நேத்ராவதி
- லக்ஷ்மி சரவணகுமார்

 - 12 minutes ago
 - 13 min read
 

1
குளிர் விலகாத அந்தக் காலையில் பேருந்து அவனை இறக்கிவிட்டபோது தலையில் பனிக்குல்லா அணிந்த மனிதர்கள் நடுங்கியபடி மஞ்சுநாத சுவாமியின் கோவிலை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டனர். பெங்களூருக்குச் செல்லும் பேருந்தொன்று பெரும் உறுமலோடு அந்தக் கூட்டத்தைத் தாண்டிச் சென்றது. ஆலயத்தின் ஒலிப்பெருக்கியிலிருந்து வந்த பாடலை கேட்டபடியே நடந்தவனின் கையிலிருந்த தோள்பையில் ஒற்றை வேட்டியும் மங்கிய நிறத்திலான ஒரு ஜிப்பாவுடன் சேர்த்து தாத்தா தந்துவிட்டுப் போன உடுக்கையுமிருந்தது.
கோவில் நகரங்களுக்கேயான பிரத்யேக அழகுடனும் இரைச்சலுடனுமிருந்த சாலையிலிருந்து விலகி தேநீர்க் கடையொன்றில் ஒதுங்கியவன், அறுபட்ட குரலோடு அரைகுறை வார்த்தைகளில் சைகையிலும் பாதி ஒலியுமாக கடைக்காரனிடம் தேநீர் கேட்டான்… ’தமிழா? டீதான வேணும் தரேன்…’ என சிரித்தபடியே கடைக்காரன் சிறிய கண்ணாடிக் குவளையில் கொடுத்தான். தேநீரை வாங்கிக் கொண்டவனின் உள்ளங்கையில் படர்ந்த சூடு அந்தக் குளிருக்கு இதமளிக்க, சில நொடிகள் இரண்டு கைகளிலும் குவளையை மாற்றிக் கொண்டான். முதல் மிடரை உறிஞ்சியபோது நீண்ட நேரமாய் எதுவும் சாப்பிடாத நாவு அந்தச் சுவையின் அடர்த்தியைத் தாங்கவொண்ணாமல் குமட்டலெடுத்தது. அருகிலிருந்த நிலைவெள்ளிப் பாத்திரத்திலிருந்து நீரெடுத்துக் குடித்தவன் நீண்ட பெருமூச்சுகளுக்குப்பின் மீண்டும் தேநீரை உறிஞ்சினான். இந்தமுறை நாவில் மட்டுமில்லாது உடல் முழுக்க பரவிய கசப்பு பசியினாலோ தேநீரினாலோ அல்ல, சொந்த ஊரைக்குறித்தும் உறவினர் குறித்தும் எழுந்த நினைவுகளால் உண்டானது.
நீண்ட கூந்தலைச் சுருட்டி அவன் போட்டிருந்த கொண்டையையும் உடலை இறுக்கி அணிந்திருக்கும் உடைகளையும் கவனித்த கடைக்காரர் ‘எந்த ஊரு தம்பி? கூத்துக் கட்டுவியளோ?... என பூங்காவனத்திடம் கேட்டார்.
‘மருத…. எனச் சொல்லும் போதே மீண்டும் குரல் அடைத்துக்கொள்ள தன் பையிலிருந்த உடுக்கையை எடுத்துக் காட்டி கோடாங்கி என்பதுபோல் அபிநயித்துக் காட்டினான். புரிந்துகொண்டு தலையாட்டிய கடைக்காரனிடம் தேநீருக்கான பணத்தைக் குடுத்தான். தலையில் கை வைத்து மொட்டையடிக்க வேண்டும் ‘எங்க?’ எனக் கேட்க, கடைக்காரர் ஒரு நிமிடம் சந்தேகமாகப் பார்த்தார்.
‘ஏப்பா கோடாங்கி முடி எடுக்கப் போறேன்னு சொல்ற? எதும் பிரச்சனையா?’ மெல்லிய ஊசியினைப்போல் அவனுக்குள் இறங்கிய அந்தக் கேள்விக்குப் பின்னாலிருக்கும் வலியை வெளிக்காட்டாதவனாய் ‘அதெல்லாம் ஒன்னுமில்ல என சைகையால் சொன்னவன் தனது குரல்வலையைத் தொட்டுக்காட்டி ‘சாமி எடுத்துக்கிடுச்சு…’ எனத் திக்கித் தடுமாறி சொன்னான். அந்தக் குரலிலிருந்த வலியைத் தெரிந்துகொண்ட கடைக்காரர் மேற்கொண்டு விசாரிக்காமல் ‘இப்பிடியே எடது பக்கமா கொஞ்சதூரம் போனா ஒரு பெரிய ஷெட்டு போட்ட எடம் இருக்கும். பக்கத்துல போனாலே தெரிஞ்சிரும் நல்ல கூட்டம் கூடியிருக்கும்…’ எனச் சொன்னார். ’நன்றிண்ணே…’ என்றவன் பையைத் தனது அக்குளில் சொருகிக் கொண்டு வேட்டியை இடுப்பிலிருந்து ஒருமுறை உருவி இறுக்கமாகக் கட்டிக் கொண்டான். குளிருக்கு இரண்டு கைகளிலும் மயிர்கள் நட்டுக்கொள்ள உடலை குறுக்கியபடி அவசரமாய் அவர் காட்டிய திசையில் நடந்தான்.
வெவ்வேறு வயதுகளில் ஆணும் பெண்ணுமாய் முப்பதுக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அந்த வரிசையை நெருங்கியபோது சலசலவென பேச்சரவம் கேட்டது. முடியிறக்கிய முரட்டு மனிதன் ஒருவன் மேனியில் கிடக்கும் மயிர்களை கையால் தட்டிவிட்டபடி அவனைக் கடந்து சென்றான். பூங்கா அள்ளி முடிந்த தனது கொண்டையை அவிழ்த்து உதறியபோது அடர்ந்த கருமையான அவனது கூந்தல் துள்ளும் குட்டி ஸ்ர்ப்பங்களாக மினுமினுத்தது.
அதிகாலையின் முதல் வெளிச்சம் மரங்களை ஊடுருவிப் படர, பறவைகளின் கூச்சல் மெல்ல ஓயத் துவங்கியது. கோவில் ஒலிப் பெருக்கியில் அன்னதானத்திற்கான அழைப்பு வந்தபோது முடி இறக்கிய பூங்காவனம் தனக்கே அடையாளம் தெரியாத வேறு மனிதனாய் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தான். ஆற்றை நோக்கிச் சென்ற கூட்டத்தைத் தொடர்ந்தவனை சடாரென மறித்த ஒருவன் ’ரூம் வேணுமா?’ எனக் கேட்டான்…. என்ன பதில் சொல்வதெனத்தெரியாமல் திகைத்து நின்றவனிடம் ஒருமுறைக்கு இருமுறைக் கேட்டு பார்த்த அந்த ஆள் எரிச்சலோடு விலகிப் போனான். பூங்காவுக்குப் பின்னால் வந்த மத்திம வயதுப் பெண் ‘தம்பி இங்க மடத்துலயே தங்கிடலாம் சுத்தமாத்தான் இருக்கும். ரூமெல்லாம் எடுக்காதிங்க.’ என தமிழும் கன்னடமும் கலந்து சொன்னாள். சரியெனத் தலையாட்டியவன் ஆற்றை நோக்கி நடந்தான்.
பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருந்த நேத்ராவதி நதியிலிருந்து எழுந்து வந்த மனிதர்கள் குளிரில் நடுங்கியபடி உடைமாற்ற ஓடினர். படித்துறையிலிருந்த சிலர் கோவில் கோபுரத்தை நோக்கிக் கும்பிட்டபின் ஆற்று நீரில் இறங்கினர். உடல் முறுக்கேறிய இளைஞர்கள் விளையாட்டுப் பிரியத்தில் சிறிது நீந்த விரும்பி முன்சென்ற போதெல்லாம் காவலுக்கு நின்றவர் விசில் ஊதி சத்தம் போட்டார். முழுக்க ஈரமாகிப்போன கருங்கல்லின் மீது தனது பையை வைத்துவிட்டு கூட்டத்தை விலக்கி நடந்த பூங்காவனம் நீரின் குளிர்ச்சியை உணர்ந்து திடுக்கிட்டு சமநிலைக்கு வந்தான். அவனை இடித்துத் தள்ளிவிட்டு முன்னேறிய முதியவரொருவர் ஹரஹர மஹாதேவ் என்றபடியே நீரில் முழுக்கு போட்டார். மேலும் இரண்டு முறை முழுக்குப் போட்டவர் வந்த வேகத்திலேயே திரும்பிப் படியேறினார்.
ஆட்கள் குறைவாக இருக்கும் பகுதியை நோக்கி பூங்காவனம் நகர்ந்து சென்றான். நீண்ட நேரமாக நீரோட்டத்தைப் பார்த்தபடியே நின்றவனின் நினைவுகள் சிதறியபோது நதியினுள் இறங்கினான். இடுப்பு உயரத்திலிருந்த நீர் கழுத்துயரம் வந்தபோது அதுவரையிலுமிருந்த குளிர் விலகி உடல் வெதுவெதுப்பானது. நிதானமாக நீருக்குள் முங்கி எழுந்தவன் மூன்றாவது முறை முங்கியபோது இனி ஒருபோதும் எழும் விருப்பமில்லாதவனாக மூச்சையடக்கினான். இந்த உலகை மீண்டும் பார்க்க விரும்பாத கண்கள் இறுக மூடிக்கொள்ள, நீரின் அழுத்தத்தில் காதுகளும் அடைத்துக் கொண்டன. மேனியில் இன்னொரு தோலாய் ஒட்டியிருந்த அவமானங்களும் வேதனைகளும் எத்தனை ஆற்றில் குளித்தாலும் நீங்கப்போவதில்லையென்கிற வேதனை நெஞ்சுக்கூட்டிற்குள் அழுத்த உடலை மேல்நோக்கி உந்தித்தள்ளும் நீருக்கு எதிராகப் போராடினான். வானைக் கிழித்து வரும் வெளிச்சத்தைப்போல் நிறைய வளையல்கள் அணிந்த முரட்டுக் கரமொன்று அவன் கழுத்தைப் பிடித்துத் தூக்கியது. அந்தக் கரத்தின் வலுவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரிலிருந்து மேலே வந்தவனின் உடலை இன்னும் சிலர் பிடித்துக் கொள்ள அடுத்த நொடியே படித்துறையில் கிடந்தான்.
புரியாத மொழியில் யார் யாரோ ஏசிக் கொண்டிருக்க, சமநிலைக்குத் திரும்பாத அவனது கண்கள் தன்னை உந்தித் தூக்கிய அந்தக் கையைத் தேடின….
வளையல்களுக்கு நடுவே உக்கிரமானதொரு ஸர்ப்பத்தினைப் பச்சைக் குத்தியிருந்த அந்த கைக்கு சொந்தக்காரியின் முகத்தைக் கூட்டத்தில் தேடியவன் நிதானமாக ஒருத்தி படியேறிச் சென்றதைக் கண்டு கொண்டான். தடுமாறியபடியே எழுந்து தனது பையை எடுத்தவன் கூட்டத்தை விலக்கி அந்தப் பெண்ணைத் தொடர்ந்தான். கோவிலை நோக்கிச் செல்லும் பாதை முழுக்க அடர்ந்திருந்த மனிதத் தலைகளிலிருந்து தனித்ததொரு உருவம் மட்டும் சிறிய சந்தினுள் நுழைந்து சென்றது. சராசரிக்கும் அதிகமான உயரம் கொண்ட அந்தப் பெண்ணை நோக்கி ஓட்டமும் நடையுமாய் நகர்ந்தான்.
பல நூறு வருட பழமையும் அழுக்கும் நிரம்பிய அந்த வீதியில் சிறிய கடைகள், தள்ளு வண்டிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் இவற்றோடு ஓரிரண்டு பழைய விடுதிகளுமிருந்தன. மெல்லிய ஒலியில் எங்கிருந்தோ கசிந்து வந்த பாடலொன்று அந்த சூழலுக்குப் பொருத்தமற்றதாக இருந்தது. விடுதிகளின் முன்பாக போடப்பட்டிருந்த கூரையின் நிழலில் நின்று சிலர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த வீதியின் இன்னொரு எல்லையில் அடர்ந்த மரங்களுக்கு நடுவே சென்ற காட்டுப் பாதையில் வலசை செல்லும் யானையைப்போல் அந்தப் பெண் நிதானமாக நடந்து செல்வதைக் கவனித்தவன் அவளை நெருங்கிவிடும் அவசரத்தில் ஓடினான்.
இயல்பிற்குத் திரும்பாத அவனுடல் மூச்சுவிட சிரமங்கொண்டது. வாய் வழியாக மூச்சுவிட்டபடியே ஓடியவன் அவளை நெருங்கியபோது பின்னங்கழுத்தில் பச்சை குத்தப்பட்ட ஸர்ப்பத்தின் உக்கிரமான முகத்தினைக் கண்டான்… அந்த ஸர்ப்பத்தின் கண்களிலிருந்த மூர்க்கம் அச்சுறுத்த ‘எம்மோ..’ என ஓலமிட்டான். முதல் சிலமுறை அவனது குரலுக்கு செவி சாய்க்காத அப்பெண் அவனது சத்தம் தன்னை நெருங்கி வந்தபோது சீறும் நாகமெனத் திரும்பினாள்.
மிரண்டு கீழே விழுந்தவனின் உடல் அதிர்ந்து கண்கள் நிலைகுத்திப் போயின. ‘நீ யாரும்மா… யாரு..? என பிதற்றியவனை நோக்கி அந்தப் பெண் கையை நீட்டினாள். கன்னத்தின் ஓரங்களில் அடர்ந்த பூனை மயிரும் மரநிற விழிகளும் கொண்ட அவளின் முகத்திலிருப்பது கருணையா மூர்க்கமா ? எனப் புரிந்துகொள்ளமுடியாமல் அவளது கையைப் பற்றினான். உடலில் மின்சாரம் அதிர அந்தப் பெண்ணின் கையில் பச்சைக் குத்தப்பட்டிருந்த ஸர்ப்பத்தின் வால் துடித்து உயிர்ப் பெற்றது. அந்த ஸர்ப்பம் முழுமையாக உயிர்ப்பெற்று நெளிவதைக் கண்டு தனது கையை அவசரமாக உதறியவன் பையிலிருந்து உடுக்கையை வெளியே எடுத்தான். கண்ணை மூடி பெரிய ஐயாவும் அவரது ஐயாவும் பாடிய உடுக்கைப் பாடலை நினைத்தபடியே உடுக்கையை அடிக்க காடதிர்ந்தது. தனக்கு முன்னால் இருப்பது உருவமா அருவமா? மனுசனா தெய்வமா? எனத் தெரிந்துகொள்ளும் உக்கிரத்தோடு உடுக்கையடித்தவனின் கைகளை அந்தப் பெண் பற்றி நிறுத்தியபோது ஆணுமில்லாத பெண்ணுமில்லாத நீலம் பாரித்த பேருடலைக் கண்டு கும்பிட்டான்.
வேதனையில் கண்ணீர் சுரக்க மண்டியிட்டவனிடம் ‘அந்த வீட்டுல தெய்வம் குடியிருக்கு பூங்கா… நீ திரும்பிப் போ….’ என்று சொன்னபோது தன்னைச் சுற்றி பழக்கமானதொரு வாசனையை உணர்ந்தான். பெரிய ஐயாவின் வாசனை. அசைவற்றவனாகக் கிடந்தவனை அப்படியே விட்டுவிட்டு அந்தப் பெண் காட்டிற்குள் நடந்தபோது அந்த அசைவில் பெரிய ஐயாவைக் கண்டான்.

2
உசிலம்பட்டியிலிருந்து தேனி செல்லும் சாலையில் ஆறு மைல் பயணித்தால் வரும் மலப்பட்டியை அடுத்து இடது புறமாகத் திரும்பினால் கால்மணி நேர பயணதூரத்திலிருக்கிறது கவனம்பட்டி. நூற்றி இருபது வருடங்களுக்கு முன்னால் நிலவிய கடும் பஞ்சத்தில் அந்த ஊர் மக்களில் பெரும்பகுதியினர் செத்து விழுந்தனர். சாவு விழாத நாளேயில்லை என்பதைப்போல் அந்த ஊரை துயரம் பீடித்திருந்த வேளையில் இளம் பெண்ணொருத்தி கழுதையை ஓட்டிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தாள். நான்கடி உயரம், மிக மெலிந்த தேகம், உடலைச் சுற்றியிருந்த துணி கந்தலாகியிருந்தது. யாரும் நெருங்க முடியாதளவிற்கு நாற்றமடித்தது அவளுடல். பிறவியிலேயே ஒரு கண்பார்வை இல்லாதவளை நேர்கொண்டு காண எவரும் அஞ்சக்கூடும். மலையடிவாரத்தில் கூடாரமிட்டு வசித்தவளை அந்த ஊரைத் தேடி வந்த சாபமென நினைத்து மக்கள் கவலையுற்றனர்.
கடும் வெக்கையான பகல் பொழுதுகளில் அவள் தனது கூடாரத்தில் அயர்ந்து உறங்கக் கூடியவளாகவும் இரவு ஊரடங்கியபின் தனது கழுதையை அழைத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வருகிறவளாகவும் இருந்தாள். புரிந்து கொள்ள முடியாத சொற்களால் வினோதமான ஒலியில் பாடலை பாடியபடியே இரவு முழுக்க சுற்றுவாள். நீரற்று பாளம் பாளமாய் வெடித்துப் போயிருந்த நிலங்களிலிருந்து கழுதை மூத்திரத்தின் வாடை அடிக்கத்துவங்கியது. கொடுங்கனவாய் மாறிப்போன அவளது இருப்பால் ஆத்திரமுற்ற ஊர்க்கார்கள் அவளது கூடாரம் நோக்கிச் சென்றனர். கூடாரத்தின் வாசலில் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்த கழுதை திடீரென மனித நடமாட்டத்தை உணர்ந்து திடுக்கிட்டது. ஈனஸ்வரத்தில் அது கனைத்ததையும் பொருட்படுத்தாமல் அழுக்குப் பையொன்றை இறுக அணைத்தபடி அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். கூடாரத்தை நெருங்கும் துணிச்சலின்றி மக்கள் கற்களைப் பொருக்கி அவளை நோக்கி எறிந்தனர். எதிர்பாராமல் நிகழ்ந்த தாக்குதலில் திடுக்கிட்ட கழுதை வீறிட்டபடியே அங்கிருந்து ஓட, கூடாரத்தை விட்டு வெளியேறாதவளாய் அந்தப் பெண் அப்படியே கிடந்தாள். பெரும் பெரும் கற்கள் தன் மீது விழுந்தபோதெல்லாம் அவளால் வீறிட்டு அலற மட்டுமே முடிந்தது. அவ்வளவுக்குப் பின்னும் அந்தக் கூடாரத்திலிருந்து வெளியேறாமல் கிடந்தவளை அப்படியே விட்டுவிட்டு ஊர்க்காரர்கள் தங்களது குடிசைகளுக்குத் திரும்பினர்.
அன்று பொழுது இருட்டியபோது அலறியபடியே ஓடிவந்த ஒரு சிறுமி ‘ஊரச் சுத்தி மொச்சையும் கம்பஞ்செடியுமா வளந்திருக்கு…’ என்ற செய்தியை எல்லோருக்கும் சேர்த்தாள். உக்கிரமான வெயில் மறைந்து நிலவொளி படரத் துவங்கிய வேளையில் மக்கள் கைவிடப்பட்ட தங்களது நிலங்களைப் பார்க்கச் சென்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை படர்ந்திருந்தது. கையெடுத்துக் கும்பிட்டபடியே நிலத்தில் கால் வைத்தபோது கழுதையின் காட்டமான மூத்திர வாடையை உணர்ந்துகொண்டனர். ‘ஆத்தி அது கிறுக்கச்சி இல்லய்யா.. நம்மள காப்பாத்த வந்த சாமி….’ என ஒரு பெரியவர் ஓலமிட்டார். ஊர்க்கார்கள் பதறியபடி மலையடிவாரத்தில் அவளது கூடாரத்தை நோக்கி ஓடினார்கள். என்றைக்குமில்லாமல் நிறைவான வெண்மையில் ஒளிர்ந்த நிலவின் வெளிச்சம் அவளது சவத்தின் மீது கருணையோடு படர்ந்திருந்தது.
அந்தக் கூடாரம் இருந்த இடத்தில் அவளுக்கொரு கல்லை வைத்து வழிபடத் துவங்கிய சில நாட்களுக்குப்பின் காணாமல் போன தனது தாயைத் தேடி பத்து வயது சிறுவன் அந்த ஊருக்கு வந்தான். அவன் சொன்ன அடையாளங்களைக் கொண்டு தங்களது ஊரைக்காத்தவளின் மகன் என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் அவனை தங்கள் ஊரிலேயே தங்கச் சொன்னார்கள். சாமிக்கல் வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே வாழத் துவங்கிய சிறுவன் ஒரு அமாவாசை நாளில் சாமியிறங்கி மாதம் தவறாமல் தனக்கு பூசை வேண்டுமெனக் கேட்டான். அன்று முதல் ஊர்க்காரர்கள் கோடாங்கியாய் மதித்து அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். அப்போது முதல் அவருக்குப் பிறகு அவரது வாரிசுகளும் சாமியிறங்கி குறி சொல்லும் வழக்கம் உருவானது.
மலையடிவாரத்தில் ஒளிந்து கிடக்கும் அந்த சின்னஞ்சிறிய கிராமத்தை கோடாங்கி ஐயா வை அடையாளமாக வைத்துதான் சுற்றுவட்டாரப் பகுதியில் தெரிந்து வைத்திருந்தார்கள். மூன்று தலைமுறையாக கோடாங்கி குடும்பம். ஊரிலிருந்து விலகி மலையடிவாரத்தில் விஸ்தாரமாய் அமைந்திருக்கும் வீட்டில் அவர் தனித்து வசித்து வந்தார். பொன் பொருள் எதிலும் நாட்டமில்லாத கோடாங்கிக்கு முற்றிலும் எதிரானவர்கள் அவரது மகன்கள். ஊரின் சரிபாதி நிலத்தை உடமையாகக் கொண்டிருந்தார்கள். கண்மாய்த் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் துவங்கி ஊருக்கு நடக்கும் நல்ல காரியங்களில் தலையிட்டு அதனை கெடுத்துவிடுவது வரை கெடுதல்களை மட்டுமே செய்யும் அவர்களை கோடாங்கி தனது இறுதிக்காலம் வரையிலும் விலக்கி வைத்திருந்தார்.
‘ஊரு நல்லா இருக்கனும்னு ஒவ்வொரு நாளும் நா பூச வெச்சிட்டு இருக்கேன்.. எனக்குப் பொறந்த மூணு பயலும் ஊரக் கெடுத்துக் குடிச்சு சொவரா ஆக்க வம்பாடு படறானுக..’ என அவ்வப்போது தனிமையில் புலம்புவார்.
பூங்காவனம் அவரது பேரன். ஆறு வயதாக இருக்கும்போது வீட்டுச் சாமி கும்பிடும் பூசையில் அவனுக்கு சாமி இறங்கியது. அதற்குமுன் உடுக்கையைத் தொட்டுக்கூட பார்த்திருக்காதவன் அன்று உக்கிரமாக உடுக்கையடித்து பாடினான். அந்த பிஞ்சு விரல்கள் பட்டு உடுக்கையிலிருந்து எழுந்த ஒலி உறங்கிக் கொண்டிருந்த காவல் தெய்வங்களை எழுப்பியது. அதீத ரெளத்திரத்தில் வெளிப்பட்ட அவனது பாடலில் தங்களது குலதெய்வம் இருப்பதாக ஐயா சொன்னதை வீட்டிலிருந்தவந்தவர்கள் நம்பமுடியாமல் பார்த்தனர். முக்கால் மணி நேரத்திற்கும் மேல் ஆடியபின் தொண்டை வறண்டு மயங்கிவிழுந்தவனை ஐயா தாங்கிப் பிடித்துக் கொண்டார்.
மயக்கம் தெளிந்தபோது அவனுக்கு எதுவும் நினைவில்லை. இனம் புரியாததொரு வலி தசைகளிலும் நரம்பிலும் பரவியிருந்தது. அரை நினைவாய் ஐயாவின் படுக்கையில் கிடந்தவனுக்கு காய்ச்சல் கண்டதால் இரண்டு நாட்கள் முழுமையான ஓய்விலிருந்தான்.
தன்னை மறந்த வேதனையில் புலன்கள் மட்டும் வீட்டின் அத்தனை அசைவுகளையும் உள்வாங்கிக் கொண்டிருந்தது. பின் வாசலிலிருந்த மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து விழும் சப்தத்தைக் கூட கேட்கமுடிகிற அளவிற்கு காதுகள் கூர்மையடந்திருந்தன. ‘யாரும் கேக்க முடியாத சத்தத்த எல்லாம் உன்னால கேக்க முடியுதுன்னா உருவத்தத் தாண்டி இருக்க எல்லா அருவத்து கிட்டயும் உன்னாலதான் பேச முடியும்…. இனி நீ எங்கூடயே இருந்துக்க..’ என ஐயா அவனை தன்னோடு வைத்துக்கொண்டார். தனக்குப் பிறகு இந்தக் குடும்பத்தில் அவன் தான் கோடாங்கி என முடிவு செய்த பெரிய ஐயா அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கத் துவங்கினார்.
3
ஆறு மாதங்களுக்கு முன் திடீரென கோடாங்கி தவறியபோது ஊர்க்காரர்கள் கலங்கி நின்றனர். உசிலம்பட்டி தேனி சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரது சாவு ஊர்வலத்தில் கலந்துகொண்டதைக் கண்டு வியந்தனர். கோடாங்கியின் சாவுக்கு அவரது வாரிசுகளே காரணமாக இருக்கலாமென்று முனுமுனுப்பு ஊர்க்காரர்களின் முனுனுப்பு காற்றில் கலந்து மற்ற ஊர்க்காரர்களையும் எட்டியது.
ஐயா தங்கள் நலனை விடவும் ஊர் நலனிலேயே அதிக அக்கறை காட்டினார் என்கிற ஏமாற்றத்திலிருந்த கோடாங்கியின் மகன்கள் அவரது மரணத்திற்குப்பிறகேனும் சொத்துகள் தங்களைச் சேரும் என்கிற நம்பிக்கை பொய்த்துப் போனதில் ஆத்திரமுற்றனர். கோடாங்கி தனது சொத்துகளில் ஒரு பாதியை ஊர் மக்களுக்கும் இன்னொரு பாதியை தனது பேரன் பூங்காவனத்திற்கும் எழுதி வைத்திருந்தார். தன் மீது விழுந்திருந்த இந்த சுமையைத் தாங்கமுடியாத பூங்காவனம் அவரது பதினாறாவது நாள் காரியம் முடிந்த கையோடு தப்பியோடிவிட்டான். கைவிடப்பட்ட கோடாங்கி வீட்டில் பேய்களின் ஓலம் கேட்டதால் அவரது மகன்களுக்கோ மருமகள்களுக்கோ உள்ளே செல்லும் துணிவில்லை.
பூதம் காக்கும் புதையலைப் போல் தங்களது சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ என்கிற ஆத்திரத்தில் கோடாங்கியின் மகன்கள் ஆளனுப்பி பூங்காவனத்தைத் தேடினார்கள். உசிலம்பட்டி தேனி திருமங்கலம் என நாலா திசையிலும் தேடியலைந்து சோர்ந்துபோனவர்கள் தந்த செய்தி கவலையுறச் செய்தது. ஊரறிஞ்ச கோடாங்கி மகன்கள் இன்னொரு கோடாங்கியிடம் சென்று குறி கேட்கவும் தயக்கமாக இருந்ததால் உறவின் முறையிலிருந்த போலிஸ்காரர் ஒருவரிடம் செய்தியைச் சொன்னார்கள்.
வருஷநாட்டு மலையாடிவாரத்தில் கூடாரமிட்டிருந்த ஒரு கலைக்கூத்தாடி கூட்டத்தோடு தங்கியிருந்த பூங்காவனத்தை இரண்டு நாட்களிலேயே அந்த போலிஸ்காரர் கண்டுபிடித்துவிட்டார். ‘எய்யா என்னய இப்டியே விட்றுங்க.. அவய்ங்க சொத்து சொகம் எதுவும் வேணாம்.,.. ஊருக்கு வந்தா எங்க பெரிய ஐயாவ கொன்ன மாதிரியே என்னயவும் கொன்னுருவானுக.’ என பூங்கா அவரது கால்களைப் பிடித்து முறையிட்டான். ‘அதெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாய்ங்க… நான் இருக்கண்டா.. போலிஸ மீறி எதாச்சும் செஞ்சிர முடியுமா? நீ வாடா…’ என போலிஸ்காரர் அவனை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தார்.
ஊர்க்காரர்களை இந்த நிலையில் பகைத்துக்கொள்ள முடியாதென்பதை அறிந்திருந்த கோடாங்கியின் மகன்கள், ‘எய்யா ஒங்கப்பன் சித்தப்பனப் பாத்தா பயம்… இப்பிடி சொல்லாமக் கொள்ளாம ஓடிட்டேயேப்பா…’ என பூங்காவனத்திடம் கெஞ்சினர்.
‘யோவ் சும்மா ஊளக்கண்ணீர் விடாத…. சொத்துக்கு ஆசப்பட்டு நீங்க ஐயாவக் கொன்ன மாதிரி என்னயவும் கொல்லுவிங்க… ஒங்க மூஞ்சிலயே முழிக்கக் கூடாதுன்னுதான் ஓடிப்போனேன்… என்னய விட்றுங்க…’ என கையெடுத்துக் கும்பிட்டவனை அவனது அத்தை வந்து அணைத்துக் கொண்டாள்.
‘எலேய் அப்பிடி எல்லாம் பேசாதடா…. ஐயாவுக்குப் பெறவு நீதான் கோடாங்கி… எங்களுக்காக இல்லயிண்டாலும் இந்த ஊருக்காக நீ இருக்கனும்…. ஐயா எடத்துல இருந்து நல்லது கெட்டது பாக்கனும்..’ என மன்றாடினாள். ‘அய்த்த… ஒனக்கு இவய்ங்களப் பத்தி தெரியாதா? இவய்ங்க இந்த ஊருக்கு எந்த நல்லதும் நடக்க விடமாட்டாய்ங்க…’ பூங்கா அங்கிருக்கப் போவதில்லையென்கிற உறுதியோடு நிற்க, ‘அப்படியெல்லாம் இல்லய்யா…. ஒங்கப்பன் சித்தப்பன் எல்லாம் செஞ்ச தப்ப ஒனந்து திருந்தி வாழ்றோம்னு சொல்றானுக.. ஒரு சந்தர்ப்பம் குடுப்பம்யா…’ என அத்தை வற்புறுத்திக் கேட்க, பூங்கா அரைமனதோடு சம்மதித்தான்.
உதிர்ந்த வேப்பிலைகளால் நிரம்பிய கோடாங்கி வீட்டு வாசல் சுத்தம் செய்யப்பட்டு பெரிய கோலமிடப்பட்டது. கோலத்தின் மையத்தில் வீற்றிருந்த பூசணிப்பூ அந்த வீட்டிற்குள் புதிய வெளிச்சம் கண்ட பூரிப்பில் மலர்ந்திருக்க, பூங்காவின் உடுக்கை சத்தம் எழுந்தது. பெரிய கோடாங்கியின் குரலிலிருந்த வலிமை இல்லாதபோதும் இவனது உடுக்கை சத்தம் மலைகளையே உசுப்பிவிடும் தீவிரத்திலிருந்தது. ஓரிரு நாட்களிலேயே வெளியூர்களிலிருந்து ஆட்கள் அந்த வீட்டைத் தேடி வரத் துவங்கினார்கள்.
பூங்காவின் அத்தை வீட்டிலிருந்து இரண்டு வேளைக்கு உணவு வரும். அத்தை எடுத்து வரும் உணவை அவளுக்கு முன்னால் அமர்ந்து பூங்காவனம் சாப்பிடுவதில்லை. அவள் கிளம்பிச் சென்றபின் சோற்றையும் குழம்பையும் பிசைந்து ஒரு உருண்டையை எடுத்துக் கோழிக்குப் போடுவான். கோழிக்கு எதுவும் ஆகவில்லை என்பது தெரிந்த பின்னால்தான் அவன் சாப்பிடத் துவங்குவான். இரண்டு வாரங்களுக்குப்பிறகு இதனைத் தெரிந்துகொண்ட அத்தை
‘இந்த அய்த்த ஒனக்கு சோத்துல வெசத்த வெச்சிருவேன்னு நெனச்சிட்டியே ராசா.. எங்கய்யாவத்தான் சரியாப் பாத்துக்க முடியல.. ஒன்னயவாச்சும் நல்ல மொறையில பாத்துக்கனும்னு ஆசப்பட்டா இப்பிடி சந்தேகப்பட்டுட்டியே ராசா…’ என ஒப்பாரி வைத்தாள். ‘எனக்கு ஒம்மேல சந்தேகமெல்லாம் இல்லத்த… எங்கப்பன் சித்தப்பன் மேலதான் சந்தேகம்… ஒனக்கே தெரியாம எதையாச்சும் செய்வானுக…. நம்ம ஐயாவ சாய்க்கலையா… சாகற ஆளாத்தா அவரு.. மல மாதிரி இருந்த மனுசன்…’ என அவனுக்கு நா தழுதழுத்தது.
‘பூங்கா.. அத்த இருக்க வரைக்கிம் ஒருத்தரும் ஒன்னய ஒன்னும் செய்ய முடியாது…’ என சொல்லிவிட்டு அவள் அவனுக்கு உணவைப் பரிமாறினாள்.
ஐயாவின் மரணம் தந்த வலிகள் மறையத் துவங்கிய சில நாட்களுக்குப்பின் அத்தைகாரிக்கு உடல்நிலை சரியில்லை என்கிற தகவல் வந்ததால் பூங்கா மதிய உணவுக்கு ஊருக்குள் சென்றான். ஊமை வெயில் முதிய பேயைப்போல் ஊரின் மீது படர்ந்திருக்க, அத்தை வீடிருந்த வீதியில் நாய்கள் சோம்பலாக படுத்திருந்தன. மாடொன்று குழுதானிப் பானையில் நீரருந்தும் சத்தம் மட்டும் சலப் சலப் என ஒலித்துக் கொண்டிருந்தது. பூங்கா நடந்து வரும் சத்தம் கேட்டு தனது வாலை பெரும் விசையோடு அசைத்த மாடு பின்னாங்காலை மட்டும் ஒருமுறைத் தூக்கி காற்றில் வீசிவிட்டு இயல்பாகியது. வீதியை இரண்டாகப் பிரித்து ஓடிய சாக்கடை நீர் செருப்பில்லாத இவனது பாதங்களில் தெறித்தது. அத்தை வீட்டு வாசலிலிருந்த தண்ணீர் தொட்டியிலிருந்து நீரள்ளி கை கால்களைக் கழுவியபடியே ‘எத்த….’ என சத்தம் குடுத்தான்.
‘உள்ள வா மருமகனே… அத்தைக்கு மேலுக்கு முடியல.. படுத்திருக்கேன்…’ என முனகலாக சத்தம் வந்தது. பகல் நேரத்தின் வெளிச்சம் படராத அந்த வீட்டிற்குள் நுழைந்த பூங்கா ஜன்னலைத் திறந்து விடச் சென்றான்… ‘ஜன்னலத் தெறக்காதய்யா…. காத்தடி காலமா இருக்கதால இருக்க குப்பையெல்லாம் வீட்டுக்குள்ள வந்துருது…’ என அத்தை சொன்னதால் மின் விளக்கைத் தட்டிவிட்டு அவள் படுத்திருக்கும் கட்டிலை நோக்கி நகர்ந்தான்.
‘மேலுக்கு என்ன செய்யுது? ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வருவமாத்த…?’
கட்டிலிலிருந்து சற்று தள்ளி நின்று கேட்டவனிடம் படுக்கையிலிருந்தபடியே வேண்டாமென மறுத்து தலையசைத்தாள்.
‘மாத்திரையப் போட்றுக்கேன் சாமி…. நீ துன்னுரு போட்டுவிடு, காலை ல சரியாப் போகும்…’ என்றாள். பூங்கா கண்ணை மூடி தெய்வத்தை வேண்டினான். இடுப்பு வேட்டியில் முடிச்சிடப்பட்டிருந்த துன்னுரை எடுத்து அவளது நெற்றியில் பூசிவிட்டவன். ‘சாமி வேட்டக்கருப்பு நோய் நொடி எதுவும் அண்டாம எங்க அய்த்தைய பாத்துக்கய்ய…’ என முனுமுனுத்தான். நெற்றியிலும் மூக்கிலும் சிதறியிருந்த துன்னூரை வலது கையால் துடைத்து சரி செய்துகொண்ட அத்தை ‘அடுப்பாங்கரையில ஒனக்கு சாப்பாடு தனியா செஞ்சு வெச்சிருக்கேன்… எடுத்துப் போட்டு சாப்பிடு…’ என்று சொல்ல பூங்கா அவளிடமிருந்து விலகி நடந்தான். ‘தட்ட எதும் எடுக்காத சாமி… இல அறுத்து வெச்சிருக்கேன்…’ என்ற குரல் அவனைத் தொடர்ந்தது.
இலையைக் கழுவிவிட்டு உணவுப் பாத்திரங்களோடு வந்து அமர்ந்துகொண்டான். பொறித்த வாழைக்காயையும் சோற்றையும் போட்டு குழம்பை ஊற்றிக் கொண்டவன் கண்ணை மூடி கருப்பனை வேண்டிக் கொண்டான்… அவன் உதடுகள் எப்போதும் போல் முனுமுனுத்துக் கொண்டிருக்க எதிர்பாராத நொடியில் கழுத்தில் விழுந்த கயிரொன்று சுருக்கென அவனைப் பிடித்து இழுத்தது… அவன் சுதாரிப்பதற்குள் இரண்டு பேர் கையையும் காலையும் பிடித்து அமுக்கினார்கள்… ‘ஆ… ஆ… ஆத்தி… எத்த…. எங்க இருக்க?...’ என கத்திய பூங்காவின் வாயில் விறகுக்கட்டையால் ஓங்கி அடித்த அவனது அத்தை ‘ஏண்டா தூமியக் குடிக்கி… இருக்க சொத்தையெல்லாம் அந்தத் தாயோலி ஒம் பேருக்கு எழுதி வெச்சிட்டா நாங்க எவனப் போயி ஊம்பறது…? நீ மயிராச்சேன்னு போயிருவ… நாங்க கஞ்சிக்கி இல்லாம சாகனுமா?... என ஆவேசமாக அவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.
ஏமாற்றத்திலும் வலியிலும் அவனுக்கு வாயடைத்துப்போனவன் வார்த்தை அறுபட்டு அலறினான்… ‘இன்னியோட உன் சோலிய முடிச்சாதான் சரியா வரும்… வீட்டுல எரும மாடுக மாதிரி ஆம்பளைக இருக்கிய கைத்தண்டிப் பயல அடிச்சு சொத்த எழுதி வாங்கத் துப்பில்ல ஒங்களுக்கெல்லாம்… த்தூ…’ என தனது சகோதரர்களைப் பார்த்து துப்பினாள். பூங்காவின் அலறல் அக்கம் பக்கத்திலிருப்பவர்களை எட்டுவதற்கு முன்னால் அடக்க வேண்டுமென அவனது அப்பா பழைய துணியைச் சுருட்டி அவனது வாய்க்குள் திணித்தார். குரல் முற்றாக ஒடுங்கி பெரு மூச்சுகள் மட்டுமே வந்தது. வலியில் துடித்தவனுக்கு கண்கள் சுருங்கியது.
‘எலேய் ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும். என்னய உசுரோட விட்றுங்கடா… நீங்க கேக்கற எடத்துல கையெழுத்துப் போடறேன். தயவு செஞ்சு விட்றுங்கடா..’ என மன்றாடினான். அத்தை அவனை ஓங்கி அடித்தாள். ‘இத்தன நாளா என்ன நொட்டிட்டு இருந்தியா… தாயோலி.’ என சீறினாள். பூங்காவுக்கு பேச்சு வராமல் குரல் இறுகியது. வலியில் அலறினான்.
’எலேய் அவன விடுங்கடா…’ என அத்தையின் உத்தரவு கேட்டு கயிறு விலக்கப்பட, தொப்பென தரையில் விழுந்தான். மூச்சடைத்து சிரமப்பட்டவனின் உடல் அசைவற்றுப் போனது. சாவைப் பார்த்துவிட்டவனுக்கு இயல்பிற்குத் திரும்ப அவகாசம் தேவைப்பட்டது. நெஞ்சில் அடைத்த வேதனையெல்லாம் கத்திக் கூப்பாடு போடவேண்டுமென ஆங்காரமெடுத்து அவன் பேச எழுந்தபோது குரல் முற்றாக அறுபட்டுப் போனது… கயிறுகள் இறுகிய கழுத்தில் ரத்தம் கட்டிப்போனதால் பேச முடியாமல் சுருண்டு விழுந்தான். ‘பத்திரத்துல கையெழுத்தப் போடறா தாயோலி.’ என்றபடியே ஓங்கி உதைத்த அத்தை அவன் மீது காறி உமிழ்ந்தாள்.
கீழே கிடந்த பத்திரத்தை தடுமாறியபடியே எடுத்த பூங்கா அவர்கள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டான்… பத்திரத்தை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்ட அவனது அப்பா ‘நல்லவேள இப்பயே சுதாரிச்சோம்… இல்லயின்னா இந்தத் தாயோலி மிச்சம் இருக்க சொத்தையும் ஊருக்கு எழுதி வெச்சிருப்பான்.,..’ என ஆறுதலடைந்தார். இன்னும் நடுக்கம் குறையாத பூங்காவனம் தாகத்திற்கு நீரருந்த லோட்டாவைத் தேடி கைகளை அலையவிட்டபடியே மயங்கி விழுந்தான்.

4
இந்த முறை பூங்கா காணாமல் போய் ஒருவாரம் கடந்தும் ஒருவரும் அவனைத் தேட முயற்சிக்கவில்லை. மலையடிவாரத்திலிருந்த கோடாங்கி வீட்டை விலைக்குக் கேட்டு அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து ஆட்கள் வரத் துவங்கியபோது வராது கேடு வந்து சேரப்போகிறதென்கிற கவலை எழுந்தது ஊர்க்காரர்களுக்கு. கிணறுகளில் வேகமாய் நீர் வற்றியது. குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகள் காலியாகிப்போனதால் ஊர்க்காரர்கள் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு நீண்டதூரம் சென்றுவந்தனர். ஐந்து மைல் தாண்டி பளியர்களுக்காக அரசாங்கம் போட்டுக் குடுத்திருந்த புதிய குடியிருப்பின் நீர்த் தேக்கத்திலிருந்து நீர் எடுத்து வருவது மட்டுமே அவர்களுக்கு இருந்த ஒரே வழி. புழுக்கம் தாளாமல் இரவுகளில் பெரும்பாலானவர்கள் மந்தையில் வந்து படுத்துக் கொள்ளத் துவங்கினார்கள்.
‘இந்த ஊரு வெள்ளாமயில்லாம பசியும் பட்டினியுமா கெடந்த காலத்துல ஊருக்கே பசியமத்துனது கோடாங்கி குடும்பம். அவரு புள்ளய இந்த ஊரவிட்டத் துரத்திட்டா சாமி சும்மா இருக்குமா? அவய்ங்க தேடி கூட்டியாராட்டியும் நாம போயி தேடனும்யா…’ என ஒரு பெரியவர் கவலையோடு சொன்னார்.
‘ஏப்பா பெரியாம்பள… அவெ என்ன வெவரம் தெரியாத சின்னப் பயலா? காணாமப் போக… இவய்ங்களுக்குப் பயந்து உசுரக் காப்பாத்திக்க ஓடி ஒளிஞ்சிருக்கானப்பா… எங்கன்னு போயி தேடுவ?...’ என அவருக்கு அருகிலிருந்த இன்னொருவர் சொல்ல பேச்சு சத்தத்தைக் குறைத்து ஒருவன் ‘எண்ணே நீ சொல்றது நெசம்… இவய்ங்க குடும்பமாச் சேந்து அந்தப் பயல கொல்லப் பாத்திருக்காய்ங்க… பூங்காவோட அக்காகாரி கைல கால்ல விழுந்து தம்பி உசுரக் காப்பாத்தி விட்றுக்கு… சொந்த ரத்தத்தையே சொத்துக்காகக் கொல்லத் துணிஞ்சவனுங்க நாம எதுத்தம்னா சும்மா இருப்பானுகளா?’ கிசுகிசுப்பாக சொன்னான்.
‘ கோடாங்கி வீட்டுல இருந்து ராத்திரி ல பேயும் பிசாசும் கத்தற சத்தம் கேக்குதப்பா… பொண்டு புள்ளைக பகல் நேரத்துல வெறகெடுக்கப் போகக் கூட பயப்படுதுக…’
‘ஆமாடா… நூறு வருசமா நாள் தவறாம உடுக்க அடிச்சு எத்தன பேருக்கு பேயோட்டிருப்பாய்ங்க…. அந்த வீட்டச் சுத்தி காத்து கருப்புன்னு எல்லாந்தான் இருக்கும்.. கோடாங்கி இருக்க வரைக்குந்தான் அந்த வீட்டுல இருக்க சக்தி கட்டுப்பட்டு இருக்கும்… ஆளில்லாத வீட்ட வித்துப்புடலாம்னு நெனைக்கிறாய்ங்க… என்ன கெதிக்கு ஆளாகப் போறாய்ங்கன்னு தெரியல..’ என ஒருவன் கவலையோடு சொல்லிக் கொண்டிருந்தபோது மலையிலிருந்து இறங்கிய காற்றில் ஆலமரம் மூர்க்கமாய் அசைந்தது.
உறக்கம் தொலைத்தவர்களாய் மந்தையில் படுத்திருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு வானத்தைப் பார்த்தனர். தூரத்தில் மலையடிவாரத்திலிருந்து உடுக்கையொலி கேட்டது. எவரையும் உறங்கவிடாத தீவிரத்தோடு எழுந்த உடுக்கையின் ஒலி இரவு முழுக்க ஓய்ந்திருக்கவில்லை. அன்று துவங்கி ஒவ்வொரு நாள் இரவும் கோடாங்கியின் உடுக்கை சத்தம் ஊரை ஆக்ரமிக்கத் துவங்கியது.
இரண்டு வாரங்களுக்குப்பின் உணவு ஒத்துக்கொள்ளாமல் பூங்காவின் அத்தை வயிறு வீங்கி நோயுற்று விழ, அவளது குடும்பத்தினர் தேனி மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். ஊர் எல்லையைத் தாண்டும்போதே நினைவு தப்பியவள் மருத்துவமனையை அடைவதற்குள் இறந்துபோனாள். விறைத்துப் போன அவளது சவத்தோடு திரும்பியவர்களை ஊர்க்காரர்கள் கலக்கத்தோடு பார்த்தனர். ஒருபோதும் தீராத சாபமொன்றைத் தேடிக்கொண்ட அந்தக் குடும்பத்தை நெருங்க அச்சம் கொண்டு ஒருவரும் இறுதிச் சடங்கிற்குச் செல்லவில்லை. பத்துக்கும் குறைவானவர்களோடு மயானத்தில் அழுதுகொண்டிருந்த கோடாங்கி குடும்பத்தாரிடம் காரியம் செய்ய வந்தவர் ‘எண்ணே ஒங்களுக்கு நான் சொல்லித் தெரியனும்னு இல்ல… கேரளால இருந்து மந்திரவாதி யாரையாச்சும் கூட்டியாந்து மந்திரிச்சி விடுங்க எல்லாம் சரியாப் போகும்…’ எனச் சொல்லிவிட்டுப் போனார்.
இரண்டு நாட்களுக்குப்பின் அதிகாலையில் பத்தனம்திட்டா பதிவு எண் கொண்ட வாகனத்தில் நான்கு மலையாள மந்திரவாதிகள் கவனம்பட்டிக்கு வந்தனர்.
மலையடிவாரத்திலிருந்த கோடாங்கியின் வீட்டையும் ஊருக்குள்ளிருந்த அவரது மகன்களின் வீட்டையும் நிதானமாகப் பார்வையிட்டவர்கள் அன்று மாலையே பூசையை வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அவர்கள் வந்த வாகனத்திலிருந்து பூசைக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் நான்கு மூட்டைகளில் இறங்கின. கோடாங்கி வீட்டு முற்றத்தில் பெரிய சக்கரங்கள் வரைந்து குங்குமம் தெளிக்கப்பட்டு ஒவ்வொரு முனையிலும் எலுமிச்சம் பழங்கள் வைக்கப்பட்டன. ஆளுக்கொரு திசையில் உட்கார்ந்த மந்திரவாதிகள் இரவு முழுக்க மந்திரங்களை உச்சரித்தனர். ஐயாவின் நினைவாக வைக்கப்பட்டிருந்த அவரது உடைகள், பயன்படுத்திய கண்ணாடி, தலைக்கு வைத்து உறங்கும் மனப்பலகை எல்லாவற்றையும் நெருப்பிலிட்டு எரித்தார்கள். பூசை முடிந்து அதிகாலை அவர்கள் கிளம்பியபோது பெரும் அமைதியொன்று அந்த வீட்டைச் சூழ்ந்தது.
‘இனியொன்னும் பேடிக்கண்டா… அத்ற காரியங்களும் நன்னாயிட்டு வரும்…’ என ஆசிர்வதித்துவிட்டு மலையாளக்காரர்கள் கிளம்பிச் சென்றார்கள். தற்காலிகமாக அந்த வீட்டை விற்கும் யோசனையை கைவிட்டிருந்த கோடாங்கியின் மகன்கள் வீட்டை ஒட்டியிருந்த நிலத்தை முதலில் விற்றுவிட நினைத்தார்கள். கிணறோடு சேர்ந்த வளமான செம்மண் பூமியது. வெளியூரிலிருந்து ஆட்கள் இடம் பார்க்க வருவதைக் கவனித்த ஊர்க்காரர்கள் ‘இவய்ங்களுக்கு என்ன கேடு வந்துச்சுன்னு இப்ப காணிய விக்க தாவிட்டு இருக்காய்ங்க… இந்த சொத்து சொகம் எல்லாம் நாம பாத்து இவய்ங்களுக்கு குடுத்தது…. சாமி காரியத்துக்காக இவக அய்யாகிட்ட குடுத்தத இவனுக என்ன மயித்துக்கு விக்கிறானுக…’ என ஆத்திரப்பட்டார்கள். நிலம் பார்க்க வந்தவனுக்கு அந்த பூமி பிடித்துப் போனதால் ஓரிரு நாட்களிலேயே கிரயம் செய்துகொள்ளலாமென உறுதி சொல்லிவிட்டுப் போனான்.
அன்று மாலை மந்தையில் ஊர் பஞ்சாயத்துக் கூடியது. வேண்டா வெறுப்பாக வந்த கோடாங்கியின் மகன்கள் ஊர்க்காரர்கள் பேசி முடிப்பது வரை அமைதி காப்பது என முடிவெடுத்திருந்தனர்.
’எப்பா ஏய் நீங்க செய்றது எதும் நல்ல மாதிரி தெரியல… நாங்களும் பொறுத்துப் பொறுத்துப் பாத்தோம் நீங்க திருந்தற மாதிரி இல்ல… ஒங்க ஐயா மேல இருந்த மரியாதைக்காக இம்புட்டு நாளும் எதும் கேக்காம இருந்தோம்… அந்தப் பய பூங்காவனத்த நீங்க என்ன செஞ்சியன்னு தெரியல… சரி அது ஒங்க குடும்ப பிரச்சன விட்றலாம்னா இப்ப இருக்க காணி எல்லாத்தையும் விக்கிறதுக்கு ஆளுகள ராவிட்டு இருக்கிய… என்னயா நெனச்சுட்டு இருக்கிய… இதெல்லாம் இந்த ஊர்க்காரய்ங்க ஒங்க குடும்பத்துக்கு குடுத்தது இல்ல… அந்த வீட்டுல இருக்க சாமிக்கு குடுத்தது…’ என ஒரு பெரியவர் சத்தம் போட, பூங்காவனத்தின் அப்பா அதற்குமேல் பொறுமையற்றவராய் ‘எப்பா எங்க பேருல இருக்க எதையும் விப்போம்… அது எங்க விருப்பம். எங்க ஐயா சாக முன்ன சொத்துல பாதிய இந்த ஊருக்குத்தான எழுதி வெச்சிட்டுப் போனாரு… அத திருப்பிக் குடுக்கச் சொல்லி கேட்டமா? கோயிலுக்கு வெச்சிக்கச் சொல்லி குடுத்தம்ல…. நீங்க இதுல தலையிடாதிய…’ என்றான்.
‘எலேய் ஒங்க அண்ணந்தம்பிக வவுசி தெரிஞ்சுதான் ஒங்க ஐயா காலம் பூரா உங்கள வெலக்கியே வெச்சிருந்தாரு… நல்ல தகப்பனுக்குப் பொறந்து நீங்க அவருக்கு நல்லது செய்யலன்னாலும் பரவாயில்ல, அவரு பேரக் கெடுத்திராதிய…’ என ஊர்க்காரர் ஆத்திரப்பட பூங்காவின் சித்தப்பா ஆத்திரமாக அவனை அடிக்க முன்னேறினார்.
‘எங்க அப்பனப் பத்தி கேக்க நீங்க யார்ரா வெண்ணைகளா?’ என உறுமியபடி முன்னேறியவனை கூட்டத்திலிருந்த இளைஞர்கள் அடித்து வீழ்த்தினர். எதிர்பாராத தாக்குதலில் தடுமாறி விழுந்தவனை ஆளும் பேருமாகச் சேர்ந்து உதைக்க பூங்காவின் அப்பா கொலைவெறி கொண்டான். ‘என்னய்யா பெரியாம்பள… வாங்க உக்காந்து பேசுவோம்னு கூப்ட்டுட்டு ஆளுகள வெச்சு அடிக்கிறியா…? இப்பயே போலிஸுக்குப் போறேன்… சட்டப்படி என்ன செய்யனுமோ அதப் பாத்துக்கறேன்..’ என தனக்கு ஆதரவாக இருந்த சிலரோடு கூட்டத்தை விலக்கி தனது தம்பியைக் காப்பாற்றினார்.
ஊர்க்காரர்களிடம் வெளிப்பட்ட எதிர்ப்பு பாதுகாப்பு குறித்த அச்சங்களை உருவாக்கியதால் பூங்காவனத்தின் அப்பா கடமலைக்குண்டிலிருந்த சிலரை பாதுகாப்பிற்கு வரவழைத்திருந்தார். எந்த நேரத்திலும் ஊருக்குள் கலகம் நடக்கலாமென்கிற பதற்றத்தில் அன்றிரவு ஒருவருக்கும் உறக்கம் பிடிக்கவில்லை.
நள்ளிரவிற்கு மேல் முதிய கிழவியொருத்தி பெருங்குரலில் ஓலமிடும் சத்தம் மலையடிவாரத்திலிருந்து கிளம்பியது. ஊரைச் சுருட்டிக் கொள்ளும் தீவிரத்தோடு வீசிய பேய்க்காற்றில் மரங்கள் சாமியாடின. ஓரிரு நாட்கள் ஓய்ந்திருந்த கோடாங்கியின் உடுக்கை சத்தம் கிழவியின் குரலோடு சேர்ந்து ஒலிக்க மலையும் மரங்களும் விழித்துக் கொண்டன.
பூசைக்குப்பின் கோடாங்கியின் வீட்டிலேயே தங்கியிருந்த பூங்காவின் அப்பாவும் சித்தப்பாவும் பாதுகாப்பிற்கு ஆளிருக்கும் துணிச்சலில் எதையும் எதிர்கொள்ள நினைத்தனர். காற்றின் வேகம் மூர்க்கமானபோது வீட்டிற்குள்ளிருந்து பேய்களின் அலறல் கேட்டது. மின்சாரம் அறுபட்டு எங்கும் இருள் சூழ்ந்தது. உடுக்கை சத்தமும் வஞ்சிக்கப்பட்டவர்களின் அரற்றலும் அந்த வீட்டைத் தகர்ந்துவிடும் தீவிரத்தோடு எதிரொலித்ததைக் கேட்ட கடமலைக்குண்டுக்காரர்களுக்குப் பயம் தொற்றிக்கொண்டது. ‘எண்ணே இன்னிக்கி ஒரு ராத்திரிக்கி நாம ஊருக்குள்ள போயிருவமா?’ என பூங்காவனத்தின் அப்பாவிடம் கேட்டனர். மறுக்கும் திராணியின்றி அவர்களோடு பூங்காவனத்தின் குடும்பத்தினர் கிளம்பிச் சென்றபோது பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஊர் வெகு தொலைவிலிருந்தது.
ஊரைநோக்கிச் செல்லும் பாதையில் அவர்கள் நடந்தபோது வீட்டிலிருந்து பேய்களின் ஓலமெல்லாம் ஓய்ந்து கோடாங்கியின் உடுக்கையொலி மட்டும் கேட்டது. அந்த உடுக்கையொலியோடு குரலறுபட்ட ஒரு ஆணின் அலறலும் எதிரொலிக்க பூங்காவனத்தின் அப்பா திடுக்கிட்டார். அசீரிரியாக இருக்கக்கூடுமென அவர் தொடர்ந்து நடந்தபோது உடுக்கையின் சத்தமும் அரற்றலும் முன்னிலும் உக்கிரமானது. மனிதனா பேயா என்று அடையாளம் காணமுடியாத முரட்டுக் குரல். திரும்பி தனது தம்பியைப் பார்க்க, ‘எனக்கும் சத்தம் கேக்குதுண்ணே..’ என அவன் நடுங்கினான். ‘போயி என்னன்னு பாப்பமாடா?’ என பூங்காவின் அப்பா கேட்டதற்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. எரிச்சலோடு ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.
நிலா வெளிச்சத்தில் தெரிந்த வீட்டைப் பார்த்தவர்களுக்கு மலை உயரத்திற்குப் பெரும் நிழலொன்று உடுக்கையோடு மூர்க்கமாய் ஆடுவது தெரிந்தது. மெலிந்த அந்த உருவத்தின் கையிலிருந்த உடுக்கையின் ஒலிக்கு காடே அதிர்ந்து ஆடியது. பெரும் இடியோடு மழை துவங்க நிழலின் பிரம்மாண்டம் முன்னிலும் அதிகரித்தது. ஐயாவாக இருக்குமோ என அவர்கள் அச்சத்தோடு பார்க்கும் போதே உடுக்கையொலிக்கு நடுவே ஒரு அலறல் வெளிப்பட்டது. அதிலிருந்த ஆங்காரத்தை வைத்து வந்திருப்பது பூங்காவனம் என தெரிந்தகொண்ட அவனது குடும்பத்தினர் உறைந்துபோயினர்.
காட்டையும் மலையையும் தனக்குத் துனையாக அழைத்தவனாக ஆடிக் கொண்டிருந்தனின் காலடியில் உடுக்கையொலிக்கு கட்டுப்பட்ட ஏராளமான உருவங்களின் நிழல்கள் பேயாட்டம் போட்டன. ஊரை நோக்கிச் சென்றவர்கள் வாயடைத்துப்போய் பார்க்கையிலேயே பூங்காவனத்தின் அப்பா வீட்டை நெருங்கியிருந்தார்… நூற்றாண்டுகால வாசற்கதவைத் திறந்து ‘யாரு…?’’ என அச்சத்தோடு கூப்பிட்டுப் பார்த்தார். உடுக்கையொலியும் பேயின் அரற்றலும் சடாரென அறுபட்டு நிற்க அவர் இன்னொரு முறை யாருன்னு கேக்கறன் ல?’ எனக் கத்தினார்…. மழைச் சத்தம் மட்டும் நிரம்பியிருந்த நிமிடத்தில் மின்னலென ஒரு நிழல் அவருடலைத் தகர்த்து வெளியேறி காற்றில் கலந்தது.



