top of page

போர்க்குதிரை

  • Writer: லக்ஷ்மி சரவணகுமார்
    லக்ஷ்மி சரவணகுமார்
  • 21 hours ago
  • 2 min read

பதினொரு கதைகளையுடைய 'போர்க்குதிரை' எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின ஏழாவது சிறுகதைத் தொகுப்பு. சிறுகதைகள்தான் தனக்கான அடையாளமாகத் தோன்றுகிறது என்று கூறும் லஷ்மி, தனது நண்பர்களுடனான உரையாடல்கள் மற்றும் பயணங்கள் மூலமாகவே தனது கதைவெளி உருக்கொள்வதாக முன்னுரையில் தெரிவிக்கிறார். அதனை உறுதிப்படுத்துவது போலவே தொகுப்பின் கதைகளும் அமைந்திருக்கின்றன.


தொகுப்பிலுள்ள கதைகளில் 'ரகசியத்தின் அரூப நிழல்கள்' மட்டுமே நான் முன்னரே வாசித்த கதை. மலைகள்.காம் இணைய இதழில் வெளிவந்த அந்தக் கதையே தொகுப்பில் காலத்தினால் முற்பட்டதாக இருக்கும் என்று நினைக்கிறேன். கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்ற வாசகசாலையின் 'கதையாடல்' நிகழ்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட இக்கதையினை பலர் பேசத் தயங்கிய நிலையில் ஆர்வத்துடன் முன்வந்து பேசியதும், அதையொட்டி அங்கு அப்போது எழுந்த விவாதங்களும் நினைவுக்கு வருகிறது. வினோத் என்னும் ஆண் விபச்சாரன் (gigolo) தனது பணியில் எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் அவனது தேடல்கள் பற்றியதொரு நெடுங்கதை! லஷ்மியின் சிறந்த கதைகளில் ஒன்று என நிச்சயமாக கூறலாம்.


தொகுப்பின் முதல் கதையான 'வீடு திரும்புதல்' தனது லட்சியக் கனவான முதல் பட வாய்ப்பினை எதிர்பாராத சூழலில் கைதவறவிட்ட சசி என்னும் இயக்குநர், ஆசை / லட்சியம் என்பதெல்லாம் வாழ்வின் ஒரு பகுதி; அதைத் தாண்டி தனது வாழ்வினை வலிமையாக, அன்பு நிறைந்ததாக மாற்றுவதற்கான வழியை ஒரு பயணத்தின் மூலம் கண்டடைகிறான். அதன்மூலம் நமக்கும் woofing எனும் பயணமுறை குறித்தும், நமக்கான ஆசான்கள் வாழ்வின் எந்தக் கணத்திலும் எதிர்படலாம் என்பதும் சொல்லப்படுகிறது.


சிறுவயது முதல் யானை மீது ஆர்வம் கொண்டவளாக, அதன் அண்மையினை ஏதோ ஒருவிதத்தில் தன்னுள் உணர்பவளாக இருக்கும் ஜோதி, குழந்தையின்மை எனும் பிரச்சினையை எதிர்கொள்ளும் தருணத்தில் அதற்கான நேர்த்திக்கடனாக சதுரகிரி மலையில் பவுர்ணமி வழிபாட்டுப் பயணம் மேற்கொள்கிறாள். அப்படியான ஒரு பயணத்தின் முடிவில் தன்னை ஒரு ஒற்றை யானைக்கு ஒப்புக் கொடுத்து பிடியாதலின் (பிடி - பெண் யானை) அபூர்வத்தைப் பேசுகிறது. அதேபோல் 'குருவைத் தேடி' சிறுகதையில் நமது சிக்கல்களில் இருந்து தீர்ப்பவர்களாக, நல்வழி காட்டுபவர்களாக நாம் மனதிற்குள் எண்ணியிருக்கும் குருமார்களின் போதாமைகளை / போலி இருப்பை உணரும்போது எதிர்கொள்ள நேரும் hollowness குறித்து உரையாடுகிறது.


தொகுப்பின் மற்றொரு முக்கியக் கதையான 'ஆலமரத்துயில்' இந்தியத் திருநாட்டின் ஆன்மாக்களாக விளங்குகின்ற கிராமங்களில், எத்தனையோ சிரமங்களுக்கு இடையே விவசாயத்தை மேற்கொண்டு வரும் அந்த எளிய ஆன்மாக்கள், உறவுகளாலும் கைவிடப்பட்டு அதிகாரத்தின் பற்சக்கரங்களில் சிக்கி வதைபடும் காட்சிகளின் மற்றொரு ஆத்மார்த்த வெளிப்பாடு! 'நெல்லுக்கஞ்சி' ஊர்மந்தையில் பட்ட அடிகள் எத்தனையோபேருக்கு இன்னும் எங்கெங்கோ விழுந்து கொண்டுதான் இருக்கின்றன.


எத்தனையோ காரணங்களினால் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறி / வெளியேற்றப்பட்டு சென்னை போன்ற பெருநகரங்களை தங்களது பிழைப்பிற்காக எத்தனையோ பேர் தேர்வு செய்கின்றனர். அப்படியானவர்களுக்கு இங்கு நிகழக்கூடாத ஒன்று மரணம். அதன் பின்னாலுள்ள ரணங்களைத் தைக்கும் விதத்தில் பதிவுசெய்துள்ள ஒரு true account - தான் 'இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல' கதை. அதேபோல தன்பாலின ஈர்ப்பு கொண்ட இருவரின் காதல் மற்றும் அதுசார்ந்த உணர்வுகளின் குரூர வெளிப்பாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவதாக 'ஆதாமின் துரோகம்' அமைந்துள்ளது.


திருமணமான ஒருவனுக்கு காமம் என்னும் அடங்காப் பெருந்தீ அவன் தலைக்குள் எவ்வாறு செயல்படுகிறது; அதனை அவன் மனைவி எதிர்கொள்ளும் நுண்மையான தருணங்கள் என

உளவியல் சார்ந்த நுட்பமான படைப்பாக இறுதிக் கதையான 'இப்படியாக அவளின் சில காதலர்கள்' அமைந்துள்ளது. இதர கதைகளும் இதேபோல பலவித அனுபவங்களைத் தரும்படி அமைந்துள்ளன.


இறுதியாக லஷ்மியின் கூற்றுப்படி 'ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களை, வாழ்க்கை குறித்த அர்த்தங்களை நுண்மையாக அனுகவும் புரிந்து கொள்ளவும் கலைவடிவங்களே நமக்கு உதவியாக இருக்கின்றன.' அப்படியான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இந்தக் கதைகள், இறுக்கமான மொழியில் ஒரு பிரச்சினையின் உள்ளும் புறமுமாக நெருங்கிச் சென்று பார்க்கும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை நமக்கு நல்குகின்றன.


  • கார்த்திகேயன் வெங்கட்ராமன் - மே 28 - 2022


போர்க்குதிரை

லஷ்மி சரவணகுமார்

எழுத்து பிரசுரம்

ரூ. 260.

 
 
  • Youtube
  • Spotify
  • alt.text.label.Facebook

© 2023 - 2050 எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page