top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

சபிக்கப்பட்ட கனவுகளின் மண் பொம்மைகள்.



எல்லாவற்றையும் சந்தேகி’ என்கிறார் பேராசான் காரல் மார்க்ஸ். இது நமக்கு கற்பிக்கப்படுகிறவைகளுக்கு மட்டுமல்ல, கற்பிக்கிறவர்களுக்கும் சேர்த்தே தான். இந்த உலகம் பாதுகாப்பானது, மனிதர்கள் அன்பு சூழ வாழ்கிறார்கள் என்கிற பொய்களை நமக்கு சொல்லிக் கொடுத்தவர்களை நாம் ஒருபோதும் சந்தேகித்திருக்கவில்லை என்பதும் கேள்வி கேட்டிருக்கவில்லை என்பதும் எத்தனை துயரமனதோ அதைவிடவும் துயரமானது அதே பொய்களை நாம் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உலகின் வன்முறை எதற்கும் பழக்கப்படாத ஒரு சின்னஞ்சிறிய குழந்தையின் உடல் மீது நிகழும் வன்முறைகள் குறித்த அவ்வளவும் நமக்கு செய்திகளாகவும் புள்ளி விவர அறிக்கைகளாகவும் மாறிப்போனபடியே இருக்கின்றன. ஆனால் அதன் வலியை உணரக் கூடியவர்களாய் நம்மில் அனேகர் இருப்பதில்லை. அல்லது உலகின் பிற பிரச்சனைகளுக்கு நடுவில் இதுவொன்றும் அத்தனை முக்கியத்துவமானதில்லை என நமக்கு நாமே ஒரு தரப்பட்டியல் கொடுத்துக் கொண்டு விடுகிறோம்.


எப்போதும் சோர்வாக தனிமையுணர்ச்சியில் இருக்கும் குழந்தைகளைக் கவனித்ததுண்டா. ஒருமுறையேனும் அவர்களோடு பேசிப் பாருங்கள். குழந்தைகள் எப்படி எந்த மறுப்புமில்லாமல் இந்த உலகை ஏற்றுக் கொள்கிறார்களோ அதே போல் சமயங்களில் மறுக்கவும் செய்கிறார்கள். மற்ற வன்முறைகளைப் போலல்ல குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை, எதிர்க்க திராணியற்ற சின்னஞ் சிறிய உயிர்களிடம் பெரும்பாலும் அவர்கள் தனக்கு நடப்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாதபடிதான் இந்த வன்முறை நிகழ்கிறது. இதை எப்படி வெளியில் சொல்வது என்கிற அச்சம் தயக்கம் எல்லாம் ஒரு பக்கம். நிகழ்ந்த குரூரத்திலிருந்து எப்படி இயல்பிற்குத் திரும்புவது என்னும் குழப்பம் இன்னொரு பக்கம்.

வீட்டுச் சூழல் காரணமாக நான் ஆதரவற்றோர்களுக்கான விடுதிக்கு அனுப்பப்பட்ட போது ஐந்து வயது கூட முடிந்திருக்கவில்லை. எனது சொந்த ஊரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரம் கூட இல்லை. ஆனால் ஒரு சின்ன கிராமத்திற்கு செல்லும் வழியில் காட்டிற்குள்ளிருந்த அந்த விடுதி சிறிய வயதிலேயே வீடென்பதும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் அன்பென்பதும் எத்தனை தூரமானது என்கிற கசப்பை எனக்குள் என்னைப் போன்ற பிற குழந்தைகளுக்குள்ளும் உருவாக்கிவிட்டிருந்தது. தனித்தனியாய் பணிரெண்டு வீடுகள் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பெண் பொறுப்பாளர். இதோடு பொருட்கள் வாங்க காவலுக்கு என நான்கு பாதுகாவலர்கள், சமைக்க நான்கு பெண்கள். எங்கள் உலகம் அந்த நாட்களில் முழுக்க முழுக்க அந்த விடுதி தான். அதிகாலை நான்கு முப்பதுக்கு துவங்கி இரவு பத்து மணி வரை நாளின் பெரும்பாலான நேரம் உணவைக் குறித்தே அதிகம் யோசிக்க வைக்கும், சாப்பிட்டு ஓடித்திரிய வேண்டிய வயதில் சரியான உணவின்றி அந்த உணவை எடுத்துக் கொள்வதற்கும் முன்பாக கர்த்தரை பிரார்த்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. மறைமுகமான ஒரு நிர்ப்பந்தத்தில் ஒரு ஞாயிறு பிரார்த்தனையின் போது கிருபாகரன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தேன். விடுதியில் அப்படித்தான் அழைத்தனர். ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனைக்கு சரியாக சென்று, பைபிள் வசனங்களை சிறப்பாக ஒப்பிக்கிறவர்களுக்கு தேங்காய் பன் கொடுப்பார்கள். அதற்காகவே பாடப் புத்தகத்தைத் தாண்டி பைபிளை முழு ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். ஆனால் கர்த்தர் ஒருநாளும் என் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்த்திருக்கவில்லை.





அந்த சின்ன வயதில் எங்கள் விடுதியில் எல்லோரும் வெளியில் மொத்தமாக குளிக்கவைக்கப் படுவோம். முத்து, ராகவன் இருவரும் அங்கிருந்த பொறுப்பாளர்களில் எங்கள் எல்லோராலுமே வெறுக்கப்பட்டவர்கள். உள்ளாடை என்றால் என்னவென்று அறியாத சூழல் எங்களுடையது. பெரும்பாலும் நிர்வாணமாக குளிப்போம், சிலர் துண்டு கட்டி குளிப்பார்கள். முத்து நாங்கள் குளிக்கையில் விளையாட்டாக தட்டுவது போல் பின் புறங்களில் அடிப்பதிலிருந்து சிறுவர்களை வாய்வழிப் புணர்ச்சிக்கு நிர்ப்பந்திப்பது வரை எல்லாம் இருக்கும். மறுக்கவே முடியாது, முந்தைய இரவு 7.30 மணிக்கு சாப்பிட்டிருப்போம், காலை 4.30 க்கு எழுப்புவார்கள். 7 மணிக்கு கேப்பைக் கூழ் வரும் அதில் பசியாற வேண்டுமால் அவருக்கு உடன்பட்டே ஆக வேண்டும். நாற்றமும் அழுக்கும் பிடித்த, மயிர்கள் செரைக்கப்படாத அந்த மனிதனின் குறி அந்த நாட்களில் எங்களுக்கு முழுக்க சாத்தானின் உருவம். முத்து இப்படி என்றால் ராகவன் சிறுமிகளோடு குத வழிப் புணர்ச்சி கொள்வது, தவறு செய்கிறவர்களுக்கு தண்டனை அளிக்கிறேன் என்ற பெயரில் சிறுவர் சிறுமியரை உறவு கொள்ள நிர்ப்பந்திப்பது என மனம் போன போக்கில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் எங்களை வைத்து பரிசோதித்துக் கொண்டிருந்தார். சரி சாப்பாடு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இவர்களுக்கு உடன்படக் கூடாதென பள்ளிக் கூடம் போய் சத்துணவில் சமைக்க வைத்திருக்கும் உப்பை அள்ளிக் கொண்டு வந்து புத்தகத்தில் வெவ்வேறு பக்கங்களில் வைத்துவிடுவோம். பத்து பைசாவுக்கு ரெண்டு வெல்லக்கட்டி. அதை உடைத்து உப்போடு சேர்த்து சாப்பிட்டு பசியாற முயற்சிப்போம். பல நாட்களில் வாந்திதான் வரும். எங்கள் நிலையை எடுத்துச் செல்லவும் முடியாமல் தப்பி வீட்டிற்கும் செல்ல முடியாமல் எல்லோராலும் கைவிடப்பட்டதாக நினைத்து கலங்குவதுதான் மட்டும் எங்களுக்கான ஒரே விடுதலை.


போர்ன்விட்டாவும் காம்ப்ளானும் குடித்து வளர்ந்த எங்கள் சமவயதுக் காரர்களைப் போல் இல்லாமல் கூழுக்கு நாங்கள் நிறையவே இழக்க வேண்டி இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தாலே எனக்கு உடல் நடுக்கமெடுக்கும். அங்கிருந்த ஐந்து வருடங்களும் அந்த அச்சம் நீங்கி இருக்கவில்லை. தொடர் பாலியல் வல்லுறு மற்றும் சரியான உணவில்லாமல் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அதன் பிறகுதான் எனக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் முத்து என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் பல வருடகள் ஓர் அச்சமிருக்கும். மீள நிறைய வருடங்கள் ஆனது. கடுமையானதொரு தாழ்வுணர்ச்சி இருந்தது, அதோடு காரணமற்ற கோவம். வளரும் காலத்தில் அந்த பாலியல் தொந்தரவுகள் உடல் ரீதியான குழப்பங்களை அச்சங்களை எப்போதும் வைத்திருந்ததோடு ஏதோவொரு வகையில் பலவீனமானவனாக வைத்திருந்தது. ஒருவித அச்சமும் பாதுகாப்பின்மையும் இருக்கும். சிறுவயதில் பாலியல் தொந்தரவிற்குள்ளான ஒவ்வொருவருக்குள்ளும் இது இருந்திருக்கவே செய்யும். பத்து வயது வரையேனும் பெற்றோர்கள் குழந்தைகளைத் தமது அரவணைப்பில் வைத்துக் கொள்வது நல்லது. நம் குழந்தைகளுக்கான ஆரொக்கியமான எதிர்காலதின் விதை அவர்களின் பால்யம் தான் அதைப் பாதுகாப்பனதாய் வைத்திருக்க வேண்டும்.


குற்றங்களின் கதைகளில் நாம் அறுதியிட்டுக் காணமுடியாத சில விஷயங்கள் எப்போதுமுண்டு. குற்றம் செய்தவனின் ஆழ்மன உந்துதல் தாக்கம் காரணமென குற்றத்தின் உளவியலும் குற்றம் செய்கிறவனின் உளவியலும் நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது. இருளும் வெளிச்சமும் அல்லாமல் நமக்கு அருகிலிருக்கும் சாம்பல் வெளியின் மனிதர்கள் முக்கியமானவர்கள். அவர்களால் பொருளாதார மந்தநிலை ஏற்படப் போவதில்லை. பெரும் யுத்தங்கள் வரப் போவதில்லை. ஆனால் பெரும்பான்மயான மனிதர்களின் மனநிலையை ஒரே நொடியில் தகர்க்கக் கூடியளவிற்கான பாதிப்புகளை இவர்கள் செய்துவிட முடியும்.

சில மாதங்களுக்கு முன் சென்னை போரூரில் ஒருவன் தன் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தையை சாக்லெட்டுகள் எல்லாம் குடுத்து விளையாட்டுத்தனமாய்ப் பேசி வீட்டிற்குக் கூட்டி வந்து கற்பழிக்கிறான், பின் கொடூரமாக கொலை செய்து அதே நாளில் நகரில் யாரும் காண முடியாத ஓரிடத்தில் அந்தக் குழந்தையை எரித்துவிடுகிறான். இதைச் செய்த மனிதன் ஒரு நிறைய படித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறவன் என்பது குறிப்பிடத்தக்கது காவல்துறை அவளைத் தேடும் போது அவர்களோடு சேர்ந்து அவனும் தேடியிருக்கிறான். நீண்ட விசாரணைக்குப் பிறகு பின்பு அவன் தான் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போய் இப்பொழுது நீதிமன்றம் அவனுக்கு ஜாமீனும் வழங்கியிருக்கிறது என்பதை கவனிக்கையில் குற்றவாளிகளோடு சேர்த்து நீதிபதிகளுக்கும் உளவியல் சிகிச்சை அளிக்க வேண்டுமோ என அச்சமாக இருக்கிறது.

கடந்த நூற்றாண்டு முழுக்கவே மனிதனின் உளவியல் குறித்து ஏராளமன ஆய்வுகள் நடந்தபடியே தான் இருந்தன. ஆனால் தரவுகள் நம்மிடம் உள்ள அளவிற்கு தீர்வுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம். நாம் யதார்த்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி சென்றபடியே இருக்கிறோம். நம் ஆதி உணர்ச்சிகள் வன்முறையின் வழியாய் தொடர்ந்து நமக்குள் வெளிப்பட்டபடியே இருக்கின்றன., சென்னையில் கடறகரை சாலையில் இருக்கும் பறக்கும் ரயில் பாதை இரவுகளில் ஒரு மர்ம பிரதேசம். திருவான்மியூர் துவங்கி மத்திய கைலாஷ் வரை இருக்கும் நிறுத்தங்கள் வரை வரிசையாக ஐடி நிறுவனங்கள் பகுதி. சில வருடங்களுக்கு முன் இரவு ஒன்பது மணிக்கு சுமாராக தொடர்ந்து ஒரு மனிதனை ஸ்டேஷனுக்கு அப்பால் சரியாக ரயிலில் இருந்து பயணிகள் பார்க்கும் படி ஒருவன் தினமும் சிறுவர்களோடு உறவு கொள்ளுவதை வெவ்வேறு நாட்களில் கவனித்தோம். ஒரு நாள் எங்களில் சிலர் அந்த நேரத்திற்கு சற்று முன்பாக அதேயிடத்திற்கு சென்று அவனை பிடித்த போது மிகப்பெரிய நிறுவனத்தில் ஹெச். ஆராக இருப்பவன் என்று தெரிந்தது. ஏன் சிறுவர்களோடு உறவு கொள்கிறான் அதுவும் இத்தனை பேர் பார்க்கும் வெளியில் என்று விசாரிக்கையில் தனது உச்சபட்ச பாலியல் சந்தோசம் இதுமட்டுமே என மிக சாதாரணமாக சொல்கிறான். ஆக மனித மனம் பாலியல் குறித்து வைத்திருக்கும் சித்திரங்கள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அல்ல. ஒரு நாயைக் கல்லால் அடித்துத் துரத்துவது துவங்கி மழைக்கு ஒதுங்க இடமில்லாமல் பாலத்தின் அடியில் ஒதுங்கும் முதிய பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது வரை குற்றங்களுக்கான காரணங்களில் பாலியலும் புறக்கணிப்பும் அதிகமானதாய் இருக்கிறது. இவர்களுக்காக அச்சப்பட வேண்டியுள்ளதென்றால் ஒரு யுத்தம் நம்மை உலுக்குவதை விடவும் இவ்ர்களின் வன்முறை நம்மை உலுக்கிப் போடுகிறது. கொரிய படம் ஒன்று உள்ளது. முழுக்க உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான படம். பள்ளியில் உடன் படிக்கும் சிறுமியை ( ஆம் சிறுமியை ) 43 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அதில் செத்துப் பிழைக்கும் அவள் தனக்கு நீதி கேட்டுக் கூட நிற்கமுடியாமல் வேறு ஊர் வேறு பள்ளியென இடம் மாறுகிறாள். ஆனால் அங்கும் தொடர்கிறது துயரம். கடைசி வரையிலும் அவளுக்கு நீதி கிடைக்கவில்லை, தற்கொலை செய்து கொள்கிறாள்.

நம் நாட்டில் ஒரு நாளில் கடத்தப்படும் குழந்தைகள் எத்தனை பேர் தெரியுமா? அவர்கள் என்னவாகிறார்கள்? உலக அளவிலான சைல்ட் செக்ஸ் மையத்தில் இந்தியாவிற்கு முக்கியமான இடமுண்டு. முக்கியமாக தென் இந்தியாவிற்கு. ஸ்கார்ட் கார்னியின் சிவப்பு சந்தை புத்தகம் இது தொடர்பான முக்கியமான தகவல்களை நமக்குத் தருகிறது. அதோடு ஏராளமான மனித உரிமைக் கமிஷன் ரிப்போர்ட்டுகளும். சில நாட்களுக்கு முன் ஒரு தோழியோடு பேசிக் கொண்டிருக்கையில் சைல்ட் அப்யூஸ் ஒரு விபத்து பெட்டர் அத கடந்து போகனும் தான. பெரும்பாலும் அதை ஒட்டி எழுதப்படறது எல்லாம் ஒரு கவனிப்பிற்கான செயலாகத்தான் இருக்கிறது என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது.


குற்றங்கள் தொடர்பான உரையாடலை வெளிப்படையாய் நிகழ்த்த துணிவில்லாத சமூகம் நாம். மறுக்கப்பட்ட காமம் புறக்கணிப்பு இப்படி ஏதேனுமொரு பெயரில் ஏதாவது ஒன்றை நாம் பேசுகிறோம் எழுதுகிறோமே ஒழிய குற்றவாளிகளின் உளவியல் சிக்கல்கள் குறித்து துவங்கி இருக்கவில்லை. இது தொடர்பான ஆய்வுகள் படிப்புகள் கூட நம்மிடம் அதிகமில்லை. நம் கல்வி முறை சமூக கட்டமைப்பை உறுதி செய்வதற்கான எந்த தூண்களையும் உருவாக்கவில்லை. குமாஸ்தாக்களை மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான கோணத்தில் நம் குழந்தைகள் அணுக வேண்டுமானால் முதலில் பெரியவர்கள் அது குறித்து அறிந்திருக்க வேண்டும். பொது சமூகத்தில் ஒரு தனிமனிதன் தனது அடிப்படை உரிமைகள் & கடமைகள் குறித்து பெரிய அறிதல்களும் இல்லாமல் தான் இன்னுமிருக்கிறார்கள்.


நல்லது, விடுதியிலிருந்து வெளியேறிய நாளில் விடுதலைக் கிடைத்ததாக சொன்னேன் தானே. ஆனால் அது தற்காலிகமானதுதான். என் அப்பா பெரும்பாலும் குடும்பத்தோடு இருந்திருக்கவில்லை. குற்றங்களின் நிழல்களுக்குள் வாழ்ந்த மனிதர் அவர், எப்போது அவருக்கு பிரச்சனையென்றால் மட்டும் வீடு தேடி வருவார். அப்படி எனது பதினான்காவது வயதில் ஒரு கொலை வழக்கில் மாட்டிக் கொண்டார். அவர் ஜாமினில் வெளிவந்த போதுதான் அதே வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக தேவையின்றி என் அம்மாவும் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. ஏனெனில் கொலை செய்யப்பட்டது ஒரு பெண். ஒரு பட்டுப் பூச்சியையும் கொல்லத் திராணியற்ற அம்மா சிறைக்கு சென்ற நாளில் மீண்டும் என்னை சூன்யம் சூழ்ந்தது. மூன்று மாதங்கள், நான் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் பகுதி நேர வேலைக்கு செல்வேன். வீதியோர உணவகம், மெடிக்கல் ஷாப் என இரவு 11.30 வரை கால்கடுக்க நின்றுவிட்டு வீட்டின் மொட்டை மாடியில் வந்து படுத்தால் பின்னிரவிற்கு மேல் முரட்டுக் கைகளும், குடி போதையிலிருக்கும் ஒரு முரட்டு உடலும் என் மீது ஏறி இயங்க முயற்சிக்கும். அதிகம் போனால் நாற்பது கிலோ கூட இருக்க மாட்டேன். அதோடு பள்ளிக்கூடம் வேலையென களைத்துப் போன உடல் தூங்கச் சொல்லி கெஞ்சும் ஆனால் இந்த தொந்தரவு பல நாட்களில் சிரமங்கொண்டு தப்பி பக்கத்து வீடுகளின் மொட்டை மாடியில் போய் படுத்துக் கொள்வேன். அதிலும் சிலருக்கு சந்தேகம் நான் திருடுவதற்கு இப்படி இரவில் சுத்துகிறேனோ என்று. சொந்த அப்பாவே பாலியல் அத்துமீறல் செய்கிறார் என்று யாரிடம் போய்ச் சொல்வது? அவரிடமிருந்து தப்பிக்கவே இப்படி பின்னிரவில் தப்பி ஓடுகிறேன் என்று எப்படி சொல்வது. உடன்படாத நாட்களில் நான் வாங்குகிற அடிகளை யாரிடம் சொல்வது. அதெல்லாம் அந்த நாட்களில் பள்ளிக்கூடத்தில் வன்முறையாய் வெளிப்பட்டது. எல்லோரிடமும் சண்டை போடும் அந்த முரட்டுத்தனத்திற்குப் பின்னாலான அசலான காரணத்தை என்னால் யாரிடமும் சொல்லி இருக்க முடியவில்லை. பிறகு அந்த வழக்கில் அவர் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனையில் சிறைக்கு சென்றார். நான் வளர வளர அவர் மீதான என் வெறுப்பும் பகையும் வளர்ந்தபடியே இருந்தது. பத்து ஆண்டுகள் தண்டனை முடித்து நன்னடத்தையில் அவர் வெளி வருகையில் அவரைக் கொலை செய்ய வேண்டுமென தீராத வெறி கொண்டிருந்தேன். அதற்காக எத்தனையோ முறை மறைமுகமாக வெவ்வேறு வழிகளில் முயன்றும் இருக்கிறேன். அவர் அதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும், வெளியில் வந்த சில நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இப்போது வரை எங்கள் வீட்டிற்கு திரும்பும் துணிவு அவருக்கில்லை. என் திருமணம் உட்பட என் வாழ்வின் எந்த சந்தோசமிக்க தருணத்திலும் அவரை நான் சேர்த்துக் கொண்டிருக்கவில்லை. இதை எழுதுகிற இந்த நொடியில் கூட அவர் மீதான வெறுப்போ அவரைக் கொலை செய்ய வேண்டுமென்கிற வெறியோ குறைந்திருக்கிறதுதான், ஆனால் முழுமையாய் அழிந்து போய்விடவில்லை. நாம் எல்லாவற்றையும் மன்னிக்கவும் முடிவதில்லை மறக்கவும் முடிவதில்லை. உலகை புதிதாக சந்தோசமாகப் பார்க்க வேண்டிய வயதில் ஏற்பட்ட காயங்களை அத்தனை எளிதில் கடந்துவிட முடியுமா என்ன?


செவித்திறன் குறைபாடுடைய ஒரு குழந்தையை போதை மருந்து பழக்கத்திற்கு உட்படுத்தி 17பேர் நான்கு மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது. உறவுகள் இருக்கிறார்கள். இந்த நான்கு மாதங்களில் இவர்கள் இவ்வளவு வன்முறைகளையும் செய்தபடியே எந்த குற்றவுணர்வும் இல்லாமல் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையிலேயே இவர்கள் எத்தனை சிக்கலானவர்கள் என்கிற அச்சம் எழுகிறது. அந்தக் குழந்தை இந்த அதிர்ச்சிகளில் இருந்து மீள இன்னும் எத்தனை காலம் பிடிக்கும்?

இந்த இணைப்பில் பத்து வயதிற்கும் குறைவான ஒரு குழந்தைக்கு கருக்கலைப்பு செய்வது குறித்த ஒரு வழக்கின் விவரமுண்டு. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அந்தக் குழந்தையின் கருக்கலைப்பு எத்தனை கொடூரமாய் இருந்திருக்கும் என்பதை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள்.

நாம் இப்படி எல்லாம் நடப்பதில்லை என பாவனை செய்யும் எல்லாமே நமக்கு அருகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 2015 ம் ஆண்டின் ஒரு ஆய்வில் செக்ஸ்வல் டூரிஸம்க்காக குழந்தைகள் தான் அதிகம் உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் சென்னை அதில் இந்திய அளவில் இரண்டாம் இடமென்றும் சொல்கிறார்கள். நாம் இந்த பிரபஞ்சத்தை நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக கொடுக்கத் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.

நிமிடங்களுக்கு ஒருமுறை பதினாறு வயதுக்குட்பட்ட சிறுமிகளில் ஒருத்தி கற்பழிக்கப்படுகிறாள். 13 மணி நேரங்களுக்கு ஒருமுறை பத்து வயதிற்கும் குறைவான ஒரு குழந்தையின் மீது இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது.

பெரும்பாலான இந்தியப் பெண்கள் 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டவர்களாய் இருக்கிறார்கள். இதைவிடவும் அதிர்ச்சிகரமானது 53.22 சதவிகித பெண்கள் அரசு சார்பில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரக் கணக்கில் தாங்கள் பாலியல் வல்லுறவிற்கு ஆளானதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டது அவர்களோடே இருப்பவர்களால் தான்.


பெரும்பாலான இந்தியப் பெண்கள் 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டவர்களாய் இருக்கிறார்கள். இதைவிடவும் அதிர்ச்சிகரமானது 53.22 சதவிகித பெண்கள் அரசு சார்பில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரக் கணக்கில் தாங்கள் பாலியல் வல்லுறவிற்கு ஆளானதை ஒப்புக் கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டது அவர்களோடே இருப்பவர்களால் தான். ிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளையும் சொல்லிக் கொடுத்தே வளர்க்க வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் எல்லோரும் பாதுகாப்பானவர்கள் இல்லை, சமயங்களில் நமது அப்பாவோ அண்ணனோ மாமாவோ கூட.

( 2016 ம் வருடம் எழுதப்பட்ட கட்டுரை.)

148 views
bottom of page