top of page

சொர்ணபுரி

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 3 minutes ago
  • 17 min read


அந்த மழைநாளில் கிளி பாடியது

கல்லைத் தொட்ட கை மின்னியது.

கதையைத் தொட்ட நா ஊமையானது.

 

பின்னொரு நாள் கருங்குருவி பாடியது

பெயரை மறந்தவன் உயிர் பிழைத்தான்.

வழியை நினைத்தவன் ஊர் திரும்பவில்லை.



 

1990 வது வருடம் முதல் முறையாக அந்த மலை குறித்த ரகசியத்தை என்னிடம் சொன்னபோது  தாத்தாவுக்கு எண்பது வயது முடிந்திருந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக தீவிரமாக படித்துக் கொண்டிருந்த நான் அவர் சொன்ன கதைகளால்  மனக்குழப்பமடைந்தேன். அதன்பிறகு அடிக்கொரு முறை அவரிடம் அந்த மலை குறித்த மர்மங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்ட என்னிடம்  பேசுவதைக் குறைத்துக் கொண்டார். சொர்ணபுரி என்ற ரகசிய வார்த்தையால் அந்த மலையைப் பற்றிக் குறிப்பிட்டபோது  அவரது சாம்பல் நிற விழிகள் பொன்னிறத்திற்கு மாறின. அவர் அந்த மலையை ஒருபோதும் கோபால்சாமி மலை என்று சொல்லியதில்லை. "சொர்ணபுரி." அந்த வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் அவரது குரலில் ஒரு மாற்றம் நிகழும்.  ஒரு பெயரை உச்சரிப்பது போல் இல்லாமல் நீண்ட காலம்  பூட்டிவைத்திருந்த ரகசியக் கதவொன்றைத்  திறக்கும் சத்தமென இருக்கும்.  பெயரளவில் அவர் எங்கள்  வீட்டிலிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலும் சிந்தனையில்  வெவ்வெவெறு காலங்களில் வாழ்ந்த  மனிதர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் என்றுதான் எனக்குத் தோன்றும்.


தேர்வுகள் முடிந்ததும்  அந்த மலைக்குச் செல்லவேண்டுமென ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நான்,  சில நாட்களிலேயே தாத்தா  இறந்து போவாரென எதிர்பார்க்கவில்லை. அவரது உடலை நாங்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்று திரும்புவதற்குள் அவர் வளர்த்து வந்த கிளிகளும் குருவிகளும் புறாக்களும்  வீட்டிலிருந்து பறந்து போய்விட்டன.  நூற்றாண்டு காலக் கதைகள் தீர்ந்து போன வெறுமையோடு எங்கள் வீடு ஆழமான இருளில் மூழ்கியிருந்தது.


மூன்று மனைவிகள் ஒவ்வொருத்திக்கும்  நான்கு, ஆறு, இரண்டு என பணிரெண்டு பிள்ளைகள். அந்தப் பிள்ளைகளுக்கு பேரன் பேத்திகள் என்ற வகையில் ஐம்பது பேர் கொண்ட பெரிய குடும்பம் அது.  ஒரே வீதியில் வெவ்வேறு வீடுகளில் வசித்து வந்தோம். சொர்ணபுரி குறித்த ரகசியத்தைச் சொன்ன அதே நாளில் தாத்தா இன்னொரு ரகசியத்தையும் சொல்லி இருந்தார்.  தனது மூன்று மனைவிகளில் எவருடனும் எப்போதும் நான் கூடியதில்லை. எந்தப் பெண்ணுடனும் உடல் ரீதியாக பிணையும் சக்தி தனக்கில்லை. ஆனாலும் இவர்கள் மூவரையும் தனக்குப் பிடிக்கும் என்றார். வாரிசுகள் குறித்து அவராக எதுவும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை. அவரது மரணத்திற்குப்பின் இந்த இரண்டு ரகசியங்களுக்குப் பின்னாலிருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற ஆசை என்னுள் நெருப்பாக  எரியத் துவங்கியது.  எங்கள் குடும்பம் குறித்துஎங்கள் தாத்தா  சொன்ன ரகசியத்தை தேடுவது உறவுகளைச்  சிதைத்துவிடும் என உள்ளுணர்வு எச்சரித்ததால் அதைக் குறித்து சிந்திப்பதை கைவிட்டேன். சொர்னபுரியைக் குறித்த  ரகசியம் மட்டும் கட்டுப்படுத்த முடியாத ஓர் மிருகமாய் என்னுள் வளரத் துவங்கியது.


ஆளற்ற பொழுதுகளில் அவர் விட்டுச்சென்ற ரகசியத்தைத் தேடிக்கண்டடையும் துடிப்போடு   பலமுறை அவருடைய அறைக்குள் பிரவேசித்திருக்கிறேன். எல்லாம் அப்படியேதான் இருந்தன. எந்தகாலத்தில் செய்தது எனக் கண்டுபிடிக்க முடியாத பொருட்கள்.  பழைய வெற்றிலைப் பெட்டி. உடைந்த மூக்குக் கண்ணாடி. கணக்கு நோட்டுகள். பூச்சி அரித்த நிலப் பத்திரங்கள். சில பழைய இசைக்கருவிகள். தோலில் உருவாக்கப்பட்ட மிகழப்பழைய வரைபடம். இப்படி  தேடி எடுத்த எந்தவொன்றிலும் நான் தேடிய ரகசியத்திற்கான திறவுகோல் மட்டும் கிடைக்கவில்லை. ஆனால் அவை ஒவ்வொன்றிலுமே யார் கண்ணிலும் படாதவாறு சொர்னபுரியின் பெயர் எழுதப்பட்டிருந்தது.


சில வருடங்களுக்குப்பின்னால்.... இன்னும் சிலர் எங்கள் குடும்பத்தில் மரணித்த பின்னால்.. எங்கள் ஊரில் இன்னொருமுறை பஞ்சம் வந்து கால்நடைகள் பெருமளவில் மரித்துப்போன பின்னால்... ஒடுங்கிய உருவமும் முகம் முழுக்க அடர்ந்த மயிர்களுமாய் நான் வயலில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு நீரருந்த கண்மாய்க்குள் இறங்கியபோது எங்கிருந்தோ பறந்து வந்த கிளியொன்று என் தோளில் அமர்ந்தது. முதிர்ந்த அந்தக் கிளியின் கண்கள் சிறிய அசைவுமின்றி என்னை நோக்கின. என் தாத்தா இறந்தநாளில் தப்பிப்போன பறவைகளில் ஒன்றென அடையாளம் கண்டுகொண்டேன். ஆறுதலாக நாங்கள் கண்மாய்க்கரையில் அமர்ந்து பேசத்துவங்கியபோது... நான் சொல்லும் கதைக்கு நடுவில் ஒருபோதும் உம் கொட்டாதே என்னும் நிபந்தனையுடன் தாத்தா சொன்னதாக அந்தக் கதையைச் சொன்னது.

 

கிளி சொன்ன பாண்டிய இளவரசனின் கதை

 

அது நடந்து பல நூறு வருடமாகியிருக்கும்.  அதிகாரத்திற்காக மனிதர்கள் எத்தனை கொடூரங்களையும் துரோகங்களையும் செய்யத் துணிபவர்களாக இருந்த காலத்தில் தன் முதுகுக்குப்பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் அரசன் சந்தேகத்தோடு பார்த்துப் பழகி தனது சகோதரர்களுல் ஒருநாள் துரோகியாகக் கூடுமென துவங்கிய ஒரு போர். வைகை நதி அந்த ஆண்டுகளில் தண்ணீரைவிட  குருதியை அதிகம் சுமந்ததாகச் சொல்வார்கள். நதிக்கரையில் மீன் பிடிக்க வருகிறவர்கள் வலையை வீசுவதற்கு முன் நீரில் மிதந்துகொண்டிருந்த பிணங்களை கரைசேர்த்த பின்பாகவே வலை வீசினார்களாம்.  பகல் நேரங்களில்  வாள்கள் மோதும் சத்தமும,. இரவில் காயம்பட்ட குதிரைகளின் கனைப்பொலியும் மதுரை நகர மக்களுக்கு அச்சம் மிகுந்த வாடிக்கையானது.  விடியற்காலையில் பிணங்களைத் தேடி நரிகளும் கழுகுகளும் வைகையை  நோக்கிச் சென்றன.  போரில் கொல்லப்பட்டவர்களை தின்று கொழுத்த அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தீராப்பசி.


 நீதிபரிபாலனம் செய்ய வேண்டிய அரசனே   அதிகார வெறியோடு யுத்தம் நடத்தியதால் மக்கள் பசியில் வாடினார்கள். பஞ்சம் தலைவிரித்தாடியது. மந்திரிகளும் ஆலோசகர்களும் அந்த யுத்தம் தொடர்வது ராஜ்யத்திற்கு நல்லதல்ல என எச்சரித்ததால் அரசன் தனது இரண்டு இளைய சகோதரர்களையும் விரைந்து அழிக்க முடிவு செய்தான். செய்தியறிந்து கொண்ட இளைய சகோதரர்களில் ஒருவர் தனது ஆதரவாளர்களோடு சேது சீமை பக்கமாக தப்பித்துவிட, இன்னொருவர் சிறிய படையோடும் நிறைய பொன்னோடும்  தென்பகுதி நோக்கி பயணித்தார். 

வண்டித் தடங்களைத் தவிர்த்துவிட்டு காட்டுப் பாதையின் வழியாகப் யணித்தவர்கள் இரண்டாவது  நாளின்  அந்தி சாயும் நேரமாக  ஓய்வெடுக்க இடம் தேடியபோது தூரத்தில் பெரும் ஒளியைக் கண்டார்கள். ஜோதியின்  பிரகாசத்தைப்போல் தெரிந்த அந்த வெளிச்சத்தை நெருங்கிச் சென்றபோது  வசீகரமானதொரு மலையைக் கண்டார்கள். அதிக உயரமில்லாத கரடுமுரடான பாறைகளாலான  அந்த மலைக்குப் பின்னால்  சூரிய வெளிச்சம் மறையத் துவங்கியபோது வினோதமான மர்மம் கவிழத் துவங்கியது.   ’இந்த மலையில் பொன் இருக்கிறதா?’ என இளவரசர் தனது வழிக்காவலரிடம் விசாரிக்க ‘உறுதியாகத்  தெரியவில்லை இளவரசே. ஆனால் பொன் பற்றிய ஏராளமான கதைகள் நீண்ட காலமாக இந்தப் பகுதியில் சொல்லப்படுவதுண்டு. மலை உச்சியில் பழமையான கோவில் ஒன்றுள்ளது.  வருடத்தில் சில தினங்கள் மக்கள் இங்கு வழிபாட்டிற்கு வருவதுண்டு.’ என வழிக்காவலர் சொன்னார்.  


 கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஊர்கள் இருப்பதற்கான அடையாளமும் இல்லை. ஆட்கள் மிகக் குறைவாகவே வந்து போயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக தடமும் முழுமையற்றிருந்தது. இரவு அந்த மலையடிவாரத்தில் பெரிய  வேம்பு மரங்களுக்கு கீழே அவர்கள் கூடாரம் அமைத்தார்கள்.   பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட தீப்பந்த வெளிச்சத்தில் காட்டிற்குள் மிருகங்களின் நடமாட்டத்தை வீரர்கள் கவனித்தனர். காட்டுப் பூனைகள் தீடீரென வீறிட்டு அலறி சண்டையிட்டுக் கொண்டன. நீண்ட நேரத்திற்குப்பின் அந்த பூனைகளின் சத்தம் ஓய்ந்தபோது பறவைகள் பெரும் கூட்டமாய்  கிழக்கிலிருந்து மேற்காக பறந்து சென்றன.

 கூடாரத்தினுள்  படுத்திருந்த இளவரசருக்கு, ஒற்றர்கள் எந்த நேரத்திலும் தன்னை நெருங்கிவிடலாமென்கிற அச்சத்தில் உறக்கம் பீடிக்கவில்லை.   ஆங்காரத்தோடு ஓடிவரும் குதிரைகளின் குளம்படிகளும் அதனைத் தொடர்ந்து கேட்கும் மனித ஓலங்களின் சத்தமும் நினைவுகளில் மோதி தொந்தரவு செய்தது.   அதிகாரத்தின் மீதிருக்கும்  மோகம் மனிதர்களை ஏன் இத்தனை சுயநலமானவர்களாக்குகிறது என்னும் எண்ணத்தோடு வெளிய வந்தபோது அவரைப்போலவே அந்த  மலையும்  விழித்திருந்தது. மனிதர்கள் உறங்கும்போது  மலைகள் கண்களைத் திறக்கின்றன என சிறுவயதில் அவர் கேட்ட கதைகள் நினைவுக்கு வந்தன. இரவிலும் அந்த நிலப்பரப்பினைச் சூழ்ந்திருந்த மெல்லிய வெளிச்சத்தினைக் கவனித்தவருக்கு  ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. தன்னோடு இருந்தவர்களும் தனக்கு எதிராக இருந்தவர்களும் ஏதோவொரு வகையில்  அரியணையைத் தேடுகிறார்கள், இந்த மலை மட்டுமே தன்னைத் தேடுகிறது. தனது ராஜ்யத்திலிருந்து தப்பிவந்தபோது காட்டில் தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்ததாக நினைத்தவர்  உண்மையில் பாதைதான் தன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்கிற நிதர்சனத்தைத் தெரிந்துகொண்டார்.


பொழுது விடிந்தபோது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட காட்டையும் கடுமையான வெப்பக்காற்றையும் உணர்ந்தார்கள். இளவரசர் சோர்வாக இருந்த வீரர்களிடம் ‘எதையாவது வேட்டையாடி வாருங்கள், நான் மலையில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வருகிறேன்.’ என ஒருவரை மட்டும் துணைக்கு அழைத்துக்  கொண்டு மலையேறினார். தோல்வியடைந்த அரசர்களுக்குப் பாதுகாப்பு படைவீரர்களால் வருவதில்லை; தனிமையால்தான் வருகிறது.  மலை ஏறிக்கொண்டிருந்தபோது இளவரசர் ஒரு விசித்திரத்தை கவனித்தார்.  வானத்தில் வட்டமடித்து பறந்த பறவைகள் ஒருபோதும் மலையின் மீது இறங்கவில்லை.


பாறையில் விழுந்த ஒளி தீவிரமான வெளிச்சத்துடன் கண்களை கூசச் செய்தது. செடிகளோ மரங்களோ இல்லாத மொட்டைப்பாறையின் வெக்கையை எதிர்கொள்வதும் எளிதாக இருக்கவில்லை. எவ்வளவு நீரருந்தினாலும் நா வறண்டது. சிறிது தூரத்திலேயே  குகை ஒன்றைக் கண்டவர் அதற்குள் ஓய்வெடுக்க நினைத்தார். அந்தக் குகைக்கு வெளியே  பாறையின் நிழல் வசீகரமான உருவமாய் படர்ந்திருந்தது. நிழலுக்குள் ஒதுங்கியபோது  அதுவரையில்லாத குளிர்ச்சியை உணர்ந்து சற்று ஆசுவாசம் கொண்டார்.  பெரிய பாறைகள் வழியை மறைத்திருந்ததால் எளிதில் பாதையை உருவாக்கும் சாத்தியமில்லாமல் இருந்தது. ஏமாற்றத்தோடு மலையேறியவர் உச்சியிலிருந்த கோவிலை அடைந்தபோது காற்றில் வெப்பம் குறைந்திருந்தது. வியர்த்திருந்த உடலை காற்று தழுவியபோது இதமாயிருந்தது. கதுவுகள் எதுவுமில்லாமல் திறந்திருந்த கோவிலில் பெருமாள் சயன நிலையிலிருந்தார். நீண்டநேரம் கண்மூடி அமர்ந்து பிரார்த்தனை செய்தவருக்கு பசியாற வேண்டி காவலாளி  கோவிலுக்கு பின்புறம் நின்றிருந்த மஞ்சனத்தி மரங்களிலிருந்து பழங்களை பறித்தார். பிரார்த்தனை முடிந்து வந்த இளவரசனிடம் பழங்களைத் தந்தபோது அதிலிருந்து இரண்டு பழத்தை எடுத்து கோவில் வாசலில் வைத்தவர் மிச்சத்தை காவலாளியோடு பகிர்ந்துகொண்டார். அவர்கள் இருவரும் பேசியபடியே அடிவாரம் வந்தது சேர்வதற்கும் வேட்டைக்குச் சென்றவர்கள் முயல் இரைச்சியை சமைத்து தயார் செய்வதற்கும் சரியாக இருந்தது. 


அடுத்த நாள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே மலையிலிருந்த குகைக்குள் செல்வதற்கான பாதையை உருவாக்கும் பணிகளைத் துவங்கினார்கள். சிறிது நேரத்திற்குப்பின் பாறை திடீரென உடைந்து ஒரு விரிந்த பள்ளத்தாக்கைப் போல திறந்தது. அதன் நடுவே ஒரு கருமையான வாயைப்போல் குகை. தொலைவிலிருந்து  பார்த்தபோது அடர்ந்த இருளாகத் தெரிந்தது.  அருகில் சென்றபோதுதான்,  வெளிச்சம் நுழைய முடியாத அளவுக்கு பழமையான நிழலெனக் கண்டுகொண்டார்கள். அந்த நிழலுக்குப் பின்னாலிருந்த குகையிலிருந்து காற்று வெளியேறியது. நீண்டகாலம்  பாறைகளுக்குள் அடைந்து கிடந்த காற்றை இளவரசர் கை நீட்டித் தொட்டார். ஒருபோதும் உணராத அதீத குளிர்ச்சியில் உடனே கையை பின்னெடுத்துக்கொண்டார்.

இந்தக் குகைக்கள்  இதற்கு முன்னர் யாரேனும் சென்றிருக்கிறார்களா? என வழிக்காவலரைப் பார்த்துக் கேட்டார்.

’ஆம் இளவரசே... ஆனால் ஒருவர் கூட திரும்பியதில்லை’ என வழிக்காவலர் அமைதியாகச் சொன்னார். 

இளவரசர் அந்தக் குகைக்கு வெளியே இருந்த பாறைகளையும் மரங்களையும் பார்த்தார்.   பாறைகளைச் சுற்றிப் படர்ந்திருந்த வேர்கள் குகையின் பக்கமாக நீளவில்லை. குகையிலிருந்து வெளியேறி பாறைகளை நோக்கி வந்ததும் தாக்கிய வெயிலின் தகிப்பு சிறிதும் குகையில் இல்லை. எல்லாவற்றையும் குழப்பத்தோடு பார்த்தவரிடம் ’இந்த மலையில் சில ரகசியங்களைத் தொடுவதற்கு இயற்கைத் துணிவதில்லை’ என வழிக்காவலர் சொன்னார். அவரைத் திரும்பிப் பார்க்காமலேயே குகைக்கான பாதையை உருவாக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்யச் சொல்லி இளவரசர் உத்தரவிட்டார்.


மூன்றாம் நாள், குகைக்குள் இரண்டு மனிதர்கள் நிமிர்ந்து நடக்கக்கூடிய அளவுக்கு பாதை உருவானது.  பகலில் இருளாகத் தெரிந்த அந்தக் குகை மாலை நெருங்கியபோது  ஒளிரத் தொடங்கியது. அது தீயின் வெளிச்சத்தினைப் போல் தீவிரமானதாக இல்லாமல்  ஒளியே அந்தப் பாறையின் தோலில் பிறந்து மெதுவாக வெளியேறுவதைப் போலிருந்தது. அந்த வெளிச்சத்தின் வசீகரத்தில் மூழ்கிப்போன இளவரசர் தன்னோடு எடுத்து வந்த பொற்காசுகள் நிறைந்த பெட்டிகளை எல்லாம் குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மைகளென நினைத்துக் கொண்டார். இத்தனை காலம்  சேர்த்துவைத்த செல்வம், புகழ், அதிகாரம், கோபம் எல்லாவற்றையும் ஒரே பார்வையில் சிறியதாக மாற்றிவிட்ட அவமானத்தை அந்த மலை அவருக்குத் தந்தது, மலையைவிட்டு கீழே இறங்க விரும்பாதவர்களாய் வீரர்கள் அன்றிரவு குகையைச் சுற்றியிருந்த பாறைகளின் மீதும் மரத்தடியிலும் ஓய்வெடுத்தனர்.


நள்ளிரவுக்குப் பின்,  ஒரு வீரன் திடீரென எழுந்து மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது தடித்த குரலொன்று அவனை பிடித்து நிறுத்தியது.

"எங்கே போகிறாய்?"

சத்தம் கேட்டு அவன் திகைத்ததைப்போல் பாதி உறக்கத்திலிருந்த பிற வீரர்களும் கூட எழுந்து விட்டார்கள். மேகங்களுக்கு நடுவே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த அரைநிலா மெல்ல யாரும் பார்க்காதபடி தன்னை மறைத்துக் கொண்டது. தன்னைச் சுற்றியிருந்தவர்களைத் திரும்பிப் பார்த்த அந்த வீரன்

"நான் எங்கேயும் போகலையே." என குரல் நடுங்கச் சொன்னான். ஆனால் அவன் கால்கள் குகையின் வாசலை நெருங்கிவிட்டிருந்ததை எல்லோரும் கவனித்தனர்.  அவன் உடல் நடுங்க மயங்கி விழுந்தான்.

மறுநாள் காலை அந்த வீரனைத் தவிர்த்து மற்றவர்கள்  குகைக்குள் சென்றார்கள். முந்தைய நாள் மாலை அவர்கள் உணர்ந்த காற்று மீண்டும் அவர்களைத் தழுவிக் கொண்டது. அது வேறு எந்தக் காற்றையும் போல இல்லை.


அதில் ஈரமான மண்ணின் மணமோ அழுகிய இலைகளின் வாசனையோ இல்லை.  உருக்கப்பட்ட உலோகத்தின் மணமுமில்லை. அது காலத்தின் வாசனை, நீண்டகாலம் அடைத்துவைக்கப்பட்ட கோவிலின் வாசனை. என தங்களின் நினைவிலிருந்த ஒவ்வொன்றாக அடையாளப்படுத்திக் கொள்ள முயன்றபோது இளவரசர் சொன்னர் ’இந்தக் காற்றிலிருப்பது நினைவுகளின் வாசனை.’  அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் குகையின் மர்மத்தை விடவும் தீவிரமான அதிர்ச்சியை அவர்களுக்குள் ஏற்படுத்தியது.


இளவரசர் தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தபடி குனிந்து உள்ளே நுழைந்தபோது வீரர்கள் ஒவ்வொருவராகத் தொடர்ந்தார்க்ள். வழிக்காவலரும் துணையாக ஒரு வீரரும் இளவரசருக்கு முன்னால் சென்றார்கள. எல்லோரது கைகளிலும் தீப்பந்தம். அந்தப் பந்தங்களிலிருந்து கசிந்த ஒளி பாறைகளின் மீது பிரதிபலிப்பதற்குப் பதிலாக கரைந்துபோனது. அவர்கள் குகையின் உட்பகுதியை நோக்கி சிறிது பயணித்தபின் புதிய காலடிகள் கேட்கத் துவங்கின. இவர்கள் நடப்பதை நிறுத்தியபின்னும் கூட  அந்தக் காலடிச் சத்தங்கள் அதே உறுதியோடு கேட்க முன்னால் நடந்து சென்ற வீரன் தனது தீப்பந்தத்தை உயர்த்திப் பார்த்தான். ஏதோவொன்று நகர்ந்து சென்றது. அதென்ன மனிதனா? அல்லது நிழலா? என தெரிந்துகொள்ளும் முன்பாகவே மீண்டும் காலடிச் சத்தங்கள். ஓராயிரம் பேர் அந்த சின்னஞ்சிறிய குகைக்குள் நடந்தால் கேட்கும் பெரும் ஒலி கேட்க இளவரசரும் அவரோடு வந்தவர்களும் அச்சத்தோடு நின்றார்கள்.


"திரும்பிப் போகலாமா?" என இளவரசருக்குப் பின்னாலிருந்த   வீரன்  கேட்டான். இளவரசர் பதில் சொல்லவில்லை. மனிதர்களை அச்சம் சூழும்போது மொழி மறந்துபோகிறது. எத்தனை காலம் அந்தக் குகைக்குள் இருந்திருக்கிறோம் என்பதை உணரமுடியாதபடி காலம் உறைந்துகிடந்தது. அவர்கள் உள்ளே நுழைந்து ஒரு நாழி இருக்குமா? அல்லது மூன்று நாழிகள். அல்லது ஒரு நாள். மீளமுடியாத காலத்தில் உறைந்துவிட்டிருந்த பீதியிலிருந்தார்கள். அந்த  குகை முடிவற்ற ஒரு எல்லையாக அவர்களுக்கு முன்னால் விரிந்திருந்தது. அவர்கள் கைகளிலிருந்த தீப்பந்தங்களின் நெருப்பு நடுங்கியது. அவர்களுக்கு முன்னால்  மெல்லிய வெளிச்சம் தெரிய,  வெளியேறுகிற வழியாக இருக்கும்  என்றபடியே எல்லோருக்கும் முன்னால் சென்ற வீரன் அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தான். ’பொறு அவசரப்படாதே என இளவரசர் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே அவன் ஒளியில் கரையத் துவங்கினான். அவனைத் தழுவிய ஒளி பாறைகளின் மீது ஊர்ந்து பிரம்மாண்டமாக பிரதிபலித்தது.


நதியொன்று பிரவாகமெடுத்து ஓடுவதைப்போல் திடீரென தங்களுக்கு முன்னால் விரிந்திருந்த பிரம்மாண்டத்தில்  இப்போது ஏராளமான  உருவங்களைக் கண்டார்கள். முதலில் அவை எல்லாமே சிலைகளாக இருக்குக்கூடுமென நினைத்தார்கள். ஆனால் அவை சிலைகள் அல்ல, மனிதர்கள் . காலத்தில் உறைந்துபோன ,மனிதர்கள். ஒருவன் குனிந்து ஏதோ எடுக்க முயன்றபடியே நின்றிருந்தான்.இன்னொருவன் இரண்டு கைகளையும் விரித்திருந்தான்.


ஒரு பெண் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தாள்.ஒரு முதியவன் சிரித்துக்கொண்டிருந்தான். அவர்களுடைய முகங்களில் மரணத்தின் அமைதி இல்லை. இறப்பதற்கு முந்தைய கணம் முன்புவரை உயிரோடு இருந்தவர்களின் அதிர்ச்சி மட்டுமே இருந்தது. வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் நினைவுகளை அந்தக் குகை அப்படியே உறைய வைத்திருந்தது. உறைந்துபோன அந்த மனித பொற்சிலைகளுக்கு நடுவே பெரும் குவியல்களாய் பொற்காசுகள். அணிகலன்கள். கிரீடங்கள்.


அவற்றின் மீது தூசி இல்லை. காலமும் படியவில்லை. அவை யாருக்காகவோ காத்திருந்தன. எல்லோருக்கும் முன்னால் சென்ற வீரன் அந்தக் குவியலில் ஒரு  பொற்காசை தொட்டிருந்தான். அந்தத் தொடுகையிலேயே தான் மஞ்சள் நிறம் பிசாசைப்போல் எழுந்து வந்திருந்தது. பொன்னாகிக் கொண்டிருக்கும் வீரனை மற்ற வீரர்கள் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருக்க


அவனை உடனே இழுங்க..."  என பின்னாலிருந்து ஒரு  வீரன் அலறினான். ஒருவருக்கும்  நகரும் துணிவில்லை. இளவரசன் மெதுவாக முன்னேறி தனது வாளின் முனையால் அந்த வீரனின் தோளைத் தட்டினார். உலோகத்தைத் தட்டியது போல ஒலி எழுந்தது. அவன்  இனி மனிதனில்லை. அவனது  உடலுக்குள் ஓடிய இரத்தம் கூட பொன்னாக மாறிவிட்டது போல அசைவற்று நின்றான்.  குகையில் முழுமையான அமைதி சூழ்ந்தது. அந்த அமைதிக்குள்ளிருந்து  இளவரசர்  நீரின் சத்தத்தைக் கேட்டார்.    


டப் டப் டப்பென ஒவ்வொரு துளியின் நீரின் சத்தத்தையும் அவரால் கேட்க முடிந்தது.  எங்கோ ஆழத்தில் நீர் விழுந்துகொண்டிருந்தது..

மனிதர்களுடைய உலகத்தில் மட்டுமே செல்வமும் தண்ணீரும் ஒன்றையொன்று மறுக்கின்றன. இயற்கையில் அவை ஒரே குகைக்குள் பக்கத்தில் பக்கத்தில் வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொண்ட இளவரசர் அந்த சத்தத்தைக் கேட்டபடியே மண்டியிட்டு அமர்ந்தார். இந்த மலை ஒளித்து வைத்திருக்கும் ரகசியம் பொன்னல்ல, நீர்... ஒருபோதும் வற்றாத நீர். பூமி உருவான காலம் தொட்டு சேர்ந்திருக்கும் நீர்.  பேராசையோடு வருபவர்களுக்கு  பொன்னின் வெளிச்சம் மட்டுமே கண்ணை மறைக்கும். தாகத்தோடு வருபவர்களால் மட்டுமே நீரைக் கண்டுகொள்ளமுடியுமென்கிற உண்மை புரிந்தது. தான் விரும்பிய கிரீடத்தின் மீது அருவருப்பு வந்துவிட தன்னோடு வந்தவர்களைத் திரும்பிப் பார்க்காமலேயே மதுரையிலிருந்து எடுத்து வந்த அத்தனைப் பொற்காசுகளையும் மலையைச் சுற்றி புதைக்கச் சொல்லிவிட்டு வந்த வழியிலேயே திரும்பி நடக்கத் துவங்கினார். இப்பொழுது தீப்பந்தங்களின் வெளிச்சம் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு வழிகாட்டியது.

 

அத்தனை விருப்பங்களையும் ஒரு கணத்தில் துறந்த இளவரசனைப் பற்றி கிளி சொன்னதைக் கேட்டதும் ஆர்வத்தில் தூண்டப்பட்ட நான் ’அப்போ அந்த தங்கம் எல்லாம் இன்னும் மலையச் சுத்திதான் இருக்கா?’  எனக் கேட்க, என்னை ஒரு முட்டாளைப்போல் அமைதியாகப் பார்த்த கிளி ’நீ விதிகளை மீறிவிட்டாய் எனச் சொல்லிவிட்டு உடனே பறந்து சென்றது.  பாதி உண்மைகளைத் தெரிந்துகொண்ட நான் மீதி உண்மைகளைக் கண்டடையும்  வழி தெரியாமல் குழம்பி நின்றேன்.

 

இன்னும் சில நாட்கள் கடந்தன. எங்கள் ஊருக்கு அருகிலிருந்த மலைகள் பாதிக்கும் மேல் அழிக்கப்பட்டு ஊரைச்சுற்றி தூசிப்படலங்கள் படரத் துவங்கியிருந்த நாளொன்றில்  முயல் வேட்டைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய அதிகாலையில் கருங்குருவி என்னை நோக்கி பறந்து வந்தது. என் தாத்தா வளர்த்த பறவைகளில் ஒன்றெனத்  தெரிந்துகொண்ட நான் அதனோடு உரையாடக் காத்திருந்தேன். ’எந்த இடத்திலும் நீ குறுக்க பேசக் கூடாதென்கிற நிபந்தனையோடு குருவி பேசத் துவங்கியது.


 

குருவி  சொன்ன ரெங்கநாயக்கர்  கதை


அந்தக் காட்டிலிருந்த எல்லா மிருகங்களும் அழிந்தன. எல்லா பறவைகளும் வேறு நிலம் சென்றுவிட்டன. பல நூறு மழைக்காலங்களுக்குப்பின்  பாண்டிய இளவரசனைக் குறித்த நினைவுகளும் அழிந்தன. ஆனால் அந்த மலையின் மீது மாலைச் சூரியன் விழும்போதெல்லாம் அது பொன்னிறமாக மின்னுவது மாறவில்லை.  மலையைப் பற்றின கதைகள் காட்டைத் தாண்டி ஊர்களுக்குள் பயணித்தன. பறவைகள் விதைகளையும் பழங்களையும் விழுங்கிவிட்டு பறக்குமிடமெல்லாம் கழிவுகளாக விட்டுச் செல்வதைப்போல் கதைகளையும் விட்டுச் சென்றன. அந்தக் கதைகள்  நீரிலும் காற்றிலும் மரங்களிலும் கலந்து மனிதர்களின் நினைவுகளில் சேர்ந்தன.  ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்பட்ட ரகசியத்தைப்போல் முடிவின்றி பயணித்தன.  

அப்படித்தான் ஒரு காலத்தில். மலையைத் தூரத்திலிருந்து பார்த்தால் திருமாலுக்கு வைக்கப்படும் கிரீடத்தைப் பார்ப்பதுபோல் தெரியக்கூடிய தூரத்திலிருந்த ஊர்களை ரெங்கநாயக்கர் என்னும் ஜமீன் ஆண்டு வந்தார். குள்ளமாகவும் பருத்த உடலோடும் இருந்த அவரை குட்டராஜா என மக்கள் ரகசியப் பெயரில் அழைத்தனர். கதை கேட்பதில் ஆர்வம் கொண்ட குட்டராஜா வெவ்வேறு ஊர்களிலிருந்து கதை சொல்லிகளை அழைத்துவந்து நாள்தோறும் கதை கேட்பார்.


மக்கள் ராஜாக்களைப் பற்றிக் கேட்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ராஜா காடுகளையும் மலைகளையும் யானைகளையும் பற்றிக் கதை கேட்பதில் ஆர்வம் காட்டினார். அவர்மீது எந்தப் புகார்களும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஒருபோதும் இல்லாத துயரமாய் தொடர்ந்து மூன்று வருடங்கள் வானம் தன் கதவுகளை மூடிக்கொண்டது.  கிணறுகளும் குளங்களும் கண்மாய்களும் வறண்டு போயின.  மண்ணில் நீரோட்டம் இருப்பதற்கான தடம் முற்றாக அழிந்து பாளம் பாளமாய் இறுகிப்போனது.  வெக்கையில் அருகிலிருந்த காடு எரிந்து புகைமண்டலம் ஊரைச் சூழ்ந்தது. நீருந்த முடியாமல் மக்கள் ஒடுங்கிப்போனார்கள். தாகத்திலும் பசியிலும் உடல் சுருங்கி தங்கள் வீடுகளில் முடங்கிப் போனார்கள்.


பசியின் தீவிரத்தை வயிற்றுக்கு முன்பாக கண்களே வெளிப்படுத்துகின்றன. தனது தானியக்கிடங்கிலிருந்த ராகி, சோளம் எல்லாம் தீர்ந்து போனது. பொதுமக்களைப் போலவே ஜமீன் குடும்பத்தினரும் பஞ்சத்தால் தவிக்க, ஒரு மாலை, அரண்மனையின் பின்வாசல் வழியாக மாறுவேடத்தில் அவர் வெளியேறினார். அரசர்கள் தங்கள் நாட்டைப் பார்க்கும்போது, மக்கள் அவர்களைப் பார்க்கக் கூடாது என்பது மரபு.  அன்றிரவு அவர் பார்த்த ஒவ்வொரு காட்சியும் அவரை உலுக்கிப் போட்டன. ஒரு வயதான பெண், தன் வீட்டின் முன் இருந்த கடைசி மண்குடத்தைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். இரண்டு சொட்டு நீர் மட்டுமே விழுந்தது. அவள் அதைத் தன் பேரனுக்குக் கொடுக்கவில்லை. வாசலில் படுத்திருந்த மெலிந்த நாய்க்குக் கொடுத்தாள். அந்த நாய் குடித்துக்கொண்டிருக்கும்போது, சிறுவன் எதுவும் பேசவில்லை. அந்த சிறுவனின்  மௌனம்தான் ரெங்கநாயக்கரை உடைத்தது.


ஆபரணங்களையும் விலை உயர்ந்த ஆடைகளையும் தொலைவில் உள்ள நகரங்களில் விற்றுவிட்டு சோளம் வாங்கி வரச்சொல்லி முப்பது மாட்டு வண்டிகளை அனுப்பினார். பசியில்  வாடிப்போன மாடுகளின் கண்கள் நீரைத் தேடி தவித்தன. ஒரு பகலும் இரவும் பயணித்தபின் அவர்களுக்கு நீர் கிடைத்தது. பின்பு திருமங்கலத்தைத் தாண்டியபோதுதான் உணவு கிடைத்தது. மதுரையை அடைந்து அவர்கள் தங்களிடமிருந்த பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு வண்டிகளில் சோளம் மற்றும் குதிரைவாலி மூட்டைகளை ஏற்றினார்கள். இரண்டு முழு நாட்கள் வழியெங்கும் திருடர் பயத்தோடு பயணித்து ஊர் திரும்புவதற்குள் இன்னும் சிலர் மரணித்திருந்தனர். நாய்களின் குரைப்பொலியே கேட்கமுடியாத அளவிற்கு கடும் அமைதி. அந்தமிருகங்களில் வேறு மிருகங்கள் இருப்பதற்கான அடையாளமில்லாமல் போனது.  பறவைகள் இந்த வறண்ட நிலத்தைக் காண சகிக்காமல் தூரத்திலேயே திரும்பி வேறு பக்கமாகப் பறந்தன. மதுரையில் வாங்கி வரப்பட்ட தானியங்கள் மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கப்பட்டபின், ராஜா தனது அவையில் இப்படிச் சொன்னார்.


"நம்மால் மழையை வரவழைக்க முடியாது. ஆனால் மண்ணுக்குள் இருக்கும் தண்ணீரைத் தேடலாம்." அவரது சொற்களில் இருந்த சாத்தியமற்ற உண்மைக்குப் பின்னாலிருந்த சவாலைப் புரிந்துகொண்ட அமைச்சர்கள் குழம்பினார்கள்.  கருவூல அதிகாரி சேகாரத்திலிருந்த  தங்கத்தைப் பார்த்தான். ஊரைச் சேர்ந்த  முதியவர்கள் மண்ணைப் பார்த்தார்கள். என்னவானாலும் நீரைத் தேடும் தன்னுடைய பயணத்தை நிறுத்துவதாக இல்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.


அடுத்த வாரமே முதல் கிணறு வெட்டப்பட்டது. ஐம்பது அடி, அறுபது அடி, எழுபது அடியென பாறைகள் உடைந்து வழிவிட்டாலும் நீர் இருப்பதற்கான தடயமில்லை. நம்பிக்கையிழந்து சோர்ந்துபோன முகங்களோடு ஊர்மக்களும் அதிகாரிகளும் திரும்பினார்கள். இரவில் வெக்கை படர்ந்த தரையில் படுத்துறங்கும்போது எங்கோ வெகு ஆழத்தில் நீர் வழிந்து ஓடும் மெல்லிய சத்தத்தை மக்கள் கேட்டனர். அது உண்மையிலேயே நீரின் ஒலியா அல்லது பிரம்மையா? அந்தச் சத்தம் அவர்களை பித்துகொள்ளச் செய்தது. சிலர் மனம் பிசகி வீறிட்டு அலறினர். மூன்று நாட்களுக்குப்பின் ராஜா நம்பிக்கையோடு இரண்டாவது கிணற்றை வெட்டச் சொன்னார். இந்தமுறை தொன்னூறு அடிகள் வரை போராடிப் பார்த்தார்கள். நீர் அவர்களோடு கண்ணாமூச்சி விளையாடியது. அதன் ஒலியைக் கேட்கமுடிந்தது. ஆனால் ஈரப்பதத்தை உணரமுடியவில்லை.  மூன்றாவது கிணறும், நான்காவது கிணறும் வெட்டியபோதும் ஏமாற்றங்களே மிஞ்சின. ராஜாவைத் தவிர எல்லோரும் சோர்ந்து போனார்கள். தான் கேட்ட பல நூறு கதைகளில் இயற்கை எப்போதும் மனிதர்களின் மீது பெரும் கருணையோடு இருந்ததை நினைவில் கொண்டவர் எப்படியும் நீரை அடைந்துவிடலாம் என நம்பினார். ஆனால் கிணறு வெட்டச் சென்றவர்கள்  ஒவ்வொரு முறையும் மண்ணுக்குள்ளிருந்து கொண்டு வந்தது   நம்பிக்கையிழப்பைத்தான்.


ஆறாவது கிணறும் அவர்கள் ஏமாற்றிய நாளில் அதிகாரிகளும் ஊர்மக்களும் நாங்கள் பசியில் வேண்டுமானால் செத்துவிடுகிறோம், ஆனால் இந்த தண்டனை எங்களுக்கு வேண்டாம். என அழுதபடியே வீடு திரும்பினார்கள்.

"இந்த மண் இனி  தண்ணீரைக் கொடுக்காது." என அவர்கள் புலம்பியவர்கள் தங்கள் விதியை நினைத்து நொந்துகொண்டார்கள்.  அன்றிரவு  ஊரடக்கியபின் ரெங்கநாயக்கர் தனியாக கோபால்சாமி மலையை நோக்கி நடந்தார்.  தான் நம்பியதுபோல் இயற்கை கருணை வாய்ந்ததில்லையோ என்னும் ஏமாற்றத்தில் நீண்டதூரம் நடந்தவரை வெறுமையான மேகங்கள் தொடர்ந்தன.  வானில் நிலவு இல்லை. எங்கும் இருள். மனித குலத்தையே விழுங்கத் துடிப்பதுபோன்ற மூர்க்கத்தோடு  பரவிக் கிடந்த இருள். தூரத்தில் கோபால்சாமி மலையின் பாறைகள் மட்டும் வெளிச்சத்தை மறக்காமல் வைத்திருந்தன. அந்த வெளிச்சத்தைத் தொடர்ந்து நடந்தவர் விடிவதற்குள்ளாகவே மலையடிவாரத்தை அடைந்துவிட்டார். ஓய்வெடுக்க மாத்தடியில் அமர்ந்தவரை ராஜாளிக் கழுகொன்று நெருங்கி வந்து பார்த்துவிட்டுப் பறந்தது. பூச்சிகளின் சத்தங்களைக்கூட கேட்கமுடியாத அமைதியில் மலையேறத் துவங்கினார்.


அவர் உச்சியை அடைந்தபோது, பழைய பெருமாள் கோவில் காற்றின் சத்தத்தால் நிரம்பியிருந்தது. கருவறைக்குள் விளக்கு இல்லை. பூசாரி இல்லை. ஆனால் சற்று முன்புதான் யாரோ அங்கிருந்து எழுந்து போனதுபோல ஒரு இருப்பு இருந்தது. ரெங்கநாயக்கர் பெருமாளின் முன் மண்டியிட்டு அமர்ந்தார். நீண்ட நேரம் பேசவில்லை. ’என் மக்கள் அருந்த நீரைக்கொடு... அவர்கள் பசியும் தாகமும் தீர்ந்த நாளில் என் கிரீடத்தை மட்டுமல்ல என் சிரசையும் காணிக்கையாகத் தருகிறேன்’ என முனுமுனுத்தார். கண் திறக்கமுடியாத பசியில் அப்படியே மயங்கிக் கிடந்தவர் மயக்கம் தெளிந்தபோது சூரியன் மேற்கில் மறைந்திருந்தது. அவருக்கு முன்னால் சில மஞ்சனத்திப் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பழங்களில் ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடத் துவங்கினார். சூடு நாவில் பரவியது. தூரத்தில் தெரிந்த தனது ஊரை பார்த்தபடியே அந்த இரவு அவர் கோவிலிலேயே உறங்கினார்.


விடியற்காலையில் அவர் எழுந்து நின்றபோது, அவர் முகத்தில் பயமில்லை. தெளிவான முடிவுக்கு வந்திருந்தார். அரண்மனைக்குத் திரும்பியவுடன் தனது அதிகாரிகளை அழைத்து ஏழாவது கிணறை வெட்டச் சொன்னார். எல்லோரும் திகைத்துப்போய் பார்த்தார்கள். "கருவூலம் காலியாகிவிட்டது.ராஜா..” என ஒருவர் சொன்னபோது பெருமாள் கொடுப்பார் என ஜமீன் சிரித்தார்.


"மக்கள் நீரின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்." என இன்னொரு அதிகாரி சொன்னபோது ’நம்பிக்கையை இழந்தது மக்கள் அல்ல’ என ரெங்கநாயக்கர் சிரித்தார். தனது முடிவிலிருந்து அவர் பின்வாங்கப்போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்ட அதிகாரிகள் சோர்வோடு வெளியேறினார்கள். முரசறைந்து ஊர் மக்களிடம் செய்தி சொல்லப்பட்டது. துளியும் நம்பிக்கையின்றி மக்களும் அந்த வேலைக்குக் கிளம்பினார்கள். இந்த முறை ராஜா எல்லோருக்கும் முன்பாக களத்தில் நின்றார்.  மெலிந்து ராஜகளை இழந்த அவர் வேலை செய்வதைக் காண சகிக்காமல் மக்கள் அவரை ஓய்வெடுக்கச் சொன்னார்கள்.


ஏழாவது கிணறு வெட்டத் துவங்கிய சில நாழிகைக்குப்பின் ஒரு ராஜாளி பறந்து வந்தது.  வேலை செய்யும் மக்களைச் சுற்றி வட்டமடித்தது. ராஜா அதனை அடையாளம் கண்டுகொண்டார். மக்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள். முதல் நாள் பகல் முழுக்க முதுகொடிய அவர்கள் வேலை பார்த்தும் மண் மட்டுமே வந்தது. அவர்கள் இந்தமுறை நம்பிக்கையை கைவிடுவதாக இல்லை.  இரண்டாம் நாளும் தீவிரமாக வேலை செய்தார்கள். மண் முடிந்து பாறைகள் வந்தன. மூர்க்கமாக மன்வெட்டிகளும் கடப்பாறைகளும் பாறைகளில் மோதி உடைத்தன.


மூன்றாவது நாள் காலை அவர்கள் வேலையைத் துவங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு முதிய தொழிலாளி  அந்த சத்தத்தைக் கேட்டான். மிக அருகில் நீர் ஓடும் சத்தம். எல்லோரையும் வேலை செய்வதை நிறுத்தச் சொல்லிவிட்டு பாறையில் காதுகளை வைத்துக் கேட்டான். நீர் பாறையைப் பிளந்து வெளியேறத் துடித்துக் கொண்டிருந்தது.  எல்லோரும் அமைதியாக நின்றார்கள். பாறைக்குள் இருந்து யாரோ மெதுவாக மூச்சுவிடுவது போல இருந்தது. அது நீரின் ஒலி அல்ல. நீர் வருவதற்கு முன் பூமி விடும் பெருமூச்சு.சிறிது நேரத்தில் பாறையின் விரிசலில் ஒரு சொட்டு நீர் தோன்றியது. ஒரு சொட்டு. இன்னொரு சொட்டு. பிறகு ஓர் இழை. அதற்குப் பிறகு தண்ணீர். அந்த முதிய தொழிலாளி தன்கையிலிருந்த கடப்பாறையால் ஓங்கி பாறையில் மோத நீர் பீறிட்டுக் கிளம்பியது. பல நூற்றாண்டுகளாக வெளியேறத் துடித்த ஆங்காரத்தோடு நீர் பொங்கி வந்தது. மக்கள் சந்தோசத்தில் அலறினார்கள், நீரை அள்ளி உடல் முழுக்க தழுவிக் கொண்டார்கள். அவர்கள் மேலே ஏறி வருவதற்குள் பாதி உயரத்திற்கு கிணற்றில் நீர் வந்துவிட்டது. ராஜா கோபால்சாமி மலை இருந்த திசைநோக்கிக் கும்பிட்டார்.


அந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவுவதற்குள் இன்னொரு அதிசயம் நடந்தது. இதற்கு முன்னால் வெட்டப்பட்ட ஆறு கிணறுகளிலும் நீர் ஊறத் துவங்கியிருந்தது.  மண்ணுக்குள் பல நூற்றாண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்த  நரம்புகளை யாரோ ஒரே நேரத்தில் எழுப்பிவிட்டதைப்போல் நீர் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வெளியேறி இருந்தது. மக்கள் நன்றியோடு ராஜாவைப் பார்க்க அவர் யாரையும் திரும்பிப் பார்க்காமல் மலையை நோக்கி நடந்தார்.  இந்தமுறை அவரோடு நம்பிக்கையான ஏழுபேர் தொடர்ந்து சென்றார்கள்.


அடிவாரத்திலிருந்து மலையேறியவர் இந்தமுறை கோவிலுக்குச் செல்லவில்லை.  குகையை நோக்கி நடந்தார்.  வாயிலில் நின்றபோது, உள்ளிருந்து வந்த குளிர்ந்த காற்று அவரது நெற்றியில் பட்டது. கண்களை மூடிக்கொண்டார்.

"தாகத்தைத் தீர்க்க வந்தவன் உள்ளே வா." என்ற எதிரொலியைக் கேட்டு

அவர் உள்ளே நடந்தார்.  பின்னால் வந்த ஏழு பேரும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். குகை அவர்களுக்குப் பின்னால்  அமைதியாக  மூடிக்கொண்டது குகை.


கதை கேட்டுக்கொண்டிருந்த நான் மலைத்துப்போனேன். அதன்பிறகு என்னவானது? ராஜா திரும்பிவந்தாரா? உண்மையிலேயே புதையலை அவர் எடுத்துக் கொண்டாரா என ஆர்வத்தில் நான் கேட்டுவிட கதையை நிறுத்திய குருவி வேகமாக சிறகடித்துப் பறந்துபோனது.


புதையலின் மீதிருந்த ஆர்வம் போனது.  பிழைப்புதேடி  ஊலிருந்தவர்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். ராஜபாளையம் மில்களில் சிலரும் மதுரையைச் சுற்றியிருந்த கம்பெனிகளில் சிலரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். கைவிடப்பட்ட வீடுகளின் சுவர்களிலிருந்து மண் உதிர்ந்து சிதிலமடைந்தது. நாய்கள் வெயிலுக்கு ஒதுங்கும் இடமாக மாறிப்போனது. நான் கதைகேட்பதில் கூட ஆர்வமிழந்தவற்றுப்போயிருந்தேன். ஒரு மழை நாளில் எங்கிருந்தோ வந்த புறா எனது வீட்டின் தாழ்வாரத்திலிருந்த மரப்பெட்டியில் அமர்ந்தது. நான் உரையாட விருப்பமிலலாதவனாக முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

 

’நீ கேட்க விரும்பாவிட்டாலும் சொல்ல வேண்டியது என் கடமை. இந்தக் கதைகளை நீ சுமக்க வேண்டுமென்பது உன் விதி...’ என சொல்லிவிட்டு புறா வேறொரு காலத்தில் நடந்த கதையை சொல்லத் துவங்கியது.

 

ப்ரிட்டிஷ்காரர்களைப் பற்றி புறா சொன்ன கதை.


காலம் கதைகளின் முகங்களை வேகமாக மாற்றிவிடுகிறது. பாண்டிய இளவரசனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள்  மடிந்து போனார்கள். ரெங்கநாயக்கரின் பெயர் அவர் வெட்டிய  கிணறுகளின் காரணமாய்  உயிரோடு இருந்தது. ஆனால் கோபால்சாமி மலையைப் பற்றி சொல்லப்பட்ட கதைகள் மட்டும் ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாகப் பிறந்தன.  ஆயிரம் ஆயிரமாய்ப் பிறந்த கதைகள் ஆயிரமாயிரமாய்க் காரணங்களையும் கண்டுகொண்டது.


ஒரு  தலைமுறை அது பாண்டியர்களின் புதையல் என்றது.  இன்னொரு  தலைமுறை அது பெருமாளின் அருள் என்றது. அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களுக்கு குகையிலிருக்கும் புதையலை விடவும் அதைச் சுற்றி சொல்லப்பட்ட கதைகளே அபூர்வமாக இருந்தன. உண்மைக்கு எப்போதும் ஒரு முகம்தான்  வாய்க்கிறது. பல்லாயிரம் முகங்களைப் பெறும் அதிர்ஷம் கதைகளுக்கு மட்டுமேயுண்டு.  சொர்னபுரி என்று சொன்னவர்கள் கதையில் வாழ்ந்தார்கள். கோபால்சாமி மலையாக மட்டும் பார்த்தவர்கள் கதைகளில் நம்பிக்கை இழந்திருந்தார்கள்.


வேறொரு காலத்தில்  ஒரு வருவாய் அலுவலரின் மூலமாக அந்த மலையைப் பற்றிக் கேள்விப்பட்டு ப்ரிட்டிஷ்காரர்கள் வந்தார்கள். இந்திய நிலத்தின் கதைகளையும் கடவுள்களையும் அறிந்துகொள்வதிலிருந்து ஆர்வம் காட்டினார்கள். கதைகளுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்கள் பல புதையல்களைக் கண்டடைய வழிகாட்டிய அனுபவத்தில் அவர்கள் காடுகள் மலைகளில் சுற்றியலைந்தார்கள்.  பொன் பொருள் மட்டுமில்லாமல் அபூர்வமான தாவரங்களையும் கண்டுகொண்டார்கள்.  பொருளீட்டும் பேராசை அவர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு துரத்திக் கொண்டே இருந்தது.  


எப்போதும் போல் அதே பிரகாசமான வெளிச்சம் தான் அவர்களையும் வரவேற்றது. ஆனால் அந்த ஒளியை பொன்னென அவர்கள் நினைக்கவில்லை. முதலில் அவர்கள் மலையைப் பார்க்கவில்லை. தங்களிடமிருந்த வரைபடத்தைப் பார்த்தார்கள். அதற்குப் பிறகு மண்ணைத் தோண்டினார்கள்.  பிறகு பாறையை உடைத்தார்கள். கடைசியாகத்தான் மலையைப் பார்த்தார்கள். குகையைப் பற்றின கதைகளைக் கேட்டுக் கொண்டார்கள். அந்தக் குழுவின் தலைவராக இருந்தவரை மக்கள் எட்வர்ட் துரை என அழைத்தார்கள்.

மிகச் சிறிய அந்த மலையில் புதரைப்போல் கிடந்த குகை வாயிலை சுத்தம் செய்தனர். குகைக்குள் நுழைவதற்கு முன்னால் எட்வர்ட் துரை Gold is always a rumour before it becomes a business."  என்று தன்னோடு வந்திருந்த  அதிகாரியிடம் சொன்னான்.அந்த வாக்கியத்தை மொழிபெயர்த்துக் கொடுத்த தாசில்தாருக்கே அதன் அர்த்தம் புரியவில்லை.


மூன்று வாரங்கள்  அவர்கள் மலையை அளந்தார்கள்.  எந்தப் பாறையில் என்ன தாது இருக்கிறது என்று குறியிட்டார்கள். ஒவ்வொரு பாறையிலும் சிறிய வெள்ளைக் கொடிகளை நட்டார்கள். அந்த  மலையை அவர்கள் ஒரு உயிராக அல்லாமல்  வரைபடமாக மாற்றினார்கள்.  அந்த வரைபடத்தில் குகைக்கு பெயருக்குப் பதிலாக  ஒரு எண் மட்டும் இருந்தது.


Cave No. 7.

கதைகள் பெயர்களை நினைவில் கொள்கின்றன. அரசுகள் எண்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கின்றன. எண்கள் குறிக்கப்பட்ட நாளிலேயே மலையைப் பற்றிய கதைகள் மறையத் துவங்கின. அதிகாரிகளோடு வேலை செய்துகொண்டிருந்த உள்ளூர்க்காரர்களும் எண்களால் அங்கிருந்த பாறைகளையும் குகைகளையும் அடையாளப்படுத்திக் கொள்ள முயன்றனர். சோதனை முயற்சியாக பாறைகளில் வெடிவைத்துப் பார்க்க முடிவு எடுக்கப்பட்டது.


முதல் வெடிப்பு நடந்த நாளில் மலையின் நடுக்கத்தை அருகிலிருந்த   ஊர்க்காரர்கள் உணர்ந்தார்கள்.  அந்தச் சத்தம் காடு முழுவதும் எதிரொலித்தது. பறவைகள் ஒரே நேரத்தில் வானத்திற்குப் பறந்தன. குரங்குகளும் நரிகளும் முயல்களும் மலையை விட்டுத்  தப்பியோடின. பாறையிலிருந்து கிளம்பிய தூசி அடங்க நீண்ட நேரம் ஆனது.


அன்று மாலை எட்வர்டு தனது குறிப்பேட்டில் இப்படி  எழுதினான்.

"The hill is harder than expected." தங்கத்தைத் தேடி தீவிரமாக வேலை பார்த்தார்கள். உடைக்கப்பட்ட பாறைகள் மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டது. ஆங்காங்கே வெடி வைக்கப்பட்டு அந்த மலை சிதறல் சிதறலாக மாறிப்போனது.   சில வாரங்களுக்குப் பிறகு அவர்கள் எதிர்பார்த்த தங்கம் கிடைக்கவில்லை. ஆனால்  வேறொன்று கிடைத்தது. பொன்னைப் போலவே பெறுமதியானது. பொன்னிறமாக மின்னும் பாறைகள். எட்வர்ட் துறை இந்தமுறை  மகிழ்ச்சியோடு அறிக்கை எழுதினான்.


Phosphorus.

வெடிமருந்து தயாரிப்பதற்கு அரிய தாது. அந்த நாளில் சொர்ணபுரி   புராணத்திலிருந்து ஒரு சுரங்கமாக மாறிவிட்டது. மலை பிளக்கப்பட்டது. பாறைகள் மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டன. தங்கம் கிடைக்காத ஏமாற்றத்தில் ஊர்க்காரர்கள் வேலைக்கு வர மறுத்தபோது மிக அதிகமான கூலி அவர்களுக்கு வழங்கப்பட்டது. பழைய கதைகள் முதியவர்களின் வாய்க்குள்ளேயே வாழ்ந்து முடிந்தன. மலையிலிருக்கும் கோவிலை காரணம் காட்டி உள்ளூர்க்காரர்கள் வேலையை நிறுத்தச் சொன்னார்கள். மலையின் சரிபாதியை உடைத்து எடுத்துவிட்ட திருப்தியில் எட்வர்ட் துரை மதுரை திரும்ப முடிவு செய்தார். அன்றிரவு எல்லா அறிக்கைகளிலும் கையெழுத்திட்டான்.


"No evidence of gold deposits."

அது கடைசி அறிக்கை. அரசாங்கத்துக்குப் போன அறிக்கை. ஆனால்  அவன் தனியாக எழுதிய இன்னொரு குறிப்பேடு இருந்தது. அது அரசாங்கத்திற்காக எழுதப்படவில்லை. அந்தப் புத்தகம் பல ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட ஆவணக் காப்பகத்தில் கிடைத்ததாகச் சொல்வார்கள். அதில் ஒரு பக்கம் மட்டும் கிழிக்கப்பட்டிருந்தது. அடுத்த பக்கத்தில் இப்படி  இருந்தது.

17 September 1879.

Four labourers entered Cave No. 7.

None returned.

No explanation satisfactory.

அந்த மூன்று வாக்கியங்களுக்குக் கீழே நீண்ட இடைவெளி.

பிறகு நடுங்கிய கையெழுத்தில் ஒரு வரி.

"There are places where reason arrives late."


அந்தப் புத்தகத்தை யார் வாசித்தார்களென  யாருக்கும் தெரியாது.  அந்த மூன்று வாக்கியங்கள் மட்டும், கதைகளாக மீண்டும் திரும்பிவந்தன. மலையைப் பற்றிய பழைய நம்பிக்கைகள் மீண்டும் உயிர்பெற்றன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு...  தாத்தா அந்தக் கதையைக் கேட்டாரா அல்லது நூலை வாசித்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அந்தக் கதையில் தன்னை முழுமையாக கரைத்துக் கொண்டார்.

பிரிட்டிஷ்காரர்களுக்குப் பிறகு கோபால்சாமி மலை நீண்ட காலம்  யாரையும் அழைக்கவில்லை.  மலைகளுக்கும் சோர்வு உண்டு.  அதன் உடலை உடைத்துக்கொண்டிருந்த சுத்தியல்களின் சத்தம் நின்ற பிறகு, அது மீண்டும் காற்றின் மொழியை நினைவுபடுத்திக்கொண்டது. பாறைகளின் விரிசல்களில் மழைநீர் தேங்கியது. புற்கள் முளைத்தன. மனிதர்கள் விட்டுச் சென்ற காயங்களை இயற்கை மெதுவாக மூடத் தொடங்கியது.ஆனால் கதைகள் மட்டும் காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக நினைவுகளாக மாற்றின.


1960 வது வருடம் எனது தாத்தா இளைஞர். காடுகளிலும் மலைகளிலும் ஓயாது அலைந்துகொண்டிருப்பவர். வேட்டையில் ஆர்வம் கொண்டவர். புதிய நிலம் புதிய நண்பர்களென  அவரது நடவடிக்கைகள் குழப்பமானதாகவே இருக்கும். திடீரென சில காலம் காணாமல் போய்விட்டு அபூர்வமான பொருட்களை சேகரித்துக் கொண்டு வருவார். ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் நிச்சயம் கதைகள் இருக்கும். அந்தக் கதைகள் சொல்லித் தீரும் முன்னரே அடுத்த பயணத்திற்குக் கிளம்பிவிடுவார்.  அவரது இந்த அமைதியின்மைக்கான காரணத்தை ஒருவரும் அறிந்திருக்கவில்லை. சிலர் தனது வாழ்க்கை நெருக்கடிகளால் அமைதியிழப்பார்கள், ஆனால் அவர் தான் கேட்டு வளர்ந்த கதைகளால் அமைதியிழந்திருந்தார். கோபால்சாமி மலை நீண்டகாலத்திற்குப்பின் அவரை அழைத்தது. அந்த மலையிலிருந்த ஒவ்வொரு பாறையையும் அவர் ஆராய்ந்தார்.  பாண்டிய இளவரசன் விட்டுப்போன திறவுகோல் தன்னோடு கண்ணாமூச்சி ஆடுவதாக நினைத்தார்.  அந்தக் குகை அதே அமைதியோடுதான் இருந்தது. ஆனால் அந்த ரகசியத்தினுள் நுழையும் துணிச்சல் மட்டும் அவருக்கு வந்திருக்கவில்லை. அதன் கதவுகள் திறக்க வேண்டுமானால் மூடிக்கிடக்கும் கதைகளின் மர்மங்கள் பிடிபட வேண்டும். அருகாமை கிராமங்களில் இருக்கும் முதியவர்களிடம் மலையைப் பற்றின கதைகளைக் கேட்டார். அவர்கள் சொன்ன கதைகள் புதிர்களை அதிகப்படுத்தியதே தவிர தீர்வைத் தரவில்லை.


’பொன்னைப் பார்த்த எவரும் அதைப்பற்றி பேச மாட்டார்கள்.’ என ஒரு முதியவர் சொன்னதிலிருந்த உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டார். அப்படியானால் அங்கு பொன் உள்ளது. ஆனால் ஒருபோதும் வெளியே வந்ததில்லை. அந்த நாளில் அவருடைய பேராசை விஸ்வரூபமெடுத்தது. தன்னைப்போலவே பொன்னின் மீதும் புதையலின் மீது பேராசைக் கொண்ட சிலரைக் கண்டுபிடித்தார். அவர்களுக்கும் இந்த மலையைப் பற்றின கதைகள் தெரிந்திருந்தது. ஆனால் இதற்குள் அழைத்துச் செல்ல சரியான துணைவன் கிடைக்காமல் காத்திருந்தார்கள். குகைக்குள் நுழைவதற்கான பொருட்களைத் தயார் செய்து கொடுத்தார். கயிறு விளக்கு இரும்புக் கம்பிகள் அதோடு வேலையை வெற்றிகரமாக முடித்தபின் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம்..

’குகைக்குள்ள போயி பொன் இருக்கான்னு பாத்தா மட்டும் போதும். எதையும் எடுக்க வேணாம். என்ன இருக்குன்னு பாத்துட்டம்னா நாம அடுத்த திட்டத்த போட்டுக்கலாம்..’ என்றவர் குகையின் ஒரு எல்லைவரை அவர்களுக்கு வழிகாட்டினார்.  ஒரு எல்லைக்கு மேல் பாதை குறுகியபோது அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு அங்கேயே காத்திருப்பதாகச் சொன்னார். ’நியாபகம் இருக்கட்டும். பொன் இருக்கான்னு பாத்தா மட்டும் போதும். தொட வேணாம்,’ என்றவரை முன்னால் சென்ற இருவரும் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். அது பேராசைக்காரனின் சிரிப்பு. குகைக்குள் சென்றவர்கள் நிழலைப்போல் வேகமாக மறைந்துபோனார்கள்.

அவர் நீண்ட நேரம் அங்கே காத்திருந்தார். பகல் முடிந்து இரவு கவிழ்ந்தபோது வெளியேறி  ஒரு பாறையில் படுத்துக் கொண்டார். இரவில் காற்று தீவிரமாய் வீசியது.  குகை வாயிலை பார்த்தபடியே அமர்ந்திருந்தவர் நள்ளிரவுக்குமேல் கண்ணயர்ந்து உறங்கிவிட்டார். அதிகாலை கண்விழித்தபோது குகை முந்தைய நாள் பார்த்த அமைதியோடு இருந்தது. இறங்கிச் சென்று குகை வாயிலை கவனமாகப் பார்த்தபோது உள்ளே சென்றவர்கள் திரும்பி வந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. குகைக்குள் நுழைந்தவர் சத்தம் போட்டு கூப்பிட்டுப் பார்த்தார். அவரது குரல் நீண்டதூரம் வரை எதிரொலித்தது. நீண்ட நேரம் பதிலுக்காக காத்திருந்தவர் தோல்வியோடு திரும்பிவந்தார்.


வீடு வந்தபின் யாருடனும் பேசவில்லை, கதை கேட்கச் செல்லவில்லை, யாருக்கும் கதை சொல்லவில்லை. பேசுவதையே குறைத்துக்கொண்டார். வாரங்கள், மாதங்களென இரண்டு வருடங்கள் முழுமையாகக் கடந்தபின் மீண்டும் புதிய கூட்டாளிகளோடு கோபால்சாமி மலையை நோக்கி பயணித்தார். அந்த மலையின் மீதான கட்டற்ற பித்தில் அவருக்கு மனம் பிசகத் துவங்கியது அந்த நாளில் இருந்துதான். அந்தமுறையும் குகைக்குள் சென்றவர்கள் திரும்பி வந்திருக்கவில்லை. ஆனால் அவர் சோர்வடையதற்குப் பதிலாக அந்தக் குகைக்குள்ளிருக்கும் ரகசியத்தை அடைந்துவிடும் தீவிரத்தில் புதிய கூட்டாளிகளைத் தேடினார். காட்டில் தொலைந்து போன மனிதர்களைத் தேடி ஒருவரும் வந்திருக்கவில்லை. நான்கு முறை இப்படி நடந்தபின் அந்த மலை தன்னோடு விளையாடிப் பார்க்கிறது என்பதைத்தெரிந்து கொண்டவர் அந்த விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தார்.



முன்பெல்லாம் மாலை நேரங்களில் மலையின் மீது விழும் வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்  இப்போது அதன் நிழலைப் பார்க்கத் துவங்கினார். நிழல் ஒருபோதும் மனிதர்களை ஏமாற்றாது என அவர் நம்பினார். அதன்பிறகு மலையைப் பற்றின தேர்ந்த அறிவுள்ள மனிதர்களைத் தேடிக் கண்டடைந்து குகைக்குள் அனுப்பினார்.  ஒவ்வொரு முறையும்  குகையின் வாயில்வரை செல்வார். மண்ணில் இருந்த காலடிச்சுவடுகளைப் பார்ப்பார். மழை பெய்திருந்தால் புதிய தடம் இருக்காது. வெயில் அடித்திருந்தால் பழைய தடம் அழிந்திருக்கும். ஆனால் ஒரு தடவைகூட... உள்ளிருந்து வெளியே வந்த மனிதனின் காலடிச்சுவட்டை அவர் பார்க்கவில்லை. அந்தக் குகை மனிதர்களை விழுங்குகிறதா... அல்லது... அவர்கள் திரும்பி வர விரும்பவில்லையா என குழம்பிப் போனார்.


பதினோராவது முறையாக ஆட்களை அனுப்பிய நாளில் அவர் அறுபது வயதை நெருங்கியிருந்தார். தலை நரைத்து உடல் சுருங்கியபோதும்  கண்களில் இருந்த ஒளி  குறையவில்லை. முதல் முறையாக தன் மனைவியிடம் சொன்னார். "இன்னும் ஒருதடவ முயற்சி பண்ணிப்பாக்கறேன். ஆனா இந்த வாட்டி வேற யாரையும் அனுப்பப் போறதில்ல..’ என தயக்கத்தோடு சொன்னவரிடம்  அவள் ஒன்றும் கேட்கவில்லை. வீட்டின் முன் இருந்த வேப்பமரத்தில் ஒரு காகம் இரவு முழுவதும் கத்தியது. அதிகாலையில் எழுந்த அவர், அந்தக் காகத்தைப் பார்த்து, "இப்ப நான் வர்றேன்." என்றார். .


அந்த வார்த்தை யாருக்குச் சொல்லப்பட்டது?  காகத்துக்கா? மலைக்கா?

அவர் தனியாகப் புறப்பட்டார். கயிறு எடுத்துக்கொள்ளவில்லை. துணைக்கு ஆட்கள் இல்லை.விளக்கை மட்டும் எடுத்துக் கொண்டார்,  மலை ஏறும்போது அவரிடம் அவசரமில்லை. உண்மையில் அந்தப் பயணம் குகையை நோக்கியதல்ல. பல ஆண்டுகளாகத் அவரைத் தொடர்ந்து வந்த ஒரு கேள்வியை நோக்கியது. மலை அவரை உடனே அடையாளம் கண்டுகொண்டது.  அடிவாரத்தில் வீசிய வெப்பக் காற்று மேலே செல்லச் செல்ல குளிர்ந்தது. பெருமாள் இருந்த திசையைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார்.


குகை வாயிலில் நின்றபோது, பல ஆண்டுகளுக்கு முன் தானே அனுப்பிய மனிதர்களின் சிரிப்புகள் அவருக்கு நினைவுக்கு வந்தன. பொன்னைப் பார்க்க செல்கிற எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி சிரிப்பார்கள். அவர் விளக்கை ஏற்றினார். குனிந்து உள்ளே நுழைந்தார். முழுமையான  இருளுக்குள் கரைந்தார்.  அதன் பிறகு முழுமையான அமைதி. குகைக்குள் நடந்து சென்றபோது அவருக்குத் தன் காலடிச் சத்தம் மட்டும் கேட்கவில்லை. தனக்கு முன்னால் யாரோ நடந்து கொண்டிருப்பது போலிருந்தது. அந்த நடையின் தாளம் அவருக்குப் பரிச்சயமானதாக இருந்தது. ஒரு கணம்  நின்றார்.


பிறகு மெதுவாகச் சிரித்தார். "நீங்களெல்லாம் முன்னாடியே வந்துட்டீங்களா..."

என்று சொல்லிக்கொண்டு இன்னும் ஆழமாக நடந்தார். குகை திடீரென்று விரிந்தது. விளக்கின் வெளிச்சம் முதலில் பாறையைத் தொட்டது. அந்த வெளிச்சம் பிரம்மாண்டமானது.   பிறகு மனித முகங்களைப் பார்த்தார். அங்கே நின்றிருந்த சிலைகள் அனைத்தும் அவருக்குப் பரிச்சயமான முகங்கள். முதலில் போனவன். நான்காவது போனவன். எல்லோரும் ஒரே அமைதியில் பொன்னிறத்தில் சிலையாகிப் போயிருந்தார்கள்.  அவர்களருகே மெதுவாக நடந்தார். ஒரு சிலையின் கன்னத்தைத் தொட்டுப் பார்க்க கையை நீட்டினார். அந்தக் கணத்தில்... அவரது கை நடுங்கியது. கையை மீண்டும் இழுத்துக்கொண்டார்.


அந்த நாளிலிருந்து அவர் சொர்ணபுரியைப் பற்றி வேறு எதையும் தேடவில்லை. ஒரு ரகசியத்தை மட்டும் சுமந்துகொண்டு வெளியே வந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு... உன்னிடம் மட்டும் சொல்லிவிட்டு இறந்தார்.


மழை ஓய்ந்தபின் புறா பறந்து சென்றது. நான் அந்த தருணத்தில் உறைந்து போயிருந்தேன். நீண்டகாலத்திற்குப்பின் கோபால்சாமி மலைக்குச் செல்ல வேண்டுமெனத் தூண்டப்பட்டேன். அன்று எனக்கு நாற்பது வயதைக் கடந்திருந்தது. மனிதர்கள் எத்தனை வயதைக் கடந்தாலும்  சில கதைகள் அவர்களைத் தேடி வந்து மீண்டும் பிறக்கின்றன.


அந்த மலையை நான் கடைசியாகப் பார்த்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. என் சிறுவயது நினைவுகளில் வானத்தைத் தொட்டிருந்த அந்த மலை, இப்போது பாதி உடல் இழந்த முதியவரைப் போல நின்றிருந்தது. பிரிட்டிஷ்காரர்களின் வெடிமருந்துகள் தொடங்கிய வேலையை, குவாரிகளின் இயந்திரங்கள் முடித்துவிட்டிருந்தன. தாத்தா பார்த்த பாறைகளில் பல இல்லை. ரெங்கநாயக்கர் நடந்த பாதை இல்லை. பாண்டிய இளவரசன் ஓய்வெடுத்த வேம்பு மரமும் இல்லை. ஆனால் இப்போதும் கதைகள் உயிரோடு இருந்தன.


நான் மெதுவாக மலையேறினேன். இப்பொழுது  பெருமாள் கோவில் எடுத்துக் கட்டப்பட்டிருந்தது. புதிய வண்ணப்பூச்சு பூசப்பட்டிருந்தது. மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மக்கள் நாள்தோறும் அங்கு வந்துசெல்கிறார்கள். எல்லாம் மாறிவிட்டது, ஆனால் காற்று மட்டும் மாறவில்லை. அதே குளிர்ச்சி.

குகை இருந்த திசையை நோக்கி நடந்தேன். ஆனால் நான் உள்ளே செல்லவில்லை. நீண்ட நேரம் அதன் முன்னால் நின்றேன். அப்போது தான் தாத்தா என்னிடம் சொல்லாமல் விட்டிருந்த கடைசி வாக்கியம் எனக்குள் பிறந்தது. அவர் பொன்னைப் பார்த்து வெளியே வரவில்லை. தன்னைத்தான் பார்த்துவிட்டு வெளியே வந்திருந்தார். அதனால்தான் அவர் மீண்டும் ஒருவரையும் உள்ளே அனுப்பவில்லை.


அந்தக் குகை பொன்னைப் பாதுகாக்கும் இடமல்ல. மனிதனுடைய ஆசையை அவனுக்கே காட்டும் இடம். யார் உள்ளே செல்கிறார்களோ, அவர்கள் விரும்பியது அவர்களுக்கு முன் தோன்றுகிறது. அதிகாரம் தேடிய பாண்டியனுக்குப் பொன். மக்களுக்காக வாழ்ந்த ரெங்கநாயக்கருக்கு நீர்.அறிவியல் தேடிய பிரிட்டிஷ்காரனுக்குத் தாது. என் தாத்தாவுக்கு... அவரது பேராசை. அந்த பேராசையை அவர் தொட்டிருந்தால், அவரும் பொன்னாகியிருப்பார். தொட்டிருக்கவில்லை.அதனால்தான் மனிதனாகத் திரும்பிவந்தார்.

அந்தக் கணத்தில் இன்னொரு ரகசியமும் புரிந்தது. தாத்தா ஏன் தனது மூன்று மனைவிகளுடனும் ஒருபோதும் வாழவில்லை என்று.


அது உடலின் இயலாமை பற்றிய ஒப்புதல் மட்டுமல்ல. அந்த  மனிதன்  பேராசையின் முகத்தை நெருக்கமாகப் பார்த்துவிட்டார், அதனாலேயே அதன்பிறகு எதையும் தன்னுடையது என உரிமைகொள்ள இயலவில்லை. அவர் இறுதிக்காலம் வரையில் எதையுமே சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. உண்மையில் அவர் எங்கள் குடும்பத்தின் தலைவராக இல்லாமல் ரகசியத்தின் காவலனாக வாழ்ந்தார். எனக்கு திடீரென்று குகைக்குள் போக வேண்டும் என்ற ஆசை மறைந்தது. அந்த  நொடியில்தான் தாத்தா குகையிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது  புரிந்தது.


நான் குகையை நோக்கிக் கைகளை கூப்பினேன். பிறகு திரும்பி நடந்தேன். மலையிறங்கும்போது, மேலே ஒரு கிளி பறந்தது. அதன் பின்னால் ஒரு கருங்குருவி. இரண்டும் சில கணங்கள் என்னைச் சுற்றி வட்டமடித்தன. அவை என்னைக் கடந்து மலையை நோக்கிப் பறந்தன. நான் ஒருமுறைகூட திரும்பிப் பார்க்கவில்லை.  அந்த நாளில் நான் கண்டுபிடித்தது சொர்ணபுரி எங்கே இருக்கிறது என்பதல்ல. அது எங்கே இல்லை என்பதைத்தான்.

அந்த மலைக்குள் புதையல் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் மனிதர்கள் தலைமுறை தலைமுறையாகச் சுமந்து வந்த கதைகள்தான் உண்மையான சொர்ணபுரி. அவற்றைத் தொடுகிறவர்கள் சிலையாக மாறுவதில்லை. கதையாக மாறிவிடுகிறார்கள். இனி என்னிடம் சொர்ணபுரி எங்கே இருக்கிறது என்று கேட்டால், நான் மலையைக் காட்டப்போவதில்லை, என் குடும்பத்தைத்தான் காட்டுவேன்.  ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் ஒரு குகை இருக்கிறது. அதற்குள் ஒவ்வொருவரும் தலைமுறைகளாகத் தொட்டுப் பார்க்க அஞ்சும் ஒரு பொன் இருக்கிறது.

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page