top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

சிறந்த இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம் – 7


தாராசங்கர் பானர்ஜியின் படகோட்டி தரிணி





‘இலக்கிய உரைநடையில் கொழுப்பை நீக்கி தசைகளைப் பெறுவதெப்படி என்பது நாவலாசிரியரைவிட சிறுகதை ஆசிரியருக்கே எளிதில் கைவரப் பெறுகிறதென்பதை நானும் லியோ டால்ஸ்டாயைப் பின்பற்றிக் கூறுகிறேன்.’

- கலையும் மொழியும் நூலில் கான்ஸ்டாண்டின் ஃபெடின்.


ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுகதைக் கலையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் உரைநடை இலக்கியத்தில் அதனை சவாலான வடிவமாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் முந்தையவற்றிலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு புதிய பாய்ச்சல்களைக் கண்டடைய வேண்டியது சிறுகதைக்கு அவசியமாக இருப்பதால் மொழியில் தேர்ந்த கலைஞன் மட்டுமே நல்ல கதைகளை எழுத முடியும் . இடைவெளியின்றி முறுக்கிக் கட்டப்பட்ட கயிறென உறுதியானச் சொற்சேர்க்கையும் அழுத்தமான கதைமுடிச்சும் அந்த முடிச்சை முழுமையாக்க வலிமையான திருப்பத்துடன் கூடிய முடிவும் சேர்ந்து ஒரு சிறுகதை உருவாகிறது.

அடிப்படையில் நாவல், சிறுகதை இரண்டுமே நமக்கு மேற்கிலிருந்து இறக்குமதியான இலக்கிய வடிவங்கள்தான். இதனாலேயே இதன் அடிப்படைகளை நாம் உள்வாங்கிக் கொண்டு மெருகேற்ற சில காலங்கள் நமக்குத் தேவைப்பட்டன.


ஒரு இலக்கிய வடிவம் மேற்கில் வெளிப்படுவதற்கும் கிழக்கில் வெளிப்படுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகள் அதன் வரலாறு மற்றும் கலாச்சார பின்னிகளின் அடிப்படையில் நிகழ்கின்றன. ஐரோப்பியக் கதைகளில் பெரும் பகுதியாக நாம் பார்க்க முடிகிற அமைதி நமது கதைகளில் இருப்பதில்லை. கிழக்கின் வாழ்க்கைமுறையில் ஒரு சலசலப்பு இருந்தபடியே இருக்கும். இந்த சலசலப்பு இரைச்சல் அல்ல, சேர்ந்து வாழ்தலின் பிரதிபலிப்பு. ஒரு கதைக்குள் இத்தனை மனிதர்களா என சில சிறுகதைகளில் நாம் சலிப்பாகிவிடக் கூடிய அளவிற்குக் கதாப்பாத்திரங்கள் வரக்கூடும். இந்த சலசலப்புதான் கிழக்கின் கலை அடையாளம். மேற்கிலிருந்து சிறுகதை வடிவத்தின் அடிப்படைகளை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அந்த கலைமனதை அப்படியே பிரதிபலிப்பது தேவையற்றது.

சிறுகதை அறிமுகமான துவக்க காலத்தில் ஒரு செய்தியையோ அல்லது கருத்தையோ சொல்வதாக மட்டுமே பெரும்பகுதியான கதைகள் இருந்துவந்தன.


கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு அபரிமிதமாக இறக்குமதியான வேற்றுமொழி இலக்கியங்கள் இளம் தலைமுறை எழுத்துக் கலைஞர்களுக்கு புதிய வாசிப்பையும் திறப்பையும் தந்ததோடு கதைசொல்லும் கலையின் நுட்பங்களையும் கற்றுக்கொள்ள உதவியது. அவர்கள் காலாவதியாகிப்போன சொல்முறைகள் மற்றும் உருவககங்களிலிருந்து விடுபட்டு புதிய வடிவங்களில் எழுதத் துவங்கினார்கள். அவ்வாறு எழுதப்பட்ட சிறுகதைகள் மனிதர்களின் மனங்களை முன்பிலும் துலக்கமாக வெளிப்படுத்தின. வங்காளத்திலும் மலையாளத்திலும் மராத்தியிலும் தமிழிலும் புத்தெழுச்சியான எழுத்தாளர்கள் வெளிப்பட்டார்கள்.


ஐரோப்பிய கதைகள் முழுக்க தனிமனிதனின் மன அவஸ்தைகளையும் கொந்தளிப்புகளையும் பெருவாரியாக எழுதிக் கொண்டிருந்த அதேகாலகட்டத்தில் இந்திய உரைநடை இலக்கியம் சமூகப்போக்கையும் வேகமாக நடந்துகொண்டிருக்கும் பண்பாட்டு மாற்றத்தையும் பதிவு செய்ததை நாம் கவனிக்கவேண்டும். ஐரோப்பிய மனிதர்கள் எதிர்கொண்ட இரு மாபெரும் யுத்தங்கள் அதன் விளைவான தனிமை என்பதிலிருந்து மாறுபட்டது சிதைவுற்ற இந்தியக் கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் அலைச்சலான வாழ்வு. ஒரு சாரார் தங்களது கடந்த கால வாழ்வின் மீதான ஏக்கங்களை சுமந்தலைவர்களாக இருக்க, இன்னொரு சாரார் தங்களை அவ்வளவு காலமும் அழுத்தியிருந்த சமூகப் படிநிலைகளில் இருந்து விடுபட்ட சுதந்திர உணர்வைப் பெற்றவர்களாய் இருந்தார்கள். இந்த இருவகையான மனப்போக்குகளும் தொடர்ந்து புனைவிலக்கியங்களில் வெளிப்பட்டன, இப்போதும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


வங்கமொழியின் தலைசிறந்த புனைவெழுத்தாளர்களில் ஒருவரான தாராசங்கர் பானர்ஜி தனது ஆரோக்ய நிகேதனம் நாவலுக்காக சாகிதய் அகதெமி வென்றவர். நுட்பமான நிலவியல் காட்சிகளையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் மனக்கொந்தளிப்புகளையும் மிகையுணர்ச்சியின்றி எழுதுவதில் வல்லவரான இவரது புனைவுலகம் விடுதலைக்கு முன்பான வங்காளத்தின் அப்பட்டமான மனசாட்சியாகும். மேற்கு வங்காளம் கிழக்கு வங்காளமென இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன்னாலிருந்த வங்காளத்தின் நிலமென்பது பிரம்மாண்டமானது. இதனாலேயே வெவ்வேறு கலாச்சாரங்களை நம்பிக்கைகளைக் கொண்டிருந்த ஏராளமான மக்கள் வாழக்கூடிய அந்நிலத்தின் கதைகள் வெவ்வேறு தன்மைகளைப் பிரதிபலிக்கக் கூடியதாய் இருந்தன. நகரப் பின்னனிகளிலிருந்து எழுதப்பட்ட கதைகள் அன்றைய கல்கத்தாவின் மிகவேகமான மாற்றங்களைப் பதிவு செய்ய, இன்னொரு புறம் வறுமையாலும் பஞ்சத்தாலும் கைவிடப்பட்ட கிராமங்களை மையப்படுத்திய கதைகள் ஒரே நேரத்தில் சமூக விடுதலையையும் தனிமனித விடுதலையையும் அம்மக்களுக்கு எத்தனை அவசியமானதாக இருந்ததென்பதைக் காட்டுகின்றன.


படகோட்டி தாரிணி என்னும் தாராசங்கரின் இந்தக் கதை, ஒரு கிராமத்தில் ஒரு வருடத்திற்குள் நிகழும் இயற்கை மாற்றங்கள் அதனால் ஏற்படும் பஞ்சம், அந்தப் பஞ்சத்திலிருந்து தப்பிக்க மக்கள் பெருமளவில் இடம்பெயர்வதென பெரும் வாழ்வைச் சித்தரிப்பதாகவே இருக்கிறது. வாழ்வின் ஒரு துளியை, அல்லது தருணத்தை, ஒரு நிகழ்வின் முழுமையான சித்திரத்தை நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டினாலே சிறுகதைக்குப் போதுமானது. ஆனால் இந்தக் கதை துண்டு துண்டானக் காட்சிகள் மூலமாகவும் காலத்தை முன்பின்னாகச் சொல்லிச் செல்வதன் வழியாகவும் ஒரு படகோட்டியின் வாழ்வை நமக்குத் தருகிறது. நேர்கோட்டில் துவங்கினாலும் இடையீடாக படகோட்டியின் பார்வையிலிருந்து அந்த ஊரின் கடந்தகால நிகழ்வுகள் நமக்குச் சொல்லப்படுகின்றன. ஊருக்கும் படகோட்டிக்குமான ஆழமான பிணைப்பை நாம் சில பக்கங்களிலேயே அழுத்தமாக உணர்ந்துகொள்ள இந்த இடையீடான நினைவுகள்தான் பெருமளவில் உதவுகின்றன.


சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய கிராமங்களுக்கு இருந்த பொதுவான முகம் வறுமை. பெரும்பான்மையான நிலங்கள் பன்னையார்களின் வசமிருந்ததால் கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் உழைக்கும் கூலிகளாக அவர்களைச் சார்ந்திருந்தார்கள். இந்தி எழுத்தாளர் ப்ரேம் சந்த் உத்திரபிரதேசத்தின் கிராமங்களையும் அதன் வறுமையையும் அங்கிருந்த உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டதையும் எழுதியிருப்பதைப்போல வங்காளத்தின் கிராமங்களை அதன் அசல்தன்மையோடு பதிவு செய்தவர் தாராசங்கர்.


‘இன்றைய இந்தியச் சிறுகதைகளின் கதைக்களம் என்பது நமது நாட்டின் நிலவியல் மற்றும் சமூகவியல் வேறுபாடுகளைப் போலவே விரிவானதும் மாறுபட்ட தன்மைகளை உடையுதுமாக இருக்கிறது. ஒருவகையில் இது முழு உலகம் போல் உள்ளது.’ என எழுத்தாளர் சிசிர்குமார் எழுதியிருப்பது இவ்விடத்தில் நினைவிற்கு வருகிறது. ஒவ்வொரு நிலத்திற்கும் எப்படி பிரத்யேகமான தன்மைகளுண்டோ மனிதர்களுக்கும் நிலங்களைப் பொறுத்து இந்தக் குணமாறுபாடு இருக்கவே செய்கிறது. நிலத்தின் வழியாகவே பண்பாட்டு அடையாளங்கள் மாறுபடுவதாக இருக்கின்றன. வறண்ட பாலைவனத்தில் வாழும் ஒருவனின் வாழ்வும் அறமும் செழிப்பான நிலத்தில் வாழக்கூடிய ஒருவனின் வாழ்வோடு ஒப்பிடக் கூடியதல்ல. மனிதர்களின் செயல்களுக்குப் பின்னாலிருக்கும் நியாயங்களைப் புரிந்துகொள்ள ஒற்றைத்தன்மையான கண்ணோட்டம் போதுமானதில்லை. மனிதர்களைப் புரிந்துகொள்ள முதலில் அவர்கள் வாழும் நிலத்தின் தன்மையையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.





நவீன இந்தியச் சிறுகதைகளின் காலம் நூறாண்டுகளெனக் கொண்டால் இதில் பெரும்பகுதி சாதனைகள் யதார்த்தவாத கதைகளின் மூலமாகவே நிகழ்ந்துள்ளன. தொண்ணூறுகளுக்குப் பிறகான நவீனத்துவ வருகையே விளிம்பிலிருந்தவர்களின் வாழ்வை முன்னிலைப்படுத்தியதாக ஒரு வாதம் எப்போதும் முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால் அது உண்மையில்லை. ஐம்பது வருடங்களுக்கும் முன்பாகவே மராத்தியிலும் கன்னடத்திலும் விளிம்பின் கதைகளை முன்னிலைப்படுத்தும் போக்கு யதார்த்தவாத கதைகளில் பிரதானமாக இருந்தது.


படகோட்டி தரிணி என்ற இந்த சிறுகதையின் சிறப்பம்சமாக முதலில் அதன் கதாப்பாத்திர உருவாக்கத்தைச் சொல்ல வேண்டும். படகோட்டி ஒரு முக்கியக் கதாப்பாத்திரமென்றால் அவன் வசிக்கும் ஊர் இன்னொரு கதாப்பாத்திரமாகிறது. தாராசங்கரின் தனித்துவமென்பது அவரது எழுத்து நிலத்தோடு பிணைந்த ஒன்று. தரிணி என்ற படகோட்டிக்கு என்னவிதமான மனநிலைகள் ஏற்ற இரக்கங்கள் சந்தோசங்கள் களிப்புகள் துயரங்கள் எல்லாம் இருக்கிறதோ அதே உணர்வுகள் அந்த ஊருக்கும் இருக்கின்றன.


கதையின் துவக்கத்தில் ததும்பியோடும் ஆற்றில் அவனது படகில் மக்கள் திருவிழாவிற்குச் சென்றுகொண்டிருக்க, அவர்களுக்கு முன்னால் சென்ற படகில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு பெண் நீரில் விழுந்துவிடுகிறாள். தரிணி தன் உதவியாளனிடம் சுக்கானைத் தந்துவிட்டு நீரில் குதித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறான். படகோட்டியின் கதாப்பாத்திரம் என்னவென்பதை கதை துவங்குமிடத்திலேயே நமக்குத் தெளிவாகக் காட்டிவிடுகிறார். அந்த நதியை தன் தாயென குறிப்பிடும் படகோட்டியின் வாழ்க்கை நதியைச் சார்ந்தே அமைந்திருக்கிறது. அந்தப் பெண்ணைக் காப்பாற்றும்போதே தரிணி இதற்கு முன்பும் ஏராளமானவர்களைக் காப்பாற்றியிருக்கிறான் என்கிற செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. கதையின் துவக்கத்திலேயே இந்தக் கதையில் நிகழப்போகும் முரணுக்கான பிடி நமக்குக் கிடைத்துவிட்டாலும் கதை பயணிக்கும் வழியில் நாம் முடிவை நோக்கி நகர்வதற்குப் பதிலாக அந்த படகோட்டியைப் போல் நதியின் சுழலுக்குள் சாகசம் செய்யவே விரும்புகிறவர்களாய் இருக்கிறோம். வலுவான கதாப்பாத்திரங்களும், அழுத்தமான முரண்களும்தான் ஒரு நல்ல சிறுகதைக்கு அடிப்படையாய் இருக்கிறது. ஆனால் இந்த அடிப்படைகளை மட்டுமே வைத்துகொண்டு எழுதப்படுகிற எல்லாக் கதைகளும் நல்ல சிறுகதைகளாக மாறிவிடுவதில்லை.


குறைந்த சொற்களால் ஒரு கதையைச் சொலவதுதான் சிறுகதையாளனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். பத்துப் பக்கங்களுக்குள் மட்டுமே இருக்கும் இந்தக் கதையில் மிக நீண்ட காலமாற்றத்தை அனாயசயமாகக் கடக்க முடிந்ததுதான் தாராசங்கரின் மொழியாளுமை. ஒரு சம்பவத்தை எத்தனைக் கச்சிதமாக எழுத வேண்டுமோ அத்தனை கச்சிதமாக எழுதுவது, மிகையுணர்ச்சி கொண்ட உரையாடல்களை கவனமாகத் தவிர்த்திருப்பதென எல்லா காலகட்டத்திற்குமான ஒரு சிறுகதையாய் மிளிர்கிறது. தேவையற்ற ஒவ்வொரு சொல்லும் கதைக்கு சுமையே, இந்த சொற்சிக்கனத்தைப் பழக ஒருவர் தான் சிந்திக்கும் எல்லாவற்றினதும் சிறந்த பகுதிகளை எழுத்தாக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு கதையில் நல்ல துவக்கமும், கதாப்பாத்திரமும் எதிர்பாராத முடிவும் அமைவதோடு அதனைச் சொல்லிச் செல்வதற்கான மொழியாளுமையும் மிக முக்கியமானதாகிறது. அவரது சமகாலத்தில் எழுதப்பட்ட அனேகக் கதைகளில் இருந்து இக்கதை தனித்திருப்பதற்கு முக்கியக் காரணமாக நான் குறிப்பிட விரும்புவது, அவர் எதையும் வலிந்து சொல்ல முயலவில்லை.




படகோட்டியின் இயல்பு என்னவென்பதை அவனது முதல் காட்சியில் வரும் உரையாடலிலேயே தெளிவாக விளக்கி விடுகிறார். ‘இதுக்குமேல யாரையும் ஏத்த முடியாதும்மா… நீங்கள்லாம் உங்க பக்தியின் சுமையால் ரொம்ப கனமா இருக்கீங்க..’ என படகில் ஏறுபவர்களிடம் கேலியாகச் சொல்கிறான். இந்த சொற்களில் யார் மீதும் அவனுக்கு வருத்தமோ சலிப்போ இல்லை, மாறாக மனிதர்களை அவர்களது செயல்கள் மற்றும் பேரார்வமிக்க முகங்களின் வழியாக அறிந்துகொள்கிறவனாக இருக்கிறான். தனக்குத் தேவையான எல்லாவற்றையும் இந்த நதியும் ஊரும் எல்லா காலத்திற்கும் தருமென்கிற நம்பிக்கை அவனுக்குள் நிரம்பியிருக்கிறது. அதனாலயே யாரைக் காப்பாற்றினாலும் பெரும் பணத்தைக் கூலியாகக் கேட்பதில்லை. அவர்களாகக் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறான். தனது உழைப்பிற்கான கூலியைத் தவிர்த்து ஆடம்பரங்களின் மீது நாட்டமற்ற அவனது கதாப்பாத்திரம் அந்த நல்லெண்ணத்தினாலேயே மரணத்தைத் தழுவுகிறான் என கதை முடிந்தாலும் இந்தக் கதை நமக்கொரு நீதியைச் சொல்கிறது. எந்த நிலையிலும் தன்னிலை மறவாத மனிதர்கள் மட்டுமே காலங்கடந்து நினைவுகூறப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். நல்லெண்ணத்தோடு வாழ்தலை ஒவ்வாமையாகப் பார்க்கக் கூடிய காலகட்டத்தில் வாழக்கூடிய நமக்கு நீதி சுமையானது. ஆனால் கலைஞன் அந்த சுமையை சமூகம் மறக்காதபடி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறவனாய் இருக்க வேண்டும்.

கதையில் படகோட்டிக்கு இருக்கும் இயற்கையைக் குறித்த ஞானம் முழுக்க முழுக்க தாராசங்கருடையது. ஒரு எழுத்தாளன் மேதைமை நிலையை அடைய வாழ்வைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் அவனுக்கிருக்கும் புரிதல்களிருந்தே அமைகிறது. நதியில் நீரோட்டம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு இருக்குமென்பதை படகோட்டி மிக நன்றாக அறிந்திருப்பதோடு, பிற்பகுதியில் வறட்சி நிலவும்போது காற்றின் திசை மாற்றத்தைக் கொண்டு மழை வருவதன் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதும் ஊரைவிட்டு தன் மனைவியுடன் இடம்பெர்யந்து செல்கையில் மரங்களிலிருந்து சாரை சாரையாக எறும்புகள் ஈரமிக்க திசை நோக்கி நகர்வதையும் கவனித்து இன்று நிச்சயமாக மழை பெய்தே தீரும், நாம் ஊர் திரும்புவோமென தன் மனைவியிடம் உறுதியாகச் சொல்லுமிடத்திலும் இயற்கையின் மீது அவனுக்கிருக்கும் அசாத்தியமான ஞானத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.


தரிணி ஒருமுறை ஆற்றில் விழுந்த பணக்காரக் குடும்பத்துப் பெண்ணைக் காப்பாற்றி கரைசேர்க்கிறான். அவளது கணவரும் மாமனாரும் அங்கு வந்து சேரும் வரை பதற்றம் குறையாமல் அவள் அப்படியே அச்சத்தில் உறைந்து அமர்ந்திருக்கிறாள். அப்போதும்கூட படகோட்டி ‘ரொம்ப கூச்சப்படாதம்மா, இன்னும் நல்லா மூச்சுவிடு, வெக்கம் உனக்கு தேவையான அளவுக்கு கஷ்டத்தைக் கொடுத்திருக்கே…’ என சிரிக்கிறான். அவளைக் காப்பாற்றுகையில் அவள் யாரென்பதோ, அவளால் என்ன பிரதிபலனையோ அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவளது மாமனார் அவனிடம் ‘உனக்கு சன்மானமா என்ன வேணும்னு கேளு…’ எனக் கேட்கும்போது ஒரு பானை கள்ளை வாங்குவதற்கான காசை மட்டுமே சன்மானமாய்க் கேட்கிறான். கூட்டத்திலிருந்து ஒருத்தி ‘இத்தனை முட்டாளாய் இருக்காதே… இதைவிடவும் பெறுமதியான எதையாவது கேள்’ என்று சொன்னபிறகு யோசித்து தனக்கு ஒரு பெரிய மூக்குத்தி வளையம் வேண்டுமெனக் கேட்கிறான். தனது மனைவியிடம் எந்த பொன் ஆபரணமும் இல்லையென்பது அவனுக்கு அப்போதுதான் நினைவிற்கு வருகிறது. அவனால் காப்பாற்றப்பட்ட பெண் தனது மூக்கு வளையத்தைக் கழற்றி அவனிடம் கொடுக்கிறாள். அப்படி வாங்கும் போது சூழ்ந்திருப்பவர்கள் அவனது மனைவியின் உருவத்தைக் கேலி செய்வதை அவன் பொருட்படுத்தவில்லை. படகோட்டியின் இந்த அப்பாவித்தனம் தான் தனது பலத்தை அறியாதவனாகவும்


ஒரு நல்ல சிறுகதை என்பது அது எழுதப்பட்டிருக்கும் அளவைப் பொறுத்தல்லாமல் எடுத்துக்கொண்ட கருத்தினை எவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறது என்பதிலேயே அமைந்திருக்கிறது. நேரடியான கதைகள், உருவக் கதைகளென எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு கதை எதைப் பேச முனைகிறது என்பதில் தெளிவு இருக்க வேண்டும். ஒரு செய்தியையோ சம்பவத்தையோ அப்பட்டமாய்க் காட்சிப்படுத்துவது அல்லாமல் அந்தச் செய்தியோடு தொடர்புடைய கதாப்பாத்திரம் செய்யும் செயல் கதையின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ளும் திருப்பம் தான் சிறுகதையை முழுமையாக்குகிறது. வலுவான முரண்களை அமைக்கும் போதுதான் கதையின் இறுதிப் பகுதியில் வரும் திருப்பம் வாசிக்கிறவர்களுக்கு பெரும் தாக்கத்தைத் தருவதாக இருக்கும்.


‘இதுபோல யாரையாச்சும் ஒருநாள் காப்பாத்தப் போயி நீயும் சாகப்போற…’ என படகோட்டியின் மனைவி அவனிடம் சொல்லும்போது ‘யாராவது சொந்தத் தாயப் பாத்து பயப்படுவாங்களா, மயூராக்‌ஷி எனக்குத் தாய் இல்லையா?’ என நதிக்கும் தனக்குமான பிணைப்பைச் சொல்கிறான். இந்த ஆழமான பிணைப்புதான் இறுதியில் அவன் நதியோடு செல்லும் போது பெரும் முரணாக கதையில் திருப்பமாக அமைகிறது.

பஞ்சகாலத்தில் தங்கள் கிராமங்களை விட்டும் இடம் பெயரும் மக்களின் சித்திரம் சற்றேறக்குறைய எல்லா இந்தியக் கதைகளிலும் நாம் காண முடிகிறதொன்று, வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதை அதில் உச்சமென்று சொல்லலாம். இந்த சிறுகதையிலும் செருப்புத் தைக்கும் தொழில் செய்யும் ஒரு குடும்பம் அந்த வீட்டிலிருந்த முதியவளை கைவிட்டுச் செல்வதை படகோட்டி பார்க்கிறான், அதன்பிறகே ஊரைவிட்டு வெளியேற வேண்டுமென்கிற தீர்மானத்தை எடுக்கிறான்.

இறுதிப் பகுதியில் ஊர் மழையில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டிருக்க, படகோட்டியின் வீடு முற்றிலுமாக கரைந்துபோகிறது. அவன் தனது கடந்த காலம் ஆற்றோடு அடித்துச் செல்லப்படுவதை துயரோடு பார்ப்பவன் எப்படியும் தனது மனைவியோடு ஆற்றைக் கடந்து சென்றுவிடலாமென நம்புகிறான். நதி அதுவரையில்லாத அளவிற்கு பெருக்கெடுத்து ஓட, படகோட்டி தனது மனைவியை தனது முதுகில் சுமந்தபடி நீரில் இறங்குகிறான். அலைகளாய் இருந்த நீரின் எழுச்சி ஒரு கட்டத்திற்குமேல் பெரும் நீர்ச்சுழலாய் மாறுகிறது. அந்த சுழல் அவன் அதுவரை எதிர்கொள்ளாதவொன்று. படகோட்டி தனது மொத்த வலுவையும் செலுத்தி நீந்தியபோதும் நதி இம்முறை அவனை ஏமாற்றுகிறது. இந்தமுறை அதன் பெருக்கில் கருணையில்லை, எல்லாவற்றையும் தனதாக்கி ஸ்வீகரித்துக் கொள்ளும் வேட்கை மட்டுமே. அந்த வேட்கையை எதிர்த்துப் போராட முடியாமல் படகோட்டி கொஞ்சம் கொஞ்சமாய்த் தோற்கிறான். அவனது மனைவி ஒரு கட்டத்திற்குமேல் சுமையாக மாற, முகம் தெரியாத எவ்வளவோ பேரைக் காப்பாற்றிய படகோட்டி அந்தச் சுமையைத் தவிர்த்தால்தான் தன்னால் சுவாசிக்க முடியுமென்கிற நெருக்கடியில் தன் மீதிருக்கும் சுமையை விலக்குகிறான். நதியின் ஆழத்தைத் தொட்டுத் திரும்பி ஒருமுறை ஆழமாய் மூச்சுவிட வேண்டுமென்கிற அவனது மனம் சொன்னதைத் தொடர்ந்து உடல் மெல்ல மீட்சியடைந்து உயிர்ப்பெறுவதோடு கதை முடிகையில் படகோட்டியின் துயரம் பற்றின எந்தக் கூடுதல் தகவல்களும் நமக்குச் சொல்லப்படுவதில்லை. சடாரென துண்டித்துக்கொள்ளும் இந்த முடிவுதான் கதையை வாசித்துக் கொண்டிருக்கும் நமக்கு அந்த கதையிலிருந்து மீளமுடியாத பிணைப்பையும் அழுத்தத்தையும் கொடுக்கிறது. மிகச் சிறந்த இந்த சிறுகதையை சாகித்ய அகதெமிக்காக எழுத்தாளர் ப்ரேம் மொழிபெயர்த்துள்ளார்.


225 views
bottom of page