top of page

காதல் - அந்தந்த தருணத்தில் நிகழும் அற்புதம்.

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
1 minute ago
5 min read


காதலைப் பற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன். உடலைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறேன். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் ஈர்ப்பு, காமம், உடல் நெருக்கம், பிரிவு, பொறாமை, துரோகம், நினைவு, தனிமை என்று காதலின் பல அறைகளுக்குள் என் கதாபாத்திரங்களோடு நான் சென்றிருக்கிறேன். ரூஹ் போன்ற ஒரு நாவலை எழுதும்போதுகூட காதல் எனக்கு வெறுமனே ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவது என்ற எளிய விஷயமாக இருந்ததில்லை. அது உடலுக்குள்ளும் உடலுக்கு அப்பாலும், ஆசைக்கும் ஆன்மாவுக்கும் இடையிலுமான ஒரு மர்மமான இடத்தில் நிகழ்வதாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் இத்தனை ஆண்டுகள் காதலைப் பற்றி எழுதிய பிறகும் ஒரு கேள்விக்கு மட்டும் என்னால் தெளிவாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதலில் முழுமை என்பதென்ன?


என்னுடைய சொந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது இந்தக் கேள்வி இன்னும் சிக்கலாகிறது. என்னைவிட வயதில் பெரிய பெண்ணின் மீது எனக்குக் காதல் வந்திருக்கிறது. என்னைவிட இளைய பெண்ணின் மீதும் காதல் வந்திருக்கிறது. இரண்டையும் காதல் என்றே சொல்லலாம். ஆனால் அந்த இரண்டு அனுபவங்களும் ஒன்றல்ல. ஒருவரிடம் நான் இருந்த விதம் இன்னொருவரிடம் இருந்த விதமாக இல்லை. ஒருவரிடம் நான் வெளிப்படுத்திய ஆசை இன்னொருவரிடம் வெளிப்பட்ட விதத்தில் இல்லை. ஒருவருடன் இருந்தபோது என்னுள் இருந்த பயம் இன்னொருவருடன் இருந்தபோது இல்லை. ஒருவரிடம் நான் குழந்தையாக இருந்திருக்கலாம்; இன்னொருவரிடம் ஆணாக இருக்க முயன்றிருக்கலாம். ஒருவரிடம் என்னைப் பாதுகாத்துக்கொள்ள முயன்றிருக்கலாம்; இன்னொருவரிடம் என்னையே முழுவதுமாகத் திறந்து வைத்திருக்கலாம். இப்போது எனக்குள் ஒரு விசித்திரமான கேள்வி எழுகிறது: இந்த எல்லா உறவுகளிலும் நான் ஒரே மனிதனாகத்தான் இருந்தேனா? அல்லது ஒவ்வொரு பெண்ணுடனும் நான் வேறு வேறு மனிதனாக இருந்தேனா?


நம்மைப் பற்றி நாம் ஒரு நிலையான கருத்தை வைத்திருக்கிறோம். நான் இப்படிப்பட்டவன், எனக்கு இப்படித்தான் பிடிக்கும், இப்படித்தான் கோபம் வரும், இப்படித்தான் காதலிப்பேன் என்று நினைக்கிறோம். ஆனால் இன்னொருவர் நம்முடைய வாழ்க்கைக்குள் நுழைந்தவுடன் அந்த "நான்" மாறத் தொடங்குகிறது. ஒருவருடன் பேசும்போது நாம் மென்மையானவர்களாக இருக்கிறோம்; இன்னொருவருடன் பேசும்போது பிடிவாதமாக இருக்கிறோம். ஒருவரிடம் நம்முடைய பயம் வெளிப்படுகிறது; இன்னொருவரிடம் நம்முடைய துணிச்சல். ஒருவரிடம் நம்முடைய குழந்தைத்தனம் விழித்துக்கொள்கிறது; இன்னொருவரிடம் நம்முடைய ஆண்மை. ஒருவரிடம் நம்முடைய உடல் முழுவதும் விழித்துக்கொள்கிறது; இன்னொருவரிடம் நம்முடைய அறிவு, தனிமை அல்லது ஆன்மா விழித்துக்கொள்கிறது. இதனால் காதல் என்பது இன்னொருவரைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, நம்முள் இதுவரை அறியப்படாமல் இருந்த பல மனிதர்களைக் கண்டுபிடிப்பதும்கூட என்று தோன்றுகிறது. அப்படியானால் நான் ஒரே மனிதனா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. நான் ஒரே மனிதனாக இருந்ததில்லை. நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் என்னுள் இருந்த வேறு வேறு மனிதர்கள் விழித்திருக்கிறார்கள்.


மகத்தான காதல் நாவல்களை வாசித்தபோது இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் சந்தித்திருக்கிறது. Anna Kareninaவில் காதல் என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட ஆசை மட்டும் அல்ல; திருமணம், தாய்மை, சமூக ஒழுங்கு, உடல், குற்றவுணர்வு, தனிமை ஆகியவை ஒன்றோடொன்று சிக்கிக்கொள்ளும் ஒரு அனுபவம். அன்னா காதலிக்கிறாள் என்பதைக் கொண்டு அவளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அவள் ஒரே நேரத்தில் காதலியும், மனைவியும், தாயும், சமூகத்தின் பார்வைக்கு உட்பட்ட பெண்ணுமாக இருக்கிறாள். அவளுடைய வாழ்க்கையில் காதல் ஒரு உணர்வாக மட்டும் இல்லாமல், அவள் யார் என்ற கேள்வியையே மாற்றுகிறது. Madame Bovary இன்னொரு ஆழமான சிக்கலைத் திறக்கிறது. எம்மா காதலைத் தேடுகிறாளா, அல்லது காதலைப் பற்றிய கற்பனையைத் தேடுகிறாளா என்பதே நமக்கு உறுதியாகத் தெரியாது. அவள் ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் செல்கிறாள்; ஆனால் ஒவ்வொரு மனிதனிடமும் அவள் தேடுவது ஒருவிதமான பரவசம், தன்னுடைய சாதாரண வாழ்க்கையைத் தாண்டிச் செல்லும் ஒரு வாய்ப்பு. காதலிடம் நாம் மனிதனைவிட அதிகமான ஒன்றை எதிர்பார்க்கத் தொடங்கும்போது பிரச்சினை உருவாகிறது.


The Great Gatsbyயில் காதல் இன்னும் சிக்கலான ஒன்றாகிறது. கேட்ஸ்பி டெய்சியை மட்டுமே காதலிப்பதாகத் தோன்றினாலும், அவன் உண்மையில் மீண்டும் பெற விரும்புவது ஒரு பெண்ணை மட்டும் அல்ல; ஒரு காலத்தை, ஒரு கனவை, அந்தக் காலத்தில் தானாக இருந்த தன்னுடைய உருவத்தை. கடந்த காலத்தை மீண்டும் உருவாக்க முடியும் என்று அவன் நம்புகிறான். அதனால் அந்தக் காதல் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான உறவாக மட்டும் இல்லாமல், மனிதன் தன் கடந்த காலத்துடன் கொண்டிருக்கும் போராட்டமாக மாறுகிறது. Love in the Time of Cholera காதலை இன்னும் நீண்ட காலத்தின் வழியாகப் பார்க்கிறது. இளமையில் தொடங்கிய காதல் பல தசாப்தங்களைக் கடந்து உயிரோடு இருக்கிறது. ஆனால் அங்கேயும் ஒரு கேள்வி நம்மைத் துரத்துகிறது: இத்தனை காலம் ஒருவர் காதலித்தது அந்த மனிதரையா, அல்லது அந்த மனிதரைப் பற்றிய தனது கற்பனையையா? ( நான் இந்த நாவலையும் அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்தையும் குறித்து ஓரிரு முறை முகநூலில் விரிவாக எழுதி இருக்கிறேன்.)


Unbearable Lightness of Being காதலையும் உடலையும் இன்னொரு தத்துவ நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஒருவரை நேசிப்பதும் ஒருவரை விரும்புவதும் ஒரே விஷயம் அல்ல. உடல் ஒரு உண்மையைச் சொல்கிறது; மனம் இன்னொரு உண்மையைச் சொல்கிறது; மனிதன் அந்த இரண்டு உண்மைகளுக்கும் நடுவே வாழ்கிறான்.

இந்த நாவல்கள் ஒவ்வொன்றும் காதலைப் பற்றி வேறு வேறு உண்மைகளைச் சொல்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் தாண்டி என்னைத் தொடர்ந்து துரத்துவது வேறு ஒரு கேள்வி. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பலரை காதலிக்கும்போது அந்த எல்லா காதல்களிலும் அவன் ஒரே மனிதனா? ஒருவேளை இல்லை. மனிதனின் "நான்" என்பது ஒரு தனி அறைக்குள் பூட்டப்பட்டு கிடக்கும் பொருள் அல்ல. நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு ஏற்ப நம்முள் இருக்கும் பல மனிதர்கள் விழித்துக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணுடன் நான் இருந்தபோது இருந்த நான், இன்னொரு பெண்ணுடன் இருந்தபோது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் யார் உண்மையான நான்? ஒருவேளை இருவருமே. ஏனென்றால் காதல் நம்மை ஒரே மனிதனாக நிரூபிப்பதில்லை; நம்முள் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.


இதனால்தான் காதலைப் பற்றி எழுதுவது இவ்வளவு கடினமாக இருக்கிறது. காமத்தை எழுத முடியும். உடலை எழுத முடியும். ஒரு முத்தத்தை எழுத முடியும். பிரிவின் வலியை எழுத முடியும். பொறாமையையும் துரோகத்தையும் எழுத முடியும். ஆனால் காதலின் மையத்தைப் பிடித்து எழுத முயன்றவுடன் அது நம்முடைய கைகளிலிருந்து நழுவிவிடுகிறது. ஏனென்றால் காதலுக்கு ஒரு மையம் இருக்கிறதா என்பதே சந்தேகம். சில சமயம் அது உடலில் இருக்கிறது; சில சமயம் நினைவில்; சில சமயம் ஒருவரைத் தொலைவில் இருந்து நினைப்பதில்; சில சமயம் ஒருவருடைய அருகில் அமைதியாக உட்கார்ந்திருப்பதில்; சில சமயம் உடல்களின் இடைவெளி இல்லாமல் போகும் ஒரு இரவில்; சில சமயம் பிரிவதற்கு முன் சொல்ல முடியாமல் போன ஒரு வாக்கியத்தில். ஒரு மனிதனை ஒரே நாளில் மிகவும் நேசிக்கவும், அதே நாளில் அவரிடமிருந்து சிறிது தூரம் ஓடிப்போகவும் முடிகிறது. இதில் எது உண்மையான காதல் என்று கேட்கும்போது, இரண்டுமே உண்மை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ரு


நாம் காதலைப் பெரும்பாலும் ஒரு நேர்கோடாகக் கற்பனை செய்கிறோம். சந்திப்பு, ஈர்ப்பு, நெருக்கம், உச்சம், திருமணம், முதுமை என்று அது ஒரு முழுமையை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். ஒருவரை முழுமையாகப் புரிந்துகொள்வது காதலின் உச்சம் என்றும், ஒருவரை ஒருபோதும் இழக்காமல் இருப்பது காதலின் வெற்றி என்றும் நினைக்கிறோம். ஆனால் வாழ்க்கையில் அப்படி எதுவும் நடைபெறுவதில்லை. நேற்று ஒருவருடைய அருகில் இருந்தபோது கிடைத்த ஆறுதல் இன்று கிடைக்காமல் போகலாம். இன்று அவரைப் பார்த்தவுடன் நமக்குள் ஏதோ ஒன்று மலரலாம். நாளை அவருடைய ஒரு சொல் நம்மைக் காயப்படுத்தலாம். அதனால் நேற்று உணர்ந்த காதல் பொய்யாகிவிடாது; இன்று உணர்ந்த கோபமும் பொய்யாகிவிடாது. இரண்டும் ஒரே உறவின் வெவ்வேறு உண்மைகள். மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பதால், அவர்களுக்கிடையிலான காதலும் மாறிக்கொண்டே இருக்கும்.

டா


வயது அதிகரிக்கும்போது ஒருவேளை நாம் கற்றுக்கொள்வது இதுதான். காதலைப் பிடித்துவைத்திருக்க முடியாது. சில மனிதர்கள் நம்முடைய வாழ்க்கைக்குள் வந்து சில கதவுகளைத் திறக்கிறார்கள். ஒருவர் நம்முடைய உடலை நமக்கே அறிமுகப்படுத்துகிறார். இன்னொருவர் நம்முடைய தனிமையை. ஒருவர் நம்முடைய மென்மையை. இன்னொருவர் நம்முடைய கொடூரத்தை. ஒருவர் நம்முடைய பயத்தை. இன்னொருவர் நம்முடைய துணிச்சலை. சிலர் நம்மால் மறந்துவிட்ட நம்மையே நமக்குத் திரும்பக் காட்டுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையிலிருந்து சென்றுவிட்ட பிறகும் அந்தக் கதவுகள் திறந்தே இருக்கும். அதனால் ஒரு காதலின் மதிப்பு அது எவ்வளவு காலம் நீடித்தது என்பதில் மட்டும் இல்லை; அது நம்முள் என்ன நிகழ்த்தியது என்பதிலும் இருக்கிறது.


இப்போது எனக்குத் தோன்றுவது, காதலைப் பற்றிய நம்முடைய தவறான எதிர்பார்ப்பு "முழுமை" என்பதுதான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும், இரண்டு உடல்கள் ஒன்றாகி ஒரே உலகமாக வேண்டும், இருவருக்கும் இடையே எந்த ரகசியமும் இருக்கக்கூடாது, பிரிவு இருக்கக்கூடாது, சலிப்பு வரக்கூடாது, ஆசை குறையக்கூடாது என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அப்படி ஒரு காதல் இருந்தால் அது ஒருவேளை மனிதர்களுக்கிடையிலான உறவாகவே இருக்காது. மனிதர்கள் முழுமையானவர்கள் அல்ல. அவர்களுடைய ஆசைகளும் முழுமையானவை அல்ல. அவர்களுடைய நினைவுகளும் முழுமையானவை அல்ல. அவர்களுடைய வாழ்க்கையும் முழுமையானதல்ல. அப்படியிருக்க அவர்களுக்கிடையிலான காதல் மட்டும் எப்படி முழுமையானதாக இருக்க முடியும்?


என்னுடைய வாழ்க்கையில் வந்த பெண்களைத் திரும்பிப் பார்க்கும்போது, அவர்களோடு இருந்தபோது நான் வெவ்வேறு மனிதர்களாக இருந்திருக்கிறேன் என்பதை இப்போது ஒப்புக்கொள்ள முடிகிறது. ஆனால் அந்த காதல்களில் ஒன்று உண்மையானது, இன்னொன்று பொய்யானது என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு உறவிலும் நான் என்னுடைய வேறு ஒரு சாத்தியத்தை வாழ்ந்திருக்கிறேன். சில காதல்கள் என்னை உடைத்திருக்கலாம்; சில காதல்கள் என்னை உருவாக்கியிருக்கலாம்; சில காதல்கள் என்னுடைய உடலை எனக்கே தெரியப்படுத்தியிருக்கலாம்; சில காதல்கள் என் தனிமையை எனக்குக் காட்டியிருக்கலாம். சிலவற்றை நான் இழந்திருக்கலாம்; சிலவற்றிலிருந்து நான் விலகியிருக்கலாம்; சிலவற்றை நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் சேர்ந்து தான் இன்று காதலைப் பற்றிய எனது குழப்பத்தை உருவாக்கியிருக்கின்றன. அந்தக் குழப்பமே ஒருவேளை உண்மைக்கு அருகிலான இடமாக இருக்கலாம்.


இப்போது காதலை ஒரு இலக்கை நோக்கிச் செல்லும் பயணமாக என்னால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு பயணத்திற்கு இலக்கு வேண்டும்; காதலுக்கு அப்படியொரு இலக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒருவரை அடைவது காதலின் முடிவு அல்ல. அவரோடு வாழ்வது அதன் முடிவு அல்ல. அவரை முழுமையாகப் புரிந்துகொள்வதும் அதன் முடிவு அல்ல. சில சமயம் காதல் முடிந்த பிறகுதான் அதன் உண்மை நமக்குத் தெரிய வருகிறது. சில சமயம் அது நீடித்துக்கொண்டிருக்கும்போதே அதன் அர்த்தம் மாறுகிறது. சில சமயம் ஒருவர் நம்முடைய வாழ்க்கையில் இருந்தது மட்டுமே ஒரு அற்புதமாக இருக்கிறது. அந்த அற்புதம் எவ்வளவு காலம் நீடித்தது என்பது இரண்டாவது விஷயம்.


அதனால் இத்தனை ஆண்டுகள் காதலைப் பற்றி எழுதிய பிறகு, காதலின் இறுதி வரையறையைச் சொல்ல வேண்டிய நிலை வந்தால் நான் இப்போது தயங்குவேன். காதலை நிரந்தரமான உணர்வாகவும் பார்க்க முடியவில்லை; ஒரு உறவின் ஒப்பந்தமாகவும் பார்க்க முடியவில்லை; இரண்டு மனிதர்களின் முழுமையான இணைவாகவும் பார்க்க முடியவில்லை. அது இன்னும் மர்மமானது. ஒருவர் இன்னொருவரின் வாழ்க்கைக்குள் நுழைந்து, எதிர்பாராத ஒரு தருணத்தில் நம்முள் இதுவரை அறியப்படாத ஒன்றை எழுப்புகிறார். சில நேரங்களில் அந்த உணர்வு ஒரு இரவு மட்டுமே நீடிக்கிறது. சில சமயம் பல வருடங்கள். சில சமயம் வாழ்நாள் முழுவதும் நினைவாகத் தொடர்கிறது. அந்தக் கால அளவு அதன் மதிப்பை நிர்ணயிப்பதில்லை.

எனக்குக் காதலைப் பற்றிய மிகத் தெளிவான புரிதல் இப்போது இதுதான்: காதல் என்பது முழுமையை நோக்கிய பயணம் அல்ல. நாம் குறைபாடுகளைக் கொண்ட மனிதர்கள்; ஒருவருக்கொருவர் முழுமையாகிவிடப் போவதில்லை. நாம் ஒருவருடைய வெற்றிடத்தை நிரந்தரமாக நிரப்பப் போவதுமில்லை. ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தருணத்தில், எந்த விளக்கமும் இல்லாமல், எந்த எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல், இரண்டு மனிதர்கள் ஒருவரை ஒருவர் தீவிரமாக உணரும் ஒரு அற்புதம் நிகழ்கிறது. அந்தத் தருணத்தில் கடந்த காலமும் எதிர்காலமும் கொஞ்சம் பின்னால் செல்கின்றன. அந்த நொடி மட்டும் போதுமானதாகிறது. காதலின் முழுமையை நாம் தேடிக்கொண்டிருப்பது ஒருவேளை அதன் இயல்பையே தவறாகப் புரிந்துகொள்வதாக இருக்கலாம். ஏனென்றால் காதல் முழுமையாகி முடிந்துவிட வேண்டிய ஒன்றல்ல; அது நிகழும்போதே முழுமையானது.


இறுதியில் நான் கண்டுபிடித்திருப்பது இதுதான்: காதல் என்பது முழுமையை நோக்கிய பயணம் அல்ல; அந்தந்த தருணத்தில் நிகழும் அற்புதங்கள். ஒருவர் நம்மைப் பார்த்த விதத்தில் நிகழும் அற்புதம். ஒருவருடைய உடல் நம்முடைய உடலை நினைவுபடுத்தும் அந்த அற்புதம். பல வருடங்களுக்குப் பிறகும் மறக்க முடியாத ஒரு குரலில் இருக்கும் அற்புதம். ஒருவரின் அருகில் இருந்தபோது உலகம் கொஞ்சம் குறைவான தனிமையாகத் தோன்றும் அந்த அற்புதம். அது நீடிக்க வேண்டியதில்லை. அது நமக்குச் சொந்தமாக வேண்டியதில்லை. அது ஒரு வாழ்க்கையாக மாற வேண்டிய அவசியமும் இல்லை. அது நிகழ்ந்தது என்பதே அதன் அர்த்தம். ஒருவேளை மனித வாழ்க்கையில் நாம் பெறக்கூடிய மிகப்பெரிய காதல் அதுதான்: ஒருவரை முழுமையாகப் பெறுவது அல்ல; ஒரு தருணத்தில், முழுமையாக உணரப்படுவது.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page