top of page

ரவிக்கையுள் மறையும் வனம். ( சிறுகதை )

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 2 minutes ago
  • 11 min read


சற்றைக்கு முன்னர் வரையிலும் அவளை மறுபடியும் பார்ப்போமென அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. பார்த்த மாத்திரத்தில் அது அவளாக மட்டுமே இருக்க முடியுமென உறுதியாக நம்பியவன், சனத்திரள் மிகுந்த அப்பகுதியிலிருந்து அவளைப் பின்தொடர்ந்தான். பிய்த்து ஒட்டவைக்கப்பட்ட பொம்மைகளின் முகங்களாய் அவ்வளவு பெரிய வீதி முழுக்க இடைவெளியின்றி அடர்ந்து கிடந்தன மனித முகங்கள். தன்னோடு தூக்கி வந்த வனத்தின் வாசனையை சிறிது சிறிதாய் கசியவிட்டிருந்தவள் பதிலியாய் இங்கிருந்த இத்யாதிகளின் வாசனைகளைத் தன்வசப்படுத்தி விட்டிருந்தாள்.


இவனால் பின்தொடரப்படுகிற பிரக்ஞை எதுவுமின்றி ஒரு கையில் கனத்த பொதியுடனும் இன்னொரு கையில் குழந்தையை அணைத்தபடியும் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தவளிடம் திரும்பிச் செல்வதற்கென நேரம் அதிகம் மிச்சமிருந்திருக்கவில்லை. போதுமான இடைவெளியில் பணத்தைச் சரிபார்த்துக் கொண்டதுடன் நேரத்தையும் கவனித்து சலித்துக் கொண்டது அவளுக்குத் தவிர்க்க இயலாததாயிருந்தது. உயிரற்ற மீன்களென ஆங்காங்கே சிதறிக்கிடந்த தண்ணீரில் முகம் பார்த்துக்கொள்ள முடியாவிடினும் செருப்பில்லாத கால்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள முடிந்ததில் சந்தோஷமில்லாமலில்லை. தன் கால்களை விடுவித்துக்கொண்டு கடந்து செல்கிறவளைத் தொடர்ந்தவன் இச்சந்திப்பிற்கிடைப்பட்ட மூன்று மாத கால நாட்களின் தடயங்களையும் விட்டுச் செல்கிறாளாவென கவனித்தபடி வந்தான்.


மெச்சத் தகுந்தபடியான மாற்றமெதையும் பார்க்க முடியாத அவளிடம் சமீபித்துப் பார்க்க முடிகிறபொழுது வளையமற்ற மூக்கும் சன்னமாகப் பெருத்திருக்கும் உடலையும் ஒரு வேளை அவன் வேறுபடுத்திக்கொள்ள ஏதுவாயிருக்கும். சிறிய திருப்பமொன்றில் அவளுருவம் தொலைந்த பொழுது உடலில் நரம்புகள் முறுக்கேறிக்கொண்டு அவசரமாய் ஓடச் செய்தன. இரைச்சலான தெருவின் முடிவில் துவங்கிய கழிவு நீரடங்கிய சிறிய சந்தினுள் ஏமாற்றத்துடன் பார்வையைச் சுழலவிட்டவனின் கண்களில் எச்சரிக்கை உணர்வுகள் எதுவுமின்றி சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவளின் உருவம் தெரிந்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்ட நிம்மதியில் வெவ்வேறான வீச்சமிகுந்த அச்சந்தினுள் பதுங்கி அவளைத் தொடர்ந்தான். நிச்சயமாக அவள் தொலைந்துவிடப் போவதில்லை யென்கிற நம்பிக்கைக்கு வந்துவிட்டவனுக்கு அவள் ஏறக்கூடிய பேருந்து குறித்தும் இறங்கக்கூடிய நிறுத்தம் குறித்தும் தெளிவானதொரு அனுமானமிருந்தது.


மலைமுகட்டின் கிராமமான அவளுக்குக் குறிப்பிட்ட அளவிலேயே பேருந்து வசதிகளிருக்கின்றன என்பதால் நேரங்கணித்து அவசரமாய் விரைந்து கொண்டிருந்தாள். வாங்கிய பொருட்களுடன் பேருந்தில் இருக்கை கிடைக்க வேண்டி பேருந்து நிலையத்திற்கு முந்தைய நிறுத்தத்தில் ஏறிக்கொண்டவள் சிதிலமுற்ற சன்னலோர இருக்கையைப் பிடித்துக் கொண்டாள் கடும் போட்டிக்கு மத்தியில். கைக்குழந்தையொன்றைக் கொண்டிருந்ததில் கிடைத்த வாய்ப்பாகவோ நம்பமுடியாத திரட்சியிலிருந்த இவள் முலைகளின் மீதிருந்த ஈர்ப்பினாலோகூட இது நிகழ்ந்திருக்கலாம்.


சரியாக இப்பேருந்தினைக் கவனித்து அவனும் ஏறிக்கொண்ட பொழுது இருக்கைகளெதுவும் இவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. ஒரு வகையில் ஏதுவானதுதானென்கிற மகிழ்வுடன் நகர்ந்து இவளிருக்கைக்குப் பின்பாக நின்றுகொண்டான். கனத்த ஸர்ப்பமொன்று ஊர்ந்து நகர்வதைப் போல் மிக மெதுவாக நகரத்துவங்கிய பேருந்தில் தனித்துப் பார்க்க முடியாத சப்தங்களும் வாசனைகளும் அடர்ந்திருந்தன. இரைச்சல்களுக்கு மத்தியில் தற்செயலாக தலை திருப்பிப் பார்த்தவளுக்கு மிகச்சில நொடிகளுக்குள்ளாகவே நினைவின் ஓரத்தில் சிறியதாய் ஒளிந்திருந்த இவனுருவம் உறுதியாகிவிட ஒரே சமயத்தில் பதற்றமும் கோபமும் கொண்டவளாய் குழந்தையை இறுக அணைத்தபடி மார்பை மறைத்தாள்.


அவளின் கவனிப்பை எதிர்பார்த்திருந்தவன் தானெனினும் பதற்றம் மிகுந்த அவளின் தடுமாற்றங்களில் குழம்பியவனாய் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றும் முடிந்தால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ள வேண்டுமென்றும் நினைத்தான். அசைவின்றி நீண்ட நேரமாய் இவளுருவை உள்வாங்கியிருந்த விழிகளால் சட்டென சமன் நிலைக்குத் திரும்ப முடியவில்லை. அங்குமிங்குமாக சிதறியோடிய கருவிழிகள் குளிர்ந்த காற்று பேருந்தினுள் புகுந்து நிறையத் துவங்கிய வேளையில் இலகுவாய் மீண்டும் தம் பழைய நிலைக்குத் திரும்பின. நிதானமுற்றவனாய் முழுமையாக அவளை உள்வாங்கிக் கொள்கிற தன்மைக்கு வந்து விட்டிருந்தவன் அவளுடனான முதல் சந்திப்பினை நினைத்துக்கொள்ளத் துவங்கினான்.

2

புறவுலகின் நீள் மௌனத்தில் அவ்விரவினை நனைத்துக் கொண்டிருந்த பனித்துளிக்கு சில்லிட்டுப் போயிருந்தன குறைவான எண்ணிக்கையில் அப்பேருந்து நிலையத்திலிருந்த உடல்கள். உள்ளங்கை விறைத்து கனத்துப் போனதின் இறுக்கம் தளர்த்த வேண்டி இரண்டாவதாக தேநீர் வாங்கி அருந்தியவனுக்குப் பேருந்து வரக்கூடிய நேரம் திட்டவட்டமாகத் தெரிந்திருக்கவில்லை. மனித நடமாட்டம் குன்றிய மலைப்பகுதி கிராமங்களில் முதல் முறையாக சுற்றப் போகிற பரவசம் இவனுக்குள்ளிருந்தாலும் அதன் பொருட்டு தான் எதிர்கொள்ள நேர்ந்த துயரங்கள் குறித்த வருத்தங்களிருந்தன. வியாபாரத்திற்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்த துணி மூட்டையில் பனி பொழிந்து மேலிருந்த பாலிதீன் கவர் முழுக்க நீர்க் கோடுகள் ஓடி வழிந்து கொண்டிருந்தன. முப்பது வயதிற்குள்ளாகவே ஆறேழு வியாபாரங்களை முயன்று வெற்றிகரமாகத் தோல்விகளைச் சந்தித்திருந்தவனின் மனம் தளர்ந்து விடாத வண்ணம் நண்பர்களும் தெரிந்தவர்களும் இந்த யோசனையைக் கூறினார்கள். ஒவ்வொரு பொருளையும் விற்பதற்கான நுணுக்கமான யுத்திகளைத் தெரிந்து வைத்திருந்தவனுக்கு, துணி வியாபாரத்தின் நுட்பங்கள் மட்டும் அவ்வளவு எளிதில் பிடிபடுவதில்லை.


எந்தப் பொருளுக்கு எவ்வளவு லாபம் வைத்து விற்பது என்கிற அடிப்படை புரியாதவனாய் நாற்பது ரூபாய் லுங்கியை முப்பத்தைந்து ரூபாய்க்குக் கொடுப்பவனாய் இருந்தான். விற்கும் பொருட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து லாபம் பார்த்துவிடுதல் சாத்தியமென்கிற நம்பிக்கையில் துவக்கத்தில் இது போன்று செய்து கொண்டிருந்தவன் தினந்தோறும் வியாபாரம் முடிகிற வேளையில் சில நூறு ரூபாய்களை முதலீட்டிலிருந்து இழந்து கொண்டிருப்பதை உணர்ந்ததும் சில நாட்கள் பொருட்களின் விலையை இரண்டு மடங்காக வைத்து விற்றான்.


இவன் எதிர்பார்த்திருந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் கவனமற்றவர்களாய் இல்லாதிருந்ததால் சில நாட்கள் வியாபாரத்திற்குச் செல்வதை நிறுத்தி விட்டிருந்தான். நாடோடிகளைப் போல் துணி மூட்டைகளை எடுத்துக்கொண்டு நெடுநாட்கள் சுற்றி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டவன் அதே வழியினைப் பின்பற்றுவதென மொத்தமாகக் கொள்முதல் செய்துகொண்டு பரிட்சார்த்தமாக ஒருமுறை வியாபாரத்திற்குச் செல்ல உவப்பான தீர்வு கிடைத்திருந்தது. அனுபவத்தின் வாயிலாக அவன் தெரிந்து கொண்ட யுத்திகளையும் இம்முறை சரியாகப் பயன்படுத்தியதால் நெடுநாட்களாய் எதிர்பார்த்திருந்த ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்து விட்டிருந்தான். வெவ்வேறான நிலப்பகுதிகளில் வெவ்வேறான மக்களுடன் பழக நேர்ந்ததில் வியாபாரத்துடன் வாழ்வினைப் பற்றிய புரிதலும் வந்துவிட்டிருந்தது. தேர்ந்த வியாபாரியாவதற்கு நாடோடியான மனநிலை வேண்டுமென இவன் சொன்னதைக் கேலிக்குரியதொன்றாகவே அரிதாக இவனுடன் வியாபாரத்திற்கு வரும் நண்பர்கள் பார்த்தனர்.


சில வாரங்களுக்கு ஒரு முறை ஊருக்குத் திரும்புகிற வழமை சில மாதங்களை தள்ளிப் போகத் துவங்கியது. தேசாந்தரம் போய்விட்டதாக ஊர்க்காரர்கள் பேசத்துவங்கியதைப் பொய்யாக்குகிற விதமாய் இவனின் வருகை நிகழ்ந்தாலும் ஒன்றிரண்டு தினங்கள் மட்டுமே ஊரிலிருப்பவனாயிருந்தான்.


வெவ்வேறான நிலங்களில் உண்டு உறங்கி சுற்றப் பழகியவனுக்கு அந்நிலங்களின் மொழிகளும் லாகவமாக வசப்பட்டுப் போயிருந்தன. பருவ காலங்களைக் கணித்து பொருட்களை வியாபாரத்திற்குத் தேர்வு செய்வதைப்போல் இவன் நிலப்பகுதிகளைத் தேர்வு செய்யத் துவங்கினான். வருடம் முழுக்க வெயில் விரிந்து கிடக்கும் கந்தகத்தின் நெடியும் சுவையும் மிகுந்த இவன் பிறந்த நிலப்பகுதியில் உச்சபட்சமான குளிரிலுங் கூட மெல்லிய வெக்கையே ஓடிக்கொண்டிருக்கும். இருபத்தியெட்டு வயதில் முதல் முறையாகத் தீவிரமான குளிரைக் கண்ட தேசத்தின் ஒரு மலைப் பகுதியில் அனுபவிக்க நேர்கையில் புதிய பருவ நிலையில் பரவசம் கொள்ளும் பறவையாய்க் குதூகலித்தான். குளிரும் அதிகுளிரும் கொஞ்சமாக வேனிற்காலமும் அவனுக்குப் பிடித்தமானவைகளாக மாறியிருந்ததில் குறிப்பிட்ட சில நிலப் பகுதிகளை அவன் மிகுதியாக விரும்பினான்.


மங்கலான நிறங்களில் விளக்குகளெரிய ஒன்றிரண்டாக வரத் துவங்கியிருந்த பேருந்துகளில் உறங்கிக் கிடந்தவர்களின் முகங்களில் பல நூற்றாண்டுகளின் உறக்கங்கள் மிச்சமிருந்தன. கலைக்க முடியாத அவர்களின் உறக்க பிம்பத்திற்குப் பின்னால் சிறியதும் பெரியதுமாய் வெவ்வேறு வடிவங்களிலான கனவுத்துகள்கள் ஈரக்காற்றில் பறந்து கொண்டிருந்தன. இவன் செல்லவேண்டிய ஊருக்கான பேருந்து அறுதியிட்டுக் கூறமுடியாத வயதின் பழமையோடு அங்கு வந்து சேர்ந்த நிமிடத்தில் நீண்ட நேரக் காத்திருப்பிற்கான பரபரப்புகளின்றி ஏறிக்கொள்ளத் துவங்கியது ஜனக் கூட்டம். கண்ணாடி ஜன்னல்கள் அடைக்கப்பட்ட இதமான வெப்பத்தில் சில நிமிடங்கள் இருக்கைகளோடு பொருத்திய உடலை யாவரும் சுகமாக உணர்ந்தனர். சில நிமிடங்களுக்குப் பின்பாகத் துவங்கிய பேருந்தின் இயக்கத்தோடு சிறு சிறு துளைகளின் வழி கசிந்து வந்து சேரத்துவங்கிய ஈரக்காற்று, அந்த சில நிமிட சுகத்தினை மாற்றி இருக்கையின் அருகாமை உடலின் வெப்பத்தினை நாடச் செய்தது. சற்று வசதியாக அமர்ந்து கொள்ளவேண்டி பின்வரிசை இருக்கை ஒன்றினுள் சாய்ந்து கொண்டவன் பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு நீல நிறத்தில் இரண்டு விளக்குகள் மட்டும் ஒளிர்ந்த வெளிச்சத்தில் அப்பேருந்தை முழுமையாக ஒருமுறை கவனித்தான்.


ஒவ்வோர் இருக்கையின் விளிம்பிலும் உட்கார்ந்திருந்தவர்களின் உடல்களிலும் படர்ந்த நீல நிறம் மந்தமான பிரகாசத்தில் விளங்கிக்கொள்ளவியலாத கவர்ச்சியாய் இருந்தது. கண்களை மூடிக்கொள்ள விருப்பமின்றி நிதானித்து ஒவ்வோர் இருக்கையாய் பார்வையைச் சுழலவிட்டவனுக்குக் குழந்தையொன்றின் விம்மலில் நினைவு கலைக்கப்பட எதிர்வரிசை இருக்கையைத் தெளிவாகக் கவனித்தான். சுத்தமாக வழித்தெடுக்கப்பட்ட தேங்காயோட்டின் வழவழப்புடன் குழந்தையொன்றின் தலை எதையோ வேண்டி முண்டிக் கொண்டிருந்தது.


அதன் தலையின் அளவிற்கும் சற்று அதிகமான திரட்சியில் உருண்டிருந்த சதைக் கோளத்தினை வெறும் முலை மட்டும்தானென முதலில் அவனால் நம்பியிருக்க முடியவில்லை. ரவிக்கையை சிரமத்தோடு தளர்த்தி ஒரு கையால் பரவசத்தோடு தன் முலையை அவள் ஏந்திக்கொடுத்தது அற்புதமானதொரு சிற்பத்தினை நினைவுபடுத்துவதாயிருந்தது. விழிக்கோளங்கள் துடிக்க தடுமாறிப் போனவனாய் அவ்வுடலில் கரைந்து விட்டிருந்தவன் தன்னை யாரும் கவனிக்கிறார்களாவென ஒருமுறை தலையைச் சுழற்றிப் பார்த்துக்கொண்டான், சலனமில்லை. அவளும் அவளருகில் தாயென்றோ மாமியாரென்றோ மதிக்கும்படியான தாட்டியான இன்னொரு பெண்ணையும் தவிர்த்து அந்தக் குழந்தையுடன் வந்தவர்கள் வேறு ஒருவருமில்லை.


ஒழுங்கு செய்யப்படாத வெவ்வேறு வடிவ உறுப்புகளாலான அக்குழந்தையின் உடலுக்குள்ளாக மெல்ல மெல்ல தன்னைக் கரைந்து போகச் செய்தவன், மொத்தப் பிரக்ஞைகளையும் இழக்கத் துவங்கினான். காட்டமான தாய்ப்பாலின் வாசனையை சற்றுத் தள்ளியிருக்கும் பொழுதே சுவாசிக்க முடிந்ததில் வனமிருகமொன்றின் பிம்பமாகவே அவளைப் பார்த்தான். குழந்தையின் இதழ்கள் கவ்விக்கிடக்கும் முலை தன்னுடையது தானென்கிற பிரக்ஞை துளியுமற்றவளாய் இருக்கையில் தலை சாய்த்து உறங்கத்துவங்கியவள், இரண்டு முலைகளிலும் மாறி மாறி குடித்தும் தீராத வேட்கையோடு இன்னும் சப்பிக்கொண்டிருக்கும் தன் குழந்தையின் புதுவிதமான நடவடிக்கையில் அச்சம் கொண்டவளாய் உறக்கம் கலைந்து போனாள். கண்கள் உருள அவளின் ஒட்டுமொத்தமான உடலையும் வெறித்துப் பார்த்தபடி சப்பிக்கொண்டிருந்த குழந்தை எவ்வளவு விலக்கியும் பிரியாமல் மேலும் அவளோடு நெருங்கிக் கொண்டிருந்தது.


உருண்டு நகரும் அக்கண்கள் நிச்சயமாக தன் குழந்தையினுடையதாக இருக்க முடியாதெனத் தோன்ற தற்செயலாக தலையைத் திருப்பி இவனைப் பார்த்தவள் சவமொன்று தன்னை நுகர்ந்து கொண்டிருப்பதும் நிஜம் புரிந்தவளாய் அவசரமாக ரவிக்கையை இழுத்துவிட்டுக் கொண்டாள். துணியால் மூடப்பட்ட சில நொடிகளுக்குப் பின்னும் அத்தனை பெரிய முலைகளை உணர முடிந்தவனுக்குத் தான் கவனிப்பதில் அருவருப்புக் கொண்டிருக்கிறாளென்கிற பிரக்ஞையில் பார்வையை விலக்கினான்.அவளுடலைப் பிரிய மறுத்து அடம் பிடித்த குழந்தை நிசப்தமாகக் கண்களை மூடி, உறங்கத் துவங்கியது. பேருந்தின் இயக்கத்தினை மட்டுமே உணரமுடிந்த நிசப்தமான அந்த நிமிடத்தில் நீண்ட நேரமாய் மறந்து போயிருந்த இப்பயணத்திற்கான நோக்கம் நினைவிற்கு வர இயல்பாகத் தன் துணி மூட்டையின் மீதான கவனிப்பிலாழ்ந்தான்.


பச்சை நிறத்தில் அவளணிந்திருந்த முரட்டு ரவிக்கையில் முலைப் பாலின் ஈரம் பெரும் புள்ளியாய் ஊர்ந்து வளர்ந்து கொண்டிருந்ததை இன்னும் முலை உறிஞ்சப்படுவதின் அறிகுறியாகவே பார்த்தாள். ஒரே சமயத்தில் தீவிரமான காமத்தின் வேட்கையையும் பெரும் பசியுடைய குழந்தையின் தவிப்பையும் கொண்ட அவன் பார்வையில், பெரும் மரங்களின் வசீகரமிருந்ததைத் தாமதமாகவே கவனித்தாள். தொடர்ந்து அவனைக் கவனிப்பதைத் தவிர்த்தவள் தலை தாழ்த்தி உறங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தையையும் ஈரமாகிக் கொண்டிருக்கும் ரவிக்கையையும் கவனிக்கையில் அவன் விழிகளிலிருந்து விடுபடும் நீள்கோடுகள் தன்னுடலில் குட்டி ஸர்ப்பங்களாய் ஊர்வதாகத் தோன்றியது.


ஒன்று பத்தென ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ஸர்ப்பங்கள் அவளுடலில் ஊரத் துவங்கிய பொழுது ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தையையும் தன் முலைகளையும் அறுத்து வெளியில் எறிந்து விடலாமென்ற நிலைக்கு வந்து விட்டிருந்தாள். அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறத்துவங்கிய பயணிகளோடு அதிகாலையின் சூரிய வெளிச்சமும் அப்பேருந்தினுள் நிறைய, அவளுடல் இவன் பார்வையிலிருந்து பிற உடல்களால் மறைக்கப்பட்டு விட்டது. ஈரங்குடித்த மரங்களும் அடர்த்தியான செடிகளும் மிகுந்த ஓரிடத்தில் இறங்கியவளுக்குப் பின்புறம் உடனடியாக இறங்கிவிடுகிற துணிச்சல் அவனிடமில்லை. மனித இருப்பிற்கான அடையாளங்கள் துளியுமில்லாத அவ்விடத்திலிருந்து மிகச் சில நொடிகளுக்குள்ளாகவே அவளுருவம் சென்று மறைந்தது.


3


நினைவு பிறழ்ந்தவனாய் இவ்வனத்திற்குள் அவன் வந்து சில நாட்கள் கழிந்துவிட்டிருந்தன. நெருக்கமான வீடுகளைக் கொண்ட அச்சிறு கிராமத்தில் தமிழும் கன்னடமும் கலந்து பேசிய மக்கள் இவனைப் பற்றிய கதைகளை அச்சத்தினாலும் அனுமானங்களினாலும் வெவ்வேறானவைகளாகக் கொண்டிருந்தனர். ஒரு அதிகாலையில் சிறு மூட்டையுடன் இவ்வூருக்குள் அவன் வந்த பொழுது அவ்வூருக்கு வந்த முதல் வியாபாரியான இவனை மக்கள் வியப்போடு பார்த்தனர். மிகுதியாகத் தங்களிடம் மிஞ்சும் தானியங்களையும் மலை ஆட்டு ரோமங்களையும் தவிர்த்து எதுவுமில்லாதவர்களுக்கு வாழ்வாதாரங்களுக்கு வேண்டியவை எல்லாம் போதுமானதாயிருந்ததுடன் வெளியுலகம் விரும்பும் ஆடம்பரங்களெதுவும் வேண்டியதாயில்லை.


மாதத்தில் சில நாட்கள் மலையை விட்டு இறங்கிச் செல்கையில் உடுத்திக் கொள்ளும் பொருட்டும், ஆரம்பக் கல்விக்காகச் செல்லும் இவர்களின் குழந்தைகளுக்காகவும் உடைகள் தேவைப்பட்டன. துணி வியாபாரியான இவனிடம் அபரிமிதமாக அன்பை வெளிப்படுத்திய அவர்களைப் பற்றிய கவனிப்புகள் இவனிடம் குறைந்து விடத் துவங்கின. அது வியாபாரம் என்பதையும் தாண்டி தோரணங்களற்ற சிறு கொண்டாட்டமாய் மிளிர்ந்தது. நேரங்காலந்தாண்டி அவனோடு கதை பேசி சிரித்துக் கொண்டிருந்ததில் முக்கால்வாசிக்கும் மேல் பெண்களே இருந்தனர். பாக்கு மட்டைகளில் தங்களின் விருந்தாளிக்கு அவர்களித்த உணவில் வனத்தின் அடர்த்தியும் முலைப்பாலின் சுவையும் பெருகி வழிவதாகத் தோன்றியது. சற்றுத் தள்ளி இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவளின் வேண்டுதல் முழுக்க அவன் கிளம்பிச் செல்லும் நிமிடத்தின் மீதான விருப்பமாகவே இருந்தது.


வெகு நாட்களுக்குப் பிறகு அவ்வூருக்கு வந்த வேற்று மனிதனான இவனை அன்றைய தினம் அங்கேயே தங்கச் சொன்னதில் அவ்விரவு நோக்கிய நகர்தல் பெரும் துயரமானதாக அவளுக்குத் தோன்றியது. வெவ்வேறு வேலைகளாய் வனத்திற்குச் சென்றிருந்த அக்கிராமத்தின் ஆண்கள் திரும்பி வந்து இவனிடம் பேசிய பொழுது வெளிப்பட்ட சினேகத்தினை முன்பு ஒரு போதும் அவன் கண்டதில்லை. ஒவ்வொரு நாளும் தங்களின் வாழ்முறை கண்ணுக்குத் தெரியாதபடி மாறி வருவதை வருத்தத்தோடு கூறியவர்கள், இவனம் முழுக்கவுமே வேட்டையாடுகிற வழக்கம் இன்று குறுகிப் போய்விட்டதென்றனர். மரங்களின் நெடும் சுவாசத்தில் கடும் பச்சையான அவ்விரவினைத் தங்களின் சொற்களால் நிரப்பிக் கொண்டிருந்த இவர்களின் உரையாடலுக்குப் பின்னால் உறக்கமற்றுத் தவிக்கும் ஒரு பெண்ணின் கொடும் அவஸ்தை சுற்றியபடியேயிருந்தது. மிகச் சில நிமிடங்களேனும் அவளருகாமையில் தன்னுடலைக் கிடத்திப் பார்க்க வேண்டுமென இவனின் அடிமன விருப்பம் ஒவ்வொரு சாமம் கழிகிற பொழுதும் மிகுதியடைந்து கொண்டிருந்தது. உறக்கத்தின் விளிம்பிலிருப்பதான தோற்றம் அவனிடம் பேசிக்கொண்டிருந்த ஒருவருக்குமில்லாததால் வலிய உறக்கத்தினை வரவழைத்துக் கொண்டவனாய் அவர்களிடமிருந்து சிறு பிரிவை வேண்டினான்.


மூங்கிலால் பின்னப்பட்டிருந்த இவனது படுக்கையில் மேற்கூரையின் வழியாய் மென்மையாகக் கசிந்த நிலவின் வெளிச்சமும், அவ்வறையின் தென் மூலையில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சமும் மஞ்சளும் இளஞ்சிவப்பும் கலந்த நிறமாய் அவ்வறையில் ஊடுருவிப் பெருகியிருந்தது. சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் சுவாச சப்தம் தொடர்ச்சியான இடைவெளியில் அற்புதமான ராகமாய் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்களின் சப்தமும் மெதுவாக நின்றுவிட்டிருந்தது. உறக்கம் கொள்ளவியலாத ஓநாயாய் அலைவுற்றுக் கொண்டிருந்த இவன் கண்களும் மனமும் சூழலை மிகத் தீவிரமாக அனுமானித்தபின் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டவன் பூனைகளின் லாகவத்தோடு அவ்வீட்டிலிருந்து வெளியேறினான். வினோதமான சாம்பல் கலந்த இந்த வெளிச்சத்திற்கு இன்னும் பழகியிராத இவன் கண்களால் வெறுமனே குடிசைகளின் சாயலை மட்டுமே பார்க்க முடிந்ததேயன்றி குறிப்பாக அவளின் வீட்டினை அறிந்து கொள்ள முடியவில்லை.


தான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து எவ்விடத்தில் தோராயமாக அவள் குடிசையிருக்குமென மனதிற்குள் வரையறுத்துக்கொள்ள முயன்றான். தெளிவானதொரு பிம்பம் கிடைத்துவிடாதபொழுதும் மிக மெதுவாக நடந்து செல்லும் பட்சத்தில் பிரத்யேகமான அவளின் வாசனையைக்கொண்டே குறிப்பிட்ட வீட்டைக் கண்டுகொள்ள முடியுமென்கிற நம்பிக்கையில் நடக்கத் துவங்கினான். ஒழுங்கற்றதொரு வட்டத்தில் முன்னும் பின்னுமாய் குடிசைகள் அமைக்கப்பட்டிருந்த கிராமத்தினுள் நடக்க நடக்க ஒரே இடத்திற்கு வந்து கொண்டிருந்தானேயன்றி அவளின் வீட்டினை நெருங்கியிருக்க முடியவில்லை. இரவிற்கான நிறம் மிக வேகமாக மாறத் துவங்கி விட்டிருந்த பொழுதுதான் முன்னிரவில் ஒரு பெரியவர் புதிதாக இங்கு வருபவர்கள் குறிப்பிட்ட ஒரு குடிசையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் தப்படிகளைக் கொண்டோ வீட்டின் அமைப்பின் மீதான அனுமானங்களைக் கொண்டோ கண்டுபிடித்துவிட இயலாது' எனச் சொன்னதை நினைவுபடுத்திக் கொண்டான்.


துரதிர்ஷ்டவசமாக அவளின் வாசனையும்கூட பிடிபடாததொன்றாயிருந்ததில் கடுமை வெறுமையினை உணர்ந்தவன், குழம்பிய மனதுடன் விட்டான். அதிகமாகப் போனால் இருபது குடிசைகள் மட்டுமே கொண்ட அக்கிராமத்தின் அமைப்பு, நால்வட்டப் பாதையில்ஒழுங்கற்று அமைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ள முடியாதவன் வீதிகள் தொடரும் பாதையிலிருந்து விலகி உயரமான செடிகள் அடர்ந்த வனத்தினை நோக்கி நடந்தான். இவனுக்கு எதிர்த்தாற் போல் வெளிச்சமான இரண்டு புள்ளிகள் நகர்ந்து வருவது கண்டு முதலில் வனமிருகமொன்றென நினைத்துத் தயங்கி நின்றவன், அருகாமையில் வரத்துவங்கிய கணத்தில் பழக்கப்பட்ட வாசனையைக் கண்டு கொண்டு தடுமாறிப் போனான்.


உடல் நரம்புகள் அதிர்வுகளால் சிதறி மயிர்க்கால்கள் எழுந்து கொண்டன. தடுமாற்றத்திலிருந்து மீண்டிருக்காதவளாய் விரகம் பெருகியோடும் இவன் கண்களை சில நொடிகள் கூட நேரடியாக அணுக முடியாமல் பார்வையை விலக்கிக் கொண்டாள். முரண்பாடான அவ்விரு உடல்களும் சொற்களைத் தேடியபடி உரையாடலைத் துவக்குவதற்கான வார்த்தைகள் கிடைக்கப் பெறாதவர்களாய் வெவ்வேறு திசைகளில் பார்வையைத் திருப்பிக் கொண்டனர். அடர்த்தியான அவ்விருளிலும் கூட ஈரம் மிகுந்த அவள் ரவிக்கையின் வசீகரத்தினைப் பார்க்க முடிவதாகத் தோன்றியவனுக்கு கழுத்திலிருந்து பிரியும் அவளுடலில் வன தேவதைகளின் சாயலே தெரிந்தது. அவ்வுடலின் ஒவ்வொரு திசுவையும் நுகரத் துவங்கியவன் மெதுவாக காற்றில் கரைக்கப்பட்ட அமிலம் போல் அவளுடலைச் சுற்றி தன் நாசியைப் படரவிட்டான்.

நூறாயிரம் சிறு ஊசிகள் தன்னுடலில் குத்தப்பட்டுக்கொண்டிருப்பது வலி தோய்ந்ததொரு சுகானுபவமாய்ப் பரவியதில் மெல்ல லயிக்கப் போனவள் தன்னுணர்வு பெற்றவளாய் தன் மார்புகளை அழுத்திப் பிடித்துக்கொண்டு பின்னோக்கி நகர்ந்தாள். ‘இனியொருபோதும் திரும்பி வரவேண்டா’ மெனக் கூறிவிட்டு இருளில் கடந்து மறைந்த பின்னும் அவளிருந்ததற்கான தடயங்களாய் ஏராளமானவைகள் அவ்விடத்தில் எஞ்சியிருந்தன. ஆடை களைந்து அவ்விடத்தில் விழுந்து புரண்டவனின் உடலிலிருந்து கசிந்த வெப்பத்தில் உலர்ந்து போகத் துவங்கியது பனி விழுந்த புல்வெளி. நெடும் மூச்சுகளோடு வழிந்த உயிர்த்துளிகளின் ஜீவ மனத்திலும் அவள் முலைப் பாலின் மணமே வந்ததில் தன்னுடலின் சுயத்தை இழந்துவிட்ட அச்சம் கொண்டான்.


மரங்களுக்குப் பின்னிருந்து வெளிப்பட்ட அதிகாலைவெளிச்சத்தில் விழித்துக்கொண்ட ஊர்க்காரர்கள் இவனில்லாததில் கவலை கொண்டவர்களாய் தேடி வருகையில் பாதி நிர்வாணமாய்க் கிடந்த இவனுடல் இளம் பச்சை நிறத்திற்கு மாறிவிட்டிருந்தது. வௌவாலின் மல வாசனையை ஒத்திருந்த அவன் சுவாசத்திலிருந்து, நிகழ்ந்து விட்டிருப்பதை அனுமானித்துக்கொண்ட பெரியவர்கள் அவனாக எழும் வரை தொந்தரவு செய்ய வேண்டாமெனக் கூறி தூக்கி வந்து மீண்டும் குடிலுக்குள் போட்டனர்.


உச்சிப் பொழுதை எட்டுகிற வேளையில் விழித்துக் கொண்டவனின் மங்கலான நினைவில் முந்தைய தினத்தின் இறுதிக் கணங்களெதுவும் சுத்தமாய் இல்லாதிருந்தது. உடலின் மாற்றத்தினைத் தெரிந்து கொள்ளாமலேயே உடை மாற்றிக்கொண்டு வெளி வந்த பொழுது முந்தைய தினம் வெகு இயல்பாக அவனுடன் உரையாடிய அத்தனை பேரின் முகத்திலும் கடும் அமைதியே நிலவியிருந்தது. விடைபெறுவதற்காகப் பேசிக்கொண்ட ஒரு சில வார்த்தைகளிலும் பெருந்துயரொன்றினை நெருங்கிக் கொண்டிருப்பவர்களின் வேதனைகளாகவே இவர்களின் குரலிலிருந்தது. இவன் புறப்பட்டுச் செல்வதைத் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு முந்தைய தின அசம்பாவிதங்களுக்குக் காரணம் தான்தானென்கிற உண்மை மற்றவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாதென்கிற பயமிருந்தது.


​யாரும் யாரிடமும் நேரடியாகக் கேட்டுக் கொள்ளாமலேயே அவன் ஊருக்குள் நுழைகையில் பதிவாகியிருந்த மங்கலான சித்திரத்தின் வழி ஒவ்வொன்றாய்ப் புலப்பட்டுக்கொண்டிருந்தது. இரையைத் தேடி வெறிகொண்டு ஓடி வரும் வேட்டை மிருகத்தின் தவிப்பை அவன் கண்களில் முதல் நொடியிலேயே உணர்ந்ததாய் முதியவளொருத்தி கூறியதைக்கொண்டு அவன் பின்தொடர்ந்து வந்த இரையை இவர்களும் அடையாளங் கண்டு கொண்டனர்.


நிகழ்ந்தவை யாவற்றிற்கும் காரணமென இவளின் போக்கினைக் கண்டிக்கும் பொருட்டு இவள் ஊர்விலக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு நாட்களில் வன மிருகங்கள் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் இவளோடு புரண்டு இவளுடலைக் கீறிக்கிழித்தன.


கூர்மையான பற்களால் வேற்று நில ஆண்கள் விரும்பாதபடி கடித்து தடம் பதித்த இம்மிருகங்களுக்கு நிஜமான காரணி எதுவென தெரிந்திருக்கவில்லை. இரண்டுநாட்களிலும் ஓயாது துடித்துக் கொண்டிருந்த இவளின் குரலைக் கேட்டு ஊர்க்காரர்கள் பெரும் தவறின் பயனாகவே இதனை அவள் அனுபவிப்பதாய்ப் பேசிக்கொண்டனர். வீடு திரும்பிய சில நாட்கள் ஒரு நோயாளிக்கான பரிவோடு அவளைக் கவனித்துக்கொண்டனர். தொடர்ந்து சிலநாட்கள் மிருகங்களின் அசைவைத் தன்னுடலில் உணர்வதாகக் கூறி அலறியவள், தன்னுடலை விட்டு அவை ஒருபோதும் நகரப் போவதில்லையென அச்சங்கொண்டாள்.


புகையிலையின் மயக்கத்தின் வழி வரும் நெடும் உறக்கத்திற்கு அவளைப் பழக்கப்படுத்திய பின் மிருக எச்சிலின் வாசனையை மறக்கத் துவங்கியிருந்தாள். இவ்வூருக்கும் வியாபாரியொருவன் வந்து போனதைக் கேள்விப்பட்ட பிற வியாபாரிகள் சிலரும் சிறு மூட்டைகளுடன் அவ்வூருக்கு வந்த பொழுது அம்மக்களிடம் முன்பிருந்த உற்சாகங்கள் எதுவுமில்லை, விருந்தாளிகளாய் யாரையும் இரவுகளில் தங்க வைக்கக் கூடாதென்பதிலும் தீர்மானமாயிருந்தனர். நெடுந்தூரம் செல்லவேண்டிய ஒருவன் தாமதமாகிப் போனதால் ஓரிரவு அங்கு தங்கிக் கொள்வதாகக் கேட்டதையுங்கூட ஒருமுறை மறுக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட பொழுது அவர்களுக்கு வருத்தமாக இருந்ததுதானெனினும் வனமிருகங்களின் ரௌத்திரத்திற்கு ஆட்படக்கூடிய துணிச்சல் அங்கிருந்த பெண்களுக்கில்லை.


கடும் பிணி தொற்று மீண்டு வந்தூக்கூட அவளின் முலைகள் திரட்சியாகவே இருந்ததுடன் மெல்லிய வளர்ச்சியும் ஏற்பட்டுக்கொண்டிருந்ததில் ஒரேயொரு ரவிக்கையும் இறுக்கமாகிவிட்டது. வனத்தைவிட்டு இனி ஒருபோதும் வெளியேறப் போவதில்லை என்கிற முடிவோடு அதனைத் துறக்க முடிவு செய்தாள். ரவிக்கையைத் துறந்த தினத்திலிருந்து பால் குடிக்க மறுத்த குழந்தையை என்ன செய்தும் சமாளிக்க முடியாதவளாய் அதற்காகவென்றே அவ்வப்பொழுது அணிந்து கொள்வதும் அவிழ்த்து விடுவதுமாயிருந்தாள்.சரியாக முப்பத்தியிரண்டு தினங்களுக்குப் பின் மீண்டும் அவ்வூருக்கு இவன் திரும்பி வந்த பொழுது வேண்டா விருந்தாளியாய்த் தன்னை அவ்வூர்க்காரர்கள் எதிர்கொள்வார்களென இவன் எதிர்பார்த்திருக்கவில்லை.


ஒவ்வொருவரும் தங்களிடம் நிலை கொண்டு விட்ட மௌனத்தினைக் கலைத்து விடும் வழிதெரியாதவர்களாய் பிறிதொரு வரைப் பார்த்துக் கொண்டனர். அவன் எதிர்பார்த்து வந்த பிரமாதமான வியாபாரம் இல்லாததுடன் நடந்த வியாபாரமுங்கூட ஒன்றிரண்டு வார்த்தைப் பரிமாற்றங்களுடனேயே நிகழ்ந்தது. ஒருகட்டத்திற்கு மேல் அவர்களின் மௌனத்திற்கான காரணத்தினைத் தானே கேட்டுவிடுவதென தயாரானவன் உடனடியாக இப்படிக் கேட்கிற மனநிலையின்றி, தனக்கு உணவு வேண்டுமென்றான். வேறு ஏதேனும் கேட்டிருப்பின் மறுத்து விடலாந்தானெனினும் சோறு கேட்பவனுக்கு இல்லையென எப்படிச் சொல்வதென குழம்பிப் போனவர்கள் மறுதலிப்பின்றி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு குவளைக் கஞ்சியை முன்பைப் போலவே அவனுக்குக் கொடுத்தனர்.


துவக்கத்திலிருந்த மௌனம் மெதுவாகக் கலையத் துவங்கி சிறு சிறு உரையாடல்கள் நிகழ்ந்த பொழுதே இருள் கவியவும், அவர்களனைவரும் அவன் கிளம்பிச் செல்லக்கூடிய தருணம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். குழப்பம் மிகுந்த இவர்களின் மனநிலையைத் தெரிந்து கொண்டவனாய் வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்பினான். நீண்ட தூரம் நடந்து சென்றவன் தன்னைக் கூர்மையான இரண்டு கண்கள் தொடர்கிற பிரக்ஞையில் திடுக்குற்றவனாய் நினைவற்ற பொழுது வனத்திலிருந்து வெளியேறுவதற்குப் பதிலாக தான் மையப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தான்.


அவசரமாய் சரியான பாதையைக் கண்டு பிடிக்க முயன்றபொழுது தடுமாற்றத்தில் தோல்வியே மிஞ்ச, சோர்வுடன் அமர்ந்தவன் சில நிமிடங்களுக்குப்பின் தன்னிடமிருந்த மூட்டையைத் தூக்கி எறிந்துவிட்டு அப்பாலிருந்த குடிசைகளைப் பார்த்தான், அவ்வீடுகளில் இவள் வீட்டினை மட்டும் இம்முறை தனித்து இவனால் அடையாளங் காண முடிந்தது. முறுக்கேறிய மரத்தின் விழுதுகளில் கண்களை மூடி சாய்ந்து கொண்டவன் உறக்கமும் விழிப்புமற்ற நிலையில் கண்களை மூடிக் கொண்டிருக்கையில் தன்னிடம் வந்திருப்பவனை பரந்த கைகளால் அம்மரம் எடுத்துக் கொண்டது.


கௌலிகளின் குரல் இரைந்த அவ்விரவில் தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு இதழ்கள் சுவைக்கப்படுவதான பிரக்ஞையுடன் புதுவிதமான எச்சிலின் ருசியையும்உணரமுடிந்ததை நம்ப முடிந்திருக்கவில்லை. கண்களைத் திறந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றினாலும் வினோதமானதொரு உணர்வில் லயித்தவளாய் தன்னுடலை அசைத்துக் கொடுத்தாள். எச்சில் வழியும் நீள்நாவொன்று தன் வாய்க்குள் நுழைந்த கணத்தில் நிச்சயமாக கனவில்லையென விழித்துப் பார்த்தவள் குளிரார்ந்த காற்றின் அசைவை மட்டும் கண்டதில் குழம்பிப் போனாள். ஏதோவொன்றின் மாயையென புறமனம் சொல்லிக்கொண்டாலும் தன் வாய்க்குள் நுழைந்த நாவின் ஒருபகுதியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியவில்லை.


மறுபடியும் அவள் உறங்கச் சென்ற சில நிமிடங்களுக்குள்ளாகவே அவளுடலின் மீதான இன்னொரு உடலின் இயக்கம் தன்னைத் தீர்மானமாக வெளிப்படுத்தியது. விம்மித் ததும்பிய முலைகளை ஒட்டுமொத்தமாகத் தின்றுவிட அல்லது அதனுள் தொலைந்து விடத் துடிக்கிற பரிதவிப்பு கொண்ட உடலாயிருக்க வேண்டும், அதிகாலையில் விரிந்திருக்கும் ஆம்பல் பூவைத் திறக்கும் லாகவத்தோடு இவளின் யோனியைத் திறந்து நுழைந்தது. விருப்பத்துடன் கால்களைப் பிரித்துக் கொடுத்தபடியே பிடிமானமாக இரண்டு குழைந்த பாறைகளைப் பிடித்துக்கொள்ள முடிந்ததில் போதுமான நிறைவுற்றவளாய் உணர்ந்தாள். வனமிருகங்கள் கீறியதிலிருந்து மூர்க்கமின்றி நகர்ந்த இம்மிருகத்தின் அசைவில் வழிபாட்டிற்கான அர்ப்பணிப்பிருந்ததில் பூரணமாகக் கண்களை மூடிக்கொண்டாள். பசித்தவிப்பில் தன்னிருப்பை உணர்த்தி அழுத குழந்தை அந்நிமிடத்தின் மொத்த சுகந்தத்தையும் கலைத்தெறிந்து விட்டிருந்தது. விருப்பமின்றி கண்களைத் திறந்து பார்த்தவளின் தொப்புள் வரையிலும் பால் வழிந்தபடியிருக்க இன்னொரு புறம் வலது தொடையின் மேற்புறத்தில் விந்துத்துளிகள் கொஞ்சமாய் உதிர்ந்து கிடந்தன.


அந்தக் கணத்தில் அவ்விடத்தில் புதிதாக ஒருவனின் இருப்பை உணரமுடிந்தும் அதில் அச்சமெதுவும் கொள்ளாதவளாய் தன் முழு நிர்வாணத்தையும் பிரகடனப்படுத்தினாள். அங்கங்களெதுவும் தெளிவாகத் தெரிந்திருக்காத பொழுதும் அவளுடலின் அமைப்பு சிறு சிறு முகடுகளாய்ப் பிதுங்கி நின்றது. குழந்தையை எடுத்துக்கொண்டு மூங்கிலில் சாய்ந்தமர்ந்தவள் ஒவ்வொரு முறை கால்களை விரித்த பொழுதும் காளையொன்றின் வழவழப்பான கொம்புதன்னுடலில் ஊர்வதை அழுத்தமாக உணர்ந்தாள்.


முந்தைய தினத்தின் மாலையில் அங்கிருந்து புறப்பட்டவனின் துணி மூட்டையை ஊருக்கு சற்றுத் தள்ளி கண்டெடுத்தவர்கள் அவனைக் குறித்தான வெவ்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தனர். பின்னிரவில் நீண்ட நேரம் வரையிலும் நாய்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்ததைக் கொண்டு வனமிருகங்களுக்கு இரையாகியிருக்கலாமென்றும், இனியொருபோதும் திரும்புவதில்லையென்கிற வெறுப்பில் ஊரைக் கடந்து போயிருக்கலாமென்றும் பேசிக் கொண்டவர்களுக்கு மறைமுகமாக ஒருபோதும் அவன் திரும்பிவிடக் கூடாதென்கிற தவிப்பேயிருந்தது. அவனால் தூக்கியெறியப்பட்ட துணி மூட்டையைப் போன்றே அவனைக் குறித்தான எண்ணங்களையும் கூடிய விரைவில் தூக்கியெறிய வேண்டுமென நினைத்துக்கொண்டனர்.


வனம் ஒருபோதுமில்லாதபடி தன்னியல்பினை மாற்றிக் கொள்வதாகத் தோன்றியது. நீர் நிலைகள் சாம்பல் நிறமாய் மாறத் துவங்கியதுடன் காற்றிலும் மாமிச வாடை கலந்துவிடத் துவங்கியிருந்தது.முற்றிலும் இச்சம்பவங்கள் மறந்து போவதற்கு முன்பாகவே கண்ணுக்குத் தெரியாத யாரோவொருவரின் நடமாட்டம் ஊருக்குள் மிகுந்துவிட்டிருப்பதை வயதில் பெரியவர்கள் கண்டு சொன்ன போது அது அவனாகத்தான் இருக்க முடியுமென ஊர்க்காரர்களால் சர்வ நிச்சயமாக நம்பியிருக்க முடியவில்லை. பின்பொருநாள் பிற்பகலில் வௌவாலின் நகர்தலைப் போல் சென்ற உருவத்தின் பின்புற சாயலில் துணி வியாபாரியின் சாயலிருப்பதை ஊர்ப்பெண்கள் கண்டு கொண்ட பொழுது அவ்வுருவத்திற்கு நிழலே இல்லாமலிருப்பதைக் கண்டு ஆச்சரியங் கொண்டனர். சமயசமயங்களில் நள்ளிரவுகளில் எதிரொலிக்கும் சிரிப்பொலிகளைக் கேட்க முடிகிற பொழுதெல்லாம் அவன் உயிருடனிருக்கிறானா அல்லது இது அவனது ஆவியாவென குழம்பிப் போனார்கள். இவள் பொருட்டே இவ்வளவும் நடக்கிறதென புரிந்து கொண்டவர்கள் ரகசியமாக இவளைக் கண்காணித்த பொழுது இவளிடம் எந்தவிதமான மாற்றமுமில்லாமலிருந்தது. குறைந்தபட்சம் இதைப் பற்றியானஅக்கறை கொள்வதற்குக்கூட விரும்பாதவளாயிருந்தாள்.


வேனிற்காலம் துவங்கிய நாளொன்றில் வனத்தினுள் முன்பு இவன் சென்ற திசையில் சென்றவள் தன்னை யாரோ தொடர்ந்து வருவதைப் புரிந்து கொண்டபடியே இதழ் திறக்காமல் புன்னகைத்துக் கொண்டாள். நிழலும் வெளிச்சமும் சரிவிகிதத்தில் படர்ந்திருந்த பெரிய மரத்தினடியில் அமர்ந்தவள் தனக்குப் பிரியமான வாசனை அவ்விடத்தில் இடைவெளியின்றி பரவியிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள். ஆசுவாசமாகக் கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் இதழ்கள் லாகவத்துடன் சுவைக்கப் படத் துவங்கிய பொழுது முழுமையான விருப்பத்துடன் அதனை அனுமதிப்பவளாய் மெதுவாகக் கண்களைத் திறந்தாள், அவனேதான். மென்மையான அணுகுதலுடன் தீவிரமான புணர்ச்சியை நோக்கி அவளுடலை நகர்த்தியவன் உடைகளைக் களைந்து தனக்குள் அவளை எடுத்துக்கொள்ளத் துவங்குகையில் முழுமையான அவளின் நிர்வாணத்தினைக் கண்டு தன்னுடலைப் பின்நகர்த்தினான்.


அவளுடல் முழுக்க அப்பிக்கிடந்த கீறல்களையும் தழும்புகளையும் கண்டு இவன் அச்சம் கொள்ள முதல் முறையாக இவன் வந்து போன பின் வன மிருகங்கள் தனக்களித்த தண்டனையைப் பற்றி கூறினாள். இதுவரையிலும் அவன் சேமித்து வைத்திருந்த அவளின் முலைப்பாலின் வாசனைகளை ஒட்டுமொத்தமாக மறக்கடிக்கச் செய்கிறபடி, நிணநீரின் நாற்றத்தினை அவளின் மேல் உணரத் துவங்கினான்.

எவ்வளவு நேரங்கடந்தும் வெளிச்சமோ நிழலோ மாறாமல் ஒரே மாதிரியாய் அவ்விடத்திலிருந்ததைப் போன்றே தடைப்பட்ட அந்தக் கணத்திலிருந்து இவனாலும் அடுத்த நகர்விற்குச் செல்ல முடியவில்லை. மடியிலமர்த்தி வருடிக் கொடுத்துக்கொண்டிருந்தவள் அவ்வளவையும் மறக்கச் செய்ய விரும்பியவளாய் தீவிரத்துடன் அவனைத் தன்னோடு அணைக்க சில நிமிடங்களுக்குப்பின் இயல்பானவன் தனக்கு விருப்பமான அவ்வுடலோடு பிணையத் தயாரானான்.


வனதேவதைகளின் பிரியத்தினில் தன்னுடலை அவனுக்குக் கிடத்தியவளின் அக்குளிலிருந்து காட்டு மலர்களின் நறுமணமும் விருப்பமான திரவமாய் எச்சிலுமிருந்தது. அசைவினூடாக இவளின்பெருமூச்சுகளில் கரையத் துவங்கியவனாய் அவனுடல் சுருங்கத் துவங்கியதைக் குழப்பத்துடன் பார்த்தவள் படிப்படியாகத் தன் குழந்தையாக அவன் மாறத் துவங்கியதில் துயரம் கொண்டவளாய் தன் யோனியை விலக்கிக்கொண்டாள்.


பேரார்வத்துடன் இவளின் முலைப் பாலினை அருந்தியவனை சில நிமிடங்களுக்கு மேல் தன்னுடலில் கிடத்த விரும்பாதவள் இவனை விலக்கி எழுந்து ஓடுகையில் ரவிக்கையை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றாள். உலர்ந்த பாலின் வாசனையை ரவிக்கையில் தீவிரத்துடன் நுகர்ந்தவனுக்கு ரவிக்கையிலேயே தன் முலைகளையும் அவள் விட்டுச்சென்றுவிட்டதாகப் பட்டது. அன்றைய தினம் பாலுக்காக குழந்தையிடம் முலைகளைக் கொடுக்க நேர்கிற சமயங்களில் அதன் குறி விறைத்து தன்னைப் புணர்வதற்கு வந்தபடியே இருந்ததில் துயருற்றவளுக்கு முலைகள் விம்மி மார்காட்டிப் போய் விட்டிருந்தது. சாதாரணமாக இவள் தொடுகையிலும் குறி விறைத்துக் கொள்வதுடன் குழந்தையின் மேல் அவனிடமிருந்த பசும்புல்லின் வாசனை படரத் துவங்கியதில் இவளுக்கு நடுக்கம் கண்டது. சகிக்க இயலாமல் அவ்வனத்தை விலக்கி ஓடிவிடுகிற வெறியுடன் அடர்ந்த மரங்களுக்குள் புகுந்து ஓடினாள்.


ஓநாய்கள் அடித்துப் போட்டு இறந்து போனதாய்ச் சொல்லி மறுநாள் காலையில் அவளுடலை ஊர்க்காரர்கள் கொண்டுவந்து கிடத்திய பொழுது காயங்களெதுவுமற்ற அவளுடல் முழுமையான நீல நிறத்திற்கு மாறிவிட்டிருந்தது. எதுவும் பேசிக் கொள்ளாதவர்களாய் ஊர்க்காரர்கள் இறுதிச் சடங்கிற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கையில் கண்ணுக்குப் புலப்படாத ஒருவரின் அசைவும் கடுமையான முலைப் பாலின் வீச்சத்தையும் நுகர்ந்தவர்கள் கேவிக் கேவி அழும் குரலில் துணி வியாபாரியின் சாயலிருப்பதை ரகசியமாகப் பேசிக்கொண்டனர்.

 

 

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page