தூய்மைவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அதிகாரம்.


எழுத்தாளர் குணா கந்தசாமியின் முகநூல் பக்கத்தின் வழியாக ரசமட்டம் என்றொரு இணைய இதழ் இருப்பதை அறிந்துகொண்டேன். அதில் நான் மதிக்கும் ராணி திலக் எழுதிய கட்டுரையை வாசித்தபோது அவரது கருத்துகள் எதனோடும் என்னால் உடன்படமுடியவில்லை. சில மாதங்களுக்கு முன்னால் யூ ட்யூபில் வாண்டையார் என்பவரின் காணொளியைக் காண முடிந்தது. அதில் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார். என்னால மெட்ராஸ் பக்கமோ இல்ல என் சொந்த ஊர விட்டு வேற நகரத்துக்கோ போக முடியாது, எனக்கு அது ஒத்துவராது என... அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தங்களை கவனமாக ஆராய்வோம். சொந்த ஊரில் அவர் பன்னையார். எல்லோரும் மரியாதையாகக் கும்பிடு போடுவார்கள். ஆனால் வெளியூரில் அவர் மிகச் சாதாரண மனிதர். தனக்கு கும்பிடு போடாத மனிதர்களைப் பார்ப்பதில் அவருக்கு ஒரு அசூயை இருக்கிறது. சொந்த ஊர்ப் பற்று அடிப்படையில் இப்படியானதுதான். இப்பொழுது நான் குறிப்பிட்ட கட்டுரைக்குள் கவனமாகத் தேடினால் இப்படியான வெற்றுப் புலம்பல்களே கிடைக்கிறது.
ஒரு படைப்பாளி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான ஒழுக்க விதியை உருவாக்குவது ஆபத்தானது. குறிப்பாக “உண்மையான படைப்பாளி இப்படித்தான் இருப்பான்” என்று ஒரு வரையறையை முன்வைத்து, அதிலிருந்து விலகுகிறவர்களைப் போலியானவர்கள், தரகர்கள், விளம்பரதாரர்கள் என்று தீர்ப்பளிப்பது இன்னும் ஆபத்தானது. ஏனெனில் கலை வரலாறு அப்படிப்பட்ட ஒரே மாதிரியான படைப்பாளியைக் கொண்டதல்ல. தனிமையில் எழுதியவர்களும் இருக்கிறார்கள். கூட்டத்திற்குள் எழுதியவர்களும் இருக்கிறார்கள். அரசியலில் நேரடியாக இறங்கியவர்களும் இருக்கிறார்கள். பத்திரிகைகள் நடத்தினவர்களும் இருக்கிறார்கள். தெருக்களில் போராடியவர்களும் இருக்கிறார்கள். கடிதங்கள் எழுதியவர்களும், அறிக்கைகள் வெளியிட்டவர்களும், விவாதங்களில் ஈடுபட்டவர்களும் இருக்கிறார்கள். தங்களுடைய படைப்பைப் பற்றியே பேசியவர்களும் இருக்கிறார்கள். பிறருடைய படைப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டே தங்களுடைய எழுத்தை உருவாக்கியவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் யார் உண்மையான படைப்பாளி, யார் போலியானவர் என்று வரலாறு இவ்வளவு எளிதாகத் தீர்ப்பளித்ததில்லை.
ஒரு கலைஞனின் அடிப்படையான தகுதி அவன் தனிமையில் இருப்பது அல்ல. அவன் வாழும் காலத்தைப் புரிந்துகொள்வதுதான். தன் காலத்தின் மொழியையும், அரசியலையும், தொழில்நுட்பத்தையும், சமூக மாற்றங்களையும், முரண்பாடுகளையும், புதிய அழகியலையும் எதிர்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். உலகம் மாறிக்கொண்டிருக்கும்போது கலைஞன் மட்டும் பழைய காலத்தின் அறைக்குள் கதவைச் சாத்திக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, கலைஞனிடம் ஒரு செயற்கையான தூய்மையைக் கோருவதாகவே முடியும்.
டிஜிட்டல் உலகம் மோசமானது என்று சொல்வதன் மூலமாகவும் அதற்கு வெளியே வெளியே இருந்த உலகமென நினைப்பது வரலாற்றை மறந்துவிடுவதாகும். அப்போது அலைபேசி இல்லை. சமூக ஊடகம் இல்லை. உடனடி தொடர்பு இல்லை. அதனால் மனிதர்கள் அமைதியாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. கருத்து மோதல்கள் இருந்தன. இலக்கியக் குழுக்கள் இருந்தன. கசப்பான விமர்சனங்கள் இருந்தன. ஒருவரை ஒருவர் நிராகரித்தார்கள். கடுமையாக எழுதினார்கள். பதில் எழுதினார்கள். இலக்கிய இயக்கங்கள் உருவாகின. அவை உடைந்தன. பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றைச் சுற்றி குழுக்கள் உருவாகின. கலைஞர்கள் பொதுவெளியில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தார்கள். தமிழ் சிற்றிதழ் உலகில் நடக்காத குடுமிப்பிடி சண்டையா? ஜி.நாகராஜன் குறித்த நினைவோடையிலும் பிரமிள் குறித்தும் சுந்தரராமசாமி எழுதியதை எல்லாம் மறக்கமுடியுமா?
எங்குதான் சர்ச்சைகளும் விமர்சனங்களும் இல்லாமல் இருந்தது. ரஷ்ய இலக்கிய உலகில் நடந்த சர்ச்சைகளும் விவாதங்களும் கொஞ்சமா? தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்கனேவ், தஸ்தயெவ்ஸ்கியின் காலத்து அறிவுஜீவிகள் — இவர்களுடைய இலக்கிய வாழ்க்கை அவர்களுக்குள் நடந்த கருத்து மோதல்களிலிருந்தும், சமகால அரசியல் மற்றும் தத்துவ விவாதங்களிலிருந்தும் பிரிக்க முடியாதது. பிரெஞ்சு அறிவுலகத்திலும் அதே நிலைதான். சார்த்தரும் காம்யூவும் ஒருவரையொருவர் கடுமையாக எதிர்த்துக்கொண்டனர். அந்த மோதல் அவர்களுடைய இலக்கியத்தை அழிக்கவில்லை. மாறாக அவர்களின் காலத்தின் அறிவுசார் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாகவே மாறியது. ஃபூக்கோவைச் சுற்றியும் தொடர்ச்சியான விவாதங்கள் இருந்தன. ஒரு சிந்தனையாளன் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதுதான் அறிவின் அடையாளம் என்ற கருத்து அங்கே நிலவவில்லை.
சார்த்தர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் பத்திரிகை நடத்தினார். அரசியல் கேள்விகளில் தலையிட்டார். போராட்டங்களில் கலந்து கொண்டார். அறிக்கைகள் வெளியிட்டார். தெருவில் நின்றார். அவருடைய எழுத்து அவரது பொதுவாழ்க்கையிலிருந்து பிரிந்திருந்ததில்லை. காம்யூ பத்திரிகையாளராக இருந்தார். அரசியல் விவாதங்களை எழுதினார். அவர்களுடைய காலத்தின் சிக்கல்களில் தங்களை வீசியெறிந்தார்கள். அதனால் அவர்களுடைய இலக்கியம் விற்பனைப் பிரதியாக மாறிவிட்டது என்று நாம் இன்று சொல்லவில்லை. அவர்களுடைய செயல்பாடும் அவர்களுடைய படைப்பும் இரு தனித்தனி அறைகளில் வாழ்ந்தவை அல்ல.
இதைச் சொல்லும்போது, ஒவ்வொரு எழுத்தாளனும் தினமும் முகநூலில் பதிவிட வேண்டும் என்றோ, தனது புத்தகத்தைத் தானே விளம்பரப்படுத்த வேண்டும் என்றோ கூறவில்லை. பிரச்சினை அதுவல்ல. பிரச்சினை “பொதுவெளியில் இருப்பதே ஒரு கலைஞனின் வீழ்ச்சி” என்று மாற்றிவிடப்படும் அந்தப் பார்வைதான்.
ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பேசினால் அது உடனடியாக “விளம்பரம்” ஆகிவிடுகிறது என்றால், புத்தக வெளியீட்டு விழா எதற்காக? ஒரு எழுத்தாளர் நேர்காணல் கொடுத்தால் அது தரகுத்தனமா? ஒரு எழுத்தாளர் தனது படைப்பின் பின்னணியைப் பற்றி பேசினால் அது சுயதம்பட்டமா? கவிஞன் தனது கவிதையைப் பற்றி விவாதித்தால் அவன் கவிஞன் இல்லையா? ஒரு இயக்குநர் தனது திரைப்படத்தைப் பற்றி பேசினால் அவர் திரைப்படத்தின் விற்பனைப் பிரதிநிதியா? அப்படியானால் கலைஞனிடம் நாம் கேட்பது என்ன? அவன் படைப்பை உருவாக்கிவிட்டு, அது வெளியேறியவுடன் அதிலிருந்து தன்னுடைய குரலையும் முற்றிலுமாகப் பிரித்துக்கொள்ள வேண்டுமா? இந்த தூய்மைவாதம் ஒரு வித பன்னையார்த்தனம் இல்லையா?
ஒரு படைப்பாளியின் படைப்பு சமூகத்திற்குள் நுழைந்த பிறகு, அதைப் பற்றிய உரையாடலும் அந்தப் படைப்பின் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அந்த உரையாடலை எழுத்தாளர் தொடங்கக்கூடாது என்று எந்த இயற்கை விதியும் இல்லை. சில சமயங்களில் ஒரு புத்தகம் வாசகர்களைச் சென்றடையவே எழுத்தாளர் பேச வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் பதிப்பாளரிடம் வசதிகள் இல்லை. சில சமயங்களில் அதிகாரம் ஒரு குரலை அழிக்க முயலும்போது, அந்தக் குரல் இன்னும் சத்தமாகப் பேச வேண்டியிருக்கிறது.
இவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் “சந்தைப்படுத்தல்” என்று அழைத்துவிட முடியாது.
மேலும், “எழுத்தாளனின் வேலை எழுதுவது மட்டுமே” என்ற வாக்கியம் கேட்பதற்கு மிகவும் அழகானது. ஆனால் வரலாற்றைப் பார்த்தால் அது அவ்வளவு எளிமையான உண்மை அல்ல. எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். பதிப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். அரசியல் செயற்பாட்டாளர்களாக இருந்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். இயக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மற்ற எழுத்தாளர்களுக்காகப் போராடியிருக்கிறார்கள். தங்களுடைய காலத்தின் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு எழுத்தாளன் வர்க்கத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்றால், வறுமையைப் பற்றி யார் எழுத வேண்டும்? பாலின அரசியலைப் பற்றி பேசக்கூடாது என்றால், அந்த அனுபவங்களிலிருந்து உருவாகும் இலக்கியத்தை எப்படி புரிந்துகொள்வது? அரசியலைத் தவிர்த்து இலக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற முயற்சி பல நேரங்களில் அரசியல் நிலைப்பாடற்ற தன்மையை உருவாக்குவதில்லை; ஏற்கனவே இருக்கிற அதிகார அமைப்புகளை இயல்பானவை என்று ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.
ஒரு கலைஞன் சமூகத்திலிருந்து விலகி இருந்தால்தான் அவன் சமூகத்தை ஆழமாகப் பார்க்க முடியும் என்பது உண்மை அல்ல. சிலர் தனிமையில் இருந்து உலகைப் பார்க்கிறார்கள். சிலர் கூட்டத்திற்குள் நின்று உலகைப் பார்க்கிறார்கள். சிலர் தெருவில் நடந்துகொண்டே எழுதுகிறார்கள். சிலர் அரசியல் கூட்டத்திலிருந்து ஒரு நாவலுக்குள் செல்கிறார்கள். சிலர் தங்களுடைய தனிமையிலிருந்து ஒரு அரசியல் உலகை உருவாக்குகிறார்கள். கலைக்கு ஒரேவிதமான பாதை கிடையாது.
இன்றைய டிஜிட்டல் உலகின் மிகப் பெரிய சிக்கல் அது நம்மை அதிகமாகப் பேச வைக்கிறது என்பதல்ல. எதைப் பற்றியும் உடனடியாக ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தை அது உருவாக்குகிறது என்பதுதான். ( இருக்கிற வேலையை விட்டுவிட்டு நள்ளிரவில் இதை நான் எழுதிக்கொண்டிருப்பதைப்போல்.)
ஒரு எழுத்தாளர் தினமும் தன்னுடைய முகத்தைப் பதிவிட்டு, ஒவ்வொரு சிறிய நிகழ்வையும் கருத்தாக மாற்றி, தனது புத்தகத்தின் ஒவ்வொரு அசைவையும் விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றால், அதைப் பற்றி கேள்வி கேட்கலாம். ஆனால் சமூக ஊடகத்தில் இருப்பதற்காகவே அவனை “அடிமை” என்று அழைப்பது கேலிக்குரிய விஷயம். சொல்லப்போனால் தனது பழமைவாதம் தரும் சுகத்தை இழந்துவிடக் கூடாது என்கிற ஒரு இன்செக்யூரிட்டி அதில் இருக்கிறது. ஒரு கருவியைப் பயன்படுத்துகிற விதத்துக்கும் கருவியே மனிதனைப் பயன்படுத்துகிறது என்பதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.கருவி
ஒரு கத்தி சமையலறையிலும் இருக்கலாம். கொலையாளியின் கையிலும் இருக்கலாம். அதனால் கத்தி என்ற கருவியையே நிராகரிப்பது எந்த அளவுக்கு பொருத்தமற்றதோ, அதே அளவுக்கு சமூக ஊடகங்களின் இருப்பையே கலைஞனின் வீழ்ச்சியாகப் பார்ப்பதும் பொருத்தமற்றது.
மாறாக, இந்த டிஜிட்டல் உலகம் இதுவரை இல்லாத சில வாய்ப்புகளையும் கலைஞனுக்கு வழங்கியிருக்கிறது. ஒரு சிறிய நகரத்தில் இருக்கும் கவிஞன் தனது கவிதையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முடிகிறது. ஒரு சிறுபான்மை குரல் பெரிய பதிப்பகத்தின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ஒரு பெண் எழுத்தாளர் தன் அனுபவத்தை வெளியிடுவதற்கு இலக்கிய நிறுவனத்தின் கதவைத் தட்ட வேண்டியதில்லை. ஒரு இளம் எழுத்தாளர் தன்னுடைய தலைமுறையினருடன் நேரடியாக உரையாட முடிகிறது. மொழிகளுக்கிடையே உரையாடல்கள் உருவாகின்றன. ஒரு ஓவியத்தைப் பார்க்க இணையம் உதவுகிறது. புதிய இசை வடிவங்களைக் கேட்க முடிகிறது. எத்தனையோ ஆவனங்கள் நொடிப்பொழுதில் கிடைக்கின்றன. உலகின் ஒரு மூலையில் இருக்கும் ஒரு நூலைப் பற்றிய தகவலை இன்னொரு மூலையில் இருக்கும் வாசகர் சில நொடிகளில் கண்டுபிடிக்க முடிகிறது. செர்ஜியோ ரெமிரோஸின் ஒரு நூல் தமிழில் வந்திருக்கிறது. சில வருடங்களுக்கு சமூக ஊடகங்களின் வழியாக அவரைத் தொடர்புகொண்டு ஓரிரு வார்த்தைகள் அவரோடு சாட் செய்ய முடிந்தது. அப்படியே எழுத்தாளர் அடிஸ் அபீபாவுடனும்.
தமிழ்நாட்டில் 500 பேர் மட்டுமே வாசிக்க எழுதும் ஒரு எழுத்தாளன் தான் வியக்கும் ஆளுமைகளுடன் நிமிடத்தில் பேச முடிகிற இந்த வாய்ப்பு எத்தனை முக்கியமானது? நீங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் பின்னாலிருக்கும் ஆபத்து என சொல்வது இதைத்தான் இல்லையா? நேற்று வரை எங்கோ மூலையில் அடையாளமில்லாமல் இருந்தவர்கள் எலலம் இந்த சமூக ஊடகத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வருவதுதான் உங்களை உறுத்துகிறது இல்லையா? இந்த இணையம் பரவலாவதற்கு முன்னால் கலைஞர்களின் மீதும் எழுத்தாளர்களின் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தால் அது வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்படும். ஆனால் இன்று பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குரலை வெளிப்படுத்துவது உங்களைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது இல்லையா? தமிழ் சிற்றிதழ் சூழலில் இயங்கும் சிலரின் மீது கூட சில வருடங்களில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. சமூக ஊடகத்தினால் நிகழ்ந்த சீரழிகள் குறித்து கவலைப்படும் நீங்கள் இந்த சமயங்களில் என்ன செய்தீர்கள். உண்மையாகவே கலையின் பெயரால் நடக்கும் சுரண்டல்கள் அநீதிகளுக்கு எதிராகப் பேசுவதென்றால் நாம் அங்கிருந்துதானே துவங்கி இருக்கவேண்டும்?
அகுதகாவாவின் கதையில் வரும் வரலாற்றுப் பின்னணியைத் தேடுவதற்கும் ஓவியத்தைப் பார்ப்பதற்கும் சாரங்கியைக் கேட்பதற்கும் டிஜிட்டல் ஊடகங்கள் தான் உதவியாக இருக்கின்றன. அப்படியானால் பிரச்சினை டிஜிட்டல் ஊடகம் அல்ல. நாம் அதை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதுதான். இதே தர்க்கத்தை எழுத்தாளரின் பொதுவெளி இருப்புக்கும் பயன்படுத்த வேண்டாமா?
ஒருவர் சமூக ஊடகத்தை தன் முகத்தை பெரிதாக்குவதற்குப் பயன்படுத்தலாம். இன்னொருவர் மறைக்கப்பட்ட எழுத்தாளரை அறிமுகப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். ஒருவர் தனது புத்தகத்தின் அட்டையை தினமும் பதிவிடலாம். இன்னொருவர் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கவிதையைப் பற்றி பேசலாம். ஒருவர் விருதுக்காக ஆதரவு திரட்டலாம். இன்னொருவர் விருது அமைப்புகளின் அரசியலைப் பற்றி கேள்வி எழுப்பலாம். கருவி ஒன்றுதான். பயன்பாடு வேறுபடுகிறது.
எனவே “சமூக ஊடகத்திலிருந்து வெளியேறுவதே எழுத்தாளனைக் காப்பாற்றும் வழி” என்று கூறுவது ஒரு தீர்வாகத் தோன்றினாலும், அது உண்மையில் தனிப்பட்ட தேர்வை பொதுவான ஒழுக்கமாக்குகிறது.
தனிமை தேவைப்படுகிற எழுத்தாளர் தனிமையில் இருக்கட்டும். அது அவரது சுதந்திரம். ஆனால் பொதுவெளியில் செயல்பட விரும்புகிற எழுத்தாளனையும் அதே அளவு சுதந்திரத்துடன் இருக்க விட வேண்டும். ஒருவர் தினமும் எழுதாமல் இருந்தாலும் எழுத்தாளராக இருக்கலாம். ஒருவர் தினமும் பேசிக்கொண்டிருந்தாலும் எழுத்தாளராக இருக்கலாம். தீர்மானிப்பது அவருடைய ஆன்லைன் இருப்பு அல்ல; காலத்தைத் தாண்டி நிற்கும் அவரது படைப்பின் தரம்.
அதேபோல ஒரு எழுத்தாளர் தனது புத்தகத்தைப் பற்றி பேசுவது, தனது புத்தகத்தைப் புகழ்ந்து கொள்ளுவது இவை இரண்டையும் ஒன்றாகக் கருத முடியாது. தனது படைப்பைப் பற்றி பேசும்போது தனது நோக்கத்தை விளக்கலாம். தனது வாசகர்களைச் சந்திக்கலாம். எதிர்ப்புகளை எதிர்கொள்ளலாம். விமர்சனங்களுக்கு பதிலளிக்கலாம். சில சமயம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டியிருக்கலாம். இது எல்லாம் கலைஞனின் சமூக இருப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
ஒரு காலத்தில் சிறுபத்திரிகை ஒரு ஊடகம். இன்று சமூக ஊடகம் இன்னொரு ஊடகம். நாளை வேறு ஏதாவது வரும். ஊடகம் மாறுகிறது; படைப்பாளியின் அடிப்படை கேள்வி மாறுவதில்லை.
நான் எதற்காக எழுதுகிறேன்? யாருக்காக எழுதுகிறேன்? என்னுடைய எழுத்து என்ன செய்கிறது? அது எந்த மனிதர்களைத் தொடுகிறது? எந்த அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது? எந்த அனுபவத்தை மொழியாக்குகிறது? எந்த உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது?
இந்தக் கேள்விகள்தான் முக்கியம்.
“நான் ஏன் முகநூலில் இருக்கிறேன்?” என்பது அதைவிட இரண்டாம் நிலைக் கேள்வி.
இன்றைய காலகட்டத்தின் கலைஞனிடம் நாம் கேட்க வேண்டியது “நீ ஏன் பொதுவெளியில் இவ்வளவு இருக்கிறாய்?” என்பதல்ல. “நீ இந்தப் பொதுவெளியில் எதைச் செய்கிறாய்?” என்பதுதான்.
ஏனெனில் ஒரு கலைஞன் சமூகத்திலிருந்து முழுமையாக விலகி நின்றாலும் அவன் தூய்மையானவன் ஆகிவிடுவதில்லை. அதேபோல் சமூகத்திற்குள் தீவிரமாகச் செயல்படுவதால் அவன் தரகனாகிவிடுவதுமில்லை. பிரச்சினை செயல்பாட்டில் இல்லை. செயல்பாட்டின் நோக்கத்தில்தான் இருக்கிறது. ஒரு எழுத்தாளர் தன்னைப் பற்றி மட்டுமே தொடர்ந்து பேசினால் அது சோர்வை ஏற்படுத்தலாம். ஆனால் மற்றவர்களைப் பற்றிப் பேசுகிறான் என்பதற்காக அவன் பெரிய எழுத்தாளனாகிவிடுவதில்லை. ஒருவன் விருது பெற்றால் அவன் எழுத்து மோசமாகிவிடுவதில்லை. ஒருவன் விருதை மறுத்தால் அவன் தானாகவே உயர்ந்துவிடுவதுமில்லை. ஒருவன் தொலைக்காட்சியில் தோன்றினால் அவன் விற்பனைப் பிரதிநிதியாகிவிடுவதில்லை. எந்த ஊடகத்திலும் தோன்றாமல் இருப்பதால் மட்டுமே தீவிரமான படைப்பாளியாகிவிடுவதுமில்லை.
இலக்கியத்தைப் பற்றிய நமது மதிப்பீடு, எழுத்தாளனின் வாழ்க்கை முறையை வைத்து அல்ல; அவன் உருவாக்கிய உலகத்தை வைத்து இருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் “தூய படைப்பாளி” என்ற கருத்து சிக்கலாகிறது. ஏனெனில் தூய்மையான கலைஞன் என்று ஒருவரை உருவாக்கும் தருணத்திலேயே, தூய்மையற்ற கலைஞன் என்ற இன்னொருவரையும் உருவாக்கிவிடுகிறோம். அதன்பிறகு யார் எவ்வளவு பேச வேண்டும், யார் எவ்வளவு தோன்ற வேண்டும், யார் எங்கே செல்ல வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும், யாருடைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாரல் போலிஸிங் உருவாகிறது. கலைக்கு இந்தக் காவல்துறை தேவையில்லை.
எழுத்தாளனுக்கு தனிமை தேவைப்படலாம். ஆனால் தனிமை கட்டாயம் அல்ல.
அவனுக்கு அமைதி தேவைப்படலாம். ஆனால் அமைதியே அவனுடைய அறநெறி அல்ல.
தனது படைப்புக்காக போராடலாம். அதனால் அவன் தரகனாகிவிடுவதில்லை. ஒருவர் சமூக ஊடகத்தில் இருந்தாலும் ஆழமாக வாசிக்க முடியும். நானொரு உதாரணம். இன்றைய கலைஞனின் சவால், டிஜிட்டல் உலகத்திலிருந்து தப்பிப்பது அல்ல. அதற்குள் மூழ்காமல் அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதுதான்.
நாம் வாழும் காலம் நம்மைத் தேர்வு செய்ய அனுமதிப்பதில்லை என்று தோன்றலாம். ஆனால் கலைஞனின் பணி காலத்திலிருந்து ஓடுவது அல்ல. காலத்தின் கருவிகளைப் பிடித்து, அவற்றைத் தன் தேவைக்கேற்ப மாற்றுவதுதான். இன்றைய கலைஞன் தனிமையில் மட்டும் பிறப்பதில்லை.
கூட்டத்திலும் , தெருவிலும் பிறக்கிறான். திரையிலும் பிறக்கிறான் இணையத்திலும் பிறக்கிறான்.
ஒரு அந்நியனின் பதிவின் கீழ் எழுதும் ஒரு எதிர்க்கருத்திலும் பிறக்கிறான். அதனால், இந்தக் காலத்தின் கலைஞனிடம் நாம் கேட்க வேண்டியது அவன் எவ்வளவு தனியாக இருக்கிறான் என்பதல்ல; அவன் இந்தக் காலத்துடன் எவ்வளவு ஆழமாக மோதுகிறான் என்பதுதான்.
தனிமை ஒரு சாத்தியம்.பொதுவெளியும் ஒரு சாத்தியம்.எதையும் அறமாக்க வேண்டிய அவசியமில்லை. எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவனே தீர்மானிக்க வேண்டும், அவன் என்ன எழுதுகிறான் என்பதில் வாசிப்பவர்கள் அக்கறை கொள்ளட்டும்.



