top of page

மோகனசாமி: சொல்லப்படாத மனிதர்களின் கதை.

Writer: லக்ஷ்மி சரவணகுமார்
லக்ஷ்மி சரவணகுமார்
Sep 30
3 min read


இந்திய சமூகத்தில் பாலியல் குறித்த உரையாடல் பெரும்பாலும் மௌனத்துக்கும் ஒழுக்கத்துக்கும் இடையில் சிக்கிக்கிடக்கிறது. பாலியல் என்பது திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு ஆகியவற்றுடன் மட்டுமே தொடர்புடையதாகப் பார்க்கப்படும் நிலையில், தனிமனிதனின் ஆசை, உடல், விருப்பம், அடையாளம் ஆகியவை முக்கியமற்றதாகப் பார்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக தன்பால் ஈர்ப்பு குறித்து பேசும்போது இந்த மௌனம் இன்னும் அடர்த்தியாகிறது.


கன்னட எழுத்தாளர் சுதேந்திராவின் மோகனசாமியை கடந்த வாரம் வாசித்தேன். எத்தனை உலக அனுபவமும் வாசிப்பும் இருந்தாலும் மனிதர்களைப் பற்றி இன்னும் குறைவாகவே அறிந்திருக்கிறோமோ என எண்ணச் செய்தது. பல்வேறு வகையில் இது முக்கியமானதொரு படைப்பாகத் தோன்றியது,. தன்பால் ஈர்ப்பு கொண்ட ஒருவரின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது என்பதற்காக மட்டுமல்ல. ஒரு மனிதனின் அந்தரங்கத்தை சமூகத்தின் மொழிக்குள் கொண்டு வருவதற்கான இலக்கிய முயற்சி என்பதாலும் முக்கியத்துவம் பெறுகிறது. மோகனசாமி தன்னுடைய பாலியல் அடையாளத்துடன் போராடுகிறான்; அதே நேரத்தில் அவன் காதலிக்கிறான், பொறாமைப்படுகிறான், ஏமாற்றப்படுகிறான், தனிமையில் தவிக்கிறான், அன்பை எதிர்பார்க்கிறான். அவனை வெறும் “ஓரினச்சேர்க்கையாளர்” என்ற அடையாளத்துக்குள் அடைத்துவிடாமல், முரண்பாடுகளும் ஆசைகளும் பலவீனங்களும் கொண்ட முழுமையான மனிதனாக வசுதேந்திரா உருவாக்குகிறார். இதுவே இந்த படைப்பின் முதல் முக்கியமான இலக்கியப் பங்களிப்பு.


தன்பால் ஈர்ப்பு குறித்து இந்திய சமூகத்தில் உரையாடல் ஏன் அவசியம் என்ற கேள்விக்கு முதலில் சொல்ல வேண்டியது, அந்த வாழ்க்கை நம்முடைய சமூகத்தில் ஏற்கனவே இருக்கின்றன என்பதுதான். கதைகளில் திரைப்படங்களில் இதனைக் கையாள்வதை சமூகக் குற்றமாகவும் தீமையாகவும் கருதுவதும் பிரச்சாரம் செய்வதும் கடைந்தெடுத்த முட்டாள்த்தனம். நியாயமான உரையாடலைத் தவிர்ப்பதால் அவை மறைந்துவிடுவதில்லை. குடும்பங்களில், கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில், சில சமயங்களில் திருமணங்களுக்குள்ளும் இருக்கின்றன. பலர் தங்களுடைய உண்மையான பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்த முடியாமல் வாழ்கிறார்கள். எனவே இது “அவர்களைப் பற்றிய” ஒரு உரையாடல் அல்ல; மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை எவ்வளவு சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க முடிகிறது என்பதற்கான உரையாடல். ஒருவர் யாரை நேசிக்கலாம், யாருடன் வாழலாம், தன்னுடைய உடலை எவ்வாறு புரிந்துகொள்ளலாம் என்பதெல்லாம் குடும்பமும் சமூகமும் தீர்மானிக்கத் தொடங்கும்போது, பாலியல் என்பது தனிப்பட்ட விஷயத்தைத் தாண்டி ஒரு சமூகக் கேள்வியாகிறது.


இந்தச் சிக்கலை மோகனசாமி கோஷங்களாக முன்வைக்கவில்லை. மாறாக, வாசகனை ஒரு மனிதனின் வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கிறது. இதுவே இலக்கியத்தின் தனித்துவமான சக்தி. தன்பால் ஈர்ப்பு கொண்ட ஒருவரை வெளியிலிருந்து பார்த்து புரிந்துகொள்வதைவிட, அவனுடைய காதல், பயம், அவமானம், ஆசை, தனிமை ஆகியவற்றின் அருகில் நின்று பார்ப்பது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். அப்போது “அவர்கள்” என்ற தொலைவு குறைகிறது; “அவன்” என்ற கதாபாத்திரம் ஒரு மனிதனாக மாறுகிறான். வாசகன் அவனுடைய அனுபவத்தோடு உடன்பட வேண்டியதில்லை; அவனைப் போல வாழ வேண்டியதுமில்லை. ஆனால் வேறுபட்ட ஒருவரின் வாழ்க்கையையும் மனித வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு இலக்கியம் அவனை அழைத்துச் செல்கிறது.


மோகனசாமியின் உடல் இந்தப் படைப்பில் தனிப்பட்ட உடலாக மட்டுமல்லாமல் சமூகத்தின் பார்வைக்கு உட்பட்ட உடலாகவும் இருக்கிறது. அவன் எப்படி நடக்க வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி ஒரு “ஆண்” போலத் தோன்ற வேண்டும், யாரை விரும்பலாம், எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்பவை வெளியில் இருந்து அவன் மீது வைக்கப்படும் எதிர்பார்ப்புகள். சிறுவனாக இருக்கும்போது அவனுடன் பிறந்த்ஜ சகோதரியே அவனை ஆம்தே என இழிசொல்லால் அழைக்கிறாள். அந்தச் சொல்லுக்கான அர்த்தம் கூட தெரியாத வயதிலிருந்து அவமானங்களை சுமந்துகொண்டு வாழத் துவங்குகிறான். அவனது இயல்பான நடவடிக்கைகள் கண்கானிக்கப்படுகின்றன. சமூகக் கண்காணிப்பு சுயகண்காணிப்பாக மாறுகிறது. சமூகத்தின் “நீ இப்படியிருக்கக்கூடாது” என்ற குரல், மனிதனுக்குள்ளேயே ஒலிக்கத் தொடங்குகிறது. அவன் தன்னுடைய ஆசையை வெறுக்கலாம்; உடலைப் பற்றி வெட்கப்படலாம்; காதலை மறைக்கலாம்; தன்னுடைய உண்மையை ஏற்றுக்கொள்ள போராடலாம். இந்த உள்மோதலை வெளிப்படுத்துவதன் மூலம் மோகனசாமி, தன்பால் ஈர்ப்பைச் சுற்றியுள்ள பிரச்சினை வெறும் வெளிப்புற சமூக எதிர்ப்பு அல்ல என்பதை உணர்த்துகிறது.


இந்திய சமூகத்தில் திருமணம் இந்த விவாதத்தின் முக்கியமான பகுதியாகிறது. திருமணம் என்பது இங்கே இரு மனிதர்களின் உறவு மட்டுமல்ல; குடும்பம், சமூக அங்கீகாரம், குழந்தைப்பேறு, சொத்து, உறவுமுறை ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு அமைப்பு. எனவே தன்பால் ஈர்ப்பு கொண்ட ஒருவரிடம் “திருமணம் செய்துகொள்; எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறுவது வெறும் அறிவுரை அல்ல. அது ஒருவருடைய உண்மையான பாலியல் அடையாளத்தை மறைத்து, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாழ்க்கைக்குள் அவரைத் தள்ளும் அழுத்தமாக இருக்கலாம். இதன் விளைவுகள் அந்த மனிதருக்கு மட்டுமல்ல, அவருடன் திருமணம் செய்யும் இன்னொரு மனிதரின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். மோகனசாமி இந்தப் பிரச்சினையை தனிப்பட்ட துயரமாக மட்டுமல்லாமல், குடும்பம் மற்றும் சமூகத்தின் அமைப்புகளைப் பற்றிய கேள்வியாக மாற்றுகிறது.


இந்தப் படைப்பின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று தன்பால் ஈர்ப்பை “பிரச்சினை” என்ற ஒரே கோணத்தில் காட்டாமல் இருப்பது. மோகனசாமிக்கு காமம் இருக்கிறது, காதல் இருக்கிறது, பொறாமை இருக்கிறது, சுயநலம் இருக்கிறது, அன்பு இருக்கிறது. அவன் நல்லவனாகவும் இருக்கலாம், தவறுகள் செய்யக்கூடியவனாகவும் இருக்கலாம். அவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் அவனுடைய பாலியல் அடையாளத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. இதன் மூலம் தன்பால் ஈர்ப்பு கதையின் விசித்திரமான அல்லது அதிர்ச்சியான “விஷயம்” என்பதிலிருந்து விலகி, கதாபாத்திரத்தின் வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாக மாறுகிறது. இதுதான் பிரதிநிதித்துவத்தைத் தாண்டி இயல்பாக்குதலின் நிலைக்கு படைப்பை அழைத்துச் செல்கிறது.


ஒரு மனிதனை அவனுடைய பாலியல் அடையாளத்தால் மட்டும் பார்க்காமல், முழுமையான மனிதனாகப் பார்க்கும் இந்த அணுகுமுறை இந்திய இலக்கியத்தில் முக்கியமானது. ஏனெனில் யாருடைய வாழ்க்கை இலக்கியத்திற்குத் தகுதியானது என்ற கேள்வியும் இதனுடன் இணைந்திருக்கிறது. ஒரு மனிதனின் ஆசை இலக்கியத்திற்குத் தகுதியானதா? அவனுடைய காதல் ஒரு முழுமையான காதல் கதையாக எழுதப்பட முடியுமா? அவனுடைய தனிமை சமூக அனுபவமாகக் கருதப்பட முடியுமா? அவனுடைய உடல் வெறும் சமூக விவாதத்தின் பொருளாக இல்லாமல் அழகின், ஆசையின், நினைவின் பகுதியாக எழுதப்பட முடியுமா? மோகனசாமி இந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், ஒரு மனிதனின் வாழ்க்கையை மையமாக்குவதன் மூலம் பதில் அளிக்கிறது.


இன்று தன்பால் ஈர்ப்பு குறித்து முன்பைவிட வெளிப்படையாகப் பேசப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் ஊடகங்களிலும் பொது உரையாடலிலும் அதிகமாகப் பேசப்படுவது மட்டும் சமூகப் புரிதல் உருவாகிவிட்டதற்கான அடையாளமல்ல. குடும்பத்திற்குள் ஒருவர் தன்னுடைய உண்மையைச் சொல்ல முடியாத நிலை இருக்கும் வரை இந்த உரையாடல் அவசியமாகிறது. ஒரு இளைஞன் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பாக “மக்கள் என்ன சொல்வார்கள்?” என்று அஞ்ச வேண்டியிருந்தால், சமூகத்தின் கண்காணிப்பு இன்னும் தொடர்கிறது. அந்த இடத்தில்தான் இலக்கியத்தின் பங்கு முக்கியமாகிறது. சட்டம் உரிமையைப் பற்றிப் பேச முடியும்; சமூக அறிவியல் அதன் காரணங்களை விளக்க முடியும்; அரசியல் சமத்துவத்தைப் பற்றிப் பேச முடியும். ஆனால் இலக்கியம் மட்டும்தான் மனிதனின் முகத்தை நமக்கு நேராகக் காட்ட முடியும்.


அந்த வகையில் மோகனசாமி தன்பால் ஈர்ப்பு குறித்த உரையாடலை ஒரு கருத்தியல் விவாதத்திலிருந்து மனித அனுபவத்தின் தளத்துக்கு கொண்டு வருகிறது. “அவர்களுக்கு உரிமை வேண்டும்” என்ற பொத்தாம் பொதுவான கோரிக்கையைவிட , “இந்த மனிதனும் காதலிக்கிறான், ஆசைப்படுகிறான், தனிமையில் இருக்கிறான்” என்பதை உணரச் செய்வதே அதன் வலிமை. மோகனசாமி தேடுவது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குள் மட்டும் கிடைக்கும் இடம் அல்ல; மற்ற மனிதர்களைப் போலவே வாழக்கூடிய ஒரு சாதாரண இடம். அவனுடைய வாழ்க்கைக்கு வேறு எந்த விசேஷமான விளக்கமும் தேவையில்லை. மனிதனாக இருப்பதற்கான உரிமை மட்டுமே போதுமானது.


அதனால்தான் மோகனசாமியை வெறும் ஓரினச்சேர்க்கை குறித்த படைப்பாக வாசிப்பதைவிட, இந்திய சமூகத்தில் மனிதனின் தனிப்பட்ட சுதந்திரம் எவ்வளவு விசாலமானது என்ற கேள்வியை எழுப்பும் இலக்கியமாக வாசிப்பது பொருத்தமானது. தன்பால் ஈர்ப்பு குறித்த உரையாடலின் இறுதி நோக்கம் “வேறுபட்டவர்களை” புரிந்துகொள்வது மட்டுமல்ல; மனிதர்களின் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு சமூகத்தின் கற்பனையை விரிவுபடுத்துவதும் ஆகும். அந்த விரிவை ஒரு கோஷமாக அல்லாமல், ஒரு மனிதனின் வாழ்க்கையாக நம் முன்னால் வைத்திருப்பதுதான் வசுதேந்திராவின் மோகனசாமியின் மிக முக்கியமான பங்களிப்பு.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page