top of page

இருளில் தொலைந்துபோனவன்.

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 2 minutes ago
  • 6 min read


( 2008 ம் வருடம் வெளியான சிறுகதை.)


பணி நிமித்தமாய் சொந்த ஊரைவிட்டு அவன் இங்கு வந்திருக்கையில் இருபத்தி நான்கு வயதுதான் ஆகியிருந்தது. முன்புறங்களும் பின்புறங்களும் பருத்து உருண்டு திரண்ட மாநகரப் பெண்களின் உடல்களின் மீதான மயக்கத்தினை முன்பு அவன் உணர்ந்ததில்லை. சொந்த ஊரின் இளம் பெண்களின் மெலிந்த உடல்களையும் கைகால்களையுமே இதுநாள் வரையிலும் பார்த்திருந்தான். இன்னுஞ் கொஞ்சம் சதை போடாதாவென அவர்கள் கொள்ளும் ஏக்கம் பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகாகவே நடக்கக் கூடியதாயிருக்கும். சிலருக்கு அதுவுமின்றிப் போவதுண்டு. மாறாக இங்கு இயல்பிற்கு அதிகமாய் பெருத்துப்போன உடலை சிக்கென வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்வதற்கும் நடைப்பயிற்சிக்குச் செல்வதற்கும் தங்களைப் பழக்கப்படுத்தியிருந்தனர். உடல் எடையினைக் குறைக்க வேண்டுமெனக் கொண்டிருக்கும் அக்கறை முன்புறங்களையும், பின்புறங்களையும் குறைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்வதிலும் இல்லாமலில்லை.


உறவினர் ஒருவரின் சிபாரிசில் மிகப்பெரிய ஸ்டோரில் மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில்தான் அவன் இங்கு வேலைக்குச் சேர்ந்தது. சொந்தச் செலவுகளுக்கே வருமானம் போதுமானதாயில்லை என்பதை விடவும் காமம் வற்றாததொரு ஊற்றைப் போல் பெருகிக் கொண்டிருந்ததுதான் பிரச்சினையாயிருந்தது. கழிவறைக்குச் செல்கிற பொழுதெல்லாம் சுயமைதுனம் செய்கிற எண்ணம் வந்தபடியிருக்க... விரைவில் அதற்காகவே அடிக்கடி கழிவறை சென்று வந்தபடியிருந்தான். எப்பொழுதும் சோர்ந்து போன கண்களும் வறண்ட உடலுமாய் திரிபவனைப் பார்ப்பவர்கள் நோய் பீடிக்கப்பட்டவனாகவே அவனைக் கருதக்கூடும். வெவ்வேறு வாழ்நிலைகளில் எவ்வளவோ பெண்கள் அம்மாநகரில் பெருகிக்கிடந்த பொழுதும் அவன் புணர்வதற்கான வாய்ப்புகள் சிறிதும் வாய்த்திருக்கவில்லை. பணமிருக்கும் பட்சத்தில் தேடிப்போகாலாம் தான், உண்மையில் இதற்கென பணம் ஒதுக்குகிற அளவிற்கு அவனுக்கு வருமானம் இருந்திருக்கவில்லை.


நகரிலிருந்த பிரபலமான பாத்திரக்கடைகளில் அவன் வேலை பார்த்த கடையுமொன்றென்பதால் தினந்தோறும் ஏராளமான பெண்களைக் காணக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்தான்.


பணியில் சேர்ந்து சிலமாதங்கள் கழிந்து போயிருந்தன. ஒரு பின்மதியம் இரண்டாவது தளத்தில் தன்னுடன் இருந்த சிலரை உணவு இடைவேளைக்காக மாற்றி விட்டிருந்தவன் கூடுதலாக இரண்டு பேருடன் மட்டும் சேர்ந்து வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். வாடிக்கையாளர்களும் குறைவாகவே இருந்தனர். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆளொருவர் தாஸ்பான் குக்கரை கொண்டு வந்து பிரித்துக் காட்ட முடியுமாவெனக் கேட்டு நின்றார். நிதானமாக இவன் பிரித்துக் கொண்டிருக்கிற வேளையில் தன் குறியினை ஏதோ வருடுவது போலிருக்க கண்களைத் திருப்பிப் பார்த்தான். அந்த ஆளின் கை மென்மையாய் இவனின் குறியினை வருடிக்கொண்டிருந்தது ஒருவித ஆர்வத்துடன். சற்றுத் தள்ளி நின்று வேறுவொரு பாத்திரத்தினைப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் மனைவி சற்றே பெருத்தவளாகவும் வாளிப்பானவளாகவும் நின்றதைக் கண்டு அவளின் மீது ஒருவிதமான காமம் கலந்த ஈர்ப்பு எழுந்தடங்கியது.


ஸர்ப்பமொன்று ஊர்ந்து நெளியும் லாகவத்துடன் இயங்கிய உள்ளங்கை ஈரமாகும்தருணம் வேண்டி காத்திருக்கக்கூடும். இன்னும் இன்னுமென அசைந்தபடியிருக்க இயக்கத்தினூடாவே ‘உங்க பேரென்ன?’ என இவனைப் பற்றி விசாரித்தார். பதற்றம் நிரம்பிய மனதுடன் என்ன சொல்வதெனத் தெரியாமல் தடுமாறியவனாயிருந்தான். தான் கேட்ட கேள்விகளெதற்கும் பதில் வேண்டுமென்கிற எதிர்பார்ப்புகளற்றவராய் தன் வேலையில் சிரத்தையுடனிருந்தார். மிகச்சில நிமிடங்களுக்குப் ‘பின்பாகவே இவன், பாலகுமார்ங்க’ என தன் பெயரைக் கூறினான். ஏதோவேண்டி அவரின் மனைவி கூப்பிட இவனின் பேன்ட்டிலிருந்து கையை எடுத்துக்கொண்டார். பாதியில் விடப்பட்ட குறி இன்னும் ஆவேசத்துடன் துடித்துக்கொண்டிருந்தது. சில நொடிகள் அவளிடம் பேசிவிட்டு மறுபடியும் இவனிடம் பேச்சுக் கொடுத்தபடியே குறியைப் பிடிக்க எத்தனிக்கையில் அது முக்கால்வாசிக்கும் மேல் சுருங்கிப்போய் விட்டிருந்ததோடு ஒருவிதமான வெறுமையுடன் அவரைத் தவிர்க்க முயன்றான். புரிந்து கொண்டவராய் இவனின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டவர் இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை அவன் சட்டைப் பையில் வைத்தவர், இன்னொரு நாள் பார்க்கலாம் எனச் சொல்லி தன் மனைவி நின்றிருந்த இடத்திற்குச் சென்றார்.


வரும் அழைப்புகளுக்கு மட்டுமே தன் அலைபேசியினை பயன்படுத்திக் கொண்டிருந்தவனுக்கு அந்த இன்னொரு நாள் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே வந்து விட்டது ஆச்சரியந்தான். பிரபலமான தனியார் வங்கியொன்றில் காசாளராகப் பணிபுரிவதாய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் தன் பெயர் ஜெயச்சந்திரன் என்றவர், ‘நீங்க ஜெயாவென்றே அழைக்கலாம்’ என்றார். இப்படிப் பேசுகையில் ஒருவிதமான பெண்தன்மையையே அதில் வெளிப்பட்டிருந்தது அவனைச் சந்திக்க விருப்பமிருப்பதாய்ச் சொன்னதுடன் அன்று மாலை ஸ்டோருக்கும் வந்துவிட்டிருந்தார்.


நீண்ட உரையாடல்களெதற்கும் அவசியமின்றி சில நிமிடங்களிலேயே தன்னுடைய டூவீலரில் அவனை பிக்-அப் செய்து கொண்டபின் வீடிருக்கும் சாலிகிராமம் பகுதியை நோக்கிக் கிளம்பினார்கள். சுய இன்பம் மட்டுமே கலவியின்பமாய் பழகிப் போயிருந்தவனுக்கு இச்சந்திப்பில் சிறியதொரு தடுமாற்றமும் பரவசமும் பொங்கியது. இரண்டு மூன்று வீடுகளாய்க் கட்டப்பட்டிருந்த தொகுப்பு வீடுகளொன்றில் சேர்ந்திருந்தது அவருடைய வீடு. படுக்கையறையில் அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றவர் சில நிமிடங்களுக்குப் பின் திரும்புகையில் தன் மனைவியின் உடைகளை அணிந்திருந்ததுடன் தேர்ந்த ஒப்பனையினையும் செய்தவராய்த் திரும்பினார்.


மீசை மெல்ல அரும்பிய அவரைப் படுக்கையில் அணைத்தவன் அந்த நொடியில் அவரின் மனைவியாக நினைத்துக் கொண்டான். சிவப்பு நிற லிப்ஸ்டிக் பூசிய இதழுடன் இவன் உடல் முழுக்க முத்தமிடுகையில் முன்வழுக்கை விழுந்த தோற்றத்தினையும் மீறி அப்பெண்தான் இவனை ஆக்கிரமித்திருந்தாள். புணர்ச்சி முடிந்து உடை மாற்றிக்கொண்டிருக்கையில் அவளின் புகைப்படம் ஒன்றைப் பார்த்தவன் ஏக்கப்பெருமூச்சு விட்டபடியே வெளியேறிப் போனான். அன்று துவங்கிய இவர்களின் சந்திப்பு அவ்வப்பொழுது நிகழ, ஜெயாவின் பழக்கத்திலிருந்த இரண்டு பெண்கள் விரைவிலேயே இவனுக்கும் அறிமுகமாயினர். அலுவல்கள் ஏற்படுத்தும் சோர்வுகளையும் முப்பத்தைந்து வயதிற்கு மேல் தங்களின் மீதான பிறரின் கவனிப்புகள் குறித்த ஏக்கங்களுமுடையவர்களாய் புதுவகையான இவ்வுறவினை விரும்பியிருந்தனர்.


தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையினை மிகச் சில நாட்களிலேயே விட்டுவிட்டவன் இதனை மட்டுமே தொடர்ந்திடும் பொருட்டு தன் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்திக் கொள்ளும் சூட்சுமத்தினைக் கற்றுக் கொண்டான். தன்னுடன் பேசுகிற உறவு கொள்கிற பெண்களின் வயது தோற்றம் பற்றிய எந்தவிதமான எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொள்ளாததுடன் முடிந்தவரையிலும் தன்னுடைய உடலை சீராகப் பராமரித்துக் கொண்டான். தயக்கத்துடன் தங்களின் வயதைப் பற்றியும் உடலமைப்பில் கொள்ள நேர்கிற ஏமாற்றங்கள் குறித்தும் பேசுகிற பெண்களை மென்மையான தன்னுடைய வார்த்தைகளால் எளிதில் கவர்ந்து விடுபவனாயிருந்தான். சிலர் தீவிரமான புணர்வினையும் இன்னும் சிலர் வெறுமனே பேசிக்கொண்டிருக்க மட்டுமாகவும் அணுகிய போதும் வெவ்வேறுவானவர்களுக்குத் தகுந்தபடி தன்னைத் தயாராக வைத்துக்கொள்ள முடிந்தவனால்.


சிலதினங்களுக்கு முன்பு ஒரு பெண் இவனை அழைத்திருந்தாளென சென்றிருந்தவன் குறிப்பிட்ட அவ்வீதியினைக் கண்டுபிடித்து சென்றிருக்கையில் அவள் சொல்லியிருந்த நேரத்திற்கும் சற்று முன்பாகவே சேர்ந்து விட்டான். அந்த இரவிற்கான கட்டணம் மற்ற விவரங்கள் இவற்றை முன்பே பேசி விட்டிருந்ததோடு பின்வாசல் வழியாக இவன் வரவேண்டியதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். தான் வந்து விட்டிருப்பதைத் தெரிவிக்க வேண்டி அவளை அழைக்கையில் எதிர்முனையில் பதிலில்லை, சிறிது நேரங்காத்திருந்தவன் இரண்டாவது முறையாக அழைக்கையில் தொடர்பு துண்டிக்கப்பட்டு சிறிது காத்திருக்கச் சொல்லி குறுஞ்செய்தி ஒன்று மட்டும் வந்தது. கதவை ஒட்டியிருந்த சுவரில் சாய்ந்து நின்று கொண்டவன் தூரத்தில் மங்கலாக ஒளிர்ந்த சோடியம் விளக்கினடியில் கடந்து போன வாகனங்களைக் கவனித்தான். மிக வேகமாக குறைந்திருந்த மனித இயக்கம் இறுதியில் அச்சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் குறைந்து போனது. மறுபடியும் அவளழைக்கையில் சைலண்ட் மோடிலிருந்த இவனுடைய அலைபேசி பேண்ட் பாக்கெட்டில் அதிர அதிக சப்தமின்றிப் பேசினான். திறக்கப்பட்ட கதவின் வழி உள்நுழைந்தவன் அத்தனை வெளிச்சமின்றி மெல்லிய ஜீரோ வாட்ஸின் ஒளி மட்டுமே உதிர்ந்து கிடந்த அறைகளைக் கண்டதில் நிம்மதியுற்றான்.


கதவினைப் பூட்டித் திரும்பினவள் இவனை அணைத்து முத்தமிடத் துவங்கினாள். வழக்கமாக இவனுடைய அந்தரங்கங்களைப் பற்றியோ வேறு ஏதேனும் விஷயங்களையோ பேசுகிற பெண்களுக்கு மத்தியில் இதுமாதிரியானவர்களும் இருப்பார்கள் தான். ஆனால் இந்த முத்தத்தில் புது விதமான உற்சாகமிருப்பதாகவே உணர்ந்தவன் அவளின் முலைகளைப் பிடித்துக் கசக்கத் துவங்கியதும் சட்டென கைகளை விலக்கிவிட்டவள், தான் சொல்லாத வரையிலும் அதனைத் தொடக் கூடாதென தீர்மானமாய்க் கூறிவிட்டாள்.


அடிக்கடி மார்புகளைக் கசக்கும் பட்சத்தில் இறுக்கம் குலைந்து விடும் என அவள் சொல்லியதைக் கேட்டு மனதிற்குள்ளாகவே சிரித்துக்கொண்டான். புணரத் துவங்கி தீவிரமடைந்ததும் மெல்லிய குரலில் தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதை அவள் சொன்னதைக் கேட்டு இன்னும் குறையாத அவளுடலின் இறுக்கத்தில் ஆச்சர்யங்கொண்டான். அதிகாலையில் அவன் கிளம்புகிற நேரமாய் குழந்தைகளில் ஒன்று விழித்து அழுததினைக் கேட்டு அவசரமாகக் கிளம்பியவனுக்கு நறுக்கப்பட்ட பழங்களைக் கொடுத்து சாப்பிட்டுப் போகச் சொன்னாள். இதன்பின்பாக ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் அழைக்கையில் தனது விருப்பங்களெதையும் வெளிப்படுத்தாதவனாய் முடிந்தவரை அவர்களின் போக்கிலேயே இயங்கினான். இந்தப் புதிய நடவடிக்கையின் காரணமாகவே நிறைய பேர் தன்னை அழைக்கிறார்களென சில சமயங்களில் தோன்றுவதுண்டு.


சில தினங்கள் தொடர்ந்து அவள் அழைத்தாளென செல்ல இவன் மீதான தனிப்பட்ட ஆர்வம் மிகுந்தவளாய் சதாவும் பேசத் துவங்கியதோடு முழுமையாக அவனை உள்வாங்கிக் கொள்ளும் எதிர்பார்ப்பிலும் தனக்கு மட்டுமானவனாகவே அவனை இருக்கச் செய்யும் பிரயத்தனங்களைச் செய்யத் துவங்கினாள். தனியானதொரு பெண்ணுக்கு மட்டுமானவனாய் தன்னை யோசிக்க முடியாதவன் விரைவாகவே அவளைப் புறக்கணிக்க முயன்றான். குறைந்தபட்சம் தன்னோடு பேசியபடியாவது இருக்கட்டு மென அவளும் அதிகம் வற்புறுத்தாதவளாய் இருந்தாள். முற்றிலும் புறக்கணிக்காமல் இவனும் அவளுடன் பின்பு தொடர்பிலிருந்தான். ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து வெளிப்படும் காதலில் தேக்கி வைக்கப்பட்ட வெறுமையின் தீவிரம். ஏதோவொன்றினைக் கிடைக்கப் பெறாதவளாய் வெளிப்படும் குரலும் சொற்களும், முத்தங்களால் மட்டுமே காமங் கொள்ள முடிந்தது அவளால். முத்தங்கள் தான், சற்று ஆழமானவை, தீவிரமாக இவனை உள்ளிழுக்கக்கூடிய வீரியமுடையவையாயிருந்த அவற்றில் தான் சேகரித்து வைத்திருந்த அவ்வளவையும் இழப்பதான அச்சமெழுந்தது. தவிர வழக்கத்திற்கு அதிகமான எதிர்பார்ப்புகளை அவன் மீது மற்றவர்கள் கொள்வதாய்த் தோன்ற தனிப்பட்ட தொரு விருப்பங்களெதுவும் இல்லாதவனாகிப் போனான்.


புதிதாக ஒருவள் தன் பெயர் வயது எதைப்பற்றியும் சொல்லிக் கொள்ளாமல் இவனை அழைத்திருந்தாள். அவளனுப்பிய முகவரியடங்கிய குறுந்தகவலை இன்பாக்ஸில் சேமித்து வைத்திருந்தவன் அன்றைய தினம் வேறுயாரிடமிருந்தும் அழைப்பில்லை என உறுதி செய்த பின் அம்முகவரியிருக்கும் பகுதிக்குக் கிளம்பினான். பேருந்துகளில் பயணிப்பதில் சோர்வினைவிடவும் மிகுதியாயிருந்ததெல்லாம் தயக்கங்கள்தான். முன்பு இம்மாநகர் முழுக்க பேருந்தில் சுற்றாதவனில்லை, சமீபமாய் அப்படி இருக்கமுடியாமல் போனது. வழக்கமான பரோட்டா குருமாவைத் தவிர்த்து தோசைகளோடு உணவை முடித்துக் கொண்டதில் லேசாகியிருந்தது வயிறு. இருள் அப்பிய வீதிகளினூடாய் ஊர்ந்து திரும்பிய பேருந்தில் கடைசி இருக்கையொன்றில் அமர்ந்திருந்தவன் இன்னும் சில நிறுத்தங்கள் தள்ளி இறங்க வேண்டியிருந்தது. சோடியம் விளக்குகளின் தூசுபடர்ந்த வெளிச்சத்தில் அவனைத் தவிர்த்து காணமுடிந்த அவ்வளவிலும் வலுவானதொரு நிதானம்.


ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறி இறங்குகிற பெண்களில் பெரும்பாலோரின் காதுகளும் இயர்ஃபோன்களின் உரையாடல்களோடுதான் இருந்தன. அத்தனை பேருமே காதலிக்கப்படுபவர்களாயிருக்கலாம், அல்லது காதலிக்கலாம். எப்படியாயினும் பகிர்ந்து கொள்வதற்கென யாரோ சிலர் அவர்களுக்கென இருக்கவே செய்கின்றனர். அவசரமாக அடுத்து வந்த நிறுத்தமொன்றில் இறங்கிக் கொண்டவன் மீண்டும் பேருந்தில் ஏறிச்செல்வதை யோசிக்க முடியாதவனாயிருந்தான்.


நிறுத்தத்தினை ஒட்டியிருந்த பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிப் புகைத்தவனுக்குத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது. தொடர்ந்து இரண்டாவது சிகரெட்டை வாங்கிப் புகைத்தவனின் பிரக்ஞையில் நேரம் பற்றிய நினைவெழுகையில் சிறிது வெறுப்பும் வெறுமையும் மட்டுமே மிஞ்சின. தன்னை அழைத்திருந்தவளின் எண்ணை அழுத்தி தானிருக்கும் இடத்தைச் சொல்லி பிக்-அப் செய்து கொள்ள முடியுமாவெனக் கேட்க இடத்தைக் குறித்துக் கொண்டு சில நிமிடங்களில் வருவதாகக் கூறினாள்.


பகல் நேரக் கடும் வெப்பத்தின் எச்சங்களில் வியர்வையப்பிய மிருகங்களாய்த் திரிந்தனர் சாலையில் பார்க்க முடிந்த மனிதர்கள். அந்தரங்கமான அவனின் இரண்டாவது அலைபேசி ஒலிக்க இரண்டு முறை எடுப்பதனைத் தவிர்த்தான். தொடர்ந்து அடித்தபடியே இருக்கவும் வழியின்றி எடுத்தவனிடம் அன்றைய தினம் காத்திருக்கச் சொன்னதை நினைவுபடுத்தினாள். தன்னால் முடியாதென்றவன் ஒவ்வொரு முறையும் அவளோடு புணர்கிற கணங்களில் அவள் மீதான நேசம் மிகுதியடைவதாக அச்சங் கொண்டான். மாறாக தன்னை முழுமையாய் வெறுப்பதினாலேயே தவிர்ப்பதாக அவளிடம் இவள் கூறியதற்கு சமாதானம் சொல்ல முடியாதவனாய் நாளை அவசியம் வருவதாகக் கூறினான்.


சில நிமிட மௌனத்திற்குப்பின் மெல்லிய குரலில் எழுந்த அழுகையைத் தொடர்ந்து இணைப்பு துண்டிக்கப்பட சமீபமாக செய்தித்தாள்களில் காணமுடிகிற குடும்பப்பெண் தற்கொலை நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து கைதாகிற அவர்களின் காதலர்களின் நினைவுகளும் வந்து அச்சுறுத்தவும் அவசரமாக அவளை அழைத்து அன்றைய தினம் வரமுடியாததற்கான வருத்தத்துடன் இன்னும் சில நிமிடங்கள் பேசினான். திடீரென பொங்கிய இவனுடைய அக்கறையில் வியப்புற்றவள், இவனுடைய இன்ஸ்டன்ட் அக்கறையைப் பற்றிக் கேட்டாள். தான் அந்த சில நொடி இடைவெளியில் யோசித்த விஷயத்தினைச் சொன்னவனின் மேல் செல்லமாக கொஞ்சம் கோபமெழுந்தபொழுதும் அவன் மீதான காதலும் பெருகி வழிந்தது. சரியெனச் சொல்லி முத்தங்களுடன் அவள் பிரிந்து சென்ற சில நிமிடங்களில் அந்தப் பெண்ணும் வந்துவிட்டிருந்தாள்.


இரண்டாவது முறையாக ஹாரன் அடித்த பின்பாகத்தான் தன்னை அழைக்க வந்திருப்பவள் என்பதைப் புரிந்து கொண்டவனாய் நெருங்கிச் சென்றான். செயற்கைத்தனமான அப்பெண்ணின் ஒப்பனை சற்று வயதானவளாக இருக்கக் கூடுமோவென அவனை யோசிக்க வைத்தது. பொதுவான உரையாடலுடன் அவளின் வீட்டை அடைந்த பொழுது வாசலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது அவ்வீட்டின் நாய். பாதி செடி கொடிகளால் முன்பகுதி மறைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீட்டின் உள் நோக்கிய படுக்கையறையில் ஜீரோ வாட்ஸ் விளக்கு மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருந்தது. இரவிற்கான உடையில் தன்னைப் புகுத்தி அவள் வெளிவருகையில் மினுமினுப்பான அவ்வுடையையும் மீறி தளர்ந்த அவளுடலே உறுத்துவதைப் போலிருந்தது. முன்பு அவன் பார்த்த பெண்கள் கொண்டிருக்கிருக்கும் வேகமெதுவுமில்லாதவளாய் மிக நிதானமாகத் தழுவவும் முத்தமிடவும் செய்தாள்.


அவளிடம் இருந்த நிதானத்தினைப் போலவே இவனை உள்வாங்குவதிலும் ஒருவிதமான தீவிரத்தன்மை கொண்டவளாய்க் காட்டியது. வயதானவர்களுக்கு குறிதளர்ந்துவிடும் என்கிற விஷயமெல்லாம் பொய்யோவென எண்ணும்படியிருந்தது அவ்வனுபவம். புணர்ச்சியினூடே மகி மகி என உளறியவளின் காதுகளில் சிலமுறை பாலாவென தன் பெயரை முனகியும் மீண்டும் அதே பெயரை உச்சரித்ததைக் கண்டு காதலனாக இருக்கலாமென நினைத்துக் கொண்டான். மிகுந்த விருப்பங் கொண்ட பெண்களின் குறிகளை எப்பொழுதாவது சுவைக்கும் வழக்கம் கொண்டவன் அன்றைய தினம் அவளின் குறியினைத் தீவிரமாகச் சுவைக்க வேண்டுமென விரும்பினான். இரண்டாவது முறை முடிந்து தன் விருப்பத்திற்குத் தயாரானவனின் இதழ்களில் நீண்ட முத்தமிட்டவள் தலையணைக்கடியில் கொஞ்சம் பணத்தினை வைத்துவிட்டு எழுந்தாள். இளஞ்சூடான பாலை அவள் இவனுக்காக எடுத்து வந்த நேரத்திற்கெல்லாம் இவன் வாசலைக் கடந்து வந்து விட்டிருந்தான்.


கனத்து வீசிய பின்னிரவுக்காற்றில் மெல்லிய ஈரங்கலந்து முகம் நனைத்து விட்டிருந்தது. சுயமற்றவனென்கிற வெறுமை மிகுந்தவனாய் மீண்டும் அறைக்குத் திரும்புவதற்காக ஆட்டோ தேடியவனைச் சுற்றிக் குலைத்தன தெருநாய்கள். முதலில் விரட்டியவன் பிறகு எதுவும் செய்யாமலேயே விட்டதில் தைரியமான நாய்கள் தொடர்ந்து குலைத்தபடியும் நெருங்கி வருவதுமாயிருந்தன. அறை திரும்பிய அவ்விரவில் ஒட்டுமொத்தமான தன் ஆண்மையின் மீதும் சந்தேகமெழுந்தது அவனுக்கு.


அந்த நாளையும் அதற்கடுத்த சில நாட்களையும் தனக்கானதாக மாற்றிக்கொள்ள விரும்பினான். இரண்டு அலைபேசிகளையும் சுவிட்ச் ஆஃப் செய்து விட்டிருந்தவன் அடுத்த தினம் தன்னைப் போன்ற ஒருத்தியினைச் சந்திக்கச் சென்றான். இருவரும் பரஸ்பரம் முன்பே தெரிந்து வைத்திருந்தனர். துவக்க நாட்களில் தமக்கிருந்த மிகுதியான ஆர்வங்களை யெல்லாம் வலிய வரவழைத்துக் கொண்டவன் மெதுவாக அவளைப் புணரத் தயாரானான். சில நிமிடங்கள் இயல்பாகச் சென்று கொண்டிருந்தாலும் வேகமாகவே அடுத்து என்ன செய்வதெனச்சொல்லும் குரலை எதிர்பார்த்துத் தயங்கி நின்றான். மற்றவர்களின் குரலைத் தொடர்ந்து இயங்கும் அவனைப் போலவே அப்புதியவளும் பிற குரல்களுக்குப் பழக்கப்பட்டுப் போனவளென்பதால் பாதியிலேயே நின்றுவிட்டிருந்தது அவர்களின் புணர்ச்சி. தயக்கத்தோடு அங்கிருந்து வெளியேறியவன் தன்னை மனித உயிரல்லாத ஏதோவொன்றாய் உணர்ந்தான். சூன்யமான அந்தப் பொழுதின் பெரும் அவஸ்தையாய் அலைபேசி எதிரொலிக்க கோபத்தோடு விட்டெறிந்தான், கிழித்தெறியப்பட்ட காகிதம் போல் சிதறிக்கிடந்த அலைபேசியின் பாகங்களில் இருள் திட்டுத்திட்டாகப் படர்ந்து கிடந்தது.


நீள்வாகான அறையின் முகப்பில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் இவ்வளவு நாட்களிருந்த தனிமையை மறந்து புதிதாக அறை நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளலாமென யோசித்தான். அலைபேசி இல்லாதிருந்த சுதந்திர உணர்வு ஒரேசமயத்தில் நிம்மதியாகவும் அடுத்து என்ன செய்யலாம் என்கிற குழப்பத்துடனும் கழிந்தது. சலவைக்காக துணி ஊறவைக்கச் செல்கையில் இன்னொரு அலை பேசி ஒலித்தபோதுதான் ஒருத்தி மிஞ்சியிருப்பது நினைவிற்கு வந்தது.


எவ்விதமுமான சுவாரஸ்யமுமின்றி பேசத் துவங்கியவனை ஒரு குழந்தையென தன் சொற்களால் கொஞ்சத் துவங்கியவள் சில நொடிகளிலேயே யாவற்றையும் மறக்கச் செய்து விட்டிருந்தாள். தான் தேடிக்கொண்டிருக்கும் ஏதோவொன்றினை அவள் குரலில் புரிந்து கொண்ட நொடியில் அக்கணமே அவளைச் சந்திக்க வேண்டுமென பரபரத்தான். எவ்வளவோ முறை சென்றிருந்த அவ்வீட்டிற்கு இன்று ஏதோ புதிதாய்ப் போவதைப்போல் உணர்ந்தான். வழக்கத்திற்கு மாறான அவளின் செயல்களில் தன்னை முழுமையாய் இவனிடம் ஒப்புக் கொடுக்கும் முனைப்பிருந்தது. எல்லாவற்றையும் புதிதாகப் பார்ப்பவனைப்போல் தழுவியவனை முழுமையாகத் தன்னை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதித்தவள் "மெதுவா.... அப்பறம் குடும்பத் தலைவி கள்ளக் காதலால் தற்கொலைன்னு நியூஸ் வர்ற மாதிரி ஆகிடப் போவுது" என்றாள். வியர்வை சொட்டியவனாய் இப்படிச் சொன்னவளின் இதழ்களைக் கடித்தவன் "நடக்கட்டுமே" என ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டான். அந்த இரவு முடிகிற நேரத்தில் பழைய அலை பேசியிலிருந்த சில எண்கள் நினைவிலிருக்கும் ஆசுவாசத்தில் நிம்மதியாக உறங்கப்போனான்.


 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page