உலகில் மிக அதிகமான அவலநகைச்சுவையினை எதிர்கொள்கிறவர்கள் திருமணம் செய்துகொண்ட எழுத்தாளர்களாகத்தான் இருக்கக் கூடும். எதையெல்லாம் மாற்றவேண்டுமென பெரும் லட்சியத்தோடு இலக்கியச் செயல்பாடுகளை நோக்கி வருகிறோமோ அதையெல்லாம் படிப்படியாய்ச் செய்ய பழகுவதுதான் நல்ல குடும்பத்தலைவனுக்கு அழகு. அந்த வகையில் திருமணத்திற்குப் பிறகான எழுத்தாளர்களில் அனேகரும் தனது நண்பர்களிடமிருந்து இடைவெளி எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு திருமணம் மட்டுமே காரணமில்லை என்பதும் ஒரு வகையில் உண்மைதான். எழுத்தாளர் ஆனதும் தொண்ணூறு சதவிகிதமானவர்களுக்கு தாம் மற்ற சாதாரண மனிதர்களை விட மேன்மையானவன் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது.
நான் எழுத வந்த புதிதில் மதுரையின் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு இலக்கிய நண்பரைப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னிலும் வயதில் மூத்தவர். இந்த சமூகத்தில் ஒரு நாள் புரட்சி வெடிக்கும், அப்படி வெடிக்காத பட்சத்தில் நானே வெடிகுண்டாக மாறி வெடிப்பேன் என தீவிர லட்சியவேட்கை கொண்டிருந்தார். ‘புரட்சி வாழ்த்துகள் தோழர்’ என்றுதான் தன்னை சந்திக்கும் நபர்களுக்கு முகமன் கூறுவது. அவரோடு சேர்ந்து பழகிய சில நாட்களில் புரட்சி வாழ்த்துகள் தோழர் என்ற அந்த முகமனை நானும் சொல்லிக் கொண்டு திரிந்தேன். அப்போது மதுப்பழக்கம் எனக்கு இல்லை. ( சென்னைக்கு வந்துதான் மதுப்பழக்கமெல்லாம். மதுரையில் உத்தமப்புத்திரனாய் வாழ்ந்தவன் நான்… ச்ச… என்ன அழகான நாட்கள்.???)
ஒரு இலக்கிய முகாமில் கலந்துகொண்டு அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு வந்து பிறகு அங்கிருந்து பின்னிரவில் திருமங்கலத்திற்கு பயணமாகவேண்டும். உடன் வந்த தீய எண்ணம் கொண்ட இலக்கியவாதிகளின் வற்புறுத்தலால் அன்றைக்கு பியர் அருந்திட்டேன். பியர் என்பது சர்பத் மாதிரிதான் தம்பி என்று அவர்கள் சொன்னதை நம்பி இரண்டு மூன்று பாட்டில்களை கவிழ்த்துவிட்டு பாதையும் தெரியுமால் பஸ்ஸூம் தெரியாமல் இரவு ஒரு மணிக்குமேல் திருமங்கலம் பேருந்திலேறிவிட்டேன். எங்கள் ஊர் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்த அகால வேளையில் தலைசுற்றும் போதயோடு வீட்டிற்குச் செல்வது அறிவுள்ள மனிதன் செய்யக்கூடிய செயல் அல்ல என்கிற உணர்வோடு மெதுவாக ரயில் நிலையம் நோக்கி நடந்தேன். எல்லா ஊர்களைப் போலவே எங்கள் ஊர் ரயில் நிலையமும் வெளிச்சம் சிறிதுமின்றி முழுக்க இருள் சூழ்ந்திருக்கும். மயான அமைதி என்று சொல்லமுடியாது. மயானத்தில்கூட கொஞ்சம் வெளிச்சமிருக்கும். அப்படியான இருளில் ரயில் நிலையத்திலிருந்த ஒரு பெஞ்சில் சாய்ந்து படுத்துக் கொண்டேன். சில நிமிடங்கள் கூட ஆகியிருக்காது… யாரோ தட்டி எழுப்ப, சிரமத்தோடு எழுந்தேன்… ‘இதென்ன உங்கப்பன் வீடுன்னு நெனச்சியா? எந்திரிச்சிப் போடா.. 1232ய்ய்யெ63’ என ஒருவன் அழகான கெட்டவார்த்தையால் திட்ட, தடுமாறும் கால்களோடு கேணத்தனமாக சிரித்தபடியே வீட்டை நோக்கி நடந்தேன்.
வீட்டிற்குச் செல்லும் பாதை தெளிவாகத் தெரிகிறது.. எப்போதுமே ரயில் நிலையத்திலிருந்து அதிகபட்சம் பத்து நிமிடத்திற்குள் வந்துவிடும் வீடு அன்றைக்கென்னமோ அவ்வளவு சீக்கிரத்தில் வருவதாக இல்லை. என்ன எழவுடா இதுவென ஒரு தெருவிளக்கின் கீழ் நிற்க… நாய்கள் குரைக்க… அந்த நேரம் பார்த்து ரோந்து வந்த காவல் வாகனம் என்னருகே வந்தது…. ‘யார்ரா அவென் இங்க. வா..’ என்று என்னை அழைக்க அருகில் சென்ற நான் உடலை விரைப்பாக வைத்து’ புரட்சி வணக்கம் தோழர்…’ என்று சல்யூட் அடித்தேன். மறுபடியும் போலிஸ்காரர் என்னிடம் ஏதோக் கேட்க… மறுபடியும் நான் புரட்சி வணக்கம் சொல்ல… காதில் தீப் பிடித்தது போல் ஒரு அறை…. மறுபடியும் நான் புரட்சி வாழ்த்துகள் தோழர் என்று சொல்ல, கொத்தாக அள்ளி வாகனத்தில் போட்ட ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அடுத்து நடந்ததுதான் முக்கிய நிகழ்வு…அறை வாங்கியதில் கொஞ்சம் போதை தெளிந்து போனது.. ‘ஏங்க எதுக்கு என்னய அடிச்சீங்க… யாருக்கு வணக்கம் சொன்னாலும் புரட்சி வணக்கம்னுதான் சொல்லனும்னு எங்க ஆளு ஒருத்தர் சொல்லிக் குடுத்திருக்காரு…’ என சொல்ல, எவண்டா அவென் உனக்குச் சொல்லிக் குடுத்தவன் என காவலர் கேட்டார். நான் தோழரின் பெயரைச் சொல்ல விடிந்தும் விடியாமல் ஆளைத் தூக்கி வந்துவிட்டார்கள்.
‘ஒடிசலான தேகம், முகமெல்லாம் பருக்கள், அதோடு நிலைகொள்ளாத போதை, கூடவே எதுகேட்டாலும் புரட்சி வணக்கம் தோழர் என நான் கிளிப்பிள்ளை போல் சொன்னதைக் கேட்டு ஏதாவது பயங்கரவாத இயக்கத்தோடு எனக்கு தொடர்பிருக்குமோ என அவர்களுக்குச் சந்தேகம்… அதனாலேயே எனக்கு அதைச் சொல்லிக் கொடுத்த ஆளையும் தூக்கி வந்திருந்தார்கள். அவர் வந்து சேரும்போது எனக்கு கொஞ்சம் தன்னிலை வந்துவிட்டது. கூடவே அச்சத்தில் மூன்று நான்குமுறை மூத்திரமும் வந்துவிட்டது. இரவு நேரங்களில் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்வது எப்போதுமே சுவாரஸ்யமானதுதான். ( சென்னை வந்த புதிதில் ஒருமுறை இதுபோல் இரவு காவலரிடம் மாட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவலர்கள் ‘செரி ஒரு டான்ஸப் போடு எனக் கேட்க…’ நான் நான் கடவுள் படத்தில் வரும் எம்.ஜி.ஆரைப் போல் ஸ்டெப் போட முயன்று அங்கு மானக்கேடாகிவிட ஒரு கான்ஸ்டபிள் என் தலையில் அடித்து ‘ஆடத் தெரியல… நீயெல்லாம் எங்க சினிமால பொழைக்கப் போற…’ என்றார். அது சுவாரஸ்யமான தனிக்கதை.)
போதை தெளிந்தபோதுதான் கவனித்தேன். அந்த அதிகாலையிலும் தோழர் டக் இன் பண்ணி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மேலதிகாரியின் தோற்றத்திலிருந்தார். காவல்துறையினர் அவரிடம் விசாரிக்க ‘ஸார்.. நான் கவர்மெண்ட் எம்ப்ளாயி… பி.எஸ்.என்.எல் ல பெரிய போஸ்ட்ல இருக்கேன்… தம்பி ஏதோ வெவரமில்லாம சொல்லி இருக்காப்ள… எங்க வீட்டுக்கு வந்து புத்தகம் வாங்கிட்டு போவாப்டி மத்தபடி பெருசா பழக்கமில்ல…’ என ஒரு நொடியில் என்னையும் புரட்சியையும் கைகழுவினார். அவர் மத்திய அரசில் நல்ல பதவியில் இருக்கிறார் என்கிற உண்மையே எனக்கு அப்போதுதான் தெரியும்… பிறகு காவல்துறை என்னை விசாரிக்க, எனது பெயர் தெரு மற்ற விவரங்களைச் சொல்ல அதேநேரம் எனக்குத் தெரிந்த சிலர் தற்செயலாக காவல் நிலையம் வந்து தம்பி ஸ்போர்ட்ஸ்மேன் ஸார்…. இப்ப படிக்க முடியாம வேலைக்குப் போயிட்டு இருக்காப்ள… என என்னைப் பற்றி எடுத்துச் சொன்னபிறகுதான் நான் பயங்கரவாதி இல்லையென காவலர்கள் முழுமையாக நம்பினர். இரண்டு பண்டல் ஏ4 ஷீட் வாங்கிக் குடுத்தபின் ( யார் வந்தாலும் ரெண்டு பண்டல் நாலு பண்டல் ஏ4 ஷீட் வாங்கிட்டு வான்னு காவல்துறைல கேக்கறாங்க….அவ்ளோ பேப்பர வெச்சி என்ன செய்வாங்க?) அதில் பத்துத் தாள்களை எடுத்து ‘இனிமேல் நான் மதுவருந்தமாட்டேன்…’ என ஸ்ரீராமஜெயம் எழுதுவதுபோல் எழுதச் சொன்னார்கள். கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் தேயத் தேய எழுதியபின் ஒரு தேநீரை வாங்கிக் கொடுத்து ‘வக்காலி இனிமே இந்தப் பக்கம் பாக்கக் கூடாது…’ என துரத்திவிட்டார்கள்.
இந்த சம்பவத்திற்குப்பின் தோழரை மீண்டும் சந்தித்தபோது ‘நாம தீவிரமான அரசியல் வேலைகள் செய்றோம்னு அதிகார வர்க்கத்துல இருக்கவனுக்கு தெரியக்கூடாது தோழர், அதனாலதான் அன்னிக்கி தந்திரமா நடந்துக்கிட்டேன்…’ என சிரித்தார். கடுப்பாகிப்போன நான் ‘அது எப்பிடி தோழர் செண்ட்ரல் கவர்மெண்ட் ல சம்பளம் வாங்கிட்டே புரட்சி பண்ணுவீங்க எனக் கேட்க’ அத்தோடு என் நட்பைத் துண்டித்துக் கொண்டார். பிறகு நீண்ட வருடங்களுக்குப்பின் சிற்றிதழ் ஒன்று துவங்க உள்ளேன் ஒரு கதை அனுப்புங்கள் எனக் கேட்டிருந்தார். எதுக்கு ஏதோவொரு கதையை அனுப்புவானேன் என நினைத்து நான் அவரது கதையை எழுதியனுப்ப அத்தோடு எனது நட்பை முற்றாகத் துண்டித்துக் கொண்டார்.
இப்போது சலிப்பான இந்த நீண்ட கதையைச் சொல்லி முடிக்கும் வேளையில் ‘எதுக்குடா இந்தக் கத என உங்களுக்குத் தோன்றலாம்? சிம்பிள். ஒருவேளை தோழர் திருமணம் செய்து கொள்ளாமலிருந்தால் அவரால் புரட்சி வெடித்திருக்குமோ என்னவோ என்றுதான் இப்போதெல்லாம் தோன்றுகிறது. எப்போதெல்லாம் ஒரு எழுத்தாளன் முழுமையான குடும்பஸ்தனாக வேண்டியுள்ளது. ஒரு நல்ல கதை எழுதவேண்டுமென மனம் ஒருமித்து அமரும் போது, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க கடைக்குப் போகவேண்டியிருக்கும். அல்லது அப்போதுதான் ஊரிலிருந்து உங்கள் உறவினர் யாராவது ஒருவர் வருவார். அவரை ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலோ சென்று அழைத்து வரவேண்டும்… வந்தவர் வெறுமனே செல்ல மாட்டார். ‘எப்பிடி சமாளிக்கிறீங்க குடும்பத்த எழுதுறதால வருமானம் வருதா?’ என முதலில் ஒரு சின்ன மீனைப் போடுவார். ‘அப்பிடிலாம் பெரிசா ஒன்னுமில்லங்க…. நிறைய எழுத்தாளர் வாத்தியாரா இருக்காங்க. சமாளிக்கிறாங்க… நான் சினிமால ஏதோ செஞ்சு சமாளிக்கிறேன்..; என வெட்கமே இல்லாமல் சிரித்துச் சொல்லவேண்டும். இதற்குள் அவருக்குத் தேநீரும் பலகாரமும் தயார் செய்து கொடுத்திருக்க வேண்டும். வந்தவர் தங்கப்போகிறார் என்றால் குளிப்பதற்கு அவருக்கான குளியலறையைத் தயார் செய்துவிட வேண்டும்… எழுத நினைத்த கதையின் முதல் சில வரிகள் இப்போது நினைவிலிருந்து காணாமல் போயிருக்கும்.
வந்தவர் போய் குளித்துவிட்டு வந்து பட்ஸால் காது குடைந்தபடியே ‘சும்மா வருமானமே இல்லன்னு பொய் சொல்லாதிங்க… நீங்க உங்க வீட்டம்மாவ ஏமாத்தற மாதிரி என்னய ஏமாத்த முடியாது’ என துவங்குவார். என்ஃபோர்ஸ்மெண்ட் ரெய்டை எதிர்கொள்ளும் அமைச்சரைப்போல் முகம் கோண நாம் ‘என்ன பொய் சொன்னேன்?’ எனக் கேட்டால் ‘அதான் பாக்கறனே… எல்லா ரைட்டர்ஸோட கதையும் யூட்யூப்ல வருது…. அத ஆயிரக்கணக்குல லட்சக்கணக்குல பாக்கறாங்கன்னு வியூஸ் சொல்லுது அப்பறம் எப்பிடி வருமானம் இல்லாமப் போகும்? என சிரிப்பார். ‘அடேய் க்ரஹாம்பெல்லு… யூட்யூப் ல கத கேக்கறவன் ல ஒரு சதவிகிதம் பேர் புத்தகம் வாங்கினாலும் ஒவ்வொரு ரைட்டரோட புத்தகமும் குறஞ்சது பத்தாயிரம் பிரதியாவது விக்கும். ஆனா யதார்த்தமில்ல… எழுதறத வாசிக்கிறது வேற… கத கேக்கறது வேற… இதால எழுதறவனுக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்ல… நாலு பேரு நம்ம கதைய கேக்கறானேங்கற அற்ப சந்தோசம் மட்டுந்தான் கெடைக்கும்… என்று தொண்டைத்தண்ணீர் வற்ற நாம் விளக்கிச் சொல்லும் போது அவர் உணவை முடித்துக்கொண்டு அடுத்தகட்ட தாக்குதலுக்குத் தயாராவார். இதற்குள் எழுத நினைத்த கதை முழுதாகவே மறந்துபோயிருக்கும். ‘உங்க வீட்டுல நல்ல ஃபாரின் சரக்கா வெச்சிருப்பீங்கன்னு கேள்விப்பட்டேன்… ஒன்னும் கண்ல காட்ட மாட்றீங்களேன்னு’ சிரிச்சிக்கிட்டே கேப்பாங்க… அப்பயும் கோவமே படாம ‘இது வீடுங்க… பார் இல்லன்னு சொல்லிட்டு சட்டைய மாத்திட்டு மெதுவா வீட்ல இருந்து கிளம்பிடனும்.. அதுக்கு மேல இருந்தா அங்க ஒரு கலவரம் வரும், குடும்பம் கெட்டுப் போயிரும். இந்த மாதிரி நேரத்துல கலைஞனா கலகம் பன்றதவிட குடும்பஸ்தனா அமைதி காக்கறதுதான் தந்திரம்.
ஒருமுறை ரயில் பயணத்தில் குடும்பமாக சென்று கொண்டிருக்கையில் சகபயணி ஒருவர் எங்கள் குடும்பத்திலிருக்கும் ஒவ்வொருவராக விசாரிக்க, எனது மாமியார் ‘என் மருமவன் ஒரு எழுத்தாளர்’ என்று சொல்ல எங்களை விசாரித்த பெரியவர் அதன்பிறகு உரையாடலை முறித்துக் கொண்டார். அவருக்கு என்ன பிரச்சனையோ?
முழுநேர எழுத்தாளன் திருமணம் செய்துகொள்ளும் போது பத்திரிகையில் என்ன போடுவது? பெண் வீட்டைச் சேர்ந்த தூரத்து சொந்த்க்காரன் ஒருவன் கேட்பான் ‘தனியாரா அரசாங்க வேலையா?’ நாம என்ன ஏதென விழிக்க... அவசரமாக யாராவது புகுந்து ‘அவரு மீடியால இருக்காரு’ என சமாளிக்க வேண்டும். ‘எந்த மீடியா? என்ன வேலை? என அடுத்த கேள்வி அடுத்த பொய்... இப்படி குடும்பஸ்தனாக பொருத்திக் கொள்வதே பெரும் தலைவலி... குடும்பஸ்தனாக ஆனபின் வருபவை எல்லாம் இதைவிடவும் ருசிகரமானவை.
அடுத்ததா விசேசங்கள். நம்மளச் சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம ஏதேதோ நடக்கும். நாம எல்லாத்துக்கும் ரியாக்ட் பண்ணிட்டு இருப்போம், ஆனா சொரனை இருக்காது. ஒரு எழுத்தாளன் முழுமையான குடும்பஸ்தனா வெளிப்பட வேண்டிய இடம் எதுன்னா இது மாதிரியான நிகழ்ச்சிகள்தான்…. அங்க குடும்பமே ஜாலியா ஆடறப்போ நீங்களும் ஆடனும். ‘பைத்தியக்கார கூட்டமா இவனுகன்னு விலகி நின்னா, பெரிய திமிர் புடிச்சவனா இருப்பாம் போல…. ரெண்டு கதை எழுதி புத்தகம் போட்டா மயிரா? என சொந்தக்காரர்கள் முகம் சுளிப்பார்கள். நாமும் ஒரு மாதிரி சமாளித்து எல்லோருடனும் சகஜமாகி வேலைகளைப் பார்ப்பது போல் நடிக்கத் துவங்கும் நேரத்தில் ஒரு பெரியவர் வருவார் ‘தம்பி உங்களப் பத்தி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன்… எனக்கு ரைட்டர்ஸ்னா ரொம்பவே மரியாத… உங்ககிட்ட ஒரு சின்ன ஃபேவர் கேக்கனும்…’ என ஆரம்பிப்பார். சொல்லுங்க அங்கிள் என நாம் சிரிக்கும் போதுதான் வினை துவங்கும் ‘வைரமுத்து ஸார் மேல எனக்கு பெரிய மரியாத.. அவர் கிட்ட ரெண்டு வார்த்த பேசனும்… ஃபோன் போட்டுத் தாங்களேன்’ என சிரிப்பார். ‘எங்கிட்ட அவர் நம்பர் இல்ல, அவர் பழக்கமும் இல்ல’ என சொன்னால் கடைசி வரை நம்பமாட்டார். இந்த ஸோம்பியிடமிருந்து தப்பித்தால் போதுமென தலைதெறிக்க ஓடி நிம்மதியாக உட்காரும் போதுதான் ஒருவன் வருவான். ‘அண்ணே சினிமா ல இருக்கீங்கள் ல… அஜித்குமாரு நம்பர் குடுங்கண்னே…. பேசனும்.’ என சிரிப்பான்.. அது ஏண்டா எங்கிட்ட இப்பிடி லாம் உங்களுக்குக் கேக்கத் தோணுது என எரிச்சலாகத்தான் வரும் ஆனால் சிரித்தபடியே கடந்துசெல்வதுதான் ஒரு நல்லக் குடும்பத் தலைவனுக்கு அழகு.
குடும்பஸ்தனாக இருப்பது அப்படி என்ன சவாலான விஷயம் எனக் கேட்கலாம்… சொந்த அனுபவத்திலும் மற்றவரிடமிருந்துமெனக் கேட்டு எழுதினால் 200 பக்கங்களுக்கு சின்னதொரு புத்தகமாகவே எழுதலாம். எழுத்தாளர்களின் சோகத்தைக் கேட்க வாசிப்பவனுக்கு என்ன தலையெழுத்து? எழுத்தாளன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் அவன் வெற்றிகரமான குடும்பஸ்தனாக இருப்பதுதான். முந்தைய தலைமுறை எழுத்தாளர்களில் இதுபோல் வெற்றிகரமான எழுத்தாளர்களாகவும் வெற்றிகரமான குடும்பஸ்தர்களாகவும் இருந்தவர்கள் எல்லாம் உண்மையில் பெரும் சாதானையாளர்கள் தான்.
( குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்விற்காக பெங்களூர் கிளம்பிக் கொண்டிருக்கிறேன், இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகம் திங்கள் இரவு வரும்... இப்பொழுது எழுத்தாளனாக இருப்பதை விட குடும்பஸ்தனாக இருப்பதுதான் சமயோசிதம்.)
Коментарі