பன்றிவேட்டை நாவல் உரையாடல் - காணொளி
- லக்ஷ்மி சரவணகுமார்

- 1 day ago
- 1 min read

நண்பர் சிறகன் ஒருங்கிணைப்பில் கடந்த 22 ம் தேதி இணைய வழியில் உரையாடல் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது. எழுத்தாளர்கள் அ.வெண்ணிலாவும், கார்த்திகைப்பாண்டியனும் நாவல் குறித்து தங்களது கருத்துகளை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்.
இரண்டு மணி நேரம் நிகழ்ந்த இந்த நிகழ்வில் குறைவான நபர்களே கலந்துகொண்ட போதிலும் உரையாடல் ஆரோக்கியமானதாக இருந்தது.
ரூஹ், கொமோரா, கானகன் என எனது பிற நாவல்களிலிருந்து தனது உரையைத்துவங்கிய எழுத்தாளர் வெண்ணிலா கானகனுக்கும் பன்றிவேட்டைக்கும் இருக்கும் தொடர்புகளைக் குறிப்பிட்டதோடு எனது பிற நாவல்களில் வெளிப்பட்ட முக்கிய அம்சங்களையும் விளக்கினார். பன்றி வேட்டையில் பளியர் இன மக்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள் எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது என்பதையும் விலாவரியாகக் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் கார்த்திகைப்பாண்டியன் உப்புநாய்கள் வாசித்தபோது இருந்த பரபரப்பும் ஆர்வமும் நீண்ட நாட்களுக்குப்பின் பன்றிவேட்டையில் இருந்ததையும் குறிப்பிட்டதோடு பன்றிவேட்டையின் முக்கிய தருணங்களை எடுத்துக் கூறினார்.
பெரிய பளிச்சி மலையடிவாரத்தில் அரூவமாகி அந்த மக்களின் நீர் ஆதாரமாக மாறும் இடத்தை சிலாகித்தவர், நாவலின் துவக்கத்தில் வீரணன் கதாப்பாத்திரம் வெளிப்படும் இடமான இந்தத் தாயோலிங்க கும்புட போடறது பாக்கனும் என சொல்கிற இடங்களை முக்கியமாகக் குறிப்பிட்டார். நிகழ்வில் கலந்து கொண்ட ஆன்ந்த் மற்றும் தீபிகாவும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இறுதியாக நாவல் எழுதுவதற்கான காரணங்களைக் குறித்து நான் உரையாற்றினேன். 1970 ஆம் வருடத்தில் ஜமீன் கொடுமைகள் இப்படியெல்லாம் இருந்ததா என சில முக நூல் பதிவர்களின் பதிவிற்கு பதிலுறைக்கும் விதமாக நக்சல்பாரி இயக்கத்தின் வருகைக்குப் பின்னால் நிகழ்ந்த போராட்டங்கள், மக்கள் எழுச்சி அது எவ்வாறு இலக்கியப் பிரதிகளில் பிரதிபலித்தக்து என்பதைக் குறிப்பிட்ட நான் அந்த சித்திரத்தை எவ்வாறு இந்த நாவலில் பயன்படுத்தினேன் என்பதை விளக்கினேன்.
உரையாடலின் முழுமையான காணொளி.



