எனக்கு ஒரு அடையாளம் உண்டு. ஆனால் அது விற்பனைக்கல்ல.
- லக்ஷ்மி சரவணகுமார்

- 3 minutes ago
- 3 min read

அகழ் மின்னிதழில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் மொழிபெயர்ப்பில் உம்பர்த்தோ ஈகோவின் திரவநிலை சமூகம் குறித்த கட்டுரை ஏராளமான கேள்விகளை எழுப்பியது. குடும்பம், சமூகம், இலட்சியங்கள் போன்ற திடமான அமைப்புகளிலிருந்து மனிதர்கள் படிப்படியாக விடுபட்டு, நிரந்தரமற்ற அடையாளங்களைக் கொண்டவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் அதீத நுகர்வுக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்; மறுபுறம் எந்த உறுதியும் இல்லாத வாழ்க்கை முறையை வாழ வேண்டியிருக்கிறது. இந்த இரண்டிற்கும் நடுவே சிக்கிக்கொண்டு தன்னைத்தானே சுரண்டிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இந்தக் கட்டுரையின் தூண்டுதலில் காம்யூவின் அந்நியன் நாவலை மீண்டும் வாசித்தேன். இரண்டு உலகப்போர்களுக்குப் பிறகு மனிதனுக்குள் உருவான வெறுமையையும் அவநம்பிக்கையையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரம் மெர்சோ. இன்றைய மனநிலையில் நாவலின் முதல் பகுதி கடுமையான சலிப்பைத் தருகிறது. காரணம், மெர்சோவின் அக்கறையின்மை இன்று நமக்குப் பரிச்சயமில்லாத ஒன்றாகிவிட்டது. அவனுக்கு உலகின் மீதும் வாழ்க்கையின் மீதும் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. நமக்கோ அதற்கு நேர்மாறாக, எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும் என்னும் தீராத வேட்கை இருக்கிறது. அந்த வேட்கை நிறைவேறாதபோது அது ஏமாற்றமாகவும் சலிப்பாகவும் மாறுகிறது. மெர்சோவுக்கு உலகம் சுமை; நமக்கு முடிவற்ற ஆசைகள்தான் சுமை.
அந்த நாவல் இன்றும் வாசிக்கப்படுவதற்குக் காரணம் அதன் கதை அல்ல; அது எழுப்பும் கேள்விகள். குறிப்பாக கடைசி இருபது பக்கங்கள்.
பாதிரியாருக்கும் மெர்சோவுக்கும் இடையிலான உரையாடல் நாவலின் உச்சம். "உன் பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேள்" என்று பாதிரியார் சொல்கிறார். "நான் செய்தது குற்றம்; பாவமல்ல" என்று மெர்சோ பதிலளிக்கிறான். அவன் செய்த கொலைக்காக மட்டுமல்ல, அவன் யார் என்பதற்காகவே நீதிமன்றம் அவனைத் தண்டிக்கிறது. தன் தாய் இறந்தபோது ஏன் அழவில்லை என்று அவனை விசாரிக்கிறது. தாய் இறந்த மறுநாளே காதலியுடன் கடற்கரைக்குச் சென்றதையும், சினிமாவுக்குப் போனதையும் அவனுக்கு எதிரான சாட்சிகளாக மாற்றுகிறது. "நான் உணராத ஒன்றை நான் ஏன் நடித்துக் காட்ட வேண்டும்?" என்பதுதான் மெர்சோவின் வாதம்.
அந்தக் கேள்விதான் இன்றும் என்னைத் தொடர்ந்து துரத்துகிறது.
மீண்டும் ஈகோவின் கட்டுரைக்கு வருவோம். இன்றைக்கு தனிமனிதன் தன்னைத்தானே அதிகம் சுரண்டிக்கொள்கிறான். போலியான லட்சியங்களைத் துரத்துவதும் அதற்காக தனது இயல்பான வாழ்வைத் தியாகம் செய்யத் துணிவதும் புரிந்துகொள்ள முடியாத முரண். மற்றவர் முன்னிலையில் நமது வாழ்க்கைத் தரத்தை வெளிப்படுத்தியபடியே இருக்க வேண்டுமென்கிற பதட்டம் கேலிக்குரியது, பெரும் வேட்கையோடு நாம் நமக்குத் தேவையற்ற பொருட்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டம் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எல்லோரையும் ப்ராண்டாக மாற்ற நிர்ப்பந்திக்கிறது. சில நொடிகள் கிடைக்கும் பிரபலத்தன்மைக்காக எதையும் செய்வதற்கு மனிதர்கள் தயாராகிவிட்டார்கள்.
அரசியல், கலை, வணிகம், தொழில்துறை என்று எதை எடுத்தாலும் முதலில் ஒரு வாழ்க்கைக் கதையை உருவாக்குகிறார்கள். சிறுவயது துயரங்கள், போராட்டங்கள், தோல்விகள், வெற்றிகள் என்று உணர்ச்சிகரமான ஒரு கதையைச் சொல்லிவிட்டு, அதன் பிறகுதான் பொருளை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். உண்மையில் அவர்கள் பொருளை விற்கவில்லை; கதையாடலை விற்கிறார்கள். அந்தக் கதையாடலின் வழியாக தங்களது அடையாளத்தையே சந்தைக்குக் கொண்டுவருகிறார்கள்.
இந்த மாற்றம்தான் என்னை அச்சுறுத்துகிறது. ஒரு எழுத்தாளர் தனது புத்தகத்தை விற்கலாம். ஒரு இயக்குநர் தனது திரைப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லலாம். ஒரு கலைஞர் தனது படைப்பின் மூலம் வாழ்வாதாரம் தேடலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தன்னுடைய கடந்தகாலம், துயரம், கண்ணீர், அரசியல், சாதி, தனிப்பட்ட வாழ்க்கை—இவை அனைத்தையும் சந்தைப்படுத்தலுக்கான கருவிகளாக மாற்றும்போது ஒரு எல்லை மீறப்படுகிறது. அப்போது படைப்பு முக்கியமல்ல; படைப்பாளியின் பிம்பமே முக்கியமாகிவிடுகிறது.
இது டிஜிட்டல் உலகின் மிகப்பெரிய முரண். நாம் பொருட்களை மட்டும் நுகர்வதில்லை; மனிதர்களின் அடையாளங்களையும் நுகர்கிறோம். ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு முன் எழுத்தாளர் எந்த அரசியல் பேசுகிறார் என்று பார்க்கிறோம். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன் இயக்குநர் எந்தக் குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறோம். ஒருவரின் படைப்பை விட, அவர் எந்தப் ப்ராண்டின் கீழ் நிற்கிறார் என்பதே முக்கியமாகிறது. எல்லோருக்குமே ப்ராண்டுகளின் மீதான மோகம் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. நாற்பதாயிரம் ரூபாய்க்கு பால்மைன் சட்டையை வாங்குபவர் ஒரு சதவிகிதம் என்றால் மிச்ச 99 சதவிகிதமானவர்களுக்கு அதன் ஃபர்ஸ்ட் காப்பியை வாங்கும் ஆர்வம் இருக்கிறது. அவர்கள் நினைப்பது அந்தப் பெயரை. இதேதான் ஒரு திரைப்பட இயக்குனருக்கும் எழுத்தாளருக்கும் பொருந்தும்.
நுகர்வோருக்கு பொருளின் தரத்தைக் குறித்தெல்லாம் கவலையில்லை. இது அந்த ப்ராண்டிலிருந்து வருகிறது என்பதால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க நினைக்கிறார்கள்.
இன்றைக்கு வெற்றிபெற்ற எவருக்கும் வணிகமற்ற சுயம் இல்லை. அவர்கள் தங்கள் சுயத்தையே அதிகம் விற்பனை செய்கிறார்கள்.
வெற்றியின் மீதும் லட்சியவாதங்களின் மீதும் ப்ராண்டுகளின் மீது எனக்குக் கடுமையான ஒவ்வாமை உருவாகக் காரணம் இதுதான். எல்லா லட்சியங்களும் தனிமனிதர்களுக்கு அதிகாரத்தின் மீதிருக்கும் வேட்கையைத்தான் பிரதிபலிக்கிறது, ஒன்று அதிகாரத்தில் இருக்க வேண்டும், அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுடன் இருக்க வேண்டும்.
ப்ராண்டாக மாறிய பிறகு தோல்விக்கும் இடமில்லை. தோல்வியடைந்தாலும் அதை உடனே புதிய வெற்றிக் கதையாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு வீழ்ச்சியும் "என்னை இன்னும் வலிமையாக்கிய அனுபவம்" என்ற கதையாடலுக்குள் அடைக்கப்படுகிறது. மனிதனாக இருப்பதற்கான சுதந்திரத்தைவிட, ப்ராண்டாக இருப்பதற்கான தொடர்ச்சிதான் நிர்ப்பந்திக்கப்படுகிறது.
ஒரு மேடையில் ரஜினிகாந்த் தனது முந்தைய படம் தோற்றதை வைத்து நான் யானை இல்ல குதிரை உடனே எழுந்து ஓடுவேன் எனச் சொல்கிறார். அவர் காணாத வெற்றிகளா கொண்டாட்டங்களா ஆனாலும் ஏன் ஒரு சிறிய தோல்வி இத்தனை தொந்தரவு செய்ய வேண்டும்? ப்ராண்டாக மாறும் போராட்டத்தில் நமக்கான எளிய விருப்பங்களை எல்லாம் தியாக செய்கிறோம். பொய்யான அடையாளங்களை சுமந்துகொண்டு மனிதத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறோம். தனிமனிதனையும் கலைஞனையும் இன்றைய சந்தைக்கு ஏற்ற வெற்றிகரமான பொருளாக மாற்ற நிர்ப்பந்திக்கும் இந்த அடையாள மோகத்திற்கு வெளியே நிற்க வேண்டியது முக்கியமானது.
அதனால்தான் வெற்றியின் மீதும், ப்ராண்டுகளின் மீதும், அவற்றைச் சுற்றியுள்ள கதையாடல்களின் மீதும் எனக்கு ஒவ்வாமை உருவாகிறது. அவை மனிதனை அவனுடைய இயல்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்குகின்றன. நாம் செய்யும் வேலையைவிட, நாம் எப்படித் தோன்றுகிறோம் என்பதையே முக்கியமாக்குகின்றன. எனக்கு விருப்பமுண்டு. லட்சியமுண்டு. அடையாளமுண்டு.
ஆனால் அவை சந்தைக்காக உருவாக்கப்பட்டவை அல்ல. என் உழைப்பை நான் விற்கலாம். என் படைப்பை நான் விற்கலாம். ஆனால் என் அடையாளம் விற்பனைக்கல்ல.



