கொமோரா
- லக்ஷ்மி சரவணகுமார்

- 45 minutes ago
- 3 min read

மனிதர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பத்திலும் துயரத்திலும் வாழ்பவர்கள். ஆனாலும் வாழ்க்கை அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே தான் இருக்கிறது. இழந்தவை ஒருபுறம் இருந்தாலும் இனி வரப்போவதில்லை எதிர்கொள்ள வாழ்க்கை அவர்களை எப்பொழுதும் தயார்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. என்றாவது தம் வாழ்க்கை மாறிவிடும், தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லை, அந்தந்த நேரத்து சந்தோஷங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வருவதில்லை என்பது. தான் ஆசைப்பட்ட எதுவும் சரியாக அமையாத ஒருவனைப் பற்றிய கதைதான் லட்சுமி சரவணகுமார் அவர்கள் எழுதியிருக்கும் இந்த கொமோரா.
சிறுவயது முதலில் தன் ஆசைப்பட்ட எதுவும் தன்னுடன் நிரந்தரமாக இருப்பதில்லை என்பதை கதிர் மிகச் சிறு வயதிலேயே அறிந்து கொண்டு விடுகிறான். தகப்பன் கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்று விட அவன் தன்னுடன் இருந்தால் இருவரும் கஷ்டப்பட நேரிடும் என்று அவனை ஒரு விடுதியில் கொண்டு சேர்கிறாள் அவனது அம்மா. அவனைப் போன்ற ஆதரவற்ற பல குழந்தைகள் தங்கி இருக்கும் அந்த விடுதியை முதலில் அவன் வெறுத்தாலும் போகப்போக தனக்கு விருப்பமான ஒரு இடமாக அதனை மாற்றிக்கொண்டு இருக்கிறான். விடுதியின் கஷ்டங்களை கடக்க ரோஸி ஆன்ட்டியும் ஒரு முக்கிய காரணம். கதிரின் மேல் அளவு கலந்த அன்பை வைத்திருந்த அவர் அவனுக்கு கர்த்தரை அறிமுகப்படுத்துகிறார்.
விடுதியில் தங்கி இருக்கும் மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல் ரோஸி ஆன்ட்டி கவனித்துக் கொள்ளும் குழந்தைகள் தனித்துவமாக தெரிந்தார்கள். ரோஸி ஆன்ட்டி மாற்றலாகி சென்றுவிட, ஒரு நாள் இரவு அவன் பா.லியல் தொந்தரவிற்கு ஆளாகிறான். அது வழக்கமாக நடப்பது தான் என்று தன் தோழியின் மூலம் அறிந்து கொள்ளும் அவன், மீண்டும் மீண்டும் தன் மீது நடக்கும் வன்முறையை தடுக்க இயலாமல் தவிக்கிறான். மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கு சென்று விட இனிய அந்த விடுதி வேண்டாம் என்று அவனுடைய அம்மா அவனை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.
கொஞ்சம் வளர்ந்த பின் குடும்ப சுமைகள் அவன் தோல் மீது விழுகின்றன. கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளி முடிந்து தறி ஓட்ட, பகுதி நேரமாக செல்கிறான். அங்கும் செல்ல பிடிக்காமல் தன் நண்பன் மாரி செய்யும் சாராய தொழிலை செய்ய விருப்பப்பட்டு அவனிடம் கேட்க அவன் 'எப்படியாவது படித்து நல்ல வேலைக்கு செல். இது வேண்டாம்' என்று ஒதுக்குகிறான். கதிர் கஷ்டப்படும் காலங்களில் எல்லாம் அவனுக்கு உறுதுணையாக இருப்பவன் இந்த மாரி தான்.
மாரியின் மூலம் அறிமுகமாகிறான் முருகன். இரவில் மட்டும் நடக்கும் பை நைட் என்ற ஒரு உணவகத்தை கதிரின் உதவியுடன் தொடங்குகிறான். அவனுடன் சேர்ந்து நீலப்படங்கள் பார்ப்பது அதைப்பற்றி பேசுவது என்று இருக்கும் கதிருக்கு அப்பொழுது தெரியவில்லை அவனின் விருப்பமெல்லாம் தன் மீது தான் என்று. அதை அவன் கதிரிடம் தெரிவிக்கும் பொழுது அவனிடமிருந்து விலக ஆரம்பிக்கிறான். இதன் காரணமாக சக்தி என்ற பெண்ணின் முருகன் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறான். பக்தியுடன் வாழ்ந்தாலும் தன் ஆசையெல்லாம் உன் மீது தான் என்று கதிரிடம் ஒரு இரவில் கூற, இருவரும் உறவு கொள்வதை சக்தி பார்த்துவிட்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விடுகிறாள். அவளை சமாதானம் செய்ய செல்லும் முருகன் அதிலிருந்து விலகி விடுவேன் என்றும் மாலத்தீவிற்கு வேலைக்கு செல்கிறேன் என்றும் கூறி அதே போல் மாலத்தீவு செல்கிறான்.
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட சண்டையினால் கடுமையாக தாக்கப்பட்டு சாக்கடையில் விழுந்து கிடக்கும் கதிரை சத்யாவின் உதவியுடன் சக்தி காப்பாற்றுகிறாள். அதன் காரணமாக கதிரிடம் சத்யா வந்து நல்ல விதமாக பழகுகிறாள். அதை தவறாக நினைக்கும் கதிர் அவள் மீது காதல் வயப்பட தொடங்குகிறான். அவனை எனக்கு பிடிக்கவில்லை என்று சக்தியிடம் சொல்லி அனுப்பும் சத்யா பின் அவளாகவே கதிரின் மேல் காதல் கொள்கிறாள். அந்த உறவில் அவள் கருத்தரித்தும் விடுகிறாள். அந்தக் குழந்தையை கலைக்க மனம் இல்லாத அவள் அதை வளர்க்க அவனுடன் தப்பித்து வேறு இடத்திற்கு செல்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக போலீஸிடம் மாட்டி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறாள். சாதாரண காதல்தான் என்று நினைத்தவர்கள் வயிற்றில் கரு இருப்பதை அறிந்தவுடன் அவளை தீமூட்டி கொலை செய்கிறார்கள். காலம் காலமாக பெண்ணின் கற்பில் தான் தன் சமுதாயத்தின் மானம் உள்ளது என்று நினைக்கும் மனிதர்கள் வெற்றிகரமாக அவளை தீக்கி இறையாக்கி இருந்தனர்.
சத்யாவின் இழப்பிற்கு பிறகு இனி இழக்க எதுவும் இல்லை என்ற எண்ணத்தில் மனம் போன போக்கில் வாழ ஆரம்பிக்கும் கதிரை சக்தியின் வார்த்தைகள் தான் காப்பாற்றுகின்றன. பார்க்கும் பெண்களை எல்லாம் தப்பான கண்ணோட்டத்திலேயே பார்க்கும் கதிர் சக்தியிடம் மட்டும் தூய அன்பை பார்க்கிறான். ஆனாலும் தன் நண்பன் சந்திரன் உடன் இணைந்து கஞ்சா கடத்தும் தொழிலை தான் செய்கிறான். மேலும் பாலத்தின் கீழ் தொழில் செய்து வந்த பெண்களை பாதுகாப்பாக தொழில் செய்யவும் வைக்கிறான்.
சிறையில் இருக்கும் தன் தகப்பனின் மீது நாளுக்கு நாள் அவனது வன்மம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தான் பட்ட இவ்வளவு கஷ்டங்களுக்கும் அவர்தான் மூல காரணம் என்று அவனது ஆழ்மனதில் அணித்தரமாக நம்புகிறான். அதன் காரணமாகவே அவரை எவ்வளவு வேகமாக வெளியே எடுக்க முடியுமோ அவ்வளவு முயற்சிகளும் செய்கிறான். அவரை கொ.லை செய்வது தான் அவனது திட்டம்.
அவரைக் காண செல்லும் சமயத்தில் தான் விஜி அண்ணனை சந்திக்கிறான். விஜி அண்ணனின் அப்பாவி போல் தனக்கு அப்பா இல்லையே என்று ஏங்குகிறான். தன் தகப்பன் மற்றும் விஜி அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க கஞ்சாவை சிறைச்சாலைக்கு உள்ளே கடத்தி விற்பனை செய்ய ஆரம்பிக்கிறான்.
தன் பட்ட கஷ்டங்களுக்கு பலனாக நன்னடத்தை பெயரில் அழகர்சாமி வெளியே வருகிறார். அவரை கொ.லை செய்ய முயற்சிக்கும் பொழுது தனக்குள் இருக்கும் குற்ற உணர்ச்சிகளின் காரணமாக முதலில் பின்வாங்கும் அவன் பின் தன் நண்பன் முருகன் கொடுத்த தைரியத்தினால் அவரை கொ.லை செய்து விட்டு மலேசியா செல்கிறான். தான் பட்ட கஷ்டங்களுக்கு காரணம் தன் தகப்பன் அழகர்சாமி மட்டும்தான் என்று தெரிந்திருந்த அவனுக்கு அழகர்சாமி அவ்வாறு மாற காரணமாக இருந்த கம்போடிய நிகழ்வுகள் தெரிந்திருக்கவில்லை. கடைசியாக கம்போடியா சென்று தன் தாத்தா நடத்தி வந்த ஹோட்டல், அங்கு நடந்த நிகழ்வுகள் என அனைத்தையும் சென்று பார்க்கிறான். இத்துடன் கதையும் முடிகிறது.
மதுரை மக்களையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் பற்றி லட்சுமி சரவணகுமார் அவர்களை எழுத சொன்னால் எழுதிக் கொண்டே இருப்பார் என்று தான் தோன்றுகிறது. அந்த அளவிற்கு அவரின் புத்தகங்கள் அனைத்தும் மதுரை மக்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் நமக்கு படம்பிடித்து காட்டிக்கொண்டே இருக்கின்றன. நாவல் முழுவதும் நிறைய கதாபாத்திரங்கள் நம் மனதை ஆக்கிரமிப்பதை நம்மால் தடுக்க இயலாது. தெருவில் நாய் துடிப்பதை கூட தாங்க முடியாத மனிதர்கள் தன் மகள் வேறொருவனை காதலித்து விட்டால் என்று தெரிந்தவுடன் கவலை கொலை செய்யவும் இந்த சமூகம் தரும் இயங்காது என்பதை ஆணி பொட்டில் அடித்தார் போல் இந்த நாவலில் கூறி இருக்கிறார். அது இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயம்.
கதிர் ஒவ்வொரு முறை தான் விரும்பிய ஒவ்வொன்றாக இலக்கும் பொழுதும் அவனை சுற்றி இருக்கும் மனிதர்கள் அவனை விட்டு விலகாது இருக்கிறார்கள். அதுதான் அவனை வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்ல உதவுகிறது. அதிலும் சக்தி கதாபாத்திரம் அவனுக்கு செய்யும் உதவிகள் வேறு யாரும் செய்திராதது. அவளின் ஒவ்வொரு செயலிலும் கதிரின் மேலிருக்கும் அன்பு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். நம் வாழ்விலும் அப்படிப்பட்ட மனிதர்களை சம்பாதித்துக் கொள்வது தான் நாம் நன்றாக வாழ்ந்ததற்கான அறிகுறி. உடலுறவு பற்றிய விவரிப்புகள் நாவலில் இருப்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டுமே ஆனது இந்த புத்தகம். ஆனால் வாசிப்பவர்களை ஒருபோதும் ஏமாற்றாது. சிறப்பான நாவல்.
(Balu Murugan)
29 july 2025



