைகளையும் அறிமுகப்படுத்தி இருந்ததால் தனது விதியைத் தொடர்ந்து செல்வதென முடிவு செய்தவராக கிழக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்.

                      

                                                              2

 

ஓ எம் ஆரில் பதினைந்து தளங்கள் கொண்ட ஓர் அப்பார்ட்மெண்ட்டின் எட்டாவது தளத்தில் ஜோதி  வசிக்கிறாள். ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவள் இந்திய அளவில் கவனிக்கப்படும் ஓவியர்களில் ஒருவர். நான்கு வாரங்களுக்குமுன் தனது காதலன் அறிவு தொலைந்துபோனான் எனக் காவல்துறையில் புகார் செய்திருந்தாள். அந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சுகன் இதற்குமுன் மூன்று முறை அவளது அபார்ட்மெண்ட்டிற்கு வந்திருக்கிறார். அவள் கொடுத்த தகவல்களிலிருந்து காணாமல் போனவனைக் குறித்த சந்தேகங்கள் ஒவ்வொருமுறையும் அதிகரித்ததே ஒழியக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் உருவாகவில்லை. வழக்கை விரைந்து முடிக்கச் சொல்லி மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக நான்காவது முறையாக சுகன் அவளைச் சந்திக்க வந்திருந்தார்.


பதினைந்தாவது தளத்திற்கான பொத்தானை அழுத்தியபோது சுகனுடைய அலைபேசி ஒலித்தது. அழைத்தது தனது மனைவிதான் என்பதை கைக்கடிகாரத்தின் வழியாகப் பார்த்தவர் இணைப்பைத் துண்டித்துவிட்டு ‘in a meeting cal u soon’ என குறுஞ்செய்தி அனுப்பினார். நான்காவது தளத்தில் மின் தூக்கிக்காக காத்திருந்த முதியவர்கள் கதவு திறந்தபோது காவல் துறை அதிகாரிக்கான உடையிலிருந்த சுகனைப் பார்த்ததும் மரியாதையாகச் சிரித்தபடி ‘அந்தப் பையன் கெடச்சிட்டானா ஸார்?’ எனக் கேட்டனர். 

‘இன்னும் இல்ல ஸார். விசாரிச்சுட்டு இருக்கோம்’ என்று சுகன் சொல்லி முடித்ததும் மின் தூக்கியின் கதவுகள் சீரான வேகத்தில் மூடிக்கொண்டன. சூரிய வெளிச்சம் சாய்வாக விழுந்த பதினைந்தாவது தளத்தில் ஒரு சிறுமி நாய்க்குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தாள். சுகன் அவளைப் பார்த்துக் கையசைக்கப் பதிலுக்கு அவளும் கையசைத்தாள். நாய்க்குட்டியைத் துரத்தி ஓடுகையில் அவளது மஷ்ரூம் ஹேர்கட் அழகாக அசைந்தது. அவளைக் கடந்து சென்ற சுகன் ஜோதியின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். கதவு திறக்கப்படுவதற்காகக் காத்திருந்த நொடியில் சூரிய வெளிச்சம் நகர்ந்து வரிசையாக வைக்கப்பட்டிருந்த செடிகளின் மீது படர்ந்திருப்பதைக் கவனித்தான்.


‘வைஷூ வெளையாடினது போதும், வீட்டுக்குள்ள வா…’ என சிறுமியின் தாய் சத்தம் போட்டு அழைப்பதற்கும் ஜோதி கதவைத் திறப்பதற்கும் சரியாக இருந்தது.

சரியான உறக்கமின்றிச் சோர்ந்து போன முகம், கலைந்த கூந்தலென மத்திய கால ஓவியமொன்றிலிருந்து உயிர் பெற்றவளைப்போல் தெரிந்தாள்.


 ‘வாங்க சுகன்…’


ஓரிரு முறை சந்திப்புகளுக்குப்பின் உண்டாகக்கூடிய மென்மை அந்தக் குரலில் இருந்தது. அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றான். அதிக வெளிச்சமற்ற அறைகள், சுவர்களெங்கும் அடர் வர்ணத்தில் அவள் தீட்டிய எண்ணெய் ஓவியங்கள். ஒவ்வொருமுறையும் ஓவியக்கூடத்திற்குள் வந்த உணர்வே சுகனுக்கு இருக்கும். அவளது செல்ல நாய்க்குட்டி ஒருமுறை தலையைத் தூக்கி இவரைப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டது. விசாலமான வரவேற்பறையில் ஜன்னல் வழியாகக் கசிந்த பகல் நேர வெளிச்சம் மெல்லிய கீற்றாய் பரவியிருந்தது. தளர்வான லினன் உடையினை அணிந்திருந்த ஜோதி  தனது கூந்தலைச் சரியாகக் கட்டிக் கொண்டு

‘காஃபி வைக்கட்டுமா?’ எனக் கேட்டாள்.


சரி என்றவர் ‘ஸாரி ஜோதி … நாங்க ரொம்ப தீவிரமாத்தான் அவரத் தேடிட்டு இருக்கோம். எந்த லீடும் கெடைக்கிற மாதிரி இல்ல…. அந்தப் பையனோட பேரண்ட்ஸ் கமிஷ்னர்கிட்ட பேசி இருப்பாங்க போல...’ என அவள் விசாரிக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே என்ன நடந்துகொண்டிருக்கிறது என தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

காஃபி மேக்கரை ஆன் செய்துவிட்டு வந்தவள் தண்ணீர் எடுத்துக் குடித்தாள். “மூணு வருசமா ரிலேஷன்ஷிப் ல இருக்க எனக்கே அவனப் பாக்காம இருக்க முடியல. அவனுக்கு என்ன ஆச்சோன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது… பெத்தவங்களுக்கு எப்பிடி இல்லாம இருக்கும் ஸார்?”


 ச்ச்...ச்ச...அதெல்லாம் எனக்குப் புரியாம இல்லங்க… ஆனா எங்களோட சிச்சுவேசனையும் கொஞ்சம் யோசிக்கனும் ல… வழக்கமா இந்த மாதிரி கேஸ்ல நாற்பத்தி எட்டு மணி நேரத்துக்குள்ள ஏதாச்சும் லீட் கெடச்சிரும்… இந்தக் கேஸ்ல இவ்ளோ நாள் ஆகியும் கெடைக்கலங்கறதுதான் வியர்டா இருக்கு…’ என்றார்.

“ப்ச்ச்…ஆமா… எனக்கும் அதுதான் புரியல” என்றவள் டீப்பாய் மீது கலைந்து கிடந்த பொருட்களைச் சரி செய்யத் தொடங்கினாள். சராசரிக்கும் அதிகமான உயரம், சதைப்பிடிப்பற்று இறுகிய உறுதியான உடல். தளர்வான உடைக்குள் உள்ளாடை அணியாமல் இருந்தவளின்  குலுங்கிய  முலைகள் சுகனைச் சற்று சலனப் படுத்தியது.  அவளைப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டி இருக்கையிலிருந்து எழுந்துகொண்டவர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைக் கவனித்தார்.


“எனக்கு இந்த மாடர்ன் ஆர்ட்ஸ் எதுவும் சுத்தமா புரியறதில்லங்க…’ என சிரித்தார். அவரைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்த ஜோதி  ‘பெய்ண்டிங் மட்டும் இல்ல ஸார், ம்யூசிக், லிட்ரேச்சர், சினிமா எல்லாத்துலயுமே ஒருத்தருக்கு புரியறது இன்னொருத்தருக்கு புரியனும்னு இல்ல… ஒரு ஆர்டிஸ்ட் என்ன எக்ஸ்ப்ரஸ் பண்ண நினைக்கிறாங்கறது அவனுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.”என்றாள்.


“இங்க இருக்க எல்லாமே உங்களோட பெய்ண்டிங்ஸ் தானா ஜோதி?...”


மேசையை ஒழுங்கு செய்வதை நிறுத்திவிட்டு ஜோதி அவனை நோக்கித் திரும்பினாள். சரியாக அள்ளி முடியப்படாத அவளது கூந்தல் மீண்டும் கலைந்து விழுந்தது. வெளிச்சம் அவளைக் கடந்து வந்ததைப் பார்க்க அந்த நிலையில் ஒரு மர்மமான வசீகரம் அவளது உடலில் தெரிந்தது.  நிலவொளியில் மினுங்கும் ஸர்ப்பத்தைப் போல் அவளது  தோலின் மினுமினுப்பு வித்தியாசமாக இருந்தது.


 “இல்ல இதுல அறிவோட பெய்ண்டிங்க்ஸும் இருக்கு. இப்ப நீங்க பாத்துட்டு இருக்கறது அவரோடதுதான். சொல்லப்போனா என்னைய விட பெரிய ஆர்டிஸ்ட் அவருதான். உலகம் முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு இருக்காங்க” என சொல்லிக் கொண்டே காஃபி எடுத்து வர சமையலறைக்குச் சென்றாள்.


ஒரு மேசையில் ஜோதியும் அவளது காதலுனும் இருக்கும் புகைப்படம் இருந்தது. அதற்கு அருகிலேயே சில பழைய புத்தகங்கள். கெட்டியான அட்டையில் பைண்டிங் செய்யப்பட்ட பழமையேறிய அந்தப் புத்தகங்களை ஒரு கையால் வருடியவர், “பழைய புத்தகங்கள் மேல ரொம்ப ஆர்வமா உங்களுக்கு” என்றார்.


காஃபி கோப்பைகளோடு அவரை நோக்கி வந்தவள், “எனக்கு மட்டும் இல்ல ஸார். எங்க ஃபேமிலிக்கே புத்தகங்கள்னா உயிர். கடந்த இருநூறு வருசங்களா அபூர்வமான புத்தகங்களை எல்லாம் சேகரிச்சு ஊர்ல ஒரு பெர்சனல் லைப்ரைரி வெச்சிருக்கோம். இங்கயே எங்கிட்ட சில முக்கியமான புக்ஸ் இருக்கு” என்று சொன்னதை சுகன் ஆச்சர்யமாகப் பார்த்தார்.


“இன்ட்ரஸ்டிங். ஒவ்வொரு தடவையும் உங்கள மீட் பண்ண வர்றப்போ நிறைய புது விஷயங்கள தெரிஞ்சிக்கற மாதிரி இருக்கு… உங்க கலெக்ஷன நான் பாக்கலாமா?”எனக் கேட்க, அவருக்கான காஃபிக் கோப்பைய கொடுத்துவிட்டு, “வாங்க... என இன்னொரு அறை நோக்கி நடந்தாள்.


முன்னிலும் குறைந்த வெளிச்சம் கொண்ட அறைக்குள் அவள் நுழைந்தபோது அவளது வியர்வை வாசனையை சுகனால் தீவிரமாக உணர முடிந்தது.

“எவ்ளோ வருசமா ரெண்டு பேரும் சேந்திருக்கீங்க?”


என தான் வந்த வேலையை நினைவுபடுத்திக் கொள்ளும் விதமாக சுகன் கேட்டார்.


“மூணு வருசம் ஸார். இந்த வீடு நாங்க சேந்து வாழனும்னு பாத்து வந்ததுதான். நான் ஸ்ரீரங்கத்துப் பொண்ணு, சுத்த சைவம். இவனுக்காகத்தான் நான்வெஜ் கூட சமைக்கக் கத்துக்கிட்டேன்” என்றபடியே அந்த அறையின் விளக்கைப் போட்டாள். அளவான மஞ்சள் நிற வெளிச்சத்தில் கண்ணாடி அலமாரிக்குள் ஏராளமான புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அந்த நூல்களை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த சுகனுக்கு  ஒரு மிடறு காஃபியைப் பருகியதும்  குமட்டிக் கொண்டு வந்தது. ‘உவ்வேக்’ என முகம் சுளித்தவரைப் பார்த்து


“என்னாச்சு?”என அவள் பதறினாள்.

 “காஃபி ல சக்கரைக்குப் பதிலா உப்புப் போட்டுட்டீங்க...” என சுகன் சிரிக்க…

 “ஸாரி ஸார்… சரியா தூங்காம நான் ஒரு நிலையிலயே இல்ல… ஸாரி.. என காஃபி கோப்பையை வாங்கிக் கொண்டு அந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறினாள்.


சுகன் சிரித்தபடியே ஒவ்வொரு அலமாரியாக பார்த்தார். ஒரு அலமாரியில்  தடித்த கனமான புத்தகம் ஒன்றைப் பார்த்து உறைந்துபோனார். அலமாரியைத் திறந்து வெளியே எடுத்தபோது வழக்கமான புத்தகத்தை விட அளவிலும் எடையிலும் பெரியதாக இருந்த அதனை சிரமத்தோடு மேசையில் வைத்தார். கெட்டியான அட்டை. எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்டு விலங்குத் தோலால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த அட்டையை மெல்ல வருடிப் பார்த்துவிட்டு  திறந்தபோது அவர் கழுத்தின் பின்புற ரோமங்களில் சூடான மூச்சுக் காற்று படர்வதை உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பினார்.

ஜோதி அவருக்கு மிக அருகில், அவளது  முலைகள் அவர்மீது அழுந்தும்படி நின்று  அவரது கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தாள்.


“ஜோதி … வாட் இஸ் திஸ்?” என்று சுகன் தடுமாறினாலும், காந்த விசையால் ஈர்க்கப்பட்டவர் போல் அவளது இதழ்களை நெருங்கிவிட்டிருந்தார். அவரைப் பார்த்துக் கொண்டே அவரது கையிலிருந்த புத்தகத்தை வாங்கி பின்னாலிருந்த கப்போர்டுக்குள் வைத்த ஜோதி, தன் நாவைக் கொண்டு சுகனின் இதழ்களைத் திறந்து தன் இதழ்களை பொருத்தினாள். அது ஒரு நல்ல முத்தம்.


“சாரி சுகன், மொமெண்ட் ஆஃப் வல்னெரபிலிடி…” என்றபோது அவளது குரல் தழுதழுத்தது. “அவன ரொம்ப மிஸ் பண்றேன்……ஐ ஃபீல் அலோன்…அதான்….ஐ ஆம் சாரி” என்றாள்.


“இட்ஸ் ஓகே ஜோதி…” என்று அவளது கண்களைப் பார்த்த சுகனுக்கு அவளது அதீத மினுமினுப்பு என்னவோ செய்தது. மாநிறத்தைவிட சற்றுக் கூடுதல் கருமைதான் என்றாலும், ஜோதியின் உடலில் இனம்புரியாத ஒரு மர்ம வசீகரம் இருப்பதை அவரால் உணர முடிந்தது. தனது உடல் சூடாவதைப் புரிந்துகொண்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்.


இருவரும் வரவேற்பரைக்கு வந்தபோது அவ்வறையில் வெளிச்சம் பிரகாசமாக நிறைத்திருந்தது. இந்தமுறை அளவான மதுரத்திலிருந்த காஃபியை சுவைத்தபடியே சுகன் “நான் நிறைய முற கேட்டதுதான். உங்க ரெண்டுபேருக்கும் ஏதாச்சும் பிரச்சன இருந்துச்சா? இல்ல அவருக்கு வேற யார்கூடயாச்சும் பிரச்சன இருந்துச்சா?” எனக் கேட்டார்.


அவருக்கு எதிரில் அமர்ந்தவள் “இல்ல ஸார். அவன எல்லோருக்குமே ரொம்பப் புடிக்கும். எனக்கு அவனோட பெய்ண்டிங்க்ஸ்னா ரொம்ப இஷ்டம். அதனாலதான் அவன்கூடவே இருக்கனும்னு வந்துட்டேன். எங்க போனாலும் நாங்க சேந்துதான் போவோம். ஆனா இந்தத் தடவ டெல்லி ல ஷோன்னு கிளம்பினப்போ ஊர்ல ஒரு அவசரம்னு வரச் சொல்லிட்டாங்க. அதனால அவர தனியா அனுப்ப வேண்டியதாப் போச்சு” எனக் கவலையோடு சொன்னாள்.


“அவரோட மத்த ஃப்ரண்ட்ஸ் கிட்ட கேட்டப்போ டெல்லி ல ரெண்டு நாள் கூட இருக்காம உடனே கிளம்பிட்டதா சொல்றாங்க…”

 “அதான் ஸார் எனக்கும் புரியல…”

 “ஒருவேள வேற எதாச்சும் அஃப்யர்…”

 “ச்ச… ச்ச.. அப்பிடி இருக்க வாய்ப்பே இல்ல ஸார்” என அவசரமாக மறுத்தாள்.

“ஒருவேள உங்களுக்கு எதாச்சும் அஃப்யர் இருந்து அவருக்குத் தெரிஞ்சு” எனத் தயங்கியபடியே சுகன் கேட்க, அவள் நேருக்கு நேராக அவனை முறைத்தாள்.

“ஸாரிங்க  ஜோதி. நான் போலிஸ்காரன். சந்தேகப்பட்டுத்தான ஆகனும்…”என்றார்.

 “எனக்கும் அஃப்யர் இல்ல ஸார். அப்பிடி இருந்தாலும் அறிவு அதுக்காக கோவப்படற ஆள் இல்ல…” என நிதானமாகச் சொன்னாள்.


அங்கு நிலவிய சிறிய மௌனத்தின் இடைவெளியில் இருவரும் நிதானமாக காஃபியைப் பருகினர். தன்னையும் மீறி ஜோதி கொடுத்த முத்தம் அவரை ஆட்கொள்ளவே சட்டென்று தலையை அசைத்துவிட்டு எழுந்தார்.


“காணாமப் போன ஒருத்தரக் கண்டுபிடிச்சிடலாம்  ஜோதி. ஆனா ஒளிஞ்சுக்கிட்டவரக் கண்டுபிடிக்கிறது கஷ்டம்… ஒருவேள அப்பிடி இருந்தா அதுக்கான காரணம் என்னன்னு தெரியனும். காரணம் தெரிஞ்சாதான் அவர் இருக்க இடமும் தெரியும். நீங்க சொல்ற சின்ன டீடைல் கூட முக்கியமான லீடா இருக்கலாம். அதனால எப்ப என்ன ஞாபகம் வந்தாலும் உடனே எனக்குக் கால் பண்ணுங்க…” எனச் சொல்ல, ஜோதி  சரியெனத் தலையாட்டினாள். அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே அங்கிருந்து கிளம்பினார்.


ree

                            

3

 

புதுச்சேரியின் உக்கிரமான வெயில் அவரது கடந்த கால நினைவுகளை எரித்து புதிய மனிதனாக உருமாற்றிக் கொண்டிருந்தது. நீண்டகாலமாகச் சவரம் செய்யப்படாமல் ஒடுங்கிப்போன முகத்தில் கண்களைச் சுற்றி கருவளையம் விழுந்திருந்தன. அரியங்குப்பம் ஆற்றுப் பகுதியில் ஒரு பாலம் கட்டுவதற்காக ஆய்வு செய்த ஃப்ரெஞ்சு அதிகாரிகளுக்கு ஸ்டேன்ஸ் உதவியாக இருந்தார். வேலை இல்லாத நேரங்களில் எதையோ மூர்க்கமாகத் தேடி அலைகிறவராய் கடற்கரையில் சுற்றித்திரிந்தவரை உள்ளூர்க்காரர்கள் சித்தர் என நினைத்து மரியாதையோடு நடத்தினார்கள். தன் மீது விழும் அந்தக் கரிசனையைப் புரிந்துகொள்ள முடியாமல் அந்த மக்களைப் போலவே அவரும் கை கூப்பி வணக்கம் வைத்தார்.


அவர் பசியோடிருக்கக் கூடுமென நினைத்து மக்கள் தங்களிடம் இருக்கும் உணவுப் பொருட்களைக் கொடுத்தார்கள். முதல் சில முறை தன்னிடம் உணவைத் தந்தவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டவர் நாளடைவில் புன்னகையோடு வாங்கிக் கொண்டார். கையேந்தி உணவினை வாங்கி கடற்கரையோரம் பசியோடு சுற்றும் நாய்களுக்குச் சாப்பிடக் கொடுப்பவர் அந்த நாய்களோடு அமர்ந்து சாப்பிடுவார். தனக்குள்ளிருந்து ஏதோவொன்று நிரந்தரமாகக் கரைந்து போகும் உணர்வு அவரை நீண்ட காலத்திற்குப்பின் ஆறுதல் படுத்தியது.


ஒரு முழுநாள் இரவில் உறக்கம் பிடிக்காமல் தனது குடிசைக்குள் படுத்திருந்தவரை எங்கிருந்தோ வந்த ட்ரம்பட்டின் இசை சலனப்படுத்தியது. அந்தச் சத்தத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள வேண்டி துணியைக் கொண்டு காதுகளை அடைத்துப் பார்த்தார். கண்களை இறுக மூடி உடல் முழுக்க போர்வைகளைப் போர்த்திக் கொண்டு பார்த்தார். பணிவாளைப்போல் அந்த இசையின் ஓசை தீவிரமாக அவருக்குள் இறங்கி உடல் நடுங்கத் துவங்கியது. பெட்டியிலிருந்து ட்ரம்ப்பட்டைத் தேடி எடுத்தவர் அதனை வாசிக்க எத்தனிக்கையில் அவருக்கு வியர்த்தது. உள்ளிருந்து எல்லாம் குமட்டிக் கொண்டு வருவது போலிருக்க அவசரமாகக் குடிசைக்கு வெளியே வந்தவர் கைகளால் மண்ணைத் தோண்டினார். அவரைப்போலவே கொந்தளிப்பிலிருந்த கடல் அலைகளும் கரையைத் தாண்டி ஊருக்குள் வந்துவிடத் துடிப்பது போலிருந்தது. நீண்டகாலமாகத் தனது உடலின் ஒரு பகுதியாகவே மாறியிருந்த ட்ரம்பட்டை குழிக்குள் போட்டுப் புதைத்தார். இதயத்துடிப்பு மெல்லக் குறைந்து மூச்சு சீரானது.


கண்ணை மூடி அப்படியே மண்டியிட்டு அமர்ந்திருந்தவரின் செவியில் மீண்டும் இசைத்துணுக்குக் கேட்டது. இந்தமுறை அசரீரி இல்லை. அந்த இசை தெள்ளத் தெளிவாக அருகாமையிலிருந்து வருகிறது என்பதை அவரால் உணர முடிந்தது. மெதுவாக எழுந்து உடலிலிருந்த மண்ணைத் துடைத்துக் கொண்டவர் சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார்.


கடற்கரைக்குச் செல்லும் பாதையில் நெருக்கமாக ஏராளமான குடிசைகள். பன்றிகள் சேற்றில் விளையாடி உறுமும் சத்தம் கேட்டது. காலணியில்லாத பாதங்களில் சேரும் சகதியும் அப்பியது. அந்தக் குடிசைகளைத் தாண்டி கடற்கரைக்குச் செல்லும் பாதையில் ஒரு படகின் மீது மெலிந்த மனிதன் அமர்ந்திருந்தான். நிலவு வெளிச்சத்தில் அந்த மனிதனின் கருத்த மேனி ஜொலித்தது. நெருங்கிச் சென்று பார்த்தபோது கண்களை மூடி ட்ரம்பட்டை வாசித்தவனின் முகத்தில் அகங்காரமில்லை, கைகளில் நடுக்கமில்லை. மேடைகளையும் கைதட்டல்களையும் பொருட்படுத்தாமல் தனக்குப் பிடித்த வேலையைச் செய்யும் பூரிப்பில் லயித்திருந்தான். அவனது இசைக்கு நிலவும் வானமும் கடலும் மயங்கியதைப் போலிருந்தது. ஸ்டேன்ஸ் உறைந்துபோய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மனிதனின் இசை இரவுக்குள் கரைந்து, ஒரு பிரார்த்தனைக் கூடத்தில் நிற்கும் நிறைவை ஸ்டேன்ஸுக்கு உருவாக்கியது. சடாரென அந்த மனிதனின் முன்னால் மண்டியிட்டார். அரவம் கேட்டு விழித்துப் பார்த்த அந்த மனிதன் தன் முன்னால் மண்டியிருக்கும் அந்தப் பராரியைப் புரியாமல் பார்த்தான்.


 “நீ யாரு… உனக்கு இத வாசிக்க யார் சொல்லிக் குடுத்தது..?”என ஸ்டேன்ஸ் கேட்டார்.

“நான் யாரா? இங்கதான் மீன் பிடிச்சிக்கினு இருக்கேன். நீ யாரு?...”

என பதில் கேள்வி கேட்டான்.


ஸ்டேன்ஸ் கைகளை நீட்டி அவனிடமிருந்து ட்ரம்பட்டைக் கேட்டார். தயங்கியபடியே கொடுத்தான். அந்த ட்ரம்பட்டை நிதானமாகத் தொட்டுப் பார்த்தவர் மீண்டும் அவனிடமே கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவன் சிரித்தபடியே மீண்டும் இசைக்கத் துவங்கினான். அந்த இசையில்  விசித்திரமான பல உணர்வுகள் வெளிப்பட்டன. வலி இருந்தது—ஆனால் அழுகை இல்லை. இழப்பு இருந்தது—ஆனால் புலம்பல் இல்லை. அது ஒரு மனிதன் தன்னைத் தாண்டிப் போகும் ஒலியாகக் கேட்பவரின் மனதை நிறைத்தது. ஒரு தவம் போல் தான் கற்றுக்கொண்ட இசை தன்னைக் கைவிட்டதன் காரணத்தைப் புரிந்துகொண்ட ஸ்டேன்ஸ் உடைந்து அழுதார். இசைப்பதை நிறுத்திய அந்த மனிதர் ஸ்டேன்ஸின் தோளில் தட்டிக் கொடுத்தார்.


                                                              4


அன்று முழுக்க ஜோதியின்  நினைவு அவரிலிருந்து விலகவில்லை. அவளது அசைவுகளும் வியர்வை வாசனையும், அந்த எதிர்பாராத முத்தமும் அவரை ஒரு நிலையில் இருக்கவிடவில்லை. வசீகரமான முகத்திற்குச் சற்றும் பொருந்தாத தீவிரமான கண்களில் இருப்பது வசீகரமா அல்லது ஓநாயின் வஞ்சகமா என குழம்பினார்.  மகளையும் மகனையும் ட்யூசனிலிருந்து அழைத்தும் வரும்படி மனைவியிடமிருந்து உத்தரவு வந்ததால் வேலைகளை முடித்துக் கொண்டு குழந்தைகளை அழைக்கச் சென்றார். வீடு திரும்பும் வழி முழுக்க குழந்தைகள் சொன்ன கதைகளைக் கேட்டபடியே வந்தவருக்குக் களைப்பில் தலை வலித்தது.

உடைமாற்றச் செல்லும்போது தனது மனைவியிடம் “ஜானு ஒரு காஃபி குடு டி…” எனச் சொல்லிவிட்டுப் போனார். குழந்தைகள் தங்களது அறைகளில் சத்தமாகப் பேசி விளையாடிக் கொண்டிருந்தனர். தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த பாடல் அவர்களை விடவும் அதிகமாக இரைந்தது. “ஏய் எதுக்கு இவ்ளோ சத்தம்…?”எனக் கேட்டப்படியே உடை மாற்றி வந்தவர் தொலைக்காட்சியில் சத்தத்தைக் குறைத்தார். அவர் மனைவி காஃபியுடன் வந்தாள்.


“ஸூம்பா க்ளாஸ் போறது வீண் போகல டி…செம்ம கட்டையா தெரியுற இப்போ” என்றவரை முதுகில் தட்டிவிட்டுச் சென்றாள்.


சுகன் சிரித்தபடியே “காஃபில உப்பு எதும் போடலையே. சக்கரதான போட்றுக்க…”எனக் கேட்டார். ஆச்சர்யமாக திரும்பிப் பார்த்த அவரது மனைவி


“உப்புப் போட்டு காஃபி குடிக்க நான் என்ன கேனிபலா? பைத்தியம்”என ஜானு கேட்டாள்.

ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்ட சுகன் காஃபி கோப்பையை ஓரமாக வைத்துவிட்டு  “ஜானு இங்க வா… கேனிபலா? என்னடி சொல்ற?”என பரபரப்பாகக் கேட்டார்.


அவரது பரபரப்பைக் கவனித்த ஜானு தனது ட்ராக் பேண்ட்டிலிருந்து அலைபேசியை எடுத்தபடியே “ஏன் படிச்சதில்லையா நீங்க? கேனிபல்ஸ் காஃபில உப்பு போட்டுத்தான் குடிப்பாங்களாம். இதப் படிங்க…” என ஒரு செய்தியை எடுத்துக் காட்டினாள். சுகனுக்கு குழப்பத்தில் முகம் சுருங்கியது. கண்கள் அவசரமாக அந்த செய்தியை வாசித்தது. அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு அவசரமாக தனது மடிக்கணினியை எடுத்து அமர்ந்தார்.


 “என்னாச்சு சுகன்? ஏன் திடீர்னு சீரியஸா ஆகிட்டீங்க…?”எனக் கேட்டபடியே ஜானு அவருக்கு அருகில் வந்து அமர்ந்தாள். கேனிபல்கள் குறித்து இணையத்தில் வாசித்துக் கொண்டிருந்த சுகன் பார்வையைத் திருப்பாமலேயே “இல்ல ஜானு காரணமாத்தான். ஆனா நம்ம நாட்டுல ஏது டி இந்த கேனிபல்ஸ் லாம்… இதெல்லாம் கதைல கேக்கற ரூமர்ஸா இருக்கும்னு நெனச்சுட்டு இருக்கேன்… உண்மைலயே இருக்காங்களா என்ன?”எனக் கேட்டார்.


‘சுகன்… இந்த உலகத்துல நம்மளுக்குத் தெரியாம எவ்வளவோ ரகசியம் இருக்க மாதிரி மனுஷங்க கிட்டயும் இருக்கு. நான் காலேஜ் படிக்கிறப்போ ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். தமிழ்நாட்டுலயே ஒரு சீக்ரட் சொசைட்டி இருக்காம். இரநூறு வருசத்துக்கும் மேல அவங்க ரகசியமா இயங்கிட்டு இருக்காங்க போல… எல்லார் கூடயும் இயல்பா பழகுவாங்க. ஆனா அவங்களுக்குன்னு தனித்துவமான வாழ்க்கை முறை இருக்கும். நெருங்கிப் பாக்காத வரைக்கும் யாரப் பத்தியும் நம்மளால தெரிஞ்சுக்க முடியாது. ஏன் நீயே கூட எனக்குத் தெரியாம கேனிபலா இருக்கலாம்…” என அவள் சிரிக்க, சுகன் திரும்பி பற்களை ஈ வெனக் காட்டி முறைத்துவிட்டு அவசரமாக உடை மாற்றிக் கொண்டார்.


 “எங்க கிளம்பிட்ட?”ஜானு புரியாமல் கேட்க, “வந்துடறேன்… ஒரு முக்கியமான வேல…”எனச் சொல்லிவிட்டு சுகன் அவசரமாக அங்கிருந்து கிளம்பினார்.

ஜோதியின் அபார்ட்மெண்ட் ஆழ்ந்த அமைதியில் உறைந்திருந்தது. ஒரு சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். சீருடை அணியாமல் வந்ததால் சுகனை ஒருவரும் கவனித்திருக்கவில்லை. சுகனுக்குப் படபடப்பு அதிகரித்தது. அவளை எப்படி எதிர்கொள்வது? தான் படித்ததெல்லாம் உண்மையா? அல்லது தியரியா? இல்லை வழக்கை முடிக்க வேண்டுமென்கிற அவசரத்தில் நிகழ்ந்த கற்பனையா? எனக் குழப்பத்தோடு அவளது வீட்டின் முன்னால் நின்றார். காலிங்பெல்லை ஓரிருமுறை அழுத்திப் பார்த்தும் பதில் இல்லாமல் போக, பூட்டை உடைக்கும் வித்தையை உபயோகித்து கதவைத் திறந்து உள்ளே சென்றார். அந்த வீடு எப்போதும் போல் அமைதியிலும் இருளிலும் மூழ்கியிருந்தது.


தனது டார்ச்சை எடுத்து ஒவ்வொரு இடமாகத் தேடி வந்தவருக்கு இந்தமுறை சுவரிலிருந்த ஓவியங்கள் புதிய செய்திகளைக் கூறுவதாக இருந்தன. வரவேற்பறையின் மையமாக இருந்த பெரியதொரு ஓவியத்தை எடுத்து மேசையில் வைத்தவர் அதனைத் தலைகீழாகப் பார்த்தபோது துண்டாடப்பட்ட உடல்களும் அதனைப் பசியோடு பார்க்கும் ஓநாயின் இரண்டு கண்களும் புலப்பட்டன. அல்லது அவர் அப்படிப் புரிந்துகொண்டார். டார்ச்சைப் பிடித்திருந்த கை நடுங்க, அன்று காலை முதன்முறையாக அவளது பார்வையின் தீவிரம் மாறிய தருணத்தை நினைவுக்குக் கொண்டு வந்தார். அந்தப் புத்தகத்தில் தனது குழப்பங்களுக்கான விடை இருக்குமென முடிவு செய்தவராக அந்த அறையை நோக்கி நகர்ந்தார்.


முன்பைப் போலவே பாதுகாப்பாகக் கண்ணாடி அலமாரிக்குள் இருந்த புத்தகத்தைக் கவனமாக வெளியே எடுத்தவர் மேசையில் வைத்தார். அறையின் மெல்லி வெளிச்சத்தில் அப்புத்தகம் பெரும் மர்மங்களோடு காட்சியளித்தது. அட்டையைத் திறந்து பார்த்தபோது முதல் பக்கத்தில் கருப்பு மையால் கோடுகள் ஓவியங்களைப் போல் தீட்டப்பட்டிருந்தன. உறுதியான காகிதங்கள். அடுத்த பக்கத்தைப் புரட்டியபோது


“Those you love to excess,

or those you long to become—

possess them.

Or devour them.”


என ஆங்கிலத்திலும் அதற்குக் கீழேயே


 “நீ அதீதமாக எவரை நேசிக்கிறாயோ அல்லது எவராக மாற விரும்புகிறாயோ அவரை உனதாக்கிக் கொள். அல்லது அவர்களை உன் உணவாக்கிக் கொள்.”


தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழ் ஜேகப் ஸ்டேன்ஸ் என ஆங்கிலத்தில் கையெழுத்திடப்பட்டிருந்தது. சுகனுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப்போக, அடுத்த பக்கங்களைப் புரட்டினார். மனித உடலைக் குறித்து வெவ்வேறான குறிப்புகள். சுகனுக்குத் தலை சுற்றியது. புத்தகத்தைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்க நாற்காலியிலிருந்து அவசரமாக எழுந்துகொண்டார்.


ஸ்டேன்ஸைப் பற்றி கிளி சொன்ன கதை


புதுச்சேரி கடற்கரையில் கிளிகள் பைத்தியம் பிடித்து அலைந்தன.  காணாமல் போன மனிதர்கள் குறித்து மீனவர்கள் அச்சத்தோடு சொன்ன கதைகளை எல்லாம் அந்தக் கிளிகள் கேட்டு சித்தம் கலங்கியதால் தாங்கள் கேட்ட கதைகளை வெவ்வேறு நிலங்களுக்கு எடுத்துச் சென்றன. எங்கெல்லாம் அந்தக் கதைகள் பயணித்தனவோ அதனைக் கேட்ட மரங்களும் செடிகளும்  தற்கொலை செய்துகொண்டன. காணாமல் போன  அத்தனை பேரும் ஏதோவொரு வகையில் இசைக் கலைஞர்களாக இருந்தனர். அந்தப் பெளர்ணமி இரவுக்குப் பிறகு புதுச்சேரி மக்கள் ஸ்டேன்ஸ் சித்தரும் காணாமல் போனதாகப் பேசிக் கொண்டனர். எங்காவது இசையின் வசீகர ஒலி கேட்கும் இரவுகளில் எல்லாம் ஒரு மனிதன் காணாமல் ஆக்கப்பட்டான்.


அச்சம் கதைகளானபோது ஃப்ரஞ்ச் போலிசார் அந்தக் கதைகளுக்குக் காரணமான மனிதனைத் தேடத் தொடங்கினார்கள். அடக்கி வைக்கப்பட்ட நீண்ட கால குரூரமும், அலைச்சலும் அந்தப் பராரியை மாயாவியாக்கியிருந்தது. புதுச்சேரியின் காற்றில் நரமாமிசத்தின் வாசனை கலக்கத் தொடங்கியபோது நாய்கள் வெறிபிடித்துக் குரைத்தன. மீனவர்கள் தங்களது குடிசைகளை விட்டுவிட்டு வேறு ஊர்களுக்கு ஓடிப்போனார்கள். கடற்கரையோரங்களில் குருதி வாடை நிரந்தரமாக வீசியது. புதுச்சேரிக்கு வெளியே கடலூர் பக்கமாகவும் அந்தக் குருதி வாடை காற்றில் கலந்து பரவத் தொடங்கியது.


ஒருபுறம் மக்கள் அந்தக் குருதி வாடையைக் கண்டு அச்சத்தில் தப்பியோட, இன்னொருபுறம் அந்த குரூரத்தின் மீதிருந்த ரகசிய ஆசையில் சிலர் அந்த மாயாவியைத் தேடிச் சென்றார்கள். தேடிச் சென்றவர்கள் தங்களுக்கென சில சட்டதிட்டங்களையும் ரகசிய வாழ்க்கையையும் உருவாக்கிக் கொள்ளத் தொடங்கியபோது மாயாவி தன்னைப் போலவே பெரும் கூட்டத்தை உருவாக்கியிருந்தார். ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கென இடம் பெயர்ந்த அந்தக் கூட்டம் நான்கு வருடங்களுக்குப்பின் திருச்சிராப்பள்ளியை அடைந்தது. புதுச்சேரியிலிருந்து பறந்த கிளிகள் அந்த மனிதர்களையும் அந்தப் புத்தகத்தையும் நன்கறிந்திருந்ததால் அந்தப் பறவைகள் வேட்டையாடப்பட்டன. ஆனாலும் கிளிகள் சொன்ன கதைகள் காற்றிலும் மரங்களிலும் நிரந்தரமாகப் படிந்துவிட்டன.


சுகனைப் பற்றி கிளி சொன்ன கதை


சுகன் அந்த அறையிலிருந்து அவசரமாக வெறியேறியபோது எங்கிருந்தோ பறந்து வந்த கிளி ஜன்னல் வழியாக வரவேற்பறைக்குள் நுழைந்தது. அவரைப் பார்த்து வினோத ஒலியில் சப்தமெழுப்பியது. சுகனால் அந்தக் கிளியை அமைதிப்படுத்த முடியவில்லை. மேசையிலிருந்த ரிமோட்டை எடுத்து கிளியை நோக்கி எறிந்தபோது மூர்க்கமாக ஒரு முறைக் கத்திவிட்டு ஜன்னலை நோக்கிப் பறந்தது. கிளியின் ரெக்கைகள் பட்டு சுவரிலிருந்த ஓவியம் கீழே விழ, சுகன் அதனை எடுத்துப் பார்த்தார். முன்பு புரியாத அந்த ஓவியத்தின் புதிர் விலகுவதாக இருக்க தலைகீழாகப் பிடித்துப் பார்த்தார்.


வெவ்வேறு வர்ணங்களில் சிதறிக்கிடந்ததெல்லாம் துண்டாடப்பட்ட உடலின் பாகங்கள் என மெல்லப் பிடிபட்டது. அச்சத்தில் நா வறண்டு தாகமெடுக்க ஓவியத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு அவசரமாகச் சென்று குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தார். காய்கறிகள் பால் இனிப்புகள் இவை நிறைந்து கிடக்க மெதுவாக ஃப்ரீஸரைத் திறந்தார். அதில் ஒரு கண்ணாடி புட்டியில் மனித இதயமும் சில பாலிதீன் பைகளில் மனிதனின் வேறு பாகங்களும் வைக்கப்பட்டிருந்தன. கண்கள் இருட்டிக் கொண்டு வருவது போலிருக்க, அதே நேரம் வீட்டின் கதவு திறக்கும் சத்தமும் ஒரு பெண்ணின் உயர்குதிகால் செருப்புச் சத்தமும் கேட்டது. அவரது கையிலிருந்த கண்ணாடி புட்டித் தவறி விழுந்து உடைந்ததால் குருதியில் நனைந்த மனித இதயம் துடிப்படங்கிக் கிடந்தது. நிழல் அவரை நெருங்கி வந்தபோது கடைசி முறையாகக் கிளி சத்தமாக அலறியபடி ஜன்னலிலிருந்து பறந்து சென்றது.

 

 

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page