top of page

பன்றி வேட்டை

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 12 minutes ago
  • 6 min read


பகுதி – 7


 

ஊர்க்காரர்களின் மனதில் விதைக்கப்பட்டிருந்த ஜமீன் குடும்பத்தின் மீதான  பழியுணர்ச்சி,  சுப்புராஜின் மகன் கொலையுண்டபோதோ, பழனி காணாமல் ஆக்கப்பட்டபோதோ, பெண்கள் மானமிழந்து குரலற்றவர்களாக்கப்பட்ட போதோ அல்ல. அதற்கும் வெகு காலத்திற்கும் முன்பாக.  இந்தக் காடு ஊராக உருமாறிய காலத்தில்.


காட்டை அழித்து புதிய ஊரையும் விவாசய நிலங்களையும் உருவாக்கிய ஜமீன் குடும்பம் மரங்களிலும் பாறைகளிலும் குடியிருந்த வனதேவாதிகளை அழித்தனர். பளிச்சியம்மன் காணாமலாக்கப்பட்ட சில வாரங்களிலேயே அந்தக் காட்டில்  வனதேவாதிகளின் இருப்பே இல்லாமல் போனது. வழிபாட்டு மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டன. பாறைகள் உடைத்து வீடு கட்ட பயன்படுத்தப்பட்டன.   மிருகங்கள் நீரருந்த வேண்டி உருவாக்கப்பட்டிருந்த குட்டைகள் மூடப்பட்டு அதைச் சுற்றி விளைநிலங்கள் உருவாக்கப்பட்டன.  தெய்வங்கள் வாய்மூடி ஓலமிட்டமிதைக் காடும் மலையும், வானமும் பூமியும் கேட்டு வருந்தின. வெளிவர முடியாத  மாயச் சுழலுக்குள் சிக்கிக்கொண்ட தெய்வங்கள் தங்களை விடுவிக்க பளியர்களின் துணைவேண்டி நின்றன.


ஜமீன் குடும்பத்தினரிடமிருந்த அதிகாரத்தைக் கண்ட மக்கள்  எதிர்த்து நிற்பதற்குப் பதிலாக அச்சத்தில்  குற்றேவல் புரிய பழகிக்கொண்டனர். ஜமீன் உத்தரவின் பெயரில் வேறு ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு    வந்து குடியேறிய மக்களுக்குக் மலையைப் புரிந்துகொள்ள வெகுகாலம் பிடித்ததால்  பளியர்களின் துணையில்லாமல் இந்தக் காட்டைத் திருத்தி பயிர் செய்ய முடியாதென்பதைப்  ஜமீன் குடும்பத்தினர் புரிந்துகொண்டனர். பளியர்களின் வழிகாட்டலோடு  பயிர் செய்ய தகுதியான நிலங்கள் கண்டறியப்பட்டு  சமவெளிப் பயிர்கள் பயிரிடப்பட்டன. சோளமும் குதிரைவாலியும் கம்பும் அந்த மலையில் செழிப்போடு விளைந்தது.  ஒவ்வொரு விளைச்சலின் போதும் தண்ணீரோடு அந்த மக்களின் வியர்வையையும் குருதியையும் குடித்தே பயிர்கள் வளர்ந்தன. ஆனால் தங்களது உழைப்பிற்கான பயனை அம்மக்கள் அனுபவிக்கவில்லை.   ஜமீன் தனது சாதியினரைத் தவிர்த்து பிற சாதியனருக்கு வெவ்வேறு அளவுகளில் தானியங்களைப் பிரித்துக் கொடுப்பதை வழக்கமாக்கினார்.  தனது வீட்டு வேலைகளையும் நிலங்களை மேற்பார்வையிடுவதையும் தன்னுடைய  சாதிக்காரர்களிடம் கொடுத்தவர்,  கடுமையான வேலைகளை பிற சாதியனருக்குக் கொடுத்தார்.


நாளடைவில் ஒரே ஊரிலிருந்த போதும் அந்த மக்களுக்குள் பிரிவுகள் உண்டாயின. கடுமையாக உழைக்கிறவர்கள்  எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் போராடிக் கொண்டிருக்க, ஜமீனுக்கு இணக்கமாக இருந்த சிலர் சிறிய வசதிகளை அனுபவிக்கத் துவங்கினார்கள்.  அந்தக் ஊர் பெரிதாகி அருகில் புதிய கிராமங்கள் உருவானபோது ஜமீன் இந்தக் கட்டமைப்பை தகர்க்க எவரையும் அனுமதிக்கவில்லை.  அவரது தூரத்து உறவினர்கள் சிலர் விவசாய நிலங்களில் ஒரு பகுதியைப் பிரித்து எடுத்துக்கொண்டு ஜமீனுக்கு அடுத்த நிலையில் அதிகாரத்திற்கு வந்தார்கள்.   நூறு வருடங்களில் இந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியாயிருந்த நாட்கள் வெகு சொற்பம். உழைப்பதற்கான வலுவுள்ள மிருகங்களாகவே  பார்க்கப்பட்ட இந்த மக்களுக்கு எந்த உரிமைகளும் வழங்கப்படவில்லை. 


            சில வருடங்களிலேயே அந்தக் காடும் மலையும்  ஒரு கடுங்கோடையை எதிர்கொண்டது. ஓடைகளும் குளங்களும் வறண்டு எங்கும் நீரின் இருப்பு இல்லாமல் ஆனபோது விவசாய நிலங்கள் பாளம் பாளமாய் வெடித்தன.  குடிநீருக்குக் கூட வழியில்லாத  மக்கள் தாகத்தில் தவித்தபோது நீர்த்தடம் கண்டுபிடிக்க பளியர்கள் தங்களது குடியிலிருந்த மூத்த பளிச்சியின் உதவியை வேண்டினர். பல நூறு முழு நிலவுகளைப் பார்த்தவள், அந்தக் காட்டின் எல்லா மரங்களையும், எல்லா மலைகளையும் அறிந்தவள். எந்த பருவத்தில் காற்றின் திசை மாறும் எப்போது மழைபெய்யும் என்பதையெல்லாம் அவள்தான் பளியர்களுக்குக் கற்றுக்கொடுத்தாள். பல நூறு தலைமுறை வாழ்வை கதைகளாக சொல்லவேண்டி  அந்த வனத்திலிருந்த தெய்வங்கள் அவளை இன்னும் உயிரோடு வைத்திருந்தன.   பெரிய பளிச்சி எல்லோரையும் பீமன் பொடவில் கூடச் சொல்லியிருந்தாள்.


வெயில் உக்கிரமாயிருந்த ஒரு நாளின்  அதிகாலையில்  பூசைக்கு ஏற்பாடானது. பளியர்களோடு ஊர் மக்களும்  கலந்துகொள்ள, குழல் இசையும் மேளமும் கொம்பு சத்தமுமாக பூசை துவங்கியது. பசியில் வறண்டுபோன முகங்களோடும் நீரைக் கண்டுபிடித்துவிடும் நம்பிக்கையோடும் மக்கள் கண்மூடி பிரார்த்தித்தனர்.  எப்போதும் குழலிசையில் இருக்கும் வசீகமெல்லாம் காணாமல் போய் பசியில் உழல்கிறவனின் வேதனையே இசையாக வெளிப்பட்டது.  பெரிய பளிச்சி அந்த ஓசையிலிருந்த பசியின் வேதனைகளையும் தாகத்தின் வேட்கைகளையும் நன்கு அறிந்திருந்தாள். இயற்கையிடம் மண்டியிடும் அரற்றலாக குழலிசையின் தீவிரம் மாறியபோது காட்டில் நீரில்லாமல் முடங்கிக்கிடந்த மிருகங்கள்  தொந்தரவுக்குள்ளாகி ஆக்ரோஷமான ஒலிகளை எழுப்பின. மிருகங்களின் ஒலிகளில் இருந்த ஆக்ரோஷம் மரங்களையும்  பறவைகளையும் வெறிகொள்ள வைக்க, காடு சலசலத்தது.

இயற்கை மூர்க்கமாவதை உணர்ந்த  தேராடி அவசரமாகக் குழல் இசையை நிறுத்தச் சொன்னார். எந்த இசையும் இல்லாமல் அமைதியாக பூசை நடந்த முடிந்தது. எல்லோருக்கும் முன்பாக  மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்த முதிய பளிச்சி தேராடியை அருகில் அழைத்தாள். முதுமையில் அவளது பார்வை மங்கியிருந்தது, குரல் சன்னமான ஒலியில் எதிரொலித்ததால் தேராடி அவளுக்கு மிக அருகில் குனிந்து கேட்டார்.  


’நம்ம பழைய குடிக்கு பக்கத்துல இருந்த கெணறுதான் இந்தக் காட்டோட ஊத்து. எப்பல்லாம் இந்த மாதிரி காடு வறண்டுபோகுதோ அப்பல்லாம் அந்தக் கெணத்துத் தண்ணிய எடுத்துட்டுப் போயிதான் குளத்துலயும் ஓடையிலயும் ஊத்திட்டு வருவோம். நூத்தி இருவது வருசத்துக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்துச்சு. அப்ப நம்ம குடியில இருந்த தேராடியும் மத்தவங்களும் இதத்தான் செஞ்சாங்க. எல்லாருமா போயி அந்தக் கெணத்துல தண்ணி எடுங்க…’ என அவள் சொன்னாள்.


தேராடி பேச்சற்றுப்போய் எழுந்து நிற்க, எல்லோரும் அவர் என்ன சொல்லப் போகிறார் எனத் தெரிந்துகொள்ளக் காத்திருந்தனர். ஊர்க்கார பெரியவர் ஒருவர் ‘தேராடி அப்பிடியே நின்னா எப்பிடி பெரிய பளிச்சி என்ன சொல்லுச்சுன்னு சொல்லுங்க… ஏதாச்சும் ஒரு வழி இருக்கும் ல…’ என சத்தமாகக் கேட்டார். தேராடி தயக்கத்தோடு ஊர்க்காரர்களை நோக்கி நடந்தார்.


’ஜமீன் வீடு இருக்க இடத்துலதான் முன்ன எங்க பளியகுடி இருந்துச்சு. அங்க இருக்க கெணறுதான் இந்தக் காட்டோட ஊத்துங்கறது எங்களோட நம்பிக்க. எப்பல்லாம் இந்தக் காட்டுல வறட்சி வருதோ அப்பல்லாம் அந்தக் கெணத்துல இருந்து தண்ணி எடுத்துட்டுப் போயி காடு முழுக்க இருக்க  நீர் நிலைல ஊத்தறது எங்களோட வழக்கம். இந்தக் காடு முழுக்க நீர்த்தடம் இருக்கு. எப்பல்லாம் தெய்வங்களும் வனதேவாதிகளும் கோவப்பட்டு கண்ண மூடுதுங்களோ அப்பல்லாம் அதுங்க மனசு குளுர இப்பிடி செய்வோம். இப்ப அந்தக் கெணத்துல தண்ணி எடுக்கனும்னா ஜமீன் மனசு வெய்க்கனும்…’ எனசொல்லி முடித்தபோது கூடியிருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.


‘தேராடி, இத்தன நாளா நாம தண்ணி தாகத்துல செத்துட்டு இருக்கோம். ஒரு சொம்பு தண்ணி குடுக்கல.. இப்பப் போயி கேட்டா எப்பிடி குடுப்பான்.?’


என ஒருவர் சொல்ல, கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி

‘ஏன் இத நம்மளுக்காக மட்டுமா கேக்கறோம். அவுக வயலுக்கும் சேத்துதான கேக்கப் போறோம். வாங்க எல்லாருமா போயி அவுக வீட்டு வாசல்ல நிப்போம். ஏதாச்சும் ஒன்னு நடக்கும்.’ என நம்பிக்கையாகச் சொன்னாள்.


பெரிய பளிச்சியை பத்திரமாக சிறுவர்களும் சிறுமிகளும் பத்திரமாக பளியகுடிக்கு அழைத்துச் செல்ல, ஊர் மக்கள் ஜமீன் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகினர். சூரியன் மேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்தது.



            பாதையின் இருமருங்கிலும் இருந்த மரங்கள் பட்டுப்போய் பசுமையற்றிருந்தது. உக்கிரமான பிற்பகல் வெயில் அந்த மக்களை  கருணையின்று பொசுக்க, பலருக்கும் தளர்ச்சியடைந்தனர். தாகம் தாங்காமல் சிலர் பாதையின் ஓரத்திலேயே அமர்ந்துவிட, இன்னும் சிலர் அவர்களுக்குத் துணையாக சேர்ந்துகொண்டனர். பீமன் பொடவிலிருந்து  கிளம்பிய  கூட்டத்தில் சரிபாதிபேர்  காணாமல் போயினர்.  அந்தப் பாதையின் எதிர்த் திசையிலிருந்து    கூட்டு வண்டி ஒன்று வந்தது. வண்டிக்கும் இந்த மக்களுக்குமான இடைவெளியில் கானல் நீர் பெரும் குளமெனக் காட்சியளிக்க தங்களை நோக்கி வரும் வண்டிக்கு வழிவிடும் பொருட்டு ஊர்க்காரர்கள் பாதையின் இரு புறங்களிலும் ஒதுங்கி நின்றனர்.  வண்டி அவர்களை நெருங்கியது. அதிலிருந்த  ஜமீனின் உறவினன்  கூட்டமாகச் செல்லும் மக்களிடம் காரணத்தை  விசாரித்தான். நீரைத் தேடிச் செல்வதாகச் சொன்னதன் பின்னாலிருந்த கதையை முழுமையாகக் கேட்டறிந்தவன்  உடனடியாக வண்டியை ஜமீன் வீட்டை நோக்கிச்  செலுத்தினான். 


            கிணற்றிலிருந்து  தண்ணீர் எடுப்பதற்காக மக்கள் திரண்டு வருகிறார்கள் என்கிற செய்தியறிந்ததும் ஜமீன் கொதிப்படைந்தார்.

‘ஒரு பய வீட்டு எல்லைக்குள்ள வரக்கூடாது. வீட்டச் சுத்தி நம்ம ஆளுகள நிப்பாட்டு. எவனாச்சும் எல்லையத்தாண்டி வந்தா அந்த எடத்திலயே வெட்டிக் கொன்னுரனும்.’ என உத்தரவிட்டார். வீட்டிலிருந்தவர்கள் பரபரப்பாக கையில் கிடைக்கும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு காவலுக்கு ஓட ஜமீனின் தம்பி மட்டும் எரிச்சலோடு


‘ஏண்ணே… அந்தத் தண்ணிய எடுத்துட்டுத்தான் போகட்டுமே… நம்மளுக்கும் தேவையிருக்குல்ல… இப்பிடியே அவய்ங்களையும் சாகடிச்சு நம்ம நெலத்தையும் சாகக் குடுத்து என்னத்த சாதிக்கப் போறோம்.’ எனக் கேட்டார்.


ஆத்திரத்தில் அவரை அடிக்கப் பாய்ந்த ஜமீன், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

‘லேய் முட்டாத் தாயோலி அந்தக் கெணத்துல என்ன இருக்குன்னு மறந்து போச்சா?…. எவனுக்கும் ஒரு சொட்டு தண்ணி தரமாட்டேன்… நம்மளுக்குத் தேவையான தண்ணி இருக்குல்ல அது போதும்… இந்த நாயிங்க சாகட்டும். கெணத்துக்குப் பக்கத்துலகூட ஒருத்தனையும் விடக்கூடாது புரியுதா…’ என்றபடியே மேற்கொண்டு பேசப் பொறுமையில்லாமல் வாசலை நோக்கி நடந்தார்.


            வெயிலின் உக்கிரம் குறையத் துவங்கிய மாலை நேரத்தில் களைப்போடு ஊர்மக்கள் ஜமீன் வீட்டிற்கு முன்னால் திரண்டனர். வீட்டைச் சுற்றிலும்  முரட்டு ஆட்கள் காவலுக்கு இருப்பதைப் பார்த்து திகைத்துப்போனவர்கள்  வாசலில் நின்ற ஜமீனின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்தார்கள். ஊர்ப்பெரியவர் மட்டும் எழுந்து நின்றார்.

‘ஐயா  உங்க வீட்டுல களவாங்க வரல…  பசிக்கு சோளமோ குதிரவாலியோ  கேட்டு வரல…. ஒங்க கெணத்துல இருந்து கொஞ்சம் தண்ணிதான் கேட்டு வந்திருக்கோம். அந்தக் கெணத்து தண்ணிய எடுத்துட்டுப் போயி குளம் குட்டையில ஊத்துனா தண்ணி வந்துரும்னு பளியனுக சொல்றானுக… எங்களுக்காக கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா…’ என கோரிக்கை வைத்தார்.


இறுக்கமான முகத்தோடு  எல்லோரையும் பார்த்த ஜமீன்,

 ‘இங்கேருங்கய்யா அந்தக் கிறுக்குக் கூதியானுக எதையோ சொல்றானுகன்னு நீங்களும் நம்பிட்டு வராதிய… எங்க கெணத்துலயே இப்ப தண்ணி இல்ல. எட்டிப் பாத்தா பூமி தெரியற அளவுக்கு வத்திப் போச்சு… இருக்க தண்ணியவும் குடுத்துட்டம்னா எங்களுக்கு குடிக்க தண்ணியில்லாம போகும்….’


என அவர் பேசப் பேச கூட்டத்திலிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

‘ஐயா அந்தக் கெணறுதான் இந்தக் காட்டோட ஊத்து… அதுல தண்ணி வத்தாது..’ என ஒருவன் குரல் கொடுக்க, ஜமீன் ஆத்திரமாக

‘வக்காலோலி எவண்டா அது சத்தம் குடுத்தது… காடோட ஊத்தாம்…. தண்ணி இல்லங்கறேன் அப்பறம் என்னடா அகராதியா பேச்சு… களஞ்சு போங்கடா எல்லாரும்…’ என சத்தம் போட்டார்.


‘தண்ணி இல்லங்கறத நாங்க எப்பிடி நம்பறது? எங்கள விடுங்க நாங்களே போயிப் பாத்துக்கறோம்..’ என இன்னொருவன் சொல்ல, ஜமீனுக்குப் பின்னாலிருந்த ஆட்களில் இரண்டுபேர் திமுதிமுவென ஓடிப்போய் சத்தம் கொடுத்தவனைத் தூக்கிவந்து  போட்டனர். ஜமீன் அவனது மாரில் ஓங்கி மிதிக்க பசிக் கிறக்கத்தில் அவன்  மயங்கிப்போனான்.


‘இன்னும் எவனுக்குடா கெணத்தப் பாக்கனும்?’ என அவர் இறுதியாக சத்தம்போட எல்லோரும் பேச்சற்றுப்போனார்கள்.

‘நீங்க எத்தன நாளு இங்கயே கெடந்து உருண்டாலும் தண்ணி குடுக்க மாட்டேன். ஆனதப் பாருங்கடா..’ எனச் சொல்லிவிட்டு ஜமீன் வீட்டிற்குள் செல்ல அவரது ஆட்கள் மீண்டும் வாசலை மறைத்து  பாதுகாப்பிற்கு நின்றனர்.


            இரவு வேகமாக கவிழ்ந்தது. ஜமீன் வீட்டு எல்லையில் திரண்டிருந்த மக்களில் ஒருவர் கூட அசைந்திருக்கவில்லை. இரவு முழுக்க ஜமீன் ஆட்களும் தீவிரமாக கண்காணிக்க திரண்டிருந்த மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் பசியிலும் தாகத்திலும் மயங்கிப் போயிருந்தனர். அடுத்த நாள் பொழுதுவிடிந்தபோது பளியகுடியிலிருந்து சிறுவன் ஒருவன் வேகமாக அந்த மக்களை நோக்கி ஓடிவந்தான். நீண்டதூரம் ஓடிவந்ததில் அவனுக்கு மூச்சு வாங்கியது. கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி சிறுவனைக் கண்டு ‘இந்தப்பய ஏன் இன்னியாரத்துல இப்பிடி ஓடியாரான்னு தெரியலையே…’ என பதறினாள். அவளது சத்தம் கேட்டு சிலர் திரும்பிப் பார்க்க, பளியர்களில் சிலர் வேகமாக எழுந்தார்கள். அந்தச் சிறுவன்  வந்து சேர்ந்தபோது அவனது தலைக்குமேல் அதிகாலையின் சூரிய வெளிச்சம் செங்கதிர்களாய்ப் பரவியது.


‘என்னப்பா ஆச்சு… ஏன் இப்பிடி உசுர வெறுத்து ஓடியார..? என ஒருவர் கேட்க ஓடிவந்த களைப்பு தீராமல் மூச்சு வாங்கியபடியே ‘பெரிய பளிச்சியக் காணாம்…’ என்றான்… பதறிப்போன பளியர்கள் அவசரமாக அவனை நெருங்கினர்.


‘ஒங்க எல்லாரையும் அதுக்குத் துணையா இருக்க வெச்சமே? அத்தன பேரு இருந்தும் எப்பிடி தனியாப் போக விட்டிய?. என ஒருவர் கோவமாகக் கேட்டார்.

‘ஆளு மாத்தி ஆளு நாங்க கூட இருந்து பாத்துக்கிட்டு இருந்தோம். செத்தவடம் முந்தி தான் காணாமப் போச்சு…’ என்றவனுக்கு அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. அவன் உடைந்து அழ, கூட்டத்திலிருந்த பளியர்களும் அழத் துவங்கினார்கள்.


‘யேய் ஒருத்தனும் அழுவக்கூடாது. வாய மூடுங்கடா..’ என தேராடி கடுமையாகச் சொல்ல அழுகுரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அமுங்கியது. தேராடி பளியகுடியை நோக்கி அவசரமாக ஓட, அவரைத் தொடர்ந்து மக்களும் ஓடினார்கள். ஜமீன் வீட்டைச் சுற்றிக் காவலுக்கிருந்த ஆட்கள் நடப்பதையெல்லாம் நல்லவேடிக்கையெனப் பார்த்துச் சிரித்தார்கள்.


            மோகினிக் காடு பிரியுமிடத்தில் ஓடைக்கு அருகில்  சிறுவர்களும் சிறுமிகளும்  திரண்டிருப்பதைக் கண்ட பளியர்கள் அவசரமாக அங்கு சென்றனர். அழுது ஓய்ந்த குழந்தைகள் மலையிலிருந்து ஓடை நீர்  வரும் தடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுள்  வயதில் மூத்த ஒருத்தி மட்டும் சத்தமாக அழுதுகொண்டிருந்தாள். தேராடி அவளை நெருங்கிச் சென்று ‘எத்தா அழுவாம என்ன நடந்துச்சுன்னு சொல்லுத்தா…?’ எனக் கேட்க அவள்  மலையில் ஓடை இறங்கும் பாதையைக் காட்டினாள். எல்லோரும் திரும்பிப் பார்க்க ‘பெரிய பளிச்சி அந்த வழியா போயி அப்பிடியே பாறையோட பாறையா ஆகிருச்சு…’ எனச் சொல்ல கூடியிருந்த எவருக்கும் விளங்கவில்லை.


‘ஏய் என்னத்தா சொல்ற? வெளங்கற மாதிரி சொல்லு’ என தேராடி கண்டிப்போடு கேட்க,  அந்தச் சிறுமி திரும்பி அவரைப் பார்த்தாள்.


‘அந்தப் பாறைய நல்லா பாரு தேராடி…’ என அவள் சொன்னதும் தேராடியோடு சேர்த்து பளியர்களும் கவனமாகப் பார்த்தனர். பாறையில் பெரிய பெரிய கால் தடங்கள் பதிந்திருந்தன. ஒவ்வொரு கால் தடமும் ஒரு ஆலமரத்தின் சுற்றளவிற்கு  பெரியதாயிருக்க, தேராடி மெல்ல அந்த பாதத் தடத்தை நோக்கி நடந்தார். அவரைத் தொடர்ந்து பளியர்களும்  நடக்க, பாதத் தடங்கள் இப்பொழுது முன்னிலும் பெரிதாகத் தெரிந்தது. ஒரு பாதத்தடத்தின் முன்னால் தேராடி மண்டியிட்டு அமர, பாறை குழைந்து உள்ளிருந்து நீர் பீய்ச்சி அடித்தது. அந்தப் பாதத் தடத்தைத் தொடர்ந்து மற்ற பாதத்தடங்களில் இருந்தும் நீர்ப் பீய்ச்சியடிக்க தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஊர்க்கார்கள் ‘எம்மா எங்களக் காப்பாத்துன தாயே…’ என சப்தமிட்டபடியே  கைகூப்பினார். பல மாதங்களாக  ஈரப்பதம் பார்க்காமல் வறண்டுபோயிருந்த பாறையில் தேங்காய்ப் பாலின் சுவையோடு நீர் பெருக்கெடுத்து ஓட அந்த மக்கள் பெரிய பளிச்சியை தெய்வமாக நினைத்து குலவையிட்டனர்.


            அந்த நாளுக்குப்பின் காடு இன்னொரு வறட்சியை எதிர்கொள்ளவில்லை. மலையடிவாரத்தில் பெரிய பளிச்சிக்கு வைக்கப்பட்ட சாமிக்கல்லை பளியர்களோடு சேர்த்து ஊர்க்காரர்களும் வணங்கத் துவங்கினார்கள். பளியகுடியில் கதை சொல்வது மட்டும் நின்று போனது.  கதை சொல்கிறவர்களின் குரல்கள் பெரிய பளிச்சியை நினைவுபடுத்தியதால்  பெரியவர்கள் கதை சொல்வதை தவிர்த்தார்கள். கதை கேட்டு வளராத குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் வேட்டைக்குப் பழக்கவும் தேனெடுக்கவும் கூட்டிச் செல்லும்போது காட்டைப் பற்றியும் பெரிய பளிச்சியைப் பற்றியும் சொல்வதோடு சரி. ஒவ்வொரு ஆட்டப்பாட்டின் போதும் வனதேவாதிகளோடு சேர்த்து பெரிய பளிச்சிக்கும் பூசை வைக்கப்பட்டது.  பளியர்களும் ஊர்க்காரர்களும் அந்த பெருஞ்சாவுக்கு பழியெடுக்க முடியாமல் புழுங்கினர். ஒவ்வொரு குவளை நீரருந்தும் போதும் அது பெரிய பளிச்சியின் குருதி என்கிற நினைவு வரும்,  அவள் சிந்திய குருதிக்கு பதில் குருதி கொடுக்காத தங்களது இயலாமையை நினைத்துப் புழுங்கியவர்கள்  ஜமீன் குடும்பம் அழியும் தினத்தில் பளிச்சிக்கு பூசை வைக்கவேண்டுமென தங்களது பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்த்தனர்.

 

           

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page