நீங்கள் ஒரு காதல் படம் எடுப்பீர்களா?
- லக்ஷ்மி சரவணகுமார்
- 4 days ago
- 2 min read

கோடானகோடி நன்றிகளை தமிழ் சமூகத்திற்குச் சொல்லிக் கொண்டு நீண்டநாட்களுக்குப்பின் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆறு வருடகாலம் காத்திருந்த நாள் வந்தது. லிங்கம் வெளியாகி வாழ்த்து செய்திகளும் அலைபேசி அழைப்புகளும் மனதை நிறைத்திருக்கின்றன. இந்த பெரும் வெற்றி நானே எதிர்பாராதது. ஆனாலும் இந்தத் தருணத்தில் என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விளக்கிவிட இயலாது.
முதலில் என்னோடு இந்த நீண்ட பயணத்தில் உடனிருந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். ஒரு இயக்குனருக்கு இருக்கும் கனவை காட்சியில் கொண்டுவர அவரோடு பயணிக்கும் அத்தனை பேரும் சரியான உழைப்பைக் கொடுக்க வேண்டும். அது நடந்திருக்கிறது. கடவுளுக்கும் இயற்கைக்கும் நன்றி.
இந்தத் தொடரின் ட்ரெய்லர் வெளியான நாளிலிருந்து ஏன் இத்தனை வன்முறை என்கிற ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நானும் சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான்கு நாட்களுக்கு முன்னால் ஒரு நேர்காணல். ஒழுங்கு செய்தவர் ஒரு ஜென்ஸி குழந்தை. நேர்காணல் முடிந்ததும் என்னிடம் ’நீங்க ஏன் நல்ல லவ் மூவி எடுக்கக் கூடாது?’ எனக் கேட்டார். நான் சிரித்தபடியே ’அதுக்கென்ன எடுத்துட்டா போச்சு..’ எனச் சொன்னேன். அன்று முன்னிரவு அபூர்வமாக சென்னையில் மழை. ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்று திரும்பும் வழியில் ஒரு காதல் கதை எழுதுவோமே மனம் யோசிக்கத் துவங்கியது.
நான் எனக்குத் தெரிந்த காதல் கதைகளை என் காதல்களை எல்லாம் யோசித்து வரிசைப்படுத்தினேன். அதற்கு முந்தைய நாள் இரவுதான் இயக்குனர் மிஷ்கினை சந்தித்திருந்தேன், ’எல்லாருக்குந்தாண்டா லைஃப்ல சொல்ல நிறைய கத இருக்கு. அத அப்பிடியே சொல்றதுக்கு எதுக்கு சினிமா எடுக்கனும். ஒரு க்ரியேட்டருக்கு இமாஜினேஷன் வேணாமா?’ எனக் கேட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால் சரிதான். எல்லாமே நமக்குத் தெரிந்த கதைகள் தான். அதில் என்ன புதிதாக சொல்லப் போகிறோம். யாருடைய குரலாக ஒலிக்கப் போகிறோம் அல்லது எந்த அழகியலைப் பேசப் போகிறோம் என்பதுதானே ஒரு படைப்பளியின் வேலை.
இந்தக் கேள்விகள் குழப்பங்களோடு மறுபடியும் ஒரு காதல் கதை யோசிக்கத் துவங்கினேன். நான் யோசிக்கிற செய்திகள் சம்பவங்கள் எல்லாமே முதலில் சுவாரஸ்யமாகவும் அடுத்த சில நிமிடங்களிலேயே அப்படி இல்லாமலும் போயின. எல்லா காலகட்டத்திலும் காதல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறதா? காதல் என்கிற உணர்வை பல்வேறு நூற்றாண்டுகளின் கதைகளின் வழியாக அணுகிப் பார்க்கும் போது சில ஒற்றுமைகள் இருந்தாலும் ஒவ்வொரு தலைமுறையும் வெவ்வேறாகத்தான் அதனை ஏற்றும் மறுத்தும் வாழ்ந்திருக்கிறார்கள். அது அந்த காலகட்டத்தைய சூழல், நெருக்கடி, வாழ்க்கைமுறை என எவ்வளவோ காரணிகளின் விளைவாக அமைகின்றன.
யூட்யூப் வீடியோக்களில் வரும் விளம்பரங்களை முழுமையாகப் பார்க்கும் பொறுமையில்லாமல் ஸ்கிப் செய்யும் மனநிலை கொண்ட இந்தத் தலைமுறையிடம் காத்திருத்தல் தான் காதலின் உச்சபட்ச தருணம் என்று சொன்னால் என்னை எப்படி நினைப்பார்கள்.? அல்லது இன்னும் அப்படி காதலுக்காக காத்திருக்கிறார்களா? முதலில் காதலுக்கான பெறுமதி இன்னும் இருக்கிறதா? பதினைந்து வயதிலிருந்து இருபத்தைந்து வயதிற்குள் ஆண் பெண் மீதும் பெண் ஆண்மீதும் காட்டும் ஈடுபாடு ஈர்ப்பாகவும், இச்சையாகவும் பெருகி அது கொண்டு செல்லும் இடத்தை காதல் என புரிந்துகொண்டு அதில் வெற்றியடைய பல சாகசங்கள் செய்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவனாக இந்தத் தலைமுறையின் மனநிலையை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.
இருபத்தைந்து வயதிற்குமேல் உள்ளவர்கள் உங்கள் காதல் அனுபவங்களைச் சொல்ல வேண்டாம், அதில் நான் தெரிந்துகொள்ள எதுவுமில்லை. இருபத்தைந்து வயதிற்குட்பட்ட இளைஞர்களின் காதல் கதைகளை ஜாலியான கடிதங்களாக எனக்கு அனுப்பலாம். ( கற்பனைக் கதைகளை தவிர்க்கவும்) இதனை ஒரு ஆய்வாக செய்ய விரும்புகிறேன். இந்தத் தலைமுறையின் மனநிலையை நான் அறிந்து கொள்ள வேண்டும். அந்த அறிதலில் இருந்து நானொரு கதை எழுத வேண்டும்.
எந்த சென்ஷார்ஷிப்பும் கிடையாது. உங்கள் காத்திருப்பு, காதலியோடு ப்ரேக் ஆனது முதல் முத்தம் இச்சை என எதை வேண்டுமானாலும் எனக்கு எழுதி அனுப்பலாம். மீண்டும் சொல்கிறேன். கற்பனைக் கதைகளை தவிருங்கள். உங்கள் கதையாகவோ உங்களின் நண்பர்களின் கதையாகவோ இருப்பது நலம்.
