top of page

எந்த நிழலில் இளைபாறுகிறோம் என்பதை நமது செயல்களே தீர்மானிக்கின்றன.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 20 hours ago
  • 7 min read
ree

“there is no glory in punishing”

 

2024 ம் வருடத்தின் மார்ச் மாதத்தில்  ஒரு நாள் சரியாக லிங்கம் தொடருக்கான படப்பிடிப்புத் துவங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக திரு செல்வம் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து  எனக்கொரு செய்தி கிடைத்தது. ஓரிரு நாட்களில் அவர் பரோலில் வரும்போது என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். நானும் உடனடியாக சம்மதித்தேன். இந்தத் தொடரை இயக்குவதற்காக நிறைய பேரை சந்தித்து உரையாடியிருந்ததால் செல்வம் யார் என்பதை நிறையக் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தேன். அதன்படி குறிப்பிட்ட தேதியில் எனது உதவி இயக்குனர்கள் இரண்டு பேருடனும் நண்பர் பிரசாந்துடனும் நாகர்கோவிலிலிருந்த அவரை சந்திக்கச் சென்றோம். படப்பிடிப்பிற்கான இடங்கள் தேடுவதில் கடுமையான அலைச்சல்களுக்கு நடுவே திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு கிளம்பி நாங்கள் நாகர்கோவிலைச் சென்றடைந்தபோது நள்ளிரவு தாண்டியிருந்தது. அடுத்தநாள் அதிகாலை அவர் பரோல் முடிந்து செல்கிறார் என்பதால் அன்றே சந்திக்க வேண்டிய நெருக்கடி.


நிறைய போலிஸ் பாதுகாப்புடன் இருந்த அந்த வீட்டில் சிரித்த முகமாக எங்களை வரவேற்றார். அவரது தோள் உயரம் மட்டுமே இருந்த என்னிடம் முதலில் ‘உங்க புத்தகம் லாம் படிச்சிருக்கேன் அண்ணே’ என்றபோது ஆச்சர்யமாக சந்தோசம் அண்ணே என்றேன். சில நிமிடங்களிலேயே அந்த சூழலுக்குள் நாங்கள் இணக்கமாகிவிட்டோம். அந்த இரவு முழுக்க பல செய்திகளை எங்களோடு பகிர்ந்துகொண்டார்.  ஏராளமான வழக்குகள், முப்பது வருடங்களுக்கும் மேல் சிறைவாசம் என செய்திகளின் வழியாக நான் அறிந்த மனிதரும் நேரில் பார்த்த மனிதரும் வேறாக இருந்தார்கள். மேசை முழுக்க ஏராளமான புத்தகங்கள். அவற்றில் பெரும்பாலனவற்றை வாசித்திருந்தார். 


எங்கள் உரையாடலின் இடைவெளியில் தனது அனுபவங்களை நூலாக எழுதியிருப்பதைச் சொன்னதோடு அதில் சில பக்கங்களை வாசிக்கவும் கொடுத்தார். அப்போது முதலே இந்தப் புத்தகத்திற்காகக் காத்திருந்தேன்.


உலகம் முழுக்கவே குற்றவுலகின் மீது எல்லோருக்கும் ரகசிய வசீகரம் இருக்கிறது?  பல நூறு வருடங்களாக வேத நூல்களும், தலைவர்களும் புனிதர்களும்  சமாதானத்தை  போதித்து வருகிறார்கள். அன்பை வலியுறுத்துகிறார்கள். ஆனால் வரலாறு குருதியின் ஈரத்தாலேயே எழுதப்பட்டுள்ளது. வன்முறை மனிதர்களின் ஆதார உணர்ச்சியாக இன்றளவும் இருக்கிறது. எல்லா காலத்திற்கும் இருக்கிறது. ஒரு மனிதன் சமநிலையைத் தவறவிடும் இடத்தை எவரும் யூகிக்க முடியாது. எந்த வயதில் வேண்டுமானாலும் எந்தச் சூழலில் வேண்டுமானாலும் ஒருவன் வன்முறைக்குள் விழுந்துவிட முடியும். அந்தப் பாதைக்கு எவரையும் ஈர்த்துவிடும் ரகசியமான வசீகரம் உண்டு. ஒருமுறை அந்தப் பாதையில் கண்ணை மூடி தடம் பதிக்கத் துவங்கும் ஒருவனால் அத்தனை எளிதில் வெளியேற முடிவதில்லை. செல்வத்தின் இந்த நூலில் மிக முக்கியமானதொரு அவதானத்தைச் சொல்கிறார். தொடர் குற்றவாளிகளில் 75 சதவிகிதத்தினர் சீர்திருத்த பள்ளியில் இருந்தவர்களாக இருக்கிறார்கள். பதின் பருவத்தில் ஏதோவொரு காரணத்தினால் வன்முறையைக் கையிலெடுக்கும் இளைஞர்களை நமது சீர்திருத்த பள்ளிகளால் சரியான பாதைக்கு திசை திருப்ப முடியவில்லையென்றால் சிக்கல் எங்கு இருக்கிறது. இந்த  அமைப்பும் சட்டமும் சரியானபடிதான் செயல்படுத்தப்படுகிறதா என்கிற சந்தேகம் நமக்கு எழுகிறது.


கடந்த சில வருடங்களில் முன்னாள் சிறைத்துறை அதிகாரிகள் தங்களது கடந்த கால அனுபவங்களை பத்திரிகைகளில் எழுதுவதும் வலையொலிகளில் பேசுவதும் நிறைய பார்க்க முடிகிறது. அந்த செய்திகள் அவ்வளவையும் நாம் முழு உண்மையாக ஏற்றுக் கொள்ளலாமா?  வேட்டையின் தர்மத்தை ஆயுதங்கள் மட்டுமே பேசிக் கேட்பது எத்தனைஅபத்தம்.  


ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் என்ற இந்த நூலில் லட்சியங்கள் எதுவும் இல்லாத இளைஞனாக விளையாட்டுத் தனங்களோடு வளரும் செல்வம் எதிர்பாராத விதமாக எப்படி வன்முறை உலகிற்குள் நுழைய நேர்ந்தது என்பதையும் அதன் காரணமாக தென் தமிழகத்தின் குற்ற உலகில் முக்கியமான ஒருவராக இருக்க நேர்ந்ததையும் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் சொல்கிறார். பத்து வருடங்களுக்குமுன் அடியாள் என்றொரு நூல் வந்தது. ஒரு சராசரி மனிதனை எப்படி அரசியல் கட்சிகள் தங்கள்து அடியாளாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை விளக்கும் நூல்.


நாம் திரைப்படங்களிலும் கதைகளிலும் இந்த மாதிரியான மனிதர்களை நிறையப் பார்க்கிறோம்.  உண்மைக் கதைகள் அவற்றிலிருந்து விலகி ஏன் முக்கியத்துவம் பெறுகிறதென்றால் அவர்கள் குறிப்பிடும் உலகம் நமக்கு நெருக்கமானது.  ஏதாவதொரு தருணத்தில் அதிலிருந்து நாம் தப்பி வந்தவர்களாக இருப்போம். சிறிய நகரங்களில் வளரும் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அபூர்வம். சரியான கல்வி அமையாமல் நல்ல வேலை அமையாமல் தன்னை தற்காத்துக் கொள்ள ஏதாவது செய்து வாழ்க்கையில் மேலே வர வேண்டுமென நினைக்கிறபோது திருட்டு, வழிப்பறி, அடிதடி இவையெல்லாம் தவறென்கிற அறம் மறந்து எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டுமென்கிற உந்துதல் வரும். நல்ல கல்வி, வசதி வாய்ப்புகளோடு வளரும் ஒருவரால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது.


எனத் பதினைந்து வயதிலிருந்து இருபது வயது வரை எனக்கு திருடும் பழக்கம் அதிகமிருந்தது.  பெரிய திருட்டு என சொல்ல முடியாது. வேலை செய்யும் இடங்களில் நூறு இரநூறு என திருடுவது. பூட்டிக் கிடக்கும் வீடுகளின் ஜன்னல்களை உடைத்து ரேடியோ மாதிரியான பொருட்களைத் திருடுவது. எனது நண்பன் ஒருவன் இருந்தான். சுற்றுப்புறப் பகுதியிலிருந்து டிவிஎஸ் 50 வாகனங்களை மட்டும் திருடி எங்காவது விற்றுவிடுவான். எங்கள் இருவருக்குமே அப்போது பதினெட்டு வயது. ஒருமுறை அவன் அருகிலிருக்கும் செங்கப்படை பள்ளியின் ஆசிரியர் ஒருவரின் சிவப்புநிற டிவிஎஸ் வண்டியை திருடிவிட்டு வந்தான். அந்த வண்டியை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு ஒசூரில் வேலைக்குச்  செல்வது எங்கள் இருவருக்கும் திட்டம்.


எதிர்பாராத விதமாக அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் இவனிடம் வண்டியிருப்பதைக் கவனித்து அவனது வாத்தியாரிடம் சொல்லிக் கொடுத்துவிட போலிஸுக்குப் போகாத அந்த வாத்தியார் நான்கு ஆட்களைக் கூட்டி வந்து அவனை நையப்புடைத்து விட்டார். சரியான உணவு இல்லாமல் மெலிந்து நைந்து போன உருவம். அப்போது நானும் அப்படித்தான் இருந்தேன். கண் முன்னால் அவன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை எனக்குள் கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கியது. திருடுவதைக் கைவிட முடிவுசெய்து வெளியூருக்கு வேலைக்குச் சென்றேன். அந்தப் பழக்கத்தை கைவிட எனக்கு முழுமையாக இரண்டு வருடங்கள் ஆகின. அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.

இந்த சம்பவத்தை இங்கு குறிப்பிட மிக முக்கியமான காரணமுண்டு. நாம் தண்டனைகளின் வழியாக மனிதர்களிடம் ஒழுங்கை கற்றுக்கொடுத்துவிட முடியுமென நினைக்கிறோம். அது உண்மையல்ல. தண்டனைகள் ஒருவனைத் திருத்துவதில்லை.


ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் ஒரு மனிதனின் மனம் இருக்கிறது. உதாசீனங்களாலும் அவமானங்களாலும் புறக்கணிப்புகளாலும் பசியாலும் காயப்பட்டு துன்புறுத்தப்பட்ட அந்த மனதோடு உரையாடல் நிகழ வேண்டியது அவசியம். நீ பாதுகாப்பாக இருக்கிறாய் என்னோடு உரையாடு என்கிற சூழலை உருவாக்குவதுதான் ஒரு மனிதனை அவனது துர்கனவுகளிலிருந்து வெளியே கொண்டு வரும் முதல் படி. சரி அப்படியானால் கொடூர குற்றவாளிகளை தண்டிக்காமல் விட்டுவிடலாமா எனக் கேட்கலாம். வன்முறையை அதே போல் வன்முறையால் சரி செய்ய முடியாது. அடிப்பது, கொடூரமாக துன்புறுத்துவது இவையெல்லாம்  ஏற்கனவே வன்முறையின் ருசி கண்டவனை மேலும் தூண்டிவிடவே செய்யும்.


இந்தப் புத்தகத்தில் எதனால் வன்முறை உலகில் செல்ல நேர்ந்தது என்பதைக் குறைவாகவும் அப்படி சென்றதன் வழியாக நீண்டகால சிறைவாசம் தன்னை என்னவாக மாற்றியிருக்கிறது என்பதையும் இந்த உலகம் குறித்து புரிதல் என்னவாக மாறியிருக்கிறது என்பதையும் செல்வம் விரிவாகப் பேசியிருக்கிறார். இருபத்தியிரண்டு வயதில் தனது குற்றங்களுக்காக செல்வம் சிறைக்குச் செல்கிறார். அதன்பிறகு 32 வருடங்களாக சிறையில் இருக்கிறார். நீண்ட காலம் தூக்கு கைதியாகவும் அதன்பிறகு இப்பொழுது சாகும்வரை சிறையில் இருக்க விதிக்கப்பட்ட ஆயுள் கைதியாகவும் தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் அவர் ஓரிடத்தில் சிறையில் நிகழும் உரையாடலில் ‘நீ திருந்திவிட்டாயா?’ என எல்லோரிடம் கேட்பது போல் அவரிடம் கேட்டால் ‘உண்மையில் தெரியவில்லை’ என்கிற பதிலையே சொல்கிறார். இந்த சமூகத்தோடு இணைந்து வாழ அனுமதிக்காமலேயே ஒருவன் திருந்திவிட்டானா இல்லை என்பதை எந்த  ஞானக்கண் கொண்டு காண்பது.  இந்த அமைப்பின் மீது நமக்கு ஏன் சந்தேகங்களும் அச்சமும் உருவாகிறதென்றால் சட்டமும் திட்டமும் எழுத்தளவிலேயே இருக்கின்றன. எழுத்தளவில் இருக்கும் எல்லாமே சாத்தியம் தான் என நம்புவது எத்தனை அபத்தம்?


ree

தமிழ்நாட்டின் அத்தனை சிறைச்சாலைகளிலும் இருந்திருக்கிறார். இவரோடு இவரது நண்பர்களான ஷேக் மீரான், ராதாகிருஷ்ணனும் முப்பத்தியிரண்டு வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள்.  பிரபல ரவுடிகள், முக்கியமான அரசியல் தலைவர்கள், சாமியார்கள் என ஏராளமானவர்களோடு நெருங்கிப் பழகக் கிடைத்த அனுபவத்தின் வழியாக அவர் பகிருந்து கொள்ளும் செய்திகள் பல இடங்களில் நம்மை அதிர்ச்சியூட்டுகின்றன. ப்ரேமானந்தா சாமியாரின் மீது சுத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு போலியானது உண்மையான காரணம் ஆஸ்திரேலியா வங்கியில் ஒரு அரசியல் கட்சி மாற்ற்ச் சொல்லிக் கொடுத்த பணத்தை சாமி சுருட்டிக்கொண்டார் என்பதுதான் உண்மையான குற்றம் என்பதைக் குறிப்பிடுகிறார். முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருந்ததைக் குறிப்பிடுகிறார். அந்தச் சம்பவங்களை எல்லாம் வாசிக்கையில் நாம் எந்த நிலைப்பாடு எடுப்பதென்கிற குழப்பம் வருகிறது.


கதைகளிலும் சினிமாவிலும் நாம் பார்க்கும் சிறைச்சாலை ஒன்றாகவும் அசலான சிறை வேறொன்றாகவும் இருப்பதை இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. ( இவ்விடத்தில் தமிழ் நாவல்களில் ஓரளவு சிறையைப் பதிவு செய்ததாக கொமோராவைக் குறிப்பிட வேண்டும். இவரது புத்தகத்தில் வரும் நிஜத்தை ஒட்டின நிறைய அம்சங்கள் அந்த நாவலில் உண்டு.) சுனாமி காலத்தில் கடலூர் சிறையில் இருந்திருக்கிறார். மக்கள் உடமைகளை இழந்து சிறையை ஒட்டி அடைக்கலமாக வந்தது நிற்கும்போது செய்தியறிந்து சிறைவாசிகள் தங்களது உடமைகளையும் உணவுப் பொருட்களையும் மக்களுக்குக் கொடுக்க நினைக்கிறார்கள். ஆனால் சிறைக் காவலர்களின் வழியாக அனுப்பினால் முழுமையாகப் போய்ச் சேராது என்பதை உணர்ந்து சுவர் வழியாக அந்தப் பக்கம் இருக்கும் மக்களை நோக்கி எறிகிறார்கள். உலகின் எந்த சிறந்த நாவலிலும் இதுபோன்ற  ஒரு காட்சியை நாம் வாசித்திருக்க முடியாது.


முப்பது வருடங்களை சிறைக்குள்ளிருந்து ஒருவர் பார்க்கும்போது வெளி உலகை அவர்கள் எந்த அடையாளங்களின் வழியாக அறிந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒரு முன்னால் சிறைத்துறை அதிகாரி சிறையில் தற்பொதெல்லாம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடுதான். அந்தளவுக்குட் தரமானது என்று சொல்லி இருப்பார். ( அந்த அதிகாரி எத்தனை பெரிய ஊழல் பேர்வழி என்பதையும் இந்த நூலில் செல்வம் ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார்.) ஆனால் உண்மையாக சிறை உணவு என்பதை அவர் எழுதியதை வாசிக்கும் போது சீர் திருத்தங்களுக்கு வாய்ப்புகளே இல்லாத ஒரு சூழலில்  நீண்ட காலம் தண்டனையைக் கழிக்கும் சிறைவாசிகள் எப்படி திருந்தக்கூடும் எனக் கேள்வி எழுகிறது.


2000 ம் வருடத்தில் சிறைத்துறையில் நிகழும் சின்ன மாற்றங்களால் ஒரு அதிகாரி சிறைவாசிகள் விடுப்பு எடுக்கும் விதிமுறைகளை எளிமையாக்குகிறார். இதனால் நீண்டகாலம் சிறையில் இருக்கும் கைதிகள் அவ்வப்போது வீட்டிற்குப் போய் வரக்கூடிய வாய்ப்புகள் உருவாகின்றன. இதன் காரணமாக சிறைச்சாலையில் ஓரினப் புணர்ச்சி வழக்கங்களும் அத்துமீறல்களும் பெருமளவில் குறைந்துள்ளதை அவர் குறிப்பிடுகிறார். இதுவும் மிக முக்கியமான அவதானம். நீண்டகாலம் ஒருவர் சிறைக்குள் உருவாகும் அழுத்தம் அசாத்தியமானது. தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் இருந்தாலும் சிறை என்பது சிறைதான். தான் எப்போதும் கண்கானிக்கப்படுகிறோம் என்கிற அச்சவுணர்வு ஒரு மனிதனின் சமநிலையை எளிதில் சீரழித்துவிடும். இந்தப் புத்தகத்திலேயே இன்னொரு சம்பவமும் உண்டு.


ஒரு காலகட்டத்தில் தெருவோர பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் திரிவோரை எல்லாம் போலிஸ்காரர்கள் தூக்கி வந்தது சிறையில் போடுகிறார்கள். அப்படி சிறைக்குள் வந்த சாமியாரிடம் சிறைவாசிகள் குறி கேட்பது ஆசிர்வாதம் வாங்குவது என்கிற கேலிக்கூத்தெல்லாம் நடக்கிறது. ஒரு சாமியாரிடம் செல்வம் கேட்கிறார். ‘வெளிய பிச்ச எடுக்கறதுக்கு இங்கயே  இருந்துடலாமே’ என்று சொன்னதும் அவர் ‘இங்க எந்த பிச்சக்காரப்பய இருப்பான்…? ச்சை வெளிய இருந்தா திருச்செந்தூரே எனக்குத்தான் சொந்தம்னு சந்தோசமா இருப்போம். தெருவுல இருந்தாலும் சுதந்திரமா இருக்க மாதிரி வருமா?’ எனச் சொல்கிறார். சுதந்திரத்தின் மதிப்பென்ன என்பதை நாம் உணரும் முக்கியமான இடம்.


சிறையில் இருந்த காலத்திலேயே அவருக்குத் திருமணம் நடக்கிறது. தூக்குத் தண்டனை விலக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகும் போது வாழ்க்கை மீது நம்பிக்கை பிறக்கிறது. இப்போது அந்த நம்பிக்கை என்றாவது ஒருநாள் நாம் விடுதலையாவோம் என்கிற எண்ணமாக முளைத்திருக்கிறது. இந்த நூலில் அவர் தனது வாழ்க்கைப் பயணத்தை மட்டும் விளக்கவில்லை. சிறைச்சாலைகள் எவ்வாறு சீரழிந்துள்ளன, என்ன மாதிரியெல்லாம் ஊழல்கள் நடக்கின்றன என்பதையெல்லாம் ஆதாரங்களோடு எழுதுகிறார். தங்களது அடிப்படை உரிமைகளைக் கூட தெரியாமல் மனிதர்கள் எத்தனை மூடத்தனங்களோடு வாழ்கிறார் என்பதைக் குறிப்பிடுகிறார். தொண்ணூறுகள் வரை தமிழக சிறைச்சாலைகளுக்குள் ப்ளாக்கிற்குள்ளேயே கழிப்பறை வசதி கிடையாது. மண் சட்டிகள் தான். யோசித்துப் பாருங்கள் வெளியே இந்த நாடு சந்திர மண்டலத்திற்கு ராக்கெட் விடும் முயற்சிகளிலும் அணு ஆயுத சோதனைகளும் செய்கையில் சிறைக்குள் மனிதர்கள் தங்களது மலத்தையும் மூத்திரத்தையும் பாத்திரத்தில் கழித்து அதனைக் காலையில் வெளியே கொட்ட வேண்டும். இதுவா ஒரு பண்பட்ட சமூகத்தின் வளர்ச்சி?


நாம் மனிதர்களைக் குறைவான அளவிலேயே புரிந்துகொள்கிறோம், அதை விடவும் குறைவான அளவிலேயே புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம். முக்கியமாக ஒருவரைக் குறித்து நாம் அறியும் செய்திகளின் வழியாக எந்த இறுதி முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்கு இந்தக் காலகட்டத்தில் முக்கியமான ஒரு சம்பவத்தை நினைவுகொள்கிறேன். லிங்கம் திரைக்கதை எழுதுவதற்கு முன்னால் லிங்கம் என்ற பெயரில் எழுதப்பட்ட நூலை வாசித்தேன். அதில் இறுதியாக லிங்கம் பிரபுவைக் கொலை செய்தே ஆகவேண்டுமென முடிவெடுக்கக் காரணமாக ஒரு சம்பவத்தை ஆசிரியர் எழுதுகிறார். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் ஒரு மலையாள தம்பதி. அந்தப் பெண் கர்ப்பமாக வேறு இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் பெண்ணை பிரபுவும் அவரது நண்பர்களும் சேர்ந்து கற்பழித்து விடுகிறார்கள். இதனால் காவல்துறையும் லிங்கமும் பிரபுவை ஒழித்தே ஆவதென வெறியாகிறார்கள். இந்தப் பகுதி நீண்ட நாட்களாகவே எனக்கு நெருடலாக இருந்தது. இத்தனை பெரிய குரூரத்தைச் செய்யும் எந்தச் சூழலும் பிரபுவின் வாழ்வில் இல்லாத போது எப்படி இது சாத்தியமாகும்? என யோசித்துக் கொண்டிருந்த போதுதான் நண்பரும் எழுத்தாளருமான கு.விக்டர் பிரின்ஸின் அறிமுகம் கிடைத்தது.


அவரது தந்தை இந்த சம்பந்தப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்டேஷனில் எழுத்தராக இருந்துள்ளார். அவரது வார்த்தைகளின் படி நடந்தது பணம் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஒரு வாய்த் தகராறு மட்டுமே... இது எப்படி கர்ப்பமான பெண்ணைக் கற்பழித்ததாக மாறியது என்பது எனக்குப் பிடிபடாமல் இருந்தது. இந்த நூலில் செல்வம் இன்னொரு உண்மையைச் சொல்கிறார். கேரளாவிலிருந்து கன்னியாகுமரிக்கு விபச்சாரத்திற்கு வருவது அதிகம். அப்படி விபச்சார வழக்கில் இருவரை போலிஸ் கைது செய்கிறது. பிரபு போலிஸ் ஸ்டேஷனை தாக்கியதிலிருந்து அவரை பல்வேறு வழிகளில் பழிவாங்க துடிக்கிறார்கள். கைது செய்த பெண் ஸ்டேஷனுக்கு வரும்போது மாதவிலக்கு ஆகிவிடுகிறார். இந்த சம்பவத்தைக் காவல்துறை அப்படியே பிரபுவின் மீதான குற்றமாக கணக்கெழுதுகிறது. அப்படி எழுதப்பட்ட கதைதான் கர்ப்பமான பெண்ணை கற்பழித்தது. இந்த ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டே அந்தப் புத்தகத்தை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு திரைக்கதையை வேறு கண்ணோட்டத்தில் எழுதினேன். அந்தப் புத்தகத்திலிருந்து எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை.


இந்த நூல் குற்றம் குறித்தும் தண்டனைகள் குறித்தும் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது. அதே நேரம் சில விஷயங்களை அவர் தவிர்த்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. முக்கியமாக சிறைச்சாலையில் பணி செய்யும் இரண்டு பெண் மருத்துவர்கள் இவரோடும் இவரது நண்பர் ராதாகிருஷ்ணனோடும் நெருக்கமாகிறார்கள். அதில் ராதாகிருஷ்ணனோடு அந்த பெண் மருத்துவருக்கு உருவாகும் உறவு குறித்து எழுதப்பட்டிருக்கும் பகுதி. இது ஒரு நாவலாக இருக்கும் பட்சத்தில் சுவாரஸ்யமான சம்பவம் என வாசித்துக் கடந்திருக்கலாம். ஆனால் வாக்குமூலம். பல்லாயிரக்கணக்கானவர்கள் வாசிக்கப் போகிறார்கள். ஏன் அந்தப் பெண் மருத்துவர்களும் வாசிக்கக் கூடும். சிறைச்சாலையில் அவரோடு இருந்த அதிகாரிகள் சிறைவாசிகள் வாசிக்கும் போது அந்த இரண்டு பெண்களைக் குறித்து எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். அதேபோல் சில கதைகள் என்ற பகுதியில் இரண்டு சம்பவங்கள் அதில் ஒரு பெண் நீதிபதி குற்றவாளியோடு உறவு கொள்வதை விவரிக்கும் இடம். சர்வ நிச்சயமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இன்னொருவரின் அந்தரங்கம் குறித்து எழுதுகையில் இந்தக் கவனம் ஏன் முக்கியமானதென்றால் இந்த நூல் ஒரு வாக்குமூலமாகிறது. அதனாலேயே கூடுதல் கவனமும் தேவைப்படுகிறது.


இதற்கப்பால் நமது சமூகம் சிறைச்சாலைகளை குற்றம் செய்க்கிறவர்களை என்னவாகப் பார்க்கிறது? இந்த சட்ட அமைப்பு உண்மையிலேயே திருத்தங்களுக்கான வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கிறதா என்பதையெல்லாம் கசப்பான உண்மைகளாக நாம் வாசித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்குமே உண்டு. சொல்லப்போனால் அது நீண்டகால வேலைத்திட்டம். தொடர்ச்சியான உரையாடல், இதுபோன்று ஏராளமான நூல்கள் உருவாக சாத்தியமாக சிறைச்சாலைகளுக்குள் வாசிப்பையும் பொது சமூகத்துடன் உரையாடக்கூடிய சாத்தியத்தையும் அமைத்டுக் கொடுக்க வேண்டும்.  தண்டனைகள் ஒருபோதும் குற்றங்களைக் குறைக்கப்போவதில்லை. மனிதன் தன் செயல்கள் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்.  உரையாடல்களிலிருந்துதான் அந்த சிந்தனை உருவாக முடியும்.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page