top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

சித்ரனின் பொற்பனையான் & பிற கதைகள்.




‘உயிருள்ள மொழியினால் உருவாகின்ற பல பிரச்சனைகளை எழுத்தாளன் தீர்த்து விடுவதில்லை என்பதே என் கருத்து. ஆயினும், அவன் அவற்றைக் கவனிப்பதும், அவற்றுடன் தொடபு கொள்வதும் அவசியம். செய்தித்தாள்களிலும், வீதிகளிலும், அன்றாட வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்ற நுண்மையான மொழியியல் மாற்றங்களின் மாதிரிகளை நன்கு புலப்படுத்தும் ஒன்றாக எழுத்தாளனது குறிப்புப் புத்தகம் இருத்தல் வேண்டும். மொழிதான் எழுத்தாளனின் அடிப்படைக் கூறு. இதிலிருந்து அவன் பிரிக்கப்படும்போது, தண்ணீரிலிருந்து வெளியே தரையில் எடுத்துப்போட்ட மீன் போல மீச்சுவிடத் தவிப்பான். அவ்வாறு இருப்பானேயானால், அவன் ஒரு எழுத்தாளனே அல்ல.’

-       கான்ஸ்டாண்டின் ஃபெடின்

 

தமிழ் சிறுகதைகளின் மரபுத் தொடர்ச்சியில் இரண்டாயிரத்திற்குப் பிறகு முக்கியமான மூன்று எழுத்தாளர்களின் தாக்கத்தால் எழுத வந்தவர்களே அதிகமெனக் குறிப்பிட முடியும். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா இந்த மூவரும் ஒரு பெரும் இயக்கமாக எழுந்து நின்றதன் பின்னால் அப்போது வெளிவரத் துவங்கியிருந்த உயிர்மை இதழின் பங்களிப்பையும் இவ்விடத்தில் நாம் குறிப்பிட வேண்டும். உயிர்மை இதழின் முதல் பத்தாண்டுகளில் வெளியான அரசியல் கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் அவ்வளவும் தரமானவை.


 பதிப்புச் சூழலும் பரவலாகத் துவங்கியிருந்த அந்த காலகட்டத்தில் சிற்றிதழ் என்ற எல்லைக்கு அப்பால் இணையத்தின் வழியான வாசிப்பு பெருமளவில் அதிகரிக்கத் துவங்கியிருந்தது.  இது எழுத்திலும் மாற்றங்களை உருவாக்கியது என்பதை நாம் மறுக்கமுடியாது. கவிதைகளும் புனைவுகளும் புதிய மொழியினில் புதிய அறங்களை பேசக்கூடியவையாய் வெளிவரத் துவங்கின. ஒருபுறம் வெகுசன கதைகளை எழுதக்கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தாலும் இன்னொருபுறம் சீரிய கதைகளை  எழுதக்கூடியவர்களின் வரவும் அதிகமாக இருந்தது.


ஒவ்வொரு பத்தாண்டுகளிலும்  புனைவில் வருகிறவர்களின் கதைகளை எடுத்து வாசிக்கையில் அந்தக் காலகட்டங்களில்  சமூகத்தில் நிகழும் மாற்றங்களை நாம் அவதானிக்க முடிகிறது. வெகுசன எழுத்துக்கள்ளை வாசிப்பவர்களுக்கும் சீரிய கதைகளை வாசிப்பவர்களுக்குமான ஒரு இணைப்பை உருவாக்கிய வகையில் தான் மேற்குறிப்பிட்ட மூன்று எழுத்தாளர்களும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஒரு இளம் எழுத்தாளன் எழுத வந்த சில காலத்திலேயே தனக்கான பிரத்யேகமான  இலக்கிய வகைமை எதுவென கண்டுகொள்வதோடு தாம் எந்த மரபில் பயணிக்க இருக்கிறோம் என்பதிலும் தெளிவடைகிறான். அந்த வகையில் சித்ரனின் இரண்டாவது தொகுப்பான பொற்பனையானை வாசித்து முடிக்கையில் அவரது முந்தைய சிறுகதைகளையும் வாசித்தவன் என்கிற அடிப்படையில் ரமேஷ் ப்ரேமின் புனைவுகளில் இருந்து தாக்கமடைந்தவராக அவரது புனைவுலகம் நமக்குத் தெரிகிறது.


ஐந்து சிறுகதைகள், ஒரு நெடுங்கதை, ஐந்து குறுங்கதைகள் இந்தத் தொகுப்பில் பெரும்பான்மையான கதைமாந்தர்கள் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு வழிப்போக்கனும் அவனது துணைவனும் என்னும் முதல் கதையைத் தவிர மற்ற கதைகள் கதைசொல்லியின் நாஸ்டால்ஜியாவாக  கடந்தகால வாழ்வின் பிரதிபலிப்பென நாம் கருதக்கூடிய அளவில் இருக்கின்றன.  ஒரு சிறுநகரத்தின் வளரிளம் பருவத்தில் நாம் எல்லோருமே எதிர்கொண்டிருக்கக் கூடிய பாசமான பெரியப்பா, ஏரியா சண்டைகள், செக்ஸ் புக் விற்கிற வியாபாரி, விளையாட்டுகள், ஒவ்வொரு கேங்கிலும் வயதில் மூத்த அக்கறையான அண்ணன் என நமது வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாப்பாத்திரங்களை நாம் அதிகம் காணமுடிகிறது. ஆனால்  இந்தக் கதைகளின் கதைமொழியும், இயல்பாக கைகூடியிருக்கும் அங்கதமும் இந்தக் கதைகளுக்கான தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கிறது.


எத்தனை வயதிற்குப் பிறகும் ஒரு எழுத்தாளனுக்கு   தனது கடந்தகாலத்தை எழுதுவதென்பது விருப்பமானதுதான். அதில் எளிதில் கைகூடிவிடும் என்பது காரணமல்ல, கடந்த காலத்தில் நமக்கு நடந்த கசப்புகளையும் மகிழ்ச்சியையும் தோல்விகளையும் விலகி நின்று பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைகிறது. பலாமரத்தில் தற்கொலை முயற்சி செய்யும் பெரியப்பா அதே மரத்தடியில்  தான் ஆசையாய் வளர்த்த நாய்க்கு வெறிபிடித்ததன் காரணமாய் கொன்று புதைத்தவராக இருக்கிறார். அந்தக் கடைசி தருணத்தில் அவர் வளர்க்கும் தேத்தாம்பட்டி நாய் ஓடிவந்து அவரைக் காப்பாற்றுகிறது. ஒரு உயிரிடம் நமக்கு வரும் பிடிப்பும் இன்னொரு உயிரிடம் ஏற்படும் விலக்கமும் காரணமற்றவை. செல்லப் பிராணிகள் வளர்ப்பது இன்றைக்கு இன்னொரு ஆடம்பரமாக மாறிவரும் சூழலில் போன தலைமுறையினரின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அது அவர்களின் அங்கமாக இருந்ததை நாம் உணரமுடியும். பெரியப்பா என்னும் அந்தக் கதையில் வரும் வேட்டை குறித்தான விவரணைகளும் புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியின் கிராமங்களைப் பத்தின நிலவியல் காட்சிகளும் வாசிக்கையில் திகைப்பை ஏற்படுத்துகின்றன.  ஒரு கதை எத்தனை சுமாரானதாக இருந்தாலும் அதன் தன்மையை மாற்றி மேன்மைபடுத்துவது அந்த கதையில்  வரக்கூடிய விவரனைகள்.  எல்லா பெரிய கோவில்களிலும் நாம் சிற்பங்களைக் காண்கிறோம். ஆனால் சில கோவில்களின் சிற்பங்கள்  அதன் நேர்த்தியிலும் நுட்பத்திலும் நம்மை மலைக்க வைக்கின்றன. எல்லா கலை வடிவங்களிலுமே அதன் உள்ளடக்கம் மீண்டும் மீண்டும் சொல்லப்படக் கூடியதாக இருந்தாலும் நுட்பமும் நேர்த்தியும் தான் ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தாராசுரம் கோவிலில் ஒவ்வொரு தூணிலும் செதுக்கப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கான சிற்பங்களை கவனமாகப் பார்த்தால் ஒன்று மற்றொன்றைப்போல் இல்லாதிருப்பதை நாம் கண்டுகொள்ள முடியும். ஒரே துணில் ஆயிரவிதமான முகலட்சணங்களையும், உடல் அமைப்புகளையும் உருவாக்க முடிந்த அந்த சிற்பி எத்தனை வியப்பிற்குரியவன்?


ஒரு வழிப்போக்கனும் அவனது துணைவனும் என்கிற கதை அதன் துவக்கம் முதலே திருடனுக்கான சாகசத்தோடு சுவாரஸ்யமாக  பயணிக்கிறது. மூன்று சீட்டுக்காரனும், லங்கர் கட்டை உருட்டுகிறவனும், பேருந்து நிலையங்களில் பர்ஸை தொலைத்து ஊருக்குப் போக காசு கேட்டு நிற்பவனும் இன்றைக்குமிருந்தாலும்  புதிய வரவுகள் நிறைய இருக்கின்றன. ஜேப்படி வித்தைக்காரர்கள் தங்களது தொழிலில் வேகமாக அப்டேட் ஆகியபடியே இருக்கிறார்கள். அப்படியான ஒரு ஜேப்படி வித்தைக்காரனே இந்தக் கதையிலும் வருகிறார். அவர் செய்யும் சாகசமும், ஏமாற்றப்பட்டதன் பின்னாலும் நான் என்று வரும் கதைசொல்லி அவரைத் தவிர்க்கமுடியாமல் அவரோடு பயணிப்பதற்கான காரணங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லா ஜேப்படிவித்தைக்காரனைப் போலவும் இவருக்கும் கசப்பான ஒரு கடந்தகாலம் இருக்கிறது. அந்தக் கசப்பான கடந்தகாலமே இந்த கதாப்பாத்திரத்தைப் பலவீனப்படுத்தவும் செய்கிறது. லங்கர் கட்டை  உருட்டுகிறவனுக்கு அதில் இருக்கும் சாகசம் பிடிப்பதைப்போல் ஏன் மற்றவர்களை ஏமாற்றுகிறவனுக்கு ஏமாற்றுவதில் இருக்கும் சாகசம் பிடிக்கக் கூடாது. வாழ்க்கையில் கசப்புகள் இருக்கிறவர்கள்தான் ஜேப்படி திருடர்களாக இருக்க வேண்டுமா என்கிற ஒரு கேள்வி வந்துபோனாலும் கதையின் முடிவு வரை அதனை தலையெடுக்க விடாமல் வைத்திருப்பது சித்ரனின் அங்கதமான மொழிநடை.


முகவீடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை முன்பே குறிப்பிட்டதுபோல் சிறுநகரங்களில் செக்ஸ் புத்தகம் விற்பவனும் தன்னுடைய கடையில் புத்தகம் வாங்க வருகிற சிறுவர்களின் குறிகளைத் தடவிப் பார்க்கிறவனுமான ஒரு மத்திய வயதைச் சேர்ந்த மனிதரின் வாழ்வை விவரிக்கிறது. ஆனால் முந்தைய கதைக்கும் இந்தக் கதைக்குமான மெல்லிய வேறுபாடு அந்தக் கதையில் முடியும் தருவாயில் வந்த பழைய தன்மையைப்போல் இல்லாமல் இங்கு இத்தனை காலம் குழந்தை இல்லாத புத்தக வியாபாரிக்கு குழந்தை பிறக்கிறது என்று வருகிறது. நல்ல துவக்கமும் நல்ல முடிவும் கொண்ட சிறுகதைகள் அதன் நடுவிலிருக்கும் பகுதிகள் எத்தனை சுமாராக எழுதப்பட்டாலும் சிறப்பான கதையாக வந்துவிடும். இந்தக் கதையின் துவக்கம் வழமையானதுதான் என்றாலும் முடிவு சிறப்பானது.


புங்கமரத்தாயி விடுதலை மாயவன் தீராப்பசி சூழ் என்னும் ஐந்து குறுங்கதைகளும் கச்சிதமான மொழியில்  எழுதப்பட்டிருக்கின்றன.  இவற்றில் புங்கமரத்தாயி விடுதலை இரண்டும் சிறப்பானவையாக உள்ளன. குறுங்கதைகள் என்னும் வடிவம் கவிதைக்கு நெருக்கமான இறுக்கத்தில் இருக்கவேண்டுமென்பதால் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். ஒரு சிறுகதை எழுத்தாளனுக்கு இருக்கும்  மொழி சுதந்திரம் குறுங்கதை எழுதுகிறவனுக்கு இல்லை. அவன் சொற்களைப் பயனபடுத்துவதில் கஞ்சனாக இருக்க வேண்டும். தீராப்பசி என்னும் குறுங்கதை ஒரு சிறிய உலகை நமக்கு காட்சிப்படுத்திவிடுகிறது. குறைந்த சொற்களில் நமக்குக் கிடைக்கும் இந்தக் காட்சிப்பூர்வமான அனுபவம் முக்கியமானது.


பொற்பனையான் மற்றும் உடல் இயற்கை துறவு ஃ என்ற இரண்டு கதைகளில் ரமேஷ் ப்ரேமின் அழுத்தமான தாக்கத்தை நாம் உணரமுடிகிறது. உடல் இயற்கைத் துறவு  வழியில் சந்திக்கும் துறவியின் கதையாக விரிந்து பின் அதோடு கதை சொல்கிறவனையும் பிணைத்துப் பார்க்கும் ஒரு முயற்சியாக வருகிறது. கலைவசப்பட்ட மனம், காமத்திலிருந்து விடுபட்ட நிலை என துறவியின் வாழ்வை மையப்படுத்திய நிறைய பேசப்பட்டாலும் அது துறவியின் கதையாகவும் இல்லாமல் கதைசொல்லியின் கதையாகவும் இல்லாமல் பாதியில் நிற்கிறது. ப்ரேம் ரமேஷின் பரதேசி என்ற கதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பரதேசியில் இந்த இடையீடு இல்லாமல் அது பேராசிரியரின் கதையாக மட்டுமே விரிவதால் தான் அது நமக்கு ஒவ்வொரு முறை வாசிக்கையிலும் வெவ்வேறு விதமான வாசிப்பனுவத்தைக் கொடுக்கிறது. சித்ரனிடம் எதை அவரது பலமாக குறிப்பிட்டேனோ அதையே அவரது பலவீனமாகவும் குறிப்பிட வேண்டும். சில கதைகளை அவரது நுட்பமான விவரணைகள் செழுமையாக்குகின்றன. சில கதைகளில் அந்த விவரணைகள் சலிப்பூட்டுகின்றன. கதைக்கு உதவாத, செழுமைப்படுத்தாத விவரணைகளாக தொக்கி நிற்கின்றன. கச்சிதமாக சிறுகதைகளை  உருவாக்க ஒரு  எழுத்தாளன் தனது கதைகளின் மீது கருணையற்றவனாக இருக்க வேண்டும்.


தங்கம் குறித்த தொன்மங்கள் வேறெங்கும் இல்லாதபடி நமக்கு இரசவாதம் என்னும் கலையாக பல்லாண்டு காலமாக நம்பப்பட்டு வருகிறது.  அந்த தொன்மத்தை வரலாற்றின் வெவ்வேறான காலகட்டங்களை பிணைத்து உருவாக்கியிருக்கும் பொற்பனையான் சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த கதையென்று சொல்வேன். துவக்கம் முடிவு கதை சொல்லல் முறை கதாப்பாத்திர உருவாக்கம் மொழிநடை என எந்த அடிப்படையில் வைத்துப் பார்த்தாலும் பிசிறில்லாத படைப்பாக மிளிர்கிறது. வேறு ஆபரணங்கள் தராத மயக்கத்தை ஏன் தங்கம் மனிதர்களுக்குத் தருகிறது. ஆப்ஃரிக்காவிலும்  தென் அமெரிக்காவிலும் தங்கத்திற்குப் பின்னாலிருக்கும் பல நூற்றாண்டு கதைகள் சாகசமென்பதையும் மீறி தொன்மங்களாக உருவாகிறபோது அதற்கு நாம் ஒரு தெய்வீகத்தன்மையைக் கொடுக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கதையில் முக்கியமான இன்னொரு புள்ளியும் பேசப்படுகிறது. கிழக்கும் மேற்கும் சந்திக்கு புள்ளி. பிரான்சிலிருந்து  இரசவாதம் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலோடு வரும் பெனுவா, பல நூற்றாண்டுகளாக இரசவாதத்தை முயன்று கொண்டிருக்கும் குடிமரபில் வந்த பொற்பனையான். இவர்கள் இருவரும் இணைவதற்கு முன்னால் சொல்லப்பட்டிருக்கும் முன் கதைகள் ஒரு பெருங்கதைக்கான வலுவான அடித்தளமாக இருக்கிறது.  


சித்தரிடமிருந்து தினமொரு பனம்பழத்தை எடுத்துவரும் வேட்டுவன் பழத்திற்குள்ளிருப்பது பொன் என்றே தெரியாமல் அதனை வியாபாரியிடம் காலபடி அரிசிக்காக விற்பவனாக இருக்கிறான். ரகசியம் தெரிந்த நாளிலேயே அது தனிமனிதனிடமிருந்து வெளியேறி ஒரு நாட்டின் பிரச்சனையாகிறது. தங்கத்தைத் தேடிதானே மேற்குலகிலிருந்து  பல நூறு கப்பல்கள் கிழக்கை நோக்கிப் பயணித்தன. அந்தப் பேராசைக்குப் பின்னாலிருக்கும் அத்தனை வேட்கைகளையும் இந்தக் கதையின் மன்னனிடம் நாம் காணமுடிகிறது. அதை விடவும் முக்கியமாக பெனுவாவின் உதவியோடு பொற்பனையான் இரசவாதம் செய்யும் பகுதிகள் அவ்வளவும் வாசிக்கும் நமக்கு விரல்களில் நாம் தங்கத்தை உணரக்கூடிய அளவிற்கு நம்பகத்தன்மையையும் பிரம்மிப்பையும் உருவாக்குகின்றன. ஜெயமோகனின் ஒரு சிறுகதையில் சாராயம் காய்ச்சுவது குறித்து வரும் உரையாடல்கள் கதையை வாசித்து முடிக்கிறபோது நமக்கு நாக்கில் சாராயத்தின் சுவையை உணர வைத்துவிடும். இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் பொற்பனையானைப் போல் நாமு இரசவாதத்தை முயன்று பார்த்தாலென்ன என்கிற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது. புனைவின் எல்லைகளை விரிவாக்கக் கூடிய இதுபோன்ற கதைகளை ஒரு எழுத்தாளன் திறம்பட எழுதும்போதுதான்  அவனுக்கான தனித்துவம் உருவாகும். அந்த வகையில் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் சித்ரனை தனித்து அடையாளம் காட்டும் கதையாக பொற்பனையானக் குறிப்பிட வேண்டும்.


எந்தவிதமான குழப்பங்களோ தடைகளோ இல்லாமல் சரளமாக கதையுலகை கட்டியமைக்கக் கூடிய திறமை சித்ரனுக்கு வாய்த்திருக்கிறது. தான் வாழ்கிற நிலத்தின் உயிர்கள் மரம் செடி கொடிகளென எல்லாவற்றைக் குறித்தும் அடிப்படையான அறிவும் அவற்றை எவ்வாறு கதைக்குள் பயன்படுத்த வேண்டும் என்கிற சாமர்த்தியமும் அவருக்கு இருக்கின்றன. ஆனால் இன்னும் கொஞ்சம் எழுதலாமென்கிற அவருக்கு இருக்கும் பேராசை பெரும்பாலான கதைகளில் தேவைக்கு அதிகமான விவரணைகளாக இருக்கின்றன. இந்த வீக்கம் சில சமயங்களில் அவரது கதைகளை பலவீனமாக்குவதைப்  அவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

223 views

Recent Posts

See All
bottom of page