top of page

குர்துலைன் ஹைதரின் ஜியார்ஜியாவின் புனித அன்னை ஃப்ளோராவின் ஒப்புதல்வாக்குமூலம்.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • Aug 26
  • 5 min read

ree

’பிரசவ வலியில் துடிக்கும் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்குத் தேவையான உதவிகளைச் செய்து அவள் பாதுகாப்பாக தன் குழந்தையைப் பெற்றெடுக்க உதவி செய்யும்  ஒரு மருத்துவச்சியைப் போன்றவன் நான். எனவே குழந்தை பெற்றெடுப்பது என் பணியல்ல என்பதைப் புரிந்துகொள். மாறாக அதற்கு உதவி செய்வது மட்டுமே என் பணி.


அதேபோல் உனக்குள்ளே இருந்து வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் உன் சிந்தனையை, உன் அறிவார்ந்த கருத்துக்களை அதன் வனப்பு குன்றாமல் வெளிக்கொண்டு வந்த அதனை நீ அறிந்துகொள்ளச் செய்வது மட்டுமே என்னுடைய பணி. ஏனெனில் எனக்கென்று எந்தவொரு தனிப்பட்டோ கருத்தோ சிந்தனையோ கிடையாது.


-       சாக்ரடிஸ்

-       ‘தியடிடஸ்’ – பிளேட்டோ.

 

குர்துலைன் ஹைதர் அலிகாரில் பிறந்தவர். கல்வியாளர்களாகவும் இலக்கியவாதிகளாகவும் அறியப்பட்ட அவரது பெற்றோரால் சிறு வயது முதலே வளமான இலக்கியச் சூழலில் வளர்க்கப்பட்டார். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு அவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. மீண்டும் 1961 ம் ஆண்டில் தான் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார். லக்னோவிலும் ஆக்ஸ்போர்டிலும் கல்வி கற்ற குர்துலைன் ஹைதர் பத்திரிக்கையாளராக நீண்டகாலம் பணியாற்றியவர். அவரது கதைகளைப் புரிந்துகொள்ள அவரது வாழ்வை நாம் கவனமாக உற்றுநோக்க வேண்டியுள்ளது. இடப்பெர்யர்வு,  மதநம்பிக்கைகளின் காரணமாய் எதிர்கொள்ள நேர்ந்த வன்முறைகள், வரலாற்றின் குறுகியவாதம் என அவர் அதிகமும் எடுத்தாண்ட கதைக்களங்கள் இவற்றை மையங்கொடுதான்  அமைந்தன.


இந்திய பாகிஸ்தான் பிரிவினைக் கலவரத்தின் வன்முறைகளை  கண்முன்னால் கண்டவர். டேராடூனில் இருந்த அவரது வீடு எரிக்கப்பட்டது. வகுப்புவாத சக்திகளால் ஏராளமான இழப்புகளை அவர் எதிர்கொண்டபோதும் இந்திய துணைக்கண்டத்தின் இந்தோ இஸ்லாமிய கலாச்சாரத்தின் மதிப்புகளை நிலைநிறுத்தும் விதமாக அவர் தொடர்ந்து  எழுதினார். ஆங்கில இலக்கியத்திலும் மத்திய கால மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் மீது அவருக்கிருந்த ஆழ்ந்த ஞானம் அவரது படைப்புகளில் வெளிப்பட்டன.  வரலாற்றின்  வெளிச்சம் படாத சிறிய பகுதிகளை விவாதிக்கக் கூடியதாக அவரது கதைகளும் நாவல்களும் எழுதப்பட்டிருந்தன. பத்திரிக்கையாளராக அவருக்கிருந்த அனுபவம் கதைகளில் கச்சிதமானதொரு மொழியை அவருக்கு உருவாக்கியிருந்தது.


எல்லோருக்கும் தெரிந்த கதையாடல்களையும் வரலாறுகளையும் அப்படியே திரும்பச் சொல்வதில் ஒரு எழுத்தாளனுக்கு எந்தப் பெருமிதமும் இல்லை.   பெருங்கதையாடல்களின் வழியாய் சொல்லப்பட்டு நம்பவைக்கப்படுகிறவற்றை  கேள்விகளின் வழியாய்  மறுவிசாரணைக்கு உட்படுத்துவதே கலைஞனின் கடமை. ஒரு சமூகத்தின் மையமாக ஒற்றைச் சிந்தனையாக மாறக்கூடிய யாவும் அதிகாரமாக மாறுகிறது. இந்த அதிகாரம் உண்மைக்கு முரணாக இருப்பதோடு உதிரிகளின் குரல்களையும் கதைகளையும் முடக்குகிறது. உதிரிகளின் கதைகளை நாம் மீளுருவாக்கம் செய்யும்போதுதான் குறைந்தபட்சமான ஒரு சமநிலை உருவாவதற்கான சாத்தியங்கள் அமையும்.


உருது இலக்கியத்தின் தனிச்சிறப்பான ஆளுமையான குர்துலைன் ஹைதர் அவரது அக்னிநதி நாவலுக்காக பெரிதும் கொண்டாடப்பட்டவர். இந்தியாவின் நவீன கதைசொல்லிகளில் முதன்மையான சிலரில் ஒருவராக நிச்சயமாக இவரைக் குறிப்பிட வேண்டும்.  மேற்கத்திய சிந்தனைகள் மற்றும் கலைகளின் வழியாக பெரிதும் ஈர்க்கப்பட்டவர் என்பதால் ஒரு பின் நவீனத்துவ கதைசொல்லியாகவே அவர் வெளிப்பட்டார். அவரது கதைசொல்லும் முறை பின்நவீனத்துவ கூறுகளோடு இருந்தபோதும் கதைகளின் குரல் கிழக்கின் குரலாகவே இருந்தது. இந்த மண்ணின் கலாச்சாரங்களையும் நம்பிக்கைகளையும் மூடத்தனங்களையும் பேசக்கூடியவையாய் இருந்தன அவரது கதைகள். வரலாற்றிலும் பண்பாட்டிலும் பெண்களுக்கான இடம் எதுவென்கிற தேடலை அவரது பெரும்பாலான படைப்புகளில் நாம் அவதானிக்கலாம்.


1991 ல் குர்துலைன் ஹைதர்  ஞானபீட விருதுபெற்றபோது தனது உரையில் ‘தொடர்ந்து நாகரீக மதிப்புகள் குறித்த எனது அக்கறை அப்பாவியாகவும், கம்பளித்தலை மற்றும் எளிமையானதாகவும் தோன்றலாம். ஒருவேளை, வானம் இடிந்து விழுவதைத் தடுக்கும் என்று நம்பி, முட்டாள்த்தனமாக தன் நகங்களை உயர்த்தும்  அந்த சிறிய பறவையைப் போல நான் இருக்கலாம்.’ எனக் குறிப்பிட்டதை  இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.


ஜார்ஜியாவின் புனித அன்னை கதையின் துவக்கத்தில்  மத்திய காலத்தில் மரணித்துப்போன ஒரு கன்னியாஸ்திரி கர்த்தரின் கிருபையால்  திடீரென உயிர் கொள்கிறாள்.  ஒரு வருடம் மட்டும் மீண்டும் உயிர் வாழ வரம் கிடைக்கிறது அவளுக்கு. அந்த கன்னியாஸ்திரி தனக்கு துணையாக இன்னொரு   உடல் வேண்டுமெனக் கேட்டு அருகிலிருக்கும்  கல்லறையிலிருந்து ஃபாதர் கிரிகரியை எழுப்புகிறாள். வெவ்வேறு காலத்தில் மரணமுற்ற அடக்கம் செய்யப்பட்ட  அவர்கள் இருவரும் இந்த மறுபிறப்பில் ஒரு வருடகாலம் ஒன்றாக பயணிக்க வேண்டும். உயிர்த்தெழுந்த இந்த கன்னியாஸ்திரி யாரென்பதை அவரது  ஒப்புதல்வாக்குமூலமாக சொல்லப்படுகிறது. கான்ஸ்டாண்டி நோபிளில் அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்த அன்னை ஃப்ளோரா செல்வ செழிப்போடு வளர்ந்தவள். அவளது முதல் காதலன் தியோடரிக் கலாசியஸின் காரணமாக நாட்டை விட்டுத் துரத்தபப்டுகிறார்.


ஈரானில் உள்ள கட்சிபானுக்கு இடம் பெயர்கிறது அவரது குடும்பம், அங்கு ஒரு பெர்ஷியனின் மீது இரண்டாவது முறையாக அவருக்குக் காதல் வருகிறது. பெர்ஷியர்கள் குறித்த மேற்கின் நம்பிக்கைகளுக்கு மாற்றாக இந்தக் காதலன் பண்பானவனாகவும் நாகரீகம் தெரிந்தவனாகவும் இருக்கிறான். ஆனால் ஃப்ளோரா அன்னையின் தந்தை இதை அனுமதிப்பதாக இல்லை. அவளை மீண்டும் நாடுகடத்தி டமாஸ்கஸ் வழியாக ஜார்ஜியாவில் உள்ள பழைய மடலாயத்தில்  சேர்க்கிறார்.  கன்னியாஸ்திரியாக வாழ  நிர்ப்பந்திக்கப்படும் ஃப்ளோரா எந்தவித மறுப்புகளும் இன்றி அதனை ஏற்றுக்கொள்கிறார்.


நீண்டகாலத்திற்குப்பின் தனது குடும்பத்தினர் யுத்தத்தில் கொல்லப்பட்டனர் என்று தெரியவந்தபின் தன்னைத் தானே வதைத்துக்கொள்ளத் துவங்குகிறார். மடாலயத்திற்கு வரும் மற்றவர்கள் அந்த வாதையை ஒரு ஆன்மீக வெளிப்பாடாக எடுத்துக்கொள்கிறார்கள். பிணியுற்றவர்களை அவள் குணமாக்குகிறாள். உண்மையில் அவளது சொற்களல்ல வாதையே மருந்தாகிறது. கடும் நோயுற்ற ஒருவனை சொஸ்தப்படுத்தும் ஃப்ளோரோ அன்னை சில நாட்களிலேயே தானும் நோயுற்று மரணிக்கிறாள்.


சராசரி மனிதர்களை மரணம் விடுவிப்பதுபோல் கன்னியாஸ்திரிகளை விடுவிப்பதில்லை. அவர் புனித அன்னையாகும் ஆகும் தகுதி பெற்றவரா இல்லையா என்கிற நீண்டகால விவாதம் தொடர்கிறது. 1921 ம் ஆண்டு  நீண்ட விசாரணைக்குப் பிறகு ரஷ்யாவின் தலைமை குரு இவருக்கு புனித அன்னை அந்தஸ்து வழங்கலாம் என தீர்மானிக்கிறார். துரதிர்ஸ்டவசமாக அதற்கு  ஒரு வாரத்திற்கு  முன்பாகவே அங்கு கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்துவிடுவதால் அது அறிவிப்பு நடைமுறைபடுத்தப்படாமலேயே போகிறது.


இயேசு கிறிஸ்துவுக்கு அப்பால் அவருடைய சீடர்கள் எவரும் உயிர்த்தெழுந்த வரலாறில்லை. ஆனால் ஃப்ளோரா  உயிர்த்தெழுகிறார் என்பது நமக்கு  ஒரு பெருங்கதையாடலுக்கு இணையான புதிய கதையாடலை உருவாக்கும் சாத்தியத்தைத் தருகிறது. பாவமன்னிப்புக் கேட்பதன் மூலமாக ஒருவர் தன்னைப் புனிதப்படுத்திக் கொள்ளமுடியுமென்பது கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கை. இங்கு  ஃப்ளோராவின் ஒப்புதல்வாக்குமூலத்தில் அவர் தனது ஆசைகள், ஏராளமான காதல் தோல்விகள், ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்திற்கு கட்டாயத்தின் காரணமாய் நிகழ்ந்த இடப்பெயர்வுகளை விவரிக்கிறார். சராசரி மனிதர்களுக்கு இருந்த எல்லா  இச்சைகளும் விருப்பங்களுமிருந்தாலும்  பெண் என்ற காரணத்தால் தனக்கு விருப்பமான முடிவுகளில் வாழ முடியாமல் அலைக்கழிக்கப்படுகிறார் எல்லா ஆசைகளும் நிரம்பிய சிந்திக்கக் கூடிய பெண்ணாக வாழ்ந்து அவர் புனிதத்தன்மையை அடைகிறார் என்பது கிறிஸ்தவத்தின் பாவமன்னிப்பிற்கு முரணான ஒரு அழகியலைக் கொண்டிருக்கிறது.


ree

இருபதாம் நூற்றாண்டில் போரை எதிர்கொண்ட நிலங்களில் வாக்குமூலங்கள் ஒரு முக்கிய இலக்கிய வகைமையாக மாறியதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். நேரடித் தன்மையும் கவுச்சியான உண்மையும் நிரம்பிய இந்தக் கதைகள் புனைவுகளை விடவும் தீவிரமானவை. இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பின் ஏராளமான நூல்கள் இந்த வகைமையில் வெளியாகி கவனத்தைப் பெற்றன. கியூபாவிலும் தென் அமெரிக்காவிலும் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாக்குமூலங்களை  இந்த வகைமையில் உச்சபட்சமான சாதனையாகக் கருத முடியும்.  குர்துலைன் அன்னை ஃப்ளோராவின் ஒப்புதல் வாக்குமூலமாக இந்தக் கதையை எழுதிய விதம்  அபாரமான ஒரு கதைமொழியை உருவாக்கியிருக்கிறது.

அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தினூடாக அவளது வாழ்வு மட்டுமல்ல, பின்னனியில் வரலாற்றுச் செய்திகளும்  நமக்குக் கிடைக்கின்றன.  கிழக்கும் மேற்கும் சந்திக்கும் புள்ளியான சிரியா, கான்ஸ்டாண்டிநோபில் போன்ற இடங்களில் நடந்த நீண்டகால யுத்தங்களுக்குப் பின்னால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் தங்களை நிறுவங்களாக வளர்த்துகொள்ள காட்டிய ஆர்வமே முக்கியக் காரணியாய் இருந்ததையே கிளைக்கதையாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது.


ஆண்களின் கதைகளாகவே சொல்லப்பட்ட வரலாற்றை பெண்ணின் குரலுக்கு மாற்றும்போது விளிம்பின் கதை மையத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது. உருதுமொழியின் கார்சியா மார்க்வெஸ் என அவர் புகழப்படுவதற்கு எல்லா நியாயங்களையும் செய்யக்கூடியவையாகவே அவரது படைப்புகள் இருக்கின்றன. அவரது இன்னொரு சிறுகதையில் இந்திய விடுதலைக்குமுன்  ஒரு கிராமத்திலுள்ள உயர்வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் மூடநம்பிக்கைகள் குறித்து பகடியாக எழுதுகிறார். குர்துலைன் ஹைதரின் கதைகள் நேரடியான மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் மறைமுகமாக நமக்கு ஏராளமான செய்திகளைத் தருகிறது. பல சமயங்களில்   வரலாற்றின் மீது தனக்கிருந்த கேள்விகளை வெளிப்படுத்த கதைகளாக எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்று நாம் எண்ணக்கூடும்.


ஒரு பிரதிக்குள்  பல்வேறு விதமான வாசிப்பு சாத்தியங்களை உருவாக்கும் இந்தக் கதை அதன் பலகுரல் தன்மைக்காகவே பின் நவீனத்துவ அடையாளங்களைத் தாங்கி நிற்கிறது. ஒரு புறம் மத்திய காலத்தின் மூடுண்ட  சட்டதிட்டங்களுக்கு நடுவே வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்வை அணுக முயலும் பெண்ணியப் பிரதியாகவும் அதே வேளை வரலாற்றின் பிசிறுகளை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் கதையாகவும் இருக்கிறது. ஒற்றைத்தன்மைக்கு எதிரான மனநிலை கொண்ட ஒரு புனைவிலிருந்து நமக்குக் கிடைக்கும் புரிதல்களும் வெளிச்சங்களும் ஏராளமானவை. நாம் உதிரிகளின் குரல்களுக்கு செவி கொடுக்கையில் வரலாற்றை புதிய கோணத்தில் வாசிக்க முடிகிறது. தங்களது மறுபிறவி காலம் முடிந்து அவர்கள் விடைபெறும் நாளுக்குமுன் ஃபேஷன் ஷோவுக்குச் செல்கிறார்கள். கிரிகரி அங்கிருந்து ஒரு கவுனைத் திருடுகிறார், மேலும் சில நூலகங்களிலிருந்து நூல்களையும் திருடுகிறார். ஒரு மதுபான விடுதியில் காவல்துறை திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்கிறது. புனிதர்களின் மறுபிறப்பு  முற்றிலும் புதிய கதையாடலை இங்கு நிகழ்த்துகிறது.


கதையின் இறுதிப் பகுதியில் ஃபாதரி கிரிகரி இப்படிச் சொல்கிறார். ‘ஃப்ளோரா நாம் இந்த பூமியில் ஒரு மனிதன் அறுபது அல்லது எழுபது வருடங்கள் வாழலாம். கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம். இந்த குறுகிய ஆயுளில் பாதி நேரத்தை பல விஷயங்களைப் படித்து அனுபவித்துத் தெரிந்துகொள்கிறான். எத்தனை அறிவு அனுபவம் சுயகவனம் உள்ளவனாயினும் ஒருநாள் திடுதிப்பென்று அவன் மரணித்துவிடுகிறான். அப்படியிருக்கும் போது சில நாட்களென்ன ? வருடங்களென்ன என ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது குறித்துக் குறிப்பிடுகிறார். ஃப்ளோரா அன்னைக்கு நேரெதிரானவராக இருக்கும் கிரிகரி இந்த ஒருவருட காலம் முழுக்க ஏராளமான புத்தகங்களை வாசிக்கிறார். இருவருக்குமே உலகம் குறித்தான வெவ்வேறான  புரிதல்கள் இருக்கின்றன.


இந்தக் கதை நான் எழுதிய இரண்டு கதைகளை எனக்கு நினைவுபடுத்தியது. குர்துலைன் ஹைதரை வாசிப்பதற்கு முன்பாகவே நான் எழுதிய கதைகள் அவை. ஒன்று இருள் மூத்திரம் மற்றும் கடவுளின் கெளபீணத்துணி மற்றொன்று நள்ளிரவில் கடவுள் பஞ்சம் பிழைக்கச் செல்கிறார். இருள் மூத்திரம் கதையில் கடவுள் ஒரு தாசியைத் தேடி வருகிறார். அவரால் அவளோடு இயங்கமுடியவில்லை. அவருக்கு எழுச்சி ஏற்படாமல் தோல்வியோடு திரும்ப சாத்தான் முழுமையான காதலனாக தாசியை அடைகிறான் என முடியும் கதை. நள்ளிரவில் கடவுள் பஞ்சம் பிழைக்கச் செல்கிறார் கதையில் தன் கோவிலிலிருந்து வெளியேறி வரும் கடவுளை மனிதர்கள் கடவுளாக ஏற்க மறுக்கிறார்கள். பெருநகர் முழுக்க அலைந்து இறுதியில் பசி பொறுக்காமல் மின்சார ரயிலில் பிக்பாக்கெட் அடிக்கிறார் என்பதாக முடியும். இந்த இரண்டு கதைகளும் அதிகாரமிக்க பெருங்கதையாடல்களுக்கு எதிராக பகடியை முன்வைக்கிறது. மையத்தை விளிம்பை நோக்கி நகர்த்துவதன் மூலம் அதன் அதிகாரத்தினை தகர்க்கிறது. இத்தகைய வாசிப்புச் சாத்தியம் இந்தக் கதைகளுக்கு உண்டென்பதை நான் குர்துலைன் ஹைதரின் கதையை வாசிப்பதன் வழியாகவே கண்டடைந்தேன். பல சமயங்களில் படைப்பு படைப்பாளனை விடவும் மேன்மையானதாக இருக்கிறது.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page